Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மான்விழியில் வீழ்ந்தேனடி!

மான்விழி – 12

அன்று காலை, நேத்ரநயனி எப்போதும் போல விடுதியில் இருந்து கிளம்பியவள், பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள்.

 

அப்போது அவள் எதிரே க்ரீச்சென்ற சத்தத்துடன் தீடிரென்று ஒரு டாக்சி வந்து நிற்கவும், பதறி நகர்ந்து நின்றாள்.

 



Advertisement

அந்த காரின் கண்ணாடியை இறக்கியபடி, உள்ளிருந்து எட்டி பார்த்து விகாரமாக சிரித்தான் பாண்டி.

 

“என்ன நேத்ரா, பயந்துட்டியா? நான் தான். உன்னை இங்கே பார்க்கவும் சடர்ன் ப்ரேக் போட்டேன். அதான்” என்றான்.

Advertisement

 

Advertisement

நேத்ரா ஒரு கணம் பாண்டியை கண்டு அதிர்ந்தாலும், நொடிகளில் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு, அவனை கவனிக்காதவாறு நகர்ந்து நின்று பஸ் வருகிறதா? என்று பார்த்தாள்.

 

மீண்டும் காரை அவளருகே கொண்டு சென்று நிறுத்தியவன் “நேத்ரா, ஏன் பேசமாட்டேங்கிறே. ஏதோ போதாத காலம் குடிச்சு தொலைச்சுட்டேன். குடி குடியை கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க. குடியால குடும்பத்தோடு இருக்க வேண்டிய நான் ஒத்தையில சுத்திட்டு இருக்கேன். நான் மட்டும் அன்னைக்கு குடிக்காம இருந்திருந்தா நாம இரண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி ஆகியிருப்போம், இந்நேரம் நீ வயித்த தள்ளிட்டு இருந்து இருப்பே” என்றான் அவளை வெறித்து பார்த்தபடி.

Advertisement

 

“ச்சே” அருவருப்புடன் முகத்தை சுழித்தவள், பஸ்ஸிற்காக காத்திருக்க விருப்பமில்லாமல், அங்கே செல்லும் ஆட்டோவை அழைக்க தொடங்கினாள்.

 

“நேத்ரா, ஏன் ஆட்டோவுக்கு எல்லாம் வீணா செலவு பண்றே, என்னோட டாக்சியில வா, நான் உன்னை டிராப் பண்றேன்” என்றான்.

 

அவள் பாண்டியை சிறிதும் சட்டை செய்யாமல் அங்கே வந்து நின்ற ஆட்டோவில் ஏறி சென்றாள்.

 

“எவ்வளவு திமிர்? நான் இவ்வளவு பேசறேன். ஒரு வார்த்தை பேசினாளா?” என்று பல்லை கடித்தான் பாண்டி.

 

நேத்ரா அவன் ஆட்டோவை பாலோ செய்கிறானோ என்று பயந்து பின்னால் திரும்பி பார்த்தபடி, “அண்ணா “நலமுடன்” மருத்துவமனைக்கு கொஞ்சம் சீக்கிரமா போங்க, நேரா மெயின்ரோடு பக்கமாக போகாமல் வேறே வழியிருந்தால் அந்த பக்கம் போங்க” என்றாள் சற்று பதட்டத்துடன்.

 

பாண்டியை கண்டதும் உள்ளுக்குள் பதட்டம் ஏற்பட்டாலும், அவனிடம் தன் பலவீனத்தை காட்டாமல் இருந்தாள். நிச்சயம் அந்த பஸ் நிறுத்தத்தில் ஏதாவது வம்பு செய்வான் என்றே அவள் ஆட்டோவில் ஏறிவிட்டாள். அவளை பின்தொடர்ந்து வந்து அவள் எங்கே வேலை செய்கிறாள் என்று அவன் தெரிந்து கொண்டால் பின்னர் தொடர்ந்து தொல்லை கொடுக்க தொடங்கிவிடுவான் என்பதாலேயே ஆட்டோ டிரைவரை மாற்று வழியில் செல்ல சொன்னாள்.

 

ஆனால் பாண்டி இதற்கு முன்பே அவள் வேலை செய்யும் மருத்துவமனையில் வைத்து அவளை பார்த்து விட்டான் என்பது நேத்ராவிற்கு தெரியவில்லை.

