பத்தரைக்கு மேல் தான் நல்ல நேரம் என்பதால் காலை உணவை வீட்டிலே முடித்துவிட்டு வாசுதேவர்- மதுரம் குடும்பம் மொத்தமும் சந்தனபாண்டியின் இல்லத்திற்கு இரு கார்களில் புறப்பட்டு சென்றனர்.
ஒரு காரில், ராமன்-பரமன் அவர்களின் மனைவிகள் மற்றும் மதுரமும், மற்றொரு காரில் சிறியவர்கள் நால்வரும் வாசுதேவரும் கிளம்பினர்.
Advertisement
காரை ஓட்டிக்கொண்டிருந்த அஜய் தன் பக்கவாட்டில் அமர்ந்திருந்த அஸ்வத்தைக் கண்டு, “எல்லாம் ரெடி தான??” என்று கேட்க,
Advertisement
அஸ்வத்தும் அவன் எதைக் கேட்கிறான் என்றுணர்ந்து சிரிப்புடன், “எல்லாம் தயாரா இருக்கு.. ஆனா கொஞ்சம் யோசிச்சுக்கோ அஜ்ஜூ” என்று கூற,
Advertisement
இவர்களின் சம்பாஷனைகளை பின் சீட்டில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த வினோத், வேகமாக முன்னால் சென்று இரு சீட்டிற்கும் இடையில் கொக்கு போல் தன் தலையை நீட்டியவன், “டேய் நல்லவனுங்களா.. நீங்க ரெண்டு பேரும் ஏதோ பிளான் பண்ணிட்டிங்கன்னு நல்லாவே தெரியுது.. ஆனா எது பண்றதா இருந்தாலும் இப்போவே சொல்லிருங்க டா.. நான் அப்படியே கண்ணாடி வழியா குதிச்சு கால்நடையாகவே சென்னைக்கு போய் சேர்ந்திருவேன்.. ஆனா சொல்லாம கொல்லாம ஏதாவது ஏழரை இழுத்து என்னோட தலையில உட்கார வச்சிட்டு போய்றாதிங்க டா ராசா” என்று அவன் மிரட்சியுடன் கூற,
Advertisement
அதைக் கேட்டு அஸ்வத்தும் அஜயும் பலமாய் நகைத்தனர்.
பின் அஜய் ஒரு கையால் காரை ஓட்டிக்கொண்டே இன்னொரு கரத்தைக் கொண்டு வினோத்தின் கழுத்தை வளைத்து தன் பக்கம் இழுத்தவன் அவன் காதிற்குள் ஏதோ முணுமுணுக்க,
அடுத்த நொடி வினோத் பதறிப்போய், “அய்யய்யோ” என்ற அலறலுடன் அவன் பிடியில் இருந்து வெளிவந்து, “டேய் வண்டியை நிறுத்துங்க டா.. உங்க சங்காத்தமே இனி எனக்கு வேண்டாம்.. நீங்க யாரோ நான் யாரோ என்னை விடுங்க டா” என்று சென்ட்ரல் லாக் ஆகியிருப்பது கூட அறியாமல் காரை திறக்க முயன்று கொண்டிருந்தான்.
“டேய் எதுக்கு டா கத்துற லூசுப்பயலே” என்று ஜீவா அவனைப் போட்டு உலுக்க,
“அட, இந்த எருமைங்க பொண்ணு பார்க்க நம்மளை கூட்டிட்டு போகலை டா ஃபூல்.. நமக்கு பால் ஊத்த கூட்டிட்டு போறாய்ங்க” என்று அவனிற்கு பதிலளித்தான் வினோத்.
“டேய் இவனுக்கு திடீர்னு பைத்தியம் முத்திருச்சா” என்று அவனை விளங்காத பார்வை பார்த்துக் கொண்டே ஜீவா அஜயிடம் கேட்க,
அஜயோ நாக்கை மடக்கி தன் புன்னகையை வாய்க்குள் அடக்கியவன், “ஐ டோன்ட் க்நோ” என்று கூறிவிட்டு கார் ஓட்டுவதில் மும்முரமாகிவிட்டான்.
