Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இருளை வென்ற இமைகள்

இருளை வென்ற இமைகள் 5 2

பெரியார் நகர் கடைவீதியில் இருந்த ஒரு பூக்கடை மற்றும் பழக்கடைக்கு முன்னால் பைக்கை நிறுத்தினான் சுந்தர். கையில் இருந்த சீட்டைப் பிரித்துப் பார்த்தான்: ‘மல்லிகைப் பூ இரண்டு முழம், ஆப்பிள், வாழைப்பழம், பாதாம் பருப்பு, குங்குமப்பூ, பால்…’ என்று படிக்கலானான்.

கடையிலிருந்த வயதான கடைக்காரர் சுந்தரை ஏற இறங்கப் பார்த்தார். “என்ன தம்பி வேணும்? சீட்டைப் பார்த்தா ஏதோ விசேஷம் போல இருக்கே?” என்றார்.

சுந்தர் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு, “ஆமா அண்ணே! என் உயிர் நண்பனுக்கு இன்னைக்குத்தான் கல்யாணம். ஃபர்ஸ்ட் நைட்டுக்கு வேண்டிய ஐட்டம் எல்லாம் தரமா, ஃபிரெஷ்ஷா எடுத்துக் கொடுங்க!” என்றான்.

பக்கத்தில் நின்றிருந்த இரண்டு பெண்கள் சுந்தரைத் திரும்பிப் பார்த்துச் சிரிக்க, சுந்தர் அசடு வழிந்தான்.



Advertisement

“தம்பி, ஃபர்ஸ்ட் நைட்டுக்குப் பழம் பூ வாங்க வந்தவன், ஏதோ மைக்செட் கட்டி அனவுன்ஸ் பண்ற மாதிரி கத்துற? மெதுவாச் சொல்லுப்பா!” என்று கடைக்காரர் நக்கலாகச் சொல்ல, “சரிண்ணே, சீக்கிரம் கட்டுங்கண்ணே, அங்க மாப்பிள்ளை வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கான்!” என்றான்.

பழங்களை எடை போட்டுக்கொண்டிருந்த கடைக்காரர், “தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?” என்று நக்கலாக கேட்டார்.

“எனக்கு இன்னும் ஆகலண்ணே… அடுத்த முகூர்த்தத்துல பொண்ணு பார்க்கப் போறாங்க,” என்றான் சுந்தர் வெட்கத்தோடு.

Advertisement

“அட, அப்போ உனக்கு அனுபவம் இல்ல! சும்மா ஆப்பிள் வாழைப்பழம் மட்டும் வாங்கிட்டுப் போனாப் பத்தாது தம்பி. மாப்பிள்ளைக்குத் தெம்பு வேணும்ல? இந்தா, இந்தப் பாதாம் அல்வாவையும், கல்கண்டையும் சேர்த்து வச்சுக்கோ. அப்புறம், பூவை வாங்கிட்டுப் போய் அப்படியே கையில கொடுக்கக் கூடாது… பொண்ணு தலையில வச்சு விடச் சொல்லு!” என்று கடைக்காரர் கிளாஸ் எடுக்க ஆரம்பிக்க, சுந்தர் காதைப் பொத்திக்கொண்டான்.

Advertisement

“ஆத்தாடி! அண்ணே, நீங்க சாமான் மட்டும் கொடுங்கண்ணே, அட்வைஸ் எல்லாம் நான் பாத்துக்கிறேன்!” என்று சொல்லி, பை நிறையப் பழங்களையும், மல்லிகைப் பூவையும் வாங்கிக்கொண்டு, பைக்கின் ஹேண்டில்பாரில் மாட்டிக்கொண்டு போலீஸ் வீட்டை நோக்கிப் பறந்தான் சுந்தர்!

நிலவு உச்சிக்கு வரும் நேரம்… கனகசுந்தரியின் வீட்டுக் கூடத்திற்குள், ஒரு ஆழமான அமைதி நிலவியது.