 

நேத்ரா மருத்துவமனையை அடையும் முன்பே பாண்டி அந்த இடத்தை அடைந்து விட்டு, காரை மறைவாக பார்க் செய்துவிட்டு, அங்கிருந்த செக்யூரிட்டி அறையின் பின்னால் ஒளிந்து நின்றான். நேத்ரா அவசரமாக ஆட்டோவில் இருந்து இறங்கி பணத்தை கொடுத்துவிட்டு சுற்றும் முற்றும் பாண்டியின் டாக்சி தெரிகிறதா என்று பார்த்தாள், அவன் இல்லை என்றதும் பெருமூச்சுடன் மருத்துவமனைக்குள் சென்றாள்.

 

உண்மையில் தான் தனியாக இருப்பது அவனுக்கு தெரியக்கூடாது என்று தான் அவள் பயமே. திருமணத்திற்கு முன்பே பொது இடம் என்றும் பாராமல் அவள் பின்னால் சுற்றித்திரிவான். இப்போது அவளின் உண்மை நிலை தெரிந்தால் அதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள தயங்க மாட்டான். அதுமட்டுமில்லாமல் தன் தந்தைக்கு போன் செய்து விஷயத்தை கூறிவிட்டால், அவர் உடல்நிலை என்னாகுமோ என்ற பயம் வேறு இருந்தது.

 

நேத்ரா செல்லும்வரை, ஒருவித குரூரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் பாண்டி.

 

நேத்ரா உள்ளே சென்றதும், ஜனனி அவளை அழைத்தாள், “மிஸ்.நேத்ரா வாழ்த்துக்கள், உங்க வேலையை டாக்டர் கன்பார்ம் பண்ணி இருக்கார். நீங்க வேணும்னா மருத்துவமனை வளாகத்தில் இருக்கிற ஹாஸ்டல்ல இலவசமாக தங்கிக்கலாம். இது உங்களோட சம்பள பணம்” என்று சொல்லி ஒரு கவரை நீட்டினாள்.

 

ஹாஸ்பிட்டலுக்கு உட்பட்ட விடுதியில் தங்குவதால், வாடகை பணம் இனி மாதாமாதம் மிச்சமாகும், ஆனாலும் சுதாவோடு இப்போது தான் நல்ல நட்பில் இணைந்திருக்கிறாள். அதற்குள் அவளை விட்டு பிரிய வேண்டுமா? என யோசித்தாள் நேத்ரா.

 

ஜனனியிடம் சம்பள கவரை வாங்கியபடி, “தேங்க்ஸ் சிஸ்டர். இப்போதைக்கு நான் ஏற்கனவே தங்கியிருக்கிற விடுதியில் தங்கிக்கிறேன். தேவைப்பட்டால் மீண்டும் உங்களிடம் வந்து கேட்கிறேன்” என்று சொல்லிவிட்டு யுனிபார்ம் மாற்றும் அறைக்கு சென்றாள்.

 

அவள் சென்றதும் ஜனனி, “டாக்டர் நீங்க சொன்னது போல, நம்ம மருத்துவமனை வளாகத்தில் இருக்கிற ஹாஸ்டல் இலவசம்னு சொல்லியும், நேத்ரா இப்போதைக்கு வேண்டாம், வேணும்னா சொல்றேன்னு சொல்லிட்டு போறாங்க டாக்டர்” என்றாள் ஜனனி

 

“சரி ஜனனி, அவங்க விருப்பம், கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று போனை வைத்தான் சித்தார்த்.

 

உண்மையில் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்க, குறைந்தது ஓராண்டாவது வேலை செய்து இருக்க வேண்டும். அப்போது தான் தங்க அனுமதி உண்டு. ஆனால் சித்தார்த், நேத்ராவிற்கு விடுதியை ஏற்பாடு செய்து தரும்படி போன வாரமே ஜனனிக்கு சொல்லியிருந்தான்.

 

ஜனனிக்கும் சித்தார்த் எதற்காக நேத்ராவிற்கு சலுகை கொடுக்கிறான் என்ற கேள்வி தோன்றினாலும், அதைப்பற்றியெல்லாம் ஆராய்ச்சி எதற்கு என்று விட்டு விட்டாள். அதற்குள் ஜமுனா ஏற்படுத்தி இருந்த வதந்தி ஜனனிக்கும் தெரிய வந்தது. அவளுமே நேத்ராவை தவறாக தான் நினைத்தாள்.

