விஸ்வநாதனின் முகத்தில் இருந்த புன்னகை அப்படியே உறைந்தது…
“யாரு அந்தப் பொண்ணு?”
பூபதி ஆழமாக மூச்சை இழுத்தான்.
பிறகு மெதுவாக “பிருந்தா” என்றான்.
Advertisement
“நான்… அவகிட்ட என் மனசுல இருந்ததை சொல்லிட்டேன்.அவளும் என்னை விரும்புறா.”என மேலும் விளக்கம் கொடுத்தான்.
அறையில் மீண்டும் அமைதி. விஸ்வநாதன் அமைதியாக மகனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.பின் சில நொடிகளுக்குப் பிறகு அவர் பேச ஆரம்பித்தார்.
பூபதி…
Advertisement
சொல்லுங்கப்பா.
Advertisement
இந்த முடிவை எவ்வளவு நாள் யோசிச்சு எடுத்த?அவசரப்பட்டு எடுத்த முடிவா?
இல்லப்பா.ரொம்ப நாளா யோசிச்சு எடுத்த முடிவு…
இது ஈர்ப்பா?
Advertisement
இல்ல.
அனுதாபமா?
இல்ல.
அப்போ?
பூபதி தந்தையின் கண்களை நேராகப் பார்த்து, “என்னோட வாழ்க்கை முழுக்க கூட வரப்போற பெண்… பிருந்தாதான் என நான் நம்புற அளவுக்கு யோசிச்சுதான் இந்த முடிவை எடுத்திருக்கேன்.”என்றான்.
விஸ்வநாதன் அமைதியாக தலையசைத்தார்.
,” பிருந்தாவோட அப்பா அம்மாவுக்கு தெரியுமா?”
இல்ல.நான் இன்னைக்கு தான் அவகிட்ட காதலை சொன்னேன்.
காமாட்சி ஆச்சரியமாக,” இன்னைக்குத்தானா?” என்றாள்.
“ஆமா.”
“அப்போ… இவ்வளவு நாள்?”
பூபதி லேசாகச் சிரித்தான்.
“அவ… ஐஸ்வர்யாவோட உயிர்த்தோழி. அந்த உறவைத் தாண்டி எந்தத் தவறான எண்ணமும் வரக்கூடாதுன்னு விலகித்தான் இருந்தேன்.ஆனா…அவ இல்லாத வாழ்க்கையை ஏத்துக்க முடியாதுன்னு இப்போதான் முழுசா புரிஞ்சுச்சு.”என திடமாக பேசினான்.
விஸ்வநாதன் மகனை சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தார்.அவன் கண்களில் தெரிந்த காதல்…அவசரமாக வந்த உணர்வு இல்லை.ஆழமாக வேரூன்றிய முடிவு.அதை ஒரு தந்தையாக அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
விசாலாட்சி மெதுவாக விஸ்வநாதனைப் பார்த்தாள்.
இருவரின் பார்வையும் ஒன்றாகச் சந்தித்தது.
ஹாலில் நிலவிய அமைதியை உடைத்தது விஸ்வநாதனின் ஆழ்ந்த பெருமூச்சு.
அவர் மெதுவாக சோபாவில் இருந்து எழுந்து ஜன்னல் அருகே சென்று நின்றார். வெளியே மெல்ல இருள் இறங்கிக் கொண்டிருந்தது. தேயிலைத் தோட்டத்தின் மேல் பனி படர ஆரம்பித்திருந்தது.
அவரது முகத்தைப் பார்த்த விசாலாட்சி
“என்ன யோசிக்கறீங்க?”என மெதுவாகக் கேட்டாள்.
சில நொடிகள் எதுவும் பேசாமல் நின்றவர், திரும்பி மகனைப் பார்த்தார்.
“பூபதி…”
“சொல்லுங்கப்பா.”
“நான் உன்னை நினைச்சு ஒரு விஷயத்துக்காக ரொம்ப பெருமைப்படுறேன்.”
அவன் புருவம் சுருக்கியபடி “எதுக்கப்பா?”என்றான்
காதலிச்சது மட்டும் இல்லாம… அந்தக் காதலை மரியாதையா காப்பாத்தினதுக்காக.
விஸ்வநாதன் விசாலாட்சியை பார்த்து.
“சின்ன வயசுல இருந்து நம்ம பையனோட குணம் என்னனு உனக்குத் தெரியும். அவன் எதையும் அவசரப்பட்டு செய்ய மாட்டான்.”என்றார்.
பிறகு பூபதியை நோக்கி வந்து “பூபதி… ஒரு விஷயம் மட்டும் தெளிவா சொல்லு.”என கேட்க…
“சொல்லுங்கப்பா.”என்றான்.
நாளைக்கு பிருந்தாவோட வீட்டுல ஏதாவது காரணத்தால இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கலன்னா… நீ என்ன பண்ணுவே?
அந்த கேள்வி பூபதியை ஒரு நொடி அமைதியாக்கியது.சில விநாடிகள் கழித்து அவன் மெதுவாகப் பேசினான்.
