Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறப்பதில்லை மதி முகம்மான்விழியில் வீழ்ந்தேனடி!

மான்விழி – 21

நேத்ரநயனி தன் இருகைகளின் விரல்களையும் முஷ்டியாக மடக்கி கணவனின் நெஞ்சத்தில் மாறி மாறி குத்திக் கொண்டிருந்தாள்.

 

சித்தார்த் புன்னகையுடன் சிறிது நேரம் அவளிடம் அடிவாங்கிக் கொண்டு அப்படியே அசையாமல் நின்றான். பின்பு அவள் இடையை தன் இரு கரங்களால் அழுந்த பற்றிக் கொண்டான். ஓங்கிய கை அப்படியே அந்தரத்தில் நிறுத்தி அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.

 



Advertisement

“ஏன் நிறுத்திட்ட, குத்துச் சண்டை இத்தோட முடிஞ்சாச்சுனா, முத்த சண்டையை ஆரம்பிக்கலாமா?” என்றான் உல்லாசமாக.

 

“ச்சே நீங்க ரொம்ப மோசம்” என்று விலகி செல்ல எத்தனித்தவளின் இடையை பற்றி மேலும் இறுக்கினான்.

Advertisement

 

Advertisement

“கேளு, என்கிட்ட என்னென்ன கேட்கணுமோ கேளு, திட்டனுமா? திட்டு. அடிக்கணும்னா கூட அடி. எதுவா இருந்தாலும் என் கை சிறையில் இருந்துக்கிட்டே செய்” என்றான்.

 

தன்னை சோடாபுட்டி என்று கிண்டல் செய்தவனை பார்த்தால் அவன் காது கிழியும்வரை திட்டணும் என்று தான் நேத்ரா நினைத்திருந்தாள். ஆனால் அவன் கைச்சிறைக்குள் இத்தனை நெருக்கமாக நின்றுக் கொண்டு எப்படி அவனை திட்டுவது. தொண்டைக்குள் இருந்து காற்று கூட வராத போது பேச்சு எங்கிருந்து வரும்?

Advertisement

 

அவளிடம் மெளனம் மட்டுமே. “மூக்கு மேல உனக்கு கோபம் வருதேடி. என் அக்கா கிட்ட என்ன சொன்னே? என்னை நாக்கு பிடுங்கிக்கிற மாதிரி கேப்பேன்னு தானே சொன்னே? இந்தா என் நாக்கு  என்று அவன் நாக்கை நீட்டி அவள் மூக்கின் நுனியில் வைத்தான்” 

 

மூச்சடைத்து போனது நயனிக்கு. கண்களை அகல விரித்து அவனை மிரட்சியுடன் பார்த்தாள். கண்கள் ஒரு நிலையில் இல்லாமல் எல்லா பக்கமும் அலைப்புற்றன. அவளின் நிலையை கண்டு பக்கென்று சிரித்து விட்டான்.

 

“கொஞ்ச நேரத்துல எனக்கே உன் மேல பயம் வரவச்சிட்டியேடி. எங்கேடா இவகிட்ட மாட்டிக்கிட்டா துவைச்சு காயவச்சுடுவா போல இருக்கேனு நினைச்சேன். உன் வீரம் எல்லாம் என் அக்கா கிட்ட தானா? 

 

நான் சோடாபுட்டினு உன்னை கிண்டல் செய்துட்டு சைக்கிள்ல போகும்போது கீழே கிடக்கிற கல்லை எடுத்து அடிக்க ஓங்குவ தானே? அப்பவே அடிக்க வேண்டியது தானே? அதை விட்டுட்டு என் அக்கா கிட்ட என்னை பத்தி வத்தி வச்சு இருக்கே, மிரட்டிட்டு வேற வந்திருக்க. என்னையே நேர்ல பார்க்கும் போதே திட்டியிருக்கலாம் தானே? இப்பவும் என் அக்காவை தான் மிரட்டிட்டு இருந்தே.  நான் தான் தெரிஞ்சுடுச்சு இல்ல? திட்ட வேண்டியது தானே? ஏன் இப்படி திருதிருனு முழிச்சுட்டு இருக்கே? இன்னமும் நீ மாறலைடி” என்றான் குறும்புடன்.