 

ஆனால் தங்கும் அறை இலவசம் என்று சொல்லியும் மறுத்துவிட்டு செல்கிறாளே என்று ஆச்சரியமாக இருந்தது ஜனனிக்கு.

 

சித்தார்த் தான் கொதித்துக் கொண்டு இருந்தான். இரவெல்லாம் நேத்ரநயனியின் விழிகளில் இருந்து நீந்தி கரையேற முடியாமல் தவித்து தூக்கத்தை தொலைத்திருந்தான். 

 

அவனும் எப்படியாவது அவளை நெருங்க தான் நினைக்கிறான். ஆனால் அவள் தான் அதற்காக எந்த வழியையும் கொடுக்காமல் தடை போட்டுக் கொண்டே இருக்கிறாள்.

 

விருப்பமில்லாத திருமணத்தை செய்து அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ள நானே தயாராக இருக்கும் போது விவாகரத்தை பற்றி பேசுகிறாள். திருமணமாகி கணவன் வீட்டிற்கு வராமல் அவளாக விடுதியில் சென்று தங்குகிறாள்.

 

நானா அவளை போக சொன்னேன்? அவள் எப்போது என்னை கணவன் என்று உணர்ந்து என்னுடன் வருகிறேன் என்று சொல்கிறாளோ அதுவரைக்கும் நானாக அவளை அழைக்கபோவதில்லை என்பது தான் சித்தார்த்தின் மன ஓட்டமாக இருந்தது. (ஆனால் அவனாகவே அவளை அவன் வீட்டிற்கு இழுத்துச் செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை அப்போது அவன் உணர்ந்திருக்கவில்லை).

 

தினமும் காலை அவசரமாக எழுந்து பஸ் பிடித்து மருத்துவமனைக்கு வந்து செல்கிறாளே, குறைந்தப்பட்சம் மருத்துவமனை விடுதியில் தங்கினால் அவளுக்கு அலைச்சல் இருக்காதே என்று எண்ணி தான் விதிமுறைகளை மீறி ஜனனியிடம் நேத்ராவிற்கு அறையை ஏற்பாடு செய்து கொடுக்கும்படி கூறியிருந்தான்.

 

ஆனால் மகாராணி அதுக்கு கூட ஒத்துக்க மாட்டாளாமே! திமிர், உடம்பெல்லாம் திமிர்! இனி இவளை நம்பி மனசை பறி கொடுக்காதே சித்தார்த்! முக்கியமா அவள் கண்ணை மட்டும் பார்க்காதே! அந்த இடம் மிகவும் ஆபத்தானது! என்று அவனுக்கு அவனே அறிவுரை சொல்லிக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினான்.

 

நேத்ரா சித்தார்த்தின் வருகைக்காக காத்திருந்தாள். ஒரு ஊழியராக அவனுக்கு அவள் நன்றி கூற வேண்டும் என்று தோன்றியது. நல்ல சம்பளம் கொடுத்ததோடு, தங்கும் விடுதிக்கும் ஏற்பாடு செய்ய சொல்லியிருக்கிறானே, என்று நினைத்தபடி வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

சித்தார்த் நேராக உள் நோயாளிகள் இருக்கும் இடத்திற்கு செல்லவும், அவன் பின்னால் சென்றாள் நேத்ரா, ஆனால் அவன் அவளை கண்டுகொள்ளவே இல்லை. வேகமாக நோயாளிகளை பார்த்துவிட்டு, ஆபரேஷன் அறைக்கு சென்றான். நேத்ரா அப்போதும் அவன் பின்னாலேயே சென்றாள்.

 

அங்கே டாக்டர் கிருஷ்ணன் தனக்கு ஒதுக்கப்பட்ட அறுவைசிகிச்சையை முடித்துவிட்டு வெளியே வந்தவர், சித்தார்த்தின் பின்னால் நேத்ரா செல்வதும், அவன் வேண்டுமென்றே அவளை கவனியாதவன் போல மற்றவர்களிடம் கேள்வி கேட்பதையும் பார்த்தார். 

 

நேத்ரா பொறுமையிழந்து, “டாக்டர்” என்றாள் கொஞ்சம் சத்தமாகவே.

