Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா 9 1

அத்தியாயம் 9

அன்றைய மாலை அஜய்யும் ஸ்மிருதியும் கிளம்புவதற்காக தயாராகி கொண்டிருந்தனர், ஸ்மிருதி அஜய்யுடன் செல்ல விருப்பம் இல்லாமல், தன் உடைமைகளை எரிச்சலுடன் தயார் படுத்தி கொண்டிருந்தாள்,…



Advertisement

சகுந்தலா தன் மகள் மற்றும் மாப்பிள்ளைக்கு பிடித்தமான பலகாரங்களை செய்து அதனை தயார் படுத்தி கொண்டிருக்க, ஈஸ்வரன் தன் மனைவிக்கு உதவி செய்து கொண்டிருந்தார்,….

வசுந்தராவின் குடும்பம் இரவு நேரத்தில் பஸ் கிடைக்காது என்ற காரணத்தினால், அஜய் ஸ்மிருதியை பார்க்க வந்த வேலை முடிந்துவிட்டதென, மதியம் சாப்பாட்டிற்கு பிறகு கிளம்பிவிட்டனர்,..

Advertisement

Advertisement

இரவு மணி எட்டை காட்டியிருக்க, அஜய்யும் ஸ்மிருதியும் வீட்டின் வாயிலில், கிளம்புவதற்காக தயாராக நின்றனர்,.. அவர்களை வழிஅனுப்புவதற்காக மொத்த நபரும் வாயிலில் அவர்களுடன் இருந்தனர், ஈஸ்வரனும், விஷ்ணுவும் வண்டியில் பொருட்களை ஏற்றி கொண்டிருந்த அந்நேரம் வீட்டினுள்ளிருந்து வேகமாக ஓடிவந்தான் அம்ரிஷ்,…

​”மாமா, நீங்க கிளம்பிட்டீங்களா? ஏன் மாமா இவ்வளவு சீக்கிரம்?” சிறுவனின் குரலில் வாட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது.

Advertisement

​அவனின் உயரத்திற்குச் சற்றும் குறையாமல் குனிந்த அஜய், வாஞ்சையுடன் அவன் கன்னத்தினை வருடியபடி “மாமா வேலைக்குப் போகணுமில்ல கண்ணா? மாமா வேலைக்குப் போனா தானே அம்ரிஷ் செல்லத்துக்குப் பிடித்தமான டாய்ஸ் எல்லாம் வாங்கிக் கொடுக்க முடியும்?” அஜய்யின் வார்த்தைகளில் அத்தனை செல்லம்….

​”சரி மாமா. அடுத்த தடவை எனக்கு நீங்க கார் வாங்கிட்டு வாங்க,” அவன் சொல்ல, அஜய் சிரித்தபடி, “ஓகேடா கண்ணா,” என்றவாறு அவனது நெற்றியில் இதழ் பதித்தான். பதிலுக்கு, அம்ரிஷும் தன் சிறு உதடுகளை மாமாவின் கன்னத்தில் ஒற்றிக் கொண்டான்…

​”மாமா, அடுத்த தடவை நீங்க வரும்போதாவது, விஹானையும், வித்யுத்தையும் கூட்டிட்டு வருவீங்களா? அவங்கள ரெண்டு பேரையும் நான் ரொம்ப மிஸ் பண்றேன்”  அம்ரிஷ் சொல்லி முடித்தபோது, அஜய் உட்பட, அங்கு நின்றிருந்த மற்ற அனைவரும் (ஸ்மிருதியைத் தவிர்த்து) ஒரு கணம் உறைந்து போயினர்…

​”சொல்லுங்க மாமா… கூட்டிட்டு வருவீங்களா?” அஜய்யின் கரத்தைப் பற்றியவாறு மீண்டும் அழுத்தமாகக் கேட்க, அஜய்யின் கண்களில் பதில் சொல்ல முடியாத துயரம் கலங்கி நின்றது…

​நிலைமையைப் புரிந்துகொண்ட விஷ்ணு, மகனின் அருகில் வந்து, “அம்ரிஷ் செல்லம், மாமாக்கு டைமாச்சு. வா,” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டான்.

