Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மான்விழியில் வீழ்ந்தேனடி!

மான்விழி – 16

நேத்ரா தன் கைவளைவிற்குள் நெளிந்து கொண்டு இருக்கவும், என்ன? என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டான்.

 

அவள் அவன் கையை பார்க்கவும் அப்போது தான் அதை உணர்ந்தவனாக சட்டென்று அவள் மீதிருந்து கையை எடுத்தான். “லேடிஸ் ஆஸ்டல் உள்ளே நான் வந்தா நல்லா இருக்காது, சீக்கிரம் உன்னோட பொருட்களை‌ எல்லாம் எடுத்துட்டு வா* என்று அவளை‌‌ அனுப்பினான்.

 



Advertisement

நேத்ரா தலையை சம்மதமாக ஆட்டிவிட்டு விடுதியை நோக்கி சென்றாள். ஜனனி மற்ற ஊழியர்கள் அனைவரும் உறைந்து போய் நின்றிருக்க, “இன்னும் என்ன வேடிக்கை” என்று அதட்டினான். உடனே அனைவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

 

நேத்ரா வந்ததும் செக்யூரிட்டியை அழைத்து அவளிடம் உள்ள பொருட்களை வாங்கி காரில் வைக்க சொன்னான் அவள் கணவன். அந்த செக்யூரிட்டி நேத்ராவை முதல் நாள் அன்று ஏற இறங்க ஏளனமாக பார்த்த நபர். “கொடுங்க மேடம்” என்று சொல்லி பவ்யமாக அவள் கைகளில் இருந்த பொருட்களை வாங்கி கொண்டார். பணமும் அந்தஸ்தும் தான் ஒரு மனிதனை மரியாதையுடன் பார்க்க வைக்கிறது போலும் என்று நினைத்து கொண்டாள்.

Advertisement

 

Advertisement

காரில் தன் கணவனுடன் மீண்டும் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தாள் நேத்ரநயனி. 

ஒரு பெரிய பங்களாவின் முன் கார் நின்றது. காவலாளி கேட்டை திறந்ததும் கார் உள்ளே நுழைந்தது. நேத்ரநயனி பிரமிப்புடன் அந்த வீட்டை பார்த்துக் கொண்டு வந்தாள்.

 

Advertisement

கேட்டிற்கும் வீட்டு வாயிலுக்கும் இடையே அரை கிலோமீட்டர் நடக்க வேண்டும் போலிருந்தது. வீட்டின் முன்பக்கம் பலவகையான மூலிகை செடிகள் இருந்தன, துளசி, தூதுவளை, சோற்றுக் கற்றாழை, பொன்னாங்கண்ணி போன்ற செடிகளும், செம்பருத்தி, சங்கு பூ, வெட்சி, நித்யகல்யாணி போன்ற பூச்செடிகளும் இருந்தன. இவ்வளவு பெரிய பங்களாவில் அவள் குரோட்டன்ஸ் வகையறா செடிகளை எதிர்பார்த்திருந்தாள், ஆனால் அங்கே வைக்கப்பட்ட செடிகள் அனைத்துமே நமது தமிழ் பாரம்பரிய மருத்துவ குணங்கள் கொண்டவை.

 

இவையெல்லாம் நேத்ராவிற்கு புதிதில்லை, அவற்றை எல்லாம் தன் கிராமத்தில் பார்த்து வளர்ந்தவள் தான். ஆனால் சென்னையில், அதுவும் இந்த மாதிரி அரண்மனை போன்ற வீட்டின் தோட்டத்தில் இவையெல்லாம் எதிர்பார்த்திராதவை.

 

தோட்டத்தை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு வருபவளை பார்த்த சித்தார்த், “அப்பாவுக்கு எப்பவுமே வருமுன் காப்போம் பாலிசி தான். எதாவது நோய் வந்த பின்னாடி உடம்பை கவனிக்கிறதை விட, முன்னாடியே இயற்கையோடு சேர்ந்து வாழணும்னு சொல்வார். அம்மா சாப்பாடு விஷயத்தில் அப்பாவை பாலோ பண்ண மாட்டாங்க. அது மட்டும் தான் அவங்களுக்குள்ள வேற்றுமை. அம்மா திடீர்னு இறந்ததால தான் அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியாமல் போச்சு. டாக்டரா இருந்தும் இத்தனை பெரிய மருத்துவமனை வச்சிருந்து என்ன பயன்? தன் உயிருக்குயிரான மனைவியின் உயிரை பிடித்துவைக்க முடியலையேனு அவருக்கு ரொம்ப வருத்தம்” என்றான் சித்தார்த்.

 

அதை கூறும் போதே அவன் குரலில் வலி தெரிந்தது. இந்த சித்தார்த் அவளுக்கு முற்றிலும் புதியவன். சற்றுமுன் மருத்துவமனையில் இவன் ஆடிய ருத்ரதாண்டவம் தான் என்ன? இப்போது அவள் பார்வையை உணர்ந்து இவ்வளவு மென்மையாக விளக்கம் கொடுக்கிறானே? என்று தலைசாய்த்து ஆச்சரியமாக அவனையே பார்த்தாள்.

