அகல்யாவுக்கு எப்போது பணியை முடித்தோம் எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என்று எல்லாம் நினைவே இல்லை.
அவள் உடன் படித்த வள்ளி சொன்ன சொற்கள் மட்டுமே காதில் ரீங்காரம் இட்டு கொண்டு இருந்தன. “அவன் சாகும் வரை இப்படியே ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக் கொண்டே இருக்க வேண்டியது தான். அவன் வாழ்நாள் முழுமைக்கும் இப்படி தரையை சுத்தம் செய்து அந்த காசில் அகல்யா வாழ வேண்டியது தான்“, என்று அவர்கள் சந்தோசமாக பேசிச் சிரித்தது அகல்யாவை பெரிதும் தாக்கியது. அதிலும் ஹரியின் இப்போதைய மாற்றம் அவர்கள் சொல்வது போல நடக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது என்று அச்சுறுத்தியது.
அதே நேரம் ஹரியும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். அவன் மனமோ.. அய்யோ இன்னைக்கு என்ன பிரச்சனை பண்ண போகிறாளோ? தரையை துடைச்சத வேற பார்த்துட்டா. ஆனா.. பாவம் நேத்து வேற கை நீட்டி விட்டோம். இன்னைக்கு அவ என்ன கோபப் பட்டாலும் கொஞ்சம் பொறுமையாகத் தான் போகணும்.
Advertisement
என்று எண்ணிய படியே குளித்து வந்தான். அப்போது தான் அவள் சீருடையைக் கூட மாற்றாமல் எங்கோ வெறித்த படி உட்கார்ந்து இருப்பதை கவனித்தான்.
“அகல்.. சாரி செல்லம். நேத்து நான் உன்னை அடிச்சு இருக்க கூடாது. நீ வேணும்னா என்ன திரும்ப அடிச்சிடு”.. என்று அவள் கையை அவன் தொடப் போக..
“சீ.. என் கையை விடுடா. உன்னை பார்க்கவே எனக்கு அருவருப்பா இருக்கு. நான் ஏன் உன்னை காதலிச்சேன் தெரியுமா.. நீ அழகா இருக்க.. ஸ்டைலா இங்கிலிஷ் பேசுற. நீ பெரிய வேலைக்கு போனால் வசதியான வாழலாம். எல்லாரும் முன்னாடி பெருமையா உன்னை அறிமுகப் படுத்தலாம் என்று கனவு கண்டேன்.
Advertisement
ஆனா நீ தரையை துடைக்கிறது குப்பை அள்ளுறது என்று எவ்வளவு கேவலமா இறங்கிட்ட. இன்னைக்கு என் பிரெண்ட் முன்னாடி எவ்வளவு அவமானமா போச்சு தெரியுமா?”.. என்று அவள் கத்த..
Advertisement
“அவமானமா போச்சா??.. இந்த வேலையை எனக்கு வாங்கிக் கொடுத்ததே நீ தான்டீ!!. மறந்து போச்சா?”.. என்று அவன் குரலும் இப்போதும் இறுகி இருந்தது.
“ஆமா நான் தான் வாங்கி கொடுத்தேன். அது தான் நான் செஞ்ச பெரிய தப்பு. ஏன் வாங்கி கொடுத்தேன்னா.. நீ வண்டியில் வடைக் கடை போடுறேன் பஜ்ஜி கடை போடுறேன் என்று சொல்லி என் உயிரை எடுத்த. அந்த கருமத்துக்கு இது பரவாயில்லை என்று யோசிச்சேன்.”.. என்றாள்.
“வண்டி கடை போடுறது என்ன அத்தனை கேவலமா அகல்யா”.. என்றான் அவன் கோபத்தை அடக்கி.
Advertisement
ஆமா என்னைப் பொறுத்தவரை அசிங்கம் தான். என் புருஷனை ஒருநாளும் சமையல்காரனா நினைச்சுக் கூட பார்க்க பிடிக்கலை. அதனால தான் உனக்குத் தெரியாம உன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அப்ளிக்கேஷனைக் கூட இரண்டு தடவை கிழிச்சுப் போட்டேன்”.. என்று தன்னை அறியாமல் உளறியவள் நாக்கை கடித்துக் கொண்டாள்.
“என்ன??.. என்ன அகல்யா சொன்ன”.. என்று அவன் அவளை அவன் புறமாக திருப்பி உலுக்க.