​விஹான், வித்யுத்… ஸ்மிருதியின் சிந்தனைகள் சுழலத் துவங்கின.

‘இந்த விஹான், வித்யுத்… இவனோட குழந்தைகளா? அந்தக் குழந்தைகளைப் பற்றி அம்ரிஷுக்கு எப்படித் தெரியும்?’ மனதிற்குள் கேள்விகள் அனலாய்ப் பறந்தன அவளுக்கு..

‘குழந்தை கேட்கிறான்… ஒரு வார்த்தை வாயைத் திறந்து பேசுகிறானா? இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகும், எப்படித்தான் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, குழந்தைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு இன்னொரு கல்யாணம் செய்ய முடிந்தது? மனைவி என்னதான் தவறு செய்திருந்தாலும், அந்தக் குழந்தைகள் என்ன பாவம் செய்தன? மனசாட்சியே இல்லாம எப்படி இருக்கத் தோன்றுகிறது இவனுக்கு? இவனுக்கு மொத்தக் குடும்பத்தின் ஆதரவும் வேறு’ – ஸ்மிருதியின் மனதில் அஜய்யை நோக்கி ஒரு கர்ஜனை ஓடிக் கொண்டிருந்தது…

​அப்போது, அவளது அருகில் வந்த கனகவள்ளிப் பாட்டி, “என்னடி, எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த யோசனை?” என நக்கலாகக் கேட்டவர், மேலும் குரலைத் தாழ்த்தி, “அடுத்த தடவை நீ இந்த வீட்டுக்கு வரும்போது, சந்தோஷமான செய்தியோடுதான் வரணும்,” என்றார்…

​அந்த வார்த்தைகள் ஸ்மிருதியின் கோபத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. “பாட்டி!” பற்களைக் கடித்தவாறு குரலை உயர்த்தினாள்.

​”என்னடி? நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கத்துற?” பாட்டி நிதானமாகக் கேட்க, “தயவு செஞ்சி என்னை ஹர்ட் பண்ணாதீங்க. நீங்க இந்த மாதிரி சொல்றது எனக்கு ரொம்ப ஹர்டிங்கா இருக்கு,” என்றாள் கண்களில் நீர் வழிய…

பேத்தியின் கண்ணீரை கண்ட பாட்டிக்கு மனம் பிசைய, மேலும் எதுவும் பேச விருப்பமின்றி அமைதியாக நகர்ந்து சென்றார்.

​”பார்த்துப் பத்திரமா போயிட்டு வாடா. போயிட்டு மறக்காம போன் பண்ணு,” என்று சகுந்தலா தன் மகளிடம் வழியனுப்பும் வார்த்தைகளைக் கூறிக் கொண்டிருந்தார்…

​”கிளம்புறேன்,” என்ற அஜய், நண்பனிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்றான். “அண்ணா, போயிட்டு போன் பண்ணுங்க. வேளா வேளைக்குத் தவறாம சாப்பிடுங்க,” என்றாள் ஹேமா பாசத்துடன்…

அவளின் பேச்சைக் கேட்டுச் சம்மதமாய் தலையசைத்த அஜய், முன் இருக்கையில் ஏறி அமர்ந்தான். ‘அண்ணிக்கு என்ன இவன் மீது அப்படி ஒரு பாசம்?’ என்று யோசித்த ஸ்மிருதி, அனைவரிடமும் விடைபெற்று வண்டியின் பின்பக்கக் கதவைத் திறக்கச் சென்றாள்…

​”பேக் சைடு ஃபுல் ஆகிடுச்சு. நீ ஃப்ரண்ட்ல உட்கார்ந்துக்க ஸ்மிருதி,” விஷ்ணு சொல்ல, வேறு வழியின்றி முன் பக்கம் சென்று அஜய்யின் அருகில் அமர்ந்தாள்…

இருவரும் அனைவரையும் பார்த்து கையசைக்க, கார் அந்த இரவு நேரத்தில் தங்கள் குடியிருப்பை நோக்கி விரைந்தது…

​இரவு நேரம் என்பதால், எதிர்பார்த்ததை விட ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இருவரும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை வந்தடைந்தனர்..