 

சித்தார்த்தோ சற்றும் நிமிர்ந்தும் பார்க்காமல், ஏதோ ரிப்போர்டடில் தன் பார்வையை பதித்தவாறே, “ம்ம் சொல்லுங்க” என்றான்.

 

“நான் உங்க கிட்ட தனியா பேசணும்” என்றாள் நேத்ரா. நன்றியும் சொல்லிவிட்டு அப்படியே பாண்டியை பற்றியும் கூற வேண்டும் என்று அவள் நினைத்திருந்தாள்.

 

“என்கிட்ட தனியா பேச என்ன இருக்கு மிஸ்.நயனி? இங்கே வேலை செய்யற நர்ஸ்கிட்ட எல்லாம் நான் தனியா பேசிட்டு இருந்தால் என் வேலையை யார் செய்வது? எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க”  என்றான் எங்கேயோ பார்த்தபடி, அவள் பார்வையை தவிர்க்கிறானாம்!

 

சித்தார்த்தின் இந்த பதிலை நேத்ரா சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளை பார்க்க பிடிக்காதவன் போல முகத்தை திருப்பி கொள்கிறானே! ஆக சற்றுமுன் அவளை கவனிக்காத மாதிரி சென்றது எல்லாம், வேண்டும் என்று  உதாசீனப்படுத்த தான் என்று புரிந்து கொண்டாள் நேத்ரா. ஒரு சாதாரண நர்ஸ்ஸிடம் அவன் ஏன் நின்று பேச வேண்டும்?

 

“சாரி சார் உங்க நேரத்தை வீணாக்கிட்டேன். உங்களுக்கு நன்றி சொல்ல தான் உங்க பின்னாடி  வந்தேன். ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் நேத்ரா இறுக்கமான குரலில்.

 

“யு ஆர் மோஸ்ட் வெல்கம்” என்று அதைவிட இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டான் சித்தார்த்.

 

நன்றி சொல்றாளாம் நன்றி, இவ நன்றி யாருக்கு வேண்டும் உள்ளுக்குள் புகைந்தபடி சென்ற கணவனை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள் நேத்ரநயனி.

 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நின்றிருந்த டாக்டர் கிருஷ்ணன் சித்தார்த் சென்றதும் அவளருகில் வந்து, “என்ன நேத்ரா, டாக்டர் உன்னை கழட்டி விட்டாரா? நீ ஒன்னும் கவலைப்படாதே. நான் அவரை மாதிரி யூஸ் பண்ணிட்டு தூக்கி போடற ரகம் இல்லை. காலம்பூரா உன்னை பார்த்துப்பேன்” என்றார் பல்லைக்காட்டி.

 

நேத்ராவிற்கு, அந்த கணமே அவரின் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் என்று கைகள் பரபரத்தது. தன் விரல்களை உள்ளங்கையில் மடக்கி சுற்றும் முற்றும் பார்த்தாள். மருத்துவமனையே பரபரப்பாக இருந்தது.

 

ஒற்றை விரலை அவரிடம் நீட்டி, “இனி இந்த மாதிரி என்கிட்ட இன்னொரு முறை பேசினே பல்லை தட்டி கையில கொடுத்திடுவேன். ஜாக்கிரதை” என்று மிரட்டல் தொணியில் சொல்லிவிட்டுச் சென்றாள்.

 

கிருஷ்ணனுக்கு உடலும் மனமும் கோபத்தால் கொந்தளித்தது. “ப்பூனு ஊதுனா பறந்துடுவா, இவ என்னை அடித்து பல்லை விழ வச்சிடுவாளாமே? என்கிட்ட தானே வேலை பார்க்கணும். இருடி உன்னை எப்படி வழிக்கு வர வைக்கணும்னு எனக்கு தெரியும்” என்று உள்ளுக்குள்  கறுவியபடி தன் அறைக்கு சென்றார்.

 

நேத்ரா எதுவுமே நடக்காதது போல, அவர் உள்ளே நுழைந்ததும், “குட்மார்னிங் டாக்டர்” என்றாள்.

 

அவளை வினோதமாக பார்த்தபடி, தன் இருக்கையில் அமர்ந்து, “ஒவ்வொரு பேஷன்டா உள்ளே அனுப்பு” என்றார்.

 

“ஓகே டாக்டர்” என்று சொல்லி தன் வேலையை செய்ய ஆரம்பித்தாள் நேத்ரா.

