மான்விழி – 11
நேத்ரா தன் தந்தை சிவக்குமார் வருத்தமாக செல்வதை உணர்ந்தே இருந்தாள். ஆனாலும் அவளின் தற்போதைய நிலை அவருக்கு தெரியக்கூடாது. தன் வாழ்க்கைக்கு ஒரு முடிவு தெரிந்த பின்பு பொறுமையாக சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தாள். ஆனாலும் தந்தையின் சோர்வான முகம் மனதை என்னவோ செய்தது. கலங்கிய விழிகளை தன் கட்டுக்குள் கொண்டுவந்து ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு மீண்டும் மருத்துவமனையின் உள்ளே சென்றாள்.
அங்கே டாக்சியில் நேத்ராவை கவனித்துக் கொண்டிருந்தவன், அங்கிருந்த செக்யூரிட்டியிடம், “இவங்க இங்கே என்ன செய்யறாங்க?” என்றான்.
Advertisement
“ஓ அவங்களா, புதுசா நர்ஸ் வேலைக்கு வந்திருக்காங்க” என்று கேள்வி கேட்டவனுக்கு பதிலை சொல்லிவிட்டு. “ஏன் இன்னும் யுனிமார்ம் போடாமல் இருக்காங்க?” என்று தனக்குத்தானே கேள்வியையும் கேட்டுக் கொண்டான் அந்த செக்யூரிட்டி.
நேத்ரா உடை மாற்றும் அறைக்கு சென்று உடை மாற்றி வெளியே வந்ததும், ஜமுனா, வசந்தி முதல் அனைவருமே அவளை வித்தியாசமாக பார்ப்பது போல தோன்றியது. யோசனையுடன் அவளுக்கான வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.
Advertisement
Advertisement
“நயனி” என்ற சத்தமான அழைப்பில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.
சித்தார்த் தான் அவர்கள் இருந்த ஹாலுக்கு எதிரே சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்தான். இவள் நிமிர்ந்து பார்த்ததும், ஆட்காட்டி விரலை நீட்டி தன்னருகே வருமாறு சைகை செய்தான்.
Advertisement
நேத்ரா திரும்புவதற்குள் அங்கிருந்த மொத்த ஊழியர்களும் சித்தார்த்தின் அழைப்பில் திரும்பியிருந்தார்கள். ஏற்கனவே ஜமுனா கொளுத்திவிட்ட வதந்தீ பெரும்பாலும் அனைவருக்கும் பரவியிருந்ததால், அங்கிருந்தவர்கள் அனைவரும் தங்களுக்குள் அர்த்தத்துடன் பார்வையை பறிமாறிக் கொண்டனர்.
நேத்ராவுக்கு அவர்களின் செயலில் ஏதோ வித்தியாசமாக தெரிந்தது. ஆனால் அது என்ன என்று தான் அவளுக்கு புரியவில்லை. சித்தார்த் அவளை எப்போதும் நயனி என்று அழைப்பதால் அவளுக்கு வித்தியாசம் தோன்றவில்லை. எதற்காக அழைக்கிறான் என்று அவனை நோக்கி சென்றாள்.
“பாத்தியா அக்கா, நயனியாம், நமக்கெல்லாம் நேத்ரா, டாக்டருக்கு மட்டும் நயனி” என்றாள் வசந்தி ராகமாக.
“பார்த்துட்டு தானே இருக்கேன். வந்து ஒரு மாசம் கூட ஆகலை. ஆஸ்பிட்டல் முதலாளியையே கைகுள்ள போட்டுக்கிட்டாளே? இவ என்ன அவ்வளவு அழகியா? அதுதான் வசந்தி எனக்கு புரியல” என்றாள் ஜமுனா.
“அவர் என்ன கல்யாணமா பண்ணிக்க போறோரு, அழகை பத்தி கவலைப்பட, ஏதோ கிடைச்ச வரைக்கும் லாபம்னு இருக்காரு போல” என்றாள் வசந்தி.
“நீ சொல்றதும் சரிதான்., இப்போ என்ன பேசறாங்கனு தெரியலையே வசந்தி” என்றாள் ஜமுனா.
