Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 19.1

அத்தியாயம் 19

“சார், உங்களை பார்க்காம போகமாட்டார் போல” என்றான் ராகுல்.

“தெரியும்”

“நீங்க வரதுக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துட்டார் சார்”



Advertisement

“அதுவும் தெரியும்”

“மல்ட்டி மிலினியர் ரேன்ஜ்க்கு பேசுறார், யார் சார்?”

“செல்வியோட அப்பா”

Advertisement

“என்ன? செல்வியைத் தேடி வந்துருக்காரா? செல்வி அப்பான்னா நீங்க வெய்ட் பண்ண வச்சிருக்கமாட்டிங்களே” என்றான் யோசனையோடு.

Advertisement

“காலைலயே மீட் பண்ணினேன். என்கிட்டயே பொற்செல்வன் யாருனு கேட்டார். மரியாதையா கேட்டிருந்தா அப்போவே பேசியிருப்பேன், அவர் திமிரை என்கிட்ட காட்டினார், அதான் வெய்ட் பண்ண வச்சிருக்கேன்”

“ஆனா செல்வி இங்க வேலை செய்யலையே, இது தெரியாம ஒரு மணி நேரமா உக்கார்ந்திருக்கார்” என்றவன், “நிஜமாவே அவர் அவ்வளோ பணக்காரரா சார்?” என்றான்.

“ஆமாம், அவரோட சொத்து மதிப்பு கிட்டதட்ட ஐநூறு கோடிக்கு மேல வரும்”

Advertisement

“சார்” என வியக்க, “ஏழெட்டுக்கு மேல ஸ்டார் ஹோட்டல்ஸ், அதோட ரிஸார்ட்சும் இருக்கு. ஹோட்டல்ஸ் எல்லாமே மெயின் ப்ளேஸ்ல இருக்கு, இவரோட ரிஸார்ட்ஸ்ல  தங்குறவங்க எல்லாரும் வி.ஐ.பி” என்றான்.

செந்தமிழ்செல்வியின் பின்புலம் இத்தனை பெரிதென்று நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை ராகுல். அவர் பொண்ணு இங்க இல்லைனு தெரிஞ்சேதான் வந்துருப்பார் போல, எதோ முக்கியமான விசயத்திற்காக வந்திருக்கிறார் எனப்புரிய அமைதியாக நின்றிருந்தான்.

“அவரை வர சொல்லு” என்றான்.

ராகுல் தாமோதரனை அழைக்க, உள்ளே வந்தவர், “டேய்… நீயா? நீதான் பொற்செல்வனா? பொற்செல்வன் யாருனு காலைல உன்கிட்டதானே கேட்டேன், ஏன் காலைல சொல்லல?  ஒன் ஹவரா உக்காந்திட்டிருக்கேன்” என்றார் கோபமாக.

“டே… வா? உங்ககிட்ட பேச எனக்கு ஏதும் இல்லை, கெட்டவுட்”

“காலைல கேட்டப்போவே நீதானு சொல்லியிருந்தா பேசிட்டு போயிருப்பேன்ல?” என்றார். டேய் என்று சொல்லாமல் பேசியதே பொற்செல்வனுக்கு கொடுத்த பெரிய மரியாதை என நினைத்தார் தாமோதரன்.

“ராகுல், இந்தாளை வெளில போகச் சொல்லு, போகலைனா போக வை” என்று பொற்செல்வன் வெளியேறியிருந்தான்.

பொற்செல்வனின் பின்புலம் பற்றி ராகுலிடம் விசாரிக்க, “நீங்களா போறிங்களா? இல்ல செக்கியூரிட்டியை கூப்பிட்டுமா?” என்றான்.

“பொற்செல்வன்கிட்ட வேலை செய்யிறவன்தான? இதை பிடி. இப்போ சொல்லு” என்று கட்டு பணத்தை எடுத்து நீட்ட, “செல்வியோட அப்பாவாச்சேனு பார்க்கிறேன், மரியாதையா சொல்லும்போதே போய்டுங்க, இல்ல அசிங்கமாகிடும்” என்றான்.