 

சித்தார்த்தின் விரல்கள் நேத்ராவின் முன்னே சொடுக்கிட்டன. திடுக்கிட்டு அவனை பார்த்து விழித்தாள்.

 

“என்ன முழிச்சிட்டே தூங்கறியா? கீழே இறங்கு” என்றான்

 

அவள் இறங்கும் முன் அங்கே இரண்டு பணியாளர்கள் வந்து அவளுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்கள்.

 

சித்தார்த் முன்னால் சென்று வாயிலை அடைந்தவன் தன் பின்னால் நேத்ரா வராமல் அப்படியே நின்றிருப்பதை பார்த்து, “என்ன?” என்றான்.

 

முதன்முறையாக புகுந்த வீட்டிற்குள் வருகிறாள், எப்படி அப்படியே உள்ளே வருவது என்ற யோசனையுடன் நின்றாள் நேத்ரா

 

“திடீர்னு உன்னை கூட்டிட்டு வந்ததால, வரவேற்பு எல்லாம் ஏற்பாடு செய்யலை. வேலைக்காரம்மா காலையில் தான் வருவாங்க” என்றான்.

 

அவனுக்கு பதில் சொல்லாமல், மெளனமாக வலதுகாலை எடுத்து வைத்து அவனுடன் உள்ளே சென்றாள்.

 

பணியாள் ஒருவன், “சார், இந்த பொருட்களை எல்லாம் எந்த அறையில் வைக்கணும்?” என்று கேட்டான்.

 

“என்னோட அறையில் வச்சிடுங்க” என்றான் சித்தார்த்.

 

விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் நேத்ரா. அவனோ என்ன என்பது போல புருவம் உயர்த்தினான்.

 

“இல்லை… எனக்கு தனியா வேறொரு அறை கொடுக்க முடியுமா? சின்ன அறையா இருந்தாலும் பரவாயில்லை. அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்” என்றாள் மெல்லிய குரலில்.

 

“ஏன் ஆஸ்பிட்டல்ல நடந்தது பத்தாதுனு, இப்போ வீட்டிலும் வேலைக்காரங்க முன்னாடி என் மானத்தை வாங்கணுமா?” என்று அடிக்குரலில் சீறினான்.

 

அதிர்ச்சியாக அவனை பார்த்து, “நான் எப்படி உங்க கூட ஒரே அறையில் தங்கறது?” என்றாள்

 

“ஏன்? இந்த தாலியை கட்டினது  நான் தானே?” என்றான் அழுத்தமாக, அவள் ஆமாம் என்பது போல தலையை ஆட்டவும், “அப்போ உன் புருஷனும் தானே நான்? என் அறையில் தங்கறதுக்கு என்ன?” என்று கேட்டான் கடுப்புடன்.

 

“இல்ல நாம தான் விவாகரத்து ஆகி பிரிய போறோமே” என்றாள்

 

சித்தார்த்துக்கு மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் துளிர்விட்டது. 

 

“வேலு, இங்கே என்ன வேடிக்கை பார்த்திட்டு இருக்கே?  நான் சொன்னது காதுல விழலையா? நீ போய் அந்த லக்கேஜை என்னோட அறையில் வச்சிட்டு வா” என்று அதட்டினான்.

 

அவன் சென்றதும், “இங்க பாரு, நீ சொல்ற மாதிரி எல்லாம் என்னால செய்துட்டு இருக்க முடியாது. விவாகரத்து ஆகிற வரைக்கும் நீ என் மனைவிதானே?  அதுவரைக்கும் நீ என் அறையில் தங்கி தான் ஆகணும்.

நான் ஒண்ணும் அவ்வளவு பலவீனமானவன் இல்ல, உன் மேல பாய்ஞ்சிட மாட்டேன்” என்றான் சுள்ளென்று

 

அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் வாயை மூடிக் கொண்டாள் நேத்ரா.

 

வேலையாள் வந்ததும் சித்தார்த் அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு முன்னால் நடந்தான். நேத்ரா மெளனமாக அவன் பின்னால் சென்று அறைக்குள் நுழைந்தாள்.

 

சித்தார்த் திரும்பி நேத்ராவை கோபமாக பார்த்து “லுக் இயர், என்ன காரணமோ எனக்கு தெரியல? நீ ஆரம்பத்திலிருந்து விவாகரத்து பத்தி தான் பேசிட்டு இருக்கே. அப்படி உனக்கு அந்த பாண்டி மேல தான் பிரியம்னா அவன் கூப்பிட்டதும் போக வேண்டியது தானே? எதுக்கு அங்கே நின்னு டிராமா பண்ணிட்டு இருந்தே” என்றான் ஆத்திரத்துடன்.

 

“எனக்கு யார் மேலயும் பிரியம் இல்ல” என்றாள் நேத்ரா வெடுக்கென்று.

