மான்விழி – 02
சித்தார்த் அபிமன்யூ அட்மினில் பணிபுரியும் ஐனனியிடம் போன் செய்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை தயார் செய்ய சொன்னான்.
“டாக்டர், அவங்க பேரு?” என்றாள் ஜனனி.
Advertisement
“அதை கூட நானே சொல்லணுமா? டாக்டர் மகேந்திரன் கிட்ட மத்த டிடெய்ல்ஸ் கேட்டுகோங்க” என்று அவளிடம் காய்ந்தான் சித்தார்த்.
Advertisement
“பேரு கேட்டது ஒரு குத்தமா?” என்று மனதிற்குள் புலம்பியபடி “ஓகே சார்” என்று போனை வைத்தவள், மகேந்திரனுக்கு போன் செய்து மற்ற விவரங்களை கேட்டு, ஆர்டரை பிரிண்ட் செய்து உறையிலிட்டு, சித்தார்த்திடம் கொண்டு போய் நீட்டினாள்.
Advertisement
அதை கையால் கூட வாங்காமல் அங்கே வை என்று கண்களால் ஜனனிக்கு கட்டளை இட்டவன் ஜனனி வைத்துவிட்டு போன உறையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் போன் ஒலிக்கவும், அதை ஆன் செய்து காதில் வைத்தான்.
Advertisement
“சொல்லு பவி” என்றான்
“என்ன சித்து போனதிலிருந்து ஒரு போன் கூட பண்ணல? அப்பா எப்படி இருக்காரு?” என்றாள் பவிஷ்கா, சித்தார்த்தின் தமக்கை.
“அவருக்கென்ன? என்கிட்ட பொய் சொல்லி வரவழைச்சிட்டு ஜாலியா சொந்த ஊரை சுத்தி பார்க்க போயிருக்காரு” என்றான் சித்தார்த் கடுப்புடன்.
“டேய் அப்பாக்கு முன்ன மாதிரி ஹெல்த் சரியில்லடா, அவர் சரியா தன்னை கவனிச்சுக்காம இருந்து உடம்பை கெடுத்துக்கிட்டார்னு தோணுது, நாம அவரை தனியா விட்டு இருக்க கூடாது சித்து” என்றாள் பவிஷ்கா வருத்தமாக.
“ஏய் என்ன பவி சொல்றே?” என்றான் சித்தார்த் அதிர்ச்சியாக.
“அவர் உடம்பு சரியில்லைனு உன்கிட்ட சும்மா எல்லாம் சொல்லலை டா. அவருக்கு அட்டாக் வந்திருக்கு, அதை நம்ம கிட்ட மறைச்சிட்டாரு. குணமான பின்னாடி தான் உன்னை வரசொல்லி இருக்காரு. நம்ம ஆஸ்பிட்டல் இருக்கிற என்னோட பிரெண்ட் ஜோதி தான் சொன்னாள். நமக்கு எதுவும் தகவல் சொல்ல வேணாம்னு அவகிட்ட சொல்லி இருக்காரு. நேத்து தான் நானே அவளுக்கு சும்மா போன் செஞ்சு பேசவும் உளறிட்டா. மறுபடியும் அப்பாவுக்கு அட்டாக் வராமல் பார்த்துக்கணும் சித்து” என்றாள் பவிஷ்கா கவலையான குரலில்.
சித்தார்த்தின் முகத்தில் கவலை படிந்தது “அதனால் தான் இத்தனை வருஷமா எனக்கு ஓய்வு வேணும்னு கேட்காதவர், நான் வந்ததும் ஓய்வெடுக்கிறேன்னு வீட்டிலேயே தங்கிட்டாரா? இப்போ திடீர்னு சொந்த ஊருக்கு போறேன்னு கிளம்பிட்டாரு” என்றான் சித்தார்த் யோசனையாக.
