குடியிருப்பின் வாகன நிறுத்தும் இடத்தில் அஜய் தனது வண்டியை நிறுத்திய அடுத்த கணம், வேகமாய் இறங்கிய ஸ்மிருதி, லிஃப்டில் ஏறி மூன்றாம் தளத்திலிருந்த தனது பிளாட்டை நோக்கி விரைந்தாள்…
Advertisement
சாவி இல்லாமல் வாசலிலேயே நிற்க நேரிட, “வாசல்லயே நிற்கனும்னு தலையெழுத்து,” என வாய்விட்டு முணங்கினாள். அவளது முணுமுணுப்பைக் கண்டுகொள்ளாத அஜய், சில நிமிட தாமதத்திற்குப் பிறகே பொருட்களைத் தூக்கிக் கொண்டு பிளாட்டின் வாயிலுக்கு வந்து சேர்ந்தான்…
சாவியின் உதவியால் அவன் கதவைத் திறந்த மறுநொடி, ஸ்மிருதி மின்னல் வேகத்தில் நேராக அறைக்குள் சென்றுவிட்டாள்…
Advertisement
Advertisement
அறையினுள் நுழைந்தவள், தன் கைப்பையைப் படுக்கையில் வீசியெறிந்துவிட்டு, அதே படுக்கையில் ‘பொத்’தென்று விழுந்தாள்…
இங்கு, அஜய் வாங்கி வந்தப் பொருட்களை அதனதன் இடத்தில் அழகாக அடுக்கி வைத்துவிட்டு, அறைக்கு வந்தவன், அலமாரியில் தன் இரவு உடையை எடுத்தபடி நின்றவன், “உனக்கு என்னதான் வேணும்?” என்ற ஸ்மிருதியின் குரலில் அவளின் புறம் திரும்பினான்…
Advertisement
”எதைப் பற்றிக் கேட்கிற?” புருவத்தை உயர்த்தி, குழப்பமான பார்வையுடன் கேட்டவனின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல், எரிச்சலுடன் வேறு பக்கம் திரும்பியவள், “என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எதுக்காக அந்த மாதிரி பிஹேவ் பண்ணுன?” கோபம் இழையோடக் கேட்டாள்…
இதற்கு அவனிடமிருந்து பதில் வராமல் போனதில் மேலும் எரிச்சலுற்றவள், “உன் மனசுல என்ன பெரிய இவன்னு நினைப்பா? உன் கூட நான் இருக்கிறதுக்காக, நீ சொல்றதைத்தான் நான் கேட்டு நடக்கணும்னு எதிர்பார்க்கிற, அப்படித்தானே?” என அவன் முகம் பார்த்துச் சீறினாள்…
”நான் அப்படி சொல்லவே இல்லை,” என அவள் முகம் பார்க்காமலேயே சொன்னான் அஜய்…
”நீ பண்றதுக்கெல்லாம் பின்ன என்ன அர்த்தம்? என்னைத் தனியா வெளியே எங்கேயும் போகவிட மாட்டேங்கிற! என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட ரூடா பிஹேவ் பண்ணுற! இப்போ அவங்க என்னைப் பற்றி என்ன நெனச்சிருப்பாங்க?” எனக் கோவத்துடன் கத்தினாள் ஸ்மிருதி.
”தயவு செய்து அவங்க கூட இனி ஃப்ரெண்ட்ஷிப்பைக் கண்டினியூ பண்ணாத. அவனுங்களைப் பார்த்தா சீப்பான பாய்ஸ் போல இருக்கு,” என இந்த முறை ஸ்மிருதியின் முகத்தைப் பார்த்துச் சொன்னான் அஜய்…
அஜய்யின் இந்தச் சொல்லில் கோவத்தின் எல்லைக்கே சென்றவள், “எது? என் ஃப்ரெண்ட்ஸ் கூட நான் ஃப்ரெண்ட்ஷிப்பைக் கண்டினியூ பண்ணக் கூடாதா?” என்று சத்தமாகக் கேட்டவள், “அதைச் சொல்ல நீ யாரு? அவங்க சீப்பான பாய்ஸா? அவங்களைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? சீப்பானவன் அவனுங்க இல்லை, நீதான்! இதுக்கு அப்புறம் என் லைன்ல கிராஸ் பண்ணணுமென்று நினைக்காதே!” என்றவாறு அந்த நொடியே அறையை விட்டு வெளியேறினாள்…
அஜய், ஸ்மிருதியின் கோபத்தை இன்றும் பெரிதுபடுத்தாமல் தன் வழக்கமான வேலையில் மூழ்கினான். இரவு உணவை ஸ்மிருதி மாலில் முடித்துவிட்ட நிலையில், அஜய் வெளியே சென்று சாப்பிட்டு வர மனம் இல்லாமல், பிரட்டை எடுத்துச் சாப்பிட்டு முடித்துக் கொண்டான்…
மறுநாள் காலை வழக்கம் போல் கடக்க, அன்றும் ஸ்மிருதி சோபாவில் படுத்தபடி டிவியில் மூழ்கியிருந்தாள். அந்த நேரத்தில் வீட்டின் காலிங் பெல் அடித்தது.
