Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மான்விழியில் வீழ்ந்தேனடி!

மான்விழி – 22

 

பவிஷ்கா கதவை தட்டிக் கொண்டிருந்தது காதில் கேட்டாலும், சித்தார்த் நயனியின் கழுத்து வளைவிலிருந்து தன் முகத்தை எடுக்காமல், அவளின் வாசம் பிடித்தபடி நின்றிருந்தான்.

 

மூச்சை வேகமாக உள்ளே இழுத்து வெளிவிடப்படும் கணவனின் உஷ்ணமான மூச்சுக் காற்றில் நயனியின் தேகம் சிலிர்த்தது. அவள் கழுத்து வளைவில் தன் இதழால் மெல்ல வருடினான். அவள் மேலும் அவனுள் புதைந்து நின்றாள்.



Advertisement

 

இப்போது பவிஷ்கா, “சித்து, டேய் சித்து. கதவை திறடா” என்றாள் அவசரமாக. சித்தார்த் தமக்கையின் அழைப்பை சட்டை செய்யாமல் தன் வேலையில் கவனமாக இருக்க,

 

Advertisement

“என்னங்க” என்றாள் நயனி. அவளின் அழைப்பில் கிறங்கியவன் “என்னடி” என்றான்.

Advertisement

 

“உங்க அக்கா கூப்பிடுறாங்க” என்றாள் மெல்லிய குரலில்

 

Advertisement

“அவ கிடக்கிறா. கொஞ்ச நேரம் கூப்பிட்டு பார்த்துட்டு போயிடுவா விடு” என்று தன் வேலையை தொடர்ந்தான்.

 

ஆனால் பவிஷ்கா தொடர்ந்து கதவை தட்டுவதும், “சித்து, நயனி” என்று அழைப்பதுவுமாக இருந்தாள்.

 

இருவருக்குள்ளும் இருந்த மனதின் ஓ(ஆ)சைகள் காதல் கீதமாக அரங்கேறும் வேளையில் அந்த சத்தம் தொடர்ந்து நாராசமாக கேட்கவும், “ப்ச், இவளை யாருடி இப்போ இந்தியா வரச்சொன்னது” என்று அலுத்துக் கொண்டவனாய் மனைவியை விட்டு மனமே இல்லாமல் விலகினான்.

 

நேத்ரா இன்னமும் அதே நிலையில் உணர்ச்சிகளின் பிடியில் அப்படியே நின்றிருந்தாள். அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கத்துடன் தலை குனிந்திருந்தாள். அவள் வெட்கத்தை பார்க்க பார்க்க சித்தார்த்துக்கு சித்தம் கலங்கியது.

 

நீண்ட பெரு மூச்சை எடுத்து வெளியே விட்டவன், “நயனி, அப்படியே இரு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு கதவை கொஞ்சமாக திறந்து தலையை மட்டும் நீட்டி, “என்ன பவி” என்றான் எரிச்சலாய்.

 

“ஏன்டா, எவ்வளவு நேரமா காட்டு கத்தல் கத்திட்டு இருக்கேன் கதவை திறக்க இவ்வளவு நேரமா?” என்றாள் பவிஷ்கா அவனை விட எரிச்சலாய்.

 

அக்காவின் முகத்திலும் கோபம், பதற்றம் தெரிய “சரி என்ன சொல்லு” என்றான்.

 

“கீழே வா” என்றாள் 

 

“ப்ச், பவிக்கா படுத்தாதேடி. எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லு. மனுஷன் நிலைமை புரியாம” என்றான் சலிப்பாய். 

 

“நேத்ரா என்ன பண்றா?” என்று கேட்டாள் பவிஷ்கா.

 

“எதுக்கு? உள்ளே தான் இருக்கா” என்றான் புரியாமல்

 

“அவள் கிட்ட எதுவும் சொல்லாதே. அவ இங்கேயே இருக்கட்டும். நீ மட்டும் கீழே வா” என்று சொல்லிவிட்டு பவிஷ்கா மாடிப்படியிலிருந்து கீழே இறங்கினாள்.

