Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தென்றல் 23

வாசலில் நின்று கொண்டிருந்த இருவரும் வேகமாக தங்களின் கூட்டத்தைக் கலைத்துவிட, மாறன் உணவு மேஜையை நோக்கி சென்றான். பூங்கொடி பயபக்தியுடன் வந்து கொண்டிருந்த கணவனை சாப்பிட அழைத்தார்.

“ஏங்க சாப்பாடு.” எனப் பூங்கொடி சொல்ல, மனைவிக்கு பதில் சொல்லாது சிறு தலையசைப்பை மட்டும் தந்தவர், நாற்காலியில் இருந்த தன் வெள்ளை சட்டையை அணியும் போது தான் கவனித்தார் அது இருந்த இடத்தை. கையில் கொடுக்காது நாற்காலியில் அல்லவா அது கிடந்தது.



Advertisement

சப்… என்ற சத்தம், ஒலித்துக் கொண்டிருந்து சுப்ரபாதத்தையும் மீறி கேட்டது. விழுந்தது பூங்கொடிக்கு.

“ஒரு சட்ட மயிற கூட ஒழுங்கா கைல எடுத்து குடுக்க தெரியல. பாரு கசங்கிருக்கு. நீ எல்லாம் எதுக்கு தா பூமிக்கி பாரமா பிறந்து தொலச்சியோ.” என வசை பாட, பூங்கொடி கலங்கவில்லை. தினமும் கேட்கும் வசனங்கள் என்பதால் பழகிப் போனது.

Advertisement

Advertisement

உணவு மேஜையில் வரிசையாக அமர்ந்திருந்தனர் அந்த வீட்டு ஆண்கள். பூங்கொடி பரிமாற, அன்பழகன் தட்டில் உள்ளதை பேசாது எடுத்து உண்ண, குணசேகரன் கையில் சாம்பார் பட்டுவிட்டது என ஒரு அடி. இட்லியை வைக்க நேரமானது என ஒரு திட்டு. சாப்பாட்டில் அது இல்லை இது இல்லை ஆயிரம் குறைகளை கூறிக் கொண்டே உண்டார்.

அதைக் கேட்ட அன்பழகனுக்கு தன் மீதே கோபம் வந்தது. ஏனெனில் அவரும் அப்படி தான் இருந்தார். மனைவியை கை நீட்டி அடிப்பது தான் வீரம் என்று நினைத்து. காரணமே இல்லை என்றாலும் கூப்பிட்டு வைத்து வசை பாடுவதும் அடிப்பதுமாக இருந்தவர் தான். இப்போது உணர்கிறார் மனைவியின் அருமையை. உடன் இல்லாத போது வந்த ஞானோதயம்.

Advertisement

எப்பொழுதும் அகிலு பாட்டியை தாங்கி கொண்டும் கெஞ்சிக் கொண்டே இருக்கும் அனந்த்ராமன் அப்போது பொண்டாட்டி தாசனாக தெரிந்தார். ‘பொட்ட பயெ.. பொண்டாட்டி முந்தானைய பிடிச்சிட்டு என்னெரமும் கடக்கான். ‘ என்றவருக்கு, இப்போது அனந்த் தாத்தவை போன்று துணைவியின் நலன் விரும்பி அக்கறை கொண்டு கவனித்திருந்தால் இப்படி நோய் வாய் பட்டு பாதியிலேயே என்னை விட்டு என் இல்லாள் சென்றிருக்க மாட்டாளோ என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது.

இளமையில் தான் செய்த தவறுகளைக் கண்டு கொள்ளாது அடி வாங்கி மிதி வாங்கியவள் இறையடி சேர்ந்து, முதுமையில் வதை பட்டு சாகட்டும் எனத் தனித்துவிட்டு தண்டனை தந்து சென்றுவிட்டாள். என மனம் வருந்த கண்ணாடி சட்டத்தில் புன்னகை சிந்திய மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து கண்களங்கினார் அன்பழகன்.

“என்ன தாத்தா நீ? ஆனா உனா பாட்டிய பாத்து உறைஞ்சி போய் உக்காந்திருக்க. நிகழ் உலகத்துக்கு வா.. ” என மாறன் தான் உலுக்கி குலுக்கிய பின் தான் அன்பழகன் பேரனின் பக்கம் திரும்பினார்.

