Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 25 ( PART 01 )

 

செந்தாமரை வீட்டில் இல்லாதது குறித்து, வெற்றிச்செல்வன் எதுவும் கேட்பானோ என்று… மறுநாள் பரபரப்புடன் கிளம்பிக்கொண்டிருக்கும் பேரனின் முகத்தை முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி அம்மாள்.

 



Advertisement

ம்ம் ஹ்ம்ம் அழுத்தக்காரன். வாயே திறக்கவில்லை! அதோடு கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்திலும் அவன் இல்லையே! அவன்தான் தெளிவுற அறிவானே தன் மனையாள் எங்கே என்று!

 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ராஜேஸ்வரி அம்மாவுக்குப் பொறுமை பறந்திருந்தது. அத்தனை ஆசையாய் வந்த பெண்ணை வந்தவுடனேயே துரத்தி விட்டானே என்னும் கோபம் வேறு!

Advertisement

 

Advertisement

அந்த கோபத்தை வார்த்தையில் வெளிப்படுத்தாமல் வெகு கவனமாக, “நேத்து சாயங்காலம் செந்தாமரை வந்தா…” எனப் பேரனைப் பார்த்தும், பார்க்காமலும் கூறினார்.

 

“ஹ்ம்ம்…” என்றவன் உணவில் தான் கவனமாயிருந்தான்.

Advertisement

 

‘என்ன பதில் இது?’ என்று ராஜேஸ்வரி அம்மாள் மனதில் முணுமுணுத்துக் கொண்டாரே தவிர வாய் வார்த்தையாக எரிச்சலை வெளிப்படுத்தவில்லை. கூடவே வேறொரு எண்ணமும் பளிச்சென்று தோன்றியது. ‘இந்நேரத்துல எங்க கிளம்பிட்டான்? ஒருவேளை பொண்டாட்டியைத் தேடித்தான் போகிறான் போல!’ என்னும் நப்பாசையில் அதை அவனிடமே கேட்டும் வைத்தார். எங்கே போகிறான் என்று!

 

“முக்கியமான விஷயமா புருஷோத்தமன் மாமா வீடு வரைக்கும் போக வேண்டியதிருக்கு அப்பத்தா…” என்றவனுக்கு இன்னமும் உணவில் கவனம் குறையவில்லை.

 

கேட்ட மூத்தவளுக்குத் தான் எரிச்சலாக வந்தது. ‘இவனுக்கெல்லாம் என்னத்துக்கு கல்யாணம்’ என்று கடுகடுப்புடன் எண்ணியவர், மேற்கொண்டு எதுவும் பேசாமல் சமையலறைக்குள் புகுந்து கொண்டார். அந்த மகராசி தான் கணவனிடம் தன்னைப்பற்றி எதுவும் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறாளே! என்னவோ பேத்தியின் பேச்சைத் தட்டவும் முடியவில்லை. அதற்காக எப்படியோ அவள் விருப்பம் போல இருக்கட்டும் என ஒதுங்கி நிற்கவும் முடியவில்லை. சற்றே தவிப்பான மனநிலை!

 

[the_ad id=”6605″]

 

 

 

வெற்றிச்செல்வன், “அப்பத்தா கிளம்பறேன்…” என்று கூறியவன், உள்ளிருந்து வெளி வந்தவரிடம் தலையை மட்டும் அசைத்து விட்டு, வாயிலை நோக்கிச் சென்றிருந்தான். பெருமூச்சை வெளியிட்ட மூத்தவள், பேத்தியிடம் பேசிவிட்டு, ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு கைப்பேசியை வைத்தார்.

 

‘என்ன பிள்ளைகளோ! எப்படித்தான் இப்படி விட்டு விலகி இருக்க முடிகிறதோ!’ என அங்கலாய்க்காமல் இருக்க முடியவில்லை அவருக்கு!