 

“அந்த பாண்டி கூட கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு, மணமேடை வரைக்கும் வந்திருக்க. இடையில் நான் தான் எதிர்பாராமல் உங்க இரண்டு பேருக்கும் நடுவில் வந்திட்டேன். உனக்கு பிடிக்கலைனா வெளிப்படையா சொல்ல வேண்டியது தானே? அவன் கூடவே சேர்த்து வச்சிருப்பேனே” என்றான் அவளை அழுத்தமாக பார்த்தபடி.

 

“ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க? அப்பா சொன்னதை மறுக்க முடியாமல் ஒத்துகிட்ட கல்யாணம் அது. அவனை எனக்கு அப்பவே பிடிக்காது. எப்படியோ கடவுளா பார்த்து தான் அந்த கல்யாணத்தை நிறுத்தி உங்களை அனுப்பி வச்சிருக்கார்னு நினைச்சுப்பேன்” என்றாள் பொறுக்கமாட்டாமல்

 

“அப்படி நினைக்கிறவ எதுக்கு என்னோட வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லி விடுதியில் தங்கிக்கிறேன்னு சொன்ன? எப்பவும் விவாகரத்து பத்தியே பேசறே? அன்னைக்கு ஏதோ கோபத்துல உன்னை அங்கேயே விட்டுட்டு நான் போனாலும் திரும்பி வந்துட்டேன். வந்து பார்த்தால் அவ்வளவு சீக்கிரம் நீ அங்கே இருந்து போயிட்டு இருக்கே. உனக்கென்ன அவ்வளவு ஈகோ? இதனால் எவ்வளவு பிரச்சனை பார்த்தியா?” என்றான் கோபமாக.

 

“எனக்கு ஈகோ எல்லாம் இல்ல” என்றாள் மெல்லிய குரலில்.

 

“வேறென்ன பேரு அதுக்கு? என்றான் அவன் எரிச்சலாக.

 

“அது எனக்கு தெரியல. உங்களோட அழகுக்கும் படிப்புக்கும் அந்தஸ்துக்கும் நான் தகுதியானவள் இல்லனு மட்டும் எனக்கு தெரியும்.  கட்டாயப்படுத்தி என்னை உங்கள் தலையில் கட்டிட்டாங்க. அதுக்காக காலம் முழுக்க நீங்க ஒரு சுமையா என்னை சுமக்கனும்னு இல்ல. 

 

கொஞ்சமும் தகுதியில்லாத என்னை உங்களுக்கு கட்டி வச்சிட்டாங்களேனு நீங்க ஒரு முறை நினைச்சால் கூட நான் உங்களோட வாழப் போற வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. 

 

இதையெல்லாம் உங்களுக்காக யோசிச்சு தான் விவாகரத்து வேணும்னு சொன்னேன். தனியா வாழ கத்துக்கணும்னு மகளிர் விடுதிக்கும் போனேன்” என்றாள் அவனுக்கு தன்னை விளக்கிவிடும் வேகத்தில்.

 

“நல்லா யோசிச்சே எனக்காக” என்றான் நக்கலாக

 

“நான் கட்டின தாலியை இன்னொருத்தன் வந்து நான் கட்டினது சொல்றான். எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? அது ஆஸ்பிட்டலா போச்சு இல்லைனா அவனை அங்கேயே அடிச்சு புதைச்சிருப்பேன்” என்றான் கண்களில் அனல் கொப்பளிக்க.

 

நேத்ரநயனிக்கு சித்தார்த் அபிமன்யுவிடம் தெரிந்த கோபத்தில்  உரிமை உணர்வு இருப்பதாக தோன்றியது. ஆச்சரியத்துடன் அவனை விழி விரித்து பார்த்தாள்.

 

“என்ன பார்க்கிறே” என்றான்

 

“இப்போ இவ்வளவு பேசற நீங்க, நான் முதல்ல விவாகரத்துனு பேசும் போதும் சரி, தனியா விடுதியில தங்கிக்கிறேன்னு சொல்லும்போதும் சரி, என்னை அதட்டவே இல்லையே? இப்போ சொன்ன மாதிரி நான் உன் புருஷன் நீ என் மனைவி, என் கூட தான் நீ இருக்கணும்னு சொல்லியிருக்கலாம். இப்போ அதட்டின மாதிரி அதட்டி என்னை இங்கே கூட்டி வந்திருக்கலாமே? அப்போ எதுவும் சொல்லாமல், போகட்டும்னு விட்டுட்டு, இப்போ என்னவோ எல்லாம் என்னோட தப்பு மாதிரி பேசறீங்க?” என்றாள் மெல்லிய குரலில்

 

அவள் குரலில் குற்றச்சாட்டு இல்லையென்றாலும், அவள் கேட்ட கேள்வி சித்தார்த்தின் நெஞ்சில் குத்தியது.

 

அவனால் எப்படி சொல்ல முடியும்? அந்த நேரத்தில் அவன் மனதில் வேறு பெண் இருந்ததால் அவனுமே குழப்பத்தில் இருந்தான். சரி இவளாகவே விவாகரத்து வேண்டும் என்கிறாள். வேண்டாம் என்பவளை பிடித்து வைப்பதை விட விவாகரத்து கொடுத்துவிட்டு, பிறகு எலிசாவை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று எண்ணி இருந்தான்.

