Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 25 – Prefinal

அத்தியாயம் 25

வீடு முழுவதும் இஞ்சியும் ஏலக்காயும் கலந்த நறுமணம் வீசியது. 



Advertisement

“ஆஹ்ஹா.. என்ன மணம் என்ன மணம்.. காலங்கார்த்தால நாலு மணிக்கு எல்லாம் இப்படி அருமையா வாசனை வந்தா எப்படி தூங்கறது..” என்று மூக்கை உரிஞ்சிக்கொண்டே எழுந்து அமர்ந்தார் பத்தும்மா.

“ஆமா பத்தும்மா.. வாங்க போய் டீ குடிச்சிட்டு வந்து படுப்போம்” என்று உடன் எழுந்து அமர்ந்தான் வல்லபன். 

Advertisement

Advertisement

வராஹி பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து நீட் தேர்விற்காக படித்துக்கொண்டிருந்தாள். அவளுக்காக தான் காலையிலே வந்தியத்தேவன் டீ  போட்டுக்கொண்டிருந்தார்.

வராஹி தொந்திரவு இல்லாமல் படிக்க வேண்டும் என்று அவளுக்கு ரூமை கொடுத்துவிட்டு ஹாலில் வல்லபனும் பத்தும்மாவும் ஆளுக்கொரு பக்கம் படுத்துக்கொள்கிறார்கள்.

Advertisement

“எதுக்கு நானா நீங்க தூக்கத்தை கெடுத்து எனக்கு தினமும் டீ போடுறீங்க.. சொன்னாலும் கேட்கவே மாட்டேங்குறீங்க.. எனக்கு டீ இல்லைனாலும் தூக்கம் வராது…” 

“இட்ஸ் ஓகே வரா.. எனக்கு இதுல ஒன்னும் கஷ்டம் இல்லை.. இந்தா” என்று அவள் கையில் சூடான டீயை கொடுத்தார்.

அவளுக்கு கொடுத்துவிட்டு திரும்பினால் பத்தும்மாவும் வல்லபனும் சோபாவின் மீது அமர்ந்துகொண்டு ‘எங்களுக்கு’ என்றனர் கோரஸாக.

“நீங்க ரெண்டு பேரும் என்ன படிக்கப்போறீங்களா?”

“டீ  குடிக்கிறதுக்கும் படிக்கிறதுக்கும் என்ன நானா சம்பந்தம்?” என்றான் வல்லபன். 

“நல்லா கேளுடா.. நாங்க யாருக்கும் தொந்திரவு கொடுக்கக்கூடாதுன்னு ஹால்ல  ஓரமா படுத்திருக்கோம்.. நீ வாசனையா டீ போட்டு எங்க தூக்கத்தை கெடுத்திட்டு..  இப்ப டீயும் கொடுக்கலைனா என்ன செய்றாது?” என்று குரலை உயர்த்தினார் பத்தும்மா.

“அம்மா.. என்னை பெத்த தெய்வமே! உங்களுக்கும் சேர்த்து தான் போட்டு வச்சிருக்கேன். இருங்க எடுத்திட்டு வரேன்.. நீங்க பாட்டு சத்தம் போட்டு குட்டி பம்க்கினை எழுப்பி விட்றாதீங்க.. அப்புறம் உங்களையும் அவளையும் சேர்த்து சமாளிக்க முடியாது” என்று கை எடுத்து கும்பிட்டு விட்டு டீயை எடுக்க அடுப்படிக்கு சென்றார் வந்தியத்தேவன்.

பின்னே குட்டி பம்க்கின் உருவத்திலும் சரி குணத்திலும் சரி அவளது பாட்டியே தான்.

வல்லபன் அவனே சென்று பத்தும்மாவிற்கும் அவனுக்குமான டீயை வாங்கி  வந்தான்.

வந்தியத்தேவன் ஐந்து மணி வரை மீண்டும் சென்று படுத்துவிட்டு, ஐந்து மணிக்கு ஜாகிங் கிளம்பிவிடுவார்.