வண்டியில் இருந்த பொருட்களை எடுத்து வைத்ததும், தன் வேலை முடிந்துவிட்டதென நிம்மதியுடன், இரவு உடைக்கு மாறிப் படுக்கையில் சாய்ந்தாள் ஸ்மிருதி..

அஜய்க்கும் உறக்கம் கண்ணைச் சுழற்ற, அவனும் தன் இடத்தில் படுத்துக் கொள்ள, அன்றைய இரவு இருவரும் அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்தனர்…

​மறுநாள், அஜய் வழக்கம் போல் தனது காலைக் கடன்களை முடித்துவிட்டு, தன் கட்டுமான நிறுவனத்தை நோக்கிச் சென்றான். அவன் சென்றதும் கண் விழித்த ஸ்மிருதிக்கு, நேரம் காலை பத்து மணியைக் காட்டியது…

சோம்பல் முறித்து எழுந்தவள், அன்றாட வேலைகளை முடித்துவிட்டு அதே பால்கனிக்குச் சென்று வெளியுலகைப் பார்த்தபடி அன்றைய நாளையும் கடத்தினாள்….

​இப்படியே ஒரு வாரம் வேகமாக கடந்தது. வீட்டில் இருந்து கொண்டு வந்த பலகாரங்கள் அனைத்தையும் ஸ்மிருதி தனி ஆளாக இருந்து சாப்பிட்டு முடித்துவிட்டாள். வீட்டில் தின்பண்டங்கள் எதுவும் இல்லாததால், வெளியே சென்று வாங்கி வரலாம் என முடிவெடுத்தாள்…

புது ஊரில் கடைகள் எங்கே இருக்கும் என்று தெரியாமல் போகவே, கூகுளில் அப்பகுதியில் உள்ள சூப்பர்மார்க்கெட், ஷாப்பிங் மால் எனச் சில இடங்களைத் தெரிந்து கொண்டாள்…

​ஆட்டோ, டாக்ஸியில் இது வரை தனியாகப் பயணம் செய்திராததால் இப்போது தனியே செல்வது பயத்தைத் தரவே, அஜய்யின் காரை எடுத்துச் செல்லலாம் எனத் தன் தன்மானத்தைச் சிறிது விட்டுக்கொடுத்து அன்று அஜய்யின் முன் வந்து நின்றாள்…

​”எனக்கு உங்களோட கார் கீ வேணும்,” நேரடியாகக் கேட்டவளிடம்.. “எதுக்கு, வெளியே எங்கேயாவது போகணுமா?” என்றான்…

​”ஆமா…” என்பதோடு நிறுத்திக் கொண்டவளிடம், “ஓகே. நானும் உன்கூட வரேன்,” என்றவாறு இருக்கையிலிருந்து எழுந்தான்…

​”தேவையில்லை,” என வேகமாக மறுத்த ஸ்மிருதி, “எனக்கு நல்லாவே டிரைவ் பண்ண தெரியும். நான் மட்டும் போயிட்டு வரேன்,” என்றாள்…

​சிறிது யோசித்த அஜய், “இந்த ஊர் உனக்குப் புதுசு, இங்க இருக்கும் இடங்களைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாது,” என அக்கறையுடன் கூறினான்…

​”நான் கூகுள்ள சர்ச் பண்ணிப் பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்,” என்றாள் வேகமாக…

​”ஓகே. பட் ஸாரி, என்னால உன்னை தனியாக எங்கேயும் அனுப்ப முடியாது, என் கூட வரதா இருந்தா வா, இல்லைனா என்ன திங்க்ஸ் வேணும்ன்னு சொல்லு, நானே வாங்கிட்டு வரேன்,” என்றான் முடிவாக…

​அஜய்யின் இந்த முடிவில் எரிச்சலுற்ற ஸ்மிருதி, “எதுக்காக நான் தனியாக வெளியே எங்கேயும் போகக் கூடாது? நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல,” எனச் சலித்தாள்…

​”எனக்குத் தெரியும். பட் நான் என் முடிவிலிருந்து மாற மாட்டேன்,” என்றான் அஜய் உறுதியாக…