 

அதில் ரோஷம் வந்தவளாக, “நீ இப்படி நெருக்கமாக நின்னா எப்படி திட்றது?” என்றாள்.

 

பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி அவள் இடையிலிருந்து கையை எடுத்து கொண்டான். “ம் இப்போ திட்டு” என்றான்.

 

“எதுக்கு என்னை சோடாபுட்டினு கிண்டல் பண்ணீங்க? எல்லாரும் அதுக்கு பிறகு அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க தெரியுமா? ஒருத்தவங்க குறையை கிண்டல் பண்றது தப்பில்லையா?” என்றாள் நேத்ரா அமைதியான குரலில்.

 

“முதல்ல இதை குறைனு யார் சொன்னது? கண் பார்வை இல்லாதவங்களையே குறை இருக்கறவங்கனு சொல்ல கூடாதுனு நான் நினைப்பேன். உன்னை ஒரு மூணு வயசுல பார்த்திருக்கேன். நீ எப்பவும் என் கூட தான் விளையாடிட்டு இருப்பே. அதுக்கப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு நான் ஊருக்கு வந்தப்போ நீ கொஞ்சம் வளர்ந்துட்டு இருந்தே.

 

அந்த பொண்ணு தான் நீயானு எனக்கு குழப்பம். உன் பேரு எனக்கு மறந்து போச்சு. எத்தனையோ முறை உன்னை கூப்பிட்டு பார்த்தேன். மேடம் சீரியசா உங்க பிரண்டோட கதை பேசிட்டே போனீங்க. வேற வழியில்லாம நீ கண்ணாடி போட்டு இருக்கிறதை பார்த்து அப்போதைக்கு எனக்கு தோணினதை கூப்பிட்டேன். ஆனால் நீ கோபமா கல்லை எடுத்து காட்டவும் எனக்கு கோபம் வந்துடுச்சு. நானும் டீன் ஏஜ் தானே அப்போ. வேணும்னு உன்னை வம்பு இழுக்கணும்னு தோணுச்சு. அதனால தான் உன்னை எங்கே பார்த்தாலும் அப்படி கூப்பிடுவேன். அப்படி நான் கூப்பிடும் போது உன் கண்ணை பார்க்கணுமே? அப்பா! ஏதோ மதுரையை எரிக்க வந்த கண்ணகி கையில் சிலம்போட நிக்கிறது போல நீ கையில கல்லோட என்னை எரிக்கிற மாதிரி பார்த்துட்டு இருப்ப. ஆனால் ஒரு நாளும் அடிக்க மாட்டே.

 

ஒரு கட்டதுக்கு மேல எனக்கு உன்னோட அந்த போசை பார்க்கணும்னு தோணும், அதனால தான் உன்னை வம்பிழுத்துட்டே இருந்தேன். ஆனா நான் ஒருபோதும் நீ கண்ணாடி போட்டதை குறையா நினைச்சு கிண்டல் பண்ணலை. உன்னையும் உன் முகத்தில் தெரியும் கோபத்தையும் ரசிக்கத்தான் அப்படி பண்ணேன். ஆனால் அது உனக்குள்ள இப்படி ஒரு மனவருத்தத்தை ஏற்படுத்தும்னு நான் அப்போ நினைக்கல. ஐயம் ரியலி சாரி. அந்த நேரத்துல எனக்கும் அவ்வளவு மெச்சூரிட்டி இல்ல” என்று விளக்கம் கொடுத்தான் கணவன்.

 

சித்தார்த் சொன்ன விளக்கம் நயனிக்கு கொஞ்சம் ஆறுதலை தந்தது. 

 

“சரி டீன் ஏஜ்ல தான் மெச்சூரிட்டி இல்ல. கல்யாணம் ஆன மறுநாள் ஏன் அப்படி கூப்பிட்டிங்க” என்றாள் ஆற்றாமையுடன்.

