Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேயனின் நேசமினிது

நேயனின் நேசமினிது..2

இனிய நேசம் – 2 

 

“அலெக்ஸா.. ப்ளே அஞ்சலி..அஞ்சலி..சாங்” என்று அந்த அமேசானின் மெய்நிகர் உதவியாளரிடம் உத்தரவிட்டான் அகநேயன்! 

 



Advertisement

அவனது உத்தரவின் படி அலெக்ஸா “லாலலா லாலலா லாலாலலா….” என்று பாடத் தொடங்கியிருந்தது.  

 

பாடலைக் கேட்டபடி டைனிங் பேபிளின் இருக்கையில் அமர்ந்து தன் உடன் பிறந்த தங்கையின் கைப் பக்குவத்தில், அங்கே கடை பரப்பப் பட்டிருந்த உணவுகளை வெளுத்து கட்டிக் கொண்டிருந்தான் அகநேயன். 

Advertisement

 

Advertisement

அலெக்ஸா ‘லாலலா’வை முடித்து அடுத்த வரியை ப்ளே செய்து கொண்டிருந்தது. அண்ணன் ஒலி பரப்பிய பாடலை கேட்டு சிரிப்புடன் அவனருகே வந்து அமர்ந்தாள் அவனது தங்கை அஞ்சலிஶ்ரீ. 

 

அகநேயன் மீன் வறுவலை முள் நீக்கி தங்கையின் தட்டில் எடுத்து வைத்து விட்டு, தன் தட்டிலிருந்த சிக்கன் பிரியாணியை உள்ளே தள்ளினான்! 

Advertisement

 

பிரியாணியின் ருசி வயிறையும் மனதையும் நிறைக்க “எந்த பிரியாணி சாப்பிட்டாலும் என் பாச மலர் பண்ற சிக்கன் பிரியாணி மாதிரி வருமா?” என்று கேட்டபடி, கோழியின் காலை எடுத்து ஒரு கடி கடித்தான். 

 

“சிக்கன் க்ரேவி போட்டுக்கோ ண்ணா..” என்று அஞ்சலி அதனை அண்ணனின் தட்டில் எடுத்து வைக்க, “அப்படியே அந்த சிக்கன் கோலா உருண்டையையும் இங்குட்டு எடுத்து வைடா அஞ்சு…” என்றதும் அதையும் எடுத்து அவன் தட்டில் வைத்தாள் அஞ்சலி. 

 

“அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி

பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி

கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி

கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி..” என்று எஸ்.பி.பி அலெக்ஸா வழியாக உருகிக் கொண்டிருக்க, அடுத்து அந்த வரிகள் வரும் பொழுது அகநேயன் அதை தன் போக்கிற்கு மாற்றிப் பாடி தங்கை அஞ்சலிக்கு அவ்வரிகளை ‘டெடிகேட்’ செய்தான்! 

 

“அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி..

பூவே உன் பிரியாணிக்கு புஷ்பாஞ்சலி..

பொன்னே உன் சிக்கன் க்ரேவிக்கு பொன்னாஞ்சலி..

கண்ணே உன் மீன் குழம்புக்கு கீதாஞ்சலி..

கண் காணா மீன் வறுவலுக்கு கவிதாஞ்சலி..” மீன் வறுவலை ருசித்தவன், அவன் இஷ்டத்திற்கு பாட, அண்ணனின் லிரிக்ஸ் கலப்படத்தில் குபீரென்று சிரித்தாள் அஞ்சலி. 

 

“என்ன அஞ்சு சிரிக்கிற. எப்படிப் பட்ட பாட்டு லைனை உனக்காக மாத்திப் போட்டு அண்ணன் பாடி இருக்கேன். பாராட்டாம சிரிக்கலாமா?” என்றான் அகநேயன் தங்கையிடம் செல்ல முறைப்புடன். 

