Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedமான்விழியில் வீழ்ந்தேனடி!

மான்விழி – 13

சித்தார்த் அபிமன்யு தன்னை கவனிக்கிறான் என்பதை உணராமலே நேத்ரா விழிநீரை அவசரமாக துடைத்துக் கொண்டு ஜனனியுடன் சென்றாள்.

 

சித்தார்த் கைப்பேசியில் குறுஞ்செய்தி வரவும் எடுத்து பார்த்தான். டாக்டர் கிருஷ்ணன் சற்று தாமதமாக வருவதாக செய்தி அனுப்பியிருந்தார். அங்கே அட்மின் கேபினில் இருந்த ஜனனியின் அசிஸ்டென்ட் பெண்ணிடம், “டாக்டர் கிருஷ்ணன் தாமதமாக வருகிறாராம், அவர் வர வரைக்கும், அவரோட நோயளிகளை நானே அட்டென்ட் பண்றேன். மிஸ்.நயனி வந்தா சொல்லிடுங்க” என்று கூறிவிட்டு நேராக டாக்டர் கிருஷ்ணன் இருந்த அறைக்கு சென்று அவர் இருக்கையில் அமர்ந்தபடி நயனிக்காக காத்திருந்தான்.

 



Advertisement

யுனிபார்ம் அணிந்து வந்த நேத்ரா, அட்மின் பக்கமாக செல்லாமல், நேராக வெளி நோயாளிகள் பகுதிக்கு வந்து,  டாக்டர் கிருஷ்ணனுக்காக ஒதுக்கப்பட்ட அறை வாசலிலே சித்தார்த்துக்கு முதுகுகாட்டி நின்று கொண்டாள். 

 

சித்தார்த் நோயாளிகளை பரிசோதிக்க வந்தது ஒரு காரணமாக இருந்தாலும், முக்கியமாக நேத்ராவின் திடீர் இடமாற்றத்திற்கு என்ன காரணம்? அதுவும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனையிலேயே அழுகிறாள் என்றால் என்ன பிரச்சனை என்று தெரிந்துக் கொண்டே ஆக வேண்டும் என்று தோன்றியது. எனவே நோயாளிகள் வருவதற்குள் கிருஷ்ணனின் அறையில் அமர்ந்திருந்தான்.

Advertisement

 

Advertisement

அறைக்கதவு திறந்திருந்தாலும் பச்சை நிற தடுப்பு துணி அவன் உள்ளே அமர்ந்திருப்பதை மறைத்திருந்தது. எனவே உள்ளே டாக்டர் கிருஷ்ணன் தான் அமர்ந்திருக்கிறார் என்று எண்ணிய நேத்ரா, அவர் தனியாக இருக்கும் போது உள்ளே செல்ல விருப்பமில்லாமல் வெளியிலேயே நின்றாள்.

 

அன்றைக்கென்று நோயாளிகள் கூட்டம் குறைந்திருக்கவே, நேத்ரா வெகுநேரம் வெளியிலேயே நின்றாள்.

Advertisement

 

நோயாளி வரும்வரை உள்ளே வந்து உட்காரலாம், இல்லை இங்கே அனைத்தையும் சரிப் பார்க்கலாம் என்று இல்லாமல் எதற்கு வெளியே நின்றுக் கொண்டிருக்கிறாள்? என்ற யோசனையோடு இருந்தவன் அதற்கு மேல் பொறுமையில்லாமல், அங்கிருந்த பெல்லை அழுத்தினான்.

 

பெல் சத்தம் கேட்டாலும் உள்ளே இருப்பது கிருஷ்ணன் என்று நினைத்து, நேத்ரா அசையாமல் நின்றாள். சித்தார்த் விடாமல் தன் பெல்லை அழுத்திக் கொண்டே இருந்தான். நேத்ரா உடல் நடுங்க கைகளை இறுக்கிபிடித்து அழுத்தமாக நின்றிருக்கவும் சித்தார்த்திற்கு கோபம் வந்து விட்டது.