 

ஆனால் இப்போது நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. ஆம் இப்போது அவன் மனதில் எலிசா இல்லை. எலிசாவை மறந்ததற்கும் நேத்ரநயனியை மனைவியாக ஏற்றுக் கொள்ள அவன் மனம் தயார் ஆனதற்கும் அவனிடம் சரியான காரணம் இருக்கிறது. ஆனால் அதை எப்படி இவளிடம் விளக்குவது? 

 

நேத்ராவை சென்னைக்கு அழைத்து வந்த அன்று, அவளாக விடுதியில் போய் தங்கிக் கொள்ளவும் அவனுக்கு கோபமாக இருந்தது.

 

எப்படியோ போய் தொலையட்டும் என்று அவனால் நினைக்க முடியவில்லை. அவள் எப்படி என்னிடம் சொல்லாமல் தனியாக போய் தங்கலாம்? என்னுடன் தானே இருக்க வேண்டும்? என்று ஆத்திரம் வந்தது. தன் மனம் இப்போது கணவனாக யோசிப்பதை எண்ணி  திகைத்து போனான் சித்தார்த் அபிமன்யு.

 

அவளாக பிரிந்து சென்றால் எலிசாவுடன் சேர்ந்து விடுவது சுலபம் தானே? அதை எண்ணி சந்தோஷப்படாமல் எதற்கு இந்த கோபம்? என்று சுய ஆராய்ச்சியில் மூழ்கினான்.

 

வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்தவனை அவன் அக்கா பவிஷ்கா போனில் அழைத்திருந்தாள். “என்ன சித்து, திடீர் மாப்பிள்ளை ஆயிட்ட! எப்படி இருக்கா உன் மனைவி? வாழ்த்துக்கள் டா. நான் உன் கல்யாணத்தை நேரில் பார்க்க முடியாமல் போச்சேனு தான் வருத்தமா இருக்கு” என்றாள்.

 

“ப்ச்” என்றான் அசட்டையாக.

 

“ஏன்டா சலிச்சுக்கிறே? உனக்கு நயனியை பிடிக்கலையா?” என்றாள் பவிஷ்கா.

 

“தெரியாத மாதிரி கேட்காதே பவிக்கா, நான் எலிசாவை காதலிச்சது உனக்கும் தெரியும் தானே? இப்போ என்ன பண்றதுனு தெரியாமல் முழிச்சிட்டு இருக்கேன். இந்த அப்பா இப்படி என்னை சிக்கல்ல மாட்டி விடுவார்னு நான் கொஞ்சமும் நினைக்கவே இல்லை” என்றான் சலிப்புடன்.

 

“சித்து, ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ. ஒரு அக்காவா இந்த விஷயத்தை எப்படி சொல்றதுனு தெரியல, ஆனா நாம இரண்டு பேரும் பிரண்ட்ஸ் மாதிரி தான் பழகி இருக்கோம். இன்பாக்ட் எனக்கும் செல்வாவுக்கும் இருக்கிற காதலை முதல்ல நான் உனக்கு தான் சொன்னேன். நீதான் அப்பாகிட்ட பேசி எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சே” என்றாள்.

 

“ஆமா, அதுக்கென்ன இப்போ?” என்றான் அசட்டையாக

 

“அப்படி எனக்கு கல்யாணம் செய்து வச்ச உனக்கு, நீ எலிசாவை காதலிக்கிறேனு தெரிஞ்சும், நான் ஏன் அப்பாகிட்ட சொல்லி உனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஏற்பாடு செய்யலை?” என்று கேட்டாள்.

 

“அதானே, நாங்க இரண்டு பேரும் சுத்தினது உனக்கும் தெரியும் தானே? நீ ஏன் என் கல்யாணத்தை பத்தி அப்பாகிட்ட பேசவே இல்லை?” என்று சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான் சித்தார்த்.

 

“ஏன்னா, உனக்கும் எலிசாவுக்கும் இடையில் இருந்தது வெறும் உடல் ஈர்ப்பு. உங்க இரண்டு பேருக்கும் எந்த பொருத்தமும் இல்ல. அவள் வெளிநாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்தவள். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை எல்லாம் அவங்க கிட்ட எதிர்பார்க்க கூடாது. உன் கூட பழகும் போதே அவளுக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்காங்கனு செல்வா என்கிட்ட சொல்வார்” என்றாள் பவிஷ்கா.

 

“ஏய் பவி, நீயும் ரப்பிஷ் மாதிரி பேசாதே. ஆண் நண்பர்களோட சுத்தினால் அவளோட கேரக்டரை தப்பா சொல்லுவீங்களா? அவள் என்னை தான் காதலிக்கிறா… எலிசாவோட கலாச்சாரத்துல அது எல்லாம் இயல்பான ஒண்ணு” என்றான் சித்தார்த்.