 

எதுக்கு இவ இப்படி பில்டப் கொடுத்துட்டு போறா என்று சலித்துக் கொண்டே மனைவியை திரும்பி பார்த்தான். நயனி அதே மோன நிலையில் அப்படியே நின்றிருந்தாள்.

 

மெதுவாக கதவை சாத்தி விட்டு மாடிப் படிகளில் கீழே இறங்கினான். பவிஷ்கா கைகளை கட்டியபடி நின்றிருந்தாள். “எதுக்கு இப்போ என்னை இங்கே வரச் சொன்னே?” என்று கேட்டபடி தமக்கையின் எதிரே நின்றான்.

பவிஷ்கா அவன் பின்னால் பார்க்குமாறு தலையை ஆட்டி சமிக்ஞை செய்ய விட்டேற்றியாக திரும்பியவன் விழிகள் அதிர்ச்சியில் இமைக்க மறந்து அப்படியே உறைந்து போயின.

 

“ஹாய் ஹனி ஹவ் ஆர் யூ?” என்ற சத்தமாக கூவியபடி எலிசா ஓடி வந்து அவனை இறுக அணைத்தாள். சித்தார்த்தின் மூளை சிறிது நேரம் வேலை நிறுத்தம் செய்திருக்க அவன் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.

 

நேத்ராவிற்கு ஏதோ புதிதாக குரல் கீழே இருந்து கேட்கவும் வெளியே வந்தவள் மாடியிலிருந்து எட்டிப்பார்த்தாள். சித்தார்த்தும் எலிசாவும் கட்டிப்பிடித்து நின்றிருந்த கோலத்தை பார்த்து அதிர்ந்து போனாள்.

 

அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்காத சித்தார்த் நயனியை கவனிக்க வில்லை. ஆனால் பவிஷ்கா அவளை கவனித்து விட்டதால், அசையாமல் எங்கேயோ பார்ப்பது போல நின்றபடி வாயைமட்டும் அசைத்து “சித்து, நயனி பார்க்கிறாடா விலகி நில்லு” என்றாள் அடிக்குரலில்

 

அவன் மூளை வேலை நிறுத்தம் செய்திருக்க, காது எங்கே கேட்கப்போகிறது? தன் பார்வையையே நம்ப முடியாமல் நடுங்கும் கால்களோடு படியில் இருந்து இறங்கினாள் நேத்ரநயனி. தடுமாறி விழப்போனவள் படிகளின் கைப்பிடியை பிடித்தபடி மெல்ல இறங்கி வந்தாள்.

 

கணவன் நின்றிருக்கும் திசைக்கு எதிர் திசையில் கண்கலங்க நின்றாள். சித்தார்த்தின் பார்வை வட்டத்திற்குள் மனைவியின் உருவம் தெரிந்த பின்பு தான் சுயம் பெற்றான் கணவன். சட்டென்று எலிசாவை உதறி தள்ளினான். 

 

அவன் எதிர்பாராமல் தள்ளிவிட்டதில் எலிசா அங்கே இருந்த சோபாவின் மேல் தொப்பென்று விழுந்தாள். “என்னாச்சு ஹனி?” என்றாள் வியப்புடன். எலிசாவிற்கு தமிழ் நண்பர்கள் அதிகம் இருந்ததால் கொச்சை தமிழில் பேசுவாள்

 

“நீ இங்கே என்ன பண்றே? எதுக்கு இங்கே வந்தே?” என்றான் சித்தார்த்.

 

“என்ன ஹனி? என்னை பார்த்ததும் ஓடிவந்து கட்டிக்குவ, ரொம்ப சந்தோஷப்படுவனு நினைச்சு ஆசையா வந்தால், ஏன் வந்தேனு கேட்கிறே? நான் தான் உனக்கு முன்னாடியே இந்தியாவுக்கு வர்றேன்னு சொல்லியிருந்தேனே. இரண்டு பேரும் உங்க அப்பா கிட்ட பேசி கல்யாணம் பண்ணிக்கலாம்னு தானே பேசி முடிவு பண்ணியிருந்தோம். இப்போ எதுவும் தெரியாத மாதிரி புதுசா கேட்கிறே?” என்றாள் எலிசா.

