Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 26 ( PART 01 )

 

உயிர்ப்பே இல்லாமல் வலம் வரும் மருமகளைப் பார்க்க மஞ்சுளாவிற்குப் பாவமாக இருந்தது.

 



Advertisement

“உங்க அண்ணி என்ன சொல்லறாங்க டா?” மருமகளை மாற்றவோ, தேற்றவோ முடியாத ஆதங்கத்தில், மகன் முத்துவிடம் கடிந்து கொண்டாள்.

 

“ஏன் உங்க அருமை மருமகளைக் கேட்க வேண்டியது தானே! நான் தான் உங்களுக்கு வம்பு வளர்க்க கிடைச்சேனா?” என்று எரிந்து விழுந்தான் இளையவன். அவனும் என்ன செய்வான், என்ன கேட்டாலும் ஒன்றும் இல்லை என்று மழுப்பி விட்டு, மீண்டும் சோர்ந்து போய் தானே செந்தாமரை இருக்கிறாள். இந்த அழகில் வெற்றியிடமும் இவளைப்பற்றி எதுவும் பேசக்கூடாதாம்! இவள் இங்கு இருக்கிறாள் என்று அவனிடம் சொல்லவும் கூடாதாம்! கட்டளைகள் வேறு!

Advertisement

 

Advertisement

செந்தாமரையை சீர்படுத்தும் வழி தெரியாமல் முத்து மிகவும் நொந்து போனான். பொறுப்பற்ற அண்ணன் மீது கோபம் கோபமாய் வந்தது. முத்துவிற்கும், மஞ்சுளாவிற்கும் வெற்றியின் செய்கை பழக்கம் தான்! இந்த அண்ணி பாவம், புதிதாக அனுபவிக்கிறார்கள் என்று அவளுக்காகப் பரிதாபமும் பட்டான்.

 

ஆனாலும் பொறுப்பாய் அண்ணியிடம் அண்ணனின் பெருமைகளைப் பாடினான். இந்த நேரத்தில் அவனைப் பற்றிக் குறை கூறினால், அவர்களுக்குள்ளான ஊடல் தானே அதிகமாகும். ஆக, அண்ணனுக்குத் தெரியாத சமாதான பேச்சு வார்த்தையைத் தம்பி முயற்சித்தான். அண்ணன் நல்லவன், வல்லவன், நான்கும் தெரிந்தவன், பொறுப்பானவன்… என்ன கொஞ்சம் கோபம் அதிகம் வரும்! வேலையில் மூழ்கி விட்டால், சுற்றம் மறந்து போகும்! இப்படி அவ்வப்பொழுது அண்ணியிடம் அடுக்கித் தள்ளினான்.

Advertisement

 

செந்தாமரை எந்த எதிர்வினையும் காட்ட மாட்டாள். அவளுக்கும் இதெல்லாம் நன்றாகவே தெரியுமே! முத்து மூச்சுப் பிடிக்கப் பேசியதற்காகப் பெயரளவில் சிரித்து வைப்பாள்.

 

கலக்கம், பயம், பரிதவிப்பு, கோபம் என அவளது மனநிலை மாறிக் கொண்டே இருந்தது. ஆசை ஆசையாய் கரம் பிடித்தவன், முகத்தில் விழிக்காதே! என்று கூறலாமா? திருமண பந்தம் அத்தனை எளிதாகப் போய் விட்டதா இவனுக்கு! அவளால் அந்த விஷயத்தை மட்டும் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அதனால் என்ன முயன்றும் அவளால் உற்சாகமாக இருப்பது போல நடிக்கக்கூட முடியவில்லை.

 

அதுபோன்ற ஒரு சோர்வான தினத்தில் தான், அவளது ஆருயிர்த்தோழி ரேகா அழைத்திருந்தாள்.

 

“எப்படி இருக்கடி?” என்று வழக்கமான விசாரிப்புகளுடன் தொடங்கிய பேச்சு, சிறிது நேரம் நீண்டு கொண்டே இருந்தது.