‘இது அவன் வர்ற டைம் இல்லையே, யாரா இருக்கும்?’ என யோசித்தபடி கதவைத் திறந்தவளின் முன்பு, அவளை விடச் சிறிது மூத்த வயதிலிருந்த ஒரு பெண், இதழில் புன்னகை மலர நின்றாள்…
”ஹாய்… நான் மிதுர்ளா. எதிர் ஃபிளாட்லதான் இருக்கேன்,” என வந்தவள் சொல்ல, ‘இப்போ எதற்காக இவங்க வந்திருக்காங்க? இப்போ நான் என்ன பண்ணனும்? வீட்டுக்குள்ள கூப்பிடலாமா? இவங்களைப் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாதே, எப்படி உள்ளே கூப்பிடுறது?’ என யோசித்தபடி நின்றவள், அந்தப் பெண்ணைப் பார்த்து வலிந்து சிரித்தாள்…
”இன்னைக்கு என் டாட்டர்ருக்கு பர்த்டே. சோ ஈவினிங் வீட்ல சின்னதா பார்ட்டி வச்சிருக்கோம். அதற்காகத்தான் உங்களை இன்வைட் பண்ண வந்திருக்கேன்,” என்றவள், “நீங்க கண்டிப்பா வரணும்,” என மிதுர்ளா சொல்ல, “அது…” என இழுத்த ஸ்மிருதி, “உங்க பொண்ணு கிட்ட என் சார்பாக விஷ் பண்ணிடுங்க,” என முகம் மலரச் சொல்லிவிட்டு, “விஷயம் என்னன்னா… என் வீட்ல நான்…” எனச் சொல்ல வந்தவள் பாதியில் நிறுத்தி, “நானும் என்னோட ஹஸ்பெண்டும் தான் இருக்கோம். இதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. சோ சாரி… என்னால வர முடியாது,” எனச் சிறிது தயக்கத்துடனே சொன்னாள்.
”அஜய் அண்ணா கிட்ட நான் பேசிட்டேன். நீங்க எங்க வீட்டுப் பார்ட்டிக்கு வர்றதுல அவருக்கு நோ அப்ஜெக்ஷன்,” என மிதுர்ளா சொல்ல, ஸ்மிருதிக்கு அதனைக் கேட்டுச் சங்கடமாக இருந்தது…
’இவங்களுக்கு அவனை முன்னாடியே தெரியுமா என்ன?’ என்று யோசித்தவள், அவளிடமே கேட்டுவிடாமல் என எண்ணி, “உங்களுக்கு அவரைத் தெரியுமா?” எனக் குழப்பத்துடன் கேட்க, இதில் அழகாகச் சிரித்தவள், “தெரியும். எதிர் ஃபிளாட்தானே? அதோட என் ஹஸ்பெண்ட், அண்ணா கன்ஸ்ட்ரக்சன்லதான் வேலை பார்க்கிறார்” எனச் சொல்ல, “ஓஹ்,” என்பதோடு நிறுத்திக் கொண்டாள் ஸ்மிருதி…
”இப்போ எங்க வீட்டுக்கு வர்றதுல உங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லைனு நினைக்கிறேன்,” என மிதுர்ளா கேட்க, தலையை இட வலமாக அசைத்தவள், “கண்டிப்பா வரேன்,” என்றாள்…
’இவங்களுக்கு என் நேம் கூடத் தெரிஞ்சிருக்கு. அவன் தான் சொல்லிருப்பானா?’ என யோசித்தபடி சோபாவில் வந்து அமர்ந்தவள், ‘எனக்கும் வீட்டிலேயே இருக்க போர் அடிக்கிது. ஒரு சேஞ்சுக்குப் போயிட்டுத்தான் வருவோமே,’ என்றெண்ணி மீண்டும் டிவியில் மூழ்கினாள்..ம்