“என்ன லவ்வா? அவ்வளவு லவ் இருந்தா நீயும் கூடவே போக வேண்டியது தான.” மானன் எரிச்சலுடன் சொல்ல,

” ஹிம்… சாவு எல்லாருக்கும் நினைச்ச உடனே கிடைச்சிடாது. அவெ அவெ அனுபவிக்க வேண்டியத… முழுசா அனுபவிச்சதுக்கு அப்றம் தான் அது, வரம் மாதிரி கிடைக்கும். என்னை மாதிரி ஆளுங்களுக்கு மரணங்கிறது சாப விமோசனம்.”

“அப்ப தவம் இருங்க, சாவ வேண்டி” என்க, அவருக்கு உணவு கசந்தது. வேகமாக சாப்பாட்டு தட்டை தள்ளி வைத்து விட்டு எழுந்து சென்றார் அவர்.

“அமைதியா இருடா.. ” என்பது போல் கண்ணைக் காட்டினார் பூங்கொடி. ஆனால் குணசேகரனோ மகனை மெச்சும் பார்வை பார்த்தார். அடுத்து தன் நிலையும் இது தான் என்று அறியாது மகனை கண்டிக்கவில்லை அவர்..

“அவருக்கு என்ன கொற இந்த வீட்டுல. நல்லா தான பாத்துக்கிறோம். அப்றமும் என்னென்னத்தையோ சொல்லிட்டு திரியுறிங்க. அதுதான் செத்துடுச்சில்ல.. இவரு தம்பி மாதிரி சதாபிஷேகம் நடத்தணும்னா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான… ” என தாத்தாவை வசை பாடிய படியே உண்டவனுக்கு தெரியாது, மனைவியை இழந்த ஆணின் வலி.

மனைவி என்பவள் கணவனை காக்கும் கேடயம். இரும்பை விட வலுவான கவசம். ஆணின் பாதுகாப்பு பெண்ணிடம். இதை ஒத்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் அது தான் உண்மை.

தனக்கு அவன் கொடுங்கோல் அரசனாக இருந்து கொடுமை படுத்தினாலும், பிறந்த வீட்டிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி கணவனின் பெயருக்கு இழுக்கு வந்தால் முதல் ஆளாக குரல் கொடுத்து எதிர்த்து நிற்பது அவள் தான்.

எத்தனை அடிகள், உதைகள் வாங்கினாலும் கணவன் வாங்கி வரும் விலை மலிவாக இருந்தாலும் அந்த பொருள் தனக்காக வாங்கி வந்திருக்கிறார் என்று அகம் மகிழ்ந்து, அடி வாங்கியதை மறந்து விடுவாள்.

அவள் இருக்கும் வரை பிள்ளைகள் தந்தையை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டார்கள். அதை ஆண்கள் தன் மீது பிள்ளைகளுக்கு இருக்கும் மரியாதை என்று நினைத்தால் அது பாதி தவறு. எங்கே தந்தையை எதிர்த்து நின்றால் தாயுள்ளம் நோகுமோ என்ற பயத்தில் தான் பல பிள்ளைகள் தந்தையின் செயல்களுக்கு அமைதியாக தலையசைக்கின்றனர்..

சரி பாதி.. நல்லாள்.. மனைத்தக்காள்… அவள் இல்லை என்றால்.. இதோ அன்பழகனின் நிலை தான்.. ‘ சாப்பிட்டாச்சா.. என்ன பண்ணுது உடம்புக்கு.. சுடு தண்ணீல குளிக்கலயா.. இந்தாங்க மாத்திரை.. காப்பி கலக்கிட்டேன் குடிச்சிட்டுங்க.. ‘ என உரிமையாய் பழக யாரும் இல்லை..

கட்டில் இன்பம் சில வயது வரை மட்டுமே. அதைக் கடந்த நிலையில் ஆண்களின் எதிர்பார்ப்பு மனதோடு பேச, மனம் நிறைய பேச ஒரு ஜீவன்.