மெத்தை இருக்கையில் அமர்ந்திருந்த தங்கமயிலுவின் அருகில், சற்று இடைவெளி விட்டு அமர்ந்திருந்தான் வைரக்கண்ணு. சில மணி நேரங்கள் இருவருக்குள்ளும் எந்தப் பேச்சும் இல்லை. சுவரில் இருந்த கடிகாரத்தின் ‘டிக்… டிக்…’ சத்தம் மட்டுமே அந்த அறையின் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டிருந்தது.

Advertisement

தங்கமயிலு தன் விரல்களால் புடவையின் ஓரத்தை மடித்தபடியே, தலை குனிந்து அமர்ந்திருந்தாள். அவளது மனதிற்குள் ஆயிரம் கேள்விகளும், பயமும் ஓடிக்கொண்டிருந்தன.

அவளது தவிப்பை உணர்ந்த வைரக்கண்ணு, மெதுவாகத் தொண்டையைச் செருமிவிட்டுப் பேச ஆரம்பித்தான். அவனது குரலில் இப்போது கோபமோ, கடுகடுப்போ இல்லை; ஒரு தாயின் மென்மையும், காதலனின் பரிவும் மட்டுமே இருந்தது.

“இங்க பாருங்க மயிலு…”

அவனது குரலைக் கேட்டதும் தங்கமயிலு லேசாக நிமிர்ந்தாள்.

“பழசைப் பத்திப் பேசினாலே நீங்க ஒரு மாதிரி ஆகிடறீங்க. உங்க உடம்பும் மனசும் ரொம்பப் பலவீனமா இருக்கு. இனிமேல் அந்தப் பழசை எல்லாம் மறந்துடுங்க… நானும் அதைப் பத்தி ஒரு வார்த்தை கூட உங்ககிட்ட கேட்க மாட்டேன்,” என்றான் உறுதியாக.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் தங்கமயிலுவின் கண்களில் நீர் முட்டியது. தன் கடந்த காலத்தைத் தோண்டித் துருவாமல், தன்னை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன் கணவனின் பெருந்தன்மையை நினைத்து அவள் நெகிழ்ந்து போனாள்.

மீண்டும் அவன் ஆரம்பித்தான் “ஆனா ஒண்ணுங்க…”

வைரக்கண்ணுவின் குரலில் இப்போது ஒரு மெல்லிய அழுத்தம் கூடியது. அவன் சற்று நகர்ந்து அவளது அருகில் அமர்ந்து, அவளது வலது கையைத் தன் உள்ளங்கையால் மென்மையாகப் பற்றினான்.

“உங்ககிட்ட ஒரு விஷயத்தை மட்டும் இப்போவே தெளிவாச் சொல்லிக்கிறேன். இனிமேல் உங்களுக்கு எது வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க… உங்களுக்கு எல்லாமே நான் தான்! உங்களுக்குக் கண்ணா, துணையா, அம்மாவா, அப்பாவா… நல்ல தோழனா எல்லாமுமா நான் இருப்பேன். ஆனா…”

வைரக்கண்ணு ஒரு நொடி நிறுத்தி, தன் நெஞ்சுக்குள் இருந்த வலியை விழுங்கிக்கொண்டு சொன்னான்.

“என்னைக்காவது ஒரு நாள், ‘பெத்தவங்களைப் பார்க்கணும், அவங்ககிட்ட பேசணும், அவங்க கூட இருக்கணும்’னு மட்டும் என்கிட்ட கேட்காதீங்க!”

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் தங்கமயிலு அதிர்ச்சியோடு தன் கணவனின் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். அவனது குரலில் இருந்த அந்த வைராக்கியத்தின் பின்னணியில், எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகத்தின் வலி ஒளிந்திருக்கிறது என்பதை அவள் புரிந்துகொண்டாள்!

“இல்லங்க… சத்தியமா நான் அப்படி ஒரு நாளும் கேட்க மாட்டேன்! இனிமே எனக்கு நீங்கதான் உலகம். உங்களைத் தவிர எனக்கு வேற யாருமே வேண்டாங்க!” என்று தங்கமயிலு கண்ணீரோடு தன் கணவனின் தோளில் சாய்ந்தபோது, வாசலில் மல்லிகைப் பூ வாசத்தோடு சுந்தர் வந்து நின்றான்!