 

“நீ மறுவீடு வந்தப்ப, எல்லாரும் ஒன்னு கூடி கூத்தடிச்சீங்களாம்… நான் தான் வர முடியாம போச்சு…” ரேகா சோர்வாகச் சொல்ல,

 

“விடு சீக்கிரமா எல்லாரும் ஏதாவது பிளான் போட்டு மீட் பண்ணலாம்” என ஆறுதல் கூறினாள் செந்தாமரை.

 

“நானே, உன்கிட்ட பேசணும்ன்னு இருந்தேன் தாமரை… அன்னைக்கு உன் கல்யாணத்துக்கு வந்த போலீஸ்காரரை உனக்கு ஞாபகம் இருக்கா?” என ரேகா கேட்டாள்.

 

ரேகா கேட்கவும் தான் அவளுக்குச் சட்டென்று மின்னல் வெட்டியது. அவர்… அவர்… அவரும் சேர்ந்து தானே அன்று பரமேஸ்வரன் ஐயாவுடன் இணைந்து, எங்களை கடத்தியவர்களிடம் இருந்து எங்களைக் காப்பாற்றியவர். எப்பேர்ப்பட்ட ஆபத்திலிருந்து காப்பாற்றிய மனிதரை மறந்து தொலைத்திருக்கிறேனே! தன்னைத்தானே நொந்து கொண்டாள்.

 

[the_ad id=”6605″]

 

 

“என்ன தாமரை பேச்சையே காணோம்?”

 

“ஹ்ம்ம்… இருக்கு இருக்குடி…” அவசரமாகப் பதில் கூறினாள்.

 

“அவரு உன்கிட்ட கல்யாணத்தப்ப நல்லா பேசுனாரே? உன் கல்யாணத்துக்கு முன்னாடி அவரை வேற எங்கேயும் பார்த்தியா என்ன?”

 

“இல்லைடி… கல்யாணத்துல தான் அவரை பார்த்தேன்… அதுக்கு முன்ன பார்க்கலை…”

 

“ஓ சரி சரிடி… நான் அவரை ஒரே ஒருமுறை மட்டும் பார்த்தேன். போலீஸ் டிரஸ்ல இருந்தாரு. நம்ம ஊருல தான் வேலை செய்யறாரு போல… உன்கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன் மறந்துட்டேன். மறுபடியும் அவரை உன் கல்யாணத்துல தான் பார்த்தேன்… நல்ல மனுஷங்க என்னடி? அவங்க இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்?” சோர்வாகச் சொன்னவளிடம்,

 

“ஆமாம் ரேகா!” என்று பதிலளித்த செந்தாமரைக்கு என்னவோ உறுத்தியது. மனம் படபடத்தது. அவர் வெற்றிக்காக திருமணத்திற்கு வரவில்லையே! பரமேஸ்வரன் மாமாவிற்காக தானே வந்திருப்பார்.

 

“சரி அவங்க எப்படி உன் கல்யாணத்துக்கு வந்தாங்க…”

 

“என் கல்யாணத்துக்கு இல்லை… பரமேஸ்வரன் மாமாவோட மகன் கல்யாணத்துக்கு…” தோழி சொன்னதைத் திருத்தினாள்.

 

“பரமேஸ்வரன் மாமா யாருடி?” சட்டென்று புரியாமல் ரேகா கேட்க,

 

“காலேஜ்’ல அவரு ஸ்பீச் ஒரு நாள் தான் கொடுத்தாரு. அதை நீ மறந்திருக்கலாம். ஆனா, உன்கிட்ட அவரைப் பத்தி நான் எத்தனை நாள் ஸ்பீச் கொடுத்திருப்பேன்… அப்பவும் நீ மறக்கலாமா?”

 

“ஆமா… உன்னோட சைட்டு…” என்று தொடங்கியவளை, “ஏய்….” எனச் செந்தாமரை அதட்டினாள்.

 

“சரி அதென்ன புதுசா ஐயான்னு சொல்லாம, மாமான்னு சொல்லற… உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுடி…” ரேகா போலியாய் எச்சரிக்க, தன் துக்கம் மறந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு செந்தாமரை கலகலவென சிரித்தாள்.

 

“எனக்குக் கல்யாணம் ஆனதால தான் அவரு மாமா…”

 

“என்னடி உளறுற?”