“சித்து, நீ மருத்துவமனை நிர்வாகத்தை பார்த்துக்கிட்டு அப்பாவை பார்த்துக்கிறது கஷ்டம். என்னால இந்தியா வரமுடியாது, பேசாமல் அப்பாவை இங்கே அனுப்பி வை, நான் கிட்ட இருந்து பார்த்துக்கிறேன்” என்றாள் பவிஷ்கா.
“அதுவும் சரிதான், நீ டிக்கெட் விசாவுக்கு ஏற்பாடு செய்து எனக்கு மெயில் பண்ணு, என்னை அப்பா அந்த ஊருக்கு வரச்சொல்லி இருக்காரு. அங்கே போயிட்டு, அப்படியே அவரை விமானநிலைத்திற்கு கூட்டிட்டு போயி கனடாவுக்கு பிளைட் ஏத்தி விடறேன்” என்றான் சித்தார்த் அபிமன்யூ.
பவிஷ்காவும் சரி என்று போனை வைத்துவிட, சித்தார்த் அபிமன்யூவிற்கு அப்போதே தந்தையை பார்க்க வேண்டும் போல தோன்றியது, தந்தைக்காகவாவது தருமபுரி போயே ஆக வேண்டும் என்பது கட்டாயம் ஆனது. ஜனனி வைத்துவிட்டு சென்ற அந்த அப்பாயின்ட்மென்ட் லெட்டரை எடுத்து தன் பேகில் வைத்துக் கொண்டு கிளம்ப தயாரானான்.
காரில் தனியாக டிரைவ் செய்து கொண்டு மழையில்லாமல் பொட்டல் காடாக இருந்த நிலங்களை பார்வையிட்டபடி தன் தந்தையின் சொந்த ஊருக்கு சென்றான். அங்கே அவன் சிறு வயதில் சென்றதால் அவர்களின் பரம்பரை வீடு கூட எங்கே என்று அவனுக்கு தெரியவில்லை. தன் தந்தைக்கு போன் செய்து லோகேஷனை ஷேர் செய்ய சொல்லி எப்படியோ வீட்டை வந்து சேர்ந்து விட்டான்.
ஆனால் மகேந்திரன் வீட்டில் இல்லை. சித்தார்த்தின் போன் ஒலித்தது, எடுத்து காதில் வைத்தவன், “அப்பா எங்கே இருக்கீங்க? நான் வரேன்னு சொல்லியும் வெளியே கிளம்பிட்டிங்களா?” என்றான் சித்தார்த்.
“சித்து நான் மண்டபத்திலே சிவாக்கு உதவியா இருக்கேன்டா. அவன் மனைவியும் வேற சமீபத்தில் தவறிட்டாங்களாம். தனியா கஷ்ட படறான். நான் இரவு ரிஷப்சன் முடித்ததும் வந்திடறேன். உனக்கு சாப்பாடு கொடுத்து அனுப்புறேன் நீ சாப்பிட்டு ஓய்வெடு. காலையில் ஆறு ஏழரைக்கு முகூர்த்தம். நாம ஐந்து மணிக்கே போகணும்” என்றார் பரப்பரப்பான குரலில்.
“உங்களுக்கே உடம்பு சரியில்லை, ஏன் இந்த மாதிரி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று மகன் திட்ட தொடங்கவும் அவனுக்கு ஏதோ விஷயம் தெரிந்து விட்டது என்று போனை வைத்து விட்டார் மகேந்திரன்.
முகம் காணாத அந்த பெண்ணின் மேல் அவனுக்கு கோபமாக இருந்தது. “இவ பெரிய இவ, இவ கல்யாணத்துக்கு எங்கப்பா வந்து வேலை செய்யணுமா?” என்று வீட்டில் யாருமில்லாததால் வெளிப்படையாகவே ஏக வசனத்தில் அவளை திட்டிக் கொண்டிருந்தான் சித்தார்த்.