“அக்கா, நான் ஒரு யோசனை சொல்லட்டுமா? நேத்ராவுக்காக நீ ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணின தானே? அதை அவர்கிட்ட கொடுக்கற மாதிரி எடுத்திட்டுப் போ. என்ன பேசறாங்கனு தெரியும்” என்றாள் வசந்தி.
“நான் போனதும் அவங்க பேச்சை நிறுத்திடுவாங்கடி” என்றாள் ஜமுனா.
“பரவாயில்லை. உன் ரிப்பாேர்டை பார்த்திட்டு, டாக்டர் என்ன தான் முடிவெடுக்கிறார்னு பார்க்கலாம் இல்ல. நீ போ அக்கா” என்றாள் வசந்தி.
“அப்படியா சொல்றே? சரி அதையும் பார்த்திடலாம். அந்த ரிப்போர்டை எடுத்திட்டு வா” என்றாள் ஜமுனா.
அதற்குள் நேத்ரா, சித்தார்த்தை நெருங்கி இருந்தாள். கேள்வியாக நிமிர்ந்து என்ன? என்று பார்வையாலே கேட்டவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தான்.
“மாமா கிளம்பிட்டாரா?” என்றான்.
“ம்ம்” என்றாள் ஒற்றை வார்த்தையாக.
“நான் தான் அவரை இரண்டு நாள் இருந்துட்டு போக சொல்லி கூப்பிடுனு சொன்னேன் தானே. நீ அமைதியாகவே இருக்கே? அவர் என்ன நினைப்பாரு? பாவம் மாமா முகமே சரியில்லை” என்றான் அவளை கண்டிக்கும் குரலில்.
“அவரை கூப்பிட்டு எங்கே தங்க வைக்கிறது? எங்க விடுதியில் பெண்களுக்கு மட்டும் தான் அனுமதி” என்றாள் மெல்லிய குரலில்.
“அவர் ஏன் விடுதியில் தங்கணும்? நம்ம வீடு கடல் மாதிரி இருக்கும் போது” என்றான்.
“நம்ம வீடா?” மீண்டும் நிமிர்ந்து விழி அகல பார்த்தாள்
“என்ன பார்க்கிற? வீட்டுக்கு வர்றதா ஐடியாவே இல்லையா உனக்கு?” என்றான் அழுத்தமாக அவளைப் பார்த்து.
இதற்கு என்ன பதில் சொல்வது? என்று கண்களை உருட்டி திருதிருவென விழித்தாள்.
“ரொம்ப உருட்டாத, கண்ணு வெளியே வந்து விழுந்துட போகுது” என்றான் சீரியசான குரலில்.
அதற்கும் அவள் திகைத்து போய் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஜமுனா அவர்கள் அருகே வந்தாள்.
ஜமுனாவை பார்த்து புருவம் சுருக்கியவன், “என்ன சிஸ்டர்?” என்றான்.
“சார் நேத்ராவோட பெர்பாமன்ஸ் ரிப்போர்ட் சார்” என்றாள் ஜமுனா பவ்யமான குரலில்.
அதை யோசனையோடு கையில் வாங்கியவன், “நயனி, எல்லாம் கத்துக்கிட்டியா?” என்றான்.
“ஓரளவுக்கு அடிப்படை தெரிஞ்சு வச்சிருக்கேன்” என்றாள் மெல்லிய குரலில்.
“நான் நேரடியாக இவங்க பெர்பாமன்ஸை செக் பண்ணிக்கிறேன், இந்த ரிப்போர்ட் வேணாம். எப்படியும் நீங்க நயனிக்கு சாதகமாக தானே எழுதியிருப்பீங்க?” என்றான் சித்தார்த் புன்னகையுடன்.
“தன்னை எவ்வளவு தவறாக புரிந்து வைத்திருக்கிறார் இந்த டாக்டர்” என்று மனதிற்குள் நினைத்தவள், “ஆ…ஆமா டாக்டர், கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க” என்றாள் ஜமுனா தடுமாற்றத்தோடு.