 

அதற்கும் அஞ்சலி சிரிக்க, “பாட்டை கொலை பண்ணாதடா” என்றபடி சிரிப்புடன் அங்கே வந்தார் கீதாராணி. அகநேயன் மற்றும் அஞ்சலிஶ்ரீயின் அன்னை. 

 

அன்னையைக் கண்டதும் “இப்ப எப்படிம்மா இருக்கு தலை வலி?” அன்புடனும், அக்கறையுடனும் விசாரித்தான் அகநேயன். 

 

“இப்ப பரவாயில்லடா அகா..” என்ற கீதா, “நீ எப்ப பெங்களூர்ல இருந்து வந்த?” என்று மகனை விசாரித்தார். 

 

“நான் ரெண்டு மணி நேரம் முன்னாடி தான்மா வந்தேன். வந்ததுமே தலை வலினால இன்னைக்கு நீங்க காலேஜ்..” என்றவன் அன்னையின் முறைப்பில், “யுனிவர்சிட்டிக்கு போகலேன்னு அஞ்சு சொன்னா” என்றான். 

 

கீதாராணி ஆமோதித்தபடி அவனருகே ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர, தங்கையின் எச்சரிக்கை பார்வையையும் மீறி “உங்க தலை வலியை சாக்கா வச்சு அஞ்சு கா.. ஓ நோ.. யுனிவர்சிட்டிக்கு லீவ் போட்டதையும் சொன்னா..” என அன்னையிடம் தங்கையை போட்டுக் கொடுத்தான் அகநேயன். 

 

மகன் சொன்னதும் தான் மகள் பல்கலைகழகம் செல்லாமல் இருப்பதை உணர்ந்த கீதாராணி முறைப்புடன் மகளிடம் பார்வையைத் திருப்பி “காலைலயே நான் உன்னை யுனிவர்சிட்டி கிளம்ப சொல்லிட்டேன் தான ஶ்ரீ. அப்புறம் ஏன் போகல” என்றார் கண்டிப்புடன். 

 

அண்ணனை ஓரக் கண்ணால் முறைத்த அஞ்சலி “இனிமேல் பிரியாணி பண்ணிக் கொடு அஞ்சுன்னு வந்து நில்லு! அப்போ இருக்கு உனக்கு..” என்று கருவியபடி அன்னையிடம் பாவமாகப் பார்வையைத் திருப்பினாள். 

 

“பதில் சொல்லு ஶ்ரீ” கீதாராணி அதட்டலுடன் மகளைப் பார்க்க, “ம்மா.. உங்களுக்கு தலை வலி. காலைல டேப்லெட் போடவும் இல்ல நீங்க. சரியா சாப்பிடவும் இல்ல. தைலம் மட்டும் போட்டுட்டு அப்படியே போய் தூங்கிட்டீங்க. நான் யுனிவர்சிட்டி போய்ட்டா உங்களை யாரு பார்த்துப்பா? அதான் லீவ் போட்டேன்” என்ற அஞ்சலி தொடர்ந்து,  

 

“அப்புறம் பெங்களூர்ல இருந்து அண்ணனும் வருவான்னு தெரியும். அதான் லீவ் போட்டு மார்கெட் போய் அவனுக்கு பிடிச்சதா வாங்கிட்டு வந்து சமைச்சு வச்சேன். அப்படியே உங்களுக்கும் சாம்பார், பொரியல், சாப்பாடு, ரசம் எல்லாம் பண்ணேன்” என்றாள் அண்ணனை முறைத்துக் கொண்டே! 

 

மகளின் பதிலில் கீதாராணி சற்று சமாதானம் அடைந்தாலும் “எனக்கு சாதாரண தலைவலி தானே. நான் தனியா மேனேஜ் பண்ணி இருந்திருப்பேன். அப்புறம் உங்க அண்ணன் வந்தா எழுந்து வந்து என்னால கதவை திறந்து விட முடியாதா? நீ பண்ணி இருக்க மாதிரி பெருசா சமைக்க முடியலனாலும் சிம்பிளா தயிர் சாதம் பண்ணித் தந்திருப்பேன். இதுக்காக நீ லீவ் போடணுமா?” என்றார் வரிசையாக. 