வாசலில் மல்லிகைப் பூ வாசத்தோடு வந்து நின்ற சுந்தர், கையில் இரண்டு பெரிய பைகளைத் தூக்கிக்கொண்டு தாழ்வாரத்தில் இருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தான். அவனது நெற்றியில் வியர்வை துளிர்த்திருந்தது.

“அம்மா… இங்க வந்து பாருங்கம்மா, நீங்க எழுதிக் கொடுத்த சீட்டுல இருந்த சாமான்களோட சேர்த்து, அந்தப் பழக்கடைக்காரர் என் உயிரையே வாங்கிட்டாரு!” என்று சுந்தர் மூச்சு வாங்கப் பேசினான்.

சமையலறையிலிருந்து வெளியே வந்த அன்னலட்சுமியும், அருகில் நின்றிருந்த கனகசுந்தரியும் சுந்தரின் பரிதாபமான முகத்தைப் பார்த்துச் சிரித்தார்கள்.

“ஏம்பா தம்பி, கடைக்காரர் என்ன சொன்னாரு? எதுக்கு இப்படிப் பயந்து ஓடி வந்த மாதிரி உட்கார்ந்திருக்க?” என்று அன்னலட்சுமி சிரித்தபடியே கேட்டார்.

சுந்தர் தன் தலையில் அடித்துக்கொண்டு, “அதை ஏம்மா கேட்குறீங்க? ‘ஃபர்ஸ்ட் நைட்டுக்கு சாமான் வேணும்’னு நான் சத்தமாச் சொல்லிட்டேனா… பக்கத்துல நின்ன பொம்பளைங்க எல்லாம் என்னை ஒரு மாதிரிப் பார்த்துச் சிரிக்குறாங்கம்மா! அதுமட்டுமா, அந்தக் கடைக்காரர் எனக்குக் கல்யாணம் ஆகலன்னு தெரிஞ்ச உடனே, ‘உனக்கு அனுபவம் பத்தாது தம்பி, இதையும் சேர்த்துக் கொண்டு போ’ன்னு பாதாம் அல்வாவையும் கல்கண்டையும் கட்டித் தந்து, பூவை எப்படி வச்சு விடணும்னு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாரு!” என்று சுந்தர் சொல்லி முடிப்பதற்குள், கனகசுந்தரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“அடப்பாவி! அப்போ ஊர் முழுக்கத் தண்டோரா போட்டுட்டு வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க!” என்று கனகசுந்தரி நக்கலாகக் கிண்டல் செய்ய, சுந்தர் அவளைத் திரும்பிப் பார்த்து அசடு வழிந்தான்.

“சரி விடுடி கனகா… தம்பி தன் நண்பன் மேல இருக்குற பாசத்துலதானே போயி ஆசையா வாங்கிட்டு வந்திருக்கு. நீ போய் இந்தப் பழங்களையும், பாதாம் அல்வாவையும் ஒரு தட்டுல அழகா அடுக்கி, பாலைக் காய்ச்சி எடுத்துட்டு வா. நான் போய் மயிலுவைத் தயார்படுத்தி, உள்ள அறைக்குள்ள அழைச்சிட்டுப் போறேன்,” என்று அன்னலட்சுமி பைகளை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார்.

கூடத்தில் மெத்தை இருக்கையில் அமர்ந்திருந்த தங்கமயிலுவின் அருகே வந்த அன்னலட்சுமி, அவளது தோள்களை அன்போடு அணைத்துக்கொண்டார்.

“வாம்மா தங்கம்… எழுந்திரு. இன்னைக்கு உனக்குக் கல்யாணமான முதல் நாள். நடந்த கசப்பான விஷயங்களை எல்லாம் மனசுலயே வச்சுக்கிட்டு அழுதுட்டு இருக்கக் கூடாது. வா, உள்ள போகலாம்,” என்று அவளை மெதுவாக அழைத்துச் சென்றார்.

வைரக்கண்ணு தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று, அன்னலட்சுமியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டான். “ரொம்ப நன்றிம்மா… எங்களுக்காக இவ்வளவு சிரமப்படுறீங்களே,” என்றான் கலங்கிய குரலில்.