​”ச்சே! இந்த வீட்டில் எனக்குச் சுதந்திரமே இல்ல… ஜெயிலுக்குள்ள இருக்க மாதிரி இருக்க வேண்டியத்திருக்கு,” என வாய்விட்டே முணுமுணுத்தவள், வேகமாகத் தன் அண்ணன் விஷ்ணுவுக்கு போனில் அழைத்து, அஜய் கூறியவற்றைத் தெரிவித்தாள்…

​”அவன் சொல்றதுல தவறு ஒன்னும் இல்லையே. தெரியாத ஊர்ல எதுக்காகத் தனியாப் போகணும்னு நினைக்கிற? கொஞ்ச நாள் போகட்டும். அதுவரைக்கும் நீ அஜய் கூடப் போயிட்டு வா,” விஷ்ணுவின் பதிலில் எதிர்த்துப் பேச முடியாதவள், “சரிங்க அண்ணா,” என நல்ல பிள்ளையாகக் கூறிவிட்டு, “உங்க ஃப்ரெண்ட் கிட்ட நீங்களே சொல்லிடுங்க,” என்றவாறு போனை அஜய்யிடம் நீட்டினாள்…

​அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும், தங்கள் வண்டியில் அந்தப் பிரமாண்டமான ஷாப்பிங் மாலுக்கு வந்து சேர்ந்தனர்…

பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் ஒன்றாக உள்ளே சென்றனர். அந்த மாலின் பிரமாண்டத்தைக் கண்டு ஸ்மிருதிக்கு பிரம்மிப்பாக இருந்தது, அவள் ரசித்தபடியே நடந்து கொண்டிருக்க, அவளைப் பின்தொடர்ந்து சென்றான் அஜய்.

​கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அந்த மாலில் இருக்கும் கடைகளை பார்வையாலேயே வலம் வந்தவளுக்கு, நாக்கு வறண்டு தண்ணீர் தாகம் எடுத்தது…

அஜய்யிடம் எப்படி கேட்பது என மீண்டும் அவளின் தன்மானம் தடுத்தது. அவளுக்கு எதிர் திசையில் உணவு உண்ணும் பகுதி இருக்க, பீட்சாவின் வாசம் அவளின் மூக்கைத் தொட்டு இழுத்தது…

​அந்த வாசனையை முகர்ந்தபடியே, அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தவள், அங்கு பீட்சா ஆர்டர் செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த இளைய வயதுள்ளவர்களைப் பார்த்தாள்.

​’பீட்ஸா வாசத்திலேயே பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு. கையில பத்து பைசா கூட இல்ல. அண்ணன் கிட்ட அப்போதே கேட்டேன், அஜய் இருக்கான் அவன் பார்த்துப்பான்னு சொல்லி வாயை மூட வச்சிட்டாரு’ என ஸ்மிருதி மனதில் புலம்பிக் கொண்டிருந்த நேரம்… ​”இது உனக்கானது,” என்றபடி, ஸ்மிருதியின் கையில் ஒரு கிரெடிட் கார்டைக் கொடுத்த அஜய், “நீ உனக்கு வேண்டிய ஃபுட்டை ஆர்டர் பண்ணிக்கோ. நான் அந்த டேபிள்ல இருக்கேன்,” என்றவாறு அவளை விட்டு விலகிச் சென்றான்…

​ஏனோ, அஜய்யின் பணத்தில் செலவு செய்ய ஸ்மிருதிக்கு ஒருவித சங்கோஜம் ஏற்பட்டது. எனினும், பீட்சாவின் மீதிருந்த ஆசையும் பசியும் அவள் மனதில் உதிர்ந்த அந்த சங்கடத்தை தூக்கி எறிய, மற்ற நபர்களுடன் அவளும் வரிசையில் நிற்கத் துவங்கினாள்…

அத்தியாயம் 10

கையில் பீட்சா தட்டுடன் அஜய் அமர்ந்திருந்த மேஜையை அடைந்த ஸ்மிருதி, சடாரென நாற்காலியில் அமர்ந்தாள்…