 

“சரி, நான் ஒரு வீடியோ அனுப்பறேன். நீ சொன்ன மாதிரி எலிசாவோட கலாச்சாரத்துல அது இயல்பானதா இருக்கலாம். அந்த வீடியோவை பார்த்துட்டு உன்னால இயல்பா எடுத்துக்க முடியுதானு சொல்லு” என்று போனை வைத்தாள் பவிஷ்கா.

 

அடுத்த ஐந்து நிமிடத்தில் பவிஷ்காவிடமிருந்து ஒரு வீடியோ வந்தது. அதில் ஏதோ ஒரு கிளப்பில் எலிசா வேறொரு ஆணுடன் மிகவும் நெருக்கத்தில் இருந்தாள். அதிகமாக குடித்திருக்கிறாள் போலும், இருவரும் சுற்றம் மறந்து எல்லையை மீறிக் கொண்டிருந்தனர். அதற்கு மேல் அதை பார்க்க முடியாமல் போனை அணைத்து விட்டான்.

 

அன்று இரவு முழுவதும் சித்தார்த்துக்கு உறக்கமே இல்லை. என்னதான் வெளிநாட்டில் படித்தாலும், அங்கேயே வளர்ந்தாலும், இந்திய கலாச்சாரம் தானே அவன் உணர்விலும் உடலிலும் கலந்திருக்கிறது. எலிசாவை அந்த நிலையில் வேறொருவனுடன் பார்த்ததும், நானும் அப்படித்தானே அவளுடன் இருந்திருக்கிறேன் என்று அவன் மீதே அவனுக்கு கோபமாக இருந்தது.

 

சற்று நேரம் முன்பு வரை எலிசாவிடம் தனக்கு திருமணமான விஷயத்தை எப்படி சொல்வது? அவளிடம் அவனை மறந்துவிடச் சொல்லி இந்த திருமண பந்தத்தை தொடர்வதா? இல்லை திருமணத்தை துறந்து விட்டு உண்மையை சொல்லி எலிசாவை திருமணம் செய்துக் கொள்வதா? என்று மன அழுத்தத்தில் இருந்தவனுக்கு, அந்த வீடியோ தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கவே வழி செய்தது.

 

அன்று இரவு தூக்கமில்லாமல் இருந்தவன் விடிந்த பின்பு தான் கண்ணயர்ந்தான். பவிஷ்கா மீண்டும் தன் தம்பியை போனில் அழைத்தாள். “சித்து, ஹவ் டு யு பீல் நவ்?” என்றாள் பொதுவாக.

 

“ஐயம் பைன்” என்றான் சித்தார்த்.

 

“எனி கில்டி பீலிங் அபெளட் எலிசா?” என்று கேட்டாள்.

 

“நத்திங்” என்று அவனை அறியாமல் வார்த்தைகள் வெளிவந்திருந்தன. 

 

அவனால் எப்படி எலிசாவின் துரோகத்தை அத்தனை எளிதாக கடந்துவிட முடிந்தது? அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. பவிஷ்கா சொன்னது போல அவளிடம் இருந்தது வெறும் உடல்கவர்ச்சி தானா? எப்போதும் அவன் எலிசாவுடன் மனம்விட்டு அவன் பேசியதே இல்லை. தனிமையில் அவள் அவனை பேச விட்டதே இல்லை. இருவருக்கும் இடையில் உடல் தேவை மட்டும் இருந்ததால் மனதால் அவர்கள் இணையவே இல்லை. 

 

சித்தார்த்திடம் பதில் இல்லாமல் போகவும், “சித்து லைன்ல இருக்கியா? இன்னமும் உனக்கு எலிசாவை தான் பிடிச்சிருக்கா? உனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லையா?” என்றாள் பவி சற்று திணறலோடு.

 

சித்தார்த்திடம் மெளனம் மட்டுமே. “சித்து, நேத்ரநயனி கல்யாணத்துல சிக்கல் வரும் முன்பே, அப்பா என்கிட்ட பேசினார்டா. அந்த மாப்பிள்ளை சரியில்லை. சிவக்குமார் வெள்ளந்தியா இருக்கான். அவனை நம்பி பொண்ணை கொடுக்க போறான்னு சொல்லி வருத்தப்பட்டார்” என்று தனக்கும் தன் தந்தைக்கும் நடந்த உரையாடலை கூற தொடங்கினாள் பவிஷ்கா.

 

“பவிம்மா, இந்த சிவா முட்டாளா இருக்கான்டா. அவன் ஏற்பாடு செஞ்சு இருக்கிற மாப்பிள்ளை கொஞ்சம் கூட சரியில்லை. கண்ணெதிரில் அந்த பொண்ணோட வாழ்க்கை சீரழியறதை பார்க்கவும் முடியலை. அதை நிறுத்தவும் முடியலை” என்று புலம்பினார் மகேந்திரன்.

 

“அப்பா சிவா மாமாகிட்ட சொல்லி முதல்ல கல்யாணத்தை நிறுத்துங்க, வேறே மாப்பிள்ளையை பார்த்து நாமளே கல்யாணம் செய்து வைப்போம்” என்றாள் பவி.

