Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 17

கலாட்டா – 17

தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட MP மருதராஜனின் புதல்வன் கதிரவனை மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டதை தொடர்ந்து ஆளுங்கட்சியினரும் கதிரவனால் வழக்கு விவகாரத்தால், மருதராஜ் அவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக முடிவெடுக்க, தன் முயற்சி அனைத்தும் வீணாய் போன ஆத்திரத்தில் இருந்த MP மருதராஜ், கோபத்துடன் சுந்தர பாண்டியனை காண புறப்பட்டு சென்றார்.



Advertisement

தன் முன் அடக்கப்பட்ட வெறியுடன் அமர்ந்திருந்த மருதராஜை அமைதியுடன் எதிர்கொண்ட சுந்தரபாண்டியன், ” சொல்லுங்க சார் என்ன விஷயம்??” என்று ஒன்றுமே நடவாதாது போல் வினவ,

அவரின் நடவடிக்கையில் அதுவரை மருதராஜ் தனக்குள் போட்டு வைத்திருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் உடைந்து போக ஆத்திரத்துடன் சுந்தரபாண்டியனின் சட்டையை கொத்தாக பற்றியவர், ” டேய் உனக்கு எவ்வளவு திண்ணக்கம் இருந்தா என் பையனை எதுவும் பண்ணக்கூடாதுன்னு அவ்ளோ சொல்லியும் இப்படி அவன் மேல அபாண்டமா பலி போட்டு உள்ள தள்ளுனதும் இல்லாம இப்படி ஒண்ணுமே தெரியாத பச்சை புள்ளை மாதிரி பேசுவ.. என் புள்ளையை ஜெயிலுக்கு அனுப்பி என் பதவியை பிடுங்கிட்டு விட்ட உன்னை நான் சும்மா விட மாட்டேன் டா.. குறிச்சு வச்சுக்கோ உன் குடும்பம் மொத்தத்தையும் வேர் அறுக்கலை என் பேர் மருதராஜ் இல்லை” என்று ஆவேசத்துடன் மொழிய,

Advertisement

Advertisement

அதையும் ஒரு புன்னகையுடன் ஏற்ற சுந்தர பாண்டியன், “பெஸ்ட் ஆஃப் லக்” என்று நக்கலாக கூறினார்.

அவரின் நக்கல் எரிகின்ற தீயில் எண்ணெய் விட, அவர் மீதான வன்மத்தை மனதில் தேக்கி வைத்துக்கொண்டு, கண்களில் பலி வெறி மின்ன அவரை ஆழமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் மருதராஜ்.

Advertisement

” டேய் வினோதமானவனே எங்கடா என் பேரன்” என்று அப்போது தான் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைந்த வினோத்தை வாசலில் நிற்க வைத்தே தன் விசாரணையை தொடங்கினார் மதுரம்.

அவனோ குனிந்து தன் சட்டைப் பையில் தேடி பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கியவன்,

” பாக்கெட்க்குள்ள தான் போட்டுட்டு போனேன் .. இப்போ காணமே.. இருங்க கீழ ஏதும் விழுந்துட்டானா அப்படின்னு பார்த்துட்டு வரேன்” என்று சிரியாமல் சொல்ல,

” என்ன என்கிட்டயே லந்தா?? மகனே கொன்றுவேன் .. விளையாடாம எங்க அவனுங்கன்னு சொல்லு.. இங்க நான் பெத்த ரெண்டு லூசும் ‘ அதான் நாங்க ஒன்னு சேர்ந்துட்டோம்ல எதுக்கு இங்க இருக்கணும் சென்னைக்கே போய் அங்க ஒரே வீட்டுல இருக்கலாம் கிளம்புங்கன்னு’ ஆர்ப்பாட்டம் பண்ணுதுங்க ” என்று மதுரம் புலம்ப,

அதைக்கேட்டு சப்தமாய் சிரித்த வினோத், ” உன் பிள்ளைங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேரணும்னு தான எங்களை போட்டு இந்த பாடு படுத்துன பாட்டி.. இப்போ பார்த்தியா அவங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து உன்னை பாடா படுத்துறாங்க.. ஹாஹா சும்மாவா என் தளபதி சொன்னாரு வாழ்க்கை ஒரு வட்டம்னு” என்று அவன் மதுரத்தை வெருப்பேற்ற,

