மறுநாள் காலையில் தன் பணி நேரத்துக்கு சரியாக ஹரி வீட்டுக்குச் சென்று இருந்தாள் அகல்யா. தன் மனதில் இருந்த ஆயிரம் சஞ்சலத்தையும் இப்போது புறம் தள்ளி வைத்து இருந்தாள்.
கவுசல்யாவிடம் பேசியது மனதுக்கு சற்று சமாதானமாக இருந்தது. எத்தனை துன்பத்தை ஹரி.. அதாவது அவளின் முதலாளி கொடுத்தாலும் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து இருந்தாள்.
அவளுக்கு வேறு வழியும் இல்லை என்பதே உண்மை. செவிலியர் சீருடையில் தான் வந்து இருந்தாள். சுமதியிடம் சென்று அவள் காலை வணக்கம் சொல்ல.
Advertisement
“அகல்யா.. தான உன் பேரு.”.. என்றவள் அவளை ஏற இறங்க பார்த்து விட்டு.. “என்ன டிரஸ் இது?. இப்படி வெளுத்துப் போன யூனிஃபார்ம் மாதிரி போட்டு வந்து இருக்க. இந்தா உன் அளவுக்கான மூணு செட் யூனிஃபார்ம். போ.. அந்த அறையில் போய் மாத்திட்டு வா. அப்புறம் மஞ்சுளா அம்மா அறைக்கு கூட்டிப் போறேன்”.. என்றாள்.
அகல்யாவும் வாங்கிக் கொண்டு அந்த உடையை மாற்றினாள். எதிரில் இருந்த அந்த ஆள் உயர கண்ணாடியில் தன்னைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி. அந்த சீருடை முழங்காலுக்கு மேல் இருந்தது. அதிலும் உடம்பை மிக இறுக்கமாக பிடித்து இருந்தது. கொஞ்சம் அசவுகரியமாகத் தான் இருந்தது.
இதைப் போட்டுக் கொண்டு எப்படி மாலையில் வெளியில் போவது?. நிச்சயம் வேறு உடை மாற்றிக் கொண்டே போக வேண்டும். சுமதியிடம் சென்றவள்.. “மேடம்.. கொஞ்சம் பெரிய அளவில் யூனிஃபார்ம் கிடைக்குமா?.. இது கொஞ்சம் டைட்டா இருக்கு.”.. என்றாள்.
Advertisement
”ஏன் அளவு சரியா தான இருக்கு. அதுவும் நீங்க நேத்து கொடுத்த அளவில் தான் யூனிஃபார்ம் தைக்கப்பட்டு இருக்கு.”.. என்றாள்.
Advertisement
”நானா??.. நான் எப்போ அளவு கொடுத்தேன்.”.. என்று அகல்யா கேட்க..
“என்ன அகல்யா.. முதல் நாளே இப்படி பேசுறீங்க. சார் உங்க கிட்ட ஸ்ட்ரிக்ட்டா இருக்கச் சொன்னது ஏன் என்று இப்ப தான் புரியுது. நீங்க தான உங்க யூனிஃபார்ம் மெசர்மென்ட்ஸ் என்று அப்ளிகேசன் கீழ எழுதி இருந்தீங்க.“. என்று கோபத்துடன் கேட்டவள் மேஜையில் இருந்த அந்த அப்பிளிகேஷனை எடுத்து காட்டினாள்.
அகல்யா எதையும் அப்படி எழுதவில்லையே என்று யோசித்தபடி பார்த்தவளுக்கு அது ஹரியின் கையெழுத்து என்று நன்றாக தெரிந்தது. நேற்று அவளைப் பார்த்துக் கொண்டே அவன் அதில் எழுதியது நினைவு வந்தது. இப்போது சுமதியிடம் என்ன சொல்ல முடியும்?
Advertisement
“ ஹரி” என்று சொன்னால் அவள் இரண்டு பேரையும் தப்பாக எண்ணக் கூடும். “சாரி மேடம் நேத்து ஏதோ அவசரத்தில் தப்பா எழுதிட்டேன்”.. என்றாள்.. வேறு வழி தெரியாமல்.