தாமோதரன் மேற்கொண்டு பேச வர, தாமோதரனை இழுத்து வெளியே தள்ளி “போயா” என்றான்.

எத்தனை கோபம் வந்தாலும் பொற்செல்வனிடம் பேசாமல் போக முடியாத நிலையில், “சாரி… உங்க சார்கிட்ட நான் பேசியே ஆகனும்” என்றார் சற்றே  பணிவாக.

செல்விக்காக யோசித்து, பொற்செல்வனுக்கு அழைத்த ராகுல், “இப்போ ரிக்வஸ்ட்டா கேட்குறார் சார்” என்றான்.

“ஓகே… டென் டேஸ்க்கு அப்புறம் வர சொல்லு” என்று இணைப்பை துண்டித்தான் பொற்செல்வன்.

ராகுல் தாமோதரனிடம் சொல்ல, “இல்ல, எனக்கு இப்போவே பார்த்தாகனும். பத்து நாளைக்கு தள்ளி போட முடியாது. எனக்கு நிறைய கமிட்மண்ட்ஸ் இருக்கு” என்றார்.

“அவ்வளோ தேவை இருக்குனா சான்ஸ் கிடைக்கும்போது அதை சரியா யூஸ் பண்ணியிருக்கனும்”

“சரி, சாரி… உன் பாஸ்கிட்ட பேசு” என்றார் சற்று பணிவாக.

“எனக்கு அவர்தான் பாஸ், நீங்க இல்ல. உங்களை டென்டேஸ் கழிச்சி வர சொல்லிட்டார். மரியாதையில்லாம பேசினதுக்கு இந்த சான்ஸ் கொடுத்ததே பெரிய விசயம், கிளம்புங்க. பத்து நாள் கழிச்சு வாங்க” என்று தனது வேலையை பார்க்க கிளம்பிவிட்டான் ராகுல்.

பொற்செல்வனின் எண்ணிற்கு பலமுறைக்கு மேல் அழைத்துவிட்டு ஏமாற்றத்தோடு கிளம்பியிருந்தார் தாமோதரன்.

*** *** *** ***

புருஷோத்தமன் மொத்த குடும்பம் ராஜஸ்தான் வந்திருக்கிறார்கள். அமிர்தவள்ளிக்கு அடுத்தடுத்து கல்யாண வேலைகள் நடந்தேற வேண்டும் என்று ஆசை. நவீனாவின் திருமணம் முடிந்து இரண்டு நாள்களிலேயே ராஜஸ்தான் செல்லலாம், முறைப்படி பெண் கேட்கலாம் என்றார்.

அமிர்தவள்ளிக்கு போலத்தான் சாம்பவிக்கும். நாளைக்கே திருமணம் என்றாலும் சம்மதம்தான்.

இளவரசனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்பதால் ஒரு வாரம் கழித்து இன்று பொற்செல்வனுக்கு செந்தமிழ்செல்வியை முடிவு செய்ய வந்திருக்கிறார்கள்.

திருணமத்திற்கு ஓர்நாள் முன்னே பெண் வீட்டினில் நிச்சயம் செய்து மனப்பெண்ணை மண்டபத்திற்கு அழைத்து வருவதுதான் அமிர்தவள்ளி குடும்பத்தின் பழக்கம். அமிர்தவள்ளி, சாம்பவியின் அவசரத்திற்காகவும், ஆசைக்காகவும் இன்று குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்து மோதிரம் அணிவித்து சின்னதாய் ஓர் விழா.

இதோ அனைவரும் வந்து ஐந்து நிமிடமாகிறது. இன்னும் செந்தமிழ்செல்வியை பார்க்கவில்லை. “பொண்ணுப் பார்க்க வந்துருக்கோம், உன் தங்கை எங்க இன்னும் காணோம்? தூங்கிட்டிருக்காளா?” என கேட்டான் இளவரசனிடம்.

