“என்ன விஷயமா இருக்கும் அப்பா?”, என்று கேட்டார் கிருஷ்ணன்.
“ஒரு வேளை கல்யாண விஷயமா இருக்குமா மாமா?”, என்று கேட்டாள் ராஜேஸ்வரி.
Advertisement
“உன் மகன் கல்யாணத்துக்கு சரின்னு சொன்னா தான் ரொம்ப சந்தோஷமா இருக்குமே? ஆனா அவன் முகத்துல இருக்குற குழப்பத்தைப் பாத்தா அப்படி எல்லாம் ஒண்ணும் தோணலை. ஏதாவது குண்டக்க மண்டக்க தான் பேசுவான். என் மூத்த பேரன் என்னை மாதிரி இருப்பான்னு பாத்தா அப்படியே என் அப்பா மாதிரி இருக்கான். அவர் இப்படி தான். என்ன செய்ய நினைக்கிறார்ன்னே புரியாது. இவனை எல்லாம் இவன் போக்குல போய் தான் நம்ம வழிக்கு கொண்டு வரணும். அந்த சென்னை சம்பந்தம் என்ன ஆச்சு?”, என்று கேட்டார் அருள்மாறனின் தாத்தா வையாபுரி.
Advertisement
“நாம சரின்னு சொன்னா அவங்களுக்கு சம்மதம் தான் பா. ஆனா இவன் தான் பிடி கொடுக்க மாட்டிக்கான். இதுல இப்ப முக்கியமான விஷயம் வேற பேசணுமாம்? என்ன சொல்லப் போறானோ?”, என்றார் அவன் தந்தை கிருஷ்ணன்.
Advertisement
அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியன் அவனது அறைக்குச் சென்று அணிந்திருந்த உடைகளை கலைந்து விட்டு துண்டை எடுத்துக் கட்டிக் கொண்டவன் குளியல் அறைக்குச் சென்று ஷவரை ஆன் செய்து அதன் அடியில் நின்று விட்டான்.
Advertisement
இந்த விஷயத்தை எப்படி பேச என்று குழப்பமாக இருந்தது. ஏனென்றால் அனைவருக்கும் ஒரு பிரைவசி உண்டு. அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில் என்று நினைப்பவன். ஆனால் இது அப்படி இல்லை. பேசி தான் ஆக வேண்டும். இதை அவன் சொல்லாமல் விட்டால் அவன் குடும்ப மானமே காற்றில் பறக்கும். எப்படி இதைச் சொல்ல என்று யோசித்தவன் அதைச் சொன்னால் அவன் வாழ்வே அடகு வைக்கப்படும் என்ற விஷயம் மட்டும் தெரியாமல் போய் விட்டான்.
அவன் குளித்து முடித்து வேறு உடை மாற்றி கீழே வந்த போது அனைவரும் இரவு உணவு உண்ண தயாராக இருந்தார்கள்.
அவன் சென்று அமர்ந்ததும் ராஜேஸ்வரி அனைவருக்கும் பரிமாற “மதன் எங்க?”, என்றான் அன்னையிடம்.
“அவன் பிரண்டை பாக்க போறேன்னு போனான் டா. இன்னும் வரலை. எட்டு மணிக்குள்ள வந்துருவான்”, என்று சொல்லி வாயை மூடும் போதே “ஹாய் கைஸ்”, என்று ஆர்ப்பட்டமாக உள்ளே நுழைந்தான் மதன்.
கல்லூரி முடித்த இளைஞன் எப்படி இருப்பானோ அதே தோற்றத்தில் தான் இருந்தான். முகத்தில் சந்தோஷமும் உதடுகளில் புன்னகையும் நிறைந்து இருந்தது.
“ஆயுசு நூறு டா உனக்கு. சரி வா சாப்பிடலாம்”, என்றார் கோதை.
“எனக்கு வேண்டாம் பாட்டி, பசிக்கலை. அம்மா எனக்கு ஒரு டீ மட்டும் போட்டுத் தாங்க. நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.
“டீ குடுக்காத ராஜி, அவனுக்கு புடிச்ச போர்ன்வீட்டா போட்டு பால் ஆத்திக் கொடு. அப்ப தான் நைட் நல்லா தூங்குவான்”, என்று கோதை சொல்ல ராஜி “சரிங்க அத்தை”, என்று சொல்ல உச்ச கட்ட எரிச்சலில் அமர்ந்திருந்தான் அருள்மாறன்.
“நீ எதுக்கு டா இன்னும் சாப்பிடாம வெறிச்சு பாத்துட்டு உக்காந்துருக்க? இன்னொரு இட்லி வைக்கவா?”, என்று கேட்டாள் ராஜேஸ்வரி.
“வேணும்னா நான் வச்சிக்கிறேன். நீ உன் செல்ல மகனுக்கு போய் பால் ஆத்து. முக்கியமான வேலை பாத்துட்டு களைப்பா வந்துருப்பான்ல?”, என்று எரிச்சலுடன் கத்த அனைவரும் திகைத்துப் போய் அவனைப் பார்த்தார்கள்.
