Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 30 1

கலாட்டா – 30



Advertisement

“கீதா உன்னை நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க.. இதான் மாப்பிள்ளை போட்டோ பிடிச்சிருக்கான்னு பாருடா செல்லம்” என தன் கைகளில் மீனாட்சி திணித்த கவரை கோபத்துடன் தூக்கியெறிந்த கீதா,

“அவன் நாளைக்கு வரட்டும் அவனை ஓட ஓட விரட்டுறேன்” என்று சபதம் இட்டுக் கொண்டு மறுநாள் தன் சபதத்தை நிறைவேற்ற காத்திருக்க, விதி அவளைப் பார்த்து நக்கலாய் சிரித்ததை பாவம் அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Advertisement

Advertisement

அவள் எதிர்பார்த்ததைப் போல் மறுநாளும் வர, அவள் சபதத்தை சுக்குநூறாய் உடைப்பதற்காகவே அங்கு வந்து சேர்ந்தான் அஜய்.

மாப்பிள்ளை வந்து விட்டார் என்றவுடனே அவளையும் அறியாமல் ஏதோ ஒரு உந்துதலில் ஜன்னல் வழியாக வெளியே நடப்பதைப் பார்க்க, அங்கு அப்போது தான் காரை விட்டு இறங்கி தன் காலைக் கொண்டு காரின் கதவை அடைத்து சாற்றிவிட்டு அதன் மேலே அதே காலை மடக்கி வைத்து இன்னொரு காலை தரையில் ஊன்றி ஸ்டைலாக தன் குளிர் கண்ணாடியை அணிந்து கொண்டு நெற்றி மேல் விழுந்த முடியை ரஜினி பாணியில் சிலுப்பி விட்டுக் கொண்டிருந்த அஜயைக் கண்டு அப்படியே சிலையாய் நின்றாள் கீதா.

Advertisement

மருத்துவர் என்றதுமே ஒரு வயசான மாப்பிள்ளையை எதிர்பார்த்து வந்த கீதாவிற்கு, அஜயின் தோற்றம் அப்படியே மனதில் பசுமையாக பதிந்துவிட அவளையும் அறியாமல் அவள் கண்கள் அவன் மேல் ரசனையாய் படிந்தது.

அவன் கண்களில் இருந்த தீட்சண்யமும், யாருக்கும் அடங்காதது போல் நடந்து கொண்ட அவனின் மேனரிசமும் அவனை நோக்கி கீதாவை ஈர்த்துக் கொண்டே போக, அதன் பின்பே நேற்று தன் அன்னையிடம் விட்ட சவால் அவளிற்கு நினைவிற்கே வந்தது.

அதன் பின் தன் தலையை குலுக்கிக் கொண்டு அவனை எப்படியாவது இங்கிருந்து துரத்திவிட வேண்டும் என அவள் ஏதேதோ முயற்சி செய்ய, அதை முறியடித்து அவள் மனதை மொத்தமாய் களவாடிச் சென்றிருந்தான் அந்த கள்வன்.

இதுவரை அவளின் பேச்சைக் கேட்டு திமிர் பிடித்தவள் என முத்திரை குத்தி விட்டு கடந்து போகும் ஆண் மகன்களுக்கு மத்தியில், தன் பேச்சை விளையாட்டாக எடுத்துக் கொண்டு தன்னுடன் பதிலுக்கு பதில் பேசி அவளையே வாயடைக்க செய்த அஜயை அவளுக்கு பிடித்துப் போனதில் ஆச்சரியம் ஏதும் இல்லையே!!

அவனை பிடித்திருந்தாலும் அதை ஒத்துக் கொள்ள விடாமல் அவளின் ஈகோ தடை போட, அவனுடன் முட்டி மோதிக் கொண்டே நின்றாள்.

அதன் பின் தான் மாப்பிள்ளைகள் வீடு மாறி வந்துவிட்ட விபரம் தெரிந்து கலவரமாக, கீதாவின் மனதிலும் நிலவரம் மோசமாகத் தான் இருந்தாலும், அவளின் ஈகோ அதை ஒப்புக் கொள்ள விடாமல் தன் சபதத்தில் வென்றுவிட்டதாக தன்னையே ஏமாற்றிக் கொண்டிருந்தது.

அந்த ஈகோவை உடைத்தெறிவதைப் போல் அஜய் வந்து அவளின் கழுத்தில் சங்கிலியை அணிவித்து அவனுக்கான இடத்தை அவளின் மனதில் நங்கூராம் போட்டு பதித்து விட்டு சென்றிருக்க, அவள் மனம் அவனின் பால் சாயத் தொடங்கியதை ஒப்புக் கொண்டது.

