“எனக்கு என்னமோ இது முடியும்னு தோணுது. நீ வரச் சொல்லு”
Advertisement
“சரிங்க”, என்று சொன்ன லதா உடனே மகளுக்கு தான் அழைத்தாள்.
Advertisement
“ரெண்டு நாள் கூட ஆகலை? அதுக்குள்ள கூப்பிட்ட? என்ன விஷயம்? சொல்லு மா”, என்றாள் பூர்வி.
Advertisement
“உடனே கிளம்பி ஊருக்கு வா டி. அண்ணன் இன்னைக்கு நைட் டிக்கட் போட்டுருவான். அம்மா இல்லைன்னா அப்பா பக்கத்துல இருந்தா போனைக் கொடு”, என்றாள்.
Advertisement
“உடனே ஊருக்கு போக வேண்டுமா?”, என்ற அதிர்ச்சியில் அப்படியே அவள் அசையாமல் இருக்க அவளைக் கவனித்துக் கொண்டிருந்த அகிலாண்டம் “அம்மா தானே பூர்வி பேசுறது? கொடு போனை”, என்று அவள் கையில் இருந்து வாங்கி விட்டாள்.
“உன் பொண்ணு புரோட்டா சாப்பிடணும் போல இருக்குன்னு கேட்டா. அதான் வாங்க போயிருக்கார்”
“பரோட்டவா? அதுவும் பூர்வியா? என்ன மா சொல்றீங்க?”, என்று குழப்பமாக கேட்டாள் லதா. அவளுக்கு தெரிந்து அது பூர்விக்கு பிடிக்காது.
“அதை விடு. நீ பிள்ளையை என்ன சொன்ன? திகைச்சு போய் நிக்குறா?”
“கோபப் பட்டு நிப்பாளா இருக்கும்? இன்னைக்கே அவளை ஊருக்கு வர சொன்னேன். உங்க மாப்பிள்ளை தான் வரச் சொன்னார்”
“இன்னைக்கே வா? நேத்து தானே வந்தா? அதுக்குள்ள என்னவாம் அவருக்கு?”
“ஒரு நல்ல விஷயம் மா. அவளுக்கு ஒரு வரன் வந்திருக்கு”, என்று சொல்ல அகிலாண்டம் முகமும் மலர்ந்தது.
“நல்லது மா. மாப்பிள்ளை என்ன செய்றார்?”, என்று அகிலாண்டம் கேட்க அதிர்ந்து போன பூர்வி ஆச்சி கையில் இருந்த போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டாள்.
“அம்மா, அது ஒரு பெரிய கதை. சின்னவ இருக்கால்ல?”
“ஷிவானிக்கு என்ன?”
“அவ காலேஜ்ல ஒரு பையனை லவ் பண்ணிட்டு இருக்கா. அந்த பையன் கூட வெளிய சுத்திருக்கா. என் கிட்ட பிரண்டை பாக்க போறேன்னு தான் சொல்லிட்டு போனா. அவளைப் பத்தி தான் தெரியுமே? வாயை திறந்தா பொய். எதுக்கு எடுத்தாலும் அடம்”
“மேல சொல்லு மா”
“அவங்க ரெண்டு பேரும் ஊரைச் சுத்தினதை அவங்க அண்ணன் பாத்துட்டு அவங்க அப்பா அம்மாவை கல்யாணம் பேச அனுப்பிட்டான். அவங்களும் இங்க வந்தாங்க. அந்த பையன் களையா தான் இருந்தான்”
“அப்ப ஷிவானிக்கா கல்யாணம்?”