ஒரு வாய் வார்த்தைக்காகக்கூட, “சாப்பிடுகிறீர்களா?” என்று முறைக்கு கூடக் கேட்கவில்லை. அவனைக் கண்டுகொள்ளாதது போலவே, தனது மினி பீட்சாவை வெறித்தனமாகச் சாப்பிட ஆரம்பித்தாள். ஸ்மிருதியின் இந்தப் பிடிவாதத்தை அஜய் கண்டுகொள்ளவில்லை. அவன் தனது ஸ்மார்ட்போனில் தீவிரமான ஒன்றைக் கவனித்துக் கொண்டிருந்தான் அனேகமாக, அது அவனது வேலை சார்ந்ததாக இருக்கலாம். மினி பீட்சாவையே தன் வயிறு நிரம்பும் அளவிற்கு ஆர்டர் செய்திருந்தவள், அதை முழுவதுமாக முடித்துவிட்டு, காகிதத் துண்டால் கையைத் துடைத்துக்கொண்டாள்…

​”திங்ஸ் வாங்கணும்னு சொன்னல்ல? கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கும்,” என்று ஸ்மிருதி சாப்பிட்டு முடித்ததைக் கவனித்த அஜய் முன்னே நடக்க, அவனைப் பின்தொடர்ந்தாள் ஸ்மிருதி…

​அவர்கள் நடந்துகொண்டிருந்த வேளையில், அஜய்க்கு முக்கியமான அழைப்பு ஒன்று வந்தது. “ஜஸ்ட் அ மினிட். நான் வரதுக்குள்ள எங்கேயும் போயிடாதே,” என்று அவளைப் பற்றித் தெரிந்திருந்ததாலோ என்னவோ, முன்னெச்சரிக்கையாகச் சொல்லிவிட்டு, சற்றுத் தள்ளிச் சென்று போனில் பேசத் தொடங்கினான்…

​இங்கு, ஸ்மிருதி நின்றிருந்த இடத்தில் ஒரு பெரிய அலங்காரச் சிலை இருந்தது. அதை ஆர்வத்துடன் பார்த்தபடி நின்றிருந்தாள். அவள் ரசனையுடன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, சில பெண்களின் பேச்சுச் சத்தம் அவளது கவனத்தை ஈர்த்தது…

​”ஹேய், எப்படி இருக்கான் பாரேன். அவனைப் பார்த்த செகண்ட்ல இருந்து என் கண்ணை அவனை விட்டு விளக்கவே முடியலடி,” என்றாள் சிவப்பு நிற உடையில் இருந்த ஒருத்தி பெருமூச்சுடன்.

​”மேரேஜ் ஆகிருக்குமாடி?” பிங்க் நிற உடையில் இருந்த இன்னொருத்தி கேட்டாள்…

​”எனக்குத் தெரிஞ்சு கண்டிப்பா மேரேஜ் ஆகிருக்காது, அவனோட பாடியைப் பார்த்தியா? எவ்வளவு ஃபிட்டா வச்சிருக்கான்! ஃபேமிலி மேன் கண்டிப்பா தன்னோட பாடில அக்கறை செலுத்த மாட்டான்,” என்ற சிவப்பு உடை அணிந்தவள் மீண்டும் ஒரு பெருமூச்சை வெளியிட்டாள்…

“அவனைக் கட்டிக்கப் போறவ கொடுத்து வச்சவ.”

​”அவன் ஸ்மைல்… ஹையோ முடியலடி! அப்படியே அவனை ஹக் பண்ணி…” பிங்க் நிறப் பெண் முடிக்கும் முன்னரே, “ஏய் போதும்டி! நான் அவன்கிட்ட போய் பேசிப் பார்க்கட்டா?” என்றாள் சிவப்பு உடைப் பெண்…

​”உன்னைக் கொன்னுடுவேன்! நான் தான் ஃபர்ஸ்ட் அவனைப் பார்த்தேன்,” பிங்க் நிறப் பெண் மல்லுக்கு நின்றாள்.

“உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். ரெண்டு பேருமே போய்ப் பேசுவோம். அவனுக்கு யாரைப் பிடித்திருக்கோ, அவங்க விட்டுக்கொடுத்துடணும். என்ன, ஓகேவா?” இருவரும் ஒரு டீல் பேசி முடித்தபடி, மெதுவாக அஜய்யை நோக்கி அடியெடுத்து வைத்தனர்.

​இத்தனை நேரமும் இவ்விரு பெண்களும் அஜய்யைப் பற்றித்தான் வர்ணித்துப் பேசிக் கொண்டிருந்தனர் என்று அறிந்த ஸ்மிருதிக்குச் சுறுசுறுவெனக் கோபம் ஏறியது. இந்த முறையும் ஏதும் அறியாத அஜய்யின் மீதே அந்தக் கோபம் எழுந்தது…

​அஜய் போன் பேசி முடித்து, ஸ்மிருதியின் அருகில் வருவதற்குள், அந்த இரண்டு பெண்களும் அவனை அடைந்துவிட்டனர். இருவரும் வலிந்து வலிந்து அவனிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அது ஸ்மிருதியின் காதுகளுக்கு எட்டாமல் போனது…

பின் அஜய் அந்த இரு பெண்களையும் பார்த்துச் சிரித்தவாறு ஏதோ பேசிவிட்டு, ஸ்மிருதியை நோக்கி வந்தான். அவன் வருகையைக் கண்டதும் அவள் வேறு பக்கம் திரும்பி, வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்தாள்…

​”போலாம்,” என்றவன் முன்னேறி நடக்க, அவள் அவனைப் பின்தொடர்ந்தாள்…

​’ஒன்னுக்கு ரெண்டு மேரேஜ் பண்ணிருக்கான், இவனுக்கு மேரேஜ் ஆகிருக்குமா இல்லையான்னு பேசிக்கிறாளுங்க! போதாக்குறைக்கு ரெண்டு குழந்தையும் இருந்திருக்கு. இவன் அவளுங்க கண்களுக்கு ‘அழகிய மன்மதனா’ தெரியிறானாமா! அவளுங்களுக்குக் கண்டிப்பா கண்ணு குருடாத்தான் இருக்கும்,’ என மனதில் அர்ச்சித்தபடி வந்தவள், பொருட்கள் வாங்கும் மார்க்கெட் ஏரியாவிற்குள் அஜய்யுடன் நுழைந்தாள்…

​தனக்கு வேண்டிய பொருட்களை வாங்கச் சென்ற ஸ்மிருதிக்கு ஏனோ அதில் கவனம் செல்லவில்லை. அந்தப் பெண்கள் இருவரும் பேசிக்கொண்டதே நினைவில் வந்து இம்சை செய்தது…

​தனக்குச் சுமார் பத்து அடி தொலைவில், மீண்டும் போனில் யாரிடமோ உரையாடிக் கொண்டிருந்த அஜய் அவளின் கண்ணில் பட, அவனைப் பார்த்தவள் ஏனோ இன்று உறைந்தது போல நின்றுவிட்டாள்.

அவனது வசீகரிக்கும் முகம் இன்று அவளை ஈர்த்தது, அவனுடன் திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருந்த நிலையில், இன்றுதான் அவனது முகத்தை முதல் முறையாகப் பார்ப்பதுபோல் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்…

போனில் உரையாடியபடியே இருந்த அவனது உதட்டில் உறைந்திருந்த அந்த மெல்லிய புன்னகையிலிருந்து, ஆங்காங்கே நடந்தபடி அவன் உரையாடிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு அசைவுகளையும் கண்டு ரசிக்கத் தொடங்கினாள்…

​நிமிடங்கள் கடந்த பின்பும், அவள் அதே நிலையிலேயே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, போனில் உரையாடி முடித்த அஜய், ஸ்மிருதியின் பக்கம் திரும்பினான். அவள் ஒரே இடத்தை, அதுவும் தன் புறமே, பார்த்துக்கொண்டிருப்பதை அவன் தெளிவாகக் கண்டுகொண்டான்…

யாரை இந்தளவிற்குச் சுவாரஸ்யமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று புரியாதவன், தனக்குப் பின்புறம் எவராவது இருக்கிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்தான்…

பின்புறம் எவரும் இல்லாததில் குழம்பிப்போனவன், குழப்பத்துடன் அவளருகிலேயே வந்தான்.