“ஏன் பத்தும்மா எனக்கு ஒரு டவுட்.. எல்லாரும் டீ குடிச்சா தூக்கம் வராதுன்னு சொல்றாங்களே.. நாமளும் டெய்லி நாலு மணிக்கு குடிச்சிட்டு அப்புறம் நல்லா தானே தூங்குறோம்?”

“டேய்.. நல்ல கேள்வி டா.. வருங்கால வக்கீலம்மா வந்தா கேட்போம்.. இப்ப டீ  குடிச்சிட்டு நாம தூங்குவோம்” என்று வல்லபனுக்கு ஹை பை கொடுத்துவிட்டு மீண்டும் படுத்து கொண்டார்.

வழக்கம் போல காலை ஐந்து மணிக்கு எல்லாம் வந்தியத்தேவன் ஜாகிங் கிளம்பிவிட்டார். அவர் சென்று சிறிது நேரத்தில், ட்ராக் பேண்ட் டீ ஷர்ட் அணிந்து கையில் வைஷாலியுடன் கீழே இறங்கி வந்தார் மணிமேகலை. 

“வரா போலாமா?” என்று மணிமேகலை குரல் கொடுக்கவும்,

“எஸ் அத்தம்மா” என்று வந்தாள் வராஹி. 

“குட் மார்னிங் வராக்கா..” என்று அம்மாவின் இடுப்பில் இருந்து கீழே குதித்து வராஹியிடம் ஓடினாள் மூன்று வயது வைஷாலி.

“லேசி பெல்லோஸ்.. நாங்க எல்லாம் மார்னிங் ஒர்க்அவுட் போறோம்” என்று வல்லபன் பத்தும்மா காதில் வேறு வந்து கத்தினாள்.

இருவரும் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு, லைட் ஆப் பண்ணிட்டு கிளம்புங்க என்று குரல் மட்டும் கொடுத்தனர்.

வெளியே சம்பவ்வும் வீர்யாவும் தயாராக வந்து சேர்ந்தனர்.

இத்தனை வருஷ பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. ஒரு மணி நேரம் அனைவரும் சேர்ந்து உடற் பயிற்சி வாக்கிங் என்று எல்லாம் முடித்துவிட்டு ஏழு மணிக்கு வீடு திரும்புவார்கள்.

இவர்கள் நடக்கும்பொழுது கடைசி பத்து நிமிடங்கள் வந்தியத்தேவன் வந்து இணைந்து கொள்வார்.

வல்லபன் இப்பொழுது இரண்டாம் ஆண்டு கல்லூரியில் இருக்கிறான். அவன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரத்தில், ராமும் வினோதாவும் இவர்களை தேடி வந்தனர்.

ஆம், இருவரும் சேர்ந்து தான் இந்தியா வந்திருந்தார்கள். வினோதா சாராங்கனை டிவோர்ஸ் செய்துவிட்டார். ராமின் மூலம் தான் வினோதா யுகேவிற்கு வேலைவாய்ப்பு கிடைத்து சென்றார்.

அங்கே மீண்டும் இருவரும் நண்பர்களாக பழக ஆரம்பித்தனர். இங்கே இருந்திருந்தால் சுற்றமும் சமூகமும் என்ன சொல்வார்களோ என்று தள்ளி நின்றிருக்க கூடும். அங்கே கிடைத்த சுதந்திரத்தால் இருவருக்குள்ளும் மீண்டும் நேசம் வளர்ந்தது. ராம் வினோதாவின் தவறுகளை மன்னித்தாரோ மறந்தாரோ அது அவருக்கே வெளிச்சம்… இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என்ற நிலைக்கு வந்திருந்தார்கள்.

“பிள்ளைகள் நாம சேர்றோம்னு சொன்னா சந்தோஷப்படுவாங்களா ராம்?”