அவரோ அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல், “பைத்தியம் மாதிரி எதையாவது உலறிகிட்டு இருக்காம என் பேரன் எங்கன்னு உருப்படியா கேட்டுட்டு வந்து சொல்லு” என்று அவனிற்கு உத்தரவிட்டுவிட்டு உள்ளே சென்றுவிட,

வினோத்தோ , “ஏதே பைத்தியமா?? கிழவி ஒரு வார்த்தையில் அசிங்கப்படுத்திட்டு போய்டுச்சே” என்று அவன் புலம்பிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த ராமனும் பரமசிவனும், ” டேய் அஸ்வத்தும் அஜயும் எங்க டா??” என்று அதே கேள்வியை கேட்க,

அதற்கு பதிலளிக்காமல், ” படுத்துறாய்ங்களே என்னைய.. ஈஸ்வரா இந்த மெண்டல் குடும்பத்துல இருந்து என்னை காப்பாத்துப்பா” என்று பெருமூச்சு ஒன்றை வினோத் வெளியிட்டான்.

“டேய் கேள்வி கேட்டா பதில் சொல்லாம உனக்குள்ளையே எதுக்குடா லூசு மாதிரி பேசிகிட்டு இருக்க.. முத்திருச்சா” என்று ராமன் கேட்க,

” அடங்க.. என்ன ஆள் ஆளுக்கு பைத்தியம் பைத்தியம்னு சொல்லி, விட்டால் நிஜமாவே பைத்தியம் ஆக்கிருவிங்க போல.. பிள்ளையை நீங்க தானே பெத்திங்க … அப்போ அவன் எங்க போறான் வரான்னு கூட தெரிஞ்சுக்காம என் உயிரை எதுக்கு வாங்குறிங்க.. ” என்று அவன் வெடிக்க,

ராமனோ ஆர்ப்பாட்டமான புன்னகையுடன் தன் தம்பியை பார்த்து, “வினோ எப்பவுமே இப்படித்தான் ஒரே குசும்பு.. அவன் விட்டா எதையாவது உளறிட்டே இருப்பான்.. நீ வா நம்ம வாக்கிங் போய்ட்டு வருவோம்” என்று அவரை அழைத்து அங்கிருந்து சென்று விட்டார்.

“சோதிக்காதிங்க டா என்னைய” என்று அழுதுவிடுபவன் போல் நின்றிருந்த வினோத், ‘ அஸ்வத்திற்கு நண்பனாய் ஏன் ஆனோம் ‘ என்று லட்சமாவது முறையாய் தன்னையே நொந்து கொண்டு வீட்டிற்குள் வராமல் மீண்டும் வெளியே சென்றுவிட்டான்.

“என்ன நடக்குது இங்க???” என்று கர்ஜனையாய் வெளிவந்த குரலில் அங்கு ஓடிக் கொண்டிருந்த அஜயும், கீதாவும் பிரேக் அடித்ததைப் போல் சட்டென்று நிற்க,

அமைதியான அந்த இடத்தில் திடீரென ஒலித்த அந்த குரலில் ஒரு நொடி அதிர்ந்து போய் நின்றாலும்,  பின் தங்களை சமாளித்து “எவன் அவன்??” என்பதைப் போல் மெதுவாக அவர்கள் இருவரும் திரும்பிப் பார்க்க,

அங்கு ஜீவா தான் இவர்கள் இருவரையும் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

அவனைக் கண்டதும் வாயெல்லாம் பல்லாக அவனை நோக்கி ஓடிய அஜய் அவனைக் கட்டிக்கொண்டு, “மாப்ள … வந்துட்டியா?? அது எப்படி மாப்ள எனக்கு ஒரு பிரச்சனைனா உடனே ஓடி வந்திடுற.. நீதான் மாப்ள என்னோட உயிர் நண்பன்” என்று தன் டிராமாவைத் துவங்கினான் அவன்.

இருவரையும் ஏதோ வேற்று கிரகவாசி போல் பார்த்து வைத்த கீதா வேறேதும் பேசாமல் அங்கிருந்து அஞ்சலியைக் காண சென்று விட்டாள்.

அவள் அகன்றதும் தன்னிடமிருந்து அஜயை பிரித்து விட்ட ஜீவா, ” டேய் வெளங்காதவனே.. நீ தான ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி யாரோ எங்களை கடத்த்திட்டு போறாங்க காப்பாத்துடன்னு மெசேஜ் அனுப்பி லைவ் லொகேஷன் வேற அனுப்பி வச்சிருந்த … நானும் என்னானதோ ஏதானதோன்னு பதறிப்போய்  அடிச்சு பிடிச்சு ஓடி வந்தா இங்க அந்தப்பிள்ளை கூட ஓடிப்பிடிச்சு விளையாடிகிட்டு இருக்க நீ.. நீயெல்லாம் ஒரு மனுஷனாடா?? பாவி” என்று அவனை திட்டித் தீர்த்தான் ஜீவா.

