“அருள் என்ன இப்படி எல்லாம் பேசுறான்னு யோசிச்சேன். ஆனா இப்ப ஏதோ ஒரு காரணம் இருக்கு போல? என்ன மதன் இதெல்லாம்? ஊருலே இல்லாத ஒருத்தனைப் பாக்க போனேன்னு சொல்ற? எங்க போன?”, என்று கேட்டார் வையாபுரி.
என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் மதன் தடுமாற “அந்த பொண்ணு யாரு?”, என்று நேரடியாக கேட்டான் அருள்.
Advertisement
அனைவரும் அதிர்ச்சியாக மதனைப் பார்க்க அதற்கு மேல் மதன் எதையும் மறைக்க வில்லை. “சாரி அண்ணா. அவ பேர் ஷிவானி. என்னோட காலேஜ் பிரண்ட் தான். நாலு வருஷம் லவ் பண்ணுறோம்”, என்றான்.
Advertisement
“என்ன டா இதெல்லாம்? லவ் பண்ணுற வாயசா இது? அவ்வளவு பெரியவனா ஆகிட்டியா நீ?”, என்று கேட்டார் கோதை பாட்டி.
Advertisement
“இப்ப லவ் பண்ணாம உன் வயசுல பண்ணனுமா பாட்டி?”, என்று கேட்ட அருள் “இங்க பாரு மதன், நான் எதுக்கு லவ் பண்ணுறேன்னு கேக்க மாட்டேன். அது உன் பர்சனல். ஆனா இன்னைக்கு என் கண்ணு முன்னாடி அவ்வளவு பேர் இருக்குற ரெஸ்டாரண்ட்ல வச்சு அந்த பொண்ணுக்கு ஊட்டி விட்டு கொஞ்சிட்டு இருக்குற? அத்தனை பேரும் வேடிக்கை பாக்குறாங்க. என் கூட வந்த நம்ம டீலர்ஸ் அது உங்க தம்பி தானேன்னு கேக்குறாங்க. ஆமா என் தம்பி தான். வீட்ல அந்த பொண்ணுக்கு தான் பேசி முடிச்சிருக்கோம்ன்னு சொல்லிட்டு வந்துருக்கேன்”, என்றான்.
Advertisement
“சாரி அண்ணா”, என்றான் மதன்.
“அப்பா, தாத்தா நாளைக்கே அந்த பொண்ணு பத்தி விசாரிச்சு அவங்க வீட்ல போய் பேசுங்க”, என்று சொன்னவன் அடுத்து எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான்.
மற்றவர்களுக்கு தான் உணவு இறங்க வில்லை. மதன் இப்படி செய்வான் என்று அவர்கள் எதிர் பார்க்கவே இல்லை. ஏனென்றால் அவர்கள் மனம் அவனை இன்னும் சிறு பிள்ளையாக தான் எண்ணிப் பார்த்தது.
தன்னுடைய உணவை முடித்த அருள்மாறன் ஒரு பொதுவான குட் நைட்டை சொல்லி விட்டு அவனது அறைக்குச் சென்று விட்டான்.
அவன் சென்ற பின்னர் அமைதியே நிலவியது. “சாரி”, என்றான் மதன் பொதுவாக.
“உன் சாரியை தூக்கி குப்பைல போடு. அந்த பொண்ணு வீட்டு அட்ரஸ் சொல்லு”, என்றார் கிருஷ்ணன்.
“அவ வீட்ல எல்லாம் போய் பேச வேண்டாம் பா. ரொம்ப ஸ்ட்ரிக்ட். தேவையில்லாத பிரச்சனை வரும் பா”
“பிரச்சனை வரும்னு தெரிஞ்சு தானே லவ் பண்ணீங்க? உன் கூட ஊர் சுத்தும் போது அந்த பொண்ணுக்கு வீட்டை நினைச்சு பயம் இல்லையா? ஒழுங்கா அட்ரஸ் சொல்லு”, என்று வையாபுரி சொல்ல வேறு வழியில்லாமல் “நானே நாளைக்கு உங்களை அங்க கூட்டிட்டு போறேன்”, என்றான்.
அவனுக்கு பயமாக இருந்தது ஷிவானியை நினைத்தால். எப்படியாவது இன்று இரவுக்குள் அவளிடம் பேசி நாளை வருவதைப் பற்றிச் சொல்லி சமாளிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்க டேபிள் மீதிருந்த அவனது போனை எடுத்த ராஜேஸ்வரி “இன்னைக்கு ஒரு நாள் ஃபோன் இல்லாம லவ் பண்ணுங்க சரியா?”, என்று கேட்டுக் கொண்டே அவனுக்காக கொண்டு வந்த போர்ன்வீட்டாவைக் கொடுத்தாள். இருந்த மனநிலையில் அதை டீ என்று எண்ணி தான் மதன் குடிக்கவே செய்தான். பின் அனைவரையும் பாவமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அறைக்குள் சென்று விட்டான்.
“அந்த பொண்ணு பத்தி ஏதாவது விசாரிச்சிருக்கானா? நல்ல பொண்ணா? நல்ல குடும்பமா? மூத்தவன் கிட்ட கேளு”, என்றார் வையாபுரி.