மனைவியின் பணிவிடையில் சுகம் கண்டவருக்கு அவரின் இழப்பு மனரீதியான பல பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

‘வயசாகிடுச்சில… வாய மூடிட்டு இருக்கணும்… சும்மா வந்து வந்து என்னைத்தையாது சொல்லிட்டு இருக்க கூடாது. எங்களுக்கு தெரியாதா வியாபாரம் பாக்க… அத பண்ணாத இத பண்ணாதன்ட்டு. போங்க அங்கிட்டு.. ‘ என மகன், ஏன் பேரனே செல்லும் போது கம்பீரமாக நின்ற ஆணிவேர். இருந்தாலும் ஒன்று தான் இறந்தாலும் ஒன்று தான் என்பது போல் சல்லி வேராக மாதிரி போகிறது.

அன்பழகணும் அப்படித்தான். தன்னை போலவே மனைவியின் அருமை தெரியாது மகனை வளர்ந்து வைத்து விட்டோமே என்ற கவலை அவருக்கு எப்போதும் உண்டு.

மகனை வளர்ப்பதில் தவறிழைத்து விட்டோம். பேரனையாவது நன்முறையில் வளர்க்க வழி காட்டச் சொல்லி, காலம் கொண்டு சென்ற தன் மனைவியை வேண்டிக் கொண்டார். மாறனுக்கும் பூங்கொடிக்கும் இடையே நல்ல ஆரோக்கியமான உறவு இருப்பதை கண்டு அவ்வப்போது மகிழ்ந்து போவார். ஆனாலும் பல நேரம் மாறன் குணசேகரனை போல் ஆணாதிக்கவாதியாக வளர்வது வருத்தமாகத்தான் இருக்கும்.

“நாளைக்கி சஞ்சய் மகளுக்கு கல்யாணம்… தெரியுமா? ” என்றார் குணசேகரன்.

அவரின் குரலில் என்ன இருக்கிறது என்று அவருக்கு மட்டுமே தெரியும். மனிதன் அறுபது வயதிலும் சமுத்திரம் படத்தில வர்ற வில்லன், சத்தம் போடாத ஜமின்தார் போல் வித்தியாசமான மாடுலேஷன பேசுவார். ஆனால் அடி ஒவ்வொன்றும் இடி தான். வார்த்தைகள் ஒவ்வொன்றும் நஞ்சு தீட்டிய கூர் வாள் தான்.

“ம்… தெரியும் டாட்… ஜானவிய நான் கூட்டீட்டு போலாம் இருக்கேன். பார்த்திபன்ட்ட இருந்து எடுத்த டிசைன்ஸ் எல்லாம் நகையா மாத்தியாச்சி. அத ஜானவிக்கு போட்டு கூட்டிட்டு போகணும். நம்ம கூட பிஸ்னஸ் வச்சிக்க மறுத்த அந்த சஞ்சய் அத பாக்கணும். எம்பொண்ணு போட்டிருக்குற மாதிரியே இருக்குன்னு அந்த மாணிக்கத்தோட குடும்பத்துக்கூட வச்சிருக்குற பிஸ்னஸ் டீல கேன்சல் பண்ணி அவமானப்படுத்தணும். அத நான் வீடியோ எடுத்து வைக்கணும்.. ” என்று அவன் சொல்லி முடிக்கும் முன், அவர் வேட்டியை இறுக்கி பிடித்து கட்டியிருந்த பெல்ட்டால் விலாசத் தொடங்கி விட்டார் வீரமாறனை. பூங்கொடி தடுக்க வந்து பல அடிகளை வாங்கிக் கொண்டார்.

“ஸ்…ஆ.. டாட்.. ஏன் அடிக்கிறீங்க?” என அடிவாங்கிக் கொண்டே கதற,

“முட்டாள்… முட்டாள்… நான் தான் அப்பவே சொன்னேனே. ப்ளாட்ட அந்த சிறுக்கிக்கு எழுதி குடுத்திடாத. முதல்ல டிசைன்ன வாங்குன்னு. கேட்டியா? கேட்டியா.. ***…. ” என பீப் சத்தம் போடும் அளவுக்கு சொல்லி சொல்லி அடித்தார்.

“இப்ப என்ன வந்திடுச்சி அதுனால? டிசைன் தான் நம்ம கைக்கு கிடைச்சிருச்சே.”