“ஆமா மா. ஆனா மூத்தவளுக்கு முடிக்காம எப்படின்னு உங்க மாப்பிள்ளை சொல்ல அவங்க அப்பா தான் அவங்க மூத்த பையனுக்கும் கல்யாணம் ஆகலைன்னு சொன்னாங்க., நம்ம பூர்வியையும் பொண்ணு கேட்டாங்க. வயசு தான் கொஞ்சம் கூட. என்ன காரணத்துக்கோ அந்த தம்பி கல்யாணம் பண்ணாம இருந்துருக்காங்கலாம்? பூர்வி போட்டோவை அவங்க வீட்ல உள்ளவங்க கிட்ட காட்டினோம். அவங்களுக்கு பிடிச்சிருக்காம். அவங்க வீட்ல போய் அவங்க பையன் கிட்ட பேசிட்டு சொல்லுறோம்ன்னு சொல்லிருக்காங்க. அவங்க சொன்னதும் ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா வச்சிக்கலாம்ன்னு சொன்னாங்க. அவங்க சரின்னு சொல்லுவாங்கன்னு தான் தோணுது. அதான் அவளை அனுப்பி வைங்க”, என்று சொல்ல அகிலாண்டம் எதுவும் சொல்லாமல் பேத்தியை தான் பார்த்தார். அவள் முகத்தில் அப்பட்டமாக எரிச்சல் தெரிந்தது.
பூர்வியைப் பற்றி அவள் மனதைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் “சரி மா, நீ டிக்கட்டை அனுப்பு. நான் அவளை அங்க அனுப்பி வைக்கிறேன்”, என்றார் அகிலாண்டம்.
“சரி மா, அப்பா கிட்ட சொல்லுங்க. அப்புறம் கல்யாணத்துக்கு நாங்க கூப்பிட வறோம். அப்ப ரெண்டு பேரும் எங்க கூட வந்து ஒரு மாசமாவது இருக்கணும்”
“அதுக்கென்ன டா வந்துட்டா போச்சு. நாங்க வறோம்”
“சரி மா, அப்பா கிட்ட சொல்லுங்க. நான் வைக்கிறேன்”, என்று சொல்லி போனை வைத்தாள் லதா.
“யாரு அகிலா போன்ல? பூர்வி முகம் என்ன ஒரு மாதிரி இருக்கு?”, என்று கேட்ட படி வந்தார் பூமி நாதன்.
“பாருங்க தாத்தா, இந்த அம்மாவை. இன்னைக்கே என்னை ஊருக்கு வரச் சொல்லுது. நைட் நான் கிளம்பனுமாம்? ஒரு வாரம் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சேன்”
“என்ன திடீர்னு?”
அதை எப்படிச் சொல்ல என்று தெரியாமல் அவள் அமைதியாக இருக்க பூமி மனைவியைப் பார்த்தார்.
“எல்லாம் நல்ல விஷயம் தாங்க”, என்று ஆரம்பித்த அகிலாண்டம் லதா சொன்னதை எல்லாம் சொல்ல ஆச்சியை முறைத்துப் பார்த்தாள். அவள் கண்கள் மேலும் கலங்க அழுத படி அமர்ந்து விட்டாள்.
“பூர்வி, என்ன டா, பூர்வி மா”, என்று இருவரும் அவள் அருகே அமர்ந்து அவளை சமாதானப் படுத்த அவர்களைக் கண்டதும் அவள் கண்கள் அழுது சிவந்து விட்டது.
“என்ன டா பாப்பா இது சின்ன பிள்ளை மதிரீ அழுதுகிட்டு?”, என்று சொன்ன பூமி அவள் கண்களைத் துடைத்து விட்டார்.
“என்னைப் பாத்தா எல்லாருக்கும் எப்படி தாத்தா தெரியுது? உப்புக்கு சப்பாணி மாதிரி அவ கல்யாணதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? என்னால இதை ஏத்துக்கவே முடியாது”
“அப்படி எல்லாம் எடுத்த உடனே சொல்லாத டா. வீட்ல எல்லாம் விசாரிச்சு தான் முடிவு பண்ணியிருப்பாங்க. உனக்கான வரன் எப்படி வந்தா என்ன? அது உனக்கானது. அந்த மாப்பிள்ளை உனக்கானவன். அதனால தான் இப்படி வழியா வந்துருக்கு. கடவுள் காரணம் இல்லாம எதுவுமே செய்ய மாட்டார்”, என்று எவ்வளவோ சொல்லியும் அவள் சம்மதிக்கவே இல்லை.
