Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எனை மீட்டிடும் இசையே

இசை 3

அத்தியாயம் 3

வீட்டின் முன்புறம் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த ஆதியின் முகத்தில் பலவித சிந்தனைகள்.



Advertisement

கையில் நோட்டுடன் அமர்ந்திருந்தவன் அதில் ஏதோ எழுதுவதும் பின் சிந்திப்பாதுமாய் இருக்க, நீண்ட நேரம் ஆகியும் அவன் அப்படியே இருக்கவே அருகே வந்தார் மீனாட்சி.

“எவ்வளவு நேரம் தான் இதை பார்த்துட்டு இருப்ப? தூங்குற எண்ணம் இல்லையா?” என்றார்.

Advertisement

Advertisement

“குழப்பமா இருக்கு மா..  தியாகு அண்ணா சொல்ற மாதிரி லோன் வாங்கலாமா வேணாமானு தான் யோசிச்சிட்டு இருக்கேன்” என்றான் ஆதி.

“வாங்கினா என்ன? நமக்கும் தான் நிறைய இடம் தேவை இருக்குல்ல? பாதி வண்டி நிறுத்த இடம் இல்லாம போயிடுது..” மீனாட்சியும் கூற,

Advertisement

“சரி தான் மா.. ஆனா லோன் வாங்கினா வட்டி கட்டணுமே” என்று ஆதி கூறவும்,

“பின்ன என்ன சும்மாவா தருவான் பேங்க்காரன்” என்று அன்னை சிரிக்க, ஆதியும் அதில் சிரித்தவன்,

“அதில்ல ம்மா.. சுமதிக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கோம்.. உடனே கூடினா அதையும் செய்யணுமே.. அதான் எவ்வளவு கையில இருக்கு.. இன்னும் கல்யாணத்துக்கு எவ்வளவு தேவை இருக்கும்னு கணக்கு பார்த்துட்டு இருந்தேன்” என்றவன்,

“என்னவோ கொஞ்ச நாளா சரியா தூக்கமே வரல ம்மா” என்றும் கூறினான்.

“கொஞ்ச நாளான்னா.. அஞ்சு வருஷமாவா?” என்று மீனாட்சி கேட்க, அமைதியாய் இருந்தான் ஆதி.

தந்தை இறந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது.. சும்மா செல்லவில்லை தந்தை.

சீட்டு, ஆண்கள் குழு என பலதும் நடத்தி வந்தவர்.. கருணை மனம் அதிகமாய் கொண்டவர்.

கேட்பவருக்கெல்லாம் பாவம் தானே என்று சீட்டு கொடுப்பதும், குழுவில் பணம் எடுத்துக் கொடுப்பதுமாய் இருந்தார்.

மீனாட்சி கூட பல முறை சொல்லிப் பார்த்தார்..

“அதெல்லாம் தந்திடுவாங்க மீனா.. வச்சிக்கிட்டா நம்மகிட்ட வந்து கேட்குறாங்க.. இல்லாதவங்க என்ன தான் பண்ணுவாங்க” என்று விடுவார்.

ஆதியும் தொழில் தொடங்கிய நேரம் அது. தந்தைக்கு தெரியாததா என பெரிதாய் அதை கண்டு கொள்ளவில்லை அவன்.

ஒரு நாள் திடீரென நெஞ்சு வலி என மருத்துவமனையில் சேர்த்திருக்க, இரண்டாம் நாளே அவர் உயிர் பிரிந்திருந்தது.

“ரொம்பவே ரேர் இந்த மாதிரி முதல் அட்டாக்லேயே மரணம் வர்றது” என்றிருந்தார் மருத்துவர்.

தந்தை இழந்த துக்கத்தையே தாங்க முடியாமல் நின்றவர்களிடம் சீட்டில் இணைந்திருந்தவர்கள் பணத்தை கேட்டு வர, அப்போது பார்த்தபோது தான் அதன் குழப்படிகள் புரிந்தது ஆதிக்கு.

கால நேரம் கூட கொடுக்கவில்லை ஆதிக்கு அந்த மனிதர்கள். மனிதர்களையும் பணத்தையும் புரிந்து கொண்ட நேரம் அது.

அப்போது தியாகு கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தவன் தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் பேசி ஆதிக்கு ஒரு வாரம் நேரம் வாங்கிக் கொடுக்க,

அந்த ஒரு வாரத்தில் அனைவரது பணத்தினையும் திருப்பிக் கொடுத்து முடித்தான்.. அதில் பாதிக்கு மேல் சொந்த காசு தான்.