“சரி வாங்க, நாம ரெண்டு பேரும், இவங்க பிராக்டிகல் வொர்க்கை டெஸ்ட் பண்ணிடுவோம்” என்றான் சித்தார்த்.
இப்படியாவது ஒரு வழி கிடைத்ததே! எப்படியும் நேத்ரா எதாவது தவறு செய்து அவனிடம் மாட்டிக் கொள்ள மாட்டாளா? என்ற நப்பாசையுடன் ஜமுனா சித்தார்த்தின் பின்னால் நடந்தாள்.
“ஓகே, மிஸ்.நயனி. வாங்க என்னோட” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான் சித்தார்த்.
வெளிநோயாளிகள் காத்திருந்த பகுதிக்கு சென்று ஒவ்வொரு நோயாளியாக பரிசோதித்து, அவளிடம் மாத்திரை, ஊசிக்கான குறிப்புகளை அவன் சொல்ல சொல்ல அவள் அனைத்தையும் வேகமாக செய்து கொடுத்தாள். நோயாளிகளுக்கு ஊசியையும் போட்டு, மருந்து உண்ண வேண்டிய கால நேரத்தையும் பக்குவமாக சொல்லிக் கொடுத்தாள்.
அடுத்து உள் நோயாளிகள் இருந்த பகுதிக்கு சித்தார்த் போக வேண்டிய நேரம் என்பதால் அவளையும் அழைத்துக் கொண்டு சென்றான். அங்கே இருக்கும் நர்ஸ்களுக்கு முன்னால் சென்று நேத்ரா அவர்களின் இரத்த கொதிப்பை பரிசோதித்து, அவர்களின் தற்போதைய உடல் உபாதைகளை கேட்டறிந்தாள். சித்தார்த் அவர்களின் ரிப்போர்டை பார்த்து முடிக்கும் முன்பே, தன் பரிசோதனை விவரங்களை அவனுக்கு விளக்கினாள்.
சித்தார்த் மெச்சுதலோடு நயனியை பார்த்தான். எப்படியும் கொஞ்சமாவது கத்துக்கொண்டிருப்பாள் என்று அவனுக்கும் நம்பிக்கை இருந்தது தான். ஆனால் பலவருட அனுபவம் இருப்பவள் போல, அனைத்தையும் அவள் சீக்கிரமாக செய்து முடிக்கும் பாங்கும், நோயாளிகளிடம் பேசும் போது காட்டும் அன்பும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு மாதத்திற்குள் இவ்வளவு கற்றிருக்கிறாள் என்றால் என் மனைவி புத்திசாலிதான் போல என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவனின் இதழ்கள் தானாக புன்னகையில் விரிந்தது.
பின்னால் நின்றிருந்த ஜமுனாவின் முகத்தில் ஈயாடவில்லை. இவள் எப்போது இதையெல்லாம் கத்துக்கிட்டாள்? சும்மா தானே நிக்க வைச்சிருந்தோம் என்று திகைப்புடன் நேத்ராவையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஜமுனா.
சித்தார்த் ஜமுனாவை நோக்கி கை நீட்டினான். எதற்கு என்று புரியாமல் பார்த்த ஜமுனாவின் கைகளை தானாகவே பற்றி கை குலுக்கினான். “நல்லா டிரைனிங் கொடுத்திருக்கீங்க சிஸ்டர், வெரிகுட், சீனியரா இருந்துக்கிட்டு, புதுசா வந்தவங்களுக்கு உங்களுக்கு இணையா தயார் பண்ணி வச்சிருக்கீங்க. நீங்க ரியலி சூப்பர். இனி புதுசா வர்ற நர்ஸ் எல்லாருக்கும் நீங்க தான் டிரைனர்” என்றான்.
“ஹிஹி, தேங்க்ஸ் சார்” என்று சிரித்தாள் ஜமுனா, திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் இருப்பவளை கண்டு நேத்ராவுக்குமே சிரிப்பு வந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
“நயனி, நீங்க டாக்டர் கிருஷ்ணனுக்கு அசிஸ்ட் பண்ணுங்க. அவருக்கு ஒரு நர்ஸ் தனியா வேணும்னு கேட்டிருந்தாரு. அவர் வெளி நோயாளிகளை பார்க்கும் போது அங்கே இருங்க. உள் நோயாளிகளை பார்க்கும் போது இங்கே வந்துடுங்க, ஓகே தானே?” என்றான் சித்தார்த்.