“வார்த்தையை பாத்து பேசணும் அருள். எனக்கு என் நாலு பிள்ளைகளும் செல்ல பிள்ளைகள் தான். அப்படி என்ன உனக்கும் அவனுக்கும் நான் பாகுபாடு பாத்துட்டேன்? வீட்ல கடைக்குட்டினால எல்லாருமே அவனுக்கு கொஞ்சம் செல்லம் கொடுக்குறோம் தான். நீயும் தான் அவனுக்கு செல்லம் கொடுக்குற?”, என்று கேட்டாள் ராஜேஸ்வரி.
“சரி விடு ராஜி”, என்று மனைவியை அடக்கிய கிருஷ்ணன் “உன் அம்மா தான் சொல் தாங்க மாட்டான்னு தெரியும்ல? சரி இப்ப என்ன தான் டா ஆச்சு?”, என்று மகனிடம் கேட்டார்.
“என்ன மாநாடு டுடே? உன் கல்யாண விஷயமா அண்ணா?”, என்று கேட்ட படி வந்து அமர்ந்த மதன் “இன்னும் டீ போடலையா மா?”, என்று கேட்டான்.
ராஜி பதில் சொல்லப் போக “காலேஜ் முடிச்சு ஆறு மாசம் ஆகிருச்சு? இன்னும் எத்தனை நாள் இப்படி சும்மா சுத்திட்டு இருக்கப் போற மதன்?”, என்று கேட்டான் அருள்.
அனைவரும் இப்போது உணவை மறந்து அவனைத் தான் பார்த்தார்கள். மதனும் அண்ணனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “கொஞ்ச நாள் அண்ணா, நான் இப்ப ஆபிஸ் வரணும்னு என்ன அவசியம் சொல்லு? நீயே எல்லாம் பாத்துக்குற? அப்ப அப்ப அப்பா வேற ஆபீஸ் வராங்க. அப்புறம் நான் எதுக்கு? என் அண்ணன் இருக்க பயமேன்?”, என்றான் சிறு சிரிப்போடு.
“ஓஹோ நீ கண்ட மேனிக்கு ஊர் சுத்துவ? உனக்கும் சேத்து நாங்க சம்பாதிக்கணுமா?”, என்று கேட்டதும் அனைவரும் அருளை முறைத்து தான் பார்த்தார்கள்.
“என்ன அருள் இது உன் சம்பாத்தியம் அவன் சம்பாத்தியம்ன்னு பிரிச்சு பேசுறது? அவன் சின்ன பையன் டா. அவன் கிட்ட எதுக்கு இப்படி பேசுற?”, என்று கேட்டார் கிருஷ்ணன்.
“நான் இப்ப எதுவும் பேசக் கூடாதுன்னு சொல்றீங்களா பா?”, என்றான் அருளும்.
“உனக்கு என்ன ஆச்சு அண்ணா? ஏதாவது பிரச்சனையா? நான் ஆபீஸ் கண்டிப்பா வரணும்னா சொல்லு. அடுத்த மாசத்துல இருந்து வரேன்”, என்று இறங்கி தான் பதில் சொன்னான் மதன்.
ஆனால் அருள் மலை இறங்க வேண்டுமே? “ஏன் இந்த ஒரு மாசம் என்ன வேலை இருக்கு?”, என்றான் அருள்.
“அது..”, என்று ஆரம்பித்த மதன் பதில் சொல்ல தினறினான். ஏனென்றால் அடுத்த மாதத்தில் இருந்து தான் ஷிவானி பெங்களூரில் இருக்கும் கம்பெனியில் பணியில் சேரப் போகிறாள். அது வரை அவளுடன் ஊர் சுத்த வேண்டும் என்ற ஆசையில் தான் ஒரு மாதம் டைம் கேட்டான்.
“என்ன பதில் சொல்லாம தடுமாறுற? சரி விடு. சார் இன்னைக்கு எங்க போன?”, என்று கேட்டான் அருள்மாறன்.
“என் பிரண்ட் அவினாஷ் பாக்க போனேன். ஏன் கேக்குற?”
“ஓஹோ?”, என்ற அருள் அடுத்த நொடி தன்னுடைய போனை எடுத்து அவினாஷ் எண்ணுக்கு அழைத்து ஸ்பீக்கரில் போட்டு விட்டான்.
இப்போது தான் மதனுக்கு பிரச்சனை வேறு என்று புரிந்தது. அண்ணனுக்கு அவனைப் பற்றி ஏதோ தெரிந்திருக்கிறது என்ற வரைக்கும் புரிந்தது.
“ஹாய் அருள் அண்ணா, எப்படி இருக்கீங்க? அம்மா அப்பா, தாத்தா பாட்டி எப்படி இருக்காங்க?”
“மதன் சொல்லலையா அண்ணா? நான் மிலிட்டரி கேம்ப் வந்துட்டேனே? காஷ்மீர்ல இருக்கேன். இங்க செலக்ட் ஆகி மூணு மாசம் ஆகிருச்சு. இப்ப டிரைனிங் போய்க்கிட்டு இருக்கு. அவினாஷ் கிட்ட அப்புறம் பேச கூட முடியலை. அவன் நல்லா இருக்கானா?”
“நல்லா இருக்கான் டா. சரி இரு ஒரு கால் வருது கூப்பிடுறேன்”, என்று சொல்லி விட்டு போனை வைத்த அருள் மதனைப் பார்க்க இப்போது மற்றவர்களும் மதனைத் தான் பார்த்தார்கள்.