 

அஞ்சலி மௌனமாக அமர்ந்திருக்க, அன்னையின் தயிர் சாதத்தில் வயிறு கலங்கும் போலிருந்தது அகநேயனுக்கு.  

 

தங்கை இல்லை என்றால் இன்று தன் வயிறு தயிர் சாதத்தால் அழுதிருக்கும் என்று நிதர்சனம் புரிந்து, “சரி விடுங்கமா. அஞ்சு நமக்காக தானே லீவ் போட்டா..” என்று அப்படியே ப்ளேட்டை திருப்பினான்.  

 

“நீயே உன் தங்கச்சியை மாட்டி விடு. அப்புறம் நீயே அவளை காப்பாத்த வசனம் பேசு” என மகனை திட்டிய கீதாராணி, “இனி இந்த மாதிரி எல்லாம் க்ளாஸ் கட் பண்ணாத ஶ்ரீ. நெக்ஸ்ட் வீக் உனக்கு இன்டர்னல் எக்ஸாம் இருக்கு தான” என்று கண்டிப்புடன் மகளிடம் கூறி விட்டு குளித்து வர வேண்டி அறைக்குள் சென்று மறைந்தார். 

 

அன்னை எழுந்து சென்றதும் தங்கையிடம் பார்வையை திருப்பிய அகநேயன், “உன் புண்ணியத்தால எனக்கு இன்னைக்கு தயிர் சாதத்துல இருந்து விடுதலைடா அஞ்சு. எனக்காக மார்கெட் போய் சிக்கன்ல இருந்து மீன் வரை எல்லாம் வாங்கிட்டு வந்து சுட சுட சுவையா சமைச்சு வச்சிருக்க. உன் பாசத்துல என் கண்ணெல்லாம் கலங்குதுடா பாச மலரே..” என வார்த்தைகளால் அன்பைப் பொழிந்தான்.

 

“சொல்ல சொல்ல கேட்காம அம்மா கிட்ட யுனிவர்சிட்டிய கட்டடிச்ச விஷயத்தை போட்டுக் கொடுத்த தானேண்ணா. அடுத்த முறை வைக்கிற கார மீன் குழம்புனால உன் கண்ணு கலங்கல.. என் பேரு அஞ்சலி இல்ல..” என்றாள் அஞ்சலி சிலிர்த்துக் கொண்டு சபதம் போல்! 

 

“அண்ணன் தங்கச்சி அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..” என்ற அகநேயன், “நான் போட்டுக் கொடுக்கலன்னாலும் அம்மா கண்டுபிடிச்சு இருப்பாங்க அஞ்சு. நம்ம அம்மா கிட்ட இருந்து தப்ப முடியுமா?” என்றான் நிதர்சனத்தை. 

 

அஞ்சலியும் அண்ணன் கூறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருந்தது. 

 

கீதாராணி கலகலப்பும் கண்டிப்பும் கலந்த அன்னை! 

 

பிள்ளைகள் போல் கலகல ரகம்தான் என்றாலும், அவர்கள் மேல் அளவு கடந்த பாசத்தையும் அன்பையும் பொழிந்தாலும், கண்டிப்புடன் இருக்க வேண்டிய இடத்தில் மிக மிக ‘ஸ்ட்ரிக்ட் மதர்’ஆக நடந்து கொள்வார். 

 

ஒற்றை பெற்றோராக (Single Parent) இருந்து பிள்ளைகளை வளர்த்தவர் அவர்! 

 

கீதாராணியின் கணவர் கிருபாகரன் இந்திய ராணுவத்தில் ஒரு ராணுவ வீரராக இருந்தார். 

 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, பெற்றவர்களின் எதிர்ப்பை சம்பாதித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அத்தம்பதி!  