இருந்தாலும் அவனுடன் விளையாண்டு பார்க்க எண்ணி அவனை அலைய விட நினைத்தாள்.

அதன் பின் வந்த நாட்களெல்லாம் அவனை நினைத்து உள்ளே உருகினாலும் வெளியே எலியும் பூனையும் போல் சண்டை போட்டு அவனை வெருப்பேற்றி அதில் ஒரு இன்பம் கண்டாள்.

அனைத்தும் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது அன்று கோவிலில் வைத்து அவளை ஒரு கூட்டம் கொல்ல வரும் வரை.

அன்று கோவிலில் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டாலும் கீதாவின் மனதெல்லாம் அவர்கள் யார் என்கிற கேள்வி வண்டாய் குடைந்து கொண்டே இருக்க, அதற்கு விடை சுந்தர பாண்டியனை மருத்துவமனையில் சேர்த்த அன்று அவளிற்கு கிடைத்தது.

தன் தந்தைக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்ற செய்தி கிடைத்தவுடன் மீனாட்சியுடன் பதறி துடித்துக் கொண்டு அவள் மருத்துவமனைக்கு விரைந்த சமயம் அவளை ஒரு டொயோடோ கார் ஒன்று பின் தொடர்ந்து கொண்டே வந்தது.

அதைக் கண்டு கீதாவின் புருவ மத்தியில் முடிச்சுகள் விழ, தன் அன்னையை இறக்கி விட்டுவிட்டு உள்ளே சென்று தன் தந்தையின் நலனைப் பற்றி மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொண்டு திருப்தி அடைந்தவள் அதன் பின் தான் அந்த காரைப் பற்றி கண்டறிய வெளியே சென்றாள்.

அவள் எதிர்பார்த்ததை போல் ஒரு நான்கு பேர் அவளை பின் தொடர, அப்போது சமயோசிதமாக சிந்தித்து அவர்களிடம் தனியே சிக்காமல் கூட்டத்திற்குள் நுழைந்து அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி தப்பித்த கீதா, இப்போது அவர்களுக்கே தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்தாள்.

அவளைக் காணாமல் கடுப்பான அந்த தடியன்கள், ஜித்தேஷிற்கு அழைத்து நடந்ததை சொல்லி அவனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

அதில் ஒருவன் தன் சக கூட்டாளியிடம், ” அந்தப் பொண்ணு பார்க்க சுண்டெலி மாதிரி இருந்துகிட்டு நமக்கே தண்ணி காட்டி பாஸ் கிட்ட நல்லா திட்டு வாங்க விடுது டா.. நம்ம நேரமே சரி இல்லை” என்று புலம்ப,

பதிலுக்கு அவனும், “அன்னைக்கு கோவில்ல அவ மிஸ் ஆனப்போவே ஜித்தேஷ் சார் எவ்ளோ கடுப்பாகி நம்மளை இனி அந்த பொண்ணு மேட்டர்ல தலையிடக் கூடாதுன்னு சொல்லிட்டாரு.. இருந்தாலும் எங்க நம்ம மேல இருக்க நம்பிக்கை போய் அவர் அவரோட ஊர்ல இருந்து டெல்லி ரவுடிங்களை இம்போர்ட் பண்ணி நம்ம பேமெண்டை கட் பண்ணிட போறாருண்ணு பயந்து தான் அவர் சொல்லாமையே இன்னைக்கு அந்த பொண்ணை போட்டுத் தள்ள வந்தா மறுபடியும் அது எஸ்கேப் ஆய்ருச்சு.. ச்சை நமக்குன்னு வந்து சேருதுங்க பாரு” என்று பதிலுக்கு அவனும் புலம்ப,

அப்போது அவர்களின் கூட்டத்தில் கடைக்குட்டியாக சேர்ந்திருந்த ஒரு இளையவன் அவர்களிடம், ” இந்த பொண்ணை எதுக்குண்ணே அவர் கொல்லணும் அப்படின்னு அவ்ளோ துடி துடிச்சு இதுக்காக டெல்லியில் இருக்க வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு  வந்து இங்க உட்கார்ந்து கொண்டு இருக்காரு.. அந்த பொண்ணை பார்த்தா அப்படி ஒன்னும் வொர்த் அஹ் தெரியலையே” என தன் சந்தேகத்தை வினவ,