“மறுபடியும் நாம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வாழ்வது எல்லாம் சாத்தியம்மான்னு தெரியலை வினோ.. தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காத”

“இப்ப நாம ரெண்டு பேரும் சேரலையா? அதுவே சாத்தியம்னு நாம நினைக்கலையே”

“நீ பசங்க  கிட்ட பேசும்போது ஒரு டிஸ்டன்ஸ் பீல் பண்ணலயா வினோ? நாம செஞ்ச தப்பை நியாயப்படுத்த கூடாது.. அது முடியவும் முடியாது. அது எனக்கு புரிஞ்சு ரொம்ப நாள் ஆயிடுச்சு. நீயும் சீக்கிரம் புரிஞ்சுக்குவ”

“அது அவங்களுக்கு நம்ம மேலே கோபம் இருக்கும் தான். நாம இப்படி தூரமா  இருந்தா அந்த கோபம் எப்படி போகும்.. அவங்கள இங்க கூட்டிட்டு வந்துடலாம்.. நாளாக ஆக எல்லாம் சரி ஆயிடும். எனக்கு நம்பிக்கை இருக்கு”

ராம் அப்பொழுதைக்கு ஒன்றும் கூறவில்லை. அவளே தெரிந்து கொள்ளட்டும் என்று  விட்டுவிட்டார்,

 

வல்லபன் பத்தாம் வகுப்பு முடித்து காமமெர்ஸ் குரூப் தேர்வு செய்ததை தெரிந்து கொண்ட பொழுது, அதை எடுக்க வேண்டாம் என்று ராம் கூறினார். அதற்கு, “எனக்கு எது செட் ஆகும்னு நானாவும் நானும் பேசி தான் தேர்வு செஞ்சிருக்கோம். என்கூடவே இருக்கிற நானாக்கு தெரியும். நீங்க ஒர்ரி பண்ணிக்காதீங்க” என்று பேச்சை கத்தரித்திருந்தான்.

வராஹி பெரிய பெண்ணானதில் இருந்து அப்பா என்ற அழைப்பை இருவருமே தவிர்த்திருந்தார்கள். ராம் அழைத்து பேசினால் பேசுவார்கள் தான். ஆனால் சொல்லுங்க.. நல்லா இருக்கோம்.. நீங்க என்று பொதுவாக பேசி வைத்து விடுகின்றனர்.

வினோதா சமீபமாக தானே பேசுகிறார். அவரையும் அம்மா என்று அழைத்து பேசுவதில்லை. அதை ராம் கவனித்தே இருந்தார். 

“சாத்விக்கை உங்க கூட வச்சுக்கலயா” என்று வராஹி ஒருமுறை கேட்டிருந்தாள். “அவங்க கொடுக்கலை, அவன் பெரியம்மா தான் பிறந்ததுல இருந்து அவனை பார்த்துக்குறாங்க.. அவங்க கூட தான் இருக்கிறான்” என்றார் வினோதா வருத்தமாக.

‘எங்களுக்கு அத்தம்மா அவனுக்கு பெரியம்மா’ என்று வராஹி முணுமுணுத்து விட்டு எழுந்து சென்றுவிட்டாள்.

இப்படி சூழ்நிலை இருக்கையில் ராமும் வினோதாவும் இந்தியா வந்திறங்கினார்கள்.

அவர்களை சிரித்த முகமாகவே வரவேற்றனர் மணிமேகலையும் வந்தியத்தேவனும்.

“வல்லபா நீ காலேஜ் அங்கே எங்களோட யூ கே வந்து படி. வரா இப்ப வந்தாலும் ஓகே, இல்லைன்னா ஸ்கூல் முடிஞ்சதும் அங்கே கூப்பிட்டுப்போம்” என்றார் வினோதா உற்சாகமாக.

அவரது உற்சாகம் அங்கே யாரையும் தொற்றவில்லை.

“இன்னும் அம்மா மேலே கோவம் தானா உனக்கு?” என்றார் அமைதியாக இருந்த வல்லபனிடம் கொஞ்சம் உருக்கமாக.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை..” என்றான் வல்லபன்.

வினோதாவிற்கு மெல்ல சூழல் புரிய துவங்கியது.

