“என்ன அமைதியா இருக்கீங்க? என் வீட்டம்மா சொன்ன மாதிரி பண்ணினா என்ன? உண்மையிலே எங்க பெரிய பேரன் தங்க கம்பி தான். ரெண்டு பேருக்குமே எந்த கெட்ட பழக்கமும் கிடையாது”, என்றார் வையாபுரி.
“அதில்லை சார், நாங்க ஏற்கனவே அதிரச்சில இருக்கோம். நீங்க மேலும் மேலும் அதிர்ச்சியைக் கொடுக்குறீங்க? அதனால எதுவும் சொல்ல முடியலை”, என்றார் சங்கரலிங்கம்.
Advertisement
“நீங்க யோசிக்கிறது எங்களுக்கு புரியுது. ஆனா நாங்க சொன்னது நல்ல முடிவா தான் தோணுது. அதான் சட்டுன்னு பேசிட்டோம். நீங்க இப்பவே உங்க முடிவைச் சொல்லணும்னு இல்லை. நல்ல படியா யோசிங்க. வீட்ல கலந்து பேசிட்டு உங்க முடிவைச் சொல்லுங்க. ரெண்டு கல்யாணத்தையும் ஒரே நேரத்துல வச்சாலும் சந்தோஷம் தான். இல்லை உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நீங்க மூத்த பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையா பாத்து கல்யாணம் முடிச்சு வச்ச அப்புறம் கூட இவங்க கல்யாணத்தை வச்சிக்கலாம். முடிவு எடுக்க வேண்டியது நீங்க தான்”, என்று இறங்கி வந்தார் கிருஷ்ணன்.
Advertisement
கிருஷ்ணன் சமர்த்தியசாலி. அதனால் முடிவு எடுக்கும் உரிமையை அவர்களிடமே கொடுத்தார். அதற்கு அவகாசமும் கொடுக்க வேண்டும் என்பதால் தான் அப்படி பேசினார்.
Advertisement
அவர்களே இவ்வளவு இறங்கி வரும் போது சங்கரலிங்கத்தால் கறாராக பேச முடியாதே. அதனால் லதா புறம் திரும்பியவர் “எல்லாருக்கும் காப்பி போடு லதா”, என்றார்.
Advertisement
பின் சங்கரலிங்கமும் அவரது வீட்டினரை அறிமுகம் செய்தார். “உங்க மூத்த பொண்ணை நாங்க பாக்கலாமா?”, என்று கேட்டாள் ராஜி.
“பொண்ணை பாக்காமலே கல்யாணம் பேசிட்டீங்க?”, என்று நக்கலாக கேட்டாள் நித்யா.
“தப்பா எடுத்துக்காதீங்க. உங்க முதல் பொண்ணு போட்டோவை நாங்க பாக்கலாமா? மகன் கிட்டயும் காட்டனும். எங்க பேச்சை தட்ட மாட்டான் தான். ஆனாலும் முகத்தை காட்டணுமே?”, என்று கேட்டாள் ராஜி.
“புகழ் பூர்வி போட்டோவை அவங்களுக்கு காட்டு”, என்று சங்கரலிங்கம் சொல்ல அவனும் குடும்பமாக எடுத்த புகைப்படத்தை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தான்.
“என்ன டா கிருஷ்ணா, மருமக உங்க மூத்த மகன் உங்க பேச்சை தட்டாம கேப்பான்னு அளந்து விட்டுட்டு இருக்கா. அவ எப்ப நம்ம பேச்சைக் கேட்டுருக்கான்? இப்ப கூட இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்லை”, என்றார் வையாபுரி.
“எனக்கும் கதக்குன்னு தான் பா இருக்கு. அதனால தான் அவங்களுக்கு டைம் கொடுக்குற மாதிரி நமக்கும் டைம் வாங்கிக்கிட்டேன். அவன் என்ன சாமி ஆடப் போறானோ தெரியலை”, என்றார் கிருஷ்ணன்.
அவர்களுக்கு பூர்வியைப் பார்த்த உடனே பிடித்தது. அவள் ஷிவானியை விட நிறம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் களையாக இருப்பாள். அருள்மாறனுக்கு அவ்வளவு பொருத்தம் என்று அவர்கள் மனக் கண்ணில் தோன்றியது.