 

சற்றுமுன் தன் முன்னால் விரலை நீட்டி மிரட்டியவள் இவள் தானா? என்ற சந்தேகமே வந்துவிட்டது டாக்டர் கிருஷ்ணனுக்கு. அவள் அவர் சொன்ன வேலையை கவனமாக கேட்டு சரியாக செய்தாள். ஆனால் நேத்ராவின் முகம் இறுகி போயிருந்தது.

 

உடல் வலிமை இல்லை என்றாலும் மனவலிமை சற்றும் அதிகம் இருக்கும் போல. மற்ற பெண்களிடம் நடந்து கொள்வது போல இவளிடம் அத்தனை எளிதில் நெருங்கிவிட முடியாது. எனவே பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார் அவர்.

 

அன்று வேலையை முடித்து வழக்கம் போல வெளியே வந்தவள் பஸ்நிறுத்தத்தில் காத்திருக்கவும், பாண்டி அவளருகே வந்து நின்றான். மருத்துவமனையில் கிருஷ்ணன் தன்னிடம் பேசிய பேச்சின் கொதிப்பிலிருந்து வெளிவராமல் இருந்தவள், பாண்டியை பற்றி மறந்தே போனாள்.

 

சலிப்புடன் முகத்தை வேறுபக்கம் திருப்பி நிற்க, “நேத்ரா என்கிட்ட ஏன் பேச மாட்டேங்கிறே, என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டவ தானே நீ. இப்போ என்னவோ என்னை பிடிக்காத மாதிரி முகத்தை திருப்பிக்கிட்டா என்ன அர்த்தம்?” என்றான் பாண்டி.

 

ஏற்கனவே மன கொதிப்பில் இருந்தவள் கோபமாக அவனை பார்த்து, “நான் ஒன்னும் உன்னை பிடிச்சு கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அதைப்பற்றி பேசறதுக்கு இனி எதுவுமே இல்லை. ஏன்னா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. என் பின்னாடி வர்றதை நிறுத்திட்டு உன் வேலையை மட்டும் பாரு” என்றாள்

 

“உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு தான் நான் ஒத்துக்கிறேன். ஆனா நீ உன் புருஷன் கூட இல்ல போல இருக்கே. ஊருக்காக கல்யாணம் கட்டிக்கிட்டு உன்னை ஒதுக்கி வச்சிருக்கான்னு நல்லாவே தெரியுது. நீ ஏன் அவனுக்காக ஒரு பொய்யான வாழ்க்கையை வாழணும். என்கூட வந்துடு நேத்ரா” என்றான் பாண்டி.

 

“நான் பொய்யான வாழ்க்கை வாழறேன்னு உனக்கு யார் சொன்னது? என் வாழ்க்கை பத்தி கவலை படுவதற்கு முதல்ல நீ யாரு? உனக்கெல்லாம் பதில் சொல்லணும்னு எனக்கு அவசியமே இல்லை. ஒழுங்கா இங்கிருந்து போயிடு. ஏற்கனவே கோபத்தில் இருக்கிறேன், மேலும் என்னை வெறுப்பேத்தாத” என்று சொல்லிவிட்டு அங்கிருக்க பிடிக்காமல் நடக்க தொடங்கினாள்.

 

“நேத்ரா, கொஞ்சம் நில்லு, எனக்கொரு சான்ஸ் கொடு” என்று சொல்லியபடி பின்னாலே வந்தான் பாண்டி.

 

வழியில் செல்பவர்கள் இவர்களையே திரும்பி பார்க்கவும், அவமானமாக இருந்தது அவளுக்கு. “என்னதான் உன் பிரச்சனை?” என்றாள் பல்லை கடித்துக் கொண்டு.

 

“புத்திக் கெட்டு போய் அன்னைக்கு குடிச்சிட்டேன்,. அதுக்காக உன்னை மொத்தமா இழக்கணும்னா எப்படி நேத்ரா. நீ எனக்கு வேணும். உன்கூட எப்படி எல்லாம் வாழணும்னு கனவு கண்டுட்டு இருந்தேன் தெரியுமா? என் கூட வந்துடு நேத்ரா. நீ தனியா தானே இருக்கே? என்கூட வந்துடு” என்றான் பாண்டி கெஞ்சும் குரலில்.

