இரவு தன் கரிய போர்வையைக் கிராமத்தின் மீது மெல்லப் போர்த்தத் தொடங்கியிருந்தது சந்திரன். பகல் முழுவதும் திருமணக் கொண்டாட்டத்தாலும், உறவினர்களின் ஆரவாரத்தாலும் களைகட்டியிருந்த பழனிச்சாமியின் வீடு, இப்போது ஏதோ ஒரு இழவு வீட்டின் மயான அமைதியில் மூழ்கியிருந்தது.
வாசலில் கட்டப்பட்டிருந்த வாழைமரங்களும், மாவிலைத் தோரணங்களும் இரவுக் காற்றில் சலசலவென அசைந்தபோது, அது ஏதோ அந்த வீட்டின் துயரத்தைப் பார்த்துப் பெருமூச்சு விடுவது போல இருந்தது. பந்தல் வெளிச்சம் அணைக்கப்பட்டு, வீட்டின் கூடத்தில் எரிந்த ஒரே ஒரு மஞ்சள் நிற மின்விளக்கின் வெளிச்சத்தில், அந்த ஏழு ஜீவன்களும் நடைப்பிணங்களாக உட்கார்ந்திருந்தார்கள்.
Advertisement
சமையலறையிலிருந்து வந்த கமகமவென்ற கல்யாண விருந்துப் பலகாரங்களின் வாசனை, இப்போது அந்த வீட்டிலிருந்தவர்களுக்குக் குமட்டலைத் தந்தது. ஒருவரும் ஒரு வாய் தண்ணீர் கூடப் பருகவில்லை.
வீட்டின் மூலையில் இருந்த தூணில் சாய்ந்து, முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள் கடைசித் தங்கச்சி அல்லி. அவளது தோள்களை அணைத்தபடி, கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூடத் திராணியற்று அமர்ந்திருந்தார்கள் பூங்கொடியும், செவ்வந்தியும்
“ஏம்மா… அண்ணன் இனிமே நம்ம வீட்டுக்கே வராதாம்மா? காலையில கூட ‘அல்லி, பட்டுப் பாவாடையில என் தங்கச்சி மகாலட்சுமி மாதிரி இருக்கா’ன்னு என் தலையைத் தடவிச் சிரிச்சானேம்மா… இப்போ எங்களை அனாதையா விட்டுட்டுப் போயிட்டானேம்மா!” என்று அல்லி கதறி அழுத சத்தம், கூடத்தில் நின்றிருந்த முத்துவுக்கும், மாணிக்கத்திற்கும் நெஞ்சை அறுத்தது.
Advertisement
பிறகு உள்ளே வந்தவன் “அழாதடா தங்கம்… அண்ணன் கோபத்துல போயிருக்கான், கண்டிப்பா வருவான்டா. நாளைக்குக் காலையில நானும் மாணிக்கமும் போய் அண்ணனைத் தேடிக் கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வர்றோம்டா,” என்று முத்து தன் தங்கையின் தலையைத் தடவிக் கொடுத்தாலும், அவனது குரலே உடைந்து போயிருந்தது.
Advertisement
கூடத்தின் நடுவே தரையில் அமர்ந்து, மாரில் அடித்துக்கொண்டு அழுது ஓய்ந்திருந்த மீனாட்சி, சுவரோரமாகத் தலை குனிந்து குற்றவாளி போல நின்றிருந்த தன் கணவர் பழனிச்சாமியை வெறித்துப் பார்த்தார்.
“எல்லாம் உங்களாலதான்! ஆலமரம் மாதிரி இந்தக் குடும்பத்தைத் தாங்கிப் பிடிச்சுக்கிட்டு இருந்த என் புள்ளையை, வெட்டிச் சாய்ச்சுட்டீங்களே! வீட்டுல இருக்குற கடன் அடைஞ்சுடுச்சு, பொண்ணுங்க கல்யாணத்துக்குப் பணம் கிடைச்சுடும்னு சந்தோஷப்படுறீங்களா? பெத்த புள்ளையே இல்லாத இந்த வீட்டுல, இனிமே அந்தப் பணத்தை வச்சு என்னங்க பண்ணப் போறீங்க? பூஜை அறையில விளக்கேத்தக் கூட மனசு வரலையே!” சாமியே இல்ல எதுக்கு பூசை என்று மீனாட்சி கதறி அழுதார்.
