Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும்

மவுன நிலவும் மஞ்சள் லில்லிப் பூக்களும் – 19

சென்ற இடமெல்லாம் கொஞ்சம் அவமானம் தான் ரகுவுக்கு!

மனைவி மஞ்சுவைத் தேடி வந்திருப்பதாக சொல்லக் கேட்டவுடனே, எத்தனை நாளாக காணவில்லை என்று கேட்பவர்கள், ரகுவின் பதிலைக் கேட்டு காறித் துப்பாத குறையாக திட்ட தான் செய்தார்கள்!

இத்தனை மாசமாக தேடாமல் இப்போது வந்து கேட்கிறான் என்று!

அப்போதெல்லாம் கூடவே வந்திருக்கும் வடிவேலுவின் பார்வையை சந்திக்க முடியாமல் கூனிக் குறுகிப் போனான் ரகு.



Advertisement

மஞ்சு உறுப்பினராக இருந்த கார்டனர்ஸ் நெட்வொர்க் ஒன்று தேனி மாவட்டத்தில் இருந்தது.

மஞ்சுவைப் போல அலங்கார பூக்களை வளர்ப்பவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து அவர்களுக்குள் செடிகள், கன்றுகள் மற்றும்  நாற்றுகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒரு சமூக அமைப்பு(Ornamental plants gardeners Swap groups) ஒன்றின் மஞ்சுவுக்கு நெருக்கமான தோழி ஒருவரை நேரில் சந்தித்து மஞ்சு பற்றி விசாரிக்க தான் அவர்கள் தேனி சென்றதே.

முன்பு ஒரு முறை அவர்கள் குழு அங்கு ஒரு மீட்டிங் ஒன்றை நடத்தி நேரில் சந்தித்து மகிழ்ந்தார்கள்.

Advertisement

அது போல ஏதேனும் நிகழ்வுக்கு மஞ்சு ஒரு வேளை சென்றிருந்தால், அந்த இடத்தில் இருந்து விசாரித்துப் பார்க்கலாம் என்ற எண்ணம்!

Advertisement

ரகுவுக்கு,  மஞ்சு இப்போது சுயநினைவில் இருந்திருந்தால் இந்நேரம் வரை தன்னைத் தொடர்புக் கொள்ளாமல் இருந்திருக்க மாட்டாள் என்ற உறுதியான எண்ணம்!

‘மஞ்சு..மஞ்சு. ப்ளீஸ்டி. சீக்கிரம் வந்திடு. அப்படி எங்க தான் போன? நான் உன்னை தப்பா நினைச்சுட்டு இத்தனை நாளா தேடாம இருந்தது தப்பு தான்!

ஆனா அதுக்காக ரொம்ப உன் புருசனைத் தண்டிச்சுடாத!

Advertisement

ம்ஹும். உன்னால அதெல்லாம் செய்யவே முடியாது!

நீ எங்கியோ நினைவு இல்லாம தான் இருக்கணும்! இல்லன்னா உன்னால என்னையும் பாப்பாவையும் இத்தனை நாளா பிரிஞ்சு இருக்க முடியவே முடியாது!

உனக்கு விபத்தால அல்லது உனக்கு வேண்டாதவர்களாலோ ஏதோ தலையில் அடிப்பட்டு இருக்கணும். அதனால நீ உன் சுயநினைவு இல்லாம தான் வீட்டுக்கு திரும்பி வராம இருக்கணும்.

எஸ். கண்டிப்பா இது தான் நடந்திருக்கும்!

வர்றேண்டி.. இதோ வந்துட்டேன். நீ இந்த உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் ஏழுக் கடல் ஏழு மலைகள் தாண்டி  இருந்தாலும் உன்னை தேடி வருவேன்.!

அந்த சீதையை இராவணன் அசோகவனத்தில் ஒளிச்சு வச்சுருந்தத மாதிரி உன்னை யாராச்சும் கடத்தி வச்சுருந்தாலும் கூட  நான் வந்து உன்னை மீட்டுடுவேன்.

புராணக் கதையில் சொல்ற மாதிரி உன்னை அந்த பாதாளத்துல ஒளிச்சு வச்ச்ருந்தாலும் நான் மண்ணைத் தோண்டி உள்ள வந்து உன்னை மீட்டு வந்துடுவேன்.

நீ கவலைப் படாதே மஞ்சு. இதோ உன் மாமா சீக்கிரமே வந்துடுவேன்!’ ரகு மனதுள் ஓயாது புலம்பிக் கொண்டே பயணித்தான்.