“இல்ல…அது உண்மையானது இல்ல. ஒரிஜினல் தொலையவே இல்ல. தொலஞ்சிருந்தா இன்னேரம் அந்த சஞ்சய் எங்கூட பிஸ்னஸ் பேச வந்திருப்பான். அப்படி வரல… அத்தோட அந்த மாணிக்கம் நிம்மதியா மகனுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டு இருந்திருக்க மாட்டான். நீ கொண்டு வந்தது சஞ்சய்கிட்ட அப்ரூ வாங்குன டிசைனை கிடையாது. ” என்றவருக்கு பாவம் இப்பொழுது தான் அவருக்கு உண்மை தெரிய வந்தது. அதான் கத்திக் கொண்டே இருக்கிறார்.

“அந்த *** நம்மல ஏமாத்திட்டா… விடக் கூடாது..அந்த சிறுக்கியயும் மாணிக்கத்தையும் சும்மா விடக்கூடாது…” என உறுமியபடி அவர் வெளியேற, தன் தம்பி குடும்பத்திற்கு இன்னும் என்னென்ன கஷ்டங்களை தரப்போகிறார்களோ என கவலையில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அன்பழகன்…

பிரம்மாண்ட ஹோட்டல். அதன் வாயிலில் ஆட்டோவில் வந்திறங்கினாள் பாரதி. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சுடிதாரில், கற்களும் பாசிகளும் பளிச் பளிச் என மின்ன தேவலோகத்து ரதியாக காட்சி தந்தாள் பாரதி. உடலுடன் மனமும் பொலிவு பெற்றவளுக்கு எடை சற்று கூடியிருக்கும் போலும் ஒரு சுற்று தசை வைத்திருந்தது. முகம் கொள்ளாப் புன்னகையுடன் மட்டற்ற மகிழ்ச்சியில் தன் நடையை தொடர்ந்தாள் பாரதி.

சுருக்கமா சொல்ல வேண்டுமானால் ஒரு அப்பார்ட்மெண்ட் ஓனருக்கு இருக்க வேண்டிய மிடுக்கு இருக்கிறது என்று சொல்லாம். சொந்த வீட்டு காரியாமாம்…

தன் மிடுக்கான நடையுடன் அந்த ஹோட்டலில் பார்ட்டி ஹால் எங்கு உள்ளது என விசாரித்து மாடிப்படிக்கட்டில் ஏறி சென்றவளை வரவேற்றது ஒரு பலகை, யாருக்கு நிச்சயதார்த்தம் என்பதை கூறுவது போல்.. நிச்சயதார்த்தம் நடக்க போகும் மணமக்களின் பெயரை தெர்மாகோலில் எழுதி வெட்டி ஒட்டி இருந்தனர்.

இந்த பார்த்திபன் பக்கத்தில் பாரதியின் பெயரைத் தவிர மீதி எல்லா பெண்களின் பெயருக்கும் இடம் இருக்கும் போல…

இன்று பூஜாக்கும் பார்த்திபனுக்கும் நிச்சயதார்த்தம். அறிந்தவங்கள், தெரிஞ்சவங்களுக்கு மட்டும் சொல்லி இந்த விழாவை எளிமையாக முடிக்க உள்ளனர். திருமணத்தைச் சிறப்பாக செய்யலாம் என்று ஜெயசீலனும் ரேணுகாவும் சொல்ல… அவர்களை செய்ய எனச் சண்முகமும் நேரம் காலம் பார்த்துக் கொண்டிருந்தார்.

தோழியின் பெயரை தன் கரத்தால் வருடியவள் ஹாலிற்குள் சென்றாள். சீக்கிரம் வந்து விட்டாள் போலும் அப்பொழுது தான் நாற்காலிகளை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். அவளைக் கண்ட ரேணுகா,

“ரூம் நம்பர் 205 ல பூஜா இருக்கா. போய் பாரு. ஹா… ஃபங்ஷன் முடியிற வர அந்த ரூம்லயே இரு. நீ யாருன்னு கேட்டா நான் பதில் சொல்ல வேண்டிய வரும். அந்த வேலை எனக்குப் பிடிக்கல. அதுனால மாப்பிள்ள வீட்டுகாரங்க வந்து போற வர அங்கயே இரு.” என்றார் அவர்.