அதையெல்லாம் அந்தக்காதில் வாங்கி இந்தக்காதில் விட்ட அஜய் சாவகாசமாக தன் நண்பனின் தோள்களில் கையைப் போட்டு, “நாலு நாளாக வீட்டுல தின்னுட்டு தின்னுட்டு தூங்கிட்டு இருந்தியா.. அதான் கொஞ்சமாச்சும் எழுந்து அலையாட்டும்னும்னு சும்மா ஒரு ஜாலிக்கு பண்ணேன் மாப்ள.. அதெல்லாம் கண்டுக்காத.. ஆனா நீ வந்ததும் நல்லதாப் போச்சு.. கார்ல தான வந்த??” என்று அவன் வினவ,

அவனை ஒரு மார்க்கமாக பார்த்த ஜீவா, ” ஆமா ஏன் கேட்குற??” என்று பதில் கேள்வி கேட்டான்.

” அப்போ ரொம்ப நல்லாதாப் போச்சு” என்று கூறியவன் அவன் சுதாரிப்பதற்குள் அவன் கைகளில் இருந்து சாவியை பறித்துக் கொண்டு அஸ்வத் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டான்.

“அட நாரப்பயலே சாவியை கொடுடா” என்று ஜீவா கத்திக்கொண்டே அவன் பின்னால் ஓடி வர, இருவரையும் ஒன்றும் புரியாமல் மற்ற மூவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ப்ரோ ஆடு தானா வந்து சிக்கிருச்சு..” என்று தன் கையில் இருந்த சாவியை தூக்கிக் காட்டினான் அஜய்.

அதைக்கண்ட மற்ற மூவரும், “தேல்பத்ரிசிங்” என்பதைப் போல் ஜீவா வந்த காரைப் பார்க்க, ஜீவாவிற்கு அவர்களின் திட்டம் புரிந்து போனது.

அவன் சுதாரிப்பதற்குள் காருக்குள் நால்வரும் ஏறி இருக்க,

” டேய் கதவைத் திறடா நான் ஏற வேண்டாமா??” என்று ஜீவா கடுப்புடன் கேட்டான்.

” ஹாஹா நீ வந்துட்டா அங்க பஞ்சர் ஆகி நிக்கிற காரை யார் சரி பண்ணி கொண்டு வருவா?? ஸ்டெப்னி இதுல இருந்ததை தூக்கி வெளிய போட்டிருக்கேன்.. இப்படியே நடந்து போன அப்படின்னா ஒரு அஞ்சு கிலோமீட்டர் தாண்டி அஸ்வத்தோட ஸ்கோடா நிக்கும்.. அதுல ஸ்டெப்னி மாத்தி எடுத்துட்டு பத்திரமா காரை வீட்டுக்கு கொண்டு வந்திடு.. இப்போ நாங்க கிளம்புறோம்” என்று அவன் பதிலைக் கூட கேட்காமல் அஜய் காரை எடுக்க,

” அடப்பாவி சண்டாளா!! உனக்கு ஆபத்துன்னு தெரிஞ்சு பதறிப்போய் ஓடி வந்தேன் பாரு என் புத்தியை செருப்பாலையே அடிக்கணும்” என்று ஜீவா நொந்துகொள்ள,

அப்போது சற்று தூரம் சென்று காரை நிறுத்திய அஜய், ” மாப்ள” என்று கத்தி அவனை அழைக்க,

“அதான் பார்த்தேன்.. என் மாப்ள என்னை விட்டுட்டு போக மாட்டானே” என்று மகிழ்ச்சியுடன் கூறிக்கொண்டே ஜீவா காரை நோக்கி முன்னேற,

அவன் மீது ஒரு சாவியை தூக்கி எறிந்த அஜய், ” சாரி டா சாவியை கொடுக்க மறந்துட்டேன்.. சீக்கிரம் டயரை மாத்தி எடுத்துட்டு வா .. பை” என்று சொல்லியவன்,

