Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நின்னோடு தமியனாய்

நின்னோடு தமியனாய் 8 1

அத்தியாயம் 8.1

“எங்க அப்பா, நாளைக்கு உங்க அப்பாவைப் பார்த்து நம்ம விஷயமா  பேசணும்னு சொல்லிருக்காரு.” என்றான் பூபதி

அந்த வார்த்தையைக் கேட்டதும் பிருந்தாவின் இதயம் வேகமாகத் துடித்தது.

இவ்வளவு சீக்கிரமாவா?



Advertisement

ஆமா…

பயமா இருக்கு பூபதி…

எனக்கும் பயம்தான்.

Advertisement

அப்புறம் எதுக்கு இவ்வளவு அவசரம்?”

Advertisement

அவன் சிரித்தபடி,”ஏன்னா… பயத்தை விட உன் மேல இருக்கிற காதல் ஜாஸ்தி.”என்றான்.

அந்த ஒரு வாக்கியம்…பிருந்தாவின் மனதில் இருந்த எல்லாப் பயத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைக்க ஆரம்பித்தது.

அவள் கண்களை மூடிக்கொண்டு மெதுவாக,”தேங்க்யூ…”என்றாள்.

Advertisement

“எதுக்கு?”

“என்னைக் காதலிச்சதுக்கு…”

பூபதி புன்னகைத்தான்.

“அதுக்கு தேங்க்ஸ் சொல்லக்கூடாது டாக்டர்…”

“அப்போ?”

“ஐ லவ் யூ சொல்லணும்…” என்றவுடன், மறுமுனையில் வெட்கத்தில் சிரித்த பிருந்தாவின் (கொலுசு) சிரிப்பு மட்டுமே கேட்டது.

அந்தச் சிரிப்பை கேட்டபடி…பூபதியின் முகத்திலும் நிறைவான புன்னகை மலர்ந்தது.

அழைப்பு முடிந்த பிறகும்…பிருந்தா அலைபேசியை அணைக்கவில்லை.
திரையில் இன்னும் பூபதியின் பெயரே தெரிந்தது.மெதுவாக அந்தப் பெயரை விரலால் வருடினாள்.

“பூபதி…”என்று உதடுகள் மெல்ல உச்சரித்தன.கண்ணாடி முன் சென்று நின்றாள்.தன் முகத்தையே பார்த்து அவளுக்கு வெட்கத்தில் சிரிப்பு வந்தது.

“டாக்டர் பிருந்தா…இனிமே… மிஸஸ் பூபதியா?” என்று கிசுகிசுத்து, வெட்கத்தில் தன் முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக் கொண்டாள்.

அந்த நொடியே…கதவு தட்டப்பட்டது.

“பிருந்தா…”ராகவனின் குரல்.

“அப்பா… வாங்க.”

உள்ளே வந்து, மகளின் முகத்தைப் பார்த்ததும் அவரது புருவம் லேசாக உயர்ந்தது.

“என்னம்மா… இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி தெரியுதே?”

பிருந்தா உடனே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லப்பா.”

“உன்னோட பிறந்த நாள்ல கூட இவ்வளவு சந்தோசமா இருந்து பாத்தது இல்ல.”

உடனே பதற்றமாக அவள் பேச்சை மாற்ற முயன்றாள்.

சாப்பிட்டீங்களாப்பா?

“சாப்பிட்டேன்.”என்று கூறியவர் அறையைச் சுற்றிப் பார்த்தார்.

படுக்கையின் மீது மருத்துவப் புத்தகங்கள்…மேசையில் நோயாளிகளின் கோப்புகள்…
அனைத்தும் வழக்கம்போல இருந்தது.
ஆனால்…அவரது மகளின் கண்களில் மட்டும் இன்று ஒரு புதிய ஒளி தெரிந்தது.மேலும் அவள் ஏதோ சொல்லத் தயங்குகிறாள் என்பதை ஒரு தந்தையாக அவரால் உணர முடிந்தது.

அவள் அருகே வந்து தலையை வருடியபடி,”எதுவா இருந்தாலும்… அப்பாக்கிட்ட சொல்ல தயங்காத.” என்றார்.