 

வெற்றிச்செல்வன் புருஷோத்தமன் வீட்டிற்கு வருவதாக, அன்று காலையிலேயே அவருக்குத் தகவல் சொல்லி விட்டான். தம்பதியர்கள் இதை ஏற்கனவே எதிர்பார்த்துத் தான் இருந்திருப்பார்கள் போலும்! புருஷோத்தமன் இயல்பாகத் தான் இருந்தார். ஆனால், நிர்மலா தேவிக்கு அப்படி இல்லை. கணவனின் முகத்தை அடிக்கடி தயக்கமாகப் பார்க்க, ‘இது உன் பாடு!’ என்றிருந்தது அவரது பதில் பார்வை!

 

நிர்மலா தேவி அம்மாவிற்குச் சற்று பதற்றம்! குற்றம் செய்த மனமல்லவா! என்ன தான் ‘தவறுக்கேற்ற தண்டனை!’ என சுயசமாதானம் செய்து கொண்டாலும், இது சட்டத்தை கையில் எடுக்கும் செயல் தானே!

 

ஆம், சிம்லா அணி தற்போது இயங்கிக் கொண்டிருப்பது இவரின் பொறுப்பினில் தான்! முன்பு பரமேஸ்வரன் நடத்திக் கொண்டிருந்தார். அவர் மறைவுக்குப் பின் இவர் பொறுப்பில் இயங்குகிறது.

 

உண்மையில் இது இவர்கள் இருவரது முயற்சியால் தொடங்கப்பட்ட விஷயம்! இது போன்ற இயக்கத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் நிர்மலா தேவியினுடது தான்! பரமேஸ்வரன் ஆரம்பத்தில் வெகுவாக தயங்கியவர், பின்பு கிடைத்த கசப்பான அனுபவங்களால்… துணிந்து விட்டார்! அவர் பயிற்சியளித்த வீரர்களின் உதவியோடு சிறிய அளவில் தொடங்கிய விஷயம், அந்த வீரர்களின் ஈடுபாட்டால், நினைத்ததை விட நன்றாகவே செயல்பட்டது.

 

திடீரென பரமேஸ்வரனது மறைவு, கூட்டத்தை நிலைகுலையச் செய்ய, இப்பொழுது மெல்ல மெல்ல மீண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இனி யார் இல்லாவிட்டாலும், தெளிவாக இயங்க வேண்டும் என்ற தீர்மானம் நிர்மலா தேவியின் சொல்லிற்கிணங்க முன்பே எடுக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே பரமேஸ்வரன் கூறி சென்றது தான்… ஆனாலும், அவரின் திடீர் இழப்பை யாராலும் கடந்து வர முடியவில்லையாதலால் ஏற்பட்ட தடுமாற்றம் சில மாதங்கள் இருக்கத்தான் செய்தது!

 

இந்த அமைப்பைத் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்தே புருஷோத்தமனுக்கு அதில் துளியும் ஈடுபாடு இல்லை. அவர் ஒரு கலெக்டர். அரசின் உயரிய பதவியில் இருப்பவர். அதிலிருந்து கொண்டு சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட அவரால் முடியவில்லை.

 

ஆனால், ‘நம் பெண்ணுங்களுக்கான இழப்பு… அதற்கெல்லாம் நியாயம் வேண்டாமா? உங்கள் சட்டம் தான் எத்தனை போராடி கேட்டும் யாரையும் மீட்டுத் தரவும் இல்லை; யாருக்கு நடந்த கொடுமைகளுக்கும் தண்டனை வாங்கித் தரவும் இல்லையே! இன்னமும் என்ன எதிர்பார்ப்பது உங்கள் சட்டத்திடம்!’ என்று நிர்மலா தேவி அடுக்கிய குற்றச்சாட்டுகளுக்கு புருஷோத்தமனிடம் எந்த பதிலும் இல்லை!

 

[the_ad id=”6605″]

 

 

 

மனைவி சொல்வதும் நிஜம் தானே! அவள் நடத்தும் ஆதரவற்ற பெண்களுக்கான விடுதியில் தான்… எத்தனை பெண்கள்? எத்தனை இன்னல்கள்? யாருக்குமே நியாயம் வாங்கித்தர முடியவில்லை. ஏன் அங்கு வளரும் நிராதரவான பெண்பிள்ளைகளை எத்தனை பேர் ஏமாற்றி இருக்கிறார்கள்? சமீபத்தில் கூட ஒரு பெண்ணை சேலம் சந்தன பாண்டி கடத்தி, தன் தேவையைத் தீர்த்துக் கொண்டு கசக்கித் தூக்கி எரிந்திருந்தானே! அவளைத்தான் மீட்க முடிந்ததா? இல்லை அந்த பெண்ணின் மரணத்திற்குத் தான் நியாயம் செய்ய முடிந்ததா!

