தென்றல் – 10
-
அத்தியாயம்: 10
-
நடு கூடம்… அறிந்தவர்கள் சொந்தங்கள் எனப் பலர் கூடியிருக்க, பண்டிதர்கள் மந்திரங்கள் ஓதி ஹோமத் தீ வளர்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஹோம குண்டலத்தில் அருகில் தம்பதியர் சகிதமாக அனந்தராமனும் அகல்யா பாட்டியும் கழுத்தில் மாலையுடன் அமர்ந்திருந்தனர். அந்த யாக குண்டத்திற்கு முன் பல கலச குடங்கள் இருந்தன. அவை அனைத்திலும் புனித நீரானது நிரப்பப்பட்டிருந்தது.
-
வாயில் நுழையாத மந்திரங்களைச் சொல்ல அனந்தராமன் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். புது மணமகனைப் போல் அருகில் இருந்த கணவனை கண்டு அகல்யா பாட்டிக்கு வெட்கம் வேறு வந்து ஒட்டிக் கொண்டது. பார்த்திபனின் கண்ணில் அது பட, வேகமாக வந்தவன் சிவந்திருந்த அகல்யா பாட்டியின் கன்னம் கிள்ளியபடி நெருங்கி அமர்ந்து கொண்டான்.
-
“பேராண்டி இன்னைக்கி எம்பொண்டாட்டி பக்கத்துல இருக்குற முழு உரிம எனக்கு மட்டும் தான். அதை நான் யாருக்கும் விட்டு குடுக்க விரும்பல. அதுனால கொஞ்சம் அந்த பக்கம் போய் உக்காரு.” என அனந்த் தாத்தா விரட்ட,
-
“அப்படில்லாம் போக முடியாது. என்னோட அகிலு முகத்துல தெரியுற சிவப்ப பாத்திட்டு தள்ளி வேற உக்கார சொல்றீங்க. முதல்ல ஐயர் சொல்ற மந்திரத்த க்ரெக்ட்டா சொல்லுங்க பாப்போம்.
-
ஸ்கூல் படிக்கிற குழந்த, கண்டு பிடிக்க முடியாதுன்னு நினச்சி கூட்டத்தோட கூட்டமா தப்பு தப்பா கோரஸ் பாடுமே அது மாதிரி இருக்கு உங்க நிலைம. நீங்க ஐயர் வாய கவனிங்க. நான் என்னோட அகிலுவ கவனிக்கிறேன்..” என அகல்யாவின் கன்னத்தில் முத்தமிட, பாட்டி வாஞ்சையுடன் பேரனின் தலையை வருடினார். அதைக் கண்ட அனந்த் தாத்தாவின் மூச்சில் அக்னி குண்டத்துக்கு போட்டியாக அனல் பறந்தது.
-
“சரி சரி இன்னைக்கி ஒரு நாள் மட்டும் உங்களுக்கு விட்டு குடுக்குறேன். நாளைல இருந்து இது என்னோட இடம். பங்குக்கு வர கூடாது இப்பவே சொல்லிட்டேன். ” எனச் சொல்லி பாட்டியின் கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டு எழுந்து தன் தமக்கைகளுக்கு மத்தியில் அமர்ந்தான்.
-
‘இத்தன பேர் இருக்காங்க ஆனா இவனுக்கு ஆம்பளைங்க கண்ணுக்கே தெரிய மாட்டானுங்க போலயே. எங்க போய் உக்காந்திருக்கான் பாரு..’ எனக் கோபமாக முணுமுணுத்தார் மாணிக்கம்.
-
அகல்யா பாட்டியின் உடன் பிறப்புக்கள் தங்களின் பேரன் பேத்திகள் உடன் வருகை தர, மகிழ்ச்சியுடன் வரவேற்ற மாணிக்கமும் சுகுமாரும் அனந்தராமனின் உடன் பிறந்தாரை வரவேற்கவில்லை. பதிலாக ஆத்திரமும் கோபமும் கண்களில் வந்தது அவர்களுக்கு.