அந்த வார்த்தை கேட்டதும்… பிருந்தாவின் தொண்டைக்குள் ஏதோ அடைத்தது.

ஒரு நொடி…”அப்பா… நான்…” என்று ஆரம்பித்தவள்…அடுத்த நொடியே நின்றுவிட்டாள்.

பூபதி சொன்னது நினைவுக்கு வந்தது.
“முதல்ல பெரியவங்க பேசட்டும்.”

அவள் உடனே சிரித்தபடி,”ஒன்னும் இல்லப்பா… கொஞ்சம் டயர்டா இருக்கு.”
என்றாள்.

ராகவன் சந்தேகத்துடன் பார்த்தாலும், அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.

“சரி… சீக்கிரம் தூங்கு.”என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

கதவு மூடப்பட்டதும்…பிருந்தா மெதுவாகக் கதவின் மீது சாய்ந்து நின்றாள்.

“இன்னும் ஒரு நாள்…இல்லை நாளைக்குள்ள எல்லாமே மாறிடும்…”
என்று மனதுக்குள் நினைத்தாள்.

சிறிது நேரத்தில்…வீட்டின் கீழ்தளத்தில்…
ராகவன் சோபாவில் அமர்ந்து செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்தார்.அப்போது வெளியே ஒரு கார் வந்து நின்ற சத்தம் கேட்டது.

வீட்டு வேலைக்காரர் உள்ளே வந்து,
“சார்… விவி நேஷனல் லெதர் ஃபேக்டரியிலிருந்து விஸ்வநாதன் சார் வந்திருக்காங்க…”என்றார்.

ராகவன் ஆச்சரியத்துடன் எழுந்து நின்றார்.

“இந்த நேரத்துல…?”என்ற கேள்வியுடன் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

வாசலுக்கு வந்த ராகவன், எதிரே நின்றிருந்த விஸ்வநாதனைப் பார்த்ததும் முகம் மலர்ந்தபடி,”அடடே… வாங்க விஸ்வநாதன்! இந்த நேரத்துல? ஒரு ஃபோன் பண்ணியிருந்தா நானே வந்திருப்பேனே.”என்றார்.

விஸ்வநாதன் வழக்கம்போல் புன்னகைத்து,”இது ஃபோன்ல பேசுற விஷயம் இல்ல ராகவன்.”என்றார்

அந்த ஒரு வாக்கியத்திலேயே ஏதோ முக்கியமான விஷயம் என்பதை ராகவன் உணர்ந்து ,”உள்ள வாங்க…” என மீண்டும் அழைத்தார்.

இருவரும் ஹாலுக்குள் வந்தனர்.
வேலைக்காரர் காபி கொண்டு வந்து வைத்தார்.சில நொடிகள் வழக்கமான தொழில், உடல்நலம், குடும்பம் பற்றிய பேச்சுகள் நடந்தன.

ஆனால்…விஸ்வநாதன் ஏதோ சொல்லத் தயங்குவதை ராகவன் கவனித்துக் கொண்டிருந்தார்.

“என்ன விஸ்வநாதன்… ஏதோ சொல்ல வர மாதிரி தெரியுது.”

விஸ்வநாதன் காபி கோப்பையை மேசையில் வைத்தபடி,சோபாவில் முன்னோக்கி அமர்ந்து,”ராகவன்… நான் இன்றைக்கு ஒரு நண்பனா வரல.” என்றார்.

அப்போ?

ஒரு அப்பாவா வந்திருக்கேன்.

ராகவனின் முகம் சீரியஸானது.

விஸ்வநாதன் ஆழமாக மூச்சை இழுத்து, பின் ,”என் மகன் பூபதி…”என சிறிது இடைவெளி விட்டார்.

மீண்டும் “…உங்க மகள் பிருந்தாவை விரும்புறான்.”என்றார்.

ஹால் முழுவதும் அமைதியாகிவிட்டது.
ராகவன் எந்த அதிர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை.அமைதியாகவே விஸ்வநாதனைப் பார்த்தார்.