உடனே அருளை அழைத்த கிருஷ்ணன் போனிலே அந்த தகவலை கேட்க “அப்ப நீங்க எதுக்கு இருக்கீங்க? கல்யாணம் பண்ணி வைக்கிறது உங்க வேலை. நீங்களே விசாரிச்சிக்கோங்க பா”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
அவன் சொன்ன இதே வார்த்தையை கொண்டே பின்னாளில் மடக்கப் படுவான் என்பதை அருள் அறியவில்லை. பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது பெற்றவர்கள் கடமை தான். அப்படி என்றால் அருளின் திருமணமும் அவர்கள் பொறுப்பு தானே?
அறைக்குள் வந்த மதனுக்கு அடுத்து என்ன செய்ய என்றே தெரிய வில்லை. ஃபோன் இல்லாமல் அவ்வளவு கஷ்டமாக இருந்தது. அவளிடம் தகவல் கொடுக்காமல் அவளது வீட்டுக்கு சென்றால் நிச்சயம் தன்னை ஒரு வழி ஆக்கி விடுவாள் என்று அவனுக்கு தெரியுமே.
தன்னுடைய லேப்டாப்பை எடுத்து ஏதாவது தகவல் கொடுக்க முடியுமா என்று எண்ணி அவன் பார்த்துக் கொண்டிருக்க அவன் காதலியோ போனில் இன்டர்நெட் சேவையை நிறுத்தி விட்டு தன்னுடைய அக்காவிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.
என்ன செய்ய என்று தெரியாமல் அவன் தடுமாறிக் கொண்டிருக்க “என்ன டா பண்ணுற?”, என்று கேட்ட படி அறைக்குள் வந்தாள் ராஜேஸ்வரி.
“சும்மா தான் மா இருக்கேன். அதான் போனை பிடுங்கிட்டீங்களே? நாளைக்கு என்ன ஆகப் போகுதோ? நல்ல சாமியாடப் போறா”
“ஏன் டா? அந்த பொண்ணு ரொம்ப கோப படுமா? நல்ல பொண்ணு இல்லையா?”
“சே சே, அவ ரொம்ப நல்ல பொண்ணு மா. எல்லாருக்கும் உதவி செய்வா. எல்லாரையும் மரியாதையா பேசுவா. அடக்க ஒடுக்கமான பொண்ணு. எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருப்பா. என் மேல உயிரையே வச்சிருக்கா. நம்ம வீட்டுக்கு ஏத்த மகாலக்ஷ்மி மா அவ”
“ஏதோ சொல்ற? எனக்கு எதுவும் சரியாப் படலை. நம்ம வீட்ல இந்த சந்தை சச்சரவு எல்லாம் ஆகாது. நீயே பாத்த தானே? நானும் உன் பாட்டியும் எப்படி இருக்கோம்ன்னு? அதையே தான் என் பொண்ணுங்களுக்கு சொல்லிக் கொடுத்து வளத்துருக்கேன். உன் அண்ணன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கான். ஆனா எப்படியும் சம்மதிக்க வச்சிருவோம். நம்ம வீட்டுக்கு வர ரெண்டு மருமகளும் எங்க கூட ஒத்துமையா சந்தோஷமா இருக்கணும். அப்படி இல்லைன்னா தனியா அனுபிபிருவோம் பாத்துக்கோ”
“அப்படி எல்லாம் நடக்காது மா. ஷிவானி யாரையும் கஷ்ட படுத்த மாட்டா. ரொம்ப நல்ல பொண்ணு. நீ தான் என்னையும் அவளையும் சேத்து வைக்கணும்”
“சரி டா, படுத்து தூங்கு. நாளைக்கு ஒரு முடிவு பண்ணிறலாம். முடிஞ்சா நிச்சயம் கூட பண்ணிட்டு உன் அண்ணன் கல்யாணத்துக்கு அப்புறம் உங்க கல்யாணம் வச்சிக்கலாம்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள் ராஜேஸ்வரி.
அன்னை சென்றதும் “அடியே ஷிவானி உன்னைப் பத்தி ரொம்ப பெருமையா அள்ளி விட்டுருக்கேன் டி. எதையாவது பண்ணி சொதப்பிறாத”, என்று மனதில் இருக்கும் காதலியிடம் பேசினான்.
அவளோ அந்த இரவு நேரத்தில் “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? என்னோட ரூம்ல குளிக்காத குளிக்காதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?”, என்று தலையை விரித்துப் போட்டு ஆங்காரமாய் தன்னுடைய அக்காவிடம் கத்திக் கொண்டிருந்தாள்.
“ஏய் எதுக்கு டி இந்நேரம் பேய் மாதிரி கத்திக்கிட்டு இருக்க? அவ ரூம்ல பைப் லைன் பிரச்சனை இருக்கு. அதான் உன் ரூம்ல குளிக்க சொன்னேன்?”, என்று கேட்டாள் அவர்களின் அன்னை லதா.
“சாரி ஷிவானி”, என்றாள் அவளது அக்கா பூர்வீகா.
அன்னை சொன்ன சமாதானமும் காதில் விழ வில்லை. அக்கா கேட்ட மன்னிப்பும் காதில் விழ வில்லை ஷிவானிக்கு. “ஒழுங்கு மரியாதையா என் பாத்ரூமை கழுவி விட்டுட்டு போ”, என்றாள் அக்காவிடம்.
சரி என்று தலையசைத்து விட்டு பூர்வீ அதை செய்ய போக “நீ கீழே போ பூர்வீ, உன் அண்ணி உன்னை கூப்பிட்டா. நான் இங்க பாத்துக்குறேன்”, என்று சொல்லி அனுப்பி வைத்தாள் லதா.
அமைதியாக பூர்வீ கீழே செல்ல அன்னையை முறைத்த படி நின்றாள் ஷிவானி.