Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நின்னோடு தமியனாய்

நின்னோடு தமியனாய் 7 1

அத்தியாயம் 7

காமாட்சியின் கார் அவர்களைத் தாண்டிச் சென்றுவிட்டது.ரியர் வியூ கண்ணாடி வழியாக மீண்டும் ஒருமுறை பார்த்தாள்.

பூபதி இன்னும் அதே இடத்தில் நின்றபடியே இருந்தான்.அனுபவம் நிறைந்த அவருடைய மனம், அந்தக் காட்சியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.

“இது தற்செயலான சந்திப்பா… இல்லையா…”என்ற சந்தேகம் மனதிற்குள் விதையாக விழுந்தது.



Advertisement

காமாட்சியின் கார் நேராக பூபதியின் வீட்டிற்குள் நுழைந்தது.

ஹாலில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த விசாலாட்சி,தங்கைக்கும் தேநீர் கொடுத்தார்.

காமாட்சி முகத்தில் இருந்த பூபதியை பற்றிய சிந்தனை மட்டும் மாறவே இல்லை. ஒரு மிடறு தேநீரைக் குடித்துவிட்டு, சில நொடிகள் அமைதியாக இருந்தார்.

Advertisement

பிறகு…விசாலாட்சியை நேராகப் பார்த்து,”அக்கா… நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…”
என்றாள்.

Advertisement

அந்த ஒரு வாக்கியத்திலேயே…
வீட்டின் அமைதி மெல்ல கலையத் தொடங்கியது.

காமாட்சியின் குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்த விசாலாட்சி, கையில் இருந்த டீ கப்பை மேசையின் மீது வைத்தாள்.

“என்னடி… ஏதாவது பிரச்சனையா?”

Advertisement

காமாட்சி சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தாள். பின் “பூபதி வீட்டுல இல்லையே?”என்று உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் கேட்டாள்.

“இல்லடி… இன்னும் ஃபேக்டரிலிருந்து வரல.”

மாமா?

“மாமாவும்?எஸ்டேட்டுக்கு போயிருக்காரு.”

“நல்லது…”என்று மெதுவாக சொல்லிவிட்டு, சோபாவில் சற்றே முன்னோக்கி அமர்ந்தார்.

“நான் சொல்றதை தப்பா எடுத்துக்காதக்கா.”

விசாலாட்சியின் புருவங்கள் சுருங்கின.

“என்ன விஷயம்னு சொல்லுடி.”

“ஷாப்பிங் முடிச்சிட்டு ஏரிக்கரை பக்கமா கார்ல வந்துட்டு இருந்தேன்.”

“ம்…”

“அப்போ… நம்ம பூபதிய பார்த்தேன்.”

விசாலாட்சி இயல்பாக சிரித்தாள்.

“அதுல என்னடி இருக்கு? அவன் அடிக்கடி அங்க போவானே.”

“நானும் அப்படித்தான் முதல்ல நினைச்சேன்.பின் சிறிது இடைவெளி விட்டு, ஆனா… என இழுக்க…

” ஆனா ! என்னடி?”

“ஆனா அவன் தனியா இல்லக்கா.”

விசாலாட்சியின் முகத்தில் இருந்த புன்னகை மெதுவாக மறைந்தது.

“அப்படின்னா?”

“ஒரு பொண்ணு கூட இருந்தான்.”

விசாலாட்சி உடனே சிரித்தாள்.
இதுக்கா இவ்வளவு சீரியஸா முகத்தை வெச்சுட்டு சொல்றே… நம்ம எஸ்டேட், ஃபேக்டரி, பிசினஸ் சம்பந்தமா யார்கிட்டையாது பேசிட்டு இருந்து இருப்பான்.இப்போ எல்லா பிசினஸ் மீட்டிங் ஏசி ரூம்ல நடக்கறது இல்ல… இப்படி ஓபன் ப்ளேஸ்ல கூட நடக்குது. நானே இது போல நிறைய மீட்டிங் அட்டன் பண்ணிருக்கனே…

காமாட்சி தலையசைத்தவாறே….நானும் அப்படிதான் நினைச்சேன்.

அப்புறம் என்னடி?

நானும் அப்படிதான் நினைச்சேன்… அந்தப் பொண்ணை ஆட்டோவுல பார்க்கிற வரைக்கும்.ஆட்டோ கண்ணுல இருந்து  மறையற வரைக்கும்… அவளைப் பார்த்துட்டே நின்னுட்டு இருந்த நம்ம  பூபதியே பார்க்கிற வரைக்கும்.

அந்த வார்த்தைகள் விசாலாட்சியை அமைதியாக்கின.ஒரு தாயாக…
மகனின் மனதில் ஏதோ இருக்கிறது என்பதை யோசிக்க ஆரம்பித்தார்.

அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சுதா?என்று மெதுவாகக் கேட்டாள்.

காமாட்சி ஒரு நொடி அவளைப் பார்த்தார்.