 

திருமணமானதும் ஓராண்டில் அகநேயன் பிறந்திருந்தான். வழக்கம் போல் தங்களை மீறி திருமணம் செய்த பிள்ளைகளை மன்னித்து மனமிறங்க முடியாத பெரியவர்கள், பேரப்பிள்ளை பிறந்ததும் அப்படியே மனம் மாறி கிருபாகரன் கீதாராணி திருமணத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர். 

 

அகநேயன் பிறந்ததும் ஓராண்டு காலம் வீட்டிலேயே இருந்தார் கீதாராணி. கிருபாகரனுக்கு அதில் விருப்பம் இல்லை. மனைவியை ஊக்குவித்து மேலும் படிக்கச் சொன்னார். 

 

“அகனுக்கு இன்னும் ரெண்டு வயசு கூட ஆகலேங்க..” என்ற மனைவியிடம், “உங்க அம்மா, எங்க அம்மா ரெண்டு பேரையும் அவுங்க பேரனை பார்த்துக்க சொல்லிக்கலாம். நீ படி. ஃபிசிக்ஸ்ல ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணி இருக்க. அந்தப் படிப்பை நீ மேலும் தொடரனும் கீதா. முடிஞ்சா அப்படியே படிப்பை தொடர்ந்து M.Phil. பண்ணி, Ph.D கூட படி! ப்ரொஃபசர் ஆக ட்ரை பண்ணு. நாளைக்கே எனக்கு ஏதாவது ஒன்னுன்னா நீ தான் அகனையும், நம்ம ஃபேமிலியையும் பாத்துக்கணும்” என்று வலியுறுத்தி இருந்தார் கிருபாகரன். 

 

கணவரின் பேச்சு கீதாராணிக்கு ஊக்கத்தை கொடுக்காமல் கண்ணீரைத் தான் கொடுத்திருந்தது! 

 

“உங்களுக்கு ஒன்னும் ஆகாது. இப்படி எல்லாம் பேசாதீங்க” என்று கலங்கினார். 

 

“ஒன்னும் ஆகாதுன்னு சொல்றது நம்மளோட மனசை தேத்திக்க நாம சொல்ற வார்த்தைகள் கீதா. நான் சர்வீஸ் பண்றது இந்தியன் ஆர்மில! எப்ப வேணாலும் என்ன வேணாலும் நடக்கலாம். அந்த நிதர்சனம் உனக்குப் புரியனும். வீட்லயே இருக்கதை விட்டுட்டு மேல படி” என்று உறுதியாகக் கூறி இருந்தார் கிருபாகரன். 

 

அகநேயனை பெரியவர்கள் பார்த்துக் கொள்ள,

கணவரின் தொடர் ஊக்கத்திலும், தூண்டுதலிலும் கீதாராணி தொடர்ந்து படித்தார். 

 

அவர் பி.ஹச்.டி. முடித்து முனைவர் பட்டம் பெற்ற அன்று கிருபாகரனுக்கு அளவு கடந்த பெருமை!! 

 

முனைவர் பட்டம் பெற்ற கோலத்தில் இருந்த மனைவியை தோளோடு அணைத்து நெஞ்சை நிமிர்த்தி, மற்றொரு கையில் ஏழு வயது மகனை ஏந்திக் கொண்டு அவர்கள் குடும்பமாக நின்ற மகிழ்ச்சி நிறைந்த தருணத்தை இப்போதும் ஹாலில் மாட்டப்பட்டிருக்கும் பெரிய புகைப்படம் பறைசாற்றும்! 

 

ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட ஆண்டுகள் நீடிக்கவில்லை. 

 

மனைவி முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணி புரியத் துவங்கிய பின்புதான் இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்தார் கிருபாகரன். 

 

கீதாராணி ஓர் அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றத் தொடங்கி இரண்டாண்டு காலம் ஓடி இருக்க, அப்போதுதான் அவர் இரண்டாம் முறையாக கருவுற்றிருந்தார்.  

 

கிருபாகரனுக்கும் பெரியவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. ஒன்பது ஆண்டுகள் கழித்து கருவுற்று இருந்த கீதாராணியை பெரியவர்கள் தாங்கவே செய்தனர். 