 

அவன் இந்தியா வந்த புதிதில் எலிசாவிடம் பேசியதை இப்போது சொல்கிறாள் என்று உணர்ந்து கொண்டவன், “அது அப்போ. உனக்கு தான் வேறே பாய்பிரண்ட் செட் ஆயிட்டான் இல்ல. எதுக்கு என்னை தேடி வந்திருக்க?” என்றான் எங்கேயோ பார்த்தபடி.

 

“என்ன ஹனி இது. சராசரி ஆம்பளைங்க மாதிரி சந்தேகத்தோட பேசறே? நம்ம கல்சர்ல பாய் பிரண்ட்ஸ் எல்லாம் சகஜம் தானே. நீ என்கூட இருக்கும் போதே அவங்க கூட எல்லாம் பார்ட்டிக்கு போவேன் தானே? அதுபோல தான் பார்ட்டிக்கு போனேன். மத்தபடி எதுவும் இல்ல. இதுக்கு போய் என் மேல கோவிச்சுக்கிட்டியா?

 

நம்ம கல்யாணம் நடக்கட்டும் சராசரி இந்திய பெண் போல நடந்துக்கிறேன். வீட்டுக்குள்ளவே இருப்பேன். சரி தானே” என்று சத்தமாக சிரித்தாள் எலிசா.

 

அவள் சிரிப்பை அங்கே யாராலும் ரசிக்க முடியவில்லை. சித்தார்த் நேத்ரநயனியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பொங்கி வந்த அழுகையை அடக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களுக்கு முன் இருந்த ஏகாந்த நிலை இப்பாேது காணாமல் போயிருந்தது.

 

எத்தனையோ பிரச்சனைகளுக்கு பிறகு இன்று தான் இருவரும் மனம்விட்டு பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர். அவர்கள் வாழ்க்கையை தொடங்கும் நேரம் மீண்டுமொரு பிரச்சனை.

 

அவன் வாழ்வில் சந்தோஷம் நத்தையாக நகர்ந்து வந்தால் பிரச்சனை மட்டும் குதிரை வேகத்தில் வருகிறது. அவனும் தான் என்ன செய்வான்? இப்போது மனைவியின் மனநிலை என்னவென்று தெரியாமல் தவித்தான்.

 

“என்ன ஹனி, நான் பேசிட்டே இருக்கேன். நீ பதில் சொல்லாமல் சிலை மாதிரி இருக்கே” என்றாள் எலிசா

 

“லுக் எலிசா, டோன்ட் கால்மீ ஹனி. கால் மீ சித்தார்த்” என்றான் அழுத்தமாக (Look Elisa, Don’t call me  honey. call me Siddarth) 

 

“ஏன்?” (why) என்றாள் வியப்புடன்.

 

நேராக சென்று நேத்ராவின் தோள்களில் கைகளை போட்டபடி, “பிகாஸ், ஐயம் மேரிட் அன்ட் திஸ் இஸ் மை வைஃப்” என்றான் (Because I am married, and this is my wife)

 

அதிர்ச்சியுடன் சில கணங்கள் இருவரையும் பார்த்தவள், “யு சீட்டட் மீ” என்று கத்தினாள் எலிசா.

 

“நே, நான் சீட் பண்ணனும்னு நினைக்கலை. சந்தர்ப்ப சூழ்நிலையால எங்க கல்யாணம் நடந்துடுச்சு” என்றவன் சுருக்கமாக நடந்ததை கூறி முடித்தான்.