அப்போது.. “என்ன இங்க சத்தம்”.. என்றபடி உள்ளே நுழைந்து இருந்தான் ஹரி. “ஒன்னும் இல்ல சார் இந்த அகல்யா மாத்தி மாத்தி பேசுறாங்க. நேத்து இவங்க தான் அளவு எழுதி கொடுத்தாங்க.. இப்போ அளவு சரியா இல்லைன்னு சொல்றாங்க “.. என்றாள் சுமதி.
லேசாக குரலை செருமிக் கொண்டவன் “உங்க அளவைக் கூட சரியாக எழுதத் தெரியாதா?. பட் எனக்கு சரியான அளவாகத் தான் தெரியுது. தொள தொள என்று ட்ரெஸ் போடுறதுக்கு இது ஒன்னும் கிராமம் இல்லை. எல்லாரும் இங்க இப்படி தான் போடுவாங்க. உங்களுக்கு அன்கம்ஃபர்டபிள் ஆக இருந்தா உங்க டெய்லlர் கிட்ட ஆல்டர் பண்ணிக்கோங்க”.. என்றான். எதுவுமே தெரியாதது போல.
“ஒகே சார்.. நான் மஞ்சுளா அம்மா அறைக்கு நர்ஸ் அகல்யாவைக் கூட்டி போகட்டுமா”.. என்று கேட்டாள் சுமதி.
“இல்லை. தேவையில்லை. நான் பெரியம்மா அறைக்கு தான் போறேன். நானே கூட்டிப் போகிறேன். நீங்க மத்த வேலையை பாருங்க”.. என்றான்.
அவன் உள்ளே அழைத்து செல்ல.. முதல்முறையாக அந்த பெரிய வீட்டைப் பார்த்த அகல்யாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து கொண்டன. பளிங்குக் கற்களால் இழைக்கப்பட்டு.. பளிச்சென மின்னியது அந்த அழகான மாளிகை.
“என்ன அகல்யா.. தப்பு பண்ணிட்டோம்னு தோணுதா? இப்படி ஒரு மாளிகையில் மகாராணியா வாழ்கிற வாய்ப்பை அவசரப்பட்டு கோட்டை விட்டுட்டோமே என்று மனசு தவிக்குதா?”. என்று குத்தலாக கேட்டான்.
அவள் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தாள். “.என்கிட்ட எத்தனை பேர் வேலை செய்யுறாங்க தெரியுமா?.. என்கிட்ட இப்போ எத்தனை கார் இருக்கு தெரியுமா?.. “ என்று அவன் குரல் உயர..
“நான் என்ன பேசினாலும் உங்களுக்கு கோபம் தான் சார் வரும்”.. என்றாள் மெல்லிய குரலில்.
அவன் கண்கள் கோபத்தில் சிவக்க..
“ஹரி.. “ என்று அவர்கள் வந்து நின்ற அறையின் உள்ளே இருந்து ஒரு பெண் குரல் கேட்டது.
கோபத்தில் சிவந்து போனவன் சட்டென தன்னை சரி செய்து கொண்டான்.
”உள்ள வா”.. என்றவன் உள்ளே செல்ல..
அங்கு படுக்கையில் ஒரு அறுபது வயது மதிக்கத் தக்க பெண்மணி சாய்ந்து உட்கார வைக்கப்பட்டு இருந்தார்.
“குட் மார்னிங் பெரியம்மா. நல்லா தூங்குனீங்களா”.. என்று சிரித்த முகத்துடன் உள்ளே சென்றான்.
“வாப்பா ஹரி. இது யாரு”. என்று பின்னால் நின்றவளைப் பார்த்து அவர் ஆர்வமாக கேட்க..
“ஆமா.. இவங்க பேரு அகல்யா. நிர்மலாவுக்குப் பதிலா உங்களை புதுசா பார்த்துக்க வந்து இருக்க நர்ஸ்”.. என்று அறிமுகப்படுத்தினான்.