“உங்க மூத்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கா. எங்களுக்கு விட்டுக் கொடுக்கவே மனசு இல்லை. அவங்களுக்கு தான் கடவுள் முடிச்சு போட்டுருக்காரோ என்னவோ? இதோ இது தான் என்னோட முதல் பேரன்”, என்று சொன்ன கோதை அருள்மாறனின் புகைப்படத்தையும் அவர்களுக்கு காட்டினார்.
அவனை யாருக்கு தான் பிடிக்காது? பார்த்தவுடன் அவர்கள் கண்ணைக் கவர்ந்தான். சங்கரலிங்கம் மற்றும் லதா இருவருக்குமே அவன் அருகே மகளை வைத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.
“அழகா இருக்கார்”, என்று சங்கரலிங்கமே சொல்லி விட நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது அனைவருக்கும். ஆனால் கிருஷ்ணன் மற்றும் வையாபுரிக்கு தான் பயமாக இருந்தது. ஏனென்றால் அருளின் குணம் அப்படி. இத்தனை வருடம் அவர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் அவன் வழிக்கு வரவில்லை. அப்படி இருக்க இப்போது மட்டும் எப்படி சம்மதிப்பானாம்? இப்போது பெண் வீட்டினர் அருளை மாப்பிள்ளையாக்க சம்மதித்து விட்டார்கள் என்றால் அவனை எப்படி சம்மதிக்க வைக்க என்று பயமாக இருந்தது.
ஆண்கள் அந்த கவலையில் இருக்க “அழகு இருந்து என்னத்துக்கு? வயசு முப்பது தாண்டிருச்சு. ஆனா வேலை வேலைன்னு கல்யாணம் பண்ணாம இருந்துட்டான். எவ்வளவோ பேசிப் பாத்துட்டோம். ஆனா ரொம்ப நல்லவன். சின்னவனாவது காதல்ன்னு மாட்டிக்கிட்டான். ஆனா பெரியவன் எந்த பொண்ணையும் நிமிந்து பாத்தது இல்லை”, என்று கோதை அடித்து விட மதன் பாட்டியை முறைத்துப் பார்த்தான்.
“கல்யாணம் வேண்டாம்னு இவ்வளவு நாள் சொன்னவங்க இப்ப எங்க வீட்டுப் பொண்ணை மட்டும் கல்யாணம் பண்ண எப்படி சரின்னு சொல்லுவார்? வயசும் அதிகமா சொல்றீங்க?”, என்று கேட்டாள் நித்யா. அப்போது லதா அனைவருக்கும் காபி கொண்டு வந்து கொடுக்க பேச்சு லேசாக தடை பட்டது.
அவள் இப்படி கேட்பாள் என்று தெரியாமல் என்ன பதில் சொல்ல என்று காபி குடித்த படி கோதை தடுமாறிக் கொண்டிருக்க “இப்ப கண்டிப்பா சரின்னு சொல்லுவான். நாங்க சொல்ல வச்சிருவோம். இத்தனை நாள் இப்படி ஒரு பொண்ணு அமையலை. இப்ப அமைஞ்சிருக்கு. வயசு பெரிய விஷயமா என்ன? எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் இடையே பன்னிரெண்டு வயசு வித்தியாசம்? நாங்க நல்லா வாழலையா? நாங்க எங்க மகனை சம்மதிக்க வச்சிட்டா உங்களுக்கு சம்மதமா?”, என்று கேட்டாள் ராஜேஸ்வரி.
“என் ரெண்டு பொண்ணுங்களும் ஒரே வீட்ல வாழ்ந்தா எங்களுக்கு சந்தோஷம் தான் மா. ஆனா இது ஒண்ணும் ஒத்தையா ரெட்டையா போட்டு உடனே முடிவு எடுக்குற விஷயம் இல்லை. நீங்களும் வீட்ல போய் கலந்து பேசுங்க. உங்க பையன் கிட்ட எங்க பொண்ணு போட்டோ காட்டி சம்மதமான்னு கேளுங்க. நாங்களும் ஒரு முடிவுக்கு வறோம். அவசரப் பட வேண்டாம்னு தான் சொல்றேன்”, என்றார் சங்கரலிங்கம்.