 

நான் உள்ளே இருக்கிறேன்னு தெரிஞ்சு தான் வேணும்னு உள்ளே வராமல் இருக்காள். எவ்வளவு திமிர்? நேத்து நான் நர்சிடம் எல்லாம் பேச நேரமில்லைனு சொன்னதால வேணும்னு உள்ளே வராமல் கல்லு மாதிரி நிக்கிறாளே? அவளை பெயர் சொல்லி அழைக்கவும் விருப்பமின்றி பெல்லை விடாமல் அடித்துக் கொண்டே இருந்தான். பக்கத்து அறையில் இருந்த நர்ஸ் வெளியே வந்து, “என்ன நேத்ரா, உள்ளே டாக்டர் விடாமல் பெல் அடிச்சுட்டு இருக்காரு. என்னனு போய் கேக்காமல் இங்கேயே நின்னுட்டு இருந்தால் எப்படி?” என்றாள் அவள் அதட்டலாக.

 

சித்தார்த் தன் கோபத்தை கட்டுப்படுத்த சுழற்நாற்காலியில் சுழன்று கொண்டிருந்தான். சரியாக அவன் சுவரின் பக்கம் திரும்பி இருக்கும் சமயம், ஆத்திரத்தோடு உள்ளே நுழைந்தாள் நேத்ரா.

 

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க என்ன பத்தி? நீங்க பெல் அடிச்சா நான் வந்து நிக்கணுமா? நோயாளிங்க வந்தால் அவங்களை அழைச்சிட்டு தான் நான் உள்ளே வருவேன். உங்க புத்தியை பற்றி தெரிஞ்சும் யாரும் இல்லாத சமயத்தில் நீங்க மட்டும் அறையில் இருக்கும் போது உங்களை நம்பி எல்லாம் என்னால் தனியாக உள்ளே வரமுடியாது” என்றாள் உச்சபட்ச கோபத்தில்.

 

பாண்டியின் மீதும், கிருஷ்ணனின் மீதும் இருந்த கோபத்தில் தன்னிலை இழந்து நேத்ரா கோபத்தில் வெடித்திருக்க, சித்தார்த் அபிமன்யுவிற்கு அதைவிட கட்டுக்கடங்காத கோபம் வந்திருந்தது. “நான் தனியாக இருக்கும் போது என்னை நம்பி அறைக்குள் வரமாட்டாளாமா, அப்படி என்ன செய்துவிடுவேன் இவளை?” என்று கோபமாக நினைத்தவன் அதை வார்த்தையாக கூறாமல் தன் செயலில் காட்ட நினைத்தான்.

 

நாற்காலியை விட்டு சடாரென்று எழுந்து வேகமாக அவளை தொட்டுவிடும் தூரத்தில் வந்து நின்ற சித்தார்த்தை கண்டு அதிர்ச்சியில் விழி அகல பார்த்தாள். அவள் அதிர்ச்சியை கண்டுக் கொள்ளாமல், அவள் கழுத்தில் கைவைத்து அப்படியே சுவற்றில் சாய்த்து “ஏன் தனியா நான் இருக்கும் அறைக்குள்ள நீ வந்தா உன் மேலே அப்படியே பாய்ஞ்சிடுவேன்னு நினைச்சியா? இல்ல இப்படி கட்டிபிடிச்சுடுச்சு முத்தம் கொடுத்துடுவேன்னு நினைச்சியா?” என்று மூர்க்கத்துடன் அவளை கட்டிப்பிடித்து அவள் முகம் நோக்கி குனிந்தான்.

 

சித்தார்த் எப்போது உள்ளே வந்தான்? டாக்டர் கிருஷ்ணன் எங்கே போனார்? அவள் டாக்டர் கிருஷ்ணனை நினைத்து பேசியிருக்க, இவனோ தன்னை பேசியதாக நினைத்து கோபம் கொள்கிறானே என்று பதட்டத்துடன், “அய்யோ நான் உங்களை சொல்லலை விடுங்க” என்று அவன் பிடியில் இருந்து திமிறினாள்.

 

“இங்கே என்னை தவிர யார் இருக்கா? நான் இருக்கேன்னு தெரிஞ்சு தானே இப்படி பேசினே?” என்று அழுத்தமாக கூறியபடி மேலும் தன் பிடியை இறுக்கினான்.