நேத்ராவும் சம்மதமாக தலையசைத்தாள், அதற்குள் சித்தார்த்திற்கு வேறு அழைப்பு வரவும், “எக்ஸ்க்யூஸ்மீ” என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.
தன்னுடன் நடந்து வந்துக் கொண்டிருந்த நேத்ராவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை பார்த்து வயிற்றெரிச்சலாக இருந்தது ஜமுனாவிற்கு. இவள் முகத்தில் கவலையை பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்றியது.
“ஆமா நேத்ரா, காலையில் வந்ததும் டியூட்டி பார்க்காமல் எங்கே போனே?” என்றாள் ஜமுனா எதுவும் தெரியாததுபோல.
நேத்ரா பதில் சொல்வதற்குள், “உன்னை டாக்டர் சித்தார்த் அறையில் பார்த்ததா யாரோ வந்து சொன்னாங்க. என்ன பண்ணிட்டு இருந்தீங்க இரண்டு பேரும் ரூமுக்குள்ள? டாக்டர் யாரையும் அறைக்குள்ள விடக்கூடாதுனு சொல்லிடாராமே?” என்றாள் ஜமுனா வக்கிரமான குரலில்.
“இல்ல அது வந்து” என்று நேத்ரா சொல்வதற்குள், இடைப்புகுந்தாள் ஜமுனா.
“இங்கே பாரு நேத்ரா. உனக்கும் பணத்தேவை இருக்கும். டாக்டருக்கும் சின்ன வயசு, தன்னோட இளமைக்கு உன்னை பயன்படுத்திக்க நினைக்கலாம். அதுக்காக எல்லாம் மருத்துவமனைக்குள்ளே வச்சுக்கிட்டா எப்படி? வெளியே வச்சுக்கலாம் இல்ல?” என்றாள் ஜமுனா
“அடச்சே நிறுத்துங்க, நரம்பில்லாத நாக்குனு என்ன வேணாலும் பேசிடுவீங்களா?” என்றாள் நேத்ரா கோபமாக.
“அட! என்மேலே எதுக்குமா கோபப்படுறே? நீ இன்னைக்கு சீக்கிரமா வந்து டாக்டர் ரூமுக்குள்ளே இருந்ததை நிறையே பேர் பார்த்திருக்காங்க. அவங்க பேசினதை தான் நான் உனக்கு சொன்னேன். இதில் என்னோட கருத்து எதுவுமே இல்லை.
அது மட்டுமில்ல, ஒரு வேளை இந்த பொண்ணு பாவம் டாக்டரை காதலிக்குது போல. ஆனால் அவருக்கு இருக்கிற அழகுக்கும் அந்தஸ்த்துக்கும், படிப்புக்கும் இந்த பொண்ணு எப்படி சரியா வருவாள்?
அவர் சும்மா இவளை யூஸ் பண்ணிட்டு விட்டுட போறோர்னு பேசிக்கிட்டாங்க” என்றாள் ஜமுனா நேத்ராவின் முகத்தை பார்த்துக் கொண்டே.
அவள் எதிர்ப்பார்த்தது போல நேத்ராவின் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது. ஆனால் ஜமுனா சொன்ன விஷயத்தை ஆராயாமல் அதையெல்லாம் பின்னுக்கு தள்ளி சுயபச்சாதாபத்தில் மூழ்கினாள். எங்கு போனாலும் நான் சித்தார்த்துக்கு பொருத்தமில்லை என்ற பேச்சு தான் என் வாழ்நாள் முழுவதும் என்னை தொடருமா? உண்மையில் நான் அவனுக்கு பொருந்தவே மாட்டேனா?
இன்று சிவக்குமார் வந்ததால் தான் தன்னிடம் அவன் புதிதாக நெருக்கத்தை காட்டினானா? இல்லையென்றால் மனைவி தானே என்ற உரிமை உணர்வில் அப்படி நடந்துக் கொள்கிறானா?
