Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Oorkolam Pogum Kaarkala Megam

Oorkolam Pogum Kaarkala Megam 4 1

அத்தியாயம் 4 

உண்மைக் காதல் இருந்தால் 

உந்தன் கால்களும் நடைபோடும் 

என்னைத் தேடி!!!



Advertisement

அன்று மதியம் சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வந்தான் அருள்மாறன். அனைவரும் வீட்டில் தான் இருந்தார்கள். அவன் வந்ததும் எப்போதும் போல உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்த ராஜேஸ்வரி மற்றவர்களை சாப்பிட அழைத்தாள்.

Advertisement

மற்றவர்களும் வந்தார்கள் தான். மதனும் கூட வந்து அமர்ந்தான். ஆனால் அனைவரும் வெகு அமைதியாக இருக்க அருளுக்கு புருவம் உயர்ந்தது.

Advertisement

“என்ன ஆச்சு எல்லாருக்கும்? எப்போதும் இப்படி இருக்காதே?”, என்று எண்ணினான். அவன் எப்போது வீட்டுக்கு வந்தாலும் எப்ப வந்த? மதியம் ரெஸ்ட் எடுத்துட்டு போ. இன்னைக்கு ஏதும் புது ஆர்டர் வந்துச்சா? இப்படி யாராவது ஏதாவது அவனிடம் கேட்பார்கள். ஆனால் இன்றோ யாரும் எதுவும் பேச வில்லை.

Advertisement

            “என்ன டா ஆச்சு? இது நம்ம வீடு தானா? எப்பவும் இப்படி இருக்காதே? இன்னைக்கு கல்யாணம் பேச தானே போனாங்க? அங்க ஏதும் ஆகி இருக்குமோ? அந்த பொண்ணு இவனை வேண்டாம்னு சொல்லிருச்சா?”, என்று எண்ணி மதனைப் பார்த்தான். அவன் முகமோ சோகமாக இருந்தது.

            நிச்சயம் அப்படி தான் எண்ணினான். “இந்த காலத்து பொண்ணுங்க இப்படி தான் இருக்காங்க. நல்லா பழகுற வரைக்கும் பழகிட்டு அப்புறம் வேண்டாம்னு சொல்றது”, என்று எண்ணிய அருள்மாறனுக்கு அவன் திட்டம் நடக்காமல் போனது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது.

            எப்போதும் அவனது தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா தங்கைகள் கூட அவனை எப்போது திருமணம் செய்து கொள்வாய் என்று நச்சரித்துக் கொண்டிருப்பார்கள். தங்கைகளின் கணவன்கள் கூட “சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க மச்சான். வீட்ல வாரிசு இல்லைன்னு பெரியவங்க கவலை படுறாங்க”, என்று சொல்லியிருக்கிறார்கள்.

            அவர்கள் வாயை அடைக்கவே மதனுக்கு திருமணம் செய்து வைத்து அவனது பிள்ளை தான் வாரிசு என்று சொல்லி அவர்கள் வாயை அடைக்க பிளான் செய்து தான் மதனுக்கு அந்த வயதுக்குரிய பொறுப்பு இன்னும் வரவில்லை என்று தெரிந்தும் அதை இதை சொல்லி இன்றே பெண் வீட்டில் பேசச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.

            ஆனால் அவனுக்கு திருமணம் செய்து வைக்க பிளான் செய்து அவர்கள் அங்கிருந்து வரும் போதே அவனிடம் என்ன பேசவேண்டும் எப்படி பேச வேண்டும் என்று முடிவு எடுத்து வந்தது அவனுக்கு தெரியாதே.

            “என்ன ஆச்சு எல்லாருக்கும்? எப்பவும் இப்படி இருக்க மாட்டீங்க? போன காரியம் என்ன ஆச்சு தாத்தா?”, என்று கேட்டான் அருள்மாறன்.

            ஏதோ கேக்க கூடாததை கேட்டது போல “எனக்கு பசிக்கலை மா. நான் அப்பறம் சாப்பிடுறேன்”, என்று சொன்ன மதன் வெறும் தட்டை தள்ளி வைத்து விட்டு எழுந்து அறைக்குள் சென்று விட்டான்.

            தம்பி போன திசையை பார்த்தவன் கேள்வியாக புருவத்தை தூக்கி மற்றவர்களை பார்த்தான். அறைக்குள் சென்ற மதன் ஒரு சேரை எடுத்து ஜன்னல் அருகே போட்டு அமர்ந்து அவர்கள் பேசுவதை சிறு சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

            “இவனுக்கு என்ன ஆச்சு? எதுக்கு அப்செட்டா போறான்? யாராவது சொல்லுங்க. பாட்டி என்ன தான் ஆச்சு? நீங்களாவது சொல்லுங்க”, என்றான்.

            “அதெல்லாம் அப்புறம் பேசலாம். நீ சாப்பிடுப்பா”

            “அங்க ஒருத்தன் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டு போறான். நீங்க என்னை சாப்பிடச் சொல்றீங்க? முதல்ல சொல்லுங்க. போன இடத்துல என்ன ஆச்சு? கல்யாணம் இப்ப வைக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்களா? இல்லை அந்த பொண்ணு இவனை வேண்டாம்னு சொல்லுச்சா?”