அன்றைய மாலை, மிதுர்ளாவின் வீட்டுப் பார்ட்டிக்குச் செல்வதற்காகத் தரையைத் தொடும் சல்வாரில் ஜொலித்தாள் ஸ்மிருதி. அஜய் கொடுத்துவிட்டுப் போன சாவியின் மூலம், கதவைப் பூட்டியவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது பர்த்டே கேர்ளுக்குப் பரிசு எதுவும் வாங்கவில்லையே என்பது…
’கையை வீசிக்கொண்டு வெறும் கையுடன் போவதா?’ என்று யோசித்தவளுக்குத் தன்மானம் தடுக்க, பேசாமல் இன்னொரு நாள் போய்க்கொள்ளலாம் என மீண்டும் கதவைத் திறக்கத் திரும்பிய நேரம், “போலாமா?” என்ற குரலில் திகைத்துத் திரும்பியவள், தன் முன் அஜய் நிற்பதைக் கண்டு குழம்பிப் போனாள்….
அவன் கையில் கலர் பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு கிஃப்ட் பார்சல் இருக்க, “டைம் ஆச்சு, போலாம்,” என்றபடி முன்னேறி நடந்தவனின் பின்னால் யோசனையுடன் மெல்ல நடந்தாள் ஸ்மிருதி. ‘இவனும் அதே பர்த்டே பார்ட்டிக்குத்தான் வந்திருக்கானா? இருக்கும்… இவன் சொல்லிதானே என்னை இன்வைட் பண்ணிருக்காங்க,’ என்று எண்ணிக் கொண்டவளிடம், “இதை கொஞ்சம் பிடி,” என்றவாறு தன் கையிலிருந்த பரிசுப் பொருளை நீட்டினான்…
”என்கிட்ட எதற்காகக் கொடுக்கிறீங்க?” என்றாள் அதனை கையில் வாங்காமலே…
”ஷூ டைட்டா இருக்கு, ரிமூவ் பண்ண முடியல” என அஜய் சொல்ல, ‘சின்ன உதவி தானே’ என்ற எண்ணத்தில் அதனை வாங்கிக் கொண்டவள், மிதுர்ளாவின் வீட்டிற்குள் அஜய்யுடன் நுழைந்தாள்…
இவர்களின் வருகையைக் கண்டதும், ஒருவன் வேகமாக அவர்களை நெருங்கி, “வாங்க அஜய், உள்ளே வாங்க,” என மிக மரியாதையுடன் அழைக்க, “உள்ளே வாங்க மிசஸ் அஜய்,” என்றவாறு ஸ்மிருதியையும் அதே மரியாதையுடன் வரவேற்றான், அவன் தான் மிதுர்ளாவின் கணவர் விகாஷ்…
”வாங்க அண்ணா, என்ன லேட்? நீங்கதான் லாஸ்ட்,” என உரிமையாகச் சொன்ன மிதுர்ளாவைக் கண்டு மென்மையாகச் சிரித்த அஜய், “சாரிமா, கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. பர்த்டே கேர்ள் எங்கே?” என வீட்டை நோட்டமிட்டபடி கேட்க, “ஹாசினி!” என்றவாறு குரல் எழுப்பினாள் மிதுர்ளா…
அங்குச் சில சிறுவர் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த ஏஞ்சல் போல உடையணிந்திருந்த ஏழு வயதேயான சிறுமி, அன்னையின் அழைப்பில் ஓடி வந்து, அஜய்யைக் கண்டதும், “ஹை, அஜய் அங்கிள்!” எனக் குதூகலித்தாள்…
“ஹேப்பி பர்த்டே ஹாசிணி குட்டி,” எனத் தனது வாழ்த்தைச் சொல்ல, “தேங்க் யூ அங்கிள்,” எனத் தனது சிறிய பற்கள் தெரியும்படி அழகாகச் சிரித்தாள் ஹாசினி…
”ஹேப்பி பர்த்டே,” என்றவாறு ஸ்மிருதியும் ஹாசினியிடம் தனது கையில் இருந்த பரிசினை நீட்ட, “தேங்க் யூ ஆண்ட்டி,” என்றவாறு அதனை வாங்கிக் கொண்டாள்.