​வந்தவன் “ஸ்மிருதி,” என அவளின் பெயர் சொல்லி அழைக்க, இன்னும் அதே நிலையிலிருந்து மீளாமலே இருந்தவளின் தோள்களை வேறு வழியின்றித் தொட்டு, அவளைத் தன்னிலைக்குத் திருப்ப முயன்றான்..

அவனது தொடுதலில் அரண்டு போய் தன்னிலைக்கு மீண்டவள், தனக்கு எதிரே அஜய்யைக் கண்டதும் செய்வதறியாது, வேறு புறம் திரும்பிக்கொண்டாள்…

​”ஆர் யூ ஓகே? உனக்கு பிராப்ளம் எதுவும் இல்லையே?” என அக்கறையாக விசாரித்த அஜய்யிடம், தலையை மட்டும் அசைத்துவிட்டு, வேகமாக அவனை விட்டு விலகிச் சென்றாள்…

​’நான் என்ன காரியம் செஞ்சிட்டேன்? நான் எதற்காக அவனை… ச்சே! இதுதான் அழகுல மயங்குறதா?’ எனத் தன்னிடமே கேட்டுக் கொண்டவள், ‘இவனை நான் எங்கோ பார்த்திருக்கிறேனே!’ என்று யோசித்தாள்…

‘இவனைத் தானே நீ தினமும் பார்த்துக்கொண்டு இருக்கிறாய் வேறு எங்கேயோ எப்படி பார்த்திருக்க முடியும்?’ என்றது அவள் மனசாட்சி…

​’இல்லை… எங்க மேரேஜ் நடக்குறதுக்கு முன்னாடி பார்த்திருக்கேன். ஆனால் எங்கே?’ என யோசித்தவளுக்குத் தலைவலி வந்ததுதான் மிச்சம்…

பின் அதைப் பொருட்படுத்தாது, பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.

​பொருட்கள் அனைத்தும் வாங்கி முடித்த பின், பில் போட்டுவிட்டு இருவரும் வீட்டிற்குக் கிளம்புவதற்காக, கால்நடையாகவே பார்க்கிங் ஏரியாவிற்குச் சென்று கொண்டிருந்தனர்…

அந்த நேரத்தில், “ஹேய், திர்ஷி!” என்ற ஒரு ஆடவனின் குரலில் திரும்பிய ஸ்மிருதி, அங்கு அவள் வயதே ஒத்திருந்த ஒருவனைக் கண்டு, “ஹேய் சுமித், எப்படி இருக்க?” என்றவாறு இவளும் முகமலர்ந்தாள்….

​”ஹரீஷ், நீ எப்படிடா இருக்க?” என்றவாறு சுமித்துடன் இருந்த இன்னொருவனிடமும் அவள் முகமலர விசாரிக்க, “நாங்க சூப்பரா இருக்கோம் திர்ஷி. நீ எப்படி இருக்க?” என்றான் ஹரீஷ்…

​”நானும் நல்லா இருக்கேன்,” என்றவளிடம், “ஒரு போன்கால் இல்லை, மெசேஜ் இல்லை. நம்பரைச் சேஞ்ச் பண்ணிட்டியா திர்ஷி? நாங்க உன் நம்பருக்கு ட்ரை பண்ணோம்… ம்ம்ஹும், டெட்லதான் இருக்கு,” என்றான் சுமித்.