‘நான் மாப்பிள்ள கூட மட்டுமில்லாம அவ மாமனுங்களையும் பாத்து பேசி பழகின்னு பிசினஸ்ஸே பண்ணிட்டு இருக்கேன். இதுக்கப்புறம் நீங்க பார்த்திபன் கண்ல என்னைக் காட்ட கூடாதுன்னு நினைக்கிறத பாக்கும் போது ஒரு பழ மொழி தான் நியாபகம் வருது. என்னென்னா முழுசா நனைஞ்ச பின்னாடி இன்னும் எதுக்கு முக்காடுங்கிறது தான்.’ என பாரதி மனத்திற்குள் ரேணுகாவிற்கு கவுண்டர் கொடுத்தபடி திரும்ப,

“இந்தா… இவங்களையும் கூட்டீட்டு போ. பார்லர்ல இருந்து மேக்கப் பண்ண வந்திருக்காங்க.. கூடமாட ஒத்தாச பண்ணி இவங்க கூடவே அனுப்பி வை. நீ வந்திடாத.” என்றார் அவர்.

பாரதி எதுவும் சொல்லாது பூஜாவைப் பார்க்க சென்றாள்..

“இது உன் கலருக்கும் நல்லா இருக்கும். உன்னோட சேலைக்கும் மேட்ச்சா இருக்கும். இந்தா பூஜா… ” என கரம் முழுவதையும் மறைக்கும் மெட்டல் வளையல்களை அணிவித்தாள் பாரதி.

கண்ணுக்கு மை இட்டு நெற்றியில் சிறிய பொட்டு வைத்து,‌தலை அலங்காரங்கள் அனைத்தையும் ப்யூட்டிஸ்யன் முடித்து விட, கண்ணாடியில் தெரிந்த தன் தோழியின் அழகிற்கு திருஷ்டி சுத்தி போட்டாள் பாரதி.

“செம்ம அழகா இருக்க.” என்றாள் உளமார்ந்த அன்போடு.

“இத மாப்பிள்ள பாத்தா ஒரே ரொமான்ஸ் தா.. ” என வந்த பெண் கேலியாக கூற, பூஜா முகத்தில் நாணம் உதயமாகவில்லை. அதை கண்ட பாரதி ஏன்? என்று கேட்டாள்..

“ம்ச்… நீ வேற. சும்மா இரு. எனக்கு பார்த்திபன் மேல அந்த மாதிரி செக்ஸ்வல் ஃபீல் வந்தது இல்ல..” என்றாள் சற்று சோகமாக.

“என்ன!!”

“அதான்டி கெமிக்கல்ஸ் ரியாக்ஷன். இந்த படத்துல காட்டுவாங்களே கண்ணும் கண்ணும் பாத்துக்கும்… கையும் கையும் பேசிக்கும்… கட்டி பிடிச்சி… பின்னாடி பேக்ரவுன்ல இளையராஜா ம்யூசிக் கேக்குமே. அது எதுவும் கேட்டது இல்ல. பட் பார்த்திபன் ரொம்ப நல்லவன். கண்ணியமா நடந்திப்பான். கேர்ள்ஸ்க்கு ரெஸ்பெக்ட் குடுத்து பழகுவான். பெஸ்ட் ஃப்ரெண்டு. என்னா லவ்வுன்னு ஒன்னு தா வரல..” என வருத்தப்பட,

“கண்டிப்பா கல்யாணம் ஆனா வரும்.. நேரமாச்சி பார்த்திபன் வீட்டுல இருந்து வந்திடுவாங்க.” என்றவளை அழைத்துச் செல்ல அவளின் உறவினர்கள் வந்தனர்.

“நீயும் எனக்கு ஃப்ரெண்டா பக்கத்துல வந்து நில்லேன் பாரதி. தனியா எப்படி இருப்ப… ப்ளீஸ்… ” என ஆசையுடன் பார்த்தாள் பூஜா. அவளுக்கு தெரியும் அன்னையின் குணம்.

“பொண்ணுக்கு நடக்கப்போற நல்லத பாக்கணும்னு இன்னைக்கி ஆன்ட்டி சந்தோஷமா இருக்காங்க. அத கெடுக்க வேண்டாம் பூஜா. போ… ” என்ற பாரதி தன் தோழியின் நிச்சயத்தில் உடன் நிற்கவில்லை என்றாலும் சந்தோஷமாகவே இருந்தாள்.