“என்ன டா அப்பா கண்ணு முன்னாடி நிக்கிறாரா?” என்று மீனாட்சி சிரிப்புடன் கேட்க,

“ம்ம்..அப்பா இருந்திருந்தா இவ்வளவு சிக்கல் இல்லையோனு நினைச்சேன்” என்றான்.

“இப்ப என்ன சிக்கல் உனக்கு? சுமதிக்கு தான் ஓரளவு காசு சேர்த்துட்டியே.. நகை கொஞ்சம் வாங்கணும் அவ்வளவு தானே? பார்த்துக்கலாம்..” என்றவர்,

“லோன்க்கு ஏற்பாடு பண்ணு ஆதி.. கடை பெருசானா வருமானமும் கூடும் தானே? உன்னால முடியும் டா” என்றார்.

“எனக்குமே சரினு தான் தோணுது மா.. ஆனாலும் ஒரு யோசனை” என்று கூற,

“இல்ல சுமதிக்கு வேணா இன்னும் ஒரு வருஷம் போகட்டும்.. அப்புறமா கல்யாணத்தை..” என்று மீனாட்சி கூறவர,

“ம்மா.. கல்யாணத்தை எல்லாம் தள்ளி போட வேண்டாம்.. ஏற்கனவே தள்ளி போய்ட்டு தான் இருக்கு” என்றவன் தாயை கூர்ந்து பார்த்தபடி,

“ம்மா! உங்க நகை எல்லாம் சும்மா தானே இருக்கு? அதை ஏன் சுமதிக்கு பண்ண கூடாது” என்று கேட்க,

“இந்த கதை எல்லாம் வேண்டாம்.. அது என் மருமகளுக்கு என் அத்தை தந்தது.. அதை எல்லாம் தர முடியாது.. போய் தூங்குற வழிய பாரு டா..” என்றவர் ஓட,

“நடக்கறதை பேசுங்கமா.. இப்ப உள்ளதை பார்க்கலாம்னா..” என்று ஆதி கூற,

“ஏன் சாமியாரா போக போறியா என்ன?” என்றவர், மகன் முறைப்பதை கண்டதும் அடுத்து பேசும் முன் சென்றுவிட்டார்.

தந்தை இருக்கும் பொழுது எல்லா நகையையும் அணிந்தவர் தான்.. அதன்பின் தானும் அதை எடுத்ததில்லை மகளுக்கும் அதை கொடுத்ததில்லை.

சிலமுறை அதைப் பற்றி பேசி இருக்கிறான் ஆதி முன்பும்.. எதற்கும் அசைவதாய் இல்லை மீனாட்சி. தனக்கடுத்து இந்த வீட்டிற்கு வருபவளுக்கு என்று இருப்பதை தன் மகளுக்கே என்றாலும் அவர் அதில் கை வைப்பதாயில்லை.

அதிலும் அப்படி ஒன்றும் தன் குடும்பம் கஷ்டத்தில் இல்லை என்பதையும் உணர்ந்தே இருந்தார் மீனாட்சி.

மகனின் கவலை எல்லாம் அன்னையையும் தங்கையையும் நன்றாய் பார்த்துக் கொள்வதில் மட்டுமே இருக்க, எங்கே தன்னால் அவர்களுக்கு கஷ்டம் வந்திடுமோ என்று அவன் பார்த்து பார்த்து செய்வது புரிய தான் செய்தது அவருக்கு.

மகனை நன்கு அறிந்தவர்.. அவனால் முடிந்தால் மட்டுமே அதில் இறங்குவான்.. ஒருவேளை லோனை வாங்கிவிட்டு அடுத்து அவனால் அதை சரிவர கட்டமுடியவில்லை என்றால் யோசிக்காமல் தன்னிடம் இருப்பதை எடுத்து கொடுத்து விடுவார் மீனாட்சி..

ஒருவாறு லோனை எடுப்பது என்ற முடிவுக்கு வந்தபின் தான் உறங்கவே சென்றான் ஆதி.

அடுத்த நாள் காலை மாரி கல்லூரிக்கு சென்றிருக்க, தியாகுவிடம் தன் முடிவை கூறிவிட்டு பேங்கிற்கு சென்றிருந்தான்.

இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தையும் விசாரித்துவிட்டு அடுத்து பேசலாம் என்றிருக்க, அந்த நாட்கள் அப்படியே கழிந்தது.