அவளுக்கு எங்கோ ஏதோ விபத்து ஏற்பட்டு சுயநினைவு இல்லாமல் இருக்க கூடும் என்று அவன் உறுதியாக நம்பினான்.

அப்படி அவள் எங்கெல்லாம் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தேடி தான் அலைந்தான்.

கவின் உதவியுடன், மனநல காப்பகங்கள், சில மாதங்களாக கோமாவில் இருக்கும் இளம்பெண் நோயாளிகள் யாரேனும் மருத்துவமனைகளில் இருக்கிறார்களா என்றும் விசாரித்தான்.

கேரளா எல்லை வரை சென்று விசாரித்து வந்து விட்டார்கள்.

மஞ்சுவுக்கு இருக்கும் சமூக வலைத்தள நண்பர்கள் சில நபர்களை தேர்வு செய்து அவர்களிடமும் விசாரித்துப் பார்த்தார்கள்.

அப்படி போகும் போது நடுவில் ஒரு ஹோட்டலில் சாப்பிடும் போது அங்கிருந்த டிவியில் மகாநதி படம் ஓடிக் கொண்டிருந்தது.

அதில் கமல் கல்கத்தா சென்று அவர் மகளை மீட்கும் காட்சி ஓடிக் கொண்டிருக்க, அதைப் பார்த்த ரகு குலுங்கி குலுங்கி அழுதான்.

“என்னோட மஞ்சு ஒருவேளை இந்த மாதிரி எங்காவது மாட்டிக் கொண்டிருந்தால் கூட நான் அவளைக் காப்பாத்தி ஏத்துக்குவேன்.

எனக்கு என்னோட மஞ்சு திரும்ப கிடைச்சா போதும்!

கவின் சார். இது மாதிரி இடங்களில் நாம தேட முடியுமா? ப்ளீஸ் சார். நான் உங்க கிட்ட இப்படி கேக்குறதுக்கு மன்னிச்சுக்கோங்க. ஆனா எனக்கு வேற வழி தெரியல. வேற யார இது விசயமா கேக்குறதுன்னு கூட யோசிக்க முடியல!

ப்ளீஸ் தப்பா நினைச்சுக்காதீங்க! ஏற்கனவே என்னால உங்க தங்கச்சிக்கு வேற கெட்டப் பெயர் ஏற்பட பார்த்துச்சு”. நொந்து போன குரலில் பேசினான் ரகு!

“கவி என்னோட அக்கா. தங்கச்சி இல்ல. சரி விடுங்க சார். நடந்தத நம்மால மாத்த முடியாது. நீங்க உங்க ஒய்ஃப் பத்தி மட்டும் இப்ப யோசிங்க. அவங்க வேற எங்க போய் இருக்கலாம்னு இன்னும் கொஞ்சம் யோசிங்க”. என்றான் கவின்.

சொன்ன கவின் அவன் தொடர்புகள் மூலம், மஞ்சுவின் வயதில் அடையாளம் தெரியாமல் இறந்து போய் மருத்துவமனையால் அடக்கம் செய்யப்பட்ட மற்றும் மார்ச்சுவரியில் இருக்கும் பிரேதங்களின் விவரங்களைக் கூட விசாரித்துக் கொண்டிருந்தான்.

இவர்கள் தேனியில் இருந்து  அடுத்து கோவைக்கு செல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, ராஜாவிடமிருந்தும் நந்தினியிடமிருந்தும் போன் வந்திருந்தது.

இது மாதிரி அந்த ட்ராக்டர் நிற்கும் இடத்தில் தோண்டிப் பார்க்க போகிறார்கள் என்று!

“அதெல்லாம் தேவையில்ல! எதுக்கு தோண்டி எல்லாம் பார்க்கணும்! அதெல்லாம் வேண்டாம். போலீஸ்க்கு தேவையில்லாத சந்தேகம்!

என் மஞ்சு வேற எங்கியோ பத்திரமா இருக்கா! ஏன் இப்படி எல்லாம் செஞ்சு என்னை பயமுறுத்தறீங்க! எனக்கு நம்பிக்கை இருக்கு! என் மஞ்சு வந்து சிரிக்கப் போறா பாருங்க. நல்லா பல்ப் வாங்கப் போறாங்க போலிஸ்”. ரகு உள்ளுக்குள் பயம் பதட்டம் கொண்டிருந்தாலும் வெளியில் தைரியமாகவே  ஆனான்.