-
அனந்த் தாத்தாவிற்கே வயது எண்பது. அவரின் அண்ணன் என்றால் எத்தனை வயது இருக்கும் என்று சொல்ல தேவையில்லை. நடக்க முடியாதபடி நடந்து வந்தார் தன் தம்பியையும் அவனின் மனைவியையும் வாழ்த்த.
-
ஆனால்..
-
“இந்தாள யாரு கூப்பிட்டா. இந்த விழா நல்ல படியாக நடக்கணுமனா முதல்ல இந்தாள வெளிய போச் சொல்லு.. “
-
“எங்க அந்த வாட்ச்மென்… ஹே வாட்ச்மென்… இன்விடேஷன் இல்லாத ஆளுங்கள எதுக்கு வீட்டுக்குள்ள விட்ட. ” எனக் கோபமாக அண்ணன் தம்பி இருவரும் கத்த, அனந்த் தாத்தாவும் வந்த தன் அண்ணனை வெளியே போகச் சொல்லி பந்தலில் இருந்து எழுந்து நின்று சத்தம் போட்டார்.
-
‘நாங்கள் ஏன் போக வேண்டும். நாங்கள் குடுத்த பிச்சையில தான் நீங்கள் வாழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.’ என வந்தவரின் பேரன் வீரமாறன் கேட்டு சண்டை போட,
-
“யாரு டா பிச்ச காசுல வாழ்றா. நீயும் உங்கப்பனுந்தான்டா ஏமாத்தி அத்தனையையும் சுருட்டீட்டு போனது. ” எனச் சுகுமாரன் பதிலுக்குப் பேச, சில நிமிடங்கள் அங்கு சச்சரவுகள் உண்டானது.
-
அகல்யா பாட்டி ‘நல்ல நாள் அன்று வந்து வம்பு பேசி வீணாக பிரச்சனை செய்கிறார்கள். ஏற்கனவே இவர்களால் நாங்கள் பட்டது போதாதா??’ என கண்களில் கண்ணீர் விட்டார்.
-
அதை பார்த்த உடனே பார்த்திபன் வந்தவர்களை வீட்டு வாசலை விட்டு கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக துரத்தி விட்டான். மாறனை மிரட்டி உருட்டி பயங்காட்டி, இரண்டே நொடியில் அந்த இடத்தை விட்டு அவர்களை அப்புறப்படுத்தி விட்டான்.
-
மல்லுக்கு நின்ற மாறனை சமாதானம் செய்த அனந்த் தாத்தாவின் அண்ணன் அன்பழகன் மனமுடைந்து அங்கிருந்து சென்றார்.
-
“இதுக்கு அப்றம் எங்க வீட்டு பக்கம் வரணும்னு நீ நினைக்கவே கூடாது. மீறி வந்த… ” என நாக்கை மடித்து விரல் நீட்டி மாறனைப் பார்த்து பார்த்திபன் எச்சரிக்க, அவன் அமைதியாக சென்றான்.
-
சென்றவன் பார்த்திபனைப் பார்த்து ஒரு வித நக்கல் கலந்த ஏளன சிரிப்பு சிரித்தபடி சென்றான். அதைப் பார்த்திபன் உணரவில்லை என்றாலும் ஸ்ரீராமால் உணர முடிந்தது அது வில்லங்க சிரிப்பு என்று.
-
‘ஏன் அவமானப்படுத்தி தன்னை ஏளனப்படுத்தி துரத்துபவனைப் பார்த்து நக்கலாக சிரிக்கிறான்? இந்த சிரிப்பின் பொருள் என்ன? முதலில் ஏன் இங்கு வந்தான்? இந்தக் குடும்பத்தை வீழ்த்த என்ன செய்து வைத்திருக்கிறான்? நிச்சயம் ஏதோ செய்திருக்கிறான். அதனால் தான் இங்கு வேவு பார்க்க வந்திருக்கிறான். என்ன செய்திருப்பான்?’ என்ற யோசனையுடனேயே இருந்தான் அவன்.
-
கடந்த சில ஆண்டுகளாக அதாவது மயூரியுடன் திருமணம் முடிவதற்கு முன் இருந்தே மாணிக்கத்தின் பக்கபலமாக ராம் தான் இருந்து வருகிறான். VMS jewelleryக்கு வரும் பல பிரச்சனைகளைத தடுக்கும் கேடயமாகவும் ராம் தான் இருக்கிறான்.