“நேத்து சொன்னியே அந்த கிராமத்துல உன் ஜூனியர் பொண்ணு. அவளா இவ?”. என்று அவர் கண்கள் அவளை ஆர்வத்துடன் ஆராய்ந்தன.
“அகல்யா.. இவங்க தான் என் பெரியம்மா மஞ்சுளா. ஒரு வருடமாக ஸ்ட்ரோக் வந்து பிசியோதெரப்பி எடுத்துக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் முயற்சி பண்ணா எழுந்து நடக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்றாங்க.”.. என்றான்.
“ஒகே சார். நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க”.. என்றாள் மஞ்சுளாவைப் பார்த்து ஒரு அழகான புன்னகை பூத்து.
“நல்ல பொண்ணா தெரியுறா.. ஏன் அகல்யா உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”.. என்று மஞ்சுளா கேட்க..
அந்த கேள்வியில் இருவருக்குமே ஒரு நிமிடம் பழைய நினைவுகள் வந்து போயின.
அகல்யாவின் கண்கள் ஒரு நொடி ஹரியின் முகத்தை நாடிச் செல்ல.. அவனும் அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான்.
மஞ்சுளாவோ அவள் கழுத்தில் ஏதாவது தெரிகிறதா என்று ஆராய்ச்சி செய்ய..
“கல்யாணம் ஆயிடுச்சு மேடம்”.. என்றாள் சோர்வாக.
மஞ்சுளா முகத்தில் ஏமாற்றம். “ம்ம்.. ஒரே ஊர்க்கார பொண்ணு , ஒண்ணா ஸ்கூல்ல படிச்ச பொண்ணு என்று சொன்னானா.. என் மனசுல என்ன என்னமோ கற்பனை ஓடிருச்சு. எத்தனை நாளைக்கு மா இப்படி கல்யாணம் பண்ணாம தனிமரமாகவே நிற்பான். ஒரு கல்யாணம் பண்ணுடா என்று கெஞ்சுகிறேன். கேட்க மாட்டேன்கிறான். உனக்கு ஹரி பிரெண்ட் தான. நீயாவது அவனுக்கு எடுத்துச் சொல்லி புரிய வை”.. என்றார்.
அந்த பேச்சு ஹரிக்கு பிடிக்கவில்லை. “பெரியம்மா.. எனக்கு பெண்கள் மேல பெருசா நம்பிக்கை இல்லை. எல்லா பெண்களும் காசு இருக்கா கார் இருக்கான்னு பார்த்திட்டு தான் லவ் பண்றாங்க. அன்பு இருக்கான்னு யாரும் யோசிக்கிறது இல்லை”.. என்று அவன் அகல்யாவை ஒரு கசந்த பார்வை பார்த்தான்.
அவள் விழிகள் லேசாக கலங்க.. யாரும் பார்க்காமல் கண்களை துடைத்துக் கொண்டாள்.
“டேய். நானும் ஒரு பொண்ணு தான். என்னையும் சேர்த்து தான் சொல்லுவியா”. என்று மஞ்சுளா அதட்ட..
“பெரியம்மா.. நான் உங்களைச் சொல்லலை. புரிய வேண்டியவர்களுக்கு புரிஞ்சி இருக்கும். சரி.. எனக்கு லேட் ஆயிடுச்சு. நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. சும்மா பேசிட்டே இருக்காதீங்க”. என்று சென்று விட்டான்.
அவன் சென்றதும் தான் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது அகல்யாவுக்கு. ஆனால் அவனே தேவலாம் என்பது போல எண்ண வைத்து இருந்தார் மஞ்சுளா.
“எனக்கு ட்ரெயினிங் மாதிரி கொடுக்க நர்ஸ் நிர்மலா வருவாங்க என்று சொன்னார்களே”.. என்று அகல்யா மஞ்சுளாவிடம் கேட்க.
“அவள் வர ஒரு மணி நேரம் ஆகும்”.. என்றார்.
அகல்யாவோ நிர்மலா வருவதற்குள் மஞ்சுளாவின் மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் படித்துப் பார்த்து விட வேண்டும் என்று அதை படிக்கப் போக..