இன்னைக்கு தான்… அவன் என்கிட்ட மனசைத் திறந்து பேசினான்.இது அவசரப்பட்டு எடுத்த முடிவு இல்ல.
நிறைய யோசிச்சு எடுத்த முடிவு.
அதனால்தான்… முதல்ல உங்ககிட்ட சொல்லணும்னு வந்தேன்.

ராகவன் மெதுவாக சோபாவில் சாய்ந்தார்.சில நொடிகள் எதுவும் பேசவில்லை.அவரது அமைதியைப் பார்த்த விஸ்வநாதன் தொடர்ந்தார்.

ராகவன்…நான் உங்களை எந்த விதத்திலும் நிர்ப்பந்திக்க வரல.
பிருந்தாவுக்கு விருப்பம் இல்லன்னா… இந்த பேச்சு இங்கேயே முடிஞ்சிடும்.
அதே மாதிரி… உங்களுக்கும் விருப்பம் இல்லன்னா… அதையும் நான் முழு மனசோட ஏத்துக்கறேன்.

“ஆனா…என் மகன் உங்கள் மகளை உண்மையாக காதலிக்கிறான்.நம் இருவரின் பெயரையும் கெடுக்கிற மாதிரி நடந்துக்கலை.அதனால்தான்… ஒரு தகப்பனா உங்க வீட்டு வாசலுக்கு வந்து நிக்கறேன்” என விஸ்வநாதன் பேசி முடித்ததும்…

ராகவன் மெதுவாக எழுந்து ஜன்னல் அருகே சென்றார்.வெளியே இருள் படர்ந்திருந்தது.சில நொடிகள் எதுவும் பேசாமல் நின்றவர்…திரும்பி வந்து விஸ்வநாதன் அருகே அமர்ந்தார்.

விஸ்வநாதன்…நான் உங்களை ஒரு நண்பனா மட்டுமில்ல… ஒரு நல்ல மனுஷனா மதிக்கிறேன்.பூபதியையும் சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டு இருக்கேன்.எனக்கு அவன் மேல எந்தக் குறையும் இல்ல.

விஸ்வநாதனின் முகத்தில் நம்பிக்கை தோன்றியது.ஆனால்…ராகவன் அடுத்ததாக சொன்ன வார்த்தை அவரை மீண்டும் அமைதியாக்கியது.

ஆனா…இந்த முடிவு என்னால மட்டும் எடுக்க முடியாது.ஏன்னா…இது என் மகளோட வாழ்க்கை.முதல்ல… அவளுக்கு இதுல விருப்பமானு கேட்கணும்…

விஸ்வநாதன் உடனே தலையசைத்து
“அதுதான் சரி.”என்றார்.

ராகவன் மெதுவாக சிரித்தபடி ,”ஒரு அப்பாவா நீங்க உங்க மகனுக்கு மரியாதை கொடுத்திருக்கீங்க.அதே மரியாதையை நான் என் மகளுக்கும் கொடுக்கணும்”என்றார்.

பின் வேலைக்காரரை அழைத்து,
“பிருந்தாவை கீழே வரச் சொல்லு.”என கட்டளை இட்டார்.

மேல்மாடியில்…தன் அறையில் அமர்ந்திருந்த பிருந்தாவுக்கு…

“பிருந்தா கன்னு… அப்பா கீழே கூப்பிடுறாங்க…”என்ற குரல் கேட்டது.

ஏனோ…அவள் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

“ஒரு வேளை அப்பா கண்டுபிடித்து விட்டாரோ…?”என்ற எண்ணம் அவள் மனதில் மின்னல் போல தோன்றி மறைந்தது.

அந்த எண்ணத்துடனே…மெதுவாக படிக்கட்டுகளை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அப்பா கூப்பிட்டீங்களாமே…என்று கேட்டுக்கொண்டே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்தாள் பிருந்தா.

ஹாலுக்குள் நுழைந்தவுடன்… சோபாவில் அமர்ந்திருந்த விஸ்வநாதனைப் பார்த்ததும் அவள் கால்கள் ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டன.

“வாங்க… அங்கிள்…?”என்று மரியாதையுடன் அழைத்தாள்.

“வா மா…” என்று விஸ்வநாதன் புன்னகைத்தார்.

அவளும் புன்னகைக்க முயன்றாள்.