“அட, என்னப்பா தம்பி இது? நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு! மயிலு என் மகள் கனகா மாதிரி. நீ எனக்கு மருமகன் மாதிரி. மனசைப் போட்டுக் குழப்பிக்காம சந்தோஷமா இருப்பா,” என்று ஆறுதல் சொல்லிவிட்டு, மயிலுவைப் படுக்கையறைக்குள் அழைத்துச் சென்றார் அன்னலட்சுமி.

அறைக்குள் சென்றதும், அன்னலட்சுமியும் கனகசுந்தரியும் சேர்ந்து தங்கமயிலுவின் கலைந்திருந்த அரக்கு நிறப் பட்டுப்புடவையை நேர்த்தியாகச் சரிசெய்துவிட்டார்கள். காலையில் சூடியிருந்த வாடிய மல்லிகைப் பூவை எடுத்துவிட்டு, சுந்தர் வாங்கி வந்திருந்த புத்தம் புதிய மல்லிகைப் பூவை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை அவளது கூந்தலில் அழகாகச் சூட்டிவிட்டாள் கனகசுந்தரி.

மயிலுவின் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீர்த் தடங்களை ஈரத் துணியால் துடைத்துவிட்டு, அவளது கைகளைப் பற்றிக்கொண்டாள்.

பிறகு “மயிலு… வைரக்கண்ணு அண்ணா ரொம்பத் தங்கமான மனுஷண்டி. உனக்குக் கண்ணு தெரியாதுங்கிற விஷயம் தெரிஞ்ச பிறகும், ஊர் உலகத்தை எதிர்த்து உன்னைக் கைபிடிச்சு இருக்காருன்னா, அவர் உன் மேல எவ்வளவு மரியாதையும், பாசத்தையும் வச்சிருக்காருன்னு யோசிச்சுப் பாரு! நீ எதுக்கும் பயப்படாதடி. இனிமே உனக்கு எல்லா நல்லதும்தான் நடக்கும்,” என்று தோழியின் கன்னத்தைத் தடவித் தைரியம் சொன்னாள்.

“ஆமாண்டி கனகா… அவரைப் பத்தி நினைக்கும்போது எனக்குள்ளயே ஒரு புதுத் தைரியம் வருது. ஆனா, என் அப்பா அம்மாவை நினைச்சாதான் மனசுக்குள்ள ஏதோ ஒரு பயம் அடிச்சுக்கிட்டே இருக்குடி. அந்த மகேந்திரன் எங்க குடும்பத்தைச் சும்மா விட மாட்டான் கனகா,” என்று மயிலு மெல்லிய குரலில் விம்மினாள்.

“அதைப் பத்தி நீ இப்போ கவலைப்படாதடி. உங்க சித்தப்பா கருப்பசாமி அங்கிள் போலீஸ் இன்ஸ்பெக்டரா இருக்காரு, நானும் போலீஸ்லதான் இருக்கேன். அவன் ஏதாவது வாலாட்டுனா, அவனைச் சட்டப்படி உள்ள தள்ளிடுவோம். இப்போ நீ எதையும் யோசிக்காம நிம்மதியா இரு,” என்றவள் அவளைச் சமாதானப்படுத்தி, கட்டிலின் ஓரத்தில் அமர வைத்தாள்.

அன்னலட்சுமி, பழத் தட்டையும் வெள்ளித் தம்ளரில் காய்ச்சிய பாலையும் எடுத்து வந்து மேசையில் வைத்தார். “சரிம்மா, தம்பி உள்ள வருவாரு, நாங்க வெளியே போறோம்,” என்று சொல்லிவிட்டு, இருவரும் அறையை விட்டு வெளியே வந்து கதவை மெதுவாகச் சாத்தினார்கள்.

வெளியே தாழ்வாரத்தில் நின்றிருந்த வைரக்கண்ணுவின் தோளைத் தட்டினான் சுந்தர்.

“டேய் மாப்பிள்ளை… உள்ள போடா. தங்கச்சி உனக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்க. நடந்ததை எல்லாம் நினைச்சு உம்முன்னு முகத்தை வச்சுக்காத. அவங்களுக்குப் பார்வை இல்லன்னாலும், உன் குரல்ல இருக்குற அன்பையும் தைரியத்தையும் வச்சே அவங்க உன்னைப் புரிஞ்சுப்பாங்க. போடா,” என்று நண்பனை உள்ளே அனுப்பி வைத்தான் .

கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த வைரக்கண்ணு, கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டுத் திரும்பினான்.

அந்தச் சிறிய அறை முழுவதும் மல்லிகைப் பூவின் நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. அறையின் நடுவே இருந்த மரக் கட்டிலின் ஓரத்தில், தலை குனிந்தபடி, தன் விரல்களால் புடவையின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் மனையாள்.

கதவு சாத்தப்படும் சத்தத்தைக் கேட்டதும், மயிலுவின் உடல் லேசாக நடுங்கியது. தன் கணவன் உள்ளே வந்துவிட்டதை உணர்ந்தவள், எந்தப் பக்கம் திரும்புவது என்று தெரியாமல் தவித்தாள்.

வைரக்கண்ணு மெதுவாக நடந்து வந்து, கட்டிலின் மறுஓரத்தில் அமர்ந்தான். சில நிமிடங்கள் இருவருக்குள்ளும் ஆழமான அமைதி நிலவியது.

பிறகு, வைரக்கண்ணு மெதுவாக எழுந்து, மேசையில் இருந்த பழத் தட்டையும், பால் தம்ளரையும் கையில் எடுத்தான். மயிலுவின் அருகே அமர்ந்து, மிக மென்மையான குரலில் அழைத்தான்.

“மயிலு…”

அவனது குரலைக் கேட்டதும் அவள் லேசாக நிமிர்ந்தாள்.

“காலையில இருந்து சரியாச் சாப்பிடாததாலதான் உங்களுக்கு அடிக்கடி மயக்கம் வந்துச்சு. முதல்ல இந்தப் பாலைக் குடிங்க…” என்று சொல்லி, அவளது வலது கையைத் தன் இடது கையால் மென்மையாகப் பிடித்து, அந்த வெள்ளித் தம்ளரை அவளது கையில் கொடுத்தான்.

தன் கணவனின் கைபட்டதும், மயிலுவின் கண்களில் மீண்டும் கண்ணீர் துளிர்விட்டது. தயங்கியபடியே அந்தப் பாலை ஒரு மிடறு குடித்துவிட்டு, தம்ளரை அவனிடம் நீட்டினாள். வைரக்கண்ணு அதை வாங்கித் தானும் குடித்துவிட்டு, மேசையில் வைத்தான்.

அதன் பிறகு, மேசையில் மீதமிருந்த ஒரு முழம் மல்லிகைப் பூவை எடுத்தான். “கொஞ்சம் திரும்புங்க…” என்று மெல்லிய குரலில் சொல்லி, அவளது கூந்தலில் அந்த மல்லிகைப் பூவைத் தன் கைகளால் அழகாகச் சூட்டிவிட்டான்.

அப்போது அவனது விரல்கள் மயிலுவின் கழுத்தில் லேசாக உரசியதில், அவள் உடல் சிலிர்த்துப் போனாள்.

வைரக்கண்ணு அவளது இரு கைகளையும் தன் உள்ளங்கைகளில் தாங்கிப் பிடித்துக்கொண்டான். அவனது குரலில் இப்போது ஒரு ஆழமான கருணை கொண்ட காதலும், அசைக்க முடியாத நம்பிக்கையும் ஒலித்தது.

“இங்க பாருங்க மயிலு… உங்க தோழி பழைய போட்டோவை எல்லாம் என்கிட்ட காட்டுனாங்க. நீங்க எவ்வளவு பெரிய லட்சியத்தோட, எவ்வளவு தைரியமா வளர்ந்த பொண்ணுன்னு எனக்கு இப்போதான் புரிஞ்சுது. ஐ.பி.எஸ் ஆகணும்னு கனவு கண்ட பொண்ணு நீங்க… உங்களைப் போய் இப்படி இருட்டுக்குள்ள முடங்கிப் போய் அழுதுக்கிட்டு இருக்க நான் விட மாட்டேன்!”

மயிலு அதிர்ச்சியோடும், ஆச்சரியத்தோடும் கணவனின் குரல் கேட்ட திசையில் தன் முகத்தை உயர்த்தினாள்.