“அவங்க சம்மதம் இல்லாம நான் எந்த முடிவும் எடுக்க மாட்டேன்.”
“அப்படின்னா… அவளை மறந்துடுவியா?”
பூபதி மெதுவாகத் தலையசைத்தான்.
“மறக்க முடியும்னு சொல்ல மாட்டேன். ஆனா… அவளோட அப்பா அம்மா தலைய குனியற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன்.”
அந்த பதில் விஸ்வநாதனின் மனதைத் தொட்டது.
அவர் அருகில் வந்து மகன் தோளில் கை வைத்தார்.
“இதுதான் நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்த்த பதில்.”
பிறகு விசாலாட்சியை நோக்கி,
“நம்ம பையன் வாழ்க்கையிலே நாம முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி… இந்தப் பையன் எவ்வளவு பொறுப்பா யோசிச்சிருக்கான் என்பதைப் பார்க்கணும்.” என்றார்.
“பூபதி ,நீ விரும்புற பொண்ணு எனக்கு தெரியாதவள் இல்ல. பிருந்தா நல்ல குடும்பப் பொண்ணு. படிப்பு, ஒழுக்கம், மனிதநேயம்… எல்லாமே இருக்கு.”
பூபதியின் முகத்தில் ஒரு நிம்மதி மின்னியது.
“ஆனால்…” விஸ்வநாதன் அடுத்த வார்த்தையை மெதுவாகச் சொன்னார்.
“ஆனா…”அந்த ஒரு வார்த்தையிலேயே பூபதியின் இதயம் மீண்டும் கனத்தது.
“இது உன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் இல்ல. இரண்டு குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம்.”
அவர் மெதுவாக அவன் அருகில் அமர்ந்து,”பிருந்தா உன்னை விரும்புறானு நீ சொல்றே. சரி,ஆனா அவளோட அப்பா அம்மாவுக்கும் இதே மனநிலை இருக்கணும்.”என்றார்.
அதுதான் நானும் நினைக்கிறேப்பா.
விசாலாட்சி உடனே, “அப்படின்னா… இப்ப என்ன பண்ண போறோம்?” என்று கேட்டாள்.
விஸ்வநாதன் அமைதியாக,”முதல்ல நான் ராகவனை பார்த்து பேசிறேன்.” என பதிலளித்தார்.
பிருந்தாவின் தந்தையின் பெயர் வீட்டில் ஒலித்ததும் பூபதி நேராக அமர்ந்தான்.
அப்பா…நான் பர்ஸ்ட் போய் பேசறேன்.
இல்ல பூபதி. நீ இப்போ அவர்கிட்ட போய் பேசக் கூடாது.
ஏன்?
ஒரு அப்பாவா நான் முதல்ல பேசணும். அதுதான் மரியாதை.நாளைக்கு காலையிலேயே நான் ராகவனை சந்திக்கிறேன்.அவர் சம்மதம் இல்லாம இந்தக் காதலுக்கு நான் ஒரு அடியும் முன்னாடி வைக்க மாட்டேன்.
பூபதி தலையசைத்தான்.அவன் மனதில் பயமும் நம்பிக்கையும் கலந்திருந்தன.
காமாட்சி புன்னகையுடன்,”நானும் இதை ஆமோதிக்கிறேன். காதல்னா இப்போ இருக்கற பிள்ளைகள் ஓடிப்போயிடுறாங்க. ஆனா உன் பையன் முதல்ல குடும்ப மரியாதையைப் பத்தி யோசிக்கிறான்.” என்றாள்.
விசாலாட்சியின் மனமும் மெதுவாக இளக ஆரம்பித்தது.கூடவே பிருந்தாவின் டாக்டர் தொழில்,அவளின் கைராசி மருத்துவர் என்ற நற்பெயர், மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் எல்லாம் கண்முன் அவள் கொண்டு வரும் சீதனமாக விரிந்தன.
உடனே,”அவங்க வீட்டுக்கு எப்போ பேசப் போலாம்?”என ஆர்வமாக தன் கணவனை பார்த்து கேட்க…
பூபதி சிறிது தயங்கியபடி ” அம்மா இன்னும் கொஞ்சம் டைம் வேணும். முதல்ல பிருந்தாவோட மனசு அமைதியா இருக்கணும். அவளுக்கும் இது பெரிய விஷயம்.”என்றான்.
விஸ்வநாதன் சிரித்தபடி”பிருந்தாவோட மனசைப் பற்றி இவ்வளவு யோசிக்கிற அளவுக்கு வந்துட்டேன்னா… விஷயம் ரொம்ப தூரம் போயிடுச்சு போல.” என்றார்.
பூபதி வெட்கத்தோடு சிரித்தான்.
