வினோத் சொல்லி விட்டுச் சென்ற பொய்யைக் காப்பாற்ற மருத்துவர்களிடம் தங்களின் நிலமையைக் கூறி சிறிது பணத்தையும் கொடுத்து கணக்கு பண்ணிவிட்டே அவர்கள் சென்றிருந்ததால் மருத்துவர்களும் சந்தன பாண்டியனை இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினர்.
Advertisement
திடகாத்திரமாக இருந்த தனக்கே இப்படி ஆகிவிட்டதே என்று உள்ளுக்குள் பயந்து போய் மனதளவில் மிகவும் ஓய்ந்து போன சந்தன பாண்டியனோ அஞ்சலிக்கு சீக்கிரம் ஒரு நல்ல வரனைப் பார்த்து திருமணத்தை முடிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார்.
அப்போது அவரைக் காண அங்கு வந்தார் மதுரம்.
Advertisement
Advertisement
பெண் பார்க்க வரும்போது இருந்த அலட்டல் எல்லாம் சுத்தமாய் அழிந்து போக, கண்களில் சோகத்துடன் ஒரு பழைய சேலை ஒன்றைக் கட்டிக்கொண்டு முகமெல்லாம் பொலிவிழந்து போய் பாவமாய் அவரைக் காண வந்திருந்த மதுரத்தை அவ்வளவு எளிதில் எதிரில் இருப்பவர்களால் அடையாளம் காண முடியவில்லை, அந்த அளவிற்கு அவருடைய மாற்றங்கள் வெளிப்படையாக தெரிந்தது.
அவரைக் கண்டுகொண்ட காமாட்சி, ” வாங்கம்மா உள்ள வாங்க ஏன் அங்கேயே நிக்குறீங்க??” என்று அவரை அறையினுள் அழைத்து வந்து அங்கிருந்த ஒற்றை நாற்காலியில் அமர வைத்தார்.
Advertisement
சந்தன பாண்டியன் யாரிது என்று குழப்பத்தில் தன் மனைவியை பார்க்க, ” டாக்டர் தம்பியோட பாட்டிங்க..அன்னைக்கு வீட்டுக்கு வந்திருந்தாங்களே மறந்துட்டிங்களா??” என்று காமாட்சி அவருக்கு நினைவுபடுத்த,
அப்போது தான் அவரை உற்று நோக்கிய சந்தனபாண்டியன், ” வாங்கம்மா .. அன்னைக்கு பார்த்தப்போ வேற மாதிரி இருந்திங்களா அதான் இப்போ சட்டுன்னு கண்டுபிடிக்க முடியலை.. மன்னிச்சுகிடுங்க.. எப்படி இருக்கீங்க மா?? வீட்டுல எல்லாரும் சொகம் தான??” என்று நலம் விசாரித்தார் அவர்.
” இதனால என்ன தம்பி அன்னைக்கு ரொம்ப சந்தோஷமா கவலைன்னா என்னன்னே தெரியாம இருந்தேன் .. ஆனா இப்போ இன்னும் கொஞ்ச நாள்ல என் வாழ்க்கையே முடிஞ்சு போகப்போகுது இதுல மேக்கப் ஒண்ணுதான் அவசியமான்னு அதை மறந்தே போயிட்டேன்.. அதான் உங்களுக்கு அடையாளம் காண கஷ்டமா இருந்திருக்கும்.. எங்களை விடுங்க தம்பி.. நீங்க எப்படி இருக்கீங்க?? தம்பி ஏதோ உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னான்.. மனசே கேக்கலை அதான்ப்பா உடனே உங்களை பார்க்க வந்துட்டேன்” என்று மதுரம் சாவித்ரியே தோற்றுப்போகும் அளவிற்கு மிகவும் பாவமான முகத்தை வைத்துக் கொண்டு நடிக்க,
அதை நம்பிவிட்ட சந்தனபாண்டியனும், ” எனக்கொண்ணுமில்லைங்க அம்மா .. அதான் டாக்டர் தம்பி சரியான நேரத்துல ஆஸ்பத்திரியில வந்து சேர்த்துட்டாரே.. உங்களுக்கு என்னாச்சுங்கம்மா?? முகமே பொலிவிழந்து ஆளே எப்படியோ போய்ட்டிங்க” என்று அவர் அக்கறையாக கேட்க,
‘ இதுக்குத்தானே காத்திருந்தேன் ‘ என்று மனதில் குதித்துக் கொண்ட மதுரமோ வெளியே வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு, ” என்னத்தை சொல்ல.. ஊர் உலகத்துக்கே நல்லது செஞ்ச என்னோட தெய்வத்துக்கு போய் இப்படி ஒரு நோயை கொடுத்து விளையாடி பார்க்கிறான் அந்த ஆண்டவன்” என்று அவர் மூக்கை சீந்தினார்.