 

“ஓ மை காட், இப்போ தான் நிம்மதியா இருக்கு. கட்டாயத்துல நடந்த கல்யாணம் தானே. நான் கூட நீ என்னை ஏமாத்திட்டியோனு பயந்துட்டேன். அந்த பொண்ணுக்கு எதாவது பணம் கொடுத்து விவாகரத்து பத்தரத்துல கையெழுத்து வாங்கிட்டு அனுப்பிடு. நாம பிளான் பண்ணது போல கல்யாணம் செய்துக்குவோம்” என்றாள் எலிசா 

 

“ஷட் அப் எலிசா. தி இஸ் த லிமிட்” என்று சித்தார்த் அடிக்குரலில் சீறினான். (shut up Elisa, this is the limit)

 

எலிசா சித்தார்த்திடம் இப்படி ஒரு எதிர்வினையை எதிர்ப்பார்த்திராதால் ஸ்தம்பித்து போய் நின்றாள்.

 

“ஷி இஸ் மை வைஃப் அன்ட் ஐ லவ் ஹர் சோ மச்” (She is my wife and I love her so much) என்றான் அழுத்தமாக.

 

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்த நேத்ராவிற்கு இப்போது தான் உணர்வு வந்தது போல கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

இப்போது எலிசா அழ ஆரம்பித்தாள். “என்னால உன்னை விட்டு இருக்க முடியாது, நீ வேணும்” என்று ஏதேதோ புலம்பினாள்.

 

“ப்ளீஸ் இங்கே அழுதுட்டு இருக்காதே. என் அப்பா, ரம்யா எல்லாம் தூங்கிட்டு இருக்காங்க. தயவு செய்து வெளியே போ” என்றான் இறைஞ்சலாய்.

 

“எங்கே போக சொல்றே ஹனி. இந்தியாவில் உன்னை விட்டால் எனக்கு யாரை தெரியும்? நீ இருக்கிற தைரியத்தில அங்கே இருக்கிற வேலையை கூட விட்டுட்டு இந்தியாவில் செட்டில் ஆக போறதா சொல்லிட்டு வந்துட்டேன். இப்போ போக சொன்னால் நான் எங்கே போவேன்” என்று அழுதாள்.

 

இப்போது பவிஷ்கா பேச ஆரம்பித்தாள், “எலிசா இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிப்பீங்க. முன்னாடியே சித்தார்த்துக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம் இல்ல?” என்றாள் சற்று எரிச்சலான குரலில்.

 

“இல்ல ஹனிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு வந்தேன்” என்றாள் எலிசா

 

இவளும் இவ சர்ப்பரைசும் என்று மனசுக்குள் நொடித்துக் கொண்டவள், “சரி என்னோட மாமனார் வீடு இருக்கு, கிளம்புங்க இன்னைக்கு ராத்திரி அங்கே தங்கிக்கங்க. காலையில் நீங்க திரும்ப யுஎஸ் போறதுக்கு சித்துவை ஏற்பாடு செய்ய சொல்றேன்” என்றாள் பவிஷ்கா

 

“இல்ல, எனக்கு மறுபடியும் யுஎஸ் போக விருப்பம் இல்ல. சித்து உன் ஹாஸ்பிட்டல்லயே நான் டாக்டரா வேலை பார்க்கட்டுமா?” என்று கேட்டாள் எலிசா.

 

சித்தார்த் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். 

 

“சித்து ப்ளீஸ், நான் இங்கே தான் இருக்க போறேன். எனக்கு உன்னை விட்டால் யாரையும் தெரியாது. என்னை கல்யாணம் தான் பண்ணிக்கலை. இட்ஸ் ஓகே. உன்னோட ஆஸ்பிட்டல்ல கூட வேலை போட்டு தரமாட்டியா?” என்றாள் எலிசா வருத்தமான குரலில்.

 

கணவன் அப்போதும் அசையாமல் இறுக்கமான முகத்துடன் நின்றிருக்கவும், “என்னங்க” என்றாள்.

 

சற்றே முகம் இளக, “என்னடா” என்றான் கணவன்.

