Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Oorkolam Pogum Kaarkala Megam

Oorkolam Pogum Kaarkala Megam 1 1

அத்தியாயம் 1 

உலகில் இருக்கும் இன்னொரு 

மொழி காதல். அது



Advertisement

இதயம் பேசும் இன்பமொழி!!!

அறிவும் அழகும் ஒரே இடத்தில் இருக்காது என்பார்கள். ஆனால் இரண்டிலும் சிறந்து விளங்கும் தமிழகத்தின் தெற்கு கோடியில் அமைந்திருக்கும் கன்னியாகுமரி மாவட்டம். தமிழகம் என்று சொன்னாலும் அங்கே கேரளத்தின் சாயலும் ஒளிந்திருக்கும்.

Advertisement

Advertisement

            மரங்கள், செடிகள் என திரும்பிய பக்கம் எல்லாம் பசுமை மட்டுமே. ஜில்லென்ற காற்று, எப்போதும் இருக்கும் ஈரப்பதமான காலநிலை, அவ்வபோது போடும் தூரல் என இருப்பதால் சூரியன் கூட வெப்பத்தை வெளிவிட முடியாமல் தோற்றுக் கொண்டிருந்தான்.

            அத்தகைய அழகிய ஊரில் அழகும் கம்பீரமாகவும் வீற்றிருந்தது அந்த பெரிய வீடு. அதற்காக அரண்மனை அளவு எல்லாம் இல்லை. ஐவரி நிறத்தில் வீடு இருக்க அழகாக இருந்தது. வீட்டைச் சுற்றிய மதில் சுவர் மற்றும் அதற்குள் வளர்ந்து செழித்திருந்த மரங்கள் அந்த இரண்டு மாடி வீட்டுக்கு தனி கம்பீரத்தைக் கொடுத்தது.

Advertisement

            கீழே வரவேற்பறை, பூஜை அறை, சமையல் அறை, மூன்று படுக்கை அறைகள், பின் பக்கம் காலி இடங்கள் முழுவதும் பூச்செடிகள் நிறைந்திருந்தது. வீட்டின் பக்க வாட்டில் ஐந்து கார்கள் நிறுத்தும் அளவுக்கு இடமும் இருந்தது. ஷெட் மாதிரி போட்டிருந்தார்கள். மாடியில் மூன்று பெரிய அறைகள் படுக்கை மற்றும் குளியல் அறை வசதிகளுடன் இருந்தது. அதற்கு மேல் மொட்டை மாடி இருந்தது.

            மாலை ஆனதால் சூரியனும் விடை பெற்றுக் கொண்டிருக்க மழைக்கு அறிகுறியாக மேகமும் வானில் கூடிக் கொண்டிருந்தது. அந்த பெரிய கேட் திறந்ததும் உள்ளே சென்று தன்னுடைய காரை நிறுத்தினான் அருள் மாறன். அனைவருக்கும் அருள்.

அருள் மாறனுக்கு வயது முப்பத்தி இரண்டு. கிட்டத் தட்ட ஆறடி உயரம், கோதுமை நிறம், உழைப்பால் முருக்கேறிய கட்டுமஸ்தான உடல்வாகு, அடங்க மறுக்கும் தலை முடி, அளவான அதே நேரம் கம்பீரமாக இருக்கும் மீசை, அழுத்தமான உதடுகள், பார்ப்பவரை வசீகரிக்கும் கண்கள் என அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தான்.

            அவன் தான் அந்த வீட்டின் சிம்ம சொப்பணம். அவன் சொன்னால் சரியாக இருக்கும், அவன் செய்தால் சரியாக இருக்கும் என்று அனைவரும் நம்புவார்கள். அது உண்மையும் கூட. அனைத்தையும் தெளிவாக யோசித்து சரியான திட்டமிடலுடன் தான் செய்வான். அப்படிப் பட்ட ஒருவன் ஒரு விஷயத்தில் பெரியதாக சறுக்கப் போகிறான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

            அருள்மாறனின் தாத்தா வையாபுரி, பாட்டி கோதை தம்பதியரின் வீடு தான் இது. இவர்களுக்கு ஒரே மகன் கிருஷ்ணன்.

            அருள்மாறனின் தந்தை கிருஷ்ணன் மற்றும் தாய்  ராஜேஸ்வரி தம்பதிக்கு இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் என நான்கு பிள்ளைகள்.

            மூத்தவன் அருள்மாறன், படித்தது எம்.பி.ஏ. வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டு வந்தவன் தாத்தா மற்றும் அப்பா செய்து கொண்டிருந்த கெமிக்கல் தொழிற்சாலையில் சேர்ந்து கொண்டான். அது அப்போது கொஞ்சம் நஷ்டத்தில் தான் போய்க் கொண்டு இருந்தது.

            அவன் பல யுக்திகளை செய்து பெரிய அளவில் கொண்டு வந்தான். கையை விட்டு செல்லும் நிலையில் இருந்த தொழிற்சாலையை மீட்டுக் கொண்டு வந்தது அருள்மாறன் தான் என்று சொன்னால் அது மிகையில்லை. அப்போது இருந்தே பெரியவர்களுக்கு அவன் மீது மரியாதை அதிகம்.