“வந்து அஞ்சு நிமிஷம்தானே ஆகுது?” என பொற்செல்வனிடம் முணுமுணுத்தபோதும் “நீ போய் பாரும்மா” என்று இளவரசன் நவீனாவிடம் சொல்ல, நவீனா ராஜலஷ்மி ப்ரித்திகா மூவரும் செல்வி அறைக்குள் சென்றனர்.

“அக்கா” என தலைகுனிந்தாள் தவிப்போடு.

“வாவ் செல்வி… ஃபர்ஸ்ட் டைம் ஸேரில பார்க்குறேன். ரொம்ப அழகா இருக்க” என்றாள் ராஜலஷ்மி.

“செல்விக்கா, இனி நான் உங்களை அக்கா சொல்லக்கூடாதாம், சித்தி சொல்லனுமாம், அம்மாயி சொன்னாங்க” என்றாள் ப்ரித்திகா.

“சரிடா, அப்படியே கூப்பிடு” என்று ப்ரித்திகா கன்னத்தில் முத்தமிட்டு, “ஸேரி கழட்டிட்டு சுடிதார் போட்டுக்கறேனு சொன்னா அம்மா விட மாட்டேங்குறாங்க நவீனாக்கா” என்றாள் பாவமாக.

“ஸேரில எப்படி இருக்க தெரியுமா? சின்னவர் சொக்கிப் போகப்போறார். டிரஸ் மாத்தாத” என்றாள் நவீனா.

“எல்லா இடமும் கவராகியிருக்கு, ஆனாலும் ஸ்ட்க்ரச்சர் அப்படியே தெரியற மாதிரி ஃபீலாகுது” என்றாள் பெரும் சங்கடமாக.

“ஹேய் செல்வி, பொண்ணுங்கள்லாம் இப்படி நினைச்சா அவ்வளோதான். நான், நவீனாலாம் கட்டலையா? ஏன் உன் அம்மா, நம்ம அத்தை எல்லாரும்தானே கட்டுறாங்க?”

“கட்டுறாங்கதான்” என இழுத்தவள், சேலை கட்டிய பின்னேதான் வெக்கம் என்ற உணர்வை அனுபவிப்பதை இவர்களிடம் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

“நமக்குள்ள பண்ணிக்கிற சின்ன விஷேசம்தான், அதுக்கு இவ்வளோ மேக்கப் போட்டுவிட்டுடாங்க” என்று குறைபடித்தாள் சாம்பவியை.

“இப்படி புலம்புறதை விட்டுட்டு யார்க்காக இதெல்லாமோ, அவங்ககிட்ட காட்டிட்டா கூச்சம் போய்டும். என்ன நவீனா? நான் சொல்றது சரிதானே?” என்று, நவீனாவையும் சிவக்க வைத்தபடி செல்வியை வெளியே அழைத்து வந்தாள் ராஜலஷ்மி.

அனைவரும் தெரிந்தவர்கள், நன்றாக பழகியவர்கள்தானே என்று நேற்று வரை நினைத்திருந்தவளுக்கு, தற்போது யாரையும் நேர்கொண்டு பார்க்க முடியவில்லை.

“செல்வி பாப்பா பெரிய பொண்ணாகிடுச்சு” என மருமகளை ரசித்தார் அமிர்தவள்ளி.

“இப்படி வந்து உக்காரும்மா” என்று புருஷோத்தமன் சொல்ல, “எல்லாருக்கும் ஜூஸ் கொடுத்துட்டு உக்கார்ந்துக்கோ செல்வி” என்று மகள் கையில் ட்ரேயை கொடுத்தார் சாம்பவி.

“ம்மா, நீயே கொடுத்துடேன், ஸேரி கட்டிட்டு கம்ஃபர்டபிளாவே இல்ல” என முணுமுணுக்க, “அது மரியாதையா இருக்குமா? நீதான் கொடுக்கனும், போ” என்று அதட்னார்.