 

“ஆமாம் நான் தான் உளறுறேன்… சரியான டூயூப் லைட்டுடி நீ… பரமேஸ்வரன் மாமாவோட மகன் கல்யாணத்துக்கு அப்படின்னு சொன்னா… அப்ப அவரு மகன் தானே எனக்கு மாப்பிள்ளை… அப்பறம் ஐயா, மாமா ஆகாம இருப்பாரா…” எனச் செந்தாமரை விளக்கம் சொல்ல,

 

“அடிப்பாவி அப்ப நீ அவரோட மகனைத் தான் கரெக்ட் பண்ணிட்டியா?” என வாயைப் பிளந்தாள் ரேகா.

 

“பிசாசு… பிசாசு… ஏன்டி மானத்தை வாங்கற…” எனச் செந்தாமரை தன் தலையிலேயே அடித்துக் கொள்ள… ரேகா அவளை வளைத்து வளைத்து கேலி செய்தாள்.

 

“ஏன் தாமரை, உனக்கு இந்த விஷயம் தெரியுமா?”

 

“எந்த விஷயம்டி?”

 

“நம்மளை அன்னைக்கு கடத்த டிரை பண்ணுனாங்களே…”

 

“ம்ப்ச்… இப்ப அவனுங்களை பத்தி நமக்கென்ன?” செந்தாமரை அசுவாரஸ்யமாகத் தட்டிக் கழித்தாள்.

 

“அட கேளுடி.. அவனுங்களை ஒரு வருஷத்துக்கும் மேல காணோம்…”

 

சட்டென்று செந்தாமரைக்குள்… அந்த ஆசிரியர் முகமும், சுந்தரேசன் முகமும் தோன்றி மறைந்தது. ஏன் அவள் சிந்தனை எதை எதையோ முடிச்சு போடுகிறதோ அவளுக்கே தெரியவில்லை. “நீ என்ன சொல்லற ரேகா… காணோம்ன்னா…” உமிழ்நீர் தொண்டைக்குழியில் இறங்க மறுக்க, பதற்றமாகக் கேட்டாள்.

 

“ஆமாம்டி முதல்ல ஒருத்தன் காணாம போனானாம்! அவன் ஏதோ கடன் தொல்லையினால ஓடிட்டான்னு பேசிக்கிட்டாங்க… அப்பறம் இன்னொருத்தனும் கொஞ்ச நாளுல காணாம போயிட்டான். இவனையும் அப்படித்தான் என்னவோ சொல்லிக்கிட்டாங்க… கடன் வாங்கிட்டு ஓடறவனுங்க ஒண்ணாவே ஓட வேண்டியது தானே…” ரேகா சொல்லிக்கொண்டே இருக்க, செந்தாமரை மனம் கல்லெறிந்த குளமாய் கலங்கத் தொடங்கியது.

 

“அதுவும் சரிதான்… ரெண்டு பேரும் ஒண்ணா ஓடிப்போயிட்டா, ஊரு உலகம் என்ன பேசும்…” என்று ரேகா கலகலவென சிரித்தாள்.

 

செந்தாமரை சிரிக்கவில்லை. “உனக்கு எப்படித் தெரியும்டி?” உணர்வுகளை மறைத்த குரலில் கேட்டாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

செந்தாமரையின் தொனி மாறியது புரியாமல் ரேகா தொடர்ந்தாள். “நம்ம கிளாஸ் ரஞ்சித் இருக்கான் இல்ல… அவனுக்குக் கல்யாணம் போல… அந்த பக்கி இவனுங்களை இன்வைட் பண்ண தேடினப்ப இந்த நியூஸ் கிடைச்சிருக்கு. அந்த ஓட்டை வாயி எனக்குப் பத்திரிகை கொடுக்க வந்தப்ப ஒளறிடுச்சு…”

 

“ஓ…” என்றவளுக்கு ஏதேதோ எண்ணங்கள். ஆனால், அந்த எண்ணங்கள் வெற்றிச்செல்வனை குற்றம் சுமத்தி கைகாட்ட முரண்டியது. இவர்களுக்கும் அவனுக்கும் தான் சம்பந்தமே இல்லையே! தவறு செய்து விட்டோம்! மனம் வேகமாக இடித்துரைக்க, தொண்டையிலிருந்து அடிவயிறு வரை ஒரு நடுக்கம். மூச்சுக்குழலுக்குள் சென்ற மூச்சுக்காற்று நுரையீரலைத் தீண்டாமல் வெளியேறி அவளது நடுக்கத்தையும், பதற்றத்தையும் மென்மேலும் அதிகரித்தது.