“அட லூசுப்பயலே.. அந்த பெண் பார்க்க தான் சாதுவாக தெரியுது.. ஆனா சரியான கேடி.. இங்க இருந்து டெல்லிக்கு போய் நம்ம ஜித்தேஷ் சாரோட ஒரேயொரு தம்பியை சுட்டுக் கொன்னுட்டு அவங்க அப்பாகிட்ட சொல்லி என்கவுன்டர் அப்படின்னு  கேஸை முடிச்சுட்டு எஸ்கேப் ஆகி ஒன்னுமே தெரியாத மாதிரி இங்க வந்திருச்சு டா.. அதான் பாஸ் அவளை கொன்னே தீரணும் அப்படின்னு வெறியோட சுத்திட்டு இருக்கார்.. இன்னைக்கு எஸ்கேப் ஆனாலும் கூடிய சீக்கிரமே பாஸ் அவ கதையை கண்டிப்பா முடிச்சிடுவாரு” என்று அந்த தடியன்களுக்கெல்லாம் மூத்தவன் அவனிற்கு விளக்கமளித்து அவனை அங்கிருந்து அழைத்துச் செல்ல,

அதுவரை அங்கிருந்த தூணின் மறைவில் நின்று அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கீதாவிற்கு அவளை கொல்ல துரத்துவது யார் என இப்போது நன்றாக விளங்கியது.

அஞ்சலிக்காக அவளை நாசம் செய்தவனை வதம் செய்துவிட்டு வந்த கீதா அந்த பிரச்சனை டெல்லியோடு முடிந்து விட்டது என எண்ணிக் கொண்டிருக்க, இன்னும் அது முடியவில்லை என அந்த பிரச்சினையின் நிழல் அவளை துரத்திக் கொண்டிருப்பதை இன்று உணர்ந்து கொண்டாள்.

அதன் பின்னர் ஒரு நாள் முழுக்க இதைப்பற்றி யோசித்து மூளையை குழப்பிக் கொண்டவள் மனதில் அஞ்சலியா அஜயா என்ற பட்டிமன்றமே நடந்தது எனலாம்.

இப்போது அஜயை அவள் ஏற்றுக் கொண்டாலும், என்றாவது ஒரு நாள் இந்த ஜித்தேஷின் மூலம் பிரச்சனை கிளம்பி உண்மை வெளி வருவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம் இருந்தன. மேலும் அஞ்சலிக்கு இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்தால் நிச்சயம் அவளால் இதை சுத்தமாக தாங்கிக் கொள்ள முடியாததோடு, அஸ்வத்தையும் அவள் ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்பது திண்ணம் என்பதால் தன் தமக்கைக்காக தன் காதலை மனதிற்குள்ளேயே வைத்து சமாதி கட்டி வைக்க முடிவு செய்தாள்.

என்னதான் முடிவெடுத்து விட்டாலும் அதை செயல்படுத்த அவ்வளவு சுலபமாக இல்லை கீதாவிற்கு, அதுவும் அஜய் அணிவித்த செயின் வேறு அவள் மனதோடு உரசிக் கொண்டு அஜயின் நினைவுகளை அவளுள் தீமூட்டி விட்டு செல்ல, முதல் வேலையாக அதை தன் கழுத்திலிருந்து கழட்டியவள் அஜய் அன்று கிண்டல் செய்ததைப் போல அதை அடகு வைக்க எண்ணி அதை தன் கையோடு கழட்டிக் கொண்டு சென்றாள்.

ஏதோ ஒரு வேகத்தில் அதை எடுத்துக் கொண்டு வந்து விட்டாலும் அதை அடகு வைக்க அவளுக்கு சுத்தமாக மனதில்லை. இருந்தும் அது தன்னிடம் இருந்தால் நிச்சயம் அஜயின் நினைவுகளை தன் மனதை விட்டு துரத்த முடியாது என்று உணர்ந்து மனமே இல்லாமல் அதை அடகு வைத்து விட்டு வந்தவள் விரைவாக அஞ்சலிக்கு அவள் மனதிற்கு பிடித்த அஸ்வத்துடன் திருமணம் செய்து அவளை அனுப்பிவிட்டு அந்த ஜித்தேஷை கவனித்துக் கொள்ள வேண்டும் என நினைத்திருந்தாள்.

ஆனால் அவளே எதிர் பார்த்திருக்காத ஒன்று, அஜயின் குடும்பம் இப்படி திடீரென பெண் கேட்டு வரும் என்பதும் அதற்கு தங்கள் குடும்பமும் சம்மதம் தெரிவிக்கும் என்பதும்.

அவளைக் கேட்காமலே அனைத்து காரியங்களும் மள மளவென நடைபெற்றுக் கொண்டிருக்க, விடிந்தால் அவளுக்கும் அஜய்க்கும் நிச்சயம் என்று வந்து நிற்கின்றது.

அஜயிடம் அன்று சொன்னதைப் போல் அடகு வைத்த நகையை அன்றே மீட்டுக் கொண்டு வந்துவிட்டாள் அவள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!