-
அன்பழகன், அனந்தராமன். அண்ணன் தம்பி என இருவரும் சேர்ந்து செய்த தொழிலில் அன்பழகனின் மகன் குணசேகரன் எப்போது உள்ளே வந்தானோ அப்போதிருந்தே அனந்தராமனுக்கு அவனுக்கும் கருத்து வேறுபாடு வர தொடங்கி விட்டது. அன்பழகனின் மகன் குணசேகரன் அனந்தராமை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்த, அதை கண்ட மாணிக்கம் குணசேகரனை அடித்துவிட்டார்.
-
அனைவர் முன்னிலையிலும் தன்னை விட இளையவனான மாணிக்கத்தின் மீது தீராத பகையை உண்டாக்கி, பழி வாங்கும் நிலைக்கும் கொண்டு வந்து விட்டுள்ளது. தன்னால் முடிந்த இடர்களை கொடுத்து தன்னை அடித்த மாணிக்கத்தையும் அனந்தராமனையும் தன் காலில் விழ வைக்க திட்டம் நீட்டி செயல்படுத்தி கொண்டு இருக்கிறார்.
-
இதுவரை சமாளித்த மாணிக்கத்தின் உறுதி இப்போது ஆட்டம் கண்டுள்ளது. ஏனெனில் இப்போது முளைக்கும் பிரச்சினைகள் அப்படி. கூடவே அவரின் உடலும் மனமும் ஒத்துழைப்பு தருவதில்லை.
-
இன்றல்ல நேற்றல்ல நாற்பது வருடமாக பகை மட்டுமே புகை போல் இருந்து வருகிறது. அதைத் தணிக்க அன்பழகன் எவ்வளவோ முயன்றும் அவரின் மகன் குண சேகரன் பெட்ரோல் குண்டுகளைத் தொடர்ந்து மாணிக்கத்தின் குடும்பத்தின் மீது வீசிக் கொண்டே இருக்கிறார்.
-
முதலில் முறுக்கிக் கொண்டிருந்தவர் தான் அவரும். பின் மகன் செய்தது, செய்து கொண்டிருப்பது அனைத்தும் துரோகம் எனத் தெரிந்து, தன் சொந்த தம்பியிடமும் அவர் பெற்ற மகன்களிடமும் கடந்த சில வருடங்களாகவே மன்னிப்பை வேண்டி வருகிறார்.
-
“அப்பா சொன்ன மாதிரி இந்தக் குடும்பமே மரியாத தெரியாத குடும்பம். ச்ச… இங்க எதுக்கு தாத்தா என்னையும் கூட்டீட்டு வந்த… நாய விரட்டுற மாதிரி விரட்டி விட்டவங்க கூட ஏன் நீ பேச முயற்சி பண்றன்னு எனக்கு தெரியல? இனி அசிங்கப்படணும்னா நீ மட்டும் போய் பட்டுக்க. என்னை இதுக மூஞ்சில முழிக்க வைக்காத. நான் உன்ன கூட்டீட்டு வந்தது, அசிங்கப்பட்டு நாம திரும்பி போறது அப்பாக்கு தெரிஞ்சா என்னைத் தோல உரிச்சிடுவாரு. இவனுங்களுக்கு அப்பா சொன்ன வழி தான் கரெக்ட்டு. முடிச்சிட வேண்டியது தான்.
-
போன முறை மாதிரி இந்த முறை அவனுங்க எந்திரிக்கவே கூடாது. இந்த வீடு கம்பெனின்னு எல்லாத்தையும் விக்க வச்சி நடு ரோட்டுல அவனுங்கள குடும்பமா நிக்க வைக்கல எம்பேரு வீரமாறன் கிடையாது. Mark my words.. ” என அமைதியாக வந்த அன்பழகனைப் பார்க்காது ஆவேசமாக பேசிக் கொண்டே காரை இயக்கினான் வீரமாறன்.