”ஸ்மிருதி, இவர் என்னோட ஹஸ்பெண்ட் விகாஷ்,” என்றவாறு, அவர்களை வீட்டினுள் அழைத்த அவனைக் காண்பித்து மிதுர்ளா ஸ்மிருதியிடம் அறிமுகம் செய்ய, அவனைக் கண்டு சிறு புன்னகை உதிர்த்தாள் ஸ்மிருதி. பதிலுக்கு அவனும் “உள்ளே அழைச்சிட்டு போ மிது,” எனப் பணிவுடன் சொல்ல, “நீ என் கூட வா ஸ்மிருதி,” என உரிமையாக அழைத்துச் சென்ற மிதுர்ளா, தனது அம்மா, அப்பா மற்றும் மாமனார், மாமியாரிடம் ஸ்மிருதியை அறிமுகம் செய்து வைத்தாள்…
அவர்களும் ஸ்மிருதியை வேண்டாதவளைப் போல் பாவிக்காமல், தன் குடும்பத்தில் ஒருத்தியைப் போல் நினைத்துப் பேசிப் பழகினர். அஜய், விகாஷ் இருவரும் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருக்க, ஸ்மிருதி தான், ‘இப்போதுதான் முதல் முறையாக இவர்களைப் பார்க்கிறோம். ஆனால் ஏதோ என்னை முன்ன பின்னத் தெரிந்தவர்களைப் போலவே நினைத்துப் பேசுகிறார்களே,’ என்ற வியப்பில் நின்றாள்..
”வாங்க, கேக் கட் பண்ணலாம்,” என மிதுர்ளாவின் தாத்தா ஒருவர் சொல்ல, வந்திருந்த சில விருந்தாளிகளும் ஒன்று கூடி, பிறந்தநாள் பாடல் பாடி ஹாசினியை மகிழ்விக்க, அவள் தன் தாய் தந்தையுடன் சேர்ந்து கேக்கை வெட்டினாள். வெட்டி முடித்த கையோடு அவள் தன் உறவினர்கள் அனைவருக்கும் ஊட்டிவிட, அஜய்க்கும் ஹாசினி ஊட்டிவிட, தானும் எடுத்து அவளுக்கு ஊட்டினான் அஜய்.
பின் வந்திருந்த விருந்தாளிகளுக்கும் கேக்கைக் கொடுத்தனர். ஸ்மிருதி ஒரு ஓரமாக நிற்க, அவளருகில் வந்தான் அஜய். “போலாமா?” எனக் கேட்க, சிறு தலையசைப்புடன் சம்மதம் தந்தவள், விகாஷ், மிதுர்ளாவிடம் விடைபெற்றனர்.
“ஸ்மிருதி, எதிர் ஃபிளாட்லதான் நான் இருக்கேன், இப்போ தெரிஞ்சிகிட்டல்ல?” என்ற மிதுர்ளா “போரடிக்கும் டைம் இங்க வந்துடு. உனக்கு போர் அடிக்காம நான் பார்த்துக்குறேன்,” என மென்னகையிடன் கூறிவிட்டு மிதுர்ளா அவர்களுக்கு விடை கொடுத்தாள்….