“அகல்யா.. இங்க வா. இப்படி என் பக்கத்துல ஒரு சேர் போட்டு உட்கார். உன்கிட்ட நிறைய பேசணும்”.. என்றார்.
“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். அவள் வர நேரம் ஆகும். நீ வா”.. என்று அதிகாரமாக கூப்பிட..
அகல்யாவும் வேறு வழி இல்லாமல்.. ஒரு சேரை அவர் அருகில் போட்டு அமர்ந்து கொண்டாள்.
மஞ்சுளாவும் ஆர்வமாக.. “அகல்யா.. உனக்கும் ஹரிக்கும் எத்தனை வருட வித்தியாசம் இருக்கும். அவன் ஸ்கூல் படிக்கும் போது எப்படி இருப்பான்.” என்று கேட்க.
“ ரெண்டு வருட வித்தியாசம் இருக்கும் மேடம்”.. என்றாள்.
“ரெண்டு வருடமா?.. அப்புறம் எப்படி உனக்கும் அவனுக்கும் பழக்கம் ஆச்சு”.. என்றவர் கண்கள் அவள் பதிலுக்காக. ஆர்வத்துடன் காத்திருக்க..
அகல்யாவுக்கோ அய்யோடா என்று இருந்தது. “இல்ல.. ஹரி நல்லா இங்கிலீஷ் பேசுவார். அதான் நானும் என் தங்கச்சியும் அவர்கிட்ட கொஞ்ச நாள் டியூஷன் எடுத்துக் கிட்டோம். அதை வச்சு தான் பழக்கம். “.. என்றாள் எப்படியோ சமாளித்து.
“ஓ.. அப்ப உனக்கு ஹரி பத்தி நல்லா தெரிஞ்சு இருக்கும். அவன் ஸ்கூல்ல படிக்கும் போது எப்படி? யாரையாச்சும் லவ் பண்ணானா?”.. என்று அவர் ஆர்வமாக கேட்க.
அகல்யாவுக்கு தூக்கிவாரிப் போட்டு விட்டது. அவள் அதற்கு என்ன பதில் சொல்வாள்? அவள் தவிப்புடன் அமர்ந்து இருக்க.. நர்ஸ் நிர்மலா உள்ளே நுழைந்து இருந்தாள்.
“குட் மார்னிங் மேடம்”.. என்று அவள் சொல்ல.
“ச்ச.. முக்கியமான நேரத்துல கரடி மாதிரி வந்துட்டா. நாம அப்புறம் பேசலாம்” என்று அவள் மட்டும் கேட்கும் குரலில் சொன்னாள் மஞ்சுளா.
“ ம்ம்”.. என்று எழுந்து கொண்டவளுக்கு அப்பாடா என்று இருந்தது.
“ஹாய் அகல்யா.. வெல்கம் டூ பெங்களூர்.”.. என்று இன்முகத்துடன் வரவேற்றாள்.
“தாங்க்ஸ் நிர்மலா சிஸ்டர்.”
“எதுக்கு சிஸ்டர்?. நிர்மலா மட்டும் போதும். ஒகே நான் இன்னும் நாலு நாட்கள் மட்டும் தான் வருவேன் அகல்யா. அதுக்குள்ள உங்களுக்கு எல்லாமே சொல்லி கொடுத்து விடுவேன். ஆனா உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் எனக்கு நீங்க எப்போ வேணாலும் ஃபோன் போட்டு கூப்பிடலாம்.
“ம்ம்.. ஒகே நிர்மலா”.. என்றவளை அங்கு ஏற்கனவே வரைந்து தொங்க விடப்பட்டு இருந்த வரைபடம் அருகில் அழைத்துக் கொண்டு சென்றவள்.. “இது தான் நீ ஃபாலோ பண்ண வேண்டிய அட்டவணை அகல்யா. இதுல எந்த தப்பும் நடக்காம பார்த்துக்கணும்”.. என்றாள்.
அகல்யாவும் கவனமாக கேட்டுக் கொண்டாள். “அப்புறம் அகல்யா.. மஞ்சுளா அம்மா சும்மா பேசிட்டே இருப்பாங்க. அது ஒகே தான். ஆனா ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காம பார்த்துக்கோ.”