அவள் மனம் இப்போது எதற்கும்.துணிந்து இருக்க.. “ஆமாடா.. எனக்கு நீ கரண்டியைத் தூக்கிறது இஷ்டம் இல்லை. ஒரு கவுரவமான வேலைக்கு போய் நீ நல்லா சம்பாதிக்க வேண்டும்னு நான் ஆசைப் பட்டேன். இது தப்பா. இது நியாயமான ஆசை தான. சொல்லிச் சொல்லி பார்த்தேன் நீ அடம் பிடிச்ச. அதான் நானே போஸ்ட் பண்றேன். போஸ்ட் ஆபிஸ் எனக்கு பக்கம் என்று சொல்லி வாங்கி அப்ளிக்கேஷனை கிழிச்சு போட்டேன்.”.. என்று சொல்லி அவனிடம் இருந்து விலகி நின்றாள்.
ஹரி சிலையாக நின்று விட்டான். எத்தனை பெரிய துரோகம். அவள் கவுரவத்திற்காக அவனைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் அவன் கனவைக் கொன்று புதைத்து இருக்கிறாள்.
அவளை அடித்து விடக் கூடாது என்று அவனுக்குள் பல முறை சொல்லி கோபத்தை கட்டுப் படுத்த முயன்றவன். “அகல்யா நீ கொஞ்சம் கூட என் விருப்பு வெறுப்பு பத்தி யோசிக்க மாட்டியா?”.. என்று அவன் உடைந்த குரலில் கேட்க.
“இங்க உன் விருப்பு வெறுப்பை விட நம்மைச் சுத்தி உள்ளவங்க முன்னாடி எப்படி வாழ்றோம் என்கிறது தான் ரொம்ப முக்கியம் ஹரி. கார் பங்களா என்று மத்தவங்க முன்னாடி கெத்தா வாழ முடியாட்டியும் பரவாயில்லை.. இப்படி ஒரு பொம்பளை முன்னாடி குனிஞ்சு தரையை தொடைக்கிறியே உனக்கு வெட்கமா இல்ல. வண்டி கடை போட்டு எச்ச வட்டில் கழுவுறது இது எல்லாம் என்னால ஜீரணிக்கவே முடியல”.. என்றாள்.
“நீ கூட தான் நர்சா வேலை பார்க்கிற.. தேவைப்பட்டா நீயும் அருவருப்பு பார்க்காமல் வேலை பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் உனக்கும் வந்திருக்கு தான. அதுக்காக இந்த வேலையே வேணாம்னு சொல்லிருவியா?”.. என்றான்.
“அது தான் பிரச்சனையே. ஒரு ஆர்வத்துல நர்சுக்கு படிசிட்டேன். எனக்கு இங்க வந்த பிறகு தான் அந்த கஷ்டங்கள் எல்லாம் புரியுது. இப்போ நான் நினைச்சாலும் இந்த வேலையை விட முடியாத நிலையில் இருக்கோம். நீ நல்ல நிலையில் இருந்தா. நான் எப்பவோ இந்த வேலையை விட்டு இருப்பேன்.” என்றாள்.
“அகல்.. இவ்வளவு தானா?.. நீ பேசுவதைப் பார்த்து நான் என்னமோ எதோன்னு பயந்துட்டேன். நீ ஒன்னும் கவலைப் படாத. இனி நீ அங்க வேலைக்கு போக வேண்டாம். நீ ராணி மாதிரி வீட்ல இரு.. நான் மூட்டை தூக்கியாவது சம்பாதிச்சு விடுவேன்.” என்றான்.
“நீ திருந்தவே மாட்ட ஹரி. இப்ப கூட பாரு நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போறேன் என்று சொல்லுறியா? மூடை தூக்குறேன். மாடு மேக்கிறேன் என்று சொல்லுற. என் கனவுக் கோட்டையை நீ உடைச்சிட்ட ஹரி. இத்தனை நாள் தெரியல. ஆனா இன்னைக்கு அந்த வள்ளி முன்னாடி நான் அவமானத்துல கூனிக் குறுகிட்டேன். நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். வயசு கோளாறு ல. நம்ம உறவை காதல் என்று தப்பா நினைச்சிட்டேன்.”. என்று அவள் வேதனையுடன் சொல்ல.
ஹரி நெஞ்சம் மொத்தமாக நொறுங்கிப் போனது. காதலையே பிழை என்று கூறுகிறாளே. “அப்புறம் எதுக்கு டீ என்ன கல்யாணம் பண்ண?.. உன் மாமன் மகனையே கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தான?”.. என்று அவன் கேட்கக் கூடாது என்று தடுத்து நிறுத்திய கேள்வி அவன் கட்டு பாட்டைப் மீறி வெளி வந்து இருந்தது.
ஆனால் அவளோ.. “ஆமா.. தப்பு தான். எல்லாமே என் தப்பு தான். வெளித் தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து போய் விட்டேன். அன்னைக்கு எங்க அம்மா படிச்சுப் படிச்சு சொன்னப்போ வசதி எவ்வளவு முக்கியம் என்று எனக்கு புரியலை. இப்போ உன் கூட வாழ ஆரம்பிச்ச பிறகு தான் நான் எவ்வளவு இழந்து வந்து இருக்கேன் என்று எனக்கே புரியுது”.. என்றாள்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட ஹரியின் உள்ளம் உறைந்து போனது. யாரோ கூறான கத்தி கொண்டு இதயத்தை கிழித்தது போல அத்தனை ரணம். இவள்.. இத்தனை நாட்களாக அவன் காதலித்த அகல்யா தானா என்று துடித்துப் போனான்.