அதன் பிறகு சிறிது நேரம் அந்த வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் சற்று நேரம் நடைபயின்று விட்டு, இரவு உணவை முடித்துக் கொண்டு படுத்து விட்டான். மகேந்திரன் எப்போது வந்தார்? எப்போது உறங்கினார் என்றெல்லாம் அவனுக்கு தெரியாது, அதிகாலையில் அவனை எழுப்பி கொண்டிருந்தார்.
தன்னை மறந்து உறங்கியவனுக்கு சற்று நேரம் எதுவுமே புரியவில்லை, பிறகு மெல்ல எழுந்து வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு செல்ல தயாரானான். பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரு நடுத்தரமான கல்யாண மண்டபத்தின் அருகே காரை நிறுத்த சொன்னார் மகேந்திரன்.
இங்கே எல்லாம் நான் வரத்தான் வேணுமா? என்ற கேள்வியுடன் தந்தையை முறைத்தவாறு காரில் இருந்து இறங்கினான் சித்தார்த் அபிமன்யூ. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவனை உள்ளே கூட அழைத்து செல்லாமல் அவசரமாக அவர் மட்டும் முன்னால் நடந்தார். அதற்குள் தந்தையின் நண்பர் சிவக்குமார் இவனை கண்டதும் ஓட்டமும் நடையுமாக வந்தார்.
அவன் கைகளை பிடித்துக்கொண்டு, “அபிமன்யூ எப்படிப்பா இருக்கே? சின்ன வயசில பார்த்தது? எவ்வளவு உயரமா வளர்ந்துட்டே?” என்றார் ஆசையாக அவன் தோள்களை தடவியவாறு
“அபிமன்யூ” என்ற அழைப்பில் சித்தார்த்தின் முகம் சற்றே கனிந்தது. அவன் அன்னை மட்டும் பிரத்யேகமாக அவனை அப்படித்தான் அழைப்பார். மற்றவர்கள் எல்லாம் சித்து, சித்தார்த் தான்.
“நல்லா இருக்கேன் அங்கிள், நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்டான்.
“அங்கிள் எல்லாம் வேண்டாம்பா, என்னவோ போல இருக்கு. மாமானு கூப்பிடு” என்றார் சிவக்குமார்.
சிரித்துக் கொண்டே, “சரி மாமா” என்றான் சித்தார்த் அபிமன்யூ
அதன்பிறகு உள்ளே அழைத்துச் சென்று இருவரையும் முன் இருக்கைகளில் அமரச் செய்தார். மகேந்திரன் நண்பனோடு செல்ல எத்தனிக்கவும், “மகி, எல்லா வேலையும் ஆச்சு. மாப்பிள்ளை மட்டும் இன்னும் அவர் அறையில் தூங்கிட்டு இருக்காரு. அவரை எழுப்பி ரெடியாக வச்சிட்டா போதும். மத்த ஏற்பாடு எல்லாம் தயாரா இருக்கு. நீ அபி கூடவே இரு. அவனுக்கு இங்கே யாரையும் பெரிசா தெரியாது இல்ல? நான் பார்த்துக்கிறேன்” என்று நண்பனை அமரச் செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் சிவக்குமார்.
தந்தையை பார்த்து நன்றாக முறைத்தான் சித்தார்த் அபிமன்யூ. அவன் முறைப்பிற்கான காரணம் புரியாமல் “என்னாச்சு சித்து?” என்று கேட்டார் மகேந்திரன்.
“உங்க நண்பர் என்ன சொல்லிட்டு போனார் பார்த்தீங்களா? கல்யாண மாப்பிள்ளையே இன்னும் தூங்கி எழலையாம், அவர் எழுந்து குளித்து தயாராகி மேடைக்கு வரணும். ஆனா அதுக்குள்ள என்னை எழுப்பி இந்த நடுராத்திரில கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்று அடிக்குரலில் சீறினான்.
“சரி சரி அரை மணி நேரத்தில் மாப்பிள்ளை தயாராகி வந்திடுவார், நீ டென்ஷனாகாதே. நாம யாரோ போல கரெக்டானா நேரத்துக்கு வரமுடியுமா சித்து?” என்றார் மகேந்திரன் மகனை சமாதானம் செய்யும் குரலில்.