சித்தார்த் தான் முதல் நாள் இரவன்று அவள் தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லாதவள் என்று சொல்லிவிட்டானே. ஏதோ கட்டாயத்திற்காக என்றால் அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாம். அதைவிட அவன் அவனுக்கேற்ற பெண்ணை மறுமணம் செய்து கொள்வதே மேல். என்னை, என் நிறத்தை, முக்கியமாக என் கண்ணாடியை அவனுக்கு பிடித்திருந்தால் மட்டுமே நான் அவனுக்கு மனைவியாக வாழ்வதை பற்றி யோசிக்க முடியும். ஆனால் இதெல்லாம் சாத்தியமில்லை என்பது அவளுக்கே நன்றாக தெரியுமே என்று தனக்குள் யோசித்தபடி ஜமுனாவுடன் சென்றாள் நேத்ரா.
அன்று தன்னுடைய வேலையை எல்லாம் முடித்துவிட்டு டாக்டர் கிருஷ்ணனிடம் சென்று தன்னை அறிமுகம் செய்துக் கொண்டாள்.
ஐம்பதை தாண்டியிருந்த அந்த டாக்டர் பெயருக்கேற்றோர் போல கிருஷ்ணனாகவே இருந்தார். எந்த வயது பெண்ணாக இருந்தாலும் சரி, அவரை பொறுத்தவரை எல்லாமே ஒன்று தான். பெண் என்று எழுதி வைத்தாலே வெறித்து பார்த்து விட்டு செல்லும் ரகம். அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் சித்தார்த் வயதில் பெரியவர் என்பதால் நேத்ராவை அவரிடம் அனுப்பி இருந்தான்.
“நேத்ரா, நல்ல பெயர், எனக்கு நல்லா ஒத்துழைக்கணும் சரியா?” என்று இரட்டை அர்த்தத்தில் பேசினார் அந்த டாக்டர்.
நேத்ரா யோசனையோடு பார்க்கவும், “நான் எந்த வேலை கொடுத்தாலும் சரியா செய்யணும், அதை சொன்னேன்” என்றார் அவர்.
“சரிங்க டாக்டர், நாளையிலிருந்து உங்க அறையில் வேலை பார்க்கிறேன், இப்போ நேரமாச்சு கிளம்பட்டுமா டாக்டர்?” என்று கேட்டாள் நேத்ரா.
நேத்ரா சென்றதும், “என்ன ஜமுனா, இந்த பொண்ணு எப்படி? நல்லா ஒத்துழைப்பாளா?” என்றார் கிருஷ்ணன்.
“நீங்க கேக்கிற தொணியே சரியில்லையே டாக்டர்” என்றாள் ஜமுனா கிண்டலாக அவரை பார்த்து.
“அது அது வந்து, நீ எதுவும் தப்பா நினைக்காதே ஜமுனா. அந்த பொண்ணு புதுசு ஆச்சே., வேலை எல்லாம் கத்துக்கிட்டாளானு கேட்டேன்” என்றார் கிருஷ்ணன் மழுப்பலாக சிரித்துக் கொண்டே.
“அது சரி உங்கள பத்தி எனக்கு தெரியாதா? ஆனா உங்களுக்கேத்த ஜோடி தான் வந்து மாட்டியிருக்கு, என்ஜாய்” என்றாள் ஜமுனா பெருமூச்சுடன்.
“என்ன? என்ன சொல்றே ஜமுனா? எனக்கேதும் புரியலையே?” என்றார் கிருஷ்ணன் ஆர்வமாக.
ஜமுனா காலையில் நேத்ரா டாக்டர் சித்தார்த் அறையில் இருந்ததாக தொடங்கி, அவனாக ஹாலில் அவளை அழைத்து தனியாக பேசியதுவரை தனக்கு தெரிந்த அர்த்தத்தில் கூற தொடங்கினாள்.
கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணனுக்கு பேரானந்தமாக இருந்தது. அதை ஜமுனா எதிரில் காட்டிக் கொள்ளாமல், “சரி சரி மத்தவங்க கதை நமக்கெதுக்கு. நீங்க போய் உங்க வேலையை கவனிங்க” என்றார் அதட்டலாக.
“எல்லா விஷயத்தையும் கேட்டுட்டு, என்னையே அதட்டறத பாரு” என்று முனகிக் கொண்டே அங்கிருந்து அகன்றாள் ஜமுனா.
மறுநாள் நேத்ராவுடன் சேர்ந்து பணிபுரியும் நாளை எண்ணி அப்போதே கனவு காண ஆரம்பித்து விட்டார் டாக்டர் கிருஷ்ணன்.
நேத்ரா எப்போதும் போல் மருத்துவமனை கேட்டை கடந்து அரசு பேருந்து நிலையத்தை நோக்கி போகும் போது, அவளை காலையில் பார்த்த அதே டாக்சி டிரைவர் அவளை பின் தொடர்ந்து சென்றான்.
அவள் பேருந்தில் ஏறிய பின்னும் அந்த கார் அவளை பின் தொடர்ந்து சென்றது. கடைசியாக அவள் பெண்கள் விடுதிக்குள் நுழைவதை பார்த்து தாடியை தடவியபடி யோசித்தான் அந்த டிரைவர்.
தன் போனை எடுத்து யாருக்கோ அழைத்தான், “ராணி அக்கா, நான் தான் பாண்டியன் பேசறேன்” என்றான்.
“எந்த பாண்டியன்? மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனா? விளக்கமா சொல்லு, வேலை கிடக்கு” என்று அலுத்துக் கொண்டாள் ராணி.
“அதான் நேத்ரா புள்ளைக்கு கல்யாணம் பேசி முடிச்சேனே அந்த பாண்டி பேசறேன் அக்கா” என்றான் அவன் அலுப்புடன்.
“என்ன பாண்டி? எனக்கு போன் போட்டிருக்க? என்ன விஷயம்?” என்றாள் ராணி அந்த பக்கத்தில்.
“நீ தானே என் கல்யாணத்தில் நேத்ராவுக்கு மேக்கப் போட்டது? அது தான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு போன் போட்டேன்” என்றான் டாக்சி டிரைவர் பாண்டி.
“மேக்கப் போட்டது நான் தான், ஆனா அதை உன் கல்யாணம்னு சொல்லாதே. வயிறு முட்ட குடிச்சுட்டு காலம்பற எழ முடியாம விழுந்து கிடந்தவன் தானே நீனு” என்றாள் ராணி லேசான கோபத்துடன்.
“என்னக்கா பண்றது? எல்லாம் தலையெழுத்து. ஏதோ மட்ட சரக்கை ஊத்தி கொடுத்திட்டு இருக்கானுங்க. தூங்கி எழுந்து பார்த்தால் என்னை அம்போனு மண்டபத்திலேயே விட்டுட்டு போயிட்டு இருக்காணுங்க. நேத்ராவுக்கு வேறே ஒருத்தன் கூட கல்யாணம் ஆயிடுச்சுனு சொல்லவும், எனக்கு ரொம்ப அவமானமா போயிடுச்சு. அதுக்கு தான் யாருக்கும் சொல்லாமல் அப்பவே சென்னைக்கு கிளம்பிட்டேன்” என்றான் பாண்டி.
“அதுசரி, இப்போ என்னா விஷயம்?” என்றாள் ராணி.
“நேத்ராவை யாரு கல்யாணம் கட்டிக்கிட்டாங்க, உனக்கேதும் தெரியுமா?” என்றான் பாண்டி.
“உனக்கெதுக்கு அது” என்றாள் ராணி சந்தேகமான குரலில்.
“இல்லக்கா, ஏதோ அவசரத்துல காலி பயலுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களோனு தோணுச்சு. அவ நல்லா இருக்காளானு தெரிஞ்சுகிட்டால் மனசு நிம்மதியாக இருக்கும்” என்றான் பாண்டி தன் மன ஓட்டத்தை மறைத்தபடி.