பழனிச்சாமிக்குப் பதில் பேச நா எழவில்லை. நெஞ்சை யாரோ இரும்புக் கம்பியால் அழுத்துவது போல வலித்தது. “என் புள்ளை என் முகத்துல முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டான் மீனாட்சி… அவன் திரும்பி வர்ற வரைக்கும், நானும் இந்த வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன்!” என்று சொல்லிவிட்டு, தள்ளாடியபடியே வெளியே இருந்த திண்ணையில் போய் உட்கார்ந்துகொண்டார் பழனிச்சாமி.
Advertisement
இனிமேல் இந்த வீட்ல நீ இருந்தாலும் இல்லனாலும் ஒண்ணுத்துக்கும் பிரயோஜனமில்லை என்றவர் முகத்தை திருப்பி கொண்டார்.
தன் மூத்த மகன் இல்லாத அந்த வீடு, இரவு முழுவதும் கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தது.
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
அதே இரவு… மதுரையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த அலங்காநல்லூர் கிராமத்தின் பெரிய பண்ணை வீட்டிலும், நிம்மதி என்பது துளியும் இல்லாமல் கரைந்து போயிருந்தது.
எல்லாரும் சூழ்ந்து இருக்கும் அந்த வீட்டில், “பளார்” என்று தன் மனைவி பார்வதியின் கன்னத்தில் ஓங்கி அறை வைத்தார் பெரியசாமி!
அந்த அறையின் சத்தம், அந்தப் வீட்டின் தூண்களில் மோதி எதிரொலித்தது. நிலைதடுமாறிப் போன பார்வதி, கன்னத்தைப் பிடித்துக்கொண்டு சுவரோரமாகச் சரிந்தாள்.
அலங்காநல்லூர் கிராமத்திலேயே மிகப் பெரிய கௌரவமும், பாரம்பரியமும் கொண்ட கூட்டுக் குடும்பம் பெரியசாமியுடையது. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்தவர் பெரியசாமிதான் அந்தக் குடும்பத்தின் ஆணிவேர். அவருக்குப் பிறகு பிறந்தவர்கள் மொத்தம் பதினொரு பேர் — ஐந்து தங்கைகள் மற்றும் ஆறு தம்பிகள்!
அந்தப் பன்னிரண்டு பேரும், அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களும் அரசாங்க உத்தியோகத்தில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் என்பது அந்த மதுரை மாவட்டத்திற்கே தெரிந்த பெருமை.
மூத்தவரான பெரியசாமி ராணுவ அதிகாரி.
அவருக்கு அடுத்தபடியாகப் பிறந்த ஐந்து தங்கைகளான — அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை அங்கயற்கண்ணியும் அவரது கணவர் கல்லூரி முதல்வர் சொக்கலிங்கமும்.
வட்டாட்சியர் அலுவலக அதிகாரி மீனாட்சியும் அவரது கணவர் வங்கி மேலாளர் சங்கரநாராயணனும்.
அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் பார்வதிதேவியும் அவரது கணவர் அரசு மருத்துவர் திருநாவுக்கரசுவும்.
கிராம நிர்வாக அதிகாரி கற்பகமும் அவரது கணவர் சார்-பதிவாளர் கணேசமூர்த்தியும்.
கடைசித் தங்கை கருவூலத் துறை அதிகாரி தெய்வானையும் அவரது கணவர் வேளாண்மைத் துறை அதிகாரி சரவணப்பெருமாளும் அங்கே குடும்பமாக வந்திருந்தார்கள்.
இவர்களுக்குப் பிறகு பிறந்த ஆறு தம்பிகளான — காவல்துறை ஆய்வாளர் கருப்பசாமியும் அவரது மனைவி கண்ணம்மாவும்.
பொதுப்பணித்துறை பொறியாளர் முத்துராமலிங்கமும் அவரது மனைவி வடிவுக்கரசியும்.
அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் சௌந்தரபாண்டியனும் அவரது மனைவி தாமரைச்செல்வியும்.
மின்சார வாரிய அதிகாரி மருதுபாண்டியும் அவரது மனைவி செண்பகவல்லியும்.
வனத்துறை அதிகாரி வீரபாண்டியும் அவரது மனைவி முத்துலட்சுமியும்.