அறையில் இருக்க பிடிக்காது. வெளியே காரிடாரில் நடை பயின்றவளின் கண்களுக்கு பார்த்திபன் ஹோட்டலுக்கு காரில் வந்திறங்கும் காட்சி தெரிந்தது.

அவளை ராமிற்கு அறிமுகம் செய்ய என மெக்கானிக் ஷெட்டிற்கு வந்த போது பார்த்தது. அதன் பின் இரு மாதங்களுக்கு பிறகு நேற்று தான் பார்த்திபனைக் கண்டாள் பாரதி. அதுவும் பதிவாளர் அலுவலகத்தில், வீட்டை தன்னிடம் ஒப்படைக்கும் போது மாறனின் கண்களில் படாத படி தூரத்தே நின்றிருந்தான்.

முதலில் அவனை பார்த்து ராஜா தான். அவனைப் பாரதியை அழைக்கும் படி பார்த்திபன் கை காட்ட, அவள் பார்வையைச் சுழலவிட்டு பார்த்திபனை தேடினாள். இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்டது. அப்போது தன் கட்டை விரலை உயர்த்தி ஆல் த பெஸ்ட் என்றானே பார்க்கலாம்… அந்த உருவம் பாரதியின் மனத்தில் அப்படியே ஒட்டிக் கொண்டது பாரதிக்கு. அவள் மனம் தனக்கான ஒரு ஜீவன் துடிப்பதை உணர்ந்தது.

பிரச்சினைகள் கார் மேகம் போல் சுற்றி வளைக்கும் நேரம் அனைத்தும் பனி போல் விலகிச் சென்றது. எல்லாம் பார்த்திபன் என்ற மந்திரவாதியால் நிகழ்ந்தது. திருட்டு பட்டம் கட்டி பாரதியை மாட்டி விடாது. மிகப்பெரிய இக்கட்டில் இருந்து மீண்டு வர உதவியது பார்த்திபன் பால் அவளை ஈர்க்கும் முதல் படியாய் மாறி இருந்தது.

இதுவரை எந்த ஆடவனையும் நின்று ரசித்தது இல்ல. ஏன் ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றியது இல்லை. பெண்மைக்கு உண்டான எந்தக் காதல் உணர்ச்சிகளுக்கும், வயது காரணமாக தோன்றும் பருவ உணர்ச்சிகளுக்கும், முக்கியத்துவம் கொடுக்காது இருந்தவள் இப்போது ரசிக்கிறாள். முதல் முறை… அதுவும் தன் தோழிக்கு என நிச்சயம் செய்யப்பட்டவனை.

க்ரே கலர் கோர்ட் சூட்… உள்ளே ப்ளாக் கலர் ஷர்ட்… அடர்ந்த சிகையை கலையாத படி ஜெல் கொண்டு அடக்கியிருந்தவன், கண்களில் கூலர்ஸ் மின்ன மிகவும் ஸ்டெயில்லாக இறங்கி நடந்தவனின் நடையில் பெண்ணவளின் மனமும் சேர்ந்து நடக்க தொடங்கியது. வேகமாக அந்த எண்ணத்திற்கு கடிவாளம் இட்டவள்.

“ம்.. ச்சி… இவன போய்யா லுக்கு விட்டோம். இவெ எனக்கு மட்டுமில்ல எல்லா பொண்ணுங்களுக்கு இப்படி தான் பண்ணுவான்.” என்பது போல் அவள் எண்ணும் வகையில் பார்த்திபன் அங்கிருந்த மங்கையர்களைப் பார்த்து கை அசைத்து அவர்களை நோக்கி நடக்க தொடங்கினான்.

“டேய்… அடக்கி வாசிடா ” என வின்சென்ட்டும்,

“மாப்ள வாசல்லயே ஆரம்பிச்சிட்டா எப்டி? உள்ள நிறைய கேர்ள்ஸ் இருக்காங்க வா. உள்ள வந்து உ சேவைய தொடரு…” என சந்ருவும் சேர்ந்து இழுத்து தான் வந்தனர்.