“ஏதே நான் பைத்தியமா?? டேய் வீங்கிப்போன முட்டைகோஸ் மண்டையா இவனுங்களை நம்பித்தொலையாத டா..இந்த வெளங்காம போன அஜய் அந்த வாயாடி கீதாவை இப்போ பொண்ணு பார்க்க போகலையாம்.. அவ கழுத்துல தாலி கட்ட போறானாம்.. அதோ அந்த அஸ்வத் கையில ஒரு பெட்டி இருக்கு பாரு.. இன்னைக்கு காலையில அவசரமா இதை வாங்கத்தான் கிளம்பி போய்ருக்கான் அது தெரியாம நானும் இவனுக்கு டிரைவர் வேலை பார்த்திருக்கேன்.. ” என்று வினோத் புலம்பிக் கொண்டிருக்க,
ஜீவா அவனை ஒரு விநோத ஜந்துவைப் போல் பார்த்து வைத்தான்.
“என்னடா அப்படி பார்க்குற?? உனக்கு இவனுங்க குடும்பத்தைப் பத்தி தெரியாது.. சரியான மெண்டல் குடும்பம்.. அவனுங்க என்ன பண்ணாலும் நம்மளைத்தான் போட்டு அடிப்பானுங்க.. இப்போ கூட அந்த மீசைக்காரரும் போலீஸ்காரரும் வேற சேர்ந்து இவன் பண்ணப்போற காரியத்துக்கு நம்மளை சுட்டுத்தள்ள போறாங்க” என்று வினோத் பயத்தில் உளறிக்கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் சந்தனபாண்டியின் வீட்டை அடைந்திருந்தனர்.
அதைக்கண்டு உள்ளே வர மாட்டேன் என்று முரண்டு பிடித்த வினோத்தை உருட்டி மிரட்டி காரை விட்டு வெளியே அழைத்து வந்திருந்தான் அஜய்.
அப்போது தான் வயல்வெளியில் இருந்து வீட்டிற்கு வந்திருந்த சந்தனபாண்டியன், வாசலில் நின்றிருந்தவர்களைக் கண்டு யோசித்தாலும், அன்னிச்சையாய் அவரின் வாய் அவர்களை உள்ளே வரச் சொல்லி வரவேற்றிருந்தது.
“வாங்க வாங்க” என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு அவர் உள்ளே வர,
ஹாலில் அமர்ந்து அன்றைய செய்தித்தாளில் மூழ்கியிருந்த சுந்தரபாண்டியனும் வந்திருந்தவர்களைக் கண்டு குழம்பினாலும் அதை காட்டிக்கொள்ளாமல் இன்முகமாகவே அவர்களை வரவேற்று அமர வைத்தார்.
“ஏட்டி காமாட்சி.. எங்கன இருக்கவ… வெரசா வா… வரப்போ எல்லாருக்கும் குடிக்க தண்ணி கொண்டா” என்று தன் மனைவிக்கு குரல் கொடுத்துக் கொண்டே அவரை அழைத்து வர சந்தன பாண்டியன் உள்ளே சென்று விட,
அங்கிருந்த சுந்தர பாண்டியனிடம், “இப்போ எப்படி இருக்கிங்க?? இப்போ உடம்புக்கு பரவாயில்லையா தம்பி?? உங்களை ஹாஸ்பிட்டலுக்கே பார்க்க வரலாம்னு தான் நினைச்சோம்.. ஆனா போலீஸ்காரங்க உங்க உயிருக்கு ஆபத்து இருக்கதுனால வெளி ஆளுங்க யாரையும் அனுமதிக்கிறது இல்லைன்னு கேள்விப்பட்டு தான் பார்க்க வரலை தப்பா எடுத்துக்காதிங்க” என்று மதுரம் அன்பொழுக பேச,
“அச்சோ அதுனால என்னம்மா.. நான் நல்லா இருக்கேன் இப்போ.. நீங்க எப்படி இருக்கிங்க?? ஆமா நீங்க எல்லாரும் ஒன்னா எப்படி??” என்று தன் குழப்பத்திற்கு விடை கண்டுவிடும் நோக்கில் சுந்தரம் வினவ,
மீண்டும் சந்தனபாண்டியனிடம் ஒப்புவித்த அதே கதையை அச்சுப் பிசகாமல் கண்ணீர் மழ்க சுந்தரத்திடமும் மதுரம் கூறி முடிக்க,
சுந்தர பாண்டியன் அங்கு தன் போனில் கேண்டி க்ரஷ் விளையாடிக் கொண்டு மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த வாசுதேவரை நோக்கி ஒரு அனுதாபப் பார்வையை சிந்தியவர் பின் மதுரத்திடம் திரும்பி, “ஒன்னும் கவலைப்படாதீங்க மா.. உங்க நல்ல மனசுக்கு அவருக்கு எதுவும் ஆகாது” என்று தைரியம் அளித்தார்.