 

“உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? கல்யாணம் ஆன பொண்ணுகிட்ட வந்து, என்கூட வந்துடுனு கூப்பிடுறே. சீச்சி, உன் கூட எல்லாம் பேசறதே வேஸ்ட்” என்றபடி வேகமாக நடந்தாள் நேத்ரா.

 

“நேத்ரா என்னை பத்தி உனக்கு தெரியும் தானே? நீ எனக்கு கிடைக்கும்வரை உன் பின்னாடியே சுத்தி கல்யாணம் வரைக்கும் போனவன் நான். இப்பவும் நான் அதே பாண்டி தான் நீ என்கூட வர வரைக்கும் உன்னை விடாமல் துரத்துவேன், அதுக்கு பதிலா நீயாவே என் கூட வந்திடு” என்றான் பாண்டி சற்று மிரட்டல் தொணியில்.

 

“உன்கிட்ட ஏமாற நான் ஒண்ணும் எங்க அப்பாவை போல அப்பாவி இல்ல. உன்னால் ஆனதை பார்த்துக்க” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று மீண்டும் ஆட்டோவை பிடித்து தன் விடுதிக்கு சென்றாள்.

 

அவள் இறங்கும் முன்னே பாண்டி தன் டாக்சியில் சாய்ந்தபடி நின்று கொண்டு அவளை பார்த்து ஏளனமாக சிரித்தான்.

 

அவனை சற்றும் சட்டை செய்யாமல் விடுதிக்குள் சென்று தன் அறையிலிருந்த கட்டிலில் தொப்பென்று விழுந்தவள் தாங்க முடியாத மன அழுத்தத்தில் முதன்முறையாக வெடித்து அழுதாள்.

 

சுதா அப்போது தான் தன் தோழிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று தன் பணத்திலேயே ஒரு அழகான கண்ணாடிபிரேமை வாங்கி அதை கிப்ட்டாக பேக் செய்து கொண்டு வந்திருந்தாள். அறைக்கு வெளியே நேத்ராவின் காலணியை பார்த்ததும், ஏற்கனவே தோழி வந்துவிட்டிருக்கிறாள் என்று மெல்ல உள்ளே நுழைந்து, “சர்ப்ரைஸ்” என்று கத்தினாள்.

 

ஆனால் சுதாவின் சத்தத்திற்கு எந்த எதிர்வினையும் புரியாமல் நேத்ரா கட்டிலில் குப்புறப்படுத்துக் கொண்டு இருந்தாள். அவள் முதுகு அழுகையில் குலுங்குவதை பார்த்த சுதா பயந்து விட்டாள்.

 

“நேத்ரா, ஏன் அழறே? என்னாச்சு? சொல்லுடி?” என்று தோழியை உலுக்கினாள்.

 

சுதாவை பார்த்ததும் அவளை கட்டிக்கொண்டு கதறி அழுதாள். நேற்று இரவு தான் முதன் முறையாக நேத்ரா சிரித்ததை பார்த்தாள் சுதா. ஆனால் இன்று இரவு அவள் முதல் முறையாக கதறி அழுவதை பார்க்கக்கூடும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.

 

நேத்ராவின் கதறலில் அவள் மிகுந்த மன வலியில் இருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது. அவளாக அழுது தேறும்வரை பொறுமை காத்தாள் சுதா. தோழியின் முதுகை வருடி கொடுத்தபடி, “ஒன்னும் இல்ல, எல்லாம் சரியாகிடும். தூங்கி எழுந்தா எல்லாம் சரியாயிடும்” என்றாள் குழந்தையை தேற்றுவது போல.

 

தூங்கி எழுந்தால் சரியாக கூடிய பிரச்சனையா இருக்கு அவளிடம்? என்று எண்ணி மீண்டும் கண்ணீரில் கரைந்தாள் நேத்ரா. சுதா தோழிக்கு தண்ணிரை பருகவைத்து, “எதுக்கு அழறேனு என்கிட்ட சொல்ல தோணுச்சுனா சொல்லு. என்னால முடிஞ்சதை செய்யறேன்” என்றாள் சுதா.

 

யாரிடமாவது சொல்ல வேண்டும், தன் மனபாரத்தை இறக்கி வைக்காமல் போனதால் தான் இதயம் பாறாங்கல்லாய் கனக்கிறது போலும் என்று நினைத்தவளாய் தன் தோழியிடம் தன் திருமணம் முதற்கொண்டு நடந்ததை அனைத்தையும் கூறி முடித்தாள் நேத்ரா.