-
மாறனின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது பொறாமை. இவர்களால் எப்படி சந்தோஷமாக வாழ முடிகிறது என்ற பொறாமை தான் அது. ஏனெனில் குணசேகரன், குணத்திலும் சேராதவராகவே இருந்தார். மகனிடம், மனைவியிடம், தாயிடம், தந்தையிடம் என எவரிடமும் அன்பாக பேசியது இல்லை. அவரின் இலக்கு பணம், புகழ் சம்பாதிப்பது மட்டுமே. அவரின் மகனையும் அப்படித்தான் வாழ வேண்டும் என்று பயிற்சி கொடுத்து வளர்க்கிறார்.
-
மாறனின் முக்கிய எதிரி பார்த்திபன் தான். ஏனெனில் அவன் கைக்குத் தான் அடுத்து பொறுப்புக்கள் போகும். அவனிடம் இருந்து பறிப்பது மிகவும் எளிது. இதற்கு முன்னால் அவனிடம் ஒப்படைக்கபட்ட கிளைக்கு மூடு விழா நடத்தியது போல், அவர்களின் நிறுவனத்திற்கே மூடு விழா நடத்த வேண்டும். அதற்கான ஒரு முயற்சியை வெற்றிகரமாக செய்த மிதப்பில் சென்றான் அவன்.
-
பார்த்திபனை ஏமாற்றிப் பார்ப்பதில் அவனுக்கு ஒரு பேரானந்தம்..
-
சதாபிஷேகம்…
-
சதாபிஷேகம் என்பது ஒருவருடைய வாழ்க்கையில் முக்கியமான ஒரு கால கட்டம். 80 ஆண்டுகள் தனது வாழ்க்கையின் பொறுப்புக்களைச் செவ்வனே செய்து, எதிர்வரும் சுக துக்கங்கள் அனைத்தையும் தன் இல்லாளுடன் சேர்ந்து மிகச் சிறப்பாக கையாண்டு, பிள்ளைங்கள், மருமக்கள்கள், பேரன் பேத்தி பல எடுத்து வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் கொடுப்பினை எல்லாருக்கும் இருக்காது.
-
அப்படி இருக்கும் ஒருவருக்கு அவருடைய வாரிசுகள் ஒரு விழா எடுப்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது.
-
1000 பிறை கண்ட அனந்தராமனுக்கும் அகல்யா பாட்டிக்கு அந்த விழா தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
-
மகன், மருமகள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன் பேத்திகள் உட்பட மற்ற ரத்த சொந்தங்களும் கலச நீரால் தம்பதியினருக்கு அபிஷேகம் செய்து, மீண்டும் புது மணமக்கள் போல் ஜோடித்து, மங்கள நாண் சூட்டும் நிகழ்வானது நடைபெற்றது.
-
பொதுவாக இது போன்ற வயது முதிர்ந்த தம்பதியர் தான் இன்றைய இளம் ஜோடிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டி சாதனை படைத்தவர்கள்.
-
பெண்ணவளைக் கரம் பிடித்த நாளில் இருந்து, எதிர்வந்த துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள் இடர்கள் என எதிலும் பிடித்த கரத்தை விட்டதில்லை. ஒருவருக்கொருவர் மனத்தையும் உடலையும் மட்டுமல்ல கிடைக்கும் அனைத்தையும் பகிர்ந்து, வாழ்க்கை பாடங்களை வலிகளுடன் கற்றும், பிறருக்கு கற்றுத் தரும் ஆசான் நிலைக்கு முன்னேறி உள்ளனர்.
-
எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம், பெற்றவருக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் யோகம். அது கிடைக்கப் பெற்றதால் பிள்ளைகள் மூவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.
-
இந்தத் தம்பதியர் போன்று நாங்களும் ஒற்றுமையாக நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டி, பலர் குடும்பம் குடும்பமாக நம் அனந்தராமின் தம்பதியினரிடம் காலில் விழுந்து ஆசி பெற, கல்யாண விருந்துடன் அன்றைய விழாவானது சிறப்பாக நடைபெற்றது.