தெரியும்.

யாரு?

உன் மகளோட தோழி…” பிருந்தா” என்றாள் காமாட்சி.

விசாலாட்சியின் இதயம் ஒரு நிமிடம் துடிப்பை நிறுத்தி பின் துடிக்க ஆரம்பித்தது. அந்த பெயரைக் கேட்டதும், அவள் சில நொடிகள் பேசாமல் அமர்ந்திருந்தாள்.தன் மகன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான் என்ற எண்ணம் இருந்தாலும்… மனதில் கடந்த சில மாதங்களாக நடந்த சிறு சிறு சம்பவங்கள் ஒவ்வொன்றாக வந்து சென்றன.

பிருந்தா வீட்டிற்கு வந்தபோது பூபதி அமைதியாக எழுந்து சென்றது…

பிருந்தா வந்திருப்பதை தெரிந்தும் ஹாலுக்கு வராமல் தவிர்த்தது…

எல்லாமே ஒன்றோடொன்று இணைந்து விடை சொல்ல ஆரம்பித்தது.

காமாட்சி மெதுவாக அவள் கையைப் பிடித்து,”அக்கா… நான் எதையும் உறுதியா சொல்லல. ஆனா…ஒரு அம்மாவா…நீ உன் மகன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கறது நல்லது.” என்றாள்.

விசாலாட்சி ஆழமாக மூச்சை இழுத்து விட்டு, “இன்னைக்கு அவன் வீட்டுக்கு வரட்டும்…நான் அவன்கிட்டயே நேரா கேட்டுத் தெரிஞ்சுக்கறேன், என்றாள்

அதே நேரத்தில்…வீட்டின் வாசலில் கார் வந்து நின்ற சத்தம் கேட்டது.

“அம்மா…”என்ற பூபதியின் குரல் ஹாலுக்குள் ஒலித்தது.

விசாலாட்சியும் காமாட்சியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சோபாவில் அருகருகே அமர்ந்திருந்த விசாலாட்சியையும், காமாட்சியையும் பார்த்ததும் அவன் முகத்தில் இயல்பான புன்னகை மலர்ந்தது.

“அட… சித்தி! ஷாப்பிங் முடிச்சிட்டு எப்ப வந்தீங்க?”

“இப்போதான்.” என்றார் காமாட்சி.

“சரி… நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்.”என்று மேலே செல்ல முயன்றவனை,

“பூபதி…”என்ற விசாலாட்சியின் குரல் தடுத்து நிறுத்தியது.

அவன் திரும்பிப் பார்த்தான்.

“உட்காரு… உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.”

அந்தக் குரலில் இருந்த அழுத்தம், இது சாதாரண உரையாடல் இல்லை என்பதை அவனுக்குப் புரிய வைத்தது.

அமைதியாக வந்து எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான்.

“சொல்லும்மா…”

விசாலாட்சி சில நொடிகள் அவன் முகத்தையே பார்த்தாள்.பிறகு “இன்னைக்கு சாயங்காலம் ஏரிக்கரை பக்கம் போயிருந்தியா?”என நேராகக் கேட்டாள்.

பூபதி ஒரு நொடி கூட தயங்காது “ஆமாம்”என்றான்.

அவனுடைய பதிலில் எந்தப் பதற்றமும் இல்லை.

விசாலாட்சி அடுத்த கேள்வியைக் கேட்டாள்.”தனியா போனியா?”

சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
பொய் சொல்ல நினைத்து இருந்தால் கூட  இந்த நொடியிலேயே சொல்லியிருக்கலாம்.ஆனால்…அது அவன் குணம் இல்லையே.மெதுவாக “இல்ல” என தலையசைத்தான்.

காமாட்சி அமைதியாக இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

“யாரு கூட போயிருந்த?”

இந்த முறை…பூபதி பதில் சொல்லாமல் கீழே பார்த்தான்.அந்த அமைதியே… ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமமாக இருந்தது.

விசாலாட்சியின் குரல் மென்மையானது.

“பூபதி…நான் உன்னை குற்றவாளி மாறி விசாரிக்க விரும்பல.உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான் கேக்கறேன்.”

அவன் மெதுவாக நிமிர்ந்து அம்மாவைப் பார்த்து”அம்மா…நான் யாரையும் ஏமாத்தல.உங்களுக்குத் தெரியாம எந்தத் தப்பும் பண்ணல.”

“ஆனா…”என்று சொல்லிவிட்டு வார்த்தைகளைத் தேடினான்.பின் “எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.” என்றான்

அவன் கூறியதை கேட்ட விசாலாட்சி புருவத்தைச் சுருக்கினாள்.

எதுக்கு டைம்?

பூபதி ஆழமாக மூச்சை இழுத்தான்.