 

நான்கு மாத கர்ப்பிணியான மனைவியையும், ஒன்பது வயது நிரம்பிய மகனையும் பிரிந்து அந்த ஆண்டின் விடுமுறை முடிந்து ராணுவப் பணியில் இணைந்து கொள்ள காஷ்மீர் கிளம்பி இருந்தார் மேஜர் கிருபாகரன்! 

 

மனைவியின் பிரசவத்திற்கு கூட கிருபாகரனால் வர இயலவில்லை. 

 

இந்திய எல்லையில் தீவிரவாதிகளுடன் அவர் போராடிக் கொண்டிருந்த சமயம் அது. பெரும் போர் வெடித்திருக்க, 

அந்த இராணுவப் போரில் வீர மரணமடைந்திருந்தார் கிருபாகரன்! 

 

அவரது இறப்பு பெரும் இழப்பு கீதாராணிக்கு!

 

தன்னுயிரே போன உணர்வில் துயரத்தில் மூழ்கிப் போனார். கணவரின் மறைவு அவரை முற்றிலும் உடைத்துப் போட்டிருந்தது. 

 

பிறந்த பிஞ்சுக் குழந்தையை கவனிக்கவில்லை. பசியில் வாடிய வயிறையும் கவனிக்கவில்லை. வேலைக்கும் செல்லவில்லை. தந்தை இனி திரும்ப வரவே மாட்டார் என்று புரிந்தும் புரியாமல் அழும் மகனையும் அணைத்துத் தேற்றவில்லை! 

 

பிரம்மை பிடித்தவர் போல் கணவரின் புகைப்பட சட்டத்திற்கு முன்பு இடிந்து போய் அமர்ந்திருந்தார். பெரியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைத் தேற்றி, பிறந்த பிள்ளையையும் வளர்ந்து நிற்கும் பிள்ளையையும் கவனிக்கச் சொல்லி மன்றாடிய பின்புதான் சற்றே துயரத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டார் கீதாராணி.

 

அழும் மகனை மார்போடு அணைத்து “அழக் கூடாது அகன்!” என்று கண்ணீருடன் மகனைத் தேற்றி பிள்ளைகளுக்காக தன்னை திடமாக்கிக் கொண்டார். 

 

என்னதான் வெளியே திடமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் கணவரின் மறைவு அவரை மிகவும் பாதித்தது. 

 

சில சமயங்களில் உடைந்து அழுது கணவரின் நினைவில் துவண்டு போவார். ஆனால், எல்லாவற்றையும் கடந்து, துக்கத்தை விழுங்கி பெற்றோர் மற்றும் மாமியார் மாமனாரின் அரவணைப்பில் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக் கொண்டார். 

 

அகநேயனுக்கும் அஞ்சலிக்கும் கிட்டத்தட்ட பத்தாண்டு கால வயது வித்யாசம்! 

 

தங்கைக்கு தந்தையாக விளங்கி அன்பைப் பொழிந்தாலும், அவ்வப்போது உடன் பிறந்த அண்ணன் நிலையை விட்டுக் கொடுக்காமல் அவளை வம்பிழுத்து சுகம் காண்பதில் ஏக போக திருப்தி அகநேயனுக்கு! இப்போது அன்னையிடம் அவளை மாட்டி விட்டு சுகம் கண்டதைப் போல! 

 

அஞ்சலிஶ்ரீ பிறந்த சில வருடங்களில் அடுத்தடுத்து உடல் நலக் குறைவினால் பெரியவர்கள் நால்வரும் வரிசையாக இறைவனடி சேர்ந்திருந்தனர். 

 

அப்போதிலிருந்து பணியையும் மேற்கொண்டு, பிள்ளைகளை தனியே வளர்க்கும் பொறுப்பு கீதாராணியின் கைகளில்! 