வேறுவழியில்லாமல் கையிலிருந்த போனை நோண்டியபடி நேரத்தை கடத்தினான் சித்தார்த் அபிமன்யூ. ஆனால் தந்தை சொன்ன அரைமணிநேரம் எல்லாம் தான்டி ஒரு மணிநேரம் கடந்திருந்தது. சமூக வலைதளங்களில் ஆழ்ந்திருந்தவன் நேரமாவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.
அங்கே ஆண்களும் பெண்களும் மணமகன் அறைக்கு போவதும் வருவதுமாக பரபரப்பாக இருந்தனர். “என்னாச்சுப்பா?” என்று கேட்டான்.
“அதான் சித்து எனக்கும் புரியல?” என்றார் மகேந்திரன்.
அதற்குள் மணமேடையில் அனைத்தும் தயாராக வைத்து காத்திருந்த புரோகிதர், “முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள மாப்பிள்ளையையும் பெண்ணையும் அழைச்சிட்டு வாங்க” என்று சொல்லி கொண்டிருந்தார்.
சிவக்குமார் பதட்டத்துடன் அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். பின்பு மணமகன் அறைக்குள் அவசரமாக கையில் தண்ணீர் குடத்துடன் சென்றார்.
தந்தையும் மகனும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். புரோகிதர் பத்தாவது முறையாக “இப்போ பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சிட்டு வர்றீங்களா? இல்லை நான் கிளம்பட்டுமா?” என்றார் சத்தமாக.
அதில் அங்கிருந்தவர்கள் தங்களுக்குள் பேசி ஒரு முடிவெடுத்தவர்களாக, மணப்பெண் அறைக்குள் புகுந்தனர். கண்களை கூச வைக்கும் அடர் ஆரஞ்சு நிற புடவையில் அலங்காரத்துடன் இருந்த பெண்ணை அழைத்து வந்து மணமேடையில் அமர வைத்தார்கள்.
பியூட்டிபார்லரை பற்றிய ஞானமே இல்லாத ஒரு அழகுகலை நிபுணர் அவளை அலங்கரித்திருப்பார்கள் போலும், அதிகமான ரோஸ்பவுடரை அவள் முகத்தில் அப்பி இருந்தார்கள். மாநிறமான தோற்றத்தை மறைத்து அவளை வெள்ளையாக தெரிய வைக்க பெரும் முயற்சி எடுத்திருப்பார்கள் போலும். ஒரு படத்தில் பெயிண்ட் அடித்து வைத்து காமெடி நடிகர் செந்திலுக்கு திருமணம் செய்யப்பட்ட கவுண்டமணியின் தங்கையே அவனுக்கு நினைவில் வந்தது.
வந்த சிரிப்பை தன் இதழ்கடையில் அடக்கிக் கொண்டு, சரி மாப்பிள்ளை என்ன அலங்காரத்தில் வருகிறார் என்று பார்ப்போம் என்று வேடிக்கை போல மணமகன் அறையை நோக்கி பார்வையை செலுத்தினான்.
அங்கே இரண்டு மூன்று பேர் ஒரு தடிமனான ஆளை தூக்கிக் கொண்டு குளியலறை நோக்கி சென்றார்கள். அவன் தான் மாப்பிள்ளை போலும். என்னாச்சு அவனுக்கு? என்று டாக்டராக யோசித்தவன் தந்தையை திரும்பி பார்த்தான். அவருமே அதிர்ச்சியுடன் சித்தார்த்தை தான் பார்த்தார்.
தந்தை மகன் இருவருமே எழுந்து குளியலறை இருந்த பக்கம் சென்றனர். அதற்குள் சிவக்குமார் வாயில் துணியை அடைத்துக் கொண்டு பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கவும், அவரை நோக்கி சென்றனர்.