 

எதுவுமே முடியவில்லை. இந்த பதவி, அந்தஸ்து, பணம் எதை வைத்தும் சாதிக்க முடியவில்லை. ஏனென்றால், எதிர்த்தரப்பிடமும் அனைத்தும் இருந்ததே!

 

அனைத்தும் தெளிவாகப் புரியும் என்பதால், இவர்களின் திட்டத்திற்கு வலுவாக எதிர்க்கவும் முடியவில்லை. அதேசமயம், ‘என்னை எதிர்பார்க்காதீர்கள்’ என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார்.

 

சந்தன பாண்டியிடம் மாட்டிக்கொண்ட பெண்ணை மீட்கத்தான் பரமேஸ்வரன் சேலம் வந்த ஆரம்பத்தில் மறைமுகமாகப் போராடியது. அதில் தோற்றுப் போகவும் தான், நிர்மலா தேவியின் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார். இல்லாவிட்டால் அவருக்கும் அரசுக்கு எதிராகச் செயல்படுவதில் விருப்பம் இருக்காது!

 

ஆனால், அந்த சிறு பெண்ணை மீட்க முடியாமல், போராடித் தோற்ற பரமேஸ்வரன்… இந்த அமைப்பைத் தொடங்க ஒப்புக் கொண்டார். அதுவே நிர்மலா தேவிக்கு போதுமானதாக இருந்தது. நிர்மலா தேவிக்கு உதவிக்கும், வழி நடத்தவும் யாரேனும் வேண்டும்! எண்ணம் அவருடையதாயினும் செயல்படுத்த யாருடைய உதவியேனும் வேண்டும்! அது அவளுடைய பரமேஸ்வரன் அண்ணாவாக இருந்ததில் அவருக்கு நிம்மதியும், ஆசுவாசமும்!

 

அதன்பிறகு, பரமேஸ்வரன், நிர்மலா தேவி பொறுப்பில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டு, இப்பொழுது இந்தளவில் வளர்ந்திருக்கிறது.

 

திட்டம் நன்முறையில் செயல்படத்தொடங்கி, ஒரு அமைப்பை வெற்றிகரமாக உருவாக்கி… வேலைகளைத் தொடங்கியிருந்த சமயம்… இங்கு மாரியப்பன் தொடர்பான வேலைகளையும் முடித்து, அவனைச் சிறையில் தள்ளி… பரமேஸ்வரன் பதவிக்கு வந்திருந்தார்.

 

பரமேஸ்வரன் மாரியப்பன் செய்த குளறுபடிகளை எல்லாம் சரி செய்து, ஊரின் பிரச்சனைகளை ஒருபுறம் தீர்த்தபடியும், மற்றொரு புறம் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டும் இருந்த சமயம்… சந்தன பாண்டி மீண்டும் ஒரு பெண்ணை கடத்தியிருக்க, அப்பொழுது தான் பரமேஸ்வரன் அவனை நேரடியாக எதிர்த்து… அது அவரை மரணம் வரை இழுத்துச் சென்று விட்டது.

 

வெற்றிச்செல்வன் இங்கு வருவது, சந்தன பாண்டியால் கடத்தி கொலை செய்யப்பட்ட பெண்களின் விவரங்களைச் சேகரித்து… தன் திட்டத்திற்கு எதுவும் உதவுமா என்று தெரிந்து கொள்ள… ஒருவேளை தந்தை இவர்களிடம் கூட தனக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொடுத்து வைத்திருக்கலாம் என்னும் எண்ணத்தில்!

 

ஆனால் நிர்மலா தேவி பயம் கொள்வது… வெற்றிச்செல்வன் எதையோ கண்டுபிடித்து விட்டான் என்பதாக! ஏனென்றால் சமீபத்தில் அவனைச் சிம்லாவில் பார்த்ததாகக் கூட்டத்தின் சீனியர் லெவலில் இருப்பவன் ஒருவன் கூறியிருக்கிறான்.