 

“உண்மை தெரியாமல் கிளம்பி வந்துட்டாங்க போல இருக்கு. அவங்களுக்கும் ஏமாற்றமா தானே இருக்கும். நம்ம ஹாஸ்பிட்டல்லயே வேலை செய்யட்டுமே” என்றாள் நேத்ரநயனி

 

இப்போது மனைவியை ஆழ்ந்து பார்த்தான். “அவளை எப்படிடா இங்கே தங்க வைக்க முடியும்? நம்ம ஆஸ்பிட்டல்ல வேலை செய்தால் சங்கடமா இருக்காதா உனக்கு?” என்றான்.

 

“எனக்கென்ன சங்கடம் இருக்க போகுது? உங்களை பத்தி தான் இப்போ  எனக்கு முழுசா தெரியுமே” என்றாள். அவள் சொன்ன விதத்தில் அவன் இதழ்கடையில் மெல்லிய புன்னகை மலர்ந்தது 

 

“நீ என்னை முழுசா தெரிஞ்சுக்கறதுக்குள்ள தான் சிவபூஜை கரடியா வந்து நிக்கறாளே” என்று மனைவிக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தான்.

 

பவிஷ்காவிற்கு நேத்ராவின் முடிவில் விருப்பமில்லை. “சித்து. எலிசாவை வேறே எதாவது மருத்துவமனைக்கு சிபாரிசு செய். நம்ம ஆஸ்பிட்டல்ல வேணாம்” என்றாள்.

 

“நாமளே, சொந்தமா மருத்துவமனை வச்சிட்டு, வேறு இடத்தில் சிபாரிசு பண்ணால் தப்பா நினைப்பாங்க பவிக்கா” என்றான் சித்தார்த் யோசனையோடு.

 

எலிசா இப்போது நேத்ராவிடம் வந்து. “சிஸ்டர், நான் என்னவோ நினைச்சு வந்தேன். இப்போ சித்துக்கு கல்யாணம் ஆனதையே என்னால ஜீரணிக்க முடியலை. இந்த நிலையில நான் வெளியே போனால் மன அழுத்தத்தில் நான் எதாவது செய்துக்குவேன். கொஞ்ச நாளைக்கு இங்கேயே தங்க அனுமதி கொடுங்க. அப்புறமா நானே தனியா வெளியே போய் தங்கிக்குவேன், ப்ளீஸ் சித்து கிட்ட சொல்லுங்க” என்றாள் நேத்ராவின் கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்சும் குரலில்.

 

நேத்ராவிடம் யாருமே இப்படி கெஞ்சியதில்லை. அவள் மனம் பாகாய் உருகி விட்டது.

 

“நீங்க கவலைபடாதீங்க. அங்கே இருக்கிற அறையில் போய் தூங்குங்க. காலையில் அவரோட மருத்துவமனைக்கு போய் வேலையில் ஜாய்ன் பண்ணிக்கோங்க” என்று கணவனை கலந்தாலோசிக்காமல் வார்த்தைகளை விட்டாள்.

 

சித்தார்த்துக்கும் பவிஷ்காவுக்கும் எலிசாவின் வரவு நல்லதாக படவில்லை. முதலில் சித்தார்த்தை தேடி திருமணம் செய்து கொள்ள வந்ததாக கூறினாள். அவனுக்கு கல்யாணம் ஆகி விட்டது தெரிந்ததும் கொஞ்ச நேரம் அழுதுவிட்டு இங்கேயே தங்க வேண்டும், ஆஸ்பிட்டலில் வேலை வேண்டும் என்கிறாளே? யுஎஸ்ஸில் இல்லாத வேலையா? அங்கே கிடைக்காதா சம்பளமா? எதற்காக இப்படி செய்கிறாள் என்று இருவருமே யோசனையுடன் எலிசாவை பார்த்திருந்தனர்.

 

நேத்ராவின் மேல் சித்தார்த்துக்கு இப்போது கோபம் வந்தது. அவன் எப்படியாவது பேசி அவளை வெளியே அனுப்பி விடலாம் என்று நினைத்திருந்தால் இவளே முடிவெடுத்து எலிசாவை இங்கேயே தங்கு என்கிறாளே. நேத்ரா அவன் முறைப்பை கவனிக்காமல் பவிஷ்காவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

“அண்ணி, இப்பவே மணி பதினொன்றை. இந்த ராத்திரில அவங்களை வெளியே எப்படி அனுப்ப முடியும். இன்னைக்கு ராத்திரி கெஸ்ட் அறையில் தங்கட்டும் எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம்” என்றாள்.