-
வந்திருந்த விருந்தினர் கூட்டம் சற்று கலைந்து செல்ல பார்த்திபன், நேத்ரா, விஷாலினி, மயூரியிடம் வம்பிழுத்து விளையாட்டு கொண்டிருந்தான்.
-
“இவன பிள்ளையா பெத்ததுக்கு காக்கிலோ அரிசியாது பெத்திருக்கலாம். பொங்கி தின்னா கூட ஒருவேளை வயிறு நிறைச்சிருக்கும்… ச்ச… எப்படி தான் எந்த வேலையும் செய்யாம இருபத்தேழு வர்ஷமா ஒரு மனுஷெனால சும்மாவே சோறு திங்க முடியுதோ!” எனத் தன் தம்பியிடம் புலம்பிய மாணிக்கம் தான்.
-
“சோற கைல எடுத்து வாய்ல வச்சா போதுமே மாமா. இப்ப அந்த வேலைய கூட பாக்க தேவையில்லன்னு ஒரு ரோபோ கண்டு பிடிச்சிருக்கானுங்களாம்.. நம்ம கைக்கு வேல வைக்காம அதுவே ஊட்டி விட்டுடுதாம். ஆசையா… சிந்தாமா சிதறாம…” என்றபடி வந்தது சந்ரு தான்.
-
“உன்ன யாரு டா கூப்பிட்டா?” சுகுமாரன்.
-
“கூப்பிட்டாத்தா வரணுங்கிறதுக்கு நான் என்ன விருந்தாளியா!! இந்த வீட்டோட மாப்ளை… கூப்பிடணுங்கிற அவசியமே இல்லை. அதுவும் எங்கெல்லாம் எம்மாப்ளையோட பேருக்கு பங்கம் வருதோ! அங்கெல்லாம் நான் அவசியம் வந்து நிப்பேன். ஏன்னா? எங்க சங்கத்து தலைவன் அவெ. சங்கத்து தொண்டன் நான்..”
-
“என்ன சங்கம்? எங்க இருக்கு அது?” சுகுமாரன்.
-
” அதா… அடுத்த வாரம் உங்க கடைக்கு எகுத்தாப்லயே பெரிய போர்டு வச்சி எங்க வாலிபர் சங்கத்த திறக்க இருக்கோம். அதுக்கு அட்வான்ஸ் குடுக்க உங்க அக்கௌண்டல இருந்து ஜீபேல ஒரு லட்ச ரூபாய டொனேஷனா குடுத்திட்டு, இன்னைக்கி நடந்தது மாதிரியே ஒரு யாக குண்டத்துக்கும் அதுல உக்காந்து மந்திரம் சொல்றதுக்கு ஆள் பிடிச்சி காச செட்டில் பண்ணிட்டிங்கன்னா… சிறப்பா ஓப்பன் பண்ணிடலாம். சங்கத்த…” என்க,
-
அவனை இருவரும் சேர்ந்து முறைத்துவிட்டு சென்றனர். வீட்டு மாப்பிள்ளை, மாமனார்கள் கையில் அடி வாங்கினால் நன்றாக இருக்காது அல்லவா. அதான் முறைத்தபடியே சென்று விட்டனர்.
-
“அப்ப டொனேஷன் கிடைக்காதா… அட்லீஸ்ட் ஹோம குண்டலத்துக்காது காசு குடுத்திட்டு போயிருக்கலாம்.” என்றவன் வந்து கொண்டிருந்த ராமை அழைத்து சங்கத்தை வளர்க்க நிதி திரட்ட, அவன் சிரித்தபடியே மாணிக்கத்தின் அலுவலக அறைக்குள் சென்று விட்டான்.
-
“குடுக்க முடியும்னா முடியும்னு சொல்லு, இல்ல முடியாதுன்னு சொல்லு.. அத விட்டுட்டு சிரிச்சா… அந்த புன்நகைய தூக்கிட்டு போய் எந்த கடைல நான் அடமானம் வக்கிறது.” எனப் புலம்ப, அவனின் மனைவி நேகா தான் சந்ருவைத் திட்டி தீர்த்தாள்.