 

ஆகவே, வெற்றி எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்! விசாரிக்கலாம் என்னும் பயம் அவருக்கு!

 

அந்த சீனியர் உறுப்பினன் தான் வெற்றிக்கும், செந்தாமரைக்கும் இடையே சண்டை உருவாகக் காரணமாக இருந்த காவல்துறையைச் சேர்ந்த ஒருவன் என்பது நமக்கான கூடுதல் தகவல்! அவனைத்தான் செந்தாமரை திருமணத்தில் பார்த்து குழப்பிக் கொண்டது! அவள் சிம்லாவில் பார்த்ததும் அவனையே!

[the_ad id=”6605″]

 

 

 

“சிம்லாவுக்கு சுத்திப்பார்க்க கூட போயிருக்கலாம்… நீயா ஏன் குழப்பிக்கிற?” மனைவியின் தோற்றம் பரிதாபமாக இருக்க, புருஷோத்தமன் ஆறுதலாகக் கூறினார்.

 

“இல்லைங்க… நம்ம பசங்க கிட்ட என்ன சொல்லியும் கேட்காம, வெற்றிங்க ஊருல வேலை செஞ்ச டீச்சர், வெற்றி அந்தியூருல போய் ஒரு பையன் செஞ்ச தப்பைத் தட்டி கேட்டானே அவனை… எல்லாம் தூக்கிட்டானுங்க… அதான்…” எனத் தயங்கியவரின் முகம் வெகுவாக கலங்கியிருந்தது.

 

“அதுதானே உனக்கும் வேணும்!”

 

“ம்ப்ச்… ஏங்க, நீங்க வேற? இப்ப வெற்றி எதுவும் கண்டுபிடிச்சா…”

 

“உதவி கேட்டுப் பாரு…”

 

“ஆமா, ஆமா, செஞ்சுட்டு தான் மறுவேலையைப் பார்ப்பான். இந்தளவு சட்டத்துக்கு எதிரா, கண்டிப்பா அவன் துணை நிக்க மாட்டான். ஏன் நீங்களே ஒதுங்கிக்கலை?

 

இந்த வெற்றிக்கு காவலுக்கு வேற யாரையும் வெச்சு இருக்கணும்ங்க… நம்ம பசங்களையே வெச்சு… இப்ப பாருங்க, எப்படா தப்பு செஞ்ச பசங்க கிடைப்பானுங்க தூக்கலாம்ன்னு இருக்கவனுங்க… வெற்றி எதுக்கு அவனுங்களை அடிச்சான்னு தெரிஞ்சதும், தூக்கிட்டானுங்க… எல்லாமே அடாவடிங்க…” புலம்பித் தள்ளினார்.

 

நிர்மலாவின் இரக்கக் குணமும், தொண்டு செய்யும் எண்ணமும் மற்றவர்கள் பார்வை தன்மேல் விழவேண்டும் என்பதற்காகவோ, தன்னை மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காகவோ எப்போதுமே இருந்ததில்லை. அது அவரது இயல்பிலேயே நிறைந்த குணம். அதில் புருஷோத்தமனுக்கு எப்பொழுதுமே ஒரு லயிப்பும், ஈர்ப்பும் இருக்கும். தங்கள் குழந்தைகளோடு, அவள் பேணி காக்கும் பிள்ளைகளையும்… நம்ம பசங்க… நம்ம பிள்ளைங்க… என்ற அடைமொழியோடு மனைவி சொல்லும்போது பூரித்துப் போய் விடுவார். எப்படி இந்த பெண்ணால் மட்டும் இப்படி இருக்க முடிகிறது என்று வியக்காமல் இருந்ததில்லை. அதனாலேயே அவள் மிகவும் மனம் வருந்தி, இது போன்ற அமைப்பைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டபோது அவரால் வலுவாக எதிர்க்க முடிந்ததில்லை! ‘நியாயமான கோபம்’ என்று பலமுறை தோன்றியிருக்கிறது. ஆனால், அதை அவர் வெளியில் சொன்னதில்லை!