 

சந்தேகம்! எத்தனை கொடிய விஷம்? ஒழுக்கத்தைச் சந்தேகம் கொண்டால் மட்டும் தான் தவறா? குணத்தை, இயல்பைச் சந்தேகம் கொள்வது மட்டும் சரியா? என்ன காரியம் செய்து வைத்திருக்கிறாள்?

 

கணவன் சொல்வதைக் காது கொடுத்துக் கூட கேளாமல், அவன்மீது குற்றம் சுமத்தி, அவனது ஆத்திரத்தைக் கிளறி… நினைத்த பொழுதே செந்தாமரைக்கு நெஞ்சம் பதறியது! அவன் கொலையே செய்திருந்தாலும், என்ற சூழலில் செய்தானோ! எதற்குச் செய்தானோ! என்று அவன்புற நியாயம் தெரிந்து கொண்டு அவனுக்குப் பக்கபலமாக அல்லவா அவள் இருந்திருக்க வேண்டும்! காதலுக்கு அவள் செய்யும் மரியாதை அது தானே!

 

அப்படியிருக்கையில், அவனுக்குச் சம்பந்தம் இல்லாத விஷயத்தில், அவனைக் குற்றவாளியாக்கி… ஐயோ என்ன செய்து வைத்திருக்கிறேன்! அவளது மனம் அரற்றியது! இனி கணவனின் முகத்தில் விழிக்கும் தகுதியும் தனக்கு இருக்கிறதா? அதைத்தானே அவனும் சொல்லி அனுப்பி விட்டான். ஆனாலும், அவன் எப்படி அப்படி ஒருவார்த்தையைச் சொல்லலாம்? தன்புற தவறு புரிந்த பின்பும், கணவனது அந்த வார்த்தைகள் அவளை வெகுவாக வாட்டியது.

 

‘ஏன் வெற்றி அப்படிச் சொன்ன? நான் தான் புரியாம பேசறேன்னா… நீ ஏன் அப்படிச் சொன்ன?’ மனதிற்குள் அழுதாள்.

 

“என்னடி ‘ஓ…’ நானென்ன கதையா சொல்லறேன் உனக்கு?” என்று ரேகா கேட்டிருந்த கேள்வி அவளுக்குச் செவியில் விழவில்லை. அதன்பிறகு ரேகா சிக்னல் சரியா கிடைக்கவில்லையோ என்று நினைத்துக் கொண்டு, “ஹலோ… ஹலோ… என்னடி சத்தத்தையே காணோம். லைன்ல இருக்கியா?” எனக் கத்திக் கொண்டிருந்ததும் அவள் காதில் விழவில்லை.

 

மனம், சிந்தனைகள்… முழுவதும் மன்னவனிடம் தான்! செந்தாமரைக்குக் கண்கள் கலங்கி விட்டது! வெற்றியின் வார்த்தைகள், அவள் செவிகளில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டது. அவள் சுமத்திய குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய் என்ற நினைவு அவளை மேலும் வதைத்தது. தோழியிடம் பேசத் தொடங்கிய பொழுது ஒழிந்திருந்த அவளுடைய துக்கங்கள், கவலைகள் எல்லாம் மீண்டும் வந்து நடு மனதில் நாட்டாமை செய்வது போல அமர்ந்து கொண்டு அவளை இம்சித்தது.

 

கத்தி கத்தி பார்த்த ரேகா, ‘சரி பிறகு பேசிக் கொள்வோம்!’ என்று அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

 

கட்டிலில் குப்புற விழுந்த செந்தாமரை மனதின் குழப்பங்களும், பாரங்களும் தாங்காமல் கதறிக் கதறி அழத் தொடங்கினாள். முத்து கல்லூரி கிளம்பியிருக்க, மஞ்சுளா பின்னால் இருந்த தோட்டத்தில் இருந்தபடியால் இவள் அழுவதற்கு இன்னும் வசதியாகப் போய்விட்டது.