ஜீவா முறைப்பதைக் கண்டுகொள்ளாமல், “மாப்ள இந்த ஏரியால புலிகள் நடமாட்டம் ஜாஸ்தியா இருக்குமாம் பேப்பர்ல படிச்சேன் … ஜாக்கிரதை மாப்ள காருக்கு ஒன்னும் ஆகாம கொண்டு வந்துரு” என்று கூறியவன் ஜீவா அவனை கடித்துக் குதறுவதற்குள் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

” அச்சோ பாவம் அவரு” என்று அஞ்சலி வருத்தப்பட,

“நீ இப்படியே பாவம் பார்த்துட்டே இருந்தா நாம நாளைக்கு கூட போக மாட்டோம்.. போலீஸ் தான அவரு.. இதைக்கூடவா சமாளிக்க மாட்டாரு..நீ வாயை மூடிக்கொண்டு வா எலி” என்று அவள் வாயை அடைத்திருந்தாள் கீதா.

இங்கு ஜீவா தான் தன் நண்பனை வசைபாடிக்கொண்டே தனக்கு கொடுத்த வேலையை செய்யத் தொடங்கினான்.

” காமாட்சி!!! ஏட்டி காமாட்சி!! வீட்டை தொறந்து போட்டுட்டு எங்கன போனவ??” என்று தன் கட்டைக் குரலால் நடுவீட்டில் நின்று கத்திக் கொண்டிருந்தார் சந்தன பாண்டியன்.

அவரின் குரலைக் கேட்டதும் காமாட்சிக்கு இதயமே நின்று விட்டது.

‘ நாளைக்கு தான வருவேன்னு சொன்னாரு.. அதுக்குள்ள வந்துட்டாரே.. இப்போ அஞ்சலியைக் கேட்டா நான் என்ன சொல்லுவேன் ‘ என்று அவர் பயந்து கொண்டிருக்க, அதற்குள் இன்னும் பலமுறை அவரின் பெயரை ஏலம் விட்டிருந்தார் அவரின் கணவன்.

இதற்கு மேல் வெளியே செல்லவில்லை என்றால் அவரின் ருத்ரதாண்டவத்தை காண ஆளாகிவிடுவோம் என்றெண்ணி அஞ்சிக்கொண்டே வெளியே அவர் வர,

” என்னடி ஒரு நாள் வெளியூரு போனதும் அம்புட்டு ஏத்தமாகி போயிருச்சா..ஒரு மனுஷன் வந்ததுல இருந்து கத்திகிட்டு கிடக்கேன் ஆடி அசைஞ்சு திருவாரூர் தேராட்டம் பொறுமையா வாரவ.. போ போய் குடிக்க தண்ணீ கொண்டா” என்று வந்ததும் தன் மனையாளின் முகத்தை காண முடியவில்லையே என்கிற கோபத்தில் அதட்டல் போட்டார் சந்தன பாண்டியன்.

காமாட்சியும் விரைவாக உள்ளே சென்று அவர் கேட்ட தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் நீட்ட,

அமைதியாய் அதை வாங்கி குடித்த சந்தனபாண்டியன், தன் மனைவியின் வாடிய முகத்தைக் கண்டு, “என்னாத்துக்கு இப்போ மூஞ்சியை முக்கா முழத்துக்கு தூக்கி வச்சுக்கிட்டு திரியுறவ?? என்ன சங்கதி??” என்று விசாரிக்க,

பதட்டத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்த காமாட்சி, ” அய்யோ அதெல்லாம் இல்லைங்க.. நால்லாத்தேன் இருக்கேன்” என்று எங்கே அவருக்கு உண்மை தெரிந்து விடுமோ என்று பயத்தில் பேச அதுவே சந்தன பாண்டியனிற்கு சந்தேகத்தை தோற்றுவித்தது.

” நீ இல்லைன்னு சொல்ற விதமே ஏதோ இருக்குன்னு சொல்லுதே.. ” என்று அவர் இழுக்க,

தன் முகபாவததை முயன்று மாற்றிக்கொண்ட காமாட்சி,  ” அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. நீங்க நாளைக்கு தான் வருவேன்னு சொன்னீக அப்பறம் இன்னைக்கே வந்துட்டீக” என்று அவர் பேச்சை மாற்றினார்.

” ஏன் ஒரு நாள் முன்ன வந்தா வீட்டை விட்டு துரத்தி விட்டிடுவியா” என்று தன் மனைவியை சீண்டினார் சந்தனபாண்டியன்.