அவர் சொல்வதை புரிந்து கொள்ள முடியாமல் கணவன் மனைவி இருவரும் குழம்பி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள,
இருவரின் முகபாவத்தைக் கண்டு மனதில் சிரித்துக் கொண்ட மதுரம், வெளியே இன்னும் தன் நடிப்புத் திறனை கூட்டி அழுவது போல் பாசாங்கு செய்து கொண்டே,
“எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் ரெண்டு பசங்க தம்பி.. சின்ன வயசுல ராமன் லக்ஷ்மனன் மாதிரி அவளோ ஒத்துமையா இருப்பாங்க.. நடுவுல ஒரு சின்ன சண்டை வந்ததுல ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு பிரிஞ்சு போனதும் இல்லாம என்னையும் என் வீட்டுக்காரரையும் ஆளுக்கு ஒருத்தரா பங்கு போட்டு பிரிச்சுக்கிட்டாங்க” என்று தன் குடும்ப வரலாற்றை மதுரம் எடுத்துவிடத் துவங்க,
அவர்களும் கதை கேட்பதைப் போல் ம்ம்ம் கொட்டி கேட்டுக் கொண்டிருந்தனர்.
“நான் என்னோட முதல் பையன் வீட்டுல இருக்கேன் தம்பி.. உங்க பொண்ணை பார்க்க வரதா இருந்து எதிர்த்த வீட்டுக்கு அட்ரெஸ் மாறி போனாங்க பாத்திங்களா அதான் என்னோட ரெண்டாவது பையனோட குடும்பம்.. என் வீட்டுக்காரர் அவங்க கூட தான் இருக்காரு.. உங்க வீட்டை பொண்ணு பார்க்க வந்து வீடு மாறிப்போய் பெரிய கலவரம் நடந்துச்சே நியாபகம் இருக்கா??” என்று மதுரம் தன் முதல் தூண்டிலை வீசினார்.
‘அந்த நாளை மறக்க முடியுமா?? ‘ என்று நினைத்த சந்தனபாண்டியனின் மனம் அந்த நாளின் நினைவில் கசங்கியது.
“அச்சோ தம்பி நான் உங்களை சங்கடப்படுத்த இதை சொல்லலை.. நீங்க ஒன்னும் அதை நினைச்சு கஷ்டப்படாதிங்க.. அன்னைக்கு இதெல்லாம் நடக்கனும்னு விதி அதான் நடந்துருச்சு.. அப்படிப்பார்த்தா நீங்க பேசுனதும் என் பையனும் தான் உங்களை மரியாதை இல்லாம பேசுனான்.. அதை மனசுல வச்சுக்காதிங்க.. கோபத்துல வந்த வார்த்தையவே நாம பிடிச்சு தொங்கிட்டு இருந்தா வாழ்க்கை வீணா போயிடும்.. அதுனால கோபத்துல சொன்ன வார்த்தைகளையும் வேகத்தில் எடுத்த முடிவுகளையும் ஸ்கூல்ல படிச்ச பாடத்தை பரிட்சை முடிஞ்சதும் மறந்து போகுற மாதிரி அதையும் உடனே மறந்திடணும்” என்று வாழ்க்கை தத்துவத்தை போகிற போக்கில் அடித்துவிட்ட மதுரம் தொடர்ந்து,
“அன்னைக்கு நடந்த சண்டையை நினைச்சு என் வீட்டுக்காரர் மனசு உடைஞ்சு போயிட்டாரு.. ஏற்கனவே ரெண்டு மகன்களும் பிரிஞ்சதுலயே மன வருத்தத்துல இருந்தவரு இப்போ பேரங்க கல்யாணத்திலயாச்சும் அவங்க ஒன்னு சேருவாங்கன்னு ரொம்ப ஆசையா அன்னைக்கு கிளம்பி வந்தாரு… ஆனால் நாம நினைச்சதெல்லாம் நடந்துட்டா மேல இருக்கவனுக்கு வேலை இல்லையே.. அவன் ஒரு கணக்கு போட்டு ஆட்டம் ஆட நாம அவன் ஆட்டுவிக்கிறபடி ஆடிகிட்டு இருக்கோம்” என்று பெருமூச்சை வெளியிட்டார் மதுரம்.