 

“உன் கழுத்துல நான் தாலி கட்டும் போது நீ யாரு என்னனு கூட எனக்கு தெரியல. ஏதோ வெறுமையா தான் இருந்துச்சு. உன் முகத்தை கூட நான் சரியா பார்க்கலை. அன்னைக்கு கல்யாணத்துக்கு அப்புறம் கேண்டீன்ல தான் உன்னை கண்ணாடியோட பார்த்தேன். என்னையும் அறியாமல் பழைய நியாபகத்துல சோடாபுட்டினு கூப்பிட்டுடேன். நீ தான் அந்த பொண்ணா இருக்குமோனு எனக்கு சந்தேகம் இருந்துச்சு. ஆனால் நீ விவாகரத்து அது இதுனு பேசவும் அதை கேட்காமல் அப்படியே விட்டுட்டேன். அன்னைக்கு ராத்திரி பவிக்கா தான் எனக்கு சொன்னா. அப்போ தான் அட நம்ம மான்விழி தான் நம்ம பொண்டாட்டியா வந்திருக்காளானு எனக்கு சர்ப்பரைஸா இருந்துச்சு” என்றான்.

 

“என்ன மான்விழியா?” என்றாள் நயனி ஆச்சரியத்துடன்

 

“ஆமா உன்னை சோடாபுட்டினு வெளியே கிண்டல் பண்ணாலும். உன்னோட அகன்ற கண்ணில் இருக்கும் பெரிய கண்மணிகளை பார்க்கும் போது எனக்கு மான் விழி போல இருக்கும். அதுவும் நீ முறைச்சு பார்க்கும் போது, அந்த கண்மணி கொஞ்சமும் அசையாமல் அப்படியே என்னையே பார்க்கும். அந்த மாதிரி சூழ்நிலையில் எனக்கு கொஞ்சம் தடுமாற்றம் தான். உன் கண்கள் எப்போதும் என்னை கவர்ந்திழுக்கும். அதனால மனசுக்குள்ள மான்விழினு சொல்லிப்பேன்” என்றான்.

 

“இன்னொரு பெண்ணை காதலிச்சுட்டு இப்படி என்கிட்ட காதல் வசனம் பேசறீங்களே அதைத்தான் என்னால நம்ப முடியல” என்றாள் அவனை நம்பாத பார்வை பார்த்து.

 

“ஏன்டி காதல் ஒரு முறை மட்டும் தான் பூக்கும், மறுபடியும் பூக்காது காய்க்காதுனு காதல் வசனம் பேச, நான் ஒன்னும் சினிமா ஹீரோ இல்ல.

பெரும்பாலும் எல்லாருக்குமே கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு காதல் இருக்கும், குறைந்தபட்சம் ஒரு ஈர்ப்பாவது இருக்கும். அந்த மாதிரி ஒரு ஈர்ப்பு தான் எலிசா மேல எனக்கு இருந்தது. அதைக் காதல்னு நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன். அது எப்படினு பார்க்கறீயா?

 

முதல்ல அப்பாகிட்ட சொல்லி எலிசாவை கல்யாணம் பண்ணிக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனால் என்னால அப்பா கிட்ட அவளை நான் விரும்பறதா சொல்லவே முடியலை. ஏன்னா அவர் இந்த மருத்துவமனையை எந்த அளவுக்கு வளர்த்து வச்சிருக்கார் தெரியுமா? ஆனால் எலிசா எப்பவும் விருந்து கேளிக்கையில் நாட்டம் இருக்கிறவ. இங்கே இருக்கிற சூழ்நிலையில் எலிசாவால பொருந்தி போக முடியுமானு யோசனையா இருந்தது. குழப்பத்துல இருந்த என்னை அப்பா கூட்டிட்டு வந்து உனக்கு தாலி கட்ட வச்சுட்டாரு.