எழுந்து வந்து செல்வியிடமிருந்து ட்ரேயை வாங்கி “நீ உக்காரு, நான் கொடுக்கறேன்” என்று அனைவருக்கும் பழரசம் கொடுத்தான் பொற்செல்வன்.

“பொழச்சிக்குவடா” என்றபடி தேவேந்திரன் பழசரம் எடுக்க, தேவராஜும் சிரிக்க, “பின்ன… பொண்டாட்டிக்கு ஹெல்ப் பண்ண வேண்டாமா?” என்று செல்விக்கும் கொடுத்து அவளருகே அமர்ந்தான் பொற்செல்வன்.

“எதுக்கு இவ்வளோ நர்வஸாகுற? ஃப்ரீயா இரு” என்றான்.

செல்வி தலைகுனிந்தே இருக்க, “எனக்கு இப்படி சேலை கட்டின செல்வியை விட, பழைய செல்விதான் ரொம்ப பிடிக்கும்” என்றான்.

“நல்லா இல்லையா?”

“நல்லா இருக்கு, ஆனா யாரையும் பார்க்கமாட்டேங்குற. உனக்கு பிடிச்ச டிரஸ் போட்டுட்டு வந்தா எல்லாரோடவும் பேசுவல்ல? போய் மாத்திட்டு வா”

“இல்ல… இதுவே இருக்கட்டும்”

“அப்போ எல்லாருக்கும் நீதான் பரிமாறனும்”

பாவமாய் பார்த்தவள், “ஸேரி மாத்த அரைமணி நேரம் ஆகிடும், கழண்டுடாம இருக்க அங்கங்க பின் பண்ணி வச்சிருக்கேன்” என்றாள் கிசுகிசுப்பாக.

சிரித்தவன், “சரி, டிரஸ் மாத்த வேண்டாம். பரிமாற வேண்டாம், இந்த இடத்தை விட்டு கூட போக வேண்டாம். கம்ப்பல் பண்ணி உக்கார வச்ச மாதிரி இருக்காம கொஞ்சம் சிரிச்சமாதிரி இரு” என்றான்.

“அப்போ நான் போய் ஆன்ட்டிகிட்ட உக்காருறேன்” என்று அமிர்தவள்ளியிடம் வந்தமர்ந்தவள், சற்று இயல்பிற்கு திரும்பினாள்.

“நல்ல நேரம் பார்த்துதான் வந்தோம், இன்னும் அரைமணி நேரத்துல நல்ல நேரம் முடிஞ்சிடும், நல்ல விசயத்தை ஆரம்பிச்சிடலாம்” என்றார் அமிர்தவள்ளி.

நவீனாவும், ராஜலஷ்மியும் பைகளில் இருந்த பொருள்களை எடுத்து வைத்து, “இப்படி வந்து உக்காரு செல்வி” என்று செல்வியை மீண்டும் பொற்செல்வனோடு அமர வைத்தனர்.

இருவரையும் படம் பிடிக்க ஆரம்பித்தான் இளவரசன்.

பொற்செல்வன் செல்விக்கு மோதிரம் அணிவிக்க, செல்வியும் அணிவித்தாள். அனைவரும் உண்டு முடித்த பின்னே, இளவரசனிடம் கார் சாவி வாங்கிக்கொண்டு “ம்மா, நீங்க பேசிட்டிருங்க, நாங்க வந்துடறோம்” என்று செல்வியை அழைத்துக்கொண்டு கிளம்பினான் பொற்செல்வன்.

பத்து நிமிடம் கூட சென்றிருக்கமாட்டான், பேசுவதற்கு தோதான இடம் இருக்கவே அங்கே காரை நிறுத்தி, கண்ணாடியை மேலேற்றி “பொம்மைக்கு போடுறமாதிரி மோதிரம் போட்டு விடற” என்றான்.

“வேற எப்படி போடுறது?”

“என்னைப் பார்க்கவேயில்ல”

இவள் அமைதியாக இருக்க, “இப்போவாவது என்னை பாருடீ” என்றான்.