அவளை சமாதானப் படுத்த வழி இல்லாமல் “இங்க இருந்து நீ எந்த முடிவும் எடுக்க வேண்டாம் பூர்வி. முதல்ல ஊருக்கு கிளம்பு. அங்க போய் மாப்பிள்ளைய பாத்துட்டு முடிவு சொல்லு. உனக்கானவன் அவனா இருந்தா கண்டிப்பா உனக்கு பிடிக்கும். அப்படி பிடிக்கலைனா கூட நேர்ல போய் உன் அம்மா அப்பா கிட்ட பேசு டா”, என்று அகிலாண்டம் சொன்னதும் தான் ஒருவாறு சமாதானம் ஆனாள்.
“சரி ஆச்சி. நான் நைட் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டாலும் மனது அவளுக்கு சரியே இல்லை. சாப்பிட கூட மனதில்லை. அகிலாண்டம் தான் ஊட்டி விட்டார்.
இரவும் வந்தது. டிரைனில் டிக்கட் கிடைக்காததால் பேருந்தில் அவளை ஏற்றி விட்டார் பூமி.
வரும் போது இருந்த சந்தோஷம் இப்போது துளி கூட பூர்வியிடம் இல்லை. திருமணம் தான் அப்படி என்றால் ஷிவானியுடன் ஒரே வீட்டில் எப்படி வாழ்வது என்று பெரிய கவலை அவளுக்கு.
ஷிவானியுடன் சொந்த வீட்டிலே அவளால் இருக்க முடிய வில்லை. இதில் காலம் முழுக்க என்றதும் அவளால் அதை ஏற்றுக் கொள்ளவே முடிய வில்லை.
நிச்சயம் மூச்சி மூட்டிப் போய் விடும் போல இருந்தது. நிச்சயம் தன்னால் இந்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க முடியாது. போய் தந்தையிடம் பேசி விட வேண்டும் என்ற முடிவில் தான் ஊருக்கு கிளம்பினாள். ஆனால் அவள் அங்கே சென்று ஒரு வார்த்தை கூட பேச முடியாது என்பதையும் அவள் சம்மதத்தை கேட்காமலே அவள் திருமணம் முடிவாகிவிடும் என்பதையும் அவள் அறிய வில்லை.
ஒரு வேளை ஷிவானி போல இத்தனை வருஷம் வாழ்ந்திருந்தால் இப்போது அவளிடம் ஒரு வார்த்தை கேட்டிருப்பார்கள்,
என்ன டிரஸ் எடுத்துக் கொடுத்தாலும் அன்னை தந்தை முகம் வாடுமோ என்று எண்ணி “நீங்க எடுத்தா அழகா தான் மா இருக்கும்”, என்று வாங்கிப் போட்டுக் கொள்வாள்.
“அண்ணனுக்கு ஒரு செலவு இருக்கு டா. நீ சேத்து வச்சதுல இருந்து ஒரு பத்தாயிரம் கொடு”, என்று புகழ் கேட்டால் “சரி அண்ணா இந்தா”, என்று சொல்லி கொடுத்து விடுவாள். ஷிவானியோ ஒரு படி மேல போய் “எனக்கு இது வேணும்,. உனக்கு வேணும்னா வேற வாங்கிக்கோ”, என்று பிடுங்கிக் கொள்வாள்.
எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டி ஆட்டி என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வாள் என்ற பிம்பம் அவள் மேல் விழுந்து விட்டது. அதை ஒரு நாளில் அவளால் எப்படி மாற்ற முடியுமாம்?