‘ரொம்ப நேரமா தத்துவத்தை சொல்லிகிட்டே இருக்கே தவிர மேட்டருக்கு வர மாட்டேங்குதே ‘ என்று வெளியே நின்று இவர்களின் சம்பாஷனைகளை ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த வினோத் புலம்ப,
அவன் புலம்பல் மதுரத்தின் செவியை சென்றடைந்ததோ என்னவோ சட்டென்று விஷயத்திற்கு தாவினார்.
“நான் ஒரு கிறுக்கி எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்ட்டேன்.. அவருக்கு பேரன்னா ரொம்ப உசிரு.. அவங்க கல்யாணம் இப்படி தடை பட்டுப் போனதும் அவரால அதை தாங்கிக்கவே முடியாம உடம்பு சரியில்லாம போய் ஆஸ்பத்திரியில கொண்டு போய் சேர்த்தா அவன் ஏதோ வாய்க்குள்ளயே நுழையாத பேர் ஒன்னைச் சொல்லி அது என் வீட்டுக்காரர் உடம்புக்குள்ள புகுந்திருச்சுன்னு சொல்றான்.. நீங்களே சொல்லுங்க சாகுற வயசா அவருக்கு.. இன்னும் கொள்ளுப் பேரன் பேத்தி கூட எடுக்கலை அதுக்குள்ள அவர் சீக்கிரமே சாகப்போறாருன்னு அந்த பாழாப்போன வினோத் சொல்றான்” என்று அவர் தன் ஒப்பாரியைத் தொடங்க,
காமாட்சி தான் அவரை அணைத்து ஆறுதல் படுத்தினார்.
“அச்சோ.. அது குணப்படுத்த முடியாதாங்க ம்மா” என்று சந்தனபாண்டியன் கேட்க,
“என்ன எழவோ .. அந்த எமன் தான் என்னோட தெய்வத்தை கூட்டிட்டு போக நாள் குறிச்சிட்டதா சொல்லிக்கிறாங்களே.. சரி போகும்போதாவது அவர் நிம்மதியா போகணும்னு சொல்லித்தான் என் புள்ளைங்களை ஒன்னா இருக்க வைக்க இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்தேன்.. இந்த ஊருக்கு வந்த ராசியோ என்னவோ தெரியலை என் புள்ளைங்க தங்களோட சண்டையை மறந்து ஒன்னாகி ஒத்துமையா இருக்காங்க.. அதை பார்க்கும் போதுதான் பெத்த வயிறு குளிர்ந்து போகுது.. நீங்களே சொல்லுங்க பிள்ளைங்க ஒன்னு மன்னா இருந்தா தான பெத்தவங்களுக்கு உண்மையான நிம்மதி” என்று மதுரம் சந்தனபாண்டியிடம் கேள்வியெழுப்ப,
சந்தனபாண்டியனின் மனம் தன் பெற்றோரின் இறுதி காலத்தை நினைவடுக்குகளில் மீட்டிப் பார்த்தது.
