Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 13.2

 

றுச்சாமியின் இல்லத்தில் அனைவரும் இரவு உணவை முடித்துக்கொண்டு எழ,

 

“அப்பா நாளைக்கு நான் வெளியூர் போகோணும்ங்” என்று மெல்ல ஆரம்பித்தாள் அரசி.



Advertisement

 

“எதுக்கு” என்றார் துண்டால் தன் கையைத் துடைத்தபடி,

 

Advertisement

“என்ர வேலை விசயமாங்” என்றாள்.

Advertisement

 

“அதெல்லாம் ஒரு வாரம் கழிச்சு போய்க்கலாம்” என்றுவிட்டு செல்ல,

 

Advertisement

“இல்லைங்ப்பா நாளைக்கே போகோணும்ங்” என்றாள் வேகமாய். திரும்பி அவளை ஆழமாய் பார்த்தவர் தன் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு செல்ல, செல்லும் அவரையே பார்த்திருந்தாள் அரசி.

 

“இப்படி கடைசி நேரத்துல தான் வந்து சொல்லுறதா. இதெல்லாம் அப்பாகிட்ட மொதல்லையே சொல்லுறது இல்லையா” என தமிழும் சொல்ல,

 

“நான் என்ன பண்ணுறது கடைசி நிமிசத்துல தான் எனக்கு வேலை வருது” என்றுவிட்டு அவள் அறைக்குச் சென்றுகொண்டாள் அரசி.

 

அதிகாலை ஐந்து மணி முப்பது மணித்துளிகள்!

 

பிரம்பு நாற்காலியில் விரைப்பாய் வீற்றிருந்தார் ஆறுச்சாமி. அவரையே பார்த்தபடி அவர் முன் நின்றிருந்தாள் அரசி.

 

“அப்பா கிட்ட பேசு” என அரசியின் பின்னால் இருந்து சாவி கொடுத்தாள் அருந்தமிழ்.

 

“அப்பா…” என அரசி ஓரடி முன்னால் எடுத்து வைக்க,

 

அவரோ அவளையும் அவள் கையிலிருந்த லக்கேஜுகளையும் மாறி மாறி பார்த்துவிட்டு பின் எதுவும் பேசாது பார்வையை திருப்பிக் கொள்ள, அரசியின் பார்வை இப்போது அப்பத்தாளிடம் சென்றது. அவரோ தன் மகனிற்கு மேல் முகத்தை திருப்பிக் கொண்டார்.

 

“எப்படி போறான்னு கேளுங் ம்மா” என்றார் ஆறுச்சாமி தன் அன்னையிடம்.

 

“இங்கிருந்து கோயமுத்தூர் வரைக்கும் பஸ்சுங். அப்பறம் அங்கிருந்து ட்ரெய்ன்லைங் ஆத்தா” என்றாள் அவளும் அப்பத்தாளிடம்.

 

நாயகி விடு தூது சென்றுகொண்டிருக்க, தந்தையையும் தமக்கையையும் மாறி மாறி பார்த்திருந்தாள் அருந்தமிழ் தேவி.

 

“பஸ்செல்லாம் வேண்டாம். கோயமுத்தூர் வரைக்கும் நம்ம மணியன் கொண்டுபோய் விடட்டும்” என்றவர்,

 

“போய்ட்டு திரும்பி எப்ப வருவாளாமா?” என்று ஆரம்பித்தார். இப்போதும் தன் அன்னையிடம் தான்.

 

“ரெண்டு நாள்ல வந்திருவனுங் ஆத்தா”

 

“எங்க தங்குவாளாமா?” என்று கேட்டதற்கு அரசி அமைதியாய் இருக்க,

 

“அட உன்ர அப்பன் தான் கேக்குறானல்லோ. வாய்ல என்ன கொழக்கட்டையா வெச்சிருக்க. வாயத்தொறந்து பதில் சொல்லு கண்ணு” என்று நாயகி சொன்னதும்,

 

“என்ரகூட படிச்ச ப்ரென்ட் வீடு அங்க தான் இருக்குது. அவ வீட்டுலையே தங்கிக்குவேன். அவங்க அப்பா ஸ்டேசனுக்கே வந்து பத்தரமா என்னைய கூட்டிட்டு போய்க்குவாரு. எந்த பிரச்னையும் இல்ல. நான் போய்ட்டு போன் பண்ணுறேன் போதுங்களா” என்றாள் தெளிவாய்.

 

அப்போதும் பெற்றவருக்கு மனம் ஒப்பவில்லை.

 

“அந்த புள்ள பேரு, போன் நம்பர், விலாசம் எல்லாம் கொடுத்துட்டு போக சொல்லுங் ம்மா” என, அரசி தன் தோழியின் கைபேசி எண்ணை குறித்துக் கொடுக்க, அதன்பின்னரே அவளை அனுப்பி வைத்தனர்.