 

 

[the_ad id=”6605″]

 

 

‘போ… நான் உன் முகத்துல முழிக்க மாட்டேன்! அதுதானே உனக்கு வேணும்…’ மனதிற்குள் வீம்பு செய்தவளுக்கு, நல்லவேளை நாம் நினைத்துப் பயந்தது போல எதுவும் இல்லை என்று மனதில் ஒரு ஆசுவாசம்! நம் கணவன் நாம் நினைத்து, பயந்தது போல எதையும் செய்யவில்லை என்ற எண்ணம் நிம்மதியைத் தந்தது.

 

அவளது தனிமையை, தனிமையில் உருகி உருகிக் கவலைப்படக் கிடைத்த வாய்ப்பை… வாயிலில் ஒலித்த அழைப்பு மணி கலைத்தது. ‘இந்த நேரத்துல யாரு?’ எனச் சோர்வாக எழுந்தவள், தன்னை சீர்ப்படுத்திக் கொண்டு, முகத்தைத் துடைத்து விட்டு… வாயில் கதவின் லென்சில் பார்க்க, ஸ்தம்பித்து நின்றாள்.

 

யார் இவளை தன் கண்முன்னாலேயே இருக்காதே என்று கூறினானோ அவன் தான் வாசலில் நின்றிருந்தான். சிறிது நேரம் காத்திருந்து விட்டபடியால் மீண்டும் மீண்டும் அழைப்பு மணியை அடித்தான்.

 

அழைப்பு மணி ஓயாது அடிக்கவும், தோட்டத்து வேலையை விட்டுவிட்டு மஞ்சுளா உள்ளே வந்திருந்தார். கதவின் அருகே மிரட்சியாய் நின்றிருந்த மருமகளைப் பார்த்து, “யாரு டா?” எனக் கேட்க,

 

உயிர் பெற்ற சிலை போல விழித்தவள், தன்னுணர்வு வந்து… “அத்தை.. அத்தை… அது…” எனத் திணறினாள்.

 

அவளை வினோதமாகப் பார்த்தபடி, “என்ன ஆச்சு டா? யாரு வந்திருக்கா? கதவைத் திற…” என மஞ்சுளா சொல்ல,

 

“அத்தை… அவரு… அவருதான் வந்திருக்காரு. நான் இங்க இருக்கிறேன்னு சொல்ல வேணாம் அத்தை. பிளீஸ்… நான் போயி ரூமுக்குள்ள ஒளிஞ்சுக்கிறேன்…” படபடவென கூறியவள், அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட விருந்தினர் அறைக்குச் சென்று தாளிட்டுக் கொண்டாள். மீண்டும் பஞ்சாப் வந்தபிறகு, அவள் வெற்றியின் அறையை பயன்படுத்த மறுத்து விட்டாள். அந்த வீட்டில் இருந்த விருந்தினர் அறையைத் தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறாள்.

 

‘ஏன் இப்படி இருக்காளோ? இவன் என்னத்த செஞ்சு வெச்சானோ? ரெண்டும் ரொம்ப வீம்பு பண்ணுதுங்க… அழுத்தமோ அழுத்தம்!” என்று பெருமூச்சை விட்டபடி, மஞ்சுளா வாயில் கதவை திறக்க,

 

“இத்தனை நேரமா மா…” எனக் கத்திக் கொண்டே உள்ளே வந்தான் வெற்றி.

 

“வாப்பா… நல்லா இருக்கியா? அம்மாவைப் பார்த்தா, நலம் விசாரிக்கணும். அதை விட்டுட்டு திட்டிட்டே வர…” என மஞ்சுளா கேட்டபடியே அவனுக்கு அருந்த நீர் கொண்டு வந்து தந்தார்.

 

“அலைச்சல் மா… சேலம்ல இருந்து பஞ்சாப் வந்திருக்கேன்…” என மகன் கூற,

 

‘ஆமா, இவன் பொண்டாட்டி இங்க இருந்து போன கையோட திரும்பி வந்திருக்கா… அவளுக்கு இல்லாத அலைச்சல் இவனுக்கு வந்துடுச்சு’ மனதில் மகனை வறுத்தெடுத்தவர், வெளியில் முறைத்து மட்டும் நின்றார்.