“என்ன அகல்யா பேசுற??. அப்போ இத்தனை நாட்கள் என் கூட நீ சந்தோஷமாகவே இல்லையா.”. என்று அவன் வேதனையுடன் கேட்க.
“இல்ல ஹரி!!.. நான் எதிர்பார்த்த வாழ்க்கையே வேற.. நீ எனக்கு அமைச்சு கொடுத்தது வேற.”.
“அப்போ உனக்கு என் மேல நம்பிக்கையே இல்லையா?.. “.. என்றவன் குரல் இரும்பாய் மாறி இருந்தது.
“இல்ல.. நீ இந்த எம்பிஏ கூட முடிப்ப என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நீ ஒரு ஃபெய்லியர்”.. என்று அவள் முடிக்கும் முன் அவன் அவளை ஓங்கி அறைந்து இருந்தான்.
அவன் அறைந்ததில் தடுமாறிக் கதவில் மோதிய அகல்யா மயங்கிச் சரிய.. அங்கு அதே நேரம் உள்ளே வந்து இருந்தாள் அவள் தாய் வீரலட்சுமி.
“அடப்பாவி கொடுமைக்காரா என் பிள்ளையை இப்படி அடிச்சே கொல்லப் பார்க்குறியே. நீ நல்லா இருப்பியா”.. என்று அவள் நெற்றியில் வழிந்த இரத்தத்தை பார்த்தவர்.. “அடேய் மாணிக்கம்.. உடனே போலீசுக்கு போனைப் போடு. இனி ஒரு நாளும் என் பொண்ணு இங்க இருக்க கூடாது”.. என்று அவள் ஊரை கூட்ட..
ஹரி எதுவும் பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. “அகல்யா என் கூட வாழ விரும்பலை. நீங்க உங்களோட மகளை.. தாராளமா இங்க இருந்து கூட்டி போகலாம்”.. என்றான் அமைதியாக..
வீரலட்சுமிக்கு அத்தனை சந்தோஷம். இது நடக்க வேண்டும் என்று தானே இத்தனை நாட்களாக எல்லா தெய்வத்திடமும் விண்ணப்பம் போட்டு இருந்தாள்.
அகல்யா கண் விழித்த நேரம் அவள் மாங்குடியில் அவள் படுக்கையில் இருந்தாள். அவள் நெற்றியில் பெரிய கட்டு போடப்பட்டு இருந்தது. வீரலட்சுமி அவள் கண் விழித்ததும் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள். “தாயி எப்படி இருக்க?”.. என்று அவள் கேட்க.
“அம்மா.. என்ன மன்னிச்சிடும்மா.. உன்னை ரொம்ப அவமானப் படுத்திட்டேன்”.. என்று அவள் அழுக..
“பரவாயில்லை டீ. இப்பவாவது உனக்கு என் கஷ்டம் புரிஞ்சதே. மாரியாத்தா உன்னை காப்பாத்திட்டா. அந்த படுபாவி என்ன சொன்னான் தெரியுமா. உங்க மகளை நீங்களே கூட்டிப் போய் விடுங்க. இந்தாங்க விடுதலை பத்திரம். இனி உங்க மகள் இந்த திசை பக்கம் கூட வரக்கூடாதுன்னு சொல்லிட்டான்.”.. என்றாள் வீரலட்சுமி.
அவள் பேசிய பேச்சுக்கு அவன் அப்படி பேசியதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்று தான் அகல்யாவுக்கு தோன்றியது. ஆனாலும் நான் வேண்டாம் என்று சொல்ல அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கோபம் கொண்டவள், அவளும் அந்த பத்திரத்தில் வேகமாக கையெழுத்திட்டு கொடுத்தாள்.
இப்படியே வருடங்கள் போக.. அன்று ஹரி சமூக வலைதளத்தில் ஏதோ பார்க்க.. அந்த புகைப்படத்தில் கவுன்சிலர் மாணிக்கம் அவர் மனைவி குழந்தையுடன் விழாவை சிறப்பித்தார் என்று வர. மாணிக்கம் அருகில் அகல்யா கையில் குழந்தையுடன் நின்று இருந்தாள்.
ஹரி இதயம் நின்று துடித்தது. ஆம் அகல்யா மாணிக்கத்தை மறுமணம் முடித்து இருந்தாள்.
தொடரும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே. அன்புடன் லக்ஷ்மி.