கடைக்கு பின் இருந்த இடத்தின் உரிமையாளரிடம் தியாகுவுடன் சென்று பேசி முடிவு செய்துவிட்டனர். கூறியது போலவே தியாகு கூடவே தான் இருந்தான்.

அடுத்த ஒரு வாரத்திலெல்லாம் கைக்கு பணம் வந்துவிட, உடனே பத்திரப் பதிவும் செய்து முடித்து கொடுத்துவிட்டான் தியாகு.

“ண்ணோவ்! நானும் கூடிய சீக்கிரம் வீடு பார்ப்பேன்.. எனக்கும் நீ தான் எல்லாம் பார்த்து தரணும்.. பார்த்துக்கோ!” என மாரி கூற,

“வீடு பாக்குறதுக்கு எல்லாம் வக்கீல் தேவை இல்ல டா.. வாங்குறதுனா சொல்லு” என்று தியாகு கிண்டல் செய்ய,

“என்னை பத்தி இன்னும் உங்களுக்கெல்லாம் தெரியல.. ஒரு நாள்…” என்று மாரி கூற,

“அந்த நாள் வரட்டும் டா பேசிக்கலாம்” என்றுவிட்டான்.

“ஆமா! எங்க ஒரு வாரமா இந்த பக்கம் சாருவை காணும்.. திட்டிட்டியா என்ன?” என்று தியாகு ஆதியிடம் கேட்க,

“எது ஆதிண்ணா திட்டி சாருக்கா கோச்சுக்குமா? நடக்கற கதையா இது? அக்கா கம்ப்யூட்டர் கிளாஸ் கூட பாட்டு கிளாஸ்ஸும் போகுது.. அதான் முன்ன மாதிரி அக்காக்கு நேரம் இல்லையாம்.. ஆனாலும் காலைல எழுந்துக்கும் போதே கண்ணு இங்குட்டு தான் இருக்கும்.. சாயந்திரம் ஒரு நேரம் வந்து அண்ணனுக்கு சலாம் வச்சுட்டு தான் போகும்.. இல்ல ஆதிண்ணா?” என்று மாரி கூற,

“வேலையை தவிர மத்ததெல்லாம் பாக்குற நீ.. நாளைக்கு பணம் கேட்டு வீட்டுக்கு வா.. உன் ஆச்சிகிட்ட சொல்றேன்..” என்ற ஆதி,

“அவன் தான் உளர்றானா நீங்களுமாண்ணா?” என்று தியாகுவிடம் கேட்க,

“டெய்லி நடக்குறது தானே? அத்தோட சாருவைப் பார்த்தும் நாளாச்சு.. அதான் கேட்டேன்” என்று சிரித்தான் தியாகு.

“அடுத்த வாரம் நல்ல நாள் இருக்குன்னு அம்மா சொன்னாங்க.. அன்னைக்கே சின்னதா பூஜை போட்டுக்கலாம்.. அதுக்குள்ள வேலையும் முடிஞ்சிடும்” என்று ஆதி பேச்சை மாற்ற, தியாகுவும் சாருவைப் பற்றி அடுத்து எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

“சாரு! அப்பா வர்ராங்க தெரியும் தானே?” தேவி கேட்க,

“தெரியும் தெரியும்.. அதான் ஜாமுன் ஊறுதே” என்று ப்ரீத்தி கிண்டல் பேச,

“அவ்ளோ தானா அப்பாக்கு?” என்றாள் சாரு.

“அப்பா வர்ற நேரம் மத்ததெல்லாம் செஞ்சுக்கலாம் க்கா.. ஜாமுன் முன்னாடியே செஞ்சுட்டா தானே டேஸ்ட்டே” என்று ப்ரீத்தி தொடர,

“என்னவோ இதுக்கு முன்னாடி உங்களுக்கு செஞ்சு தராத மாதிரி தான்.. அப்பாக்கு ஸ்வீட்னா புடிக்கும்.. அதான் கொஞ்சமா செஞ்சேன்” என்று தேவி கூறினாலும் கணவனைக் காணப் போகும் ஆவல் அவர் முகத்தில் பளிச்சென தெரிந்தது.

“சரி மா.. வெட்கப்பட்டது போதும்.. நான் பாட்டு கிளாஸ் முடிச்சிட்டு வர்றேன்..” என்று தேவியின் கண்ணம் கிள்ளிவிட்டு வெளியே வந்த சாருவின் பார்வை எதிரே இருந்த ஆதியின் கடையில் தான் இருந்தது.