 

தற்பொழுது மனைவியின் புலம்பலில் சிரிப்பு தான் வந்தது புருஷோத்தமனுக்கு. “என்னால எப்படி இந்த விஷயத்துக்கு துணை நிற்க முடியும்? பரமேஸ்வரன் நின்னதே ரொம்ப பெரிய விஷயம்…” என தன்னிலை விளக்கம் தந்தார்.

 

“அதெல்லாம் இல்லை அண்ணன் புரிஞ்சுக்கிட்டாரு… அதான் கூட நின்னாரு” என்று முறுக்கிக் கொண்டார்.

 

“புரியுது தேவிம்மா… எனக்கு புரியலைன்னு நான் சொல்லலையே! ஆனா, கண்டிப்பா சட்டத்தை கையில எடுத்து தண்டனை தரது இந்த பிரச்சனைக்கு தீர்வு இல்லை” என புருஷோத்தமன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வெற்றி வாசல் கதவில் மணியை அழுத்தி இருந்தான். அவனை எழுந்து வரவேற்றவர், மனைவி வெற்றியைக் கவனிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்து சங்கடமாக உணர்ந்தார்.

 

“அவனுங்களுக்கென்னங்க… ரொம்ப சுலபமா ஒரு பெண்ணை ஏமாத்தி, கொலை செஞ்சுட்டோ, தற்கொலைக்குத் தூண்டி விட்டுட்டோ, இல்லை ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கேள்வி குறியாக்கிட்டோ சுலபமா கடந்து போயிடறானுங்க… ஆனா, அந்த பொண்ணுக்கு வாழ்க்கை? அந்த பொண்ணை அழிச்சதால அந்த குடும்பத்தோட நிலைமை?

 

உங்களால இது போன்ற விஷயங்களை ஒரு செய்தியா பார்க்க முடியலாம். இல்லை சில நிமிஷ பரிதாபம் கூட வரலாம். அதுக்கப்பறம் நீங்களும் கடந்து போயிடுவீங்க… ஆனா, அந்த பொண்ணுங்க வாழ்க்கையில, அவங்களை இழந்த அந்த குடும்பத்தோட வாழ்க்கையில எவ்வளவு ரணம் இருக்கும்?

 

அதுல கொஞ்சம் கூட தப்பு செஞ்சவங்க அனுபவிக்காட்டி எப்படிங்க? யார் நம்மை என்ன செய்ய முடியும்ன்னு தைரியம் தானே தப்பு செய்யத் தூண்டியது, அந்த ஆணவத்தை அழிக்கணும்ன்னு நினைச்சேன். அவனுங்களால பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவனுங்களை சக்கையா பிழிஞ்சு, வேலை வாங்கி அந்த பணத்துல நிவாரணம் தரணும் நினைச்சேன்.

 

இது சட்டத்துக்கு எதிரான செயல் தான்! ஆனா, சட்டம் சரியா இல்லையே! இருந்திருந்தா நான் ஏன் இப்படி யோசிக்கப் போறேன்? நான் மட்டும் இல்லை… என்னை மாதிரி பல பேர், தங்களோட மனசுக்குள்ள இப்படிப் பல தண்டனைகளை யோசிச்சுட்டு தான் இருப்பாங்க… என்ன யாருக்கும் செயல்படுத்த வாய்ப்பு கிடைக்கிறதில்லை!

 

ஒரு பெண்ணை அழிச்சவனை, மக்கள் முன்ன நிறுத்தி… ‘நீங்க என்ன வேணும்ன்னாலும் இவனுக்குத் தண்டனை தரலாம்ன்னு’ சொல்லிப்பாருங்க… எல்லாரோட ஆதங்கமும் எப்படி வெளில வருதுன்னு தெரியும்…” மனதின் பாரத்தை அவ்வப்பொழுது ஆவேசமாய் இறக்குவது தான்… ஆனால், வெற்றி வந்து விட்டான் என்பதைக் கூட கவனிக்காமல் பேசிக்கொண்டே இருக்கும் மனைவியைக் கட்டுப்படுத்த முடியாமல் புருஷோத்தமன் பரிதாபமாக நின்றிருந்தார்.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!