மகேந்திரன் சிவக்குமாரின் தோளைப்பற்றி, “சிவா என்னாச்சுடா?” என்று கேட்டது தான் தாமதம் நண்பனின் தோளில் சாய்ந்து கதறி விட்டார் சிவக்குமார்.
மகேந்திரனுக்கு பதட்டம் அதிகமாக விட, “என்ன ஆச்சு? மாப்பிள்ளை எதாவது குடிச்சிட்டாரா?” என்று சந்தேகமாக கேட்டார்.
சிவக்குமார் அழுதுக்கொண்டே ஆமாம் என்று தலையாட்டினார்.
“ஏண்டா மாப்பிள்ளைக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா?” என்று கேட்டார் மகேந்திரன்.
“அவன் தான்டா என் பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி நச்சரிச்சிட்டே இருந்தான், அவன் விருப்பத்தோட தான் எல்லா ஏற்பாடும் செஞ்சேன்” என்றார் சிவக்குமார் அழுதுக் கொண்டே.
“அப்போ ஏன் விஷம் குடிச்சார்?” என்றான் சித்தார்த் அபிமன்யூ தன் சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ள
“என்ன விஷமா? அய்யோ தம்பி, இந்த பய ராத்திரி எல்லாம் தூங்காம சீட்டாடிக்கிட்டு குடிச்சிட்டே இருந்தான். அப்போவே சொன்னேன் காலையில எழுந்திருக்க முடியாது, போய் தூங்குடானு. கேட்டா தானே? குடம் தண்ணியை தலையில் ஊத்தியும் போதை தெளியாம பயபுள்ள எழுந்திருக்க மாட்டேங்கிறான்” என்றார் அங்கிருந்த ஒரு பெரியவர்.
அதற்குள் புரோகிதர், “முகூர்த்த நேரம் இன்னும் பதினைந்து நிமிஷம் தான் இருக்கு, சீக்கிரம் மாப்பிள்ளையை கூட்டிட்டு வாங்க” என்று தன் கவுன்டவுனை தொடங்கி விட்டார்.
சிவக்குமார் தலையில் அடித்துக் கொண்டு வெடித்து அழ ஆரம்பித்து விட்டார்.
“மாமா, இருங்க எதாவது மெடிசன் கொடுத்து எழ வைக்கமுடியுமானு பார்க்கிறேன்” என்று அந்த மாப்பிள்ளையிடம் சென்றான்.
கருத்த தடிமனான உருவம், முகம் முழுவதும் ஆங்காங்கே தழும்புகள், பார்க்கவே விகாரமாக இருந்தது. டிரைவராக இருந்தானா? இல்லை யாருக்காவது அடியாளாக இருந்தானா? என்று யோசித்தபடி அவன் தோள்களை லேசாக குலுக்கி எழுப்பி பார்த்தான் சித்தார்த்.
அவன் எழுவதாக இல்லை. தந்தையிடம் திரும்பி “பக்கத்தில எதாவது ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகலாம்” என்றான்.
“எதாவது மருந்து கொடுத்து அவனை உடனே எழுப்பிட முடியுமா தம்பி?” என்றார் அங்கிருந்த பெரியவர்
“அப்படி எல்லாம் எந்த மருந்தும் கொடுக்க முடியாதுங்க, அப்சர்வேஷன்ல வச்சு தான் பார்க்கணும்” என்றான்.
“அப்போ முகூர்த்த நேரம் முடிஞ்சுடுமே” என்று சொல்லும் போதே புரோகிதர் இன்னும் பத்து நிமிடங்களே இருப்பதாக குரல் கொடுத்தார்.
“முகூர்த்த நேரம் முடிஞ்சா என்ன? இன்னொரு நாள் கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்றான் சித்தார்த்
“தம்பி இந்த மாசத்துல இதுதான் கடைசி முகூர்த்தம் கடைசி நாள், நாளையில் இருந்து புரட்டாசி மாதம் ஆரம்பிச்சிரும், அந்த மாசத்துல யாரும் கல்யாணம் பண்ண மாட்டாங்க” என்றாள் ஒரு பாட்டி.