ஆனால்…இதயம் மட்டும் படபடவென்று துடித்துக் கொண்டிருந்தது.

ராகவன் அவளை அருகில் அமரச் சென்னார்.

“பிருந்தா… ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

“சொல்லுங்கப்பா.”

அவள் குரல் இயல்பாக இருந்தாலும், உள்ளுக்குள் பயம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

ராகவன் சில நொடிகள் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பிறகு மெதுவாக”உன் கல்யாணத்தைப் பற்றி நானும் உன் அம்மாவும் யோசிக்க ஆரம்பிச்சிருக்கோம்.”என்றார்.

அந்த வார்த்தையைக் கேட்டதும்…
பிருந்தாவின் விரல்கள் தானாகவே ஒன்றோடொன்று பின்னிக் கொண்டன.

உன் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கிற வயசுக்கு வந்துட்ட.
அதனால…முதல்ல உன் விருப்பம் என்னன்னு தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறேன்.

அவள் மெதுவாகத் தலை குனிந்தாள்.

ராகவன் தொடர்ந்தார்.”உன் மனசுல…யாராவது இருக்காங்களா?”

அந்த ஒரு கேள்வி…அவளது இதயத்தை பலமாகத் தாக்கியது.அறை முழுவதும் அமைதி.பிருந்தாவால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்த விஸ்வநாதன் குறுக்கிடவில்லை.

இது…ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உரையாடல் என்பதை அவர் புரிந்திருந்தார்.

ராகவன் மென்மையாக “அப்பாக்கிட்ட சொல்ல தயக்கம் வேண்டாம்.உனக்கு பிடிச்ச வாழ்க்கையை நீ  வாழணுங்கறதுதா என் ஆசை.”என்று சொன்னார்.

பிருந்தாவின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.மெதுவாக நிமிர்ந்து தன் தந்தையைப் பார்த்தாள்.

“அப்பா…”என அவளது குரல் நடுங்கியது.

“நான்…”என சொல்ல வந்தவளின் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டன.

ராகவன் அவளது கையைப் பிடித்து,
“அவசரம் இல்ல. நிதானமா சொல்லு.” என்றார்.

பிருந்தா ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்த பிறகு…மெதுவாக விஸ்வநாதனை ஒரு கணம் பார்த்துவிட்டு,மீண்டும் தன் தந்தையை நோக்கினாள்.

“அப்பா…எனக்கு…பூபதியை ரொம்ப பிடிக்கும்.”என்றாள்.

அவ்வளவுதான்.அடுத்த நொடியே அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“இது நேத்து வந்த முடிவு இல்லப்பா… பல நாட்களா…அவரோட குணத்தைப் பார்த்து…அவரோட மனிதநேயத்தைப் பார்த்து…அவர் என் வாழ்க்கைத் துணையா வந்தா நல்லா இருக்கும்னு மனசுக்குள்ள நினைச்சு எடுத்த முடிவுப்பா.”என்றாள்

“ஆனா…ஒரு நாள் கூட…நான் அவர்கிட்ட என் காதலை சொல்லல.உங்களுக்கும் அம்மாவுக்கும் தெரியாம…எந்தத் தப்பும் செய்யணும்னு நினைக்கல. நேத்துதான் அவரே வந்து…அவரோட மனசுல இருக்கறதே சொன்னார்.”என அனைத்தையும் கூறினாள்.

அப்பா…உங்களுக்கு விருப்பம் இல்லன்னா…நான் அவரை மறந்திட முயற்சி பண்றேன்.”

“ஆனா…”என கூற வந்தவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

அந்த நொடியில்…ராகவன் மெதுவாக எழுந்து…மகளின் அருகே வந்து…அவள் தலையில் கை வைத்து,”எதுக்குடா அழற?என்றார்.

பிருந்தா அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

ராகவன் சிரித்தபடி,”உன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை உன்னை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுக்கிற அளவுக்கு நான் மோசமான அப்பா இல்ல.” என்று சொன்னார்.

அந்த வார்த்தையைக் கேட்டதும்…
பிருந்தா குழந்தையைப் போல தன் தந்தையை கட்டிப்பிடித்து அழுதாள்.