கடைசித் தம்பி கல்லூரிப் பேராசிரியர் செந்தில்வேலனும் அவரது மனைவி கலைவாணியும் தங்கள் பிள்ளைகளோடு அந்தப் பெரிய வீட்டின் கூடத்தில் சூழ்ந்து நின்றிருந்தார்கள்.
தங்கமயிலுவின் திருமணத்திற்காக வந்திருந்த அந்த பன்னிரண்டு குடும்பமும், பெரியசாமி தன் மனைவியை அறைந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள்!
“அண்ணே! என்னண்ணே இது? அண்ணி மேல எதுக்குண்ணே இப்படி நாலு பேர் முன்னாடி கை நீட்டுறீங்க?” என்று காவல்துறை ஆய்வாளரான தம்பி கருப்பசாமி பதறிப்போய் அண்ணனின் கையைப் பிடித்துத் தடுத்தான்.
மூத்த தங்கை அங்கயற்கண்ணி ஓடி வந்து பார்வதியைப் பிடித்துத் தூக்கிவிட்டு, “அண்ணா, என்ன நடந்துச்சு? மயிலுவை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டு வந்து, இப்படி அண்ணியை அடிக்குறீங்களே!” என்று கலங்கிய குரலில் கேட்டாள்.
அரசு மருத்துவர் திருநாவுக்கரசும், கல்லூரி முதல்வர் சொக்கலிங்கமும் பெரியசாமியைச் சமாதானப்படுத்த அருகில் வந்தார்கள்.
பெரியசாமியின் கண்கள் நெருப்பாய் சிவந்திருந்தன. அவரது உதடுகள் கோபத்தில் துடித்தன. தன் தம்பிகளையும், தங்கைகளையும் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார் பெரியசாமி!
“இவ பண்ணுன காரியத்துக்கு அறையறது மட்டும் இல்லடா… கொன்னா கூடத் தப்பில்ல! ஊர் உலகத்துக்கே நியாயம் சொல்ற கவர்மெண்ட் உத்தியோகத்துல நாம எல்லாரும் தலைநிமிர்ந்து வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். ஆனா, இவ தன் பிறந்த வீட்டுப் பாசத்துல கண்மூடித்தனமா பண்ணின வேலையால, இன்னைக்கு என் பொண்ணு வாழ்க்கையே நடுத்தெருவுக்கு வந்து நிக்குதுடா!”
“என்னண்ணா சொல்றீங்க? மயிலுவுக்கு என்ன ஆச்சு? மாப்பிள்ளை வீட்டுல ஏதாவது பிரச்சனையா?” என்று தம்பி முத்துராமலிங்கமும், சௌந்தரபாண்டியனும் பதட்டத்தோடு கேட்டார்கள்.
பார்வதி கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு ஒரு ஓரமாக பதுங்கினார்.
பெரியசாமி ஆவேசமாகத் தொடர்ந்தார். “அன்னைக்கே நான் சொன்னேன்… இவ அண்ணன் மகன் மகேந்திரன் சரியான ஆளு இல்ல, அவனை நம்ம வீட்டு வாசப்படியில ஏத்தாதன்னு! கேட்டாளா இவ? ‘என் அண்ணன் மகன், என் அண்ணன் மகன்’னு தலையில தூக்கி வச்சு ஆடுனா.
ஊர் பொது இடத்து விஷயத்துல நான் அவனுக்கு எதிரா நின்னேன்ங்கிற வஞ்சகத்துல, அவன் பண்ணுன வேல தாண்டா இது “உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிட்டானே… பாவி படுபாவி என்றவன் மீண்டும் அவளிடம் பாய்ந்தான்!”
இதைக் கேட்டதும், அங்கிருந்த தம்பிகள் ஆறு பேருக்கும் ரத்தம் கொதித்தது! வேலை விஷயமா நாங்க அங்கங்க இருந்ததால உங்களுக்கு யாரும் இல்லனு நெனைசிட்டானுங்களா? பொறுக்கி பயலுக, லத்தி எடுத்தன்னா பின்னு பின்னுனு பின்னிடுவேன் என்று காவல்துறை ஆய்வாளரான கருப்பசாமி தன் மீசையை முறுக்கியபடி முன்வந்து “இங்க பாரு அண்ணே… அவனை நான் சும்மா விட மாட்டேன்ணே! இப்போவே அவனை…” என்று பாயப் போக, பெரியசாமி கையை உயர்த்தித் தடுத்தார்.