“சார்.. சார். டென்சன் ஆகாதீங்க. ரொம்ப இப்படி பேசிட்டு இருந்தா, அப்புறம் போலிஸ் உங்கள சந்தேகப்படுவாங்க. அவங்களுக்கு கோ ஆப்ரேட் பண்ணனும் நாம!

இப்ப என்ன? தோண்டிப் பார்க்கட்டும். ஒண்ணும் இல்லைன்னா இன்னும் அவங்க தேடுறதைத் தீவிரப்படுத்துவாங்க.

அது நமக்கும் நல்லது தானே!” என்று கவின் ரகுவை சமாதானம் செய்து அழைத்து வந்திருந்தான்.

வடிவேலோ நடப்பது எல்லாவற்றையும் ஜீரணிக்க முடியாதவனாய் அதிர்ச்சியில் இருந்தான்.

அவனிடம் தனிமையில் கவின் சொல்லியிருந்தான்.

“எனக்கு என்னமோ இவரோட மிசர்ஸ் இன்னும் உயிரோட இருப்பாங்கன்னு தோணல! இருந்திருந்தா இத்தனை மாசத்துல கண்டிப்பா இவங்களை காண்டாக்ட் பண்ணி இருப்பாங்க. ஒரு வேளை யாராச்சும் கடத்தி இருந்தா கூட இந்நேரம் இவரைத் தொடர்பு கொண்டு அவங்க டிமாண்டை வச்சுருப்பாங்க. இது எதுவுமே நடக்காத பட்சத்தில் அவங்க இன்னும் உயிரோட இருக்கிறதுக்கு சாத்தியம் கொஞ்சம் குறைவு தான்! ஆனா இத அவர்கிட்ட சொன்னா ரொம்ப வருத்தப்படுவார்.

எப்படியும் கூடிய சீக்கிரம் உண்மை தெரியத் தான் போகுது. பார்ப்போம்” என்று சொல்லி இருந்தான்.

வடிவேலுவுக்கு துக்கம் பீறிட்டு வந்தாலும் அதை ரகுவின் முன்பு காட்டிக் கொள்ள முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருந்தான்!

ரகு, கவின், வடிவேல், நந்தினி மற்றும் ரமேஷ் பரமசிவம் அன்னம் உள்ளிட்டவர்கள் சுற்றிலும் நின்று பார்க்க, ராஜா அமர்த்திய ஆட்கள், அந்த பழைய ட்ராக்டரை நகர்த்தி விட்டு அந்த இடத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

சில அடிகள் தோண்டிய போது விரும்ப தகாத ஒரு நாற்றம் ஒன்று அனைவரின் நாசியை அடைந்தது!

மண் வாசனைப் போல இருந்தாலும் கூடவே வேறு ஒரு விரும்ப தகாத நாற்றம்!

மேலும் கொஞ்சம் தோண்டியதும், நந்தினியின் வீறிட்ட குரல் அனைவரையும் அங்கே எட்டிப் பார்க்க செய்தது!

“மஞ்சூ.. மஞ்சு..” என்ற நந்தினியின் அலறல் தெருவுக்கே கேட்டது!

ஆமாம். அங்கு தான் அவர்கள் எல்லோரும் தேடிக் கொண்டிருந்த மஞ்சு மீளாத்துயில் கொண்டிருந்தாள்!

முழுக்க சிதையாமல் பாதி மட்டுமே சிதைந்த நிலையில் மஞ்சுவின் சடலம் அங்கே புதையுண்டு இருந்தது!

அவள் அணிந்திருந்த அந்த மஞ்சள் நிற சுடிதார், அதன் நிறம் மங்கி இருந்தாலும் நைந்து போய் இருந்தாலும் நந்தினியால் அடையாளம் தெரிந்து கொள்ள முடிந்தது!

நதியா மஞ்சள் என்று அவளின் அம்மா குறிப்பிடும் அந்த மஞ்சள் நிற சுடிதாரை மஞ்சுவுக்காக தைத்து வாங்கி வந்ததும், அதில் கொஞ்சம் ஆல்டர் பண்ண வேண்டும் என்று சில முறை அதைத் தூக்கிக் கொண்டு டைலர் கடைக்கு நடந்ததும் அவள் தானே!

அந்த உடையை எப்படி மறப்பாள் நந்தினி?