 

தாலிகட்டிய கணவனுடன் இயல்பான திருமண பந்தத்தை தொடர முடியவில்லை. காரணம் வசதி, அந்தஸ்து, படிப்பு என அனைத்திலும் அவன் மேலானவன். அதே சமயம் அந்த பந்தத்தை உதறவும் முடியவில்லை. இதற்கிடையில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பவளை ஜமுனா, வசந்தி என்ற கழுகுகள் கொத்தி தின்று கொண்டிருக்கின்றன, இன்று புதிதாக டாக்டர் கிருஷ்ணன் வேறு முளைத்திருக்கிறான். ஏதோ வேலை செய்யும் இடத்தில் தான் பிரச்சனை என்று இருந்தால் பாண்டி வேறு அவளை மிரட்டுகிறான்.

 

இனி எப்படி அவள் தினமும் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று வருவாள்? இவை அனைத்தும் அவளை அழுத்தியதில் மன வேதனை தாங்காமல் அழுததாக கூறினாள் நேத்ரா.

 

பொறுமையாக நேத்ராவின் பேச்சை கேட்டிருந்த சுதா, “நீ சொல்றதை வச்சு பார்த்தால் டாக்டர் சித்தார்த் உன்னை வெறுக்கிற மாதிரி எனக்கு தோணலை நேத்ரா” என்றாள்

 

“அதே சமயம், அவர் என்னை விரும்பவும் இல்லை சுதா” என்றாள் நேத்ரா.

 

“அது உனக்கெப்படி தெரியும்? அவர் உன்னை விரும்பலைனு உன்கிட்ட சொன்னாரா? என்றாள் சுதா.

 

“இல்லை, அன்னைக்கு முதலிரவில் சொன்னார்” என்றாள் நேத்ரா.

 

“அன்னைக்கு நடந்த அதிர்ச்சியில சொல்லியிருக்கலாம், மறுபடியும் அவர் மனசு மாறியிருக்கவும் வாய்ப்பிருக்கு. நீ ஏன் அவர்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொல்ல கூடாது?” என்றாள் சுதா.

 

“எல்லாத்தையும் சொல்லலைனாலும் பாண்டியை பத்தி சொல்லலாம்னு தான் அவர்கிட்ட பேசணும்னு இன்னைக்கு கேட்டேன். முகத்தில் அடிச்ச மாதிரி நர்ஸ்ங்க கிட்ட எல்லாம் எனக்கு பேச நேரமில்லைனு சொல்லிட்டு போயிட்டாரு” என்றாள் நேத்ரா கண்கலங்க.

 

“அவர் ஏதோ டென்ஷன்ல இருந்து இருப்பாரு, நீ மறுபடியும் முயற்சி செய்” என்றாள் சுதா.

 

“இல்லை சுதா, நான் அவர்கிட்ட விவாகரத்துக்கு சம்மதிக்கிறதா வாக்கு கொடுத்திட்டேன். இனி மாற்றி பேச முடியாது, என் பிரச்சனையை நான் தான் பார்த்துக்கணும். வேறே எதாவது வழி இருந்தா சொல்லு” என்றாள் நேத்ரா.

 

“அப்போ காலையில் உன்னை மருத்துவமனைக்கு சேர்ந்த விடுதியில் தங்கிக்க சொன்னதாக சொன்னே இல்ல. நீ ஏன் அங்கே போய் தங்க கூடாது? அங்கே போய்ட்டால் நீ வெளியே பஸ், ஆட்டோனு அலைய வேண்டியதே இல்லை. எல்லாமே ஒரே காம்பவுண்டுக்குள்ளே இருக்கு, அந்த பாண்டியால அவ்வளவு சீக்கிரமா உன்னை நெருங்க முடியாது” என்றாள் சுதா.

 

“சுதா உண்மையில் இது நல்ல யோசனை தான். ஆனால் உன்னை விட்டு போகணுமே” என்றாள் நேத்ரா கவலையுடன்.

 

“நேத்ரா நீ எனக்காக யோசிக்காதே, நாம போன்ல பேசிக்கலாம், நேரம் கிடைக்கும் போது நேரில் சந்திக்கலாம். இப்போ உன்னோட பாதுகாப்பு தான் முக்கியம்” என்றாள் சுதா.