 

அகநேயன் தந்தை இறந்த போதிலிருந்தே பக்குவமான, பொறுப்பான பிள்ளையாக மாறி இருந்தான். அஞ்சலியும் பிறந்ததில் இருந்தே அதிக சேட்டை செய்யும் பிள்ளை இல்லை. 

 

எனவே, பொறுப்புடனும், கொஞ்சம் குறும்புத்தனங்களுடனும் இருந்த மகனையும் மகளையும் வளர்க்க கீதாராணிக்கு மிகுந்த சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. 

 

தற்போது சென்னையில் உள்ள ஓர் தனியார் பல்கலைகழகத்தில் இயற்பியல் துறையின் தலைமை பேராசிரியராக பணியாற்றி வருகிறார் கீதாராணி. 

 

அஞ்சலியும் அன்னை பணி புரியும் அதே பல்கலைகழகத்தில் B.com. இரண்டாவது வருடம் பயின்று வருகிறாள். 

 

தங்கை செய்து வைத்திருந்த உணவுகளை, முடிந்த அளவிற்கு உண்டு முடித்து விட்டு எழுந்தான் அகநேயன். 

 

கீதாராணி குளித்து உடை மாற்றி பல்கலைகழகத்திற்குச் செல்லவென தயாராகி வந்தார். 

 

“என்னமா காலேஜ் கிளம்பிட்டீங்களா?” என்று அகநேயன் சிறு திகைப்புடன் கேட்க, “காலேஜ் இல்ல. யுனிவர்சிட்டி” என்று முறைப்புடன் திருத்தினார் கீதாராணி. 

 

“ஐயோ.. எனக்கு காலேஜ் தான்மா வாய்ல வருது” என்ற மகனை மீண்டும் முறைத்தவர், “காலேஜ் வேற யுனிவர்சிட்டி வேற. எத்தனை தடவை சொல்றது. யுனிவர்சிட்டியை காலேஜ்னு Mean பண்ணாதன்னு” தற்காலிகமாக வீட்டை வகுப்பறையாக்கி மகனுக்கு

பாடம் எடுத்தார் கீதாராணி. 

 

“ஓகே. ஹாட்ன்ஸ் அப்..” என்று சரண்டர் ஆகி, “யுனிவர்சிட்டி கிளம்பிட்டீங்களாமா..?” என்று நல்ல மாணவ மகனாக கேள்வியை சரியாகக் கேட்டான் அகநேயன்.

 

“தலை வலி போச்சுடா. மதியம் வீட்ல இருந்து என்ன செய்ய போறேன்? சோ, ஹாஃப் டே லீவை கேன்சல் பண்ணிட்டு யுனிவர்சிட்டி கிளம்பலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றார் மகள் செய்து வைத்திருந்த உணவினை உண்ணத் தொடங்கியபடி. 

 

“நீங்க இன்னைக்கு லீவ்ல இருந்ததால ஈவ்னிங் என் ஷோ’க்கு வருவீங்கன்னு நினைச்சேன்” என்றான் அகநேயன். 

 

“அம்மா போகலாம் ம்மா. இன்னைக்கு அண்ணா ஷோவோட டாப்பிக் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும். அதுவும் CROWD WORK COMEDY வேற..

(CROWD WORK COMEDY – வந்திருக்கும் மக்கள் கூட்டத்தை நகைச்சுவையில் இணைத்து, அவர்களிடம் கேள்வி கேட்டு பதிலை வாங்கி அதன் மூலமாகவே தொடர்ந்து நகைச்சுவையை மேற்கொள்வது) குபீர் குபீர்னு சிரிக்கலாம்” என்று அஞ்சலி அன்னையிடம் கெஞ்ச, “அப்படியென்ன டாப்பிக்டா” என்று சிரிப்புடன் மகனிடம் கேட்டார் கீதாராணி. 

 

“SINGLE TO MINGLES & MINGLE TO JINGLES ம்மா” என்றான் அகநேயன் புன்னகையுடன். 