அந்தக் காட்சியைப் பார்த்த விஸ்வநாதனின் கண்களும் லேசாகக் கலங்கின.

“என் மகன்… நல்ல இடத்தில்தான் மனசை கொடுத்திருக்கான்…”என்று மனதிற்குள் பெருமையுடன் நினைத்துக் கொண்டார்.

பிருந்தா தன் தந்தையை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருக்க…ராகவன் அவளது முதுகை மெதுவாகத் தடவியபடி, “போதும்மா… அழாதே…இனிமே  உன் கண்களில்ல சந்தோசத்துனால மட்டும்தான் கண்ணீர் வரனும்.”என்றார்.

பிருந்தா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவரிடமிருந்து விலகினாள்.

“அப்பா… உண்மையாவே உங்களுக்கு சம்மதமா?”

“உன்னோட விருப்பம்தான் என்னுடைய விருப்பமும்”என்று சிரித்தார்.

பிறகு விஸ்வநாதனைப் பார்த்து,
“நீங்க என் வீட்டுக்கு பெண் கேட்டு வந்திருக்கீங்க. அதை நான் பெரிய மரியாதையா நினைக்கிறேன்.”என்றார்.

விஸ்வநாதன் உடனே எழுந்து,
“ராகவன்…”என்று பேச முயல…

“இல்லை… முதல்ல நான் சொல்லி முடிக்கிறேன்.”என தொடர்ந்தார்.

“பூபதி நல்ல பையன். அவனோட குணத்தை நான் பல வருஷமா பார்த்திருக்கேன். பிருந்தாவும் அவனை விரும்புறா.அதனால் எனக்கு இந்த சம்பந்தத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை.”

இதைக் கேட்ட விஸ்வநாதனின் முகம் மலர்ந்தது.

ஆனால்  இன்னும் ஒரு விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது.

சொல்லுங்க.

ஐஸ்வர்யாக்கும் நம்ம பிருந்தா வயசுதான்.வயசுப் பொண்ணு கல்யாணம் ஆகாம அங்க இருக்கையிலே…பிருந்தாவை எப்படி அனுப்பறது?பர்ஸ்ட் ஐஸ்வர்யாக்கு ஒரு வாழ்க்கை அமையட்டும் அப்பறோம் பூபதி பிருந்தா வாழ்க்கையை பார்க்கலாம்

இதைக் கேட்ட விஸ்வநாதனுக்கு மனம் குளிர்ந்தது.தன் மகள் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற சுயநலம் இல்லாது…தன் மகள் போகும் புகுந்த வீடும் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறாரே…இதை விட சிறந்த வாழ்வு தன் மகனுக்கு தன்னாலும் அமைத்துக் கொடுக்க முடியாது என மெச்சிக் கொண்டார்.

“இந்தக் கல்யாணம் இரண்டு குடும்பங்களோட சம்மதத்தோட நடக்கணும். காதல் இருக்கிறது என்பதற்காக பெரியவர்களைத் தாண்டி எதுவும் நடக்கக் கூடாது.”என்ற கண்டிஷனையும் ராகவன் போட்டார்.

விஸ்வநாதன் புன்னகைத்தார்.

பிருந்தா அமைதியாக இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் முகத்தில் நிம்மதி.

அதே நேரத்தில்…விஸ்வநாதன் தனது அலைபேசியை எடுத்து ,”இப்பவே சொல்லிடலாமா?”எனக் கேட்டார்.

ராகவன் சிரித்தபடி, “சொல்லுங்க” என்றார்.

மாடியில் தன் அறைக்குள் இருந்த பூபதியின் அலைபேசி ஒலித்தது.

திரையில்,”அப்பா காலிங்…”என்று தெரிந்தது.

அழைப்பை எடுத்து,”சொல்லுங்கப்பா…” என்றான்

மறுமுனையில் விஸ்வநாதனின் குரல்.

பூபதி…

ம்…

“இனிமே நீ பிருந்தாவை ஏரிக்கரையில போய் சந்திக்க  வேண்டிய அவசியமே இல்ல”என்றார் விஸ்வநாதன்.

பூபதியின் முகம் உடனே சுருங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!