 

கல்யாணம்னு ஆனபிறகு உனக்கு துரோகம் செய்ய கூடாது, அப்பாவுடைய நம்பிக்கையையும் காப்பாத்தணும்னு நினைச்சேன். அதே சமயம் அப்பாவோட பிரண்டான சிவா மாமாவுக்காகவும் நான் உன்னோட வாழணும்னு தான் நினைச்சேன். இதுக்கிடையில் எலிசாவை நான் ஏமாத்திட்டனோனு குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. அதனால தான் உன்னிடம் என்னால நெருங்க முடியல.

 

ஆனால் எலிசா வேறே ஒரு ஆண் நண்பரோட பழக ஆரம்பிச்சுட்டதா பவிக்கா சொன்ன பின்னாடி எனக்குள்ள இருந்த குற்ற உணர்ச்சியும் போயிடுச்சு.

 

பிறகு என்னையறியாமலே கணவனாக என் பார்வை உன் மேல படிய ஆரம்பிச்சது. அதுக்கு காரணம் மஞ்சள் கயிறு மாஜிக்கா? இல்லை என் சோடாபுட்டியே எனக்கு மனைவியா வந்துட்டாளே என்ற உரிமை உணர்வானு எனக்கு தெரியாது. ஆனால் நீ தான் விலகி விலகி போனே. சரி எதுவரைக்கும் போறாள்னு பார்க்கலாம்னு தான் உன்னை விட்டு பிடிக்க நினைச்சேன்” என்றான்.

 

இதையெல்லாம் வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தவளின் மூக்கை பிடித்து ஆட்டினான் சித்தார்த்.

 

“இவ்வளவு நாளா ஏன் இதை என்கிட்ட நீங்க சொல்லலை. இப்போ சொல்ற மாதிரி விளக்கமா அப்பவே சொல்லியிருக்கலாம் தானே?” என்றாள் நேத்ரா மன தாங்கலுடன்.

 

“இப்போ கேட்கிற மாதிரி உரிமையோட கேட்டிருந்தால் அப்பவே சொல்லியிருப்பேன். நீ தான் விலகி விலகி போனீயே? என்கிட்ட இருந்து விலகி போறவளை இழுத்து வச்சு விளக்கம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்ல. எது எப்படி இருந்தாலும் உன்னை விட்டு கொடுக்கக் கூடாதுனு மட்டும் உறுதியா இருந்தேன். உன்கிட்ட இருந்து ஒரு காதல் பார்வையோ இல்லை உரிமை உணர்வோ வருவதற்காக காத்திட்டு இருந்தேன்” என்றான் தோள்களை குலுக்கி.

 

“இப்போ நான் உரிமையாவா கேட்டேன்?” என்றாள் வியப்புடன் விழிகளை உயர்த்தி

 

“ஆமாம் முதல் முறையா மனைவியா என்கிட்ட வந்து என் நெஞ்சுல பலமா குத்து விட்டியே, அதுக்கப்புறமும் சொல்லலைனா எப்படி?” என்று புருவம் உயர்த்தினான்.

 

“சாரி ஏதோ வேகத்துல அப்படி பண்ணிட்டேன். ரொம்ப வலிக்கதா?” என்று அவன் நெஞ்சில் தன் பிஞ்சு விரல்களால் தடவிக் கொடுத்தாள்.

 

அவள் கைவிரல்களின் மேல் தன் கைகளை வைத்து மேலும் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டவன், “நானும் உன் கிட்ட சில கேள்வி கேட்கலாமா?” என்றான்.

 

“ம் கேளுங்க” என்றாள்.

 

“நம்ம முதலிரவு அன்னைக்கு நீ உள்ளே வந்த போது வெட்கத்தோட வந்த நின்னே. அன்னைக்கே நான் உன்னை நெருங்கியிருந்தால் மறுக்காமல் ஏத்துட்டு இருப்பே தானே. ஆனால் அதுக்கப்புறமா நான் பலமுறை உன்னை நெருங்க நினைச்சாலும் ஏன் விலகி விலகி போனே?” என்றான்.