 

“தயவு செய்து என்னை விட்டுடுங்க ப்ளீஸ், ஏற்கனவே உங்களையும் என்னையும் சேர்த்து வச்சு இந்த ஆஸ்பிட்டல்ல எல்லாரும் அசிங்கமா பேசிட்டு இருக்காங்க. இதில நீங்க வேற இப்படி செஞ்சா, யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க? உங்களை கையெடுத்து கும்பிடுறேன், என்னை விட்டுடுங்க, எனக்கு நீங்க உள்ளே இருப்பதே தெரியாது. டாக்டர் கிருஷ்ணன்னு நினைச்சுதான் கோபமா பேசிட்டேன். என்னை விட்டுடுங்க ப்ளீஸ்” என்று நேத்ரா தன்னை மறந்து கதறி அழவும் உச்சபட்ச அதிர்ச்சியோடு விலகி நின்றான் சித்தார்த் அபிமன்யு.

 

சித்தார்த்தின் அதிரடி நடவடிக்கையில் நேத்ரா கோழிக்குஞ்சாக நடுங்கி கொண்டிருந்தாள்.

 

“ஐயம் சாரி” என்றபடி அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான். தயங்காமல் அதை வாங்கி குடித்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

 

அவள் அமைதியாகும் வரை பொறுத்திருந்தவன், “டாக்டர் கிருஷ்ணன்னு நினைச்சு பேசினியா? ஏன்? அவர் ஏதும் உன்கிட்ட தப்பா?” என்று அவன் முடிக்கும் முன், நேத்ரா பலமாக இல்லை என்று தலையாட்டினாள்.

 

“நான் அனுமதி இல்லாமல் அவர் என் தலைமுடியை கூட தீண்ட முடியாது” என்றாள் அழுத்தமான குரலில். 

 

“அப்புறம் எல்லாரும் மருத்துவமனையில் என்ன பேசிக்கிறாங்க?” என்றான்.

 

“உங்களுக்கும் எனக்கும் ஏதோ உறவு இருக்கிறதா பேசிக்கிறாங்க” என்றாள் மெல்லிய குரலில்.

 

“இது உண்மை தானே? பேசிட்டு போகட்டும் விடு” என்றான் சாதாரணமாக.

 

விலுக்கென்று நிமிர்ந்து பார்த்து அவனை முறைத்தாள் நேத்ரா. தொண்டையை கனைத்தவன், “அவங்க எல்லாம் நமக்குள்ள ஏதோ உறவு இருக்குனு அனுமானிச்சு இருக்காங்க. நமக்குள்ள திருமண உறவு இருக்கு தானே? கேட்டால் ஆமாம்னு சொல்லு” என்றான் சித்தார்த்.

 

“நீங்க சொல்ற உறவு வேறே, அவங்க புரிஞ்சுகிட்ட உறவு வேறே” என்றாள் நேத்ரா அழுத்தமான குரலில்.

 

“தாலியை மறைக்காமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்குமா?” என்று கேட்டான் அவள் கண்களை நேராக பார்த்து குற்றம் சாட்டும் குரலில்.

 

“கட்டாயத்தில் நடந்த திருமணம், இது நிலைக்க போவதுமில்லை, அப்படி இருக்கும் போது எதுக்கு எல்லார்கிட்டயும் சொல்லணும்?” என்றாள் நேத்ரா.

 

“நிலைக்காதுனு முடிவே பண்ணிட்டியா?” என்றான் சித்தார்த் இறுக்கமான குரலில்

 

சற்று தயங்கி, ஆமாம் என்று அவள் தலையாட்டவும், “அப்படின்னா, எங்கப்பா உங்கப்பா முன்னால தான் இந்த திருமணம் நடந்துச்சு. நாம விலகறதும் அவங்களுக்கு தெரிஞ்சு தான் நடக்கணும். ஏன்னா இது உன்னோட முடிவு, நாளைக்கு என்னை அவங்க தப்பா எடுத்துக்க கூடாது. எங்கப்பா இன்னும் இரண்டு மாசத்துல வந்திடுவார். அப்புறம் பேசி முடிவெடுத்துக்கலாம்” என்றான் சித்தார்த் இறுகிய குரலில்.