மஞ்சுளா தூங்கியதும், “ஒகே நிர்மலா. உங்களுக்கு எப்போ திருமணம்”.. என்று இரு பெண்களும் தனியாக வந்து பேசத் துவங்கி இருந்தார்கள்.
“இன்னும் இருபது நாள் தான் இருக்கு அகல்யா. அப்புறம் நீங்க பெங்களூருக்கு புதுசு என்று சொன்னீங்களே.. வீடு எல்லாம் பார்த்தாச்சா?”.. என்றாள்.
“இல்ல நிர்மலா இரண்டு நாளா ஹோட்டல்ல தங்கி இருக்கேன். இங்க தங்கும் வசதி கொடுப்பதா விளம்பரத்துல போட்டு இருந்தாங்க. இனிமே தான் சுமதி கிட்ட அதைப் பத்தி விசாரிக்கணும்.”.. என்றாள் அகல்யா யோசனையாக.
“ஆமா இங்க கொடுப்பாங்க. ஆனா அது ஹாஸ்டல் மாதிரி. பெண்களுக்கு தனியா ஆண்களுக்கு தனியா இருக்கு. நீங்க மட்டும் தான்னா அங்க தங்க வசதியாகத் தான் இருக்கும்.” என்றாள்.
“இல்ல நிர்மலா. என் பையனை ஊரில் இருந்து கூட்டி வரணும். ஒரு ஒன் பெட் ரூம் அபார்ட்மெண்ட் மாதிரி பார்க்கணும்.”
“ஓ அப்படியா. நீங்க அதுவும் பண்ணலாம். அப்போ வாடகை கூட இங்க இருந்து வாங்கிக்கலாம். நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் ஒண்ணு சொல்லட்டுமா.?”
“இல்ல, சொல்லுங்க நிர்மலா”
“எங்க வீடு இங்க இருந்து ரொம்ப பக்கம் தான். நானும் எங்க அம்மாவும் அதில் தங்கி இருந்தோம். நான் வீட்டை காலி பண்ணப் போறேன். நீங்க வேணா அங்க மாறிக் கொள்ளலாம்”. என்றாள் நிர்மலா.
எங்கு போய் வீடு தேடுவதோ என்று தவித்தவளுக்கு அது ஆறுதலாக இருந்தது. “எனக்கு ஒகே தான் நிர்மலா. பக்கத்துல நல்ல ஸ்கூல் எதுவும் இருக்கா?”. என்று அகல்யா கேட்க.
“ஆமா இருக்கு. இங்க ஒரு நல்ல கான்வென்ட் இருக்கு. உங்க பையனுக்கு எத்தனை வயசு?”..
“ஆறு வயசு”.. என்றவள் ஆசையாக தன் போனில் இருந்த அந்த சிறுவன் படத்தை காண்பித்தாள்.
“சோ கியூட்.!!.”. என்றாள் நிர்மலா.
அகல்யா முகத்திலும் அதுவரை இல்லாத ஒரு பரவசம் பரவுவதை நிர்மலாவால் உணர முடிந்தது.
“இந்த ஹேண்ட்சம் பாய் பெயர் என்ன?“.. என்றாள் நிர்மலாவும் ஆசையாக பார்த்து.
“தருண்”
“சூப்பர்.. அப்போ தருண் செல்லம் இப்போ அவங்க அப்பாவோட இருக்காரா?”.. என்று நிர்மலா கேட்டுவிட அகல்யா முகம் தான் நொடிப் பொழுதில் வாடிப் போனது.
“இல்ல.. தருண் அப்பா இப்ப எங்க கூட இல்ல” என்றாள்.
நிர்மலாவுக்கு சங்கடமாகப் போய் விட்டது.
“சாரி அகல்யா”.. என்று நிர்மலா சொல்லும் போதே ஹரி உள்ளே வந்து இருந்தான்.
இருவரும் அவனைப் பார்த்ததும் எழுந்து கொள்ள.