இவள் பார்க்க, “என்னை பார்க்காம போட்டு விட்டதுக்கு முத்தம் கொடு” என்று கையை நீட்டினான்.

“அதெல்லாம் முடியாது”

“அப்போ நான் கொடுப்பேன்”

“கொடுத்துக்கோங்க” என்று இவள் கையை நீட்ட, “இங்க இல்ல. இங்க” என்று அவளின் உதட்டை பிடித்து பின்னே விடுவித்து விரலை கழுத்திற்கு கொண்டு வந்தான்.

பொற்செல்வன் செயலை கிரகிக்க முயன்று தனது கைகளை பிசைந்தாள். ஆனால் பொற்செல்வனுக்கு மறுக்கவில்லை. செல்வியின் கழுத்திலிருந்து தனது கையை எடுத்து செல்வியின் கையை பிடித்து, “நீ எப்போவும் அழகுதான், ஆனாலும் இன்னைக்கு ஸ்பெஷல் டிரஸ்ல இன்னும் அழகா இருக்க. ஆனா என்னால ரசிக்க முடியல” என்றான்.

இவள் அதிர்வோடு பார்க்க, “என்னோட பழைய செல்வி எதையும் மனசுல வச்சிக்கமாட்டா, இப்போ இருக்க செல்வி அப்படியில்ல. என்னைக்கு பழைய செல்வியை பார்க்குறேனோ அன்னைக்குத்தான் என்னால உன்னை ரசிக்க முடியும்” என்றான்.

“இல்ல, அப்படி ஏதும் இல்ல” என்று செல்வனின் கையை இறுகப்பற்றினாள்.

“ஓ… இல்லையா?” என்று தனது கையை விடுவித்து காரை கிளப்ப, “கார் எடுக்காதிங்க, இங்கையே கொஞ்ச நேரம் இருக்கலாம்” என்றாள்.

“என்கூட இருக்க ஆசையா இருக்கா?”

ஆமாம் என்பதாய் தலையசைக்க, “அப்போ ஏன் ஒரு வாரமா போன் பண்ணல?” என்றான்.

“நீங்க பிஸியா இருப்பிங்கனுதான்”

“ஓ” என்றதிலேயே நாம் சொல்வது பொய் என புரிந்துகொண்டான் என்பது புரிந்தது செல்விக்கு.

“முன்ன ஃப்ரண்ட்ஸா இருந்தோம், இப்போ அப்படியில்ல, நிறைய பேசனும்னு இருக்கு, ஆனா பேசினா”

“பேசினா?”

“பேசினா மனசு கஷ்டப்படுமோனு பயமாயிருக்கு” என்றாள் சின்னக்குரலில்.

“யார் மனசு?”

“நம்ம இரண்டு பேருக்கும்தான்”

“எவ்வளோ நாளைக்கு பயந்திட்டிருக்கப்போற?”

“நம்ம கல்யாணம் முடிஞ்சு உங்க கூட இருந்தா பயம் போய்டும்”

“ஓகே” என்று காரை கிளப்ப, கோபத்திலிருக்கிறான் என, “எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்” என்றாள்.

“பார்டா” என்று மெச்சுதலாய் பார்த்தபடி காரை ஓட்ட, ஐந்து நிமிடம் கழித்து, “உங்க டிரஸ் நல்லாயிருக்கு” என்றாள்.

பொற்செல்வன் முறைக்கவே, “நிஜமா அழகா இருக்கிங்க” என்றாள்.

“இறங்கு” என்று காரிலிருந்து இறங்க, “ம்ப்ச், எதுக்கு வீட்டுக்கு வந்திங்க? எனக்கு உங்களோட பேசனும்” என்றாள்.

“அழகா இருக்கேனு சொல்லிட்டல்ல, அதுலயே மயங்கிபோய்ட்டேன். வா” என்று இயல்பாகவே சொல்லி செல்வியின் கையை தனதோடு பிணைத்தபடி வீட்டிற்குள் சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!