“நீ வேணா காலி பயலா இருப்பே. நல்ல வேளை நேத்ரா பொண்ணு தப்பிச்சுக்கிட்டா. நீ குடிச்சிட்டு மட்டையானதும் ஒருவகையில நல்லது தான். அதனால் தான் பெரிய படிச்ச டாக்டர் மாப்பிள்ளை அவளுக்கு கிடைச்சிருக்காரு. நீ சென்னையில தானே இருக்கே, நலமுடன் மருத்துவமனை உனக்கு தெரிஞ்சு இருக்குமே” என்றாள் ராணி.
“ஆமா தெரியும்! அங்கே டாக்டரா இருக்காரா?” என்று வாயை பிளந்தான் பாண்டி.
“டாக்டரா மட்டும் இல்ல பாண்டி, அந்த ஆஸ்பத்திரிக்கே அவரு தான் முதலாளி. நம்ம சிவக்குமார் ஐயாவோட நண்பர் மகேந்திரன் சாரோட மகன் தான் சித்தார்த் அபிமன்யூ. அவரை தான் நேத்ரா கல்யாணம் பண்ணியிருக்காள். நீ அவளை பத்தி எதுவும் கவலைப்படாதே, அவ ராணி மாதிரி இருக்காள். நீ உனக்கேத்தவளா பார்த்து கல்யாணம் கட்டிக்கோ” என்றாள் ராணி.
“அப்படின்னா சரிக்கா, ரொம்ப நல்லது” என்று சொல்லி போனை வைத்த பாண்டி யோசனையில் ஆழ்ந்தான்.
அவனுக்கு நேத்ராவின் மேல் பெரிதாக காதல் எல்லாம் இல்லை. ஏதோ அவனுக்கேற்ற பெண்ணாக இருப்பாள் என்று அவள் பின்னால் சுற்றினான். அதுக்கு அவள் என்னவோ தன்னை பெரிய அழகினு நினைச்சுட்டு அவனை விரட்டிட்டே இருந்தாள். இப்படி விரட்டறவளையே கல்யாணம் முடிச்சு, அவளை தனக்கு அடிமையாக வச்சிக்கணும்னு நினைத்தே சிவக்குமாரை மூளைச்சலவை செய்து இந்த கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான்.
அதுமட்டுமில்லாமல் சிவக்குமார் அவளுக்கு நர்ஸ் வேலை வாங்கி தருவதாக கூறியிருந்தார். நகையாக எதையும் கொண்டு வரவில்லை என்றாலும் சம்பாதித்து மாதாமாதம் பணம் கொண்டு வருவாளே என்று கல்யாணத்திற்கு எந்த நகையும் வேண்டாம் என்று பெருந்தன்மையாக கூறிவிட்டிருந்தான்.
காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டு போன மாதிரி, எவனோ சித்தார்த்னு ஒருத்தன் ரெடிமேட் மாப்பிள்ளையா மாறி தன் கிளியை கொத்திட்டு போயிட்டானே என்று பாண்டி மனதிற்குள் புலம்பாத நாளில்லை.
காலை சிவக்குமாருடன் நேத்ராவை பார்க்கும் போது, அவளை எப்படியெல்லாம் மனதிற்குள் கற்பனை செய்து வைத்திருந்தேன். இப்படி தவறவிட்டு விட்டேனே என்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்போது ராணியிடம் பேசியபின்பே அவனுக்கு ஏதோ புரிவது போல இருந்தது. இவ்வளவு பெரிய மருத்துவமனையின் முதலாளியை கல்யாணம் கட்டிக்கிட்டவ, எதுக்கு அங்கே நர்ஸ் வேலை பார்க்கணும்? எதுக்கு விடுதியில தங்கி இருக்கணும்? இதுல ஏதோ இருக்கு! எப்படியும் எங்கே தங்கி இருக்கா, எங்கே வேலை செய்யறாள்னு தெரிஞ்சு போச்சு. இனி நேத்ராவை பின் தொடர்ந்து தவறவிட்டவளை மீண்டும் என்னுடையவளாக்கி கொள்ள வாய்ப்பு இருக்கா என்று முயற்சி செய்து பார்க்கணும்” என்று தனக்கு தானே பேசிக் கொண்டு காரை கிளப்பினான்.