“நில்லுடா கருப்பசாமி! அவனை அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ என் பொண்ணு எங்க இருக்கான்னு கூடத் தெரியல! மண்டபத்துல உண்மை தெரிஞ்ச உடனே, மாப்பிள்ளை வைரக்கண்ணு கோபத்துல ஊரை விட்டே என் பொண்ணைக் கூட்டிக்கிட்டுப் போயிட்டான். ஒரு பக்கம் என் பொண்ணோட நிலைமை. இன்னொரு பக்கம், பழிவாங்குற வெறியோட சுத்திக்கிட்டு இருக்குற இவ அண்ணன் மகன் மகேந்திரன்! என் பொண்ணுக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னு என் வயிறு எரியுதுடா!” என்று பெரியசாமி உடைந்து அழுதார்.
அப்போது, அங்கே வீட்டின் வாசலில் இருந்த மாமரத்தின் மறைவில் யாரோ நடமாடும் நிழல் தெரிந்தது.
“யாரு அங்க?” என்று வனத்துறை அதிகாரி வீரபாண்டியும், மருதுபாண்டியும் கத்திக்கொண்டே வாசலுக்கு ஓடி வர, இருளுக்குள் மறைந்திருந்த ஒரு உருவம், வஞ்சகமான சிரிப்போடு இருட்டில் கரைந்து மறைந்தது! தன் அண்ணன் மகனின் அந்தக் கொடூரப் பார்வை இன்னும் தங்களைத் துரத்துவதை உணர்ந்த பார்வதி, குலைநடுங்கிப் போய் அங்கேயே மயங்கிச் சரிந்தாள்!
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இரவு நேரம்… மதுரை பெரியார் நகர் போலீஸ் குடியிருப்பில் இருந்த வீட்டுக் கூடத்தில், ஒரு கனத்த உணர்ச்சிப் போராட்டம் நடந்துகொண்டிருந்தது.
தனது அலங்காநல்லூர் வாழ்க்கையையும், பகையின் நிழலையும் பற்றிப் பேசத் தொடங்கிய தங்கமயிலுவுக்கு, அந்தக் கொடூரமான இரவின் நினைவுகள் மனத்திரையில் மீண்டும் ஓடத் தொடங்கின.
அவளது இதயம் படபடவென வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. மூச்சுக்காற்று சூடாக வெளியேறியது. “அங்க அங்க… அன்னைக்கு ராத்திரி… அந்தப் பாவி…” என்று சொல்ல வந்தவளுக்கு, அதிகப்படியான மன அழுத்தத்தால் தலை சுற்றியது. வார்த்தைகள் தடுமாறி, “கனகா…” என்ற மெல்லிய முனகலோடு அப்படியே பக்கவாட்டில் சரிந்தாள் மயிலு!
“மயிலு!” என்று பதறிப்போனவன், அவள் தரையில் விழுவதற்குள் மின்னல் வேகத்தில் பாய்ந்து தன் இரு கைகளாலும் அவளைத் தாங்கிப் பிடித்தான்!
“அய்யோ, மயிலு! என்னடி ஆச்சு?” என்று கனகசுந்தரியும், அவளது அம்மா அன்னலட்சுமியும் பதறிப்போய் ஓடி வந்தார்கள்.
“பயப்படாதீங்கம்மா… பழைய விஷயத்தை நினைச்சு ரொம்ப மன அழுத்தமாகிட்டாங்க போல இருக்கு,” என்று சொன்ன வைரக்கண்ணு, மயங்கிக் கிடந்த தன் மனைவியை ஒரு குழந்தையைப் போலக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று, கூடத்தின் ஓரத்தில் இருந்த அகலமான மரச் சாய்வு மெத்தை இருக்கையில் (Sofa) மிக மென்மையாகப் படுக்க வைத்தான்.
அவளது பாதங்களைத் தூக்கி இருக்கையின் மீது நேராக வைத்துவிட்டு, மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து அவளது முகத்தில் லேசாகத் தெளித்தான். இரண்டு நிமிடங்களில் மெல்ல மூச்சு விட்டுக் கண்விழித்த மயிலு, தன் கணவன் தன் அருகிலேயே அமர்ந்து தலையை வருடிக் கொடுப்பதை உணர்ந்து, அவனது கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
மனைவியின் மீது வைரக்கண்ணு காட்டிய அந்தத் தாயுள்ளத்தையும், இருவருக்குள்ளும் இருந்த அந்த ஆழமான பிணைப்பையும் பார்த்த அன்னலட்சுமி, தன் மகள் கனகசுந்தரியின் தோளை மெல்லத் தட்டினார்.