            அவனுக்கு அடுத்து இரண்டு பெண்கள். மூத்தவள் காவ்யா அவளுக்கு திருமணம் முடிந்து சென்னையில் வசிக்கிறாள். அவள் கணவன் இந்திரன் ஒரு ஐ.டி கம்பெனியில் பணிபுரிகிறான். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். வந்தனா ஐந்தாம் வகுப்பு, அடுத்தது கவினுக்கு மூன்று வயது ஆகிறது.

            காவ்யாவுக்கு பிறகு பிறந்தவள் திலகா, அவள் கணவன் கைலாஷ், அவன் அரசு வங்கியில் பணிபுரிகிறான். அவர்களுக்கு திருமணம் முடிந்து இப்போது ஒரு வயதில் நிலன் என்ற மகன் இருக்கிறான். அவர்கள் வசிப்பது கோயம்பத்தூரில்.

            காவ்யாவுக்கு அடுத்து பிறந்தவன் கடைக்குட்டி மதன். இப்போது தான் இன்ஜினியரிங் முடித்திருக்கிறான். அருள் அவனை அலுவலகத்துக்கு வரச் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறான். அவன் தான் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் என்று நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

            நண்பர்களுடன் மட்டும் அல்ல. ஷிவானி என்ற பெண்ணுடனும் தான். இருவரும் கல்லூரி படிக்கும் போதில் இருந்து காதலர்கள். ஒரே வருடம், ஒரே பிரிவு, ஒரே வகுப்பு அவர்கள் காதலை வளர்க்க போதுமானதாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் வயது கூட இரண்டு மாதம் அவனை விட அவள் தான் மூத்தவள். ஆனால் காதலர்களுக்கு இரண்டு மாதம் என்ன பெரியதாகவா தெரிய போகிறது.

            இப்போது அந்த வீட்டில் திருமணம் ஆகாமல் இருப்பது அருள்மாறன் மற்றும் மதன் இருவரும் தான்.

            அருள் முதலில் இருந்தே திருமணம் வேண்டாம் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறான். காரணம் எல்லாம் யார் கேட்டாலும் சொல்ல மாட்டான்.

            வேண்டாம்னா வேண்டாம் விடுங்க என்பது தான் அவன் பதில், அடுத்து இரண்டு பெண்களுக்கு திருமணம் முடித்த போதும் அதே பதில் தான்.

            அவனது அன்னையும் தந்தையும் கெஞ்சிக் கொண்டு தான் இருக்கிறார்கள் அவனை வழிக்கு கொண்டு வரவே முடிய வில்லை.

            எப்போதும் அவன் பிடித்த பிடியில் நிலையாக இருப்பவன். ஆனால் அப்படி நிலையாக இருப்பவனையும் கடவுள் அசைத்துப் பார்க்கும் நேரம் வந்ததோ என்னவோ?

            மாலை ஆறு மணி, இன்று ஒரு பிஸினஸ் மீட்டிங் என்பதால் அதை முடித்து விட்டு தான் வீட்டுக்குள் நுழைந்தான். காரை அதன் இடத்தில் நிறுத்தி விட்டு அருகில் பார்க்க அவனது தம்பி மதனின் கார் அங்கே இல்லை.

            சிறு யோசனையுடன் வீட்டுக்குள் செல்ல அங்கே அவனது தாத்தாவும் தந்தையும் தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் அவன் யோசிக்கவே மாட்டான். அவனைப் பொறுத்த வரை அது தேவையில்லாதது. அவர்களாக சொன்னால் கேட்டுக் கொள்வான்.

            அவர்களை ஒரு பார்வை பார்த்தவன் அவர்கள் எதிரே சென்று அமர “இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட அருள்? டீ தரவா?”, என்று கேட்டாள் அவன் அன்னை ராஜேஸ்வரி.

            “இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிட்டுறலாம்? எப்பவும் நடு ராத்திரில தான் வீட்டுக்கு வரான். இன்னைக்காவது சரியான நேரத்துக்கு சாப்பிடட்டும்”, என்று சொல்லிக் கொண்டே பேரன் அருகில் வந்து அமர்ந்தார் அவன் பாட்டி கோதை.

            “சரிங்க அத்தை”, என்று சொன்ன ராஜேஸ்வரி மகனைப் பார்க்க அவனோ தீவிர யோசனையில் இருந்தான்.

            அருகில் இருந்த கணவருக்கு கண் ஜாடை காட்ட “என்ன ஆச்சு அருள்?”, என்று கேட்டார் கிருஷ்ணன். இப்போது அனைவரின் கவனமும் அருள் பக்கம் திரும்பியது.

            “எல்லார் கிட்டயும் ஒரு விஷயம் பேசணும். இருங்க நான் போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்”, என்று சொன்னவன் அவர்களை குழப்பி விட்டு மாடிக்கு சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!