அதே நேரத்தில்…நகரின் மறுபுறம், தன் அறையில் அமர்ந்திருந்த பிருந்தா, கூந்தலில் இன்னும் மணம் வீசிக் கொண்டிருந்த அந்த ஜாதிமல்லிப் பூச்சரத்தை விரல்களால் வருடிக் கொண்டிருந்தாள்.அவள் முகம் முழுவதும் வெட்கமும் மகிழ்ச்சியும் கலந்து இருந்தது.
அவளுக்குத் தெரியாது…அதே நிமிடத்தில், அவளது வாழ்க்கையை முடிவு செய்யப் போகும் முதல் குடும்ப உரையாடல் ஆரம்பமாகிவிட்டது என்பதை. மொபைலை எடுத்து பூபதிக்கு அழைத்தாள்.
பூபதியின் அலைபேசி மெதுவாக வைப்ரேட் ஆனது.பேன்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து திரையைப் பார்க்க…”லவ்பக்”என்ற பெயர் ஒளிர்ந்தது.
அந்த ஒரு பெயரைப் பார்த்ததும், சில நொடிகளுக்கு முன்பு இருந்த மன அழுத்தம் அனைத்தும் மறைந்து, அவனது இதழ்களில் தன்னையும் அறியாமல் புன்னகை மலர்ந்தது.
அந்த மாற்றத்தை கவனித்த காமாட்சி சிரிப்பை அடக்க முடியாமல்,”அடடா… முகமே மாறிடுச்சே! சரி சரி… இப்போ நம்மள விட அந்தப் பொண்ணுதான் முக்கியம் போல. போய் பேசிட்டு வா…” என்றாள்.
விசாலாட்சியும் மகனின் முகத்தைப் பார்த்து சிரித்தபடி,”இவ்வளவு வருஷமா இவன் ஃபோன் அடிச்சு, இப்படிச் சிரிச்சு பார்த்ததே இல்ல.”என்றார்.
பூபதி வெட்கம் கலந்த சிரிப்புடன், “அம்மா…” என்று சிணுங்கினான்.
“போடா… ஆனா ரொம்ப டைம் எடுத்துக்காதே”என்றாள் காமாட்சி
“சித்தி… நீங்களுமா?” என்று தலை கோதியபடி எழுந்தான்.
விஸ்வநாதன் மட்டும் சிரித்தபடி, “பேசிட்டு வா… ஆனா மனசை மட்டும் குழப்பிக்காத.”என்றார்.
“சரிப்பா…”என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றான்.
அறைக்குள் நுழைந்தவன் கதவை மெதுவாகச் சாத்தினான்.ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு அழைப்பை ஏற்றான்.
“ஹலோ…”
மறுமுனையில் எந்தச் சத்தமும் இல்லை.
அமைதி…ஆனால் அந்த அமைதியே அவனுக்கு இனிமையாக இருந்தது.
சில நொடிகளுக்குப் பிறகு…மிக மென்மையான, தயக்கம் கலந்த குரலில்,”வீட்டுக்குப் போயிட்டியா…?” என்றாள் பிருந்தா.
அந்த ஒரு கேள்வியிலேயே அவளுடைய அக்கறை முழுவதும் தெரிந்தது.
பூபதி ஜன்னல் அருகே சென்று நின்றான்.வெளியே நிலவு வெள்ளி ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தது.
அதை ரசித்தபடியே மெதுவாக,
“ம்… இப்போதான் வந்தேன்.”என்றான்.
“எல்லாம்… சரியா?”என அவன் கேட்ட விதத்தில் சிறு பதற்றம் இருந்தது.
“என்னாச்சு? வீட்டுல யாராவது…”
என்று சொல்லிவிட்டு பாதியிலேயே நிறுத்திக் கொண்டாள்.
அவள் குரலில் இருந்த நடுக்கத்தை உணர்ந்தவன், மெல்ல சிரித்தான்.
பிறகு மிகவும் நிதானமாக,”ஆமாம்… பார்த்தாங்க.”என்றான்.
அந்த ஒரு வார்த்தையில்…பிருந்தாவின் இதயம் ஒரு நொடி நின்றது போல ஆனது.
எ… என்ன சொல்ற?
சித்தி பார்த்துட்டாங்க.
மறுமுனையில் முழு அமைதி.
அவளது மூச்சுக் காற்றின் ஓசை மட்டும் கேட்டது.
“பூ… பூபதி…”அவள் குரல் உடைந்து போயிருந்தது.
சாரி… என்னாலதான்…
ஏன் எல்லாத்துக்கும் நீதான் காரணம்னு நினைக்கிற பூபதி?நானும்தானே உன்னோடு இருந்தேன்.
“சரி…விடு… அம்மா… அப்பா… சித்தி… எல்லார்கிட்டயும் நான் உண்மையே சொன்னேன்.”
“கோபப்படலையா?”
“இல்ல.”
“அப்போ…”
“அப்பா நாளைக்கு உங்க அப்பாவைப் பார்த்துப் பேசணும்னு சொல்லிருக்காரு.”
அந்த வார்த்தையைக் கேட்டதும் பிருந்தாவின் இதயம் வேகமாகத் துடித்தது.