மஞ்சுளா தூங்குவதைப் பார்த்தவன்.. இரண்டு பேரும் என் ஆபிஸ் ரூமுக்கு வாங்க என்றான் அதட்டலாக.
“அய்யோ சார் கிட்ட நல்லா திட்டு கிடைக்கப் போவுது. மஞ்சுளா அம்மா எவ்வளவு இனிமையோ அதற்கு எதிர்ப்பதம் தான் ஹரி சார். நாம உட்கார்ந்து கதை பேசுறதை வேற பார்த்துட்டார்”.. என்று நிர்மலா குரலில் அத்தனை நடுக்கம்.
அகல்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவள் வேலையை விட்டே நின்று விட்டாள். ஆனாலும் இப்படி பயந்து நடுங்குகிறாளே. அப்போ உன்னுடைய நிலைமை என்று அகல்யா மனதுக்குள்ளும் கிலி உண்டானது.
அவன் அலுவல் அறைக்குள் இருவரும் செல்ல. “உங்க சொந்தக் கதை சோகக் கதை பேசுறதுக்கு ஒன்னும் நான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கலை ஞாபகம் இருக்கட்டும். இரண்டு பெண்கள் இருந்தா இப்படி தான் வெட்டியா கதை பேசத் தோணும். நீங்க இன்னைக்கே உங்க ஹேன்ட்ஓவர் ட்ரெயினிங் எல்லாம் முடிச்சிட்டு நின்னுக்கோங்க நிர்மலா.
சுமதிகிட்ட உங்க செட்டில்மென்ட், சம்பளம் பாக்கி எல்லாம் வாங்கிகிட்டு நீங்க கிளம்பலாம். அப்புறம் அகல்யா.. எங்க பெரியம்மா பெட் சுத்தமா இருக்கணும். அவங்களையும் குளிப்பாட்டி சுத்தமா வச்சு இருக்கணும். ஒரு தப்பு பண்ணாலும்.. நான் சகிச்சிக்க மாட்டேன்.
இருபத்தி நாலு மணி நேரமும் அங்க இருக்க சிசிடிவி என் கண் பார்வையில் இருக்கும். ஜாக்கிரதை”.. என்றான் மிரட்டும் தொனியில்.
அகல்யாவும்.. “சரி சார். நான் பார்த்துக்கிறேன்”.. என்றாள்.
அன்று மாலை நாலு மணிக்கு நிர்மலா பணி முடித்து சென்று விட. அகல்யா வேலை முடிய மாலை ஆறு மணி ஆகி இருந்தது. வீடு பற்றி சுமதியிடம் விசாரித்த போது “சார் இன்னைக்கு அஞ்சு மணிக்கு மேல வீட்டுக்கு வந்து விடுவாங்க. நீயே சார் கிட்ட இதை பத்தி கேட்டுக்கோ”.. என்று முடித்து விட்டாள்.
வீட்டுக்கு எதாவது முடிவு செய்தால் தான் தருணை இங்கு அழைத்து வர முடியும். அவன் வேறு அவளைத் தேடுகிறான். அதனால் வேலை முடிந்ததும் ஹரியை சந்தித்துப் பேசி விட முடிவு எடுத்து இருந்தாள்.
ஆனால் அவனை எப்படி சந்திப்பது என்பது தான் குழப்பமாக இருந்தது. அந்த பெரிய வீட்டில் அவன் எங்கு இருப்பானோ என்று தவிப்புடன் யோசித்து நிற்க.. சமையல் செய்யும் மணி.. “என்னம்மா இன்னும் வீட்டுக்கு போகலையா?” ஏதோ யோசனையா நிக்கிறீங்க” என்றான்.
“இல்ல மணி.. ஹரி சாரை பார்த்து பேசணும். சார் எப்போ கீழே வருவாங்க?”.. என்றாள்.
“அவ்வளவு தான.. நான் சாருக்கு தான் காஃபி கொடுக்கப் போறேன். அவர்கிட்டே கேட்டுச் சொல்றேன்”.. என்றவன் கையில் இருந்த காபி கப்புடன் மாடிக்குச் சென்றான்.