“ஒரு உறவை… இந்த வீட்டுக்குள்ள கொண்டு வந்து என்னோட வாழ்க்கை முழுக்க கொண்டு போகணும்னா… அதுக்கு காதல் மட்டும் இருந்தா போதாது.ரெண்டு குடும்பத்துக்கும் நடுவுல மரியாதை இருக்கணும். நம்பிக்கை இருக்கணும். சம்மதம் இருக்கணும்.இதெல்லாம் இல்லாம எந்த முடிவும் எடுக்க நான் தயாரா இல்ல.அதுனால இதெல்லா சொல்றதுக்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.”

காமாட்சி அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

அவன் ஒரு நொடி அமைதியாக இருந்துவிட்டு,அம்மா…நீ கேட்ட  கேள்விக்கு… நான் பொய் சொல்ல மாட்டேன்.ஆமாம்…என் மனசுல… ஒரு பொண்ணு இருக்கா.”என்றான்.

பதில் முதலிலே தெரிந்து இருந்தாலும்… விசாலாட்சியின் இதயம் வேகமாகத் துடித்தது.”யாருப்பா…? அந்தப் பொண்ணு”

பூபதி தலையைக் குனிந்தான்.சில நொடிகள் கழித்து…மெல்லிய குரலில் “பிருந்தா…” என்று சொன்னான்.

அந்த ஒரு பெயர்…அறை முழுவதும் அமைதியை நிரப்பியது.அடுத்த நொடி பூபதி சொன்ன வார்த்தை இருவரையும் இன்னும் ஆச்சரியப்பட வைத்தது.

“ஆனா… நாங்க மத்த காதலர்களைப் போல ஊரைச் சுற்றி பரிசுகளை பரிமாறிக் கொள்ள விரும்பல.முதல்ல… அவளோட அப்பா அம்மாவுக்கும்… உங்களுக்கும் தலைகுனிவு வராத மாதிரி இந்த விஷயத்தை எப்படி கொண்டு போகணும்னு யோசிச்சுட்டு இருக்கோம்.”என்றான்

பூபதி சொன்ன வார்த்தைகளை கேட்டதும்… ஹாலில் சில நொடிகள் கனமான அமைதி நிலவியது. விசாலாட்சி தன் மகனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவன் கண்களில் எந்தவித தடுமாற்றமும் இல்லை.அவன் கண்களில் இருந்த நேர்மையைப் பார்த்த விசாலாட்சிக்கு…தன் மகனை நினைத்து பெருமை வந்தது.

அவன் கூறிய விதத்தில் காதல் மட்டும் உறுதியாக இருந்தது… அதைவிட அதிகமாக மரியாதை இருந்தது.

மெதுவாக எழுந்து மகன் அருகில் வந்து, “பூபதி…”என அழைக்க அவன் எழுந்து நின்றான்.

நீ சொன்னதுல எனக்கு மறுப்பு எதுவுமே இல்ல.

அவன் ஆச்சரியமாக அம்மாவைப் பார்த்தான்.

காதலிக்கிறது தப்புன்னு நான் சொல்ல மாட்டேன்.ஆனா…அந்தக் காதல்… இரண்டு குடும்பத்தையும் சந்தோஷப்படுத்தணும்.ஒருத்தர் சந்தோஷத்துக்காக இன்னொருத்தர் கண்ணீர் விடக் கூடாது.

பூபதி “சரிம்மா” என மெதுவாகத் தலையசைத்தான்.

இந்தப் காட்சிகளைப் பார்த்த காமாட்சி மெதுவாகச் சிரித்தபடி,”அக்கா…உன் மகன் பெரியவனாகிட்டான்.”என்றாள்.

விசாலாட்சியின் கண்களில் பெருமை மிளிர்ந்தது.

அந்த நேரத்தில்…வெளியே கார் வந்து நின்ற சத்தம் கேட்டது.”அப்பா வந்துட்டாரு போல…”என்றான் பூபதி.

வாசல் திறந்து உள்ளே வந்தார் விஸ்வநாதன்.”என்னடா… எல்லாரும் ஒரே இடத்துல… மீட்டிங் நடக்குதா?” என்று சிரித்தபடி உள்ளே வந்தார்…

மூவரின் முகத்தில் இருந்த குழப்பத்தை பார்த்ததும்…அவரது சிரிப்பு மெதுவாக மறைந்தது.

“என்னாச்சு?”

யாரும் பதில் சொல்லவில்லை.

விசாலாட்சி மெதுவாக எழுந்து, “நீங்க கொஞ்சம் உட்காருங்க…நம்ம பூபதி வாழ்க்கையைப் பத்தித்தான் பேசிட்டு இருக்கோம்.”என்றாள்.

பூபதி வாழ்க்கையைப் பத்தியா? என்ற கேள்வியோடு, விஸ்வநாதன் சோபாவில் அமர்ந்தார்.

“சரி…என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?”

விசாலாட்சி ஒரு நொடி பூபதியைப் பார்த்துவிட்டு…”நம்ம பையன்… ஒரு பொண்ணை விரும்புறான்.”என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!