 

தன் தந்தைக்கு தெரிந்தால் வருத்தப்படுவாரே என்று நேத்ரா மறுப்பாய் தலையசைத்து ஏதோ பேசப் போகும் நேரம், ஜமுனா சடாரென்று ஸ்கிரினை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள்.

 

டாக்டர் கிருஷ்ணன் அறை என்பதால் சாவதானமாக உள்ளே வந்த ஜமுனா, அங்கே சித்தாரத்தும் நேத்ராவும் அருகருகே நின்றிருந்ததைப் பார்த்து ஷாக் அடித்தார் போல நின்று விழித்தாள்.

 

“நயனி இனி இங்கே பேச முடியாது, என் அறைக்கு போகலாம் வா” என்றான் சித்தார்த் வேண்டுமென்றே ஜமுனாவை தீர்க்கமாக பார்த்தபடி.

 

ஜமுனாவோ நான் வந்துட்டேன்னு அவர் அறைக்கு என் எதிரிலேயே கூப்பிடுறாரே. இவ்வளவு நேரம் என்ன செய்துட்டு இருந்தாங்களோ? டாக்டர் கிருஷ்ணன் இன்னைக்கு வரலியா? அதுதான் இவர் இவளை பார்க்க நேராக இங்கேயே வந்துட்டாரா? என்ற பலவிதமான எண்ண ஓட்டங்களை ஜமுனாவின் முகபாவத்திலே கண்டுகொண்டான் சித்தார்த்.

 

“ஜமுனா நீங்களும் என்னோட அறைக்கு வாங்க” என்றான்

 

“நான்? நான் எதுக்கு சார்? பூஜை வேளையில் கரடி போல” என்றாள் ஜமுனா சிரித்துக் கொண்டே

 

“இங்கே எந்த பூஜை?” என்றான் சித்தார்த் கைகளைக் கட்டியபடி அழுத்தமாக ஜமுனாவை பார்த்து.

 

“அது… அது வந்து நான் எப்படி சார் சொல்றது? நீங்களும் நேத்ராவும் தனியா இருக்கும் போது நான் உள்ளே வந்தா நல்லா இருக்குமா?” என்றாள் ஜமுனா தயங்கியபடி.

 

“ஏன் நல்லா இருக்காது?” என்றான் சித்தார்த் ஜமுனாவை நேராக பார்த்து

 

“என்ன டாக்டர்?  நீங்க இரண்டு பேரும் நெருக்கமா இருக்கும் போது நான் எப்படி உள்ளே இருக்கமுடியும்?” என்றாள் ஜமுனா.

 

“அப்போ இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லா டாக்டர் அறையிலும் வேலை செய்திருக்கீங்க. அவங்க அறையில் வேலை செய்யும் போது நீங்க கூட அந்த டாக்டர் கிட்ட நெருக்கமா இருப்பீங்களா ஜமுனா சிஸ்டர்? அப்போ யாராவது பூஜை வேளை கரடியா வந்திருக்காங்களா?” என்றான் சித்தார்த் ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து.

 

“டாக்டர்?” என்று கத்தியே விட்டாள் ஜமுனா.

 

“சொல்லுங்க, எத்தனையோ முறை என் அறையில் நீங்களும் நானும் தனியா இருந்து இருக்கோம். இத்தனை வருஷத்துல எத்தனையோ டாக்டர் கூட தனியா இருந்திருப்பீங்களே? அப்போ பேஷன்டை கவனிக்காமல் அவங்களோட எல்லாம் நெருக்கமா இருந்தீங்களா?” என்று அடிக்குரலில் சீறினான் சித்தார்த்.

 

நேத்ராவுமே சித்தார்த்தின் பேச்சில் அதிர்ந்து போயிருக்க, ஜமுனா கதறி விட்டாள். “டாக்டர் என்னை பார்த்து என்ன பேச்சு பேசிட்டீங்க, என்னைப் போய்…ச்சே. இத்தனை வருஷமா இங்கே வேலை செய்யறேனே, எனக்கு கிடைச்ச பரிசு இதுதானா?” என்று அழுதாள் ஜமுனா.