“இருக்கட்டுமே, அப்புறமாவே கல்ணாணம் செய்துக்கிட்டா என்னாகிட போகுது?” என்றான் சித்தார்த் அந்த பாட்டியிடம்
“மணமேடை வரைக்கும் வந்து என் பொண்ணோட திருமணம் நின்னு போச்சுனா என் மானம் போயிடுமே அபிமன்யூ, நான் உயிரோடு இருந்து என்ன பயன், என்கிட்ட இருக்கிறது எல்லாம் இந்த கல்யாணத்துக்கு செலவு பண்ணியிருக்கேன். இதுக்கு நான் வாங்கின கடனை அடைக்கவே இன்னும் ஐந்து வருஷம் வயக்காட்டில் உழைக்கணும்” என்று கதறியடி சிவக்குமார் நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்துவிட்டார்.
மகேந்திரன் நண்பனை தாங்கி பிடித்துக் கொண்டு, “சிவா மனசை தளரவிடாதே, உன்னை அப்படியே விட்டுட மாட்டேன். தைரியமா இரு, என்னை நம்பு, இந்த கல்யாணம் கட்டாயம் நடக்கும்” என்றார் ஒரு முடிவோடு.
“அப்பா இன்னும் ஐந்து நிமிஷத்துல இந்த மாப்பிள்ளை எழுந்து உட்கார்ந்துடுவானா? இவன் எந்திரிக்கவே இன்னைக்கு சாயங்காலம் ஆயிடும். எதுக்கு வீணா மாமாவுக்கு தவறான நம்பிக்கை கொடுக்கறீங்க” என்று அதட்டினான் சித்தார்த்.
“அவன் ஐந்து நிமிஷத்துல எழுந்து உட்கார்ந்தாலும் அவனுக்கு என் நண்பன் மகளோட கல்யாணம் நடக்க விடமாட்டேன் சித்து” என்றார் மகேந்திரன் அழுத்தமான குரலில்
சித்தார்த் கேள்வியாக நோக்கவும், “விடிஞ்சா கல்யாணத்தை வச்சிட்டு இந்தளவு குடிச்சிருக்கான்னா, இவனெல்லாம் அந்த பொண்ணை நல்லாவா பார்த்துப்பான்? நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே அவன் புத்தி தெரிஞ்சதே. இனி அவன் மாப்பிள்ளை இல்லை” என்றார் மகேந்திரன்.
சிவக்குமாரும் நண்பனை யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தார்.
“கல்யாணமும் நடக்கும்னு சொல்றீங்க, அவன் மாப்பிள்ளை இல்லைனும் சொல்றீங்க, ஐந்து நிமிஷத்துல சுவிகில கூட ஆர்டர் பண்ண சாப்பாடு வருமானு தெரியலை, நீங்க ஐந்து நிமிஷத்தில மந்திரம் போட்டு மாப்பிள்ளையை வர வைக்கபோறீங்களா?” என்றான் நக்கலாக.
“நீ இருக்கும் போது, நான் எதுக்கு சித்தார்த் மந்திரம் எல்லாம் போடணும்” என்றார் மகேந்திரன் அமைதியாகவும் அழுத்தமாகவும்.
என்ன? தந்தை என்ன சொல்ல வருகிறார்? அவர் சொல்ல வந்ததின் அர்த்தம் என்ன? என்று பல்வேறு கேள்விகளை தனக்குள் கேட்டபடி அவர் கூறிய வார்த்தைகளை தனக்குள் ஓடவிட்டு ஏதோ புரிந்தவனாக அதிர்ச்சியுடன் தந்தையை பார்த்தான்.
நீ யூகித்தது சரியே என்பது போல மகேந்திரன் கண்களின் இமைகளை மூடித் திறந்தார்.
(தொடரும்)