 

பவிஷ்கா தம்பியை பார்க்க அவன் பெருமூச்சுடன் மாடிப்படிகளில் ஏறி மேலே சென்று விட்டான். அவளுக்கு தம்பியின் நிலையை பார்க்கவே பாவமாக இருந்தது. நேத்ரா சொல்வது போல வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணை இந்த நடுராத்திரி வேலையில் வெளியே அனுப்பவும் முடியாது என்பதால், “நேத்ரா நான் பார்த்துக்கிறேன். நீ போய் தூங்கு” என்றாள்.

 

நேத்ரா அறைக்குள் வந்து கதவை சாத்தவும் பொரிய தொடங்கி விட்டான் சித்தார்த். “யாரை கேட்டு நீ, அந்த எலிசாவை இங்கே தங்க சொன்னே? ஆஸ்பிட்டல் நிர்வாகத்தில் நீ எப்படி முடிவெடுக்கலாம்?” என்று கத்தினான்.

 

“சசாரிங்க, எனக்கு உரிமையிருக்குனு நினைச்சு சொல்லிட்டேன்” என்றாள் தடுமாறிய குரலில். அதற்குள் அவள் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென்று அருவியாய் கொட்ட தொடங்கிவிட்டது.

 

மனைவியின் கண்ணீரை பார்த்ததும், அவள் அருகே வந்து அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். “நயனி, உனக்கு புரியுதா இல்லையா? என்ன இருந்தாலும் அவள் எனக்கு முன்னாள் காதலியா இருந்தவ. அவளை நீ எப்படி நம்ம வீட்டுக்குள் அனுமதிக்கிற? இதுல நம்ம மருத்துவமனையிலேயே வேலை செய்யட்டும்னு வாக்கு கொடுக்கிறே. இதனால் பல சங்கடங்கள் வரும்னு உனக்கு தொியாதா?” என்றான் அவளுக்கு புரியவைக்கும் நோக்கத்தில்.

 

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கனு எனக்கு புரியுது. எனக்கு ஒரு சங்கடமும் வராது. ஏன்னா என் புருஷன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒரு வேளை உங்களுக்கு அவங்க மேல இன்னும் எதாவது ஈர்ப்பு இருக்கா?” என்றாள் நேத்ரநயனி கணவனின் கண்களை நேராக பார்த்து.

 

“நிச்சயமா இல்லை” என்றான் உறுதியான குரலில்

“அப்புறம் என்ன? விட்டு தள்ளுங்க” என்றாள்.

 

ஆனால் சித்தார்த்தால் அப்படியே விட்டுவிட முடியவில்லை. மனதுக்கு என்னவோ போல் இருந்தது. நேத்ரா இப்போது கணவனின் மார்பில் சாய்ந்து நின்றாள். ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் இப்போது அவன் இல்லை.

 

“நயனி, வா தூங்கலாம். காலையில் நீ காலேஜ்க்கு வேறே போகணும் இல்ல” என்று சொன்னவன் அவளை தன் கட்டிலிலேயே படுக்க வைத்துக் கொண்டு அவளை அணைத்தபடி படுத்துக் கொண்டான்.

 

கணவனின் கை அணைப்பில் இருந்த நயனி சில நிமிடங்களிலேயே உறங்கி விட்டாள். சித்தார்த்துக்கு தான் உறக்கம் தொலைந்திருந்தது. இத்தனை நாளாக ஒரு போன் கூட செய்து அவனிடம் பேசாதிருந்த எலிசா எதற்காக இப்போது இங்கே வந்திருக்கிறாள் என்ற கேள்வியே அவன் மூளையை குடைந்து கொண்டிருந்தது.

 

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!