“நான் செஞ்சது சரின்னு சொல்லல.. நடந்து முடிஞ்சதை மாத்த முடியாது, ஆனா இனி நடக்க போறத நல்லதா கொண்டு போக முடியும். என்னை நம்புங்க ப்ளீஸ்” என்றார் பிள்ளைகள் இருவரையும் பார்த்து.

அம்முறை நிவேதா வீர்யாவை இங்கே அனுப்பவில்லை. வினோதாவும் ராமும் வரும் நாள் முன்னமே தெரியவர, வீர்யா அங்கே இருந்தால் நிச்சயம் பிரச்சனையை பெரிதாக்கி விடுவாள் என்று மணிமேகலையிடம் மட்டும் கூறி, தற்செயலாக செல்வதை போல அவர்கள் ஊருக்கு அழைத்து சென்று விட்டார். 

“நீங்க இப்படி கெஞ்சாதீங்க.. எங்களுக்கு கஷ்டமா இருக்கு. எனக்கும் அண்ணாவுக்கும் இங்க இருக்கிறது தான் விருப்பம்” என்றாள் வராஹி வினோதாவிடம்.

“நாம அங்க போனாலும் இங்கே இவங்க கூட எல்லாம் காண்டக்ட் வச்சுக்கலாம். நாம லீவுக்கு இங்க அத்தை வீட்டுக்கு வரலாம் வரா.. நீ அதை நினைச்சு கவலைப்படாதே” 

“உங்களுக்கு நிஜாமாலுமே புரியலையா.. இது அத்தை வீடு இல்ல.. இது எங்க வீடு. திஸ் இஸ் அவர் ஹவுஸ்.. திஸ் இஸ் அவர் பேமிலி..” என்றாள் நிறுத்தி நிதானமாக.

வினோதா கண்கள் எல்லாம் கலங்க துவங்கியது.

“நீங்க சின்ன வயசுல ஒரு திருக்குறள் சொல்லி கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா..

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது.

அதுக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா?”

இப்பொழுது வினோதாவின் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலயென இறங்கியது. ராமிற்கும் கண்கள் லேசாக கலங்கத் துவங்கியது.

“உண்மையான இல்லறத்துல அன்பும் இருக்கணும் அறமும் இருக்கணும். இதுல எது இல்லைனாலும் அந்த வாழ்கை சிறக்காது.

எங்க குடும்பம் அன்பால் உறவானது. அறத்தால் பாதுகாக்கப்பட்டது. இதோ அத்தம்மா நான் அண்ணா மூணு பெரும் சேர்ந்து தான் இதை உருவாக்கினோம்.. நாங்க கடைபிடிச்ச அறம் என்ன தெரியுமா? ஒருத்தருக்காக ஒருத்தர் எப்பவுமே நிப்போம்னு தான்.. எங்க குடும்பத்துல அன்பால இணைஞ்சது  நானாவும் பத்தும்மாவும்..

எந்த வித ரத்த பந்தமும் இல்லாமலே உறவும் உரிமையும் கொடுத்து எங்களை ஏத்துக்கிட்டவங்க..

எங்க எல்லாரோட பரிசு தான் எங்க குட்டி பம்ப்கின்.. வைஷாலி.. நீங்க எப்ப வேணும்னாலும் இங்க வரலாம் போலாம்.. எங்க வீட்டு விருந்தாளியா..” 

என்றாள் வராஹி தெளிவாக.

அதன்பிறகு அங்கே ஒரே அமைதி.

மணிமேகலையும் வந்தியத்தேவனும் ஒருவரை ஒருவர் அர்த்தமாக  பார்த்துக்கொண்டனர். இதை வராஹியை தவிர வேறு யார் சொல்லி இருந்தாலும் அது அங்கே தவறாக போயிருக்கும்.

ராம் அப்பா அம்மாவிடம் மீண்டும் வினோதாவுடன் சேர்வதை பற்றி கூறியிருக்க, உன் இஷ்டம்.. ஆனா பிள்ளைகளை அவங்க போக்குல விட்டுடுங்க என்று கூறி முடித்துக்கொண்டனர்.