 

“ஏன் மா முறைக்கறீங்க?” அன்னையை ஆராய்ச்சியாக வெற்றி கேட்க, “ஒன்னும் இல்லையே! சரி என்ன சாப்பிடற?”

 

“வர வழியிலேயே சாப்பிட்டேன் மா…”

 

“சரி போயி ரெஸ்ட் எடு…” அவனை மாடியறைக்கு அனுப்பி வைத்து விட்டு மஞ்சுளா திரும்ப, தாமரை ஒரு பையை எடுத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தாள்.

 

“என்ன தாமரை இது?” மாமியாராய் முதன்முறை அதட்டினார். பின்னே, இவர்கள் இருவரும் செய்யும் கூத்தை எத்தனை நாட்கள் தான் வேடிக்கை பார்ப்பது?

 

“அத்தை பிளீஸ்… பிளீஸ்… உங்க மகன் போற வரைக்கும் சிமிர்தி வீட்டுல இருக்கேன். அங்க அங்கிள் மிலிட்டரி சர்வீஸ்ல தான இருக்காங்க, அம்மாவும், பொண்ணும் மட்டும் தான… பிளீஸ் அத்தை…”

 

கெஞ்சுபவளைப் பார்த்து முறைத்தவள், “சும்மாவே நீ இங்க இத்தனை நாள் தனியா இருக்க, என்ன ஆச்சு புதுசா கல்யாணம் ஆனவங்கன்னு எல்லாரும் கேட்கிறாங்க. அதுவும் நீ ஊருக்கு போன கையோட வந்ததும் இல்லாம… வந்ததுல இருந்து ரூமுக்குள்ளேயே அடைஞ்சு வேற இருக்க… இந்த லட்சணத்துல அவன் இங்க இருக்கான்னு நீ இன்னொருத்தங்க வீட்டுக்கு போவியா?” கண்டிப்புடன் கேட்க,

 

“அத்தை என்னால அவரை பார்க்க முடியாது…” என்றவளின் கண்கள் நீரைக் கொட்டியது.

 

“அச்சோ… சின்ன குழந்தை மாதிரி அழுதா ஆச்சா? இப்ப என்ன உனக்கு அவனைப் பார்க்கக் கூடாது. அவ்வளவு தான? அவன் கண்ணுல விழாம உன்னை கவனிச்சுக்க வேண்டியது என் பொறுப்பு. நீ இந்த ரூமுக்குள்ளேயே இரு. உன்னை யாரு வேணாம் சொன்னாங்க…” என குழந்தைக்குச் சொல்வது போலச் சொல்லி அறைக்குள் அனுப்பி வைத்தார்.

 

இரண்டு நாட்களுக்கு மேல் கண்ணாமூச்சி ஆட்டம் தொடரவில்லை! கள்ளன் அவனுக்கு மனைவி தன் வீட்டில் இருப்பது கூடவா தெரியாது! வெற்றிக்கு நன்கு தெரியும், ஆனாலும் அவர்கள் விளையாட்டில் பொறுப்பாய் அவர்கள் விருப்பம் போல நடந்து கொண்டான்.

 

பூனை கண்ணை மூடினால், உலகம் இருண்டு விடுவது போல! குழந்தை தன் முகத்தை மூடிக் கொண்டு என்னைக் கண்டு பிடியுங்கள் என விளையாடுவதைப் போல! மாமியாரும், மருமகளும் விளையாடிக் கொண்டிருக்க, வெற்றி ஒத்துழைப்பு தந்தான். முத்து இந்த காட்சிகளைக் காண சகியாமல் தலையிலேயே அடித்துக் கொண்டான்.

 

மூன்றாம் நாள் முத்துவுக்கு விடுமுறை தினம், வெற்றி அம்மாவையும், தம்பியையும் வெளியே கிளப்பினான். வரவே மாட்டேன் என்று சொன்ன மஞ்சுளாவை… ஏன் ஏன் என்று துளைத்தெடுத்தான். வேறு வழியே இல்லாமல், கிளம்புவதற்கு தன் அறைக்கு சென்றவர், செந்தாமரையின் கைப்பேசியில் அழைத்து, வருத்தம் தெரிவித்தார்.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!