 

கண்களை துடைத்துக் கொண்டு, “சரி சுதா, நாளைக்கே நான் போய் அங்கே தங்கறதா சொல்லிடுறேன்” என்றாள் நேத்ரா.

 

“என்ன சொல்ல வேண்டி இருக்கு? உன்னோட பொருளை எல்லாம் நாளைக்கே எடுத்துட்டு போயிடு, இந்தா நான் உனக்காக வாங்கி வந்த கிப்ட். இனி இந்த கண்ணாடி தான் நீ போட்டுக்கணும்” என்றாள் சுதா

 

“ட்ரீட் கேட்டியே சுதா” என்றாள் நேத்ரா.

 

“அதெல்லாம் வேண்டாம் நான் சும்மாதான் கேட்டேன், உன் பிரச்சனை எல்லாம் முடியட்டும். அதுவே எனக்கு போதும்” என்று சொன்ன தோழியை கட்டிக் கொண்டாள் நேத்ரா,

 

மறுநாள் பாண்டி நேத்ராவிற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தான். ஆனால் நேத்ரா ஆட்டோவை விடுதிக்கே வரவழைத்து தன் உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றாள்.

 

பெட்டி படுக்கையுடன் மருத்துவமனைக்குள் நுழைந்த நேத்ராவை காரை பார்க் செய்து கொண்டிருந்த சித்தார்த் பார்த்தான். புருவ முடிச்சுடன் அவள் பின்னால் சென்றான்.

 

நேத்ரா நேராக ஜனனியின் இருப்பிடத்திற்கு சென்றாள். நேத்ராவையும் அவளின் லக்கேஜையும் பார்த்தவாறு, “என்ன மிஸ்.நேத்ரா?” என்று கேட்டாள் ஜனனி.

 

“நேத்து, என்னை மருத்துவமனையில் இருக்கிற விடுதியில் தங்கிக்க சொன்னீங்களே, அதான் என்னோட பொருளை எல்லாம் எடுத்திட்டு வந்திருக்கேன்” என்றாள்.

 

“ஆனால் நேத்து, நீங்க இங்கே தங்க போறது இல்லேனு தானே சொன்னீங்க” என்றாள் ஜனனி கேள்வியாக.

 

தலைகுனிந்தபடி, “ஆமா, ஆனா இப்போ இங்கே தங்க வேண்டிய நிலைமை வந்திடுச்சு” என்றாள் மெல்லிய குரலில்.

 

“ஏன் என்னாச்சு நேத்ரா?” என்றாள் ஜனனி தோழமையுடன். தோழைமையான பேச்சுக்கு காரணம், சித்தார்த் அபிமன்யு பக்கவாட்டாக நின்று கைகளை கட்டிக் கொண்டு அங்கே நடப்பதை கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்று எதிர் திசையில் நின்று கொண்டிருந்த ஜனனிக்கு நன்றாகவே தெரிந்தது.

 

நேத்ரா பதில் ஏதும் கூறாமல், “ப்ளீஸ், என்னோட அறையை காட்டினீங்கனா இந்த பொருட்களை வச்சுட்டு, யுனிபார்ம் மாத்திப்பேன்” என்றாள்.

 

“சரி வாங்க, என்னோட அறையில் தான் பெட் காலியா இருக்கு, அங்கே போகலாம்” என்றபடி ஜனனி நேத்ராவை அழைத்துச் சென்றாள்.

 

வழியில் சித்தார்த் அபிமன்யு கைகளை கட்டியபடி அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டு இருப்பதை உணராமல் தலை குனிந்தபடி சென்றவளின் விழிகளில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் தரையில் விழுந்து தெறித்து சித்தார்த்தின் கருப்புநிற காலணியில் விழுந்தது.

 

நேற்று காலை மருத்துவமனையின் விடுதியில் தங்க இப்போதைக்கு அவசியம் இல்லை என்று சொல்லிச் சென்றவள் மறுநாளே கையில் பெட்டி படுக்கையுடன் இங்கேயே தங்கி கொள்ளவதாக சொல்லி வந்திருக்கிறாள். இந்த ஒரு நாளில் அப்படி என்ன நடந்திருக்கும்? எதற்கும் கலங்காமல் என்னிடம் தைரியமாக பேசுபவள் எதற்கு கண்ணீர் விடுகிறாள்? முன்னால் சென்று கொண்டிருக்கும் தன் மனைவியை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த் அபிமன்யு.

 

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!