கடையின் பின்புறம் வேலை நடந்து கொண்டிருக்க, முன்னே தன் வேலையில் இருந்தான் ஆதி.

தோம் தோம் திக்திக்த்தோம்

தொலைவில் இருந்தே சந்தித்தோம்..

பாடியபடியே ஸ்கூட்டியை தள்ளிக் கொண்டு ஆதியின் கடைமுன் சாரு வர, பாடலைக் கொண்டு திரும்பாமலே கண்டு கொண்டான் அவள் வரவை ஆதி.

“என்ன மெக்கானிக் சார்.. கஸ்டமர் வந்தா கண்டுக்க மாட்டிங்களா?” சாரு கேட்க, திரும்பவே இல்லை ஆதி.

“மீனாம்மா.. மீனாம்மா” ஆதியின் வீட்டைப் பார்த்து சாரு கத்த, பதறி திரும்பி இருந்தான் ஆதி.

கொஞ்சமும் யோசிக்காமல் எதையேனும் சொல்லி வைத்து விடுவாள் என்பது அறிந்து அவன் திரும்பி இருந்தான்.

“வேலை நடக்குறது தெரியுது தானே? ஆளுங்க இருக்கும் போதும் இப்படி தான் பண்ணுவியா” வாய்க்குள்ளே பேசினாலும் அவ்வளவு காரம்.

“ஆளுங்க இருந்தா ரிப்பேர் பார்க்க மாட்டியா என்ன?” என்று கேட்க, ஆதி நம்பாமல் பார்க்க,

“பிரேக் புடிக்கல” என்றாள் அசால்ட்டாய் எங்கோ பார்த்து.

“இவனை வேற காணும்” என மாரி வருகிறானா என அவன் வீடிருக்கும் திசையைப் பார்த்துவிட்டு சாருவின் வண்டியைப் பார்த்தான்.

“நீங்க பார்த்தாலே வண்டி ஸ்டார்ட் ஆகிடுமா வாத்தியாரே” சாரு கேட்க,

“ஏய் கேடி! நேத்து தான் உன்னை கேட்டேன்.. இன்னைக்கு ஆஜர் ஆகிட்ட” என்று பக்கத்து வீட்டில் இருந்து வந்தான் தியாகு.

“ஹாய் வக்கீல் சார்.. பார்க்கவே முடியல.. அவ்ளோ பிஸியா?” என்று சாரு கேட்க, ஆதி இருவரையும் பார்த்தவன் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையில் கவனம் ஆனான்.

“அதை நான் கேட்கணும் வாலு.. ஏதோ பாட்டெல்லாம் சொல்லி கொடுக்குறியாம்? பசங்க எல்லாம் பத்திரம் தானே?” என்று கிண்டல் செய்ய,

  1. “உயிருக்கு உத்திரவாதம் தரலாம்.. மத்தபடி சின்ன சின்ன உள் காயங்களுக்கு கம்பெனி பொறுப்பேற்காது” என்றாள் தோள்களை குலுக்கி.

“அது சரி! அப்புறம் என்ன இந்த பக்கம்?” தியாகு தெரிந்தே சீண்ட,

“வேற என்ன வேலை இங்க எனக்கு? வண்டி பிரேக் புடிக்கல.. அதான் மெக்கானிக் சார்கிட்ட காட்ட வந்தேன்” என்றாள்.

“பிரேக் மட்டும் தான் புடிக்கலையா?” என்ற தியாகு வந்து வண்டியில் கைவைக்க, திருதிருவென சாரு விழிக்க, பார்த்துக் கொண்டு தான் இருந்தான் ஆதி.

அக்சிலேட்டரை முறுக்கி பிரேக்கினை தியாகு அழுத்த, அது அதன் வேலையை சரியாய் செய்ததும் அவன் சாருவை முறைக்க,

“இப்ப பிரேக் புடிக்குதே!” என்று ஆச்சர்யம் காட்டியவளை,

“வண்டி பிரேக் சரியா தான் இருக்கு.. வண்டி ஒட்ற ஆளுக்கு தான் எஞ்சின் சரி இல்ல” என்றான் அவனும்.

“எஞ்சின் மெக்கானிக்கிட்ட இருந்தா நாங்க என்ன செய்வோமாம்?” என்று சாரு முணங்க,

“ஆதி நாலு கேள்வி கேட்கலைனா அன்னைக்கு உனக்கு பொழுதே போகாது இல்ல சாரு?” என்று கிண்டல் செய்து அனுப்பி வைத்தான் தியாகு.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!