அவரின் அனுதாபத்தைக் கண்டு சிறியவர்கள் அனைவரும் தங்கள் சிரிப்பை அரும்பாடு பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
அதற்குள் முற்றத்தில் இருந்த காமாட்சியையும் மீனாட்சியையும் சந்தனபாண்டியன் அழைத்துக் கொண்டு வந்துவிட, பெண்கள் இருவரும் அங்கிருந்தவர்களைக் கண்டு ஓரளவு விஷயத்தை யூகித்திருந்தனர்.
சிறிது நேரம் உபசரிப்புகளும் உரையாடல்களும் தொடர,
அதற்கு மேல் தாமதிக்காமல் விஷயத்திற்கு வந்தார் மதுரம்.
“நீங்களே இந்நேரத்துக்கு நாங்க எதுக்கு வந்திருக்கோம்னு ஓரளவிற்கு விஷயம் என்னன்னு கண்டுபிடிச்சுருப்பிங்க.. இருந்தாலும் நானே சொல்றது தான் முறை.. தெரிஞ்சோ தெரியாமலோ அன்னைக்கு வீடு மாறிப்போய் ஒரு சலசலப்பு ஆகிப்போச்சு.. கடவுள் இன்னாருக்கு இன்னார்தான்னு பிறக்கும் போதே முடிவு பண்ணி அனுப்பியிருக்கும் போது அதை மாத்த நாம யாரு… இவங்க இவங்களோட தான் சேரனும்னு அந்த கடவுளே விருப்பப்பட்டு தான் அன்னைக்கு அப்படி ஒரு திருவிளையாடலை நம்மளை வச்சு நடத்தியிருக்கணும்.. சரி விஷயத்துக்கு வருவோம்.. உங்களுக்கே என் ரெண்டு பேரப்பசங்களை பத்தி நல்லாத் தெரியும்.. என்னைப்பத்தியும் ஓரளவிற்கு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. என்னோட ரெண்டு மருமகள்களையும் என்னோட பொண்ணு மாதிரி தான் பார்த்துட்டு இருக்கேன் .. அது போல தான் நாளைக்கு எங்க பேரனை கட்டிக்கிட்டு வர பொண்ணுங்களையும் எங்க வீட்டு பிள்ளையா நினைச்சு பத்திரமா பார்த்துக்குவோம்… எங்க மேல நம்பிக்கை வைச்சு என்னோட ரெண்டு பேரப்பசங்களுக்கும் உங்களோட ரெண்டு பொண்ணுங்களையும் கட்டிக் கொடுப்பிங்களா??” என்று அவர் வந்த விஷயத்தை பேசிவிட்டு பதிலுக்காக அவர்களைப் பார்த்திருக்க,
எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் அதற்கு என்ன பதில் அளிக்கவென்று தெரியாமல் சந்தன பாண்டியனும் சுந்தர பாண்டியனும் பேச்சற்று போய் யோசனையாய் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் வாயில் இருந்து வரும் நல் வார்த்தைக்காக இங்கு காதல் கொண்ட உள்ளங்கள் பரிதவித்து காத்துக் கொண்டிருந்தது.