ஆனால் ஏற்கனவே பயத்தில் இருந்த அவரின் மனையாளுக்கு இந்த சீண்டலை எல்லாம் கண்டுகொள்ளும் மனநிலை இல்லை. அவரோ , ” அச்சோ இல்லைங்க.. சும்மா தான் கேட்டேன் . இது உங்க வீடு உங்களை வர வேண்டாம்னு சொல்ல நான் யாரு.. மன்னிச்சுக்கிடுங்க” என்று பம்மிக்கொண்டே கூற,

அவரின் நடவடிக்கைகள் சந்தன பாண்டியனின் சந்தேகத்தை மேலும் வலு பெற செய்தது.

” சரி வேலை சீக்கிரமே முடிஞ்சது அதான் வந்துட்டேன்.. அபி எங்க?? அங்கனவே கலவரமா கிடக்கு பிள்ளையை காலேசுக்கு ஏதும் அனுப்பலை தான??” என்று கல்லூரிக்குச் செல்லும் தன் இரண்டாம் மகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வினவ,

காமாட்சியும் கர்ம சிரத்தையாக, ” அபி ரூம்ல தான் இருக்காங்க ..எங்கேயும் போகலை.. பத்திரமா தான் இருக்கா” என்று அவருக்கு ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளை கூறினார்.

அஞ்சலி எப்போதும் வீட்டில் தான் இருப்பதால் அவருக்கு அஞ்சலியை பற்றி கேட்க தோணவில்லை. அபி பத்திரமாக இருக்கின்றாள் என்று அறிந்த பின் நிம்மதியுடன் , ” அப்போ சரி.. பிரயாணம் செஞ்சது காலெல்லாம் வலிக்குது.. நான் செத்த நேரம் படுத்து எந்திருச்சுட்டு வரேன்” என்று கமாட்சியிடம் தகவல் சொல்லிவிட்டு அவர் தன்னுடைய அறைக்கு கிளம்ப,

காமாட்சி அதன் பின்பு தான் இழுத்து வைத்த மூச்சை வெளியிட்டார்.

‘ நல்லவேளை அஞ்சலியை பத்தி கேக்கலை ‘ என்று அவர் சந்தோஷப்பட,

அந்த மகிழ்ச்சியின் ஆயுளை குறைப்பதைப் போல் அறை வரை சென்ற சந்தன பாண்டியன் பின் ஏதோ தோன்ற நின்று தன் மனைவியை ஏறிட்டு, ” அஞ்சலிக்குட்டி எங்க வந்ததுல இருந்து கண்ணுலயே அகப்படலையே” என்று அவர் கேட்க,

காமாட்சிக்கு பயத்தில் தொண்டை வறண்டு போய் வார்த்தைகள் வெளியில் வராமல் முழி பிதுங்கி நிற்க,

” என்ன அஞ்சலி எங்கன்னு கேட்டதுக்கு இந்த முழி முழிக்கிறவ?? அஞ்சலி எங்க?? தோட்டத்துக்கு ஏதும் போயிருக்கா?? நான் போய் ஒரு எட்டு பார்த்திட்டு வரேன்.. பிள்ளையை பார்த்தே ஒரு நாள் ஆகி போச்சு..”  என்று அவராய் ஒரு முடிவெடுத்து அங்கிருந்து கிளம்ப முற்பட,

அவரைத் தடுத்த காமாட்சி, ” தோட்டத்துக்கெல்லாம் போகலைங்க” என்று தயங்கித் தயங்கி கூற,

” பின்ன எங்க போயிருக்கு??” என்று குழப்பமாய் சந்தனபாண்டி  வினவினார்.

இதற்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் காமாட்சி மௌனம் காக்க, அது சந்தனபாண்டியின் கோபத்தை தூண்டி விட்டது.

” அஞ்சலி எங்க போயிருக்குன்னு இப்போ சொல்லப் போறியா இல்லையா??” என்று அவர் கர்ஜிக்க,

அவரின் கோபத்தில் காமாட்சியின் உடல் தூக்கிப் போட்டது.

” காமாட்சி உன்னைத்தான் கேட்டேன்.. அஞ்சலி எங்க??” என்று அவர் இன்னும் சப்தமாக கத்த,

 இதற்கு மேல் மறைக்க முடியாது என்றெண்ணி அவர் உண்மையை சொல்லப்போனா சமயம்,

” நான் இங்க இருக்கேன் ப்பா” என்று மாடியிலிருந்த தன் அறையில் இருந்து மெதுவாக இறங்கி வந்து கொண்டிருந்தாள் அஞ்சலி.

– தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!