 

“அப்போ உங்களுக்கு வந்தால் அது ரத்தம், மத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?” என்றான் சித்தார்த் எள்ளலாக

 

“டாக்டர்” என்று ஜமுனா அதிர்ந்து போய் சித்தார்த்தை பார்க்க, “நான் இருக்கும் போது என்கிட்டயே தைரியமா இப்படியெல்லாம் பேசறீங்களே? நான் இல்லனா இன்னும் என்னவெல்லாம் பேசியிருப்பீங்க? ரொம்ப வருஷமா இங்கே வேலை செய்து இருக்கீங்க, உங்களை எல்லார் எதிரிலயும் அவமானபடுத்த விருப்பம் இல்ல. அதனால் இப்போதைக்கு இந்த விஷயத்தை இப்படியே விடுறேன். நயனி கிட்ட மன்னிப்பு கேளுங்க” என்றான் அதிகாரமான குரலில்.

 

முகம் கன்ற “மன்னிச்சுடு நேத்ரா” என்று கைகூப்பி கேட்டு விட்டு சித்தார்த்திடம் திரும்பி, “சாரி டாக்டர்” என்றாள் ஜமுனா தலைகுனிந்து.

 

“இனிமேலாவது வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க. நீங்க தான் எல்லாரையும் விட சீனியர். நீங்களே இந்த மாதிரி பக்குவம் இல்லாமல் வாய்க்கு வந்ததை உளறிட்டு இருந்தால் மத்தவங்க எப்படி நடந்துப்பாங்க? இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை. நயனினு இல்ல, எந்த பெண்ணோட தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் இங்கே உரிமையில்லை. புரிஞ்சு நடந்துப்பீங்கனு நம்பறேன்” என்றான் சித்தார்த் அழுத்தமாக.

 

புரிந்தது என்று தலையாட்டிவிட்டு மீண்டும் ஒருமுறை “மன்னிச்சுடுங்க” என்று பொதுவாக கூறிவிட்டு வெளியேறினாள் ஜமுனா.

 

அவள் சென்றதும், சித்தார்த் டாக்டர் கிருஷ்ணனுக்கு போன் செய்து ஸ்பீக்கரில் போட்டான். “சொல்லுங்க சித்தார்த், நான் இன்னும் அரைமணிநேரத்தில் மருத்துவமனைக்கு வந்திடுவேன்” என்றார் அவர்.

 

“இல்ல, வரவேண்டாம்னு சொல்ல தான் கூப்பிட்டேன்” என்றான் சித்தார்த் அழுத்தமாக.

 

“வரவேண்டாம்னா? என்ன சொல்றீங்க? எனக்கு புரியல?” என்றார் டாக்டர் கிருஷ்ணன்.

 

“வரவேண்டாம்னா, இந்த மருத்துவமனை பக்கமே எட்டிக் கூட பார்க்க வேண்டாம்னு அர்த்தம். என் கண்ணுல பட்டுடாதீங்கனு அர்த்தம். அப்படி மீறி வந்தால் கைக்கால் எல்லாம் உடைஞ்சு, முகம் வாய் எல்லாம் கிழிஞ்சு தொங்கி போயிடும்னு அர்த்தம்” என்று அடுக்கிக் கொண்டே போனான் சித்தார்த்.

 

“சித்தார்த் நான் ஒரு டாக்டர்,. வார்த்தையை அளந்து பேசுங்க? சரியான காரணம் இல்லாமல் திடீர்னு என்னை வேண்டாம்னு சொல்றதும், அடியாள் போல மிரட்றதும் சரியில்லை. நான் கம்ளெய்ண்ட் பண்ண வேண்டி வரும்” என்றார் கிருஷ்ணன் எச்சரிக்கும் தொணியில்.