 

“முதல் நாள் எனக்கு உங்க மேல எந்த வித எதிர்பார்ப்பும் இல்ல. பல கனவுகளோட அறைக்குள் வந்த என்னை, உங்களுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாதவள்னு சொல்லீட்டிங்க. இதுல நீங்க ஒரு டாக்டர் மட்டுமில்ல, அவ்வளவு பெரிய மருத்துவமனையோட முதலாளி, நல்ல வசதி, நல்ல நிறம், அழகு. இத்தனையும் இருக்கிற உங்களுக்கு நான் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லனு எனக்கே தோண ஆரம்பிச்சுடுச்சு. நீங்களும் அப்படியே சொல்லவும் என்னை பிடிக்காதவர் கூட எதுக்கு கட்டாயத்துல வாழணும்னு நினைச்சு விலக நினைச்சேன்.

 

ஆனால் நீங்க நெருங்கிற போது, ஜஸ்ட் மனைவிங்கிற உரிமையில ஒரு பெண் தேவைபடுற சமயத்துல என்னை நீங்க பயன்படுத்திக்கிறதா தோணுச்சு. இதுல எலிசா என்ற பெண்ணையும் காதலிச்சு இருக்கறீங்கனு தெரிஞ்சதும், அப்போதைய உடல் தேவைக்கு என்னை நெருங்கறீங்கனு நினைச்சுக்கிட்டேன்” என்று நேத்ரா சொன்ன போது சித்தார்த்தின் முகமும் உடலும் இறுகியது.

 

“சாரி, உங்க மனநிலை என்னனு அப்போ எனக்கு தெரியாது இல்ல? நீங்களும் எனக்கு தெளிவுபடுத்தலை. ஒருவேளை என்னிடம் நெருக்கமா இருந்துட்டு, நாளைக்கே அந்த எலிசா வந்தால் என்னை விட்டுட்டு போயிடுவீங்களோனு எனக்கு கொஞ்சம் பயமா கூட இருந்துச்சு” என்றாள் மெல்லிய குரலில்.

 

“என் மேல இவ்வளவு அவநம்பிக்கையா? என்னை இவ்வளவு கீழ்தரமாவா நினைச்சுட்டு இருந்தே நயனி?” என்றான் சித்தார்த் வலிமிகுந்த குரலில்.

 

“இல்லை அது உங்க மேல இருந்த அவநம்பிக்கை இல்லை. என் மேல் எனக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை. என்னோட இந்த கருப்பு நிறமும், சோடாபுட்டி கண்ணாடியும், குறைந்த படிப்பும் உங்களுக்கு எப்பவுமே பொருந்தாதுனு நினைச்சேன். அதனால் இந்த வாழ்க்கை நிரந்தரம் இல்லனு எனக்குள்ள எப்பவும் ஒரு குரல் கேட்டுட்டே இருந்தது. அதுதான் என்னை உங்களிடம் நெருங்க விடாமல் பண்ணிடுச்சு” என்றாள் நயனி 

 

“நயனி நீ அழகா இல்லனு யாரு உனக்கு சொன்னது? கருப்பு அழகில்லையா? அழகுக்கு கிளியோபாட்ராவை குறிப்பிடாதவங்களே இருக்க மாட்டாங்க. அவங்க நிறம் கூட கருப்பு தானே நயனி. அழகு என்பது வெளிதோற்றத்துல இல்ல. அது அகத்துல இருக்கு. உனக்கு அகமும் புறமும் இரண்டுமே அழகுதான்.

 

அப்புறம் படிப்பு நம்மோட அறிவை வளர்த்துக்கிறதுக்கு தானே தவிர. அது ஒரு மனிதனோட ஏற்ற தாழ்வை முடிவு செய்ய முடியாது. ஜாதி மதம் பணக்காரன் ஏழை மாதிரி, படிச்சவன் படிக்காதவன்னு இதை வச்சு எல்லாம் ஒரு மனிதன் உயர்ந்தவன், தாழ்ந்தவன்னு எப்படி சொல்ல முடியும் சொல்லு?