 

[the_ad id=”6605″]

 

 

இத்தனை விசயங்களை பார்த்துப் பார்த்து செய்கிறார்களே, தான் ஊரிலில்லாத நேரத்தில் அவர்கள் எண்ணங்கள் எப்படி இருந்திருக்கும் எப்படி எல்லாம் அவர்கள் மனம் துடித்திருக்கும் என்று நினைக்கையில் பெரிதாய் வலித்தது அரசிக்கு.

 

மணியனை அழைத்து அரசியின் லக்கேஜுகளை எடுத்து வண்டியில் வைக்குமாறு கூறிய நாயகி,

 

“என்ர தங்க மயிலு தனியாப் போகுதே. பாத்து சூதானமா போய்ட்டு வா சாமி. நீ வார வரைக்கும் எனக்கு பொக்குனுதேன் இருக்கும்” என்றார் சின்னப் பேத்தியின் கையை பிடித்துக் கொண்டு.

 

“அப்பத்தா! இன்னும் கொழந்தைய கொஞ்சுறதோட்டம் கொஞ்சிட்டு இருக்காதீங்க. இவடத்திக்கு இருக்குற சென்னைக்கு தானே போறேன். அதெல்லாம் வேலைய முடிச்சிட்டு சட்டுன்னு வந்திருவேன். கவலைப்படாம நான் வாங்கிக் கொடுத்த ஹெட் போன்ல பாட்டு கேட்டுட்டு இருங்க” என,

 

“அதான் பெரியமனுசி சொல்லுறால்லோ. இன்னும் ஏன் அவடத்திக்கே நின்னுகிட்டு இருக்குறீங்க, உள்ளார வாங்க ரெண்டு பேரும்” என்று ஆறுச்சாமி குரல் கொடுக்க, அவரை நோக்கியும் கையை ஆட்டினாள் அரசி. உடனே அவர் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக்கொள்ள, சிரிப்பு தான் வந்தது அவளுக்கு.

 

“எங்க இருக்கைன்னு அடிக்கடி மெசேஜ் பண்ணு. ட்ரைன் அங்க ரீச் ஆனதும் போன் பண்ணு. உன் ப்ரென்ட் கிட்ட நானும் ஒருவாட்டி பேசிடறேன். பாத்து பத்திரமா போய்ட்டு வா” என்று அருந்தமிழ் ஆயிரம் பத்திரம் கூறவும், பெரிதாய் தலையசைத்து புன்னகைத்துவிட்டு மணியனோடு கிளம்பிக் கொண்டாள்.

 

சில நொடிகளில் கார் தெருமுனையைத் தாண்டும் போது அரசி காரிலிருந்து தலையைத் திருப்பி எட்டிப் பார்க்க, அருந்தமிழ் மற்றும் நாயகியோடு ஆறுச்சாமியும் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருப்பது கண்டு அவள் இதழ்கள் அழகாய் விரிந்தது.

 

மணி ஆறைத் தொட்டிருக்க, வானம் வண்ணம் கொள்ள ஆரம்பித்த வேளையில், சேற்று வயலில் வெண்நாரைகள் தன் ஒற்றைக் கால் தவத்தை துவங்கியிருந்தன. பச்சை பசேலென்ற வயல்வெளி கண்களுக்கு விருந்து படைக்க, அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள் அரசி.

 

வழியில் நிறுத்தியிருந்த புல்லெட் அவள் பார்வையில் படும் வரை சீரான இசையை வெளிபடுத்திய இதயமானது இப்போது ஏற்ற இறக்கங்களோடு ஆட்டம் போட,

 

“வண்டியை நிறுத்துங்க” என்றிருந்தாள்.

 

மறுநொடியே பிரேக்கை அழுத்தியிருந்த மணியன் பின்னால் திரும்பிப் பார்த்து,

 

“என்னாச்சுங் அம்மணி எதையாவது மறந்துபோட்டு வந்துட்டீங்களா?” என்று கேட்க,

 

“அதெல்லாம் இல்லங் ண்ணா. நீங்க இங்கயே கொஞ்சம் நேரம் இருங்க நான் சாமி கும்பிட்டிட்டு வந்துர்றேன். அப்பறம் கெளம்பலாம்” என்று சொல்ல,

 

“அதுக்கென்னங் அம்மணி. நீங்க போய்ட்டு வாங்க” என்றுவிட்டு கார் கதவைத் திறந்து வெளியே வந்து அதன் மீது சாய்ந்து நின்றுகொண்டார்.

 

காரிலிருந்து வெளியேறிய அரசி வயலுக்கு நடுவே எழுப்பப்பட்டிருந்த  அச்சிறிய கோவிலை நோக்கி நடந்து வந்தாள்.