அதன் பிறகு அவர்கள் இருவரும் இந்தியா திரும்பி வரவில்லை. ஆனால் வாரம் ஒரு முறை பிள்ளைகளுடன் பேசிவிடுவார்கள். பின்னி பிணைய முடியாவிட்டாலும்.. பட்டும் படாமலுமாவது உறவை காப்பாற்றிக்கொள்ள எண்ணினார்கள்.

அதன் பிறகு வல்லபன் பி.காம் சிஏ சென்னையிலே சேர்ந்துவிட்டான். ரகுநந்தன் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தான்.

இப்பொழுது வராஹி வீர்யா சம்பவ், அடுத்து கல்லூரியில் சேர வேண்டும். வராஹி நீட் தேர்வுக்கு படித்து கொண்டிருக்க, வீர்யாவும் சம்பவ்வும் சட்ட கல்லூரியில் சேர்வதற்காக காத்து கொண்டிருக்கிறார்கள்.

ஹரியின் மாற்றம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அந்தளவு குடும்பத்தை தாங்கி பிடித்துக்கொண்டான்.

அடிக்கடி மனைவி குழந்தையுடன் அக்கா வீட்டிற்கு வந்து சென்றான். அவனால் அதிக நாட்கள் குட்டி பம்ப்கினை பார்க்காமல் இருக்க முடியாது. அவன் முதலில் தூக்கி வளர்த்த குழந்தை அல்லவா?

சாம்பவி இப்பொழுது இரண்டாம் முறை கர்ப்பமாகி இருக்கிறாள். இம்முறை சாம்பவியின் மனதை புரிந்து அவளை அன்பாக இயல்பாக பார்த்துக்கொள்கிறான். ஷ்யாம்பிரசாத் பரிமளாவின் செல்லம். மிகவும் சமர்த்து.

சடகோபன் ஷ்யாமின் முதலாவது பிறந்தநாளில் அவனை பார்த்தார். மனைவியின் பாராமுகம் கொஞ்சம் கொஞ்சமாக அவரை மாற்றியது. முற்றிலும் மாறிவிட்டார் என்று கூற முடியாவிட்டாலும், கொஞ்சம் அடக்கி வாசிக்க கற்றுக்கொண்டார்.

———-

அனைவரும் வாக்கிங் முடிந்து வரவும், அன்றைய நாளின் பரபரப்பு ஆரம்பமானது.

வராஹி மீண்டும் படிக்க அமர்ந்துவிடவே, வல்லபனும் வந்தியத்தேவனும் கல்லூரிக்கும் அலுவலகத்திற்கும் கிளம்பினார்கள். குட்டி பம்ப்கின் அவளது ப்ளே ஸ்கூலிற்கு பத்துமாவுடன் புறப்பட்டாள்.

மணிமேகலை காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை அங்கே பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் பார்ட் டைமாக வேலை செய்கிறார்.

வீட்டு வேலைகளை அனைவரும் சேர்ந்தே செய்வார்கள். அதனால் சிரமம் ஏதுமின்றி மிகவும் விருப்பத்தோடு வேலைக்கு செல்கிறார் மணிமேகலை.

அவரின் எளிய அணுகுமுறை, அதைவிட எளிதாக கடைபிடிக்கும் விதமாக அவர் கொடுக்கும் டயட் சார்ட் என்று பலர் மீண்டும் மீண்டும் மணிமேகலையை கேட்டு இவளிடம் வந்தனர். அவர் திறமைக்கு முன்பாக யாருக்கும் அவரது தோற்றம் கண்ணில் படவில்லை. அதில் அவருக்கு அவ்வளவு பெருமையும் மகிழ்ச்சியும்.

இப்பொழுது அவருக்கு யார் மீதும் கோபம் இல்லை.. வருத்தமும் இல்லை.

வாழ்க்கை இவ்வளவு வண்ணமயமாக மாற்றிகொடுத்த இறைவனுக்கு மனதார நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

———————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!