உடனேயே கீழே வந்தவன்.. “அம்மா.. அய்யா உங்களை மாடிக்கு வரச் சொன்னாங்க”.. என்றான்.
அகல்யாவுக்குத் தான் தயக்கமாக இருந்தது. வேண்டாம் நாளை பேசிக் கொள்கிறேன் என்று சொன்னால் மணி ஒரு மாதிரியாக நினைப்பான். ஹரியும் தப்பாக நினைப்பான். என்று மெல்ல படியேறிச் சென்றவள்.. அவன் கதவைத் தட்ட..
“கம் இன்”.. என்ற குரலில் உள்ளே நுழைந்து இருந்தாள். ஹரி அப்போது தான் ஜிம்முக்கு சென்று வந்து இருப்பான் போல.. அந்த பனியனையும் மீறி அவன் தசைமிக்க கோள்கள் தெரிய வேர்த்துப் போய் இருந்தான்.
“என்ன விஷயம்”.. என்றான்.
“ஹவுஸ் அலவன்ஸ், அப்புறம் டெபாசிட் நீங்களே கொடுப்பீங்களா என்று கேட்க வந்தேன். அதே போல எனக்கு அவசரத் தேவை. கொஞ்சம் லோனும் கொடுத்தா உதவியா இருக்கும்”.. என்றாள் தன் உதட்டை கடித்த படி.
“ம்ம்.. டெபாசிட், ஹவுஸ் அலவன்ஸ் ஒகே. பட் லோன் நீங்க பார்க்கிற வேலைக்கு ஜாஸ்தி ஆச்சே. அதுவும் முதல் நாளே என்ன தைரியத்தில் கேட்கிற”.. என்றான் துண்டால் தன் வியர்வையை துடைத்தபடி.
அவள் தலை குனிந்தே நிற்க.. அவள் அருகில் வந்தவன் “ஓ.. என்னை பழைய ஹரி என்று நினைச்சிட்ட போல. நீ கேட்டதும் உனக்கு எல்லாத்தையும் தூக்கி கொடுத்துடுவேன் என்று நினைச்சியா?? என்கிட்ட எல்லாத்துக்கும் ஒரு ரேட் இருக்கு. நீ கேட்ட மாதிரி லோன் தரேன் ஆனா அதுக்கு தினம் ஒரு மணி நேரம்..” என்று அவன் அவளையே பார்க்க..
அகல்யா இதயாமோ நிதானம் இல்லாமல் துடித்தது.
அவள் தவிப்பை உள்ளுக்குள் ரசித்த ஹரி அவளுக்கு வெகு அருகில் வந்து நின்று இருந்தான். “என்ன.. உன்னை என் படுக்கைக்கு கூப்பிடுவேன் என்று நினைச்சியா?.. நீ அதுக்கு தகுதி இல்லாதவள்” என்று சொல்ல.. அகல்யா முதலில் நிம்மதி கொண்டாலும் சோர்ந்து தான் போனாள்.
“எனக்கு மசாஜ் பண்ணனும். தினம் இந்த ஒரு மணி நேரம் எனக்கு உடம்பு ஃபுல்லா மசாஜ் பண்ணி விடணும். நீ ஒத்துகிட்டா நீ கேட்ட லோன் நாளைக்கே கிடைக்கும்”.. என்றான்.
அவள் யோசிக்கவே இல்லை. “சரி சார் நாளையில் இருந்து..”.. என்று அவள் முடிக்க வில்லை.
“ஏன் இன்னைக்கு நல்ல நாள் இல்லையா?”.. என்று அவன் குத்தலாக பேச..
“என் ஸ்பா ரூமுக்கு வா”.. என்று அவன் அழைக்க.. அவளும் அவன் பின்னால் சென்றாள். இங்கேயே உட்கார். இதோ வரேன் என்று உள்ளே சென்றவன் திரும்பி வந்த கோலத்தை பார்த்த அகல்யாவுக்கு தான் தலை சுற்றி கொண்டு வந்தது.
தொடரும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே.அன்புடன் லக்ஷ்மி.