மரணப்படுக்கையில் இருந்த போது கூட சுந்தர பாண்டியனை மன்னித்து ஏற்றுக்கொள்ளச் சொல்லி கெஞ்சிய தன் தாயின் முகம் மனக்கண்ணில் வந்து போக, தன் தலையைக் குளுக்கி அந்த நினைவுகளை முயன்று விரட்டியடித்தார்.
அவரின் முகத்தை வைத்து அகத்தை அறிந்து கொண்ட மதுரமும் தனது அடுத்த தூண்டிலை வீச தயாரானார்.
“இப்போ அந்த கடவுள் புண்ணியத்துல என் புள்ளைங்க ரெண்டும் ஒன்னாகியது எங்களுக்கு சந்தோஷம் தான் இருந்தாலும் தன்னுடைய பேரன்களுக்கு தான் கண்ணை மூடுறதுக்குள்ள ஒரு கல்யாணத்தை பண்ணி பார்த்திடணும்னு அந்த மனுஷன் துடியா துடிக்கிறாரு.. ஆனா அது இப்போதைக்கு நடக்காது போல” என்று ஏக்கப் பெருமூச்சை வெளியிட்டு எதிரில் இருப்பவர்களின் முகத்தை கடைக்கண்ணால் பார்த்தார் மதுரம்.
அவர் எதிர்பார்த்ததைப் போல் தானாய் வந்து தூண்டிலில் சிக்கிய சந்தன பாண்டியன், “அவரோட கடைசி ஆசை அதுதான்னா அதை நிறைவேத்தி வைக்க வேண்டியது தானங்கம்மா” என்று அவர் அப்பாவியாய்க் கூற,
சிரிக்கத் துடித்த உதடுகளை கட்டுப்படுத்திக் கொண்ட மதுரம், “அதுக்கு நீங்க மனசு வைக்கனுமே தம்பி” என்று கொக்கி போட,
புரியாமல் அவரை எதிர்நோக்கிய சந்தனபாண்டியோ, “எனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்டார்.
“நீங்க என் பையனோட சம்பந்தி ஆக சம்மதம் சொன்னா தான என் பேரனுக்கு கல்யாணம் நடக்கும்.. என் புருஷனும் நிம்மதியா கண்ணை மூடுவாரு.. என் வாழ்க்கையே உங்க வார்த்தையில தான் இருக்கு தம்பி.. அஸ்வத்தோட கல்யாணத்தை பார்க்க தான் அந்த மனுஷன் அப்போவோ இப்பவோன்னு இருக்க உயிரை கையில பிடிச்சு வச்சுகிட்டு இருக்காரு.. எனக்கு மாங்கல்யப் பிச்சை போடுங்க தம்பி” என்று அவர்கள் நினைத்தும் பாராத வகையில் கையெடுத்துக் கும்பிட,
மற்ற இருவரும் அவர் கூற்றில் அதிர்ந்து சிலையாக சமைந்திருந்தனர்.
“மாணிக்கம் அண்ணே எனக்கு கொஞ்சம் காய்ச்சல் வர மாதிரி இருக்கு .. அதுனால நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்று அங்கு அவருக்கு அடுத்து மிகவும் நேர்மையுடன் வாங்கிய சம்பளத்திற்கு அரசுக்காக வேலை பார்க்கும் கான்ஸ்டபிள் மாணிக்கத்திடம் கூறிய சுந்தர பாண்டியன் கிளம்பத் தயாராக,
அவரால் மாணிக்கம் என்றழைக்கப்பட்டவரோ, “என்னாச்சுங்க சார்.. உடம்பு சரியில்லைனா சீக்கிரமே கிளம்ப வேண்டியதான சார்… நாங்க பார்த்துக்க மாட்டோமா” என்று ஆதங்கப்பட்டுக் கொண்டவர் தொடர்ந்து, “மணி வேற 12க்கு மேல ஆச்சு.. தனியா எப்படி போவிங்க சார்..நான் வேணும்னா ஜீப்ல கொண்டு வந்து விடவா ??” என்று உண்மையான அக்கறையில் வினவினார்.