இரு குடும்பத்தின் சம்மதத்துடன், முறைப்படி நிச்சய பத்திரிக்கை படிக்கப்பட்டு. பார்த்திபன் வைர மோதிரத்தை பூஜாவின் விரலில் அணிவித்து விட சிறப்புடன் இருவருக்கும் நிச்சயம் நடந்தேறி திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.

பெண் வீட்டாரைக் குறை சொல்லிக் கொண்டும், எப்படி சண்டை மூட்டி விட்டு இந்த திருமணத்தை தடுக்கலாம் என்று சண்முகம் போட்ட எந்த ஒரு திட்டமும் அப்போது எடு படவில்லை. விடுதியில் தங்கி படிக்கும் மகளின் காதில் இதைப் பற்றிப் போட்டு வைத்தார். மகளின் கண்ணீரைக் கண்டால் பார்த்திபன் மனம் மாறி விடுவான் என்று நம்பினார்.

அவர் செய்த சில கலாட்டக்களை ரேணுகா குறித்து வைத்துக் கொண்டார், திரும்பி தர வேண்டி.

புகைப்பட கலைஞர்களின் தொல்லையில் இருந்து தப்பித்து ஜோடிகள் உணவுண்ண செல்ல, அப்போது பார்த்திபனின் ஃபோன் சிணுங்கியது. பேசி முடித்தவன்,

“என்ன பேங்க்ல லோன் வாங்கிக்க சொல்லி வந்த கஸ்டமர் கேர் கால்லா..” என்றான் சந்ரு.

“ம்ச்… மாம்ஸ் ஃபோன்ல சார்ஜ் கம்மியா இருக்கு. சுவிட்ச் ஆஃப் ஆகிடும் போல. உங்கிட்ட சார்ஜர் இல்லன்னா பவர் பேங்க் இருக்கு?” எனக் கேட்க,

“அப்படி ஜார்ஜ் போட்டு யார்க்கிட்ட பேசப் போற… வெட்டியா ஊர் சுத்துற உனக்கு யாரு கால் பண்ணப் போறா? அது ஸ்சுவிட் ஆஃப்லயே இருக்கட்டும். அது தா நல்லது.” சந்ரு கேலியாக சொல்ல…

“மாம்ஸ்.. டேமேஜ் பண்ணாத… குடு…

 முக்கியமான match இருக்கு மாம்ஸ்.”

“பொய் சொல்லாத… +18 வீடியோ தான பாக்க போற.” என்றவனை முறைக்க,

“என்னோட ரூம்ல பவர் பேங்க் இருக்கு பார்த்தி… நான் போய்…” பூஜா சொல்லி முடிக்கும் முன்,

” நோ… நோ… இந்த மாதிரி நேரத்துல நீ அலைய கூடாது.” என பார்த்திபன் தடுத்தான்.

“அது என்ன புள்ளத்தாச்சியாவா இருக்கு? இந்த மாதிரி நேரங்கிற.” என்றான் சந்ரு.

“சும்மா இரு மாம்ஸ்.. கல்யாண பொண்ண வேல செய்ய விட்டு வேடிக்க பாக்குற ஆள் நான் இல்ல. நானே போய் எடுத்திட்டு வர்றேன்.” என அறை எண்ணை கேட்டுக் கொண்டு ஓடினான்.

அறைக்குள் சென்றவன் பூஜாவின் ஹேன்ட் பேக்கில் இருந்து வேண்டியதை எடுத்துக் கொண்டு திரும்பும் நேரம் இயற்கை அழைப்பு வந்து விட்டது போலும். ‘அதான் பாத்ரூம் இருக்குள்ள.’ என எண்ணி உள்ளே சென்றான்.

அப்போது ஃபோனில் யாருடனோ பேசிய படி உள்ள வந்த பாரதி, கழிவறையின் சத்தம் கேட்டு, அறைக்குள் இன்னொரு நபர் இருக்கிறான் என்பதை அறிந்து அருகில் இருந்த பூச்சாடியை கையில் எடுத்துக் கொண்டு பாத் ரூம் கதவின் பக்கத்தில் நின்றாள்.

பாவம்… பாத்திபன் மண்டை உடையப் போகிறது.

தென்றல் வீசும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!