மேலும் அவள் உடல் அருகே இருந்தது மஞ்சு எப்போதும் அணிந்திருக்கும் ரகுவின் ஆர் எழுத்து பொறிக்கப்பட்ட மோதிரம்!

“என்ன சொல்றீங்க நந்தினி. இது மஞ்சுவோட பாடி தானா?” ராஜா கேட்டார்.

“ஆமா..ஆமா சார்!” துக்கம் தொண்டையை அடைக்க கதறலோடு சொன்னாள் நந்தினி!

“அய்யோ மஞ்சு..உன்னை இந்த நிலையிலா பார்க்கணும்?

எஸ்.ஐ சார், இங்க தோண்டி பார்க்கனும்னு சொன்னப்ப, கடவுளே அவர் சந்தேகப்படும்படி எதுவும் ஆகி இருக்க கூடாது. நீ வேற எங்கியாச்சும் பத்திரமா இருந்து உன்னைத் தேடித் போன ரகு அண்ணன் உன்னை நல்லபடியே கூட்டிட்டு வந்துடனும்னு தானே நான் அப்படி அவ்வளவு தூரம் கடவுளை வேண்டிகிட்டு இருந்தேன்.

எப்படி நான் மாடியில எதுவும் இருக்கும்னு சந்தேகப்பட்டு தேடிப் போய் ஒண்ணும் கிடைக்காம வந்தேனோ, அது போல இங்க தோண்டிப் பார்த்து ஒண்ணும் கிடைக்காம போய்டணும் கடவுளே அப்படின்னு தானே நானும் அப்படி வேண்டிக்கிட்டேன். என் வேண்டுதல் அந்த கடவுளுக்கு கேக்கவே இல்லையா?

ஏண்டி..ஏண்டி.. உனக்கு மட்டும் இப்படி ஆகணும்?

ஆசை ஆசையா ரகு அண்ணனைக் காதலிச்சு, அவருக்காக காத்திருந்து போராடி அவர் கையைப் பிடிச்சு, நல்ல புருஷன், அழகான குழந்தை, ஆசை ஆசையா கட்டுன வீடுன்னு வாழ்ந்தியேடி. அது அந்த ஆண்டவனுக்கே பொறுக்கலையா?

உன் வாழ்க்கையை இப்படி ஒண்ணும் இல்லாம பண்ணிட்டாரே?

ஆண்டவன் எங்கே பண்ணினாரு?

எவனோ ஒரு சண்டாளப் பாவி தான் உன்னை இப்படி சிதைச்சு புதைச்சு வச்சுருக்கான்?

யாரு அவன்? அவனை சும்மாவே விட மாட்டேன்! பாவி..பாவி..” என்று தலையில் அடித்துக் கொண்டு கதறினாள் நந்தினி!

அங்கு  ரகுவோ பைத்தியம் பிடித்தது போல நின்றான்.

“மஞ்சு.. மஞ்சு.. இது நீ இல்ல தானே? ஏன் எல்லோரும் இப்படி பொய் சொல்றாங்க?

உன்னால என்னை விட்டு எல்லாம் போக முடியுமா?

நம்ம மீனுவை விட்டுட்டு போக முடியுமா?

நாங்க தவிச்சுருக்க,  நீ பார்த்திட்டு இருப்பியா? உன் பொண்ணு அம்மா எங்கேன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்?

இது நீ இல்ல.. நீ எங்கியோ தலைக்கு அடிப்பட்டு நினைவு இல்லாம இருக்க. அதான் என்னைத் தேடி இன்னும் வராம இருக்க!

நீ எங்க இருந்தாலும் உன்னைக் கொண்டு வந்துடுவேன் மஞ்சு!

நீ பயப்படாத. தைரியமா இரு. இது வேற யாரோ? வேற யாரையோக் காட்டி அது நீதான்னு சொல்லி கேசை முடிக்க பார்க்குறாங்க.

கவின் சார். நீங்க போய் சொல்லுங்க. நாங்க கேசை வேணுமினா வாபஸ் வாங்கிக்கிறோம். இது மஞ்சுன்னு சொல்ல வேண்டாம்னு சொல்லுங்க.

மஞ்சு என்னை விட்டுப் போக மாட்டா!

அது அவளால நிச்சயம் முடியாது.

நான் இத்தனை நாளா அவளைத் தேடல. அவளைத் தப்பா நினைச்சுட்டு இருந்திட்டேன்னு அவளுக்கு கோபம் என் மேல!