 

“இல்லமா, நம்ம கிட்ட இருந்து பணம் வாங்க மாட்டான். அவன் சக்திக்கு மீறி நிறைய கடன் வாங்கி தான் ஏற்கனவே கல்யாணம் ஏற்பாடு செய்திருக்கான். அவன்கிட்ட மறைமுகமாக மாப்பிள்ளை சரியில்லைனு சொல்லி பார்த்தேன். எல்லாம் நேத்ரா பார்த்துப்பா, அவள் அவனை குடிக்காம திருத்தி நல்லவழிக்கு கொண்டுவருவாள்னு லூசு மாதிரி பேசறான்” என்றார்.

 

“இதென்ன கதையா இருக்கு, அந்த குடிகாரனை திருத்தறது தான் அவளோட வேலையா? ஒரு வேளை திருந்தாமல் போயிட்டான்னா?” என்றாள் பவிஷ்கா.

 

“அது தான் எனக்கு கவலையா இருக்கு. நான் எதுக்கும் நம்ம சித்தார்த் கிட்ட பேசி சிவா பொண்ணை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்கட்டுமா?” என்றார் 

 

“அப்பா, நீங்க கேட்டால் அவன் ஒத்துக்க மாட்டான். இங்கே ஒரு பொண்ணை லவ் பண்றான். ஆனால் அவள் சரியில்லை. நான் அவன்கிட்ட சொன்னாலும் புரிஞ்சுப்பானான்னு தெரியலை. அவனே தானாக புரிஞ்சுக்கட்டும்னு விட்டுட்டேன். அதனால் அவன்கிட்ட இப்பவே விஷயத்தை சொல்லாமல், அங்கே கல்யாணம் நடக்கற இடத்துக்கு வரவழைச்சு பேசுங்க. நிலைமையை எடுத்து சொன்னால், அவன் புரிஞ்சுப்பான். அவன் ஒத்துக்கிட்டான்னா அப்புறமா சிவா மாமா கிட்ட பேசி அந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க” என்றாள் பவிஷ்கா.

 

“சரிம்மா, நான் சித்து கிட்ட பேசி பார்க்கிறேன்” என்றார் மகேந்திரன்.

 

பவிஷ்கா நடந்ததை கூறிக் கொண்டு இருக்கும்போதே சித்தார்த் இடை புகுந்தான்.

 

“அடி பாவி பவி, எல்லாம் உன் வேலை தானா? அப்பாவும் மகளும் சேர்ந்து என் வாழ்க்கையில் விளையாடி வச்சிருக்கீங்களா? அந்த பாண்டிக்கு ஊத்தி கொடுத்தது கூட உங்க அப்பா தானா?” என்று எகிறினான் சித்தார்த்.

 

“டேய் இல்லடா, உன்கிட்ட பேசி சம்மதம் வாங்கலாம்னு தான் அப்பா நினைச்சிருந்தார். ஆனால் ஆரம்பத்திலிருந்தே நீ அந்த பொண்ணோட படிப்பை குறைச்சு பேசறதை பார்த்து, இதெல்லாம் சரிவராதுனு சொல்லிட்டார். 

 

சித்து மனசுல படிப்பு பணம், வசதி இருக்கறதால அவன் தான் மேலானவன்னு எண்ணம் இருக்கு, நேத்ராவை கீழானவளா பார்க்கிறான். மனுஷனை மனுஷனா பார்த்து சமமா நடத்தனும். ஸ்டேடட்ஸ் பார்க்க கூடாது. இப்படிபட்டவன் ஸ்டேட்டஸ் பார்த்து என் நண்பனோட பொண்ணை நல்லா பார்த்துக்கலைனா என் சிவா முன்னாடி நான் தான் தலைகுனியனும். அந்த பொண்ணு தலைவிதி என்னவோ அதன்படி நடக்கட்டும்னு என்கிட்ட சொன்னாரு.

 

ஆனால் அவளோட விதி உன்னோட தான்னு இருந்திருக்கு போல. அந்த பாண்டி குடிபோதையில் எழுந்திரிக்காமல் போனது, அந்த கல்யாணம் நின்னது எல்லாமே தானாக தான் நடந்தது. இதுல எங்களோட தலையீடு எதுவும் இல்ல. நானும் அப்பாவும் பேசிகிட்ட விஷயம் எங்களை தவிர சிவா மாமாவுக்கோ, நேத்ராவுக்கோ தெரியாது. 

 

இன்னும் சொல்ல போனால் அவளுக்கு என்னை நியாபகம் இருக்கான்னு கூட தெரியலை” என்றாள் பவிஷ்கா.

 

“உனக்கு அவளை முன்னாடியே தெரியுமா?” என்றான் சித்தார்த் ஆச்சரியமாக

 

“ஏன்டா உனக்கு அவளை நியாபகம் இல்லையா? நாம எல்லாம் சின்ன வயசுல அப்பாவோட கிராமத்துக்கு போய் ஒன்னா விளையாடுவோமே, அவள் எப்பவும் உன் பின்னாடி தானே சுத்திட்டு இருப்பா” என்றாள் பவிஷ்கா.

 

“அப்படியா? எனக்கெதுவும் நியாபகம் இல்லையே” என்றான் சித்தார்த் நெற்றியை தடவியபடி.