“என்னங்க சொல்றீங்க?” என்று அவள் தழுதழுத்த குரலில் கேட்டாள்.

“ஆமா மயிலு… உங்களுக்குப் பார்வை போனது தற்காலிகமானதுதான்னு எனக்குள்ள ஒரு நம்பிக்கை இருக்கு. மதுரையிலயோ, சென்னையிலயோ இருக்குற பெரிய கண் ஆஸ்பத்திரிக்கு நான் உங்களைக் கூட்டிட்டுப் போறேன். நான் ராத்திரி பகலா உழைச்சு, எவ்வளவு செலவானாலும் உங்களுக்கு வைத்தியம் பார்த்து, உங்க கண்ணுல மறுபடியும் வெளிச்சத்தைக் கொண்டு வருவேன்! நீங்க மறுபடியும் பழைய தங்கமயிலுவா, எல்லாரும் வியந்து பார்க்குற மாதிரி கம்பீரமா நடக்கணும். அதுதான் இனிமே என் வாழ்க்கையோட ஒரே லட்சியம்!”

வைரக்கண்ணுவின் அந்த வார்த்தைகளைக் கேட்டதும், தங்கமயிலுவின் நெஞ்சம் உடைந்து போனது! ‘கடவுளே… என் பார்வையைப் பறிச்சவங்களுக்கு மத்தியில, எனக்குப் பார்வையைத் திரும்பக் கொடுக்கணும்னு துடிக்கிற ஒரு தெய்வத்தை எனக்குக் கணவனா கொடுத்திருக்கியே!’ என்று நினைத்தவள், தன் கணவனின் கைகளைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு விம்மினாள்.

“அழாதீங்க மயிலு… இனிமே உங்க கண்ணுல இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரக் கூடாது. நிம்மதியாப் படுத்துத் தூங்குங்க. நாளைக்குக் காலையில நாம புது வாழ்க்கையைத் தொடங்கப் போறோம்,” என்று சொன்ன வைரக்கண்ணு, அவளை மெதுவாகப் படுக்கையில் சாய்த்துப் படுக்க வைத்து, போர்வையைப் போர்த்திவிட்டான்.

பிறகு, தான் கட்டிலின் கீழே தரையில் ஒரு பாயை விரித்துப் படுத்துக்கொண்டான்.

அந்த இரவின் அமைதியில், அறைக்குள் இருந்த இருளின் நடுவே, வைரக்கண்ணுவின் அந்தத் தூய அன்பும், கருணை கொண்ட காதலும் தங்கமயிலுவின் வாழ்க்கையில் ஒரு புதிய நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்றி வைத்திருந்தது!

அதே இரவு… அலங்காநல்லூர் கிராமத்தின் இருண்ட தெருவில், பெரியசாமியின் வீட்டிற்கு எதிரே இருந்த ஆலமரத்தடியில் நின்றுகொண்டு, சிகரெட்டைப் புகைத்தபடி வஞ்சகத்தோடு சிரித்துக்கொண்டிருந்தான் பார்வதியின் அண்ணன் மகன் மகேந்திரன்!

அவனது கண்களில் கொடூரமான பகை எரிந்து கொண்டிருந்தது.

“பெரியசாமி… உன் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டா, எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சியா? உன் பொண்ணு எங்க போனாலும் என் கையில இருந்து தப்பிக்க முடியாது. அவளைத் தேடிக் கண்டுபிடிச்சு, உன் குடும்பத்தோட மானத்தை நடுத்தெருவுல வாங்கல… என் பேரு மகேந்திரன் இல்ல!” என்று பல்லைக் கடித்துக்கொண்டு சபதம் போட்டான்.

மதுரையில் புது வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் வைரக்கண்ணுவையும் தங்கமயிலுவையும் மகேந்திரன் கண்டுபிடிப்பானா? மயிலுவின் பார்வை பறிபோன அந்த இரவின் கொடூர ரகசியம் என்ன? – அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…

இமைகள் திறக்கும் தருணத்திற்காக… ♥️♥️♥️♥️♥️

தொடரும் அத்தியாயம் -6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!