“நீங்க இந்த அளவுக்கு சொன்னதே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். அப்படினா நாங்க வீட்ல கலந்து பேசிட்டு சொல்லுறோம். இப்ப கிளம்புறோம். எதுவா இருந்தாலும் என் நம்பருக்கு கால் பண்ணுங்க. இது தான் என்னோட கார்ட்”, என்று சொல்லி கொடுத்த கிருஷ்ணன் முதல் ஆளாக எழுந்து கொண்டார். அதற்கு மேல் அங்கேயே இருந்தால் மனைவியும் அம்மாவும் அருள்மாறனின் திருமணத்தை உறுதியே செய்து விடுவார்கள். அதற்கு பிறகு அவனிடம் எப்படி பேசுவது? அதனால் தான் அனைவரையும் கிளப்பி விட்டார்.
“சரிங்க”, என்றார் சங்கரலிங்கம்.
மற்றவர்களும் எழுந்து கொள்ள “அவசரமா வந்து எல்லாம் பேசிட்டோம். உங்களுக்கு எங்களைப் பத்தியோ எங்க குடும்பத்தை பத்தியோ விசாரிக்கணும்னா தாராளமா விசாரிச்சிக்கோங்க. விசாரிச்சிட்டு நல்ல தகவலா சொல்லுங்க. உங்க பிள்ளைங்க எங்க வீட்டுக்கு வந்தா அவங்க சந்தோஷமா இருப்பாங்க. நாங்க வறோம்”, என்றார் கிருஷ்ணன்.
மற்றவர்களும் எழுந்து கொள்ள மதன் ஆவலாக ஷிவானியைப் பார்த்தான். அவளுக்கு அவன் மீது கோபம் இருந்தாலும் இப்போது திருமணம் பேசியது கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது.
“பாத்தது போதும். இப்படியே பாத்துட்டு இருந்தா கண்டிப்பா உன்னை வேண்டாம்னு சொல்லிருவாங்க. வாடா”, என்று அவன் கரம் பற்றி அழைத்துச் சென்றாள் கோதை. அனைவரிடமும் தனித் தனியாக சொல்லி விட்டு மதன் குடும்பம் கிளம்பிச் சென்றது.
அவர்கள் போனதும் ஷிவானியை அனைவரும் முறைத்துப் பார்க்க அவள் அப்படியே அறைக்குள் பம்மி விட்டாள். ஏனென்றால் வீட்டில் அவ்வளவு பொய் சொல்லியிருக்கிறாள். அதில் எதையாவது கேட்டு விட்டால் அவ்வளவு தான்.
அவள் உள்ளே சென்றதும் “இப்ப என்னப்பா பண்ணலாம்?”, என்று கேட்டான் புகழ்.
“ரெண்டு பேரும் ஒரே வீட்லன்னு சொன்னது எனக்கும் சந்தோஷமா இருந்துச்சுங்க. ஷிவானி குணத்துக்கு பூர்வியா இருந்தா தான் பொறுத்துப் போவா. நல்ல குடும்பமா தான் தெரியுது. செல்வாக்கான குடும்பம் வேற. என்ன யோசிக்கிறீங்க?”, என்று கேட்டாள் லதா.
“ஒரே தடவையா கல்யாணம் முடிச்சா நமக்கு செலவும் கம்மி தான்”, என்றாள் நித்யா.
“புகழ், இது சாதாரண விஷயம் இல்லை. ரெண்டு பிள்ளைங்க வாழ்க்கை டா. ஷிவானி அவளா தேர்ந்தெடுத்த வாழ்க்கை. அது எப்படி அமைஞ்சாலும் அது அவளோட பொறுப்பு. ஆனா பூர்வி வாயில்லா பூச்சி. அவளை ஒரு நல்லவன் கிட்ட தான் ஒப்படைக்கணும். பசங்க எப்படி பட்டவங்கன்னு மட்டும் விசாரி. பேசி முடிச்சிறலாம். உன் அம்மா சொன்ன மாதிரி ஷிவானிக்கு குணம் காணாது. அவளை பூர்வி தான் அனுசரிச்சு போவா”, என்று சொன்ன சங்கரலிங்கம் “லதா, பூர்வியை உடனே வரச் சொல்லு”, என்றார்.