 

“நம்ம அம்மா எப்பவும், அவளை மருமகளேனு தான் ஆசையா கூப்பிடுவாங்க. அவளும் நாம ஊருக்கு வந்தாலே நம்ம வீட்டுக்கு வந்திடுவா. அதுக்கப்புறம் நாம் கொஞ்ச வருஷமா அங்கே போகவே இல்ல. நாம மறுபடியும் போன போது அவ நம்ம வீட்டுக்கு வர்றதே இல்ல அதுக்கு காரணம் நீதான்” என்றாள் பவி

 

“நானா? நான் என்ன பண்ணேன்?” என்றான் சித்தார்த்.

 

“நீதான் அவளை சோடாபுட்டினு கூப்பிட்டியாமே, என்கிட்ட வந்து உங்க தம்பி நான் கண்ணாடி போட்டிருக்கிறதை பார்த்து கிண்டல் பண்றாரு, இனி உங்க வீட்டுக்கெல்லாம் விளையாட வரமாட்டேன்னு ரோஷமா சொல்லிட்டு போயிட்டா, இப்போ பாரு நம்ம வீட்டுக்கே மருமகளாக வந்துட்டா” என்று சிரித்தாள் பவிஷ்கா.

 

பவிஷ்கா கூறியதில் சித்தார்த்துக்கு எதுவுமே நினைவில் இல்லை. ஆனால் கொஞ்ச வருடம் கழித்து அவர்கள் ஊருக்கு சென்றது அவன் நினைவில் வந்தது. சித்தார்த் சைக்கிளை எடுத்துக் கொண்டு அந்த ஊரில் இருந்த தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் பாவாடை சட்டை போட்டுக் கொண்டு நடந்து போய் கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் சித்தார்த்துக்கு எங்கேயோ அவளை பார்த்த நியாபகம் மட்டுமே இருந்தது. அவள் பெயர் நினைவில் இல்லை.

 

“ஏய் பொண்ணு, ஹலோ” என்று பலவாறு அழைத்தான்.

 

அவள் திரும்பவே இல்லை. அவளை நன்றாக தெரிகிறது ஆனால் யாரென்று தான் நினைவில் இல்லை. அவளிடமே அவள் யாரென்று கேட்கலாம் என்று அவளிடம் பேச முயற்சித்தான். ஆனால் அவள் பக்கத்தில் இருந்த தோழியிடம் பேசிக் கொண்டே சென்றாள். கண்ணாடி அணிந்திருந்தாள்.

 

சட்டென அவளை, “ஏய் சோடாபுட்டி” என்றான்.

 

வெடுக்கென்று திரும்பி பார்த்தவள், “டேய் யாரை பார்த்துடா சோடாபுட்டினு சொல்றே?” என்று கேட்டாவாறு கீழே இருந்த கல்லை எடுத்து அவனை நோக்கி வீசுவது போல பாசாங்கு செய்தாள்.

 

சாதாரணமாக பேச எண்ணியவன் அவள் அடிக்க கை ஓங்கவும் ஆண்பிள்ளைக்கான துணிச்சலுடன், “போடி சோடாபுட்டி” என்று சொல்லிவிட்டு சைக்கிளில் பறந்து விட்டான்.

 

அதன்பிறகு அவளை எங்கு பார்த்தாலும், அவன் சோடாபுட்டி என்பான், அவள் பற்களை நறநறத்தபடி கல்லை எடுத்து ஆத்திரமாக அவனை நோக்கி அடிக்க எத்தனிப்பாள். அதற்குள் அவன் சைக்கிளில் பறந்து விடுவான்.

 

“ஏய் சித்து, லைன்ல இருக்கியாடா?” என்று கத்திக் கொண்டிருந்தாள் பவிஷ்கா.

 

“இருக்கேன், நீ சொன்னதுல எனக்கு எதுவும் நியாபகம் இல்ல. ஆனால் நான் ஊருல ஒரு பொண்ணை சோடாபுட்டினு கிண்டல் செய்திருக்கேன். ஆனால் அது சிவா மாமா பொண்ணுனு எனக்கு அப்போ தெரியாது”

 

பவிக்கா, தாலிக்கட்டும் போது கூட அவள் கண்ணாடி போடாததால யாருனு அடையாளம் தெரியலை. சிவா மாமாவுக்கு ஒரு பொண்ணு இருப்பது மட்டும் தான் தெரியும். அது நான் சோடாபுட்டினு கிண்டல் பண்ண பொண்ணுனு தெரியாது. கல்யாணம் முடிச்சுட்டு சென்னை வந்தோம், அப்பாவை ஏர்போர்ட்ல விட்டுட்டு நான் கேண்டினுக்கு போனால், இவள் என்னை தேடிட்டு வர்றா. எனக்கு அப்பவும் அவளோட பேர் தெரியலை. பார்த்தால் கண்ணாடி போட்டுட்டு இருக்கா. 

 

எனக்கு அந்த நேரத்துல பழைய நினைவு தான் வந்துச்சு. அவளை பார்த்ததும் நானும் என்னையறியாமல் சோடாபுட்டினு கூப்பிட்டுட்டேன்” என்றான் சித்தார்த்.