 

“நல்லதா போச்சு, நானும் கம்ளெய்ன்ட் பண்றேன், என் மருத்துவமனையில் வேலை செய்கிற பொண்ணுங்க கிட்ட எல்லாம் இந்த ஆள் மிஸ்பிஹேவ் பண்றான்னு சொல்லி உங்க மருத்துவர் உரிமத்தை ரத்து செய்ய வைக்கிறேன். ஐடியா கொடுத்ததற்கு நன்றி” என்று சொல்லி போனை வைத்தான் சித்தார்த்.

 

நேத்ரா வாயில் கைவைத்துக் கொண்டாள், “எதுக்கு இப்போ அவரை வேலையை விட்டே தூக்கிட்டிங்க. அவரோட மருத்துவர் உரிமத்தை ரத்து செய்ய போறதா சொல்றீங்க? இவ்வளவு பெரிய தண்டனை தேவையா? கண்டிச்சு விடலாம் இல்ல?” என்றாள்.

 

“உன்னை மாதிரி இன்னும் இந்த ஆஸ்பிட்டல்ல எத்தனை நர்ஸ் இவனை பத்தி வெளியில் சொல்ல முடியாமல் இருக்காங்களோ யாருக்கு தெரியும்? அவங்களால நேரே வந்து என் கிட்ட கம்ளெய்ன்ட் பண்ண முடியாமல் இருந்து இருக்கலாம். உனக்கென்ன கேடு? பிரச்சனை ஆரம்பிக்கும் போதே என்கிட்ட வந்து சொல்றதுக்கென்ன?” என்று கோபத்தில் அவள் மீது காய்ந்தான் இப்போது.

 

சித்தார்த்தின் நிர்வாகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் மருத்துவமனையில் இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் நடக்கிறதா? இது எதுவுமே தெரியாமல் இருந்து இருக்கிறானே. இவளாவது அவனிடம் சொல்லியிருக்கலாமே என்ற ஆதங்கத்தில் நேத்ராவின் மேல் கோபம் கொண்டான் சித்தார்த்.

 

அவன் கோபமாக பேசியதும் நேத்ராவும், “நீங்க தான் சாதாரண நர்ஸ் கூட எல்லாம் தனியா பேச மாட்டீங்களே? இந்த மாதிரி விஷயத்தை மைக் போட்டு எல்லார் முன்னாடியும் சொல்ல முடியாது. அதனால தான் சொல்லலை. போதுமா?” என்றாள் வெடுக்கென்று.

 

அன்று அவன் சொன்னதை குத்திக் காட்டுகிறாள் என்ற கோபத்தோடு, “சரி இப்போ தனியா தானே இருக்கேன். இன்னும் என்னனென்ன பிரச்சனையை எல்லாம் கைவசம் வச்சிருக்க? இப்பவாவது சொல்லித் தொலை!” என்றான் கடுப்பாக.

 

அவன் சாதாரணமாக கேட்டிருந்தால் சொல்லியிருப்பாளோ என்னவோ? அவள் என்னவோ எல்லா பிரச்சனையும் எனக்கே வேண்டும் என்று கேட்டு வாங்கியது போல அல்லவா பேசுகிறான்? ஒரு பெண் வெளியே சென்று வந்தாலே இந்த மாதிரி பல பிரச்சனைகளை கடந்து தான் வர வேண்டியிருக்கு. எல்லாவற்றையும் வீட்டில் சொல்லி அவங்களையும் எதுக்கு கஷ்டப்படுத்தனும்னு சமாளிச்சுட்டு போற பெண்கள் எத்தனையோ பேர், அந்த மாதிரி சராசரி பெண்களில் நானும் ஒருத்தி என்று ரோஷமாக மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் “வேறு எந்த பிரச்சனையும் இல்லை” என்றாள் மெல்லிய குரலில்

 

அவளுக்கு இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை பாண்டி. ஆனால் அவள் தான் மருத்துவமனை விடுதியிலேயே தங்க போகிறாளே! எனவே அவன் தொல்லையும் இனி இருக்காது என்று நம்பினாள்.

 

அவள் நம்பிக்கையை பொய்யாக்கவே பாண்டி அந்த மருத்துவமனைக்குள் நுழைந்து செக்யூரிட்டியிடம் நேத்ராவை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான்.

 

(தொடரும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!