            “அதெல்லாம் அவனை வேண்டாம்னு சொல்லலை? அந்த பொண்ணும் அவனை உண்மையா தான் விரும்புது”

            “அப்புறம் என்ன? பேசி முடிச்சிற வேண்டியது தானே? அங்க போய் வரதட்சனை அது இதுன்னு பேசி சொதப்பிட்டீங்களா?”

            “இங்கயே மலை மாதிரி சொத்து இருக்கு. நாங்க எதுக்கு டா அவங்க கிட்ட கேக்க போறோம்?”

            “அப்ப என்ன தான் ஆச்சு. சொன்ன தானே தெரியும். அப்பா நீங்க சொல்லுங்க. என்ன நடந்தது?”, என்று கேட்டான்.

            “அந்த பொண்ணு லவ் பண்ணுறதை சொன்னதும் அவங்களுக்கு அதிர்ச்சி தான் டா. எங்க முன்னாடியே அந்த பொண்ணை அடிச்சாங்க”, என்று ஆரம்பித்தார் கிருஷ்ணன்.

“நல்ல குடும்பம் தான். அப்புறம் என்ன ஆச்சு?”

“அப்புறம் வேற வழி இல்லாம ஒத்துகிட்டாங்க. ஆனா இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க”

            “ஏன்?”

            “அவங்களையும் குறை சொல்ல முடியாது அருளு. அவங்களுக்கும் ஒரு மூத்த பொண்ணு இருக்கு. அந்த பொண்ணு கல்யாணம் முடிஞ்சா தான் ரெண்டாவது பொண்ணுக்கு பண்ணி வைப்போம்னு சொல்லிட்டாங்க”

            “சரி அவங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்கட்டும். ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா முடிச்சிறலாம். மாப்பிள்ளை கிடைக்க ஒரு ஆறு மாசமோ ஒரு வருசமோ ஆக போகுது. நல்ல நேரம் இருந்தா நாளைக்கே கூட அமைஞ்சிரும். அப்புறம் இவனுக்கு கல்யாணம் ஆகிரும் தானே? அதுக்கு எதுக்கு கப்பல் கவுந்த மாதிரி மூஞ்சியை வச்சிருக்கான்? தலைவர் இன்னைக்கே போய் பொண்ணை கையோட கூட்டிட்டு வர பிளான் போட்டாரா?”

            “பிரச்சனை அது இல்லை டா. இந்த உலகத்துல எங்களுக்கு நீ தான் வித்தியாசமா இருக்கியோன்னு சந்தேகம் ரொம்ப நாளா இருந்துச்சு. ஆனா உன்னை மாதிரியும் ஆட்கள் இருக்காங்க அருளு”

            “என்னப்பா சொல்றீங்க?”

            “என்ன காரணமோ தெரியலை. அந்த மூத்த பொண்ணு கல்யாணமே வேண்டாம்னு சொல்லுதாம். உன்னை மாதிரியே”

            “வாட்?”

“ஆமா எனக்கு கல்யாணமே வேண்டாம். காலம் முழுக்க இப்படியே தான் இருப்பேன்னு சொல்லுதாம்”

“இண்டரெஸ்ட்டிங். என்ன காரணம்ன்னு கேட்டீங்களா?”

            “நீ என்ன காரணம்னு எங்க கிட்ட சொல்லுறியா? இல்லை தானே? அதே மாதிரி அந்த பொண்ணும் சொல்லலையாம்? மதன் லவ் பண்ணுற பொண்ணு இப்ப கூப்பிட்டா கூட நம்ம வீட்டுக்கு வந்துரும். ஆனா அவங்க குடும்பம் ஒத்துக்காது. அப்படி அவங்க குடும்பத்துல இருந்து ஒரு பிள்ளையை பிரிச்சு கூட்டிட்டு வந்தா நம்ம கவுரவம் என்ன ஆகுறது? இல்லைன்னா அவளை வரச் சொல்லவா? நாமளே இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிறலாம்?”, என்று கேட்டு அவனை ஆழம் பார்த்தார் கிருஷ்ணன்.

            “சேச்சே அது எப்படி அந்த பொண்ணை மட்டும் கூட்டிட்டு வர முடியும்? அவங்களா குடும்பத்தோட வந்து கல்யாணம் பண்ணி வச்சா தானே நமக்கும் மதனுக்கும் பெருமை? இவன் லவ் பண்ணி வெளிய சுத்துறது யாருக்கும் தெரியக் கூடாதுன்னு தானே நான் போய் பேசவே சொன்னேன்?”

            “நானும் மதன் கிட்ட சொல்லிட்டேன் டா. இனி அந்த பொண்ணு கிட்ட பேசாத பழகாதன்னு. அதான் அப்செட்ல போறான். உன் அம்மா அவனை அப்புறமா கன்வின்ஸ் பண்ணி சாப்பிட வச்சிருவா. நீ சாப்பிடு பா. கொஞ்ச நாள்ல அவன் அந்த பொண்ணை மறந்துருவான். ஒரு வாரம் அவனுக்கு டைம் கொடு. அப்புறம் அவனை ஆபீஸ் வரச் சொல்றேன்”, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!