 

“அய்ய்யோ அப்படி கூப்பிட்டால் அவள் பத்ரகாளியாடுவாளேடா, அன்னைக்கே வீட்டில் வந்து என்கிட்ட சண்டை போட்டு போனா. உங்க தம்பியை அடக்கி வையுங்கனு அட்வைஸ் வேறே. இப்போ நினைச்சாலும் சிரிப்பா வருது” என்று சிரித்தாள் பவிஷ்கா.

 

“நான் சோடாபுட்டினு கூப்பிட்டதும், அவளுக்கு வந்துச்சு பாரு கோபம்? எனக்கென்னவோ அதனால தான் என்கூட வரமாட்டேன்னு சொல்லிட்டு மகளிர் விடுதிக்கு போயிருப்பாள்னு தோணுது” என்றான் சித்தார்த் யோசனையோடு.

 

“டேய் சித்து, என்னடா சொல்றே? இது எப்போ நடந்தது? அவ உன்கூட இல்லையா? அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்” என்று பதறினாள் பவிஷ்கா.

 

“பதறாதே, அவ எப்படியும் இன்னைக்கு நம்ம மருத்துவமனையில் தான் வேலைக்கு சேரப்போறாளாம். என் கண்ணெதிரில் தான் இருப்பாள். நான் பார்த்துக்கிறேன். அப்பா வர்றதுக்குள்ள, அவள் நம்ம வீட்டில் இருப்பா, ஓகேவா” என்றான்.

 

“சரிடா, ஆனால் சின்ன வயசுல நீதான் அவளை சோடாபுட்டினு சொல்லி வெறுப்பேத்தினதுனு மட்டும் சொல்லிடாதே. கன்பாரம் உனக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு போயிடுவா, அப்பவே உன் மேல கொலை காண்டுல திரிஞ்சுட்டு இருந்தா” என்று சிரித்தாள் பவிஷ்கா.

 

சித்தார்த்தும் சிரித்துவிட்டு “சரி நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தான் அன்று மருத்துவமனைக்கு சென்றான்.

 

அன்றிலிருந்து நேத்ராவின் மீதான அவன் பார்வை மெல்ல மெல்ல மாற தொடங்கியிருந்தது. அவள் நயனங்களில் தொலைய ஆரம்பித்தவனின் மனம் ஏனாே எலிசாவை தேட மறந்துவிட்டது.

 

அன்றைய நினைவில் மூழ்கி இருந்தவன் சுயநினைவிற்கு வந்தபோது நேத்ரநயனியின் பார்வை இன்னமுமே சித்தார்த்தின் பதிலுக்காக காத்திருப்பது புரிந்தது. இப்போது எதை எப்படி சொல்லி அவளுக்கு விளக்குவது என்று அவனுக்கு புரியவில்லை.

 

தொண்டையை செருமிக் கொண்டு, “நீயா விலகி போகணும்னு நினைக்கும் போது உன்னை ஏன் கட்டாயப்படுத்தணும்னு நினைச்சேன். அதுமட்டுமில்லாமல் எப்படியானாலும் நீ என்னோட மருத்துவமனையில் தானே வேலை செய்ய போறே, பார்த்துக்கலாம்னு இருந்தேன்” என்றான்.

 

நேத்ராவிற்கு அந்த பதிலே போதுமானதாக இருந்தது போலும், அதற்கு மேல் அவனிடம் எந்த கேள்வியும் கேட்காமல், தன் பொருட்களை எடுத்தபடி அவனை பார்த்தாள். “அந்த கண்ணாடி தடுப்புக்கு பின்னாடி ஒரு கட்டிலும், கப்போர்டும் இருக்கும். அங்கே உன்னோட பொருட்களை வச்சிக்கோ. அங்கிருக்கிற  கதவை திறந்தா பால்கனி நல்லா தெரியும். வெளியே இருந்து வர்ற நிலா வெளிச்சத்தை பார்த்தபடி நான் அங்கே எப்பவாவது படுத்துக்கிறது வழக்கம்” என்றான்.

 

தலையசைப்பை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு, அங்கே சென்று தன் உடைமைகளை அடுக்க தொடங்கினாள். அதற்குள் சித்தார்த் அவளுக்காக உணவை அறைக்கே வரவழைத்திருந்தான்.

 

நேத்ராவும் பசியில் இருந்ததால் மறுக்காமல் சாப்பிட்டு விட்டு, “நான் போய் தூங்கட்டுமா?” என்றாள்

 

“வேணாம்னா மட்டும் கேட்க போறீயா?” என்றான் அவளை அழுத்தமாக பார்த்து.

 

அவனை பார்த்து திகைத்து விழித்தவள், “புரியல” என்றாள்.

 

“புரிஞ்சிட்டாலும்…” என்று நக்கலாக கூறியவன் அவளின் அகன்ற விழிகளின் மருண்ட பார்வையில் தன்னை மறந்து அவளை நோக்கி சென்றான்.

 

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!