அதான் எங்கியோ ஒளிஞ்சுட்டு இருக்கா. அதெல்லாம் திரும்ப வந்திடுவா. அவளால ரொம்ப நாளைக்கு எல்லாம் என் மேல கோபமா இருக்க முடியாது.

இதோ இப்போ நான் கதறி அழுவுறத கேள்விப்பட்டா, அவளும் அழுதுட்டு மாமான்னு ஓடி வந்திடுவா”.

ரகு பைத்தியம் பிடித்தது போல பேசிக் கொண்டிருந்தான்.

அங்கே வீட்டில் உள்ளே ஹாலில் மாட்டியிருந்த மஞ்சுவின் போட்டோவில் இருந்து வழக்கம் போல கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது!

“சொல்லு வடிவேலு.. உன் பிரன்ட் வந்திடுவா தானே! நீயும் தான் என் மேல முதலில் கோபப்பட்ட. இப்ப என் கூட வரலையா?

அது மாதிரி தானே மஞ்சுவும் கோபம் போய் என்னைத் தேடி வந்திடுவா. நீ வா. நாம கோயம்புத்தூர் போலாம். அங்க தான் இருக்கா மஞ்சு.

அங்க கேரளா வைத்திய சாலையில் அவளுக்கு ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்காம். நீ வா. போலாம். வா” என்று அவனின் சட்டையைப் பிடித்து இழுத்தான் ரகு.

அதுவரை சத்தம் வராமல் கேவிக் கொண்டிருந்த வடிவேலுவும் உடைந்தான்.

“மஞ்சு.. என்னைப் பெத்த தாயே! ஒரு அம்மா மாதிரி எனக்கு சோறு போட்டியே!

யாரும் இல்லாத எனக்கு,  எல்லாமா இருந்தியே!

எனக்குன்னு ஒரு குடும்பம் உருவாக்கிக் கொடுத்துட்டு, நீ இப்ப உன்னோட குடும்பத்தை தவிக்க விட்டுட்டு போலாமா?

படுபாவி யாரும்மா உன்னை இப்படி சிதைச்சுப் போட்டது!

ஊருக்கெல்லாம் நல்லது நினைச்ச உனக்கு இந்த கதியா வரணும்?

கடவுளே உனக்கு கண்ணு இல்லவே இல்லையா?” வடிவேலுவும் கதற, கவின் தான் முன்னே சென்று ராஜாவுக்கு உதவியாக நின்று மேற்கொண்டு ஆக வேண்டிய நடைமுறைகளுக்கு உதவினான்.

வடிவேலை பரமசிவமும், ரகுவை அன்னத்தின் கணவனும் எதிர் வீடான அன்னத்தின் வீட்டுக்குள் அழைத்துப் போய் உட்கார வைத்தனர்.

பரமசிவத்திற்கும் கூட வருத்தமாக தான் இருந்தது, ரகுவும் வடிவேலும் கதறிய கதறலைக் கண்டு!

அன்னமும், சொல்லி சொல்லி அழுதாள்.

“அம்மாடி மஞ்சு.. எல்லோரும் உன் மேல போட்ட பழியைத் தீர்க்க தான் காத்தா இங்கியே சுத்தி சுத்தி வந்தியா?

உன்னைப் பத்தி தப்பா பேசுனவங்கள எல்லாம் வாய் மேலேயே போட்டியே!

அப்பவே எனக்கு சந்தேகம் தான். நீ அப்படி இன்னொருத்தன் கூட ஓடிப் போற பொண்ணு கிடையாதுன்னு.

உன்னை யாரோ என்னமோ செஞ்சுட்டாங்கன்னு நான் தான் அப்பத்துல இருந்து சந்தேகப்பட்டு சொல்லிட்டு தானே இருந்தேன்.

யாரு கேட்டா அத?

ஏழை சொல்லு அம்பலம் ஏறாதுன்னுறது உண்மையா போச்சே!

நீ இங்க புதைஞ்சு கிடக்கிறது தெரியாம ஊர் ஊரா போய் தேடிட்டு இருந்திருக்காங்களே! பாவிங்க”. அன்னமும் அழுது புலம்ப, சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கூட கண் கலங்கி நின்றார்கள்!

ரமேஷ் கூட அதிர்ச்சியில் தான் நின்று கொண்டிருந்தான்.

பரமசிவம் மனைவிக்கு தகவல் சொல்லி, கர்ப்பிணியான அஸ்வினி அங்கு வந்து விடாது பார்த்துக் கொண்டார்.