ஒற்றைப் புன்னகையில் அதை மறுத்துவிட்ட சுந்தரபாண்டியன், “நான் பார்த்துக்குறேன் மாணிக்கம்.. நீங்க நான் சொன்ன ஃபைலை மட்டும் தேடி எடுத்து வைங்க.. காலையில வந்து நான் பார்த்துக்குறேன்” என்று கூறிவிட்டு தன் புல்லட்டின் சாவியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார் அவர்.
அவர் மீனாட்சிக்கு அடுத்து மிகவும் காதலித்தது அவரின் புல்லட்டைத் தான்.
ஒரு சின்ன தூசி துரும்பு கூட படாமல் அதை பொத்தி பாதுகாத்து வந்த சுந்தர பாண்டியனுக்கு, அவரைத் தவிர்த்து வேறு யாரும் அந்த புல்லட்டைத் தொட்டால் பிடிக்காது.
கீதா அதை சுந்தர பாண்டியனிற்கு தெரியாமல் ஓட்டிப் பார்க்க முயன்று அவரிடம் பெல்ட்டால் அடி வாங்கியதெல்லாம் தனிக்கதை.
அதனால் தான் வீட்டிற்கு எந்நேரம் சென்றாலும் காவல் வாகனத்தை தவிர்த்து தன்னுடைய புல்லட்டிலே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அவர்.
அப்படித்தான் இன்றும் தன் புல்லட்டடை ஆசையாக தடவிக்கொடுத்துவிட்டு SP அலுவகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார் சுந்தர பாண்டியன்.
பௌர்ணமி இரவில் ஆளில்லா சாலையில் மிகவும் ரசித்து வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவரின் புல்லட் திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஒரு மரத்தில் மோதி நிற்க,
அடுத்த நொடி ரோட்டில் அதிவேகமாய் ஒரு லாரி அவரைக் கடந்து சென்றது.
அந்த லாரியில் லைட்டைக் கூட போடாமல், ஒரு ஹாரன் கூட அடிக்காமல் அதிவேகத்துடன் வந்ததிலே சுந்தர பாண்டியனிற்கு அது தன்னைக் கொல்ல அனுப்பப்பட்ட லாரி என்று புரிந்து போனது.
இந்நேரம் புல்லட் மட்டும் இப்படி கட்டுப்பாடை இழக்காமல் இருந்திருந்தால் அந்த லாரியில் அடிபட்டு நசுங்கி இறந்திருப்பது சர்வ நிச்சயம் என்பது அவருக்கு புரிந்தது.
தனக்கு நேர இருந்த மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிய தன் புல்லட்டை கட்டிக்கொண்ட சுந்தர பாண்டியன் மரத்தில் மோதியதில் உண்டான காயத்தால் அப்படியே மயங்கிச் சரிந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சாலையோரத்தில் மோதிக் கிடந்த
புல்லட்டை அதன் வெளிச்சத்தைக் கண்டு சந்தேகம் கொண்டு நின்றது.
அதில் வந்திருந்த நபர்கள் அருகில் சென்று பார்க்க, அங்கு ஒருவர் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டு விரைவாய் அவரைத் தங்கள் காருக்குள் அள்ளிப் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர்.
அதுவரை இங்கு நடப்பதை ஒரு மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அந்த லாரியின் ஓட்டுநர் அதை MP மருதராஜிடம் தெரிவிக்க,
“ச்சை!! தப்பிச்சுட்டானா?? அவனுக்கு ஆயுசு கெட்டி போல.. இந்த டைம் என் குறி மிஸ் ஆகி இருக்கலாம் ஆனா அடுத்தவாட்டி அவன் வீட்டுல கண்டிப்பா ஒரு பொணம் விழுந்தே தீரும்” என்று குரூரமான குரலில் உரைத்தார்.
அவரின் குரலை கேட்டுக் கொண்டிருந்த அந்த டிரைவருக்கே நடுக்கம் ஏற்பட, பயத்தில் போனை கட் செய்து விட்டான்.