நேத்ரா அன்று சித்தார்த் அவளின் வேலை திறமையை மெச்சுதலாக பார்த்ததை எண்ணி சந்தோஷத்துடன் தன் அறைக்கு வந்தவள் சுதாவை கட்டிக் கொண்டாள், “சுதா உன்னோட உதவியால தான் எனக்கு வேலை கன்பாரம் ஆகியிருக்கு, ரொம்ப நன்றி சுதா” என்றாள்.
“நன்றியெல்லாம் வேண்டாம், நாளைக்கு தானே உனக்கு சம்பளம்,. எனக்கு ட்ரீட் கொடு” என்றாள் சுதா சிரித்துக் கொண்டே.
“அதுக்கென்ன கொடுத்திட்டா போச்சு” என்று தோழியை மீண்டும் அணைத்துக் கொண்டவள், அன்று அவள் செய்த வேலைகளை பற்றி விவரித்தாள். “நியாயமா பார்த்தால் உனக்கு கிடைக்க வேண்டிய பாராட்டை டாக்டர் சித்தார்த் அந்த ஜமுனா சிஸ்டருக்கு சொன்னார். ஆனால் அந்த சிஸ்டருக்கு தான் அதை ஏத்துக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தவிச்சுட்டு இருந்தாங்க. அப்போ பார்க்கணுமே நீ அவங்களை, முகம் அஷ்ட கோணலாயிடுச்சு” என்று கலகலவென்று சிரித்தாள் நேத்ரா.
சிரிக்கும் தன் தோழியை ஆவென்று பார்த்தாள் சுதா. “என்ன சுதா அப்படி பார்க்கிறே?” என்றாள் நேத்ரா.
“நேத்ரா, நீ சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா? இந்த ஒரு மாசத்துல நீ சிரிச்சு நான் பார்த்ததே இல்லை. இப்போ தான் பார்க்கிறேன். தயவு செய்து இப்படியே சிரிச்சுட்டு இரு நேத்ரா, அழகா இருக்கே” என்றாள் சுதா மனதை மறைக்காமல்.
“ஏய் சுதா, கலாய்க்காதே, என்னை போய் அழகா இருக்கேனு சொல்றே? என்னை பார்த்தியா மாநிறம், ஒல்லிக்குச்சி உடம்பு. இதுல மூக்கு கண்ணாடி வேறே” என்றாள் நேத்ரா.
“நான் உன்னை கிண்டல் செய்ய சொல்லலை, உண்மையாகவே அழகா இருக்கே நேத்ரா. உன் கண்ணாடி மட்டும் தான் பழைய மாடல். நாளைக்கு சம்பளம் வாங்கி என்கிட்ட கொடு, நான் உன் முகத்துக்கு தகுந்த மாதிரி கண்ணாடி தேர்வு செய்து கொடுக்கிறேன், அதை போட்டுக்க. உன் கண்கள் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? உனக்கு சரியா தான் உங்கம்மா பேர் வச்சிருக்காங்க, நேத்ரநயனினு” என்றாள் சுதா.
“ஏய் சுதா, என்னாச்சு இன்னைக்கு உனக்கு? கொஞ்சம் ஓவராத் தான் போறே. என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே?” என்றாள் நேத்ரா வடிவேலு மாடுலேஷனில்.
இருபெண்களும் சிரித்துக் கொண்டு கதைகள் பேசியபடி அப்படியே உறங்கி விட்டனர்.
ஆனால் அதே நேரத்தில் உறக்கம் இன்றி தவித்தான் சித்தார்த் அபிமன்யூ.
கண்களை மூடினாலே காலையில் நேத்ரா அவன் கைவளைவிற்குள் நடுங்கியபடி நின்றிருந்த தோற்றம் தான் அவன் நினைவில் வந்தது.
நயனியின் அகன்ற விழிகளின் பயந்த பார்வை சித்தார்த் அபிமன்யூவை உறங்க விடாமல் மிரட்டிக் கொண்டிருந்தது.
(தொடரும்)