இருவரும் தங்கள் குடியிருப்பிற்குள் நுழையும் போது மணி இரவு எட்டைக் காட்டிருக்க, அஜய் அலுவலக உடையை மாற்றுவதற்காக அறை நோக்கிச் சென்றான். ஸ்மிருதி ஹாலின் சோபாவில் விழுந்தாள்…
‘என்னைப்பத்தி பக்கத்து ஃபிளாட் அக்காகிட்ட சொல்லியிருக்காரே! இதைப்பத்தி அவர் கிட்ட கேட்கலாமா வேண்டாமா?’ எனத் தன்னிடம் கேட்டுக்கொண்டவள், ‘இதை அவர் கிட்ட கேட்டு என்ன செய்யப் போறேன்? பட் என்னைப் பத்தி ஏன் அந்த அக்காகிட்ட இவர் சொல்லணும்?’ எனப் பேசிக் கொண்டிருந்தவளுக்குப் பசியினால் வயிறு சத்தம் போடத் துவங்கியது…
’பசி வேற உயிர் போகுது. நைட் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பானே?’ என உணவு மேஜையின் மீது பார்வையைப் பதித்தவளுக்கு எதுவும் புலப்படாமல் போக, ‘அவன் வந்ததுமே வீட்டுக்குள்ள கூட வராம பர்த்டே பார்ட்டிக்கு வந்துட்டான். அப்படின்னா ஃபுட் எதுவும் வாங்கிட்டு வரல போலயே,’ என்று ஒரு முடிவுக்கு வந்தவள், ‘எனக்கு பிராப்ளம் இல்ல, எனக்கு வேண்டியதைப் பிரிப்பேர் பண்ணிச் சாப்டுப்பேன். அவன் என்ன பண்ணுவான்?’ என யோசித்தவள், ‘என்ன பண்ணா நமக்கென்ன,’ என தன் மனதுடன் உரையாடிக் கொண்டிருந்த சமயம், இரவு உடைக்கு மாறி அறையிலிருந்து வெளிவந்தான் அஜய்…
அவன் வந்த மறுகணமே, அவள் அறையினுள் புகுந்து கொண்டாள். இரவு உடைக்கு மாறி பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவளுக்கு, பசி வயிற்றைக் கிள்ள, ஏதாவது செய்து சாப்பிடலாம் என நினைத்துக் கிச்சன் பக்கம் வந்தாள். வந்தவள், அஜய் அங்கு நின்று ஏதோ உருட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு, ஹாலில் வந்து அமர்ந்தபடி அவன் என்னதான் செய்கிறான் எனக் கண்காணிக்கத் துவங்கினாள்…
வெங்காயம் எடுத்து, காய்கறி வெட்டும் கட்டையில் வைத்து நறுக்கியவன், அடுத்து போனை எடுத்து அதில் எதையோ சீரியஸாகப் பார்த்தான்.
அடுத்ததாக, தக்காளி, பச்சை மிளகாய் எடுத்து அதனையும் நறுக்கியவன், மீண்டும் போனை கையில் எடுத்துப் பார்த்தான்.
அடுத்ததாக ஸ்டவ்வைப் பற்ற வைத்து, கடாயை வைத்தான். மீண்டும் போனைப் பார்த்தவன், கடாய் காய்ந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு, சமையல் எண்ணையை ஊற்றினான். கடுகு இருக்கும் டப்பாவை சில நொடிகள் தேடிப் பிடித்து, கையில் எடுத்தவன் கடாயில் இட்டான். அடுத்ததாக அங்கும் இங்கும் அலைந்தவாறு எதனையோ தேடியவன், குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, கருவேப்பிலைக் கொத்தை கையில் எடுத்து வந்தான். சிறிது உருவிக் கடாயில் போட்டபோதே, அவன் தாமதப்படுத்தியதால் கடுகு சிறிது கருகிப் போயிருந்தது. அதனைக் கண்டுகொள்ளாதவன் போல் அடுத்து வெங்காயத்தை எடுத்து கடாயில் போட்டான்…
கரண்டியை எடுத்து கடாயில் உள்ளவற்றை கிளறி விட்டவன், அடுத்து தக்காளி மற்றும் பச்சை மிளகாயைக் கொட்டினான். அவன் கரண்டியால் கிளறிக் கொண்டிருந்த நேரம் சரியாக, சமையல் கட்டிலிருந்த அவனது போன் ஒலித்தது. கையில் இருந்த ஈரத்தைத் துண்டில் துடைத்துக் கொண்டவன், திரையில் வந்த பெயரைப் பார்த்துவிட்டு, “ஹாங் ப்ரீத்தி,” என்றவாறு போனில் உரையாடத் துவங்கினான்…
உரையாடலில் கவனத்தை திருப்பியவன் அடுப்பில் இருப்பதைக் கவனிக்கத் தவறினான்…
நிமிடங்கள் கடக்கக் கடக்க, அடுப்பிலிருந்த கடாயில் அனைத்தும் கருகத் துவங்கியது. இதனைக் கவனித்துக் கொண்டிருந்த ஸ்மிருதி, ‘என்ன இவர் என்னதான் போன்ல பேசிக்கிட்டு இருந்தாலும் கூட, மூக்குக்குள்ள கருகுற வாடை வராதா? இப்போ நான் போகலைனா இங்கு ஃபையரகி ஒரேடியாகப் போய்ச் சேர வேண்டியதுதான்,’ எனத் தீப்பிடிக்க இருந்த கடாயைக் கவனித்து, வேகமாகச் சென்று ஸ்டவ்வை அணைத்தாள்…
சத்தம் கேட்டுத் திரும்பிய அஜய், ஸ்மிருதியைக் கண்டதும், “ஐ வில் கால் யூ பேக் ப்ரீத்தி,” எனக் கூறிவிட்டு காதிலிருந்து போனை எடுத்தவன், அப்பொழுதுதான் அடுப்பைக் கவனித்தான்.