 

அவள் வந்தது கூடத் தெரியாமல் கண்மூடி கைக்கூப்பி நின்றிருந்தான் விக்ரம பாண்டியன்.

 

அவனுக்கு நேர் எதிரில் நின்றிருந்தவள் அவனையே பார்த்திருக்க, மெல்ல கண்களைத் திறந்தவன் விழிகள் இரண்டும் அரசியை அந்நேரத்தில் அங்கு எதிர்பார்க்காது வியப்பில் விரிய,

 

“என்னங் மச்சா ஆள் வந்தது கூட தெரியாத அளவுக்கு அப்படி என்ன பலமா வேண்டுனீங்க?” என்று அரசி புருவம் உயர்த்த, சுற்றிலும் பார்த்தவன் தூரத்தில் காரருகே மணியன் இருப்பது கண்டு அவரோடு வந்திருக்கிறாள் என்றறிந்து கொண்டு,

 

“அவசியம் தெரியோணுமோ?” என்று கேட்டு சிறு இடைவெளி கொடுத்து

 

[the_ad id=”6605″]

 

 

“நீ மறுபடியும் எங்காவது தூரமா போய்டோணும்னு வேண்டுனேன்” என்றான்.

 

அவனையே ஆழமாய் பார்த்தவள் சிறு புன்னைகயுடன்,

 

“பரவாயில்லையே இந்த சாமி ரொம்ப சக்தி வாய்ந்த சாமியா தான் இருக்கு. இவ்வளவு சீக்கிரம் உங்க வேண்டுதலை நெறவேத்தி வெச்சிருச்சே” என,

 

“என்ன சொல்லுற?” என்று புரியாது பார்க்க,

 

“தூரமா தான் போகப் போறேன்ங் மச்சா. இனி உங்களை எப்போ பாக்கப் போறேன்னு வேற தெரியலை. அத்தை கிட்ட நீங்களே சொல்லிருங்க, அவங்களை நேர்ல பாத்து சொல்லிட்டு போகக் கூட எனக்கு நேரமில்ல. சரி அப்போ போய்ட்டு வர்றேன்ங் மச்சா” என்றுவிட்டு அவன் முகத்தை ஒருமுறை நன்றாக பார்த்துவிட்டு திரும்பி நடந்தவள் சில நொடிகளில் காரிலும் ஏறிக்கொள்ள, மணியனும் வண்டியைக் கிளப்பினார்.

 

விக்ரமனது பார்வை தன்னையே தொடர்வதை உணர்ந்தவள் வண்டி நகரும் வரை அவள் பார்வையை அவன் புறம் திருப்பவில்லை.

 

சிறிது தூரம் கடந்திருக்க மணியனுக்கு கைபேசி அழைப்பு வர, அவர் அப்படியே ஏற்கச்செல்ல,

 

“அண்ணா! வண்டியை ஓரமா நிறுத்திட்டு அப்பறம் பேசுங்க” என்றாள் அரசி.

 

உடனே அவரும் வண்டியை கொஞ்சம் முன்னால் நகர்த்தி ஓரமாய் நிறுத்தினார். அதற்குள் அழைப்பு தவறிப்போய் மீண்டும் வந்தது. இம்முறை அவர் அழைப்பை ஏற்று,

 

“சொல்லுங் தம்பி” என்றவுடன் அரசியின் கவனம் மணியனின் புறம்.

 

“….”

 

“அம்மணி பட்டணத்துக்கு போறாங்க..”

 

“….”

 

“எப்போ வருவாங்கனு தெரியலைங் தம்பி. அநேகமா ரெண்டு நாள்ல வந்திருவாங்”

 

“….”

 

“சரிங் தம்பி வெச்சிடுறேன்” என்று அழைப்பை துண்டித்துக் கொள்ள

 

“போன்ல யாருங் ண்ணா?” என்று அவரிடம் கேட்க,

 

“நம்ம விக்ரமன் தம்பி தானுங் அம்மணி. உங்கள சூதானமா கூட்டிட்டு போக சொன்னாருங். எதாவதுனா உங்களை அவருக்கு கூப்புட சொன்னாருங்” என்று சொல்ல, புன்னகையுடன் தலையசைத்து விக்ரமனின் எண்ணை அவரிடம் இருந்து வாங்கிக்கொண்டு தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

 

[the_ad id=”6605″]

 

 

இருக்கையில் சாய்ந்து சிறிது நேரம் கண்மூடி அமர, அவளது பேச்சைக் கேட்ட பின் விக்ரமனின் முகம் போன போக்கை நினைத்தவளுக்கு உடனே சிரிப்பு வந்து தொலைக்க,

 

‘தூரமா போகோணும்னு வேண்டுற ஆளை பாரு’ என்று எண்ணி தன் உதட்டை கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

 

 

வாசம் வீசும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!