“அடியேய் கனகா… இங்க பாருடி, இன்னைக்குத்தான் அவங்களுக்குக் கல்யாணம் ஆகிருக்கு. புதுமணத் தம்பதிகளுக்குத் தனிமை வேணும்டி. நாமளும் இங்கயே நின்னு பழைய கதையைப் பேசிக்கிட்டு இருந்தா நல்லா இருக்காது. வா, நாம வெளியே தாழ்வாரத்துல போய் உட்காரலாம்,” என்று மெல்லிய குரலில் அழைக்க.
“சரிம்மா, வா போகலாம்,” என்று கனகசுந்தரியும் புரிந்துகொண்டு, வைரக்கண்ணுவிடம், “அண்ணா, நீங்க மயிலு கூட இருங்க, நாங்க வெளியே கொஞ்சம் வேலை இருக்கு தாழ்வாரத்துல இருக்கோம்,” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்கள்.
அங்கே வெளியே தாழ்வாரத்தில், தன் புதுப் பைக்கின் மீது சாய்ந்துகொண்டு தீவிரமாக ஏதோ யோசித்துக்கொண்டிருந்தான் சுந்தர்.
அன்னலட்சுமியும், கனகசுந்தரியும் வெளியே வருவதைப் பார்த்த சுந்தர், தொண்டையைச் செருமிக்கொண்டு அன்னலட்சுமியின் அருகில் வந்தான்.
“அம்மா… உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்மா…” என்றான் தயங்கியபடியே.
“என்னப்பா தம்பி? சொல்லுப்பா,” என்றார்.
சுந்தர் ஓரக்கண்ணால் கனகசுந்தரியைப் பார்த்துவிட்டு, குரலைத் தாழ்த்திப் பேசினான்.”அது ஒண்ணும் இல்லம்மா… என் நண்பனுக்கு இன்னைக்குத்தான் கல்யாணம் ஆகிருக்கு. என்னதான் கோபத்துல ஊரை விட்டு வந்திருந்தாலும், முறைப்படி இன்னைக்கு ராத்திரி அவங்களுக்கு முதலிரவு சடங்கு நடக்கணும்ல? அதுக்கு வேண்டிய சில பொருட்களை எல்லாம்…”
சுந்தர் சொல்லி முடிப்பதற்குள், அருகில் நின்றிருந்த கனகசுந்தரி, “இப்போது இது ரொம்ப முக்கியமா?” என்பது போல சுந்தரை ஒரு மாதிரியாகப் பார்த்து வைத்தாள்!
அந்தப் பார்வையைப் பார்த்ததும் சுந்தர் திருதிருவென முழித்தான். “இல்லம்மா… நான் தப்பா எதுவும் சொல்லல… முறைப்படி…” என்று அவன் தடுமாற, அன்னலட்சுமி புன்னகைத்தபடியே கனகசுந்தரியை அடக்கினார்.
“ஏய் கனகா, சும்மா முறைக்காதடி! தம்பி நீ சொல்றதும் சரிதான்ப்பா. நடந்ததை நினைச்சு அழுதுக்கிட்டே இருந்தா வாழ்க்கை நகராது. பழசைப் பேசி ஒண்ணும் ஆகப்போறதில்ல. புது வாழ்க்கையை ஆரம்பிக்கிற பிள்ளைங்களுக்கு நாமதான் நல்லபடியா வழி நடத்தணும். இருப்பா தம்பி, நான் ஒரு துண்டுச் சீட்டுல எழுதித் தர்றேன்… நீ போய் பக்கத்துல இருக்குற கடைவீதியில அந்தப் பொருட்களை எல்லாம் வாங்கிட்டு வா!” என்று உற்சாகமாக உள்ளே சென்று சீட்டு எழுதி எடுத்து வந்து சுந்தரிடம் கொடுத்தார்.
சீட்டை வாங்கிக்கொண்டு, கனகசுந்தரியைப் பார்த்து வெற்றிப் புன்னகை வீசியபடியே தன் புது பைக்கை எடுத்துக்கொண்டு கடைவீதிக்குப் பறந்தான் சுந்தர்!