 

அவரைக்காய் பொரியலை ரசம் சாதத்துடன் சேர்த்து உண்டபடி மகனை ஏறிட்ட கீதாராணி “அதென்னாடா Mingle to Jingles” என்று கேட்க, “சிங்கிலாக இருந்து லவ் அண்ட் மேரேஜ்ல மிங்கிலானவங்க Single To Mingle கேட்டகரில வருவாங்க ம்மா. அப்புறம் மேரேஜ் ஆகி மிங்கிலானவங்க குழந்தை குட்டிங்களோட கலகலகலன்னு இருக்கதை தான் Mingle to Jingle கேட்டகரில வச்சிருக்கோம்” என்று மகன் கூறிய விளக்கத்தை கேட்டு சிரித்தார் கீதாராணி.

 

“அப்போ இன்னைக்கு ஆடியன்ஸ் கூட என்கேஜ் பண்ணி உன் ஷோ’வை கலகலன்னு நடத்தப் போற?” என்று மகனிடம் கேட்க, “எஸ் ம்மா” என்றான் அகநேயன் டிங் டிங் என மேலும் கீழும் தலையை ஆட்டியபடி. 

 

“நீங்களும் வந்தா, ஷோ அப்போ உங்களையும் ஆடியன்ஸ் கூட என்கேஜ் பண்ணுவேன்” என அகநேயன் கூறியதும்,

“சரிடா. எத்தனை மணிக்கு ஷோ?” என்று கேட்டார் கீதாராணி. 

 

“ஏழு மணிக்குமா. துரைப்பாக்கம் ஆர்ட்ஸ் தியேட்டர்லதான்” என்று அகநேயன் சொல்ல, “சரி. ஈவ்னிங் யுனிவர்சிட்டி முடிஞ்சதும் அங்க இருந்தே நானும் அஞ்சலியும் ஷோ’க்கு வந்துடுறோம்” என்றார் கீதாராணி. 

 

அஞ்சலி அன்னையை பாவாமகப் பார்க்க, “நீயும் என் கூட யுனிவர்சிட்டி கிளம்பு ஶ்ரீ. ஹால்ஃப் டே க்ளாஸ் அட்டன் பண்ணுவியாம்..” என்றதும் அகநேயன் தங்கையிடம் கொக்காணி காட்ட, “போண்ணா..” என்று சிணுங்கினாலும் அஞ்சலி அன்னையுடன் பல்கலைகழகத்திற்கு கிளம்பி இருந்தாள். 

 

இன்றைய நிகழ்ச்சிக்கு அன்னை வருகிறார் என்றதும் அகநேயனின் அகமெங்கும் மிகுந்த மகிழ்ச்சி! 

 

வந்திருக்கும் கூட்டத்தோடு இணைந்து அவன் நகைச்சுவையை மேற்கொள்ளும் சமயம், அன்னை மனம் விட்டு சிரிப்பதை காணும் போதெல்லாம் அகநேயனின் அகம் நிறைந்து போகும்! 

 

இன்றும் வழமை போல் வந்திருக்கும் மக்களோடு இணைந்து நகைச்சுவையை செய்து அன்னையை சிரிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் அகநேயன்! 

 

ஆனால், அங்கே வருகை தந்திருந்த ஊர், பெயர் தெரியாத ஒரு பெண்ணிடம் நடிப்பிற்காகதான் என்றாலும் மண்டியிட்டு காதல் பிரேரணை (ப்ரப்போஸ்) செய்த போது, கீதாராணி மகனை போலியாக முறைத்து, அவனை கிண்டல் செய்த விதத்தில் வந்திருந்தோர் அனைவரும் சிரித்திருந்தனர். 

 

அன்னையின் கிண்டலுக்கு ஆளாவோம் என்று அகநேயனும் நினைக்கவில்லை. 

 

ஆயினும், அனைத்தையும் கடந்து அந்தப் பெண்ணிற்கு சிறப்பாகவே காதல் பிரேரணை செய்து அவளை “எஸ்..” என்று சொல்ல வைத்திருந்தான் அகநேயன்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!