“ஓஹ்… ஷிட்,” என்றவன் பதட்டமாக அடுப்புப் பக்கம் சென்று ஸ்டவ் அணைந்திருப்பதைக் கண்டு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டான்.
”சமைக்கும்போது, சமையல்ல மட்டும்தான் கவனம் இருக்கணும். இல்லைனா நடக்கப்போற விபத்துக்கு நாமே காரணம் ஆகிடுவோம்,” ஸ்மிருதி பொறுமையாகக் கூறினாள்.
”சாரி… போன் வந்ததுல, ப்ச்… இதை மறந்துட்டேன்,” என்றான் நெற்றியை விரல்களால் தடவியபடி….
”ஓகே… இன்னைக்கு நைட் மட்டும் நானே சமைக்கிறேன்,” என்றவளை வியப்பாகப் பார்த்தவன், “ஆர் யூ ஷ்யூர்?” என அதே வியப்புடன் கேட்டான்…
”ஹ்ம்ம்…” என்று முறைத்தவள், “இன்னைக்கு மட்டும் தான். டெய்லியும் சமைக்கப் போறேன்னு சொல்ல,” என்றவள் கூர்மையான பார்வையோடு சொல்ல, “ஓகே…” என்பதோடு நிறுத்திச் சமையலறையிலிருந்து வெளியேறினான் அஜய்…
ஓரிரு நிமிடங்களில் சப்பாத்தியும், பன்னீர் மசாலாவையும் செய்து முடித்தவள், ஹாட்பாக்ஸில் எடுத்து வைத்து உணவு மேஜையில் வைத்தாள். ஒரு தட்டை எடுத்து இரண்டு சப்பாத்தி, அதற்குத் தொட்டுக்க பன்னீர் மசாலாவை எடுத்து வைத்தவள், அறை நோக்கிச் சென்றாள். போகும் வழியில் சோபாவில் அமர்ந்திருந்த அஜய்யின் புறம் பார்வையைத் திருப்பாமலேயே, “என்னால சமைக்க மட்டும்தான் முடியும், பரிமாற முடியாது,” எனக் கறாராகச் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து கொள்ள, “இதுவே எனக்கு ரொம்பப் பெரிய ஹெல்ப்,” என முணுமுணுத்துக்கொண்டான் அஜய்…
இரவு உணவை முடித்ததும் இருவரும் தத்தம் இடத்தில் படுத்துக் கொண்டனர்.
”மிதுர்ளாவின் ஹஸ்பெண்ட் விகாஷ் என்கூடத்தான் வேலை பார்க்கிறார். அந்த வகையிலேயும், எதிர் பிளாட் என்பதாலும் எனக்குப் பழக்கம். ஹாசினியோட பர்த்டேக்கு மிதுர்ளாவே உன்னை இன்வைட் பண்ணிடுறேன்னு சொன்னா சோ, அதான் ஆல்ரெடி நான் உன்கிட்ட சொல்லாம விட்டுட்டேன்,” படுத்த நிலையில் இருந்தவன், அவள் முகம் பாராமலேயே, அவள் மனதில் உள்ள குழப்பத்திற்கான காரணத்தைச் சொல்லிவிட்டு நித்திரைக்குச் செல்லத் துவங்கியிருந்தான்…
ஸ்மிருதிக்கும் தனக்கான விடை கிடைத்துவிட்டதென அதற்குக் ‘ம்ம்’ என்ற பதில் வார்த்தை கூடப் பேசாமல், அவளும் போர்வையைப் போர்த்திக் கொண்டு நித்திரைக்குச் சென்றாள்…