போலிஸ் நடைமுறைகள் எல்லாம் முடிந்து மஞ்சுவின் உடலுக்கு அவர்கள் வீட்டு முறைப்படி சில எளிய சடங்குகள் செய்ய பரமசிவம் கூட இருந்து வழிக்காட்டினார்.

கதறிக் கொண்டு இருந்த ரகுவை இழுத்துப் பிடித்து அவற்றை எல்லாம் செய்ய வைத்தனர் அன்னமும் அவள் கணவனும் மற்றும் அடுத்த வீட்டுக்காரர்களும்.

இவ்வளவு இங்கு நடந்து கொண்டிருக்க, சடங்குகள் செய்யும் போது தான் அன்னத்திற்கு ரஞ்சிதாவின் நினைவு வந்தது!

‘எங்கே அவள்?’ இவ்வளவு விசயம் இங்கு நடந்து முடிந்து இருக்கும் நேரத்திலும் அவளைக் காணாது போகவே, அன்னம் தான் முதலில் சந்தேகத்தை எழுப்பினாள்.

அங்கிருந்த கவினிடம் போய், “சார். அந்த ரஞ்சிதாவை இன்னும் காணோம் பாருங்க சார். சொந்த தம்பி பொண்டாட்டிய பொணமா தோண்டி எடுத்து, ஊரே திரண்டு இங்க நிக்குது. அவளைக் காணோம் பாருங்க.

எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அவ மேல தான் சந்தேகமே.

விசயம் தெரிஞ்சு ஊரை விட்டு எஸ்கேப் ஆகிடப் போறா. எஸ் ஐ சார் காதுல போட்டு விடுங்க”. என்று சொல்லி விட,

கவினுக்குமே அவள் சொல்வது சரியென்றே பட, அவன் ராஜாவைத் தொடர்பு கொண்டு இதை தெரியப்படுத்தி விட்டான்.

“நாங்களும் அந்த ரஞ்சிதா இருக்கும் வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கோம். எங்களுக்கு இன்னும் சில தகவல்கள் கிடைச்சுருக்கு. கல்ப்ரிட் யாருன்னு தெரிஞ்சுடுச்சு. நந்தினி எடுத்துக் கொடுத்த மெமரிக் கார்டில் எல்லாமே ரெகார்ட் ஆகி இருக்கு.  நீங்களும் அந்த வீட்டுக்கு நேரே வாங்க” என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

—

“எங்கடி ஒளிச்சு வச்சுருக்க அதை? இப்ப எல்லாத்தையும் எடுத்து தரப் போறியா இல்லையா?” என்று மஞ்சுவின் நகைகளையும் வீட்டில் இருக்கும் மற்ற  தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை எடுத்து தரும்படி சொல்லி ரஞ்சிதாவை பெல்ட்டால் விளாசிக் கொண்டிருந்தான் ரத்தினம்!

“நான் எதையும் எடுத்து தர மாட்டேன். நீ சொல்ற மாதிரி உன் கூடவும் வரவும் மாட்டேன். நான் போலீஸ்ல சரண்டர் ஆகப் போறேன்”. என்றாள் ரஞ்சிதா உறுதியான குரலில்.

“ஓ அப்படியா? ரொம்ப சரி. கொலை செஞ்ச நீ தண்டனை அனுபவிக்க தானே வேணும்? தாரளாமா போய் சரண்டர் ஆகிடு. ஆனா அதுக்கு முன்னாடி நான் இங்கிருந்து எஸ்கேப் ஆகணும்.

உனக்கு துணையா இருந்தேன்னு என்னையும் போலிஸ் பிடிச்சுருச்சுன்னா? குரு மூர்த்தி சாரும் ஹெல்ப் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டார். என்னை நான் தான் காப்பாத்திக்கணும்! நான் ஊரை விட்டே போகப்போறேன். செலவுக்கு பணம் வேண்டாமா? அதுக்கு தான் எனக்கு அந்த நகைங்க வேணும். மரியாதையா எடுத்துக் கொடுத்திடு, வீணா உடம்பைப் புண்ணாக்கிக்காதே!” என்று அவன் மிரட்டிக் கொண்டிருக்கும் போது வாசல் கதவு தட்டப்பட்டது!

ஜன்னல் வழியே யார் என்று பார்த்தவன் அதிர்ந்தான்!

 போலிஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!