-
“உனக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாதா… அவெங்கிட்ட போய் காசு கேக்குற… அவனும் உன்ன மாதிரியே இந்த வீட்டு மாப்ள தான. அவெங்கிட்ட போய்… ச்ச… உன்ன பத்தி அவெ என்ன நினப்பான்?”
-
“சகலக்கி அவசர தேவன்னு நினப்பான்.”
-
“உனக்கு என்ன அவசர தேவை? அதா நான் மாசம் மாசம் உன் அக்கௌண்டல மொத்தமா செலவுக்குன்னு போடுறேன்ல. அப்றமும் என்ன தேவ உனக்கு? “
-
“நீ போட்டது செலவாகிடுச்சே. “
-
“அதுக்குள்ளயா! எப்படி? என்னென்ன செலவு பண்ண?” எனக் கணக்கு கேட்க,
-
“எது நான் செலவு பண்ணேன்னா! அடியே… உங்காத்தாவ நாலு நாள் ஷாப்பிங் கூட்டீட்டு போயிருக்கேன். அது ஆட்டோல்ல பைக்லலாம் போகாது. கார்ல தான் போவேன்னு சொல்லி ஏறி உக்காந்துக்கிது. காரு என்ன தண்ணிலயா ஓடுது! பெட்ரோல்லல்ல ஓடுது.. அதையும் எவனும் ஓசிக்கி குடுக்க மாட்டான்.
-
இந்தக் கல்யாணத்துக்குன்னு சொல்லி ஒரு நாளைக்கு பத்து முறை காரை எடுக்க வச்சிடுச்சி. இந்தா உக்காந்திருக்கே நம்ம பொண்ணு லக்ஷத்திரா.. லச்சு.. அவள ரெண்டு மொற ப்ளே ஸ்டேஷன் கூட்டீட்டு போயிருக்கேன்.. அத்தோட வாரத்துல மூணு நாள் உடம்புக்கு சரியில்லாம போய்டுது. அதுக்கு ஆஸ்பத்திரி மருந்து மாத்திர லொட்டு லொசுக்குன்னு அத்தனையும் பாக்குறத நான்.
-
என்னமோ எனக்கே எனக்குன்னு செலவு பண்ண காசு தர்ற மாதிரி பேசுற. இந்த குடும்பத்துக்கு தான செலவு பண்றேன். தண்ணிய அடிச்சனா இல்ல எங்கம்மா வீட்டுக்கு குடுத்தனா. ” என ஆவேசமாக பேச,
-
“அதுக்குன்னு அவெங்கிட்டயா கேப்ப. மயூரிக்கிட்ட வேற எதுக்கு காசு வாங்கிருக்க. போன தடவ நீ வாங்குனத திருப்பி தரலன்னு மயூரி சொன்னா… உன்ன பத்தி தெரிஞ்சும் ஏந்தா காசெல்லாம் குடுத்து பழகுறோளோ. இடியட்… இனி தரக் கூடாதுன்னு நல்லா திட்டி விட்டுட்டேன். அறிவு கெட்டவ…” என நேகா சொன்னது தான் தாமதம்,
-
“இதோ பாரு ராம சொன்னியா… ஓகே… இனி வாங்கல.. அவெங்கூட தான் நீ வேலை பாக்குற. அதுனால உனக்கு அசிங்கமா போய்டும். ஓகே accepted. but மயூவ எதுவும் சொல்லாத..” என்றான் சீரியஸ்ஸான குரலில்.
-
“ஏன்.. உங்கத்தை மகாங்கிறதுனாலயா?”
-
“ஆமா… ” என்றவனை முறைக்க மட்டும் தான் முடிந்தது.
-
நேகாவிற்கு இந்த குடும்பத்தினர் ராமிற்கும், ராமால் மயூரிக்கும் கொடுக்கும் முக்கியத்தின் மீது சிறு பொறாமை உண்டு. பிஸ்னஸ்ஸில் ராமின் இடம் தனக்கானது. அதை அவன் பிடித்து விட்டான் என்ற போட்டி உண்டு. அத்தோடு அவன் தன்னை நிராகரித்தவன்.