​”எங்கே போன திர்ஷி? ஏன் எங்க கிட்ட, கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேலாகப் பேசவே இல்லை? எங்கே போன? எங்களையெல்லாம் ஒரேயடியாக மறந்துட்டியா?” என ஹரீஷ் கேட்க,

“அப்படியெல்லாம் இல்லடா, நான் அதைப்பற்றி அப்புறம் சொல்றேன்,” என்றாள் மெதுவான குரலில்…

​”ஓகே… இவர் யார்? உன் ஹஸ்பெண்டா?” என ஹரீஷ் கேட்க, “நோடா, இவர் திர்ஷியோட ஹஸ்பெண்டா இருக்க முடியாது. ஆக்சுவலி நான் அவரைப் பார்த்திருக்கேன், திர்ஷியோட மேரேஜ்ல,” என சுமித் சொல்ல, ஸ்மிருதிக்குச் சிறிது தடுமாற்றமாக இருந்தது…

​”உன் ஹஸ்பெண்ட் கூட வராம யார் கூட ஊர் சுத்திட்டு இருக்க? என்ன, ஒரு வருஷத்திலேயே அவர் சலிச்சிட்டாரா?” என சுமித் கேலியான சிரிப்புடன் கேட்க, ஏனோ அஜய்க்குச் சுறுசுறுவென்று கோபம் எழுந்தது. ஸ்மிருதியின் முன்பு காட்ட விரும்பாமல் இறுகிய முகத்துடன் வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்…

​”சுமித், இவர் என்னோட ஹஸ்பெண்ட்,” எனத் தட்டுத் தடுமாறி ஸ்மிருதி சொல்லி முடிக்க, “வாட்!” என இருவரும் அதிர்வுடன் அவளை நோக்கினர்…

​”என்ன திர்ஷி? அப்படின்னா நிஜமாவே ஃபர்ஸ்ட் ஹஸ்பெண்டை கழட்டிவிட்டு, இன்னொருத்தன் கூட ஜாயிண்ட் ஆகிட்டியா?” எனச் சிரித்தபடி சுமித் கேட்க…

​”ஷட் அப்!” எனச் சத்தமான குரலுடன் தன் கோபமான முகத்தைக் காட்டினான் அஜய். அவன் குரலில் வாய் மூடி அமைதியாகினர் அவர்கள்…

​அஜய்யின் முகம் கோபத்தில் கறுத்திருப்பதைக் கண்ட ஸ்மிருதி, “இவங்க என்னோட ஃப்ரெண்ட்ஸ்,” என குரலைச் சற்றே உயர்த்திச் சொல்ல, அவர்களை ஒரு பார்வை பார்த்த அஜய், “யார் இவனுங்க உன்னுடைய ஃப்ரெண்ட்ஸ்ஸா?” என்றான் கோபப் பார்வையை அவர்களிடம் வீசியவாறு…

​”என்ன திர்ஷி… இவரோட பிஹேவியரே சரியில்லை. இவர் கூடலாம் எப்படி இருக்க?” என சுமித் கேட்க, அனல் பார்வையுடன் அவனை நெருங்கினான் அஜய். அவன் தன் நண்பனை நெருங்கும் முன் அஜய்யின் முன் வந்து நின்றாள் ஸ்மிருதி…

​”என்ன பண்ற? இவங்க என்னோட ஃப்ரெண்ட்ஸ்னு சொன்னேன்ல?” அழுத்தமான குரலில் சொன்னவள், “என் முன்னாடியே என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட ரூடா பிஹேவ் பண்ற! ஹௌ டேர் யூ?” எனப் பற்களைக் கடித்தபடி கேட்டாள்…

ஸ்மிருதிக்குப் பின்னால் நின்ற சுமித், ஏளனமாக அஜய்யைப் பார்த்துச் சிரித்தான். இந்த முறை அஜய்யின் பார்வை சுமித்தின் புறம் திரும்ப… ​”திர்ஷி, நாங்க கிளம்புறோம்,” என்றவன், “உன் நம்பர் மட்டும் கொடு,” எனப் போகாமல் நின்றவன், ஸ்மிருதியின் எண்ணை வாங்கிய பிறகே, அஜய்யை ஒரு பார்வை பார்த்துவிட்டு இடத்தை காலி செய்தான்..

​”என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி கூட நான் அவமானம் படணும், அதுதானே உன்னோட எண்ணம்?” என்றவாறு அஜய்யிடம் எகிறியவள், “ச்சே! உன்கூடலாம் இருக்கணுமென்று என் தலைவிதி,” எனப் புலம்பியவாறு வேகமாக முன்னேறி நடந்தாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!