 

ஒருத்தரோட நல்ல குணம் தான் அவங்களை உயர்ந்தவங்களா, தாழ்ந்தவங்களானு முடிவு செய்யுமே தவிர பணமோ, படிப்போ, நிறமோ கிடையாது. அதை நல்லா புரிஞ்சுக்கோ. உன் குணம் சொக்க தங்கம், அப்போ உன்னை விட எனக்கு பொருத்தமானவ யாரு இருக்க முடியும் நீயே சொல்லு?” என்றான் காதலாய்.

 

“அப்போ என் சோடாபுட்டி கண்ணாடி?” என்றாள்

 

அவள் கேட்ட விதத்தில் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்து விட்டான். மனதில் இருந்த குழப்பம் எல்லாம் தீர்ந்ததில் அவனால் மனம் விட்டு சிரிக்க முடிந்தது, அவளால் அவன் சிரிப்பை ரசிக்க முடிந்தது. 

 

“நயனி, உனக்கு கண்ணாடி போடறதுனால தாழ்வு மனப்பான்மையா இருந்துச்சுனா, அதுக்கு எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்பு நம்ம மருத்துவத்துல இருக்கு. கான்டேக்ட் லென்ஸ் போட்டுக்கலாம், ஆனால் அதை தினமும் முறையா பயன்படுத்தணும், இல்லைனா லேசர் சிகிச்சை பண்ணிக்கலாம். இந்த வயசுலே பண்ணிக்கிட்டா நல்லது. ஒரு பத்து வருஷத்துக்கு கண்ணாடி போடற தேவையிருக்காது. அப்புறம் மீண்டும் கண்ணாடி போட வேண்டி வரலாம். 

 

உனக்கு வேணும்னா சொல்லு நாளைக்கே நம்ம ஹாஸ்பிட்டல்ல லேசர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யறேன். ஆனால் எனக்கு இந்த கண்ணாடி போட்ட மான்விழியை தான் ரொம்ப பிடிக்கும்” என்றான் புன்னகையுடன்.

 

“அப்போ உங்களுக்கு பிடிச்ச மாதிரியே இருக்கறேன்” என்றாள் மெல்லிய குரலில்.

 

“எனக்கு பிடிச்ச மாதிரி எல்லாம் இருப்பியா நயனி?” என்றான் மர்ம புன்னகையுடன்.

 

“ம், இருப்பேன்” என்றாள் தலையை பலமாக ஆட்டிக் கொண்டே.

 

அங்கே மேஜையின் மேல் இருந்த வெண்கலத்தால் ஆன பெண்ணின் உருவச்சிலையை அவன் கண்களால் காட்டி  மனைவியின் காதில் வந்து ரகசியம் பேசினான் கணவன். முகம் செவ்வானமாக சிவந்து போக தன் இருகைகளால் முகத்தை மூடிக் கொண்டாள் நேத்ரநயனி.

 

“பதில் சொல்லு நயனி” என்று வம்பிழுத்தான்

 

“போங்க நீங்க ரொம்ப மோசம்” என்று சிணுங்கி கொண்டே விலகி ஓட எத்தனித்தவளின் இடையை பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.

 

நயனியின் இடையை தன் கைகளால் சுற்றி வளைத்திருந்தவன், அவளை தன்னை நோக்கி வேகமாக இழுத்தான். அதில் மொத்தமாக அவன் மேனியில் அவள் தேகம் உரசிக் கொள்ள, மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வில் அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள். 

 

எப்போதும் அவளை ஈர்க்கும் அவனின் உரமேறிய தசைக்கோளங்களின் நடுவே இருந்த மயிற்கால்கள், அவள் முகத்தை மயிலிறகாய் வருட, அங்கே தான் தன் உலகம் இருக்கிறது என்பது போல மேலும் அவனுள் புதைந்துக் கொள்ளவும், ஆண் மகனுக்குள்ளும் சிலிர்ப்பு தோன்றியது.

 

அவள்  கழுத்துவளைவில் முகத்தை புதைத்துக் கொண்டு, “நயனி” என்றான் காதலாய்.

 

கரடியாய் வெளியே பவிஷ்கா கதவை தட்டிக் கொண்டிருந்தாள்.

 

(தொடரும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!