-
‘மயூரியைக் காட்டிலும் தான் சிறந்தவள். என்னை நிராகரித்த தவறுக்கு நீ வருந்துவாய். அது போல் நான் வாழ்ந்து காட்டுகிறேன் பார்.. ‘ என மனத்திற்குள் சவால் விடுத்தவளுக்கு இப்படி ஒரு கணவன். ச்ச… என நொந்து கொண்டவள்,
-
“டேய் பார்த்தி… நீ எதுக்கு மும்பை போன?” என்றாள் அதிகாரமாக.
-
“உன்னால போக முடியலன்னு என்னை அனுப்புன. ஆனா நீ பண்ண முடியாத அந்த வேலைய நான் பண்ணிட்டேனே.. ” என்று பெருமையாகத் தன்னைப் பேசியபடி, பேக்கை திறந்து ஒரு ஃபைலை அவளிடம் நீட்டினான்.
-
அவள் தன் கணவனையும் தம்பியையும் பார்த்து முறைத்துபடி வாங்கிக் கொண்டு சென்றாள்.
-
“எதுக்கு என்னை முறைச்சிட்டு போறா? அவ சொன்னத தான் நான் செஞ்சிட்டேனே. ” எனப பார்த்திபன் சந்தேகமாகக் கேட்க,
-
“சொன்ன வேலைய சரியா செஞ்சிட்டேன்னு கடுப்பு அவளுக்கு. வயித்தெரிச்சலும் இருக்கும்னு நினைக்கிறேன். “
-
“மாம்ஸ்… அதெல்லாம் விடு. இன்னைக்கி காலைல என்ன நடந்ததுன்னு தெரியுமா? ரோஸ் மாம்ஸ்… என்னோட சிங்கில் ரோஸ்… சிங்கிலா வந்து எங்கிட்ட மாட்டிக்கிச்சி.. செம்ம ஃபீல் தெரியுமா… ” எனக் காலை நடந்ததை சந்ருவிடம் கூறினான்.
-
“யாரு மாப்ள அது? பேரு ஊரு சொல்லு கண்டு பிடிச்சி உன்னோட சட்ட பாக்கெட்ல சொருகி வைக்கிறேன். நேரு மாமா மாதிரி.. நீ பார்த்தி மாமாவா மாறிக்கிவ.” என அவளைப் பற்றி விவரங்களை கேட்க,
-
“ஐய்யோ… ஊரும் பேரும் கேக்க மறந்திட்டேன் மாமா. அவ்ளோ நேரம் பேசினோம். ஆனா அத கேக்கணும்னு தோணலயே.. ச்ச…” என நொந்து கொண்டான்.
-
“இப்ப எப்படி கண்டு பிடிப்ப?”
-
“அவ லண்டன்ல படிக்க போறதா சொன்னா… சோ…” என இழுக்க,
-
“சோ…” என்றான் எதுவும் புரியாது.
-
“சோ…” எனக் குறும்பாய் கண் சிமிட்டினான்.
-
“ஓ… நீ அப்படி வர்றியா… வாரணம் ஆயிரம் சூரியா மாதிரி ரோசாப்பூவ தூக்கிக்கிட்டு லண்டன் ரோட்டுல நாய் மாதிரி தேடப்போற. சரியா? தேடி கண்டு பிடிச்சி… அப்றம்… அப்றம்… ஒரே ஹலிவுட் காட்சி தான்.” எனத் தன் மாப்ளயைக் கேலி செய்ய, பார்த்திபனுக்கு வெட்கம் வந்துவிட்டது போலும், காலால் கோலம் போட்டு வெட்கப்பட,
-
“இந்த கண்றாவியெல்லாம் தயவு செய்து வேண்டாம். நிப்பாட்டிக்க. ஃப்ளைட்ல மூணு மணி நேரம் உங்கூட ட்ராவல் பண்ணாங்கிறதுக்காக நீ அவள தேடி கண்டுபிடிக்க போறியா? ” என சீரியஸ்ஸாக கேட்க, அவன் பதில் கூறும் முன் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.
-
“நீ அவள கண்டு பிடிச்சி தான் தீரணும் பார்த்திபா! அதுவும் மூணு மாசத்துக்குள்ள.” என்றது ராமின் குரல்.
-
தென்றல் வீசும்…
