Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 26 ( PART 02 )

 

 

வரவேற்பறையில் நடக்கும் கூத்தை அவளும் கவனித்துக் கொண்டிருந்ததால், “போயிட்டு வாங்க அத்தை. நான் மட்டும் தான, நானே எதுவும் சமைச்சு சாப்பிட்டுக்கறேன். திரும்பி வரும்போது சொல்லுங்க…” எனச் சொன்னாள்.



Advertisement

 

அவள் அப்படிச் சொன்னதும் தான் நிம்மதியானது மஞ்சுளாவிற்கு. மூவருமாகப் புறப்பட்டு செல்ல, வெற்றிக் கதவைப் பூட்டிவிட்டு காரை எடுத்தான். அங்கிருந்து மாலிற்கு சென்றவன், திரைப்படத்திற்கு டிக்கெட் எடுத்து, தம்பியிடம் தந்தவன், அவன் காதில் ஏதோ ரகசியம் சொல்லிவிட்டு… அவனது வியந்த பார்வையை பொருட்படுத்தாமல் தாயிடம் திரும்பி,

 

Advertisement

“அம்மா இப்ப தான் என் பிரண்ட் போன் பண்ணுனான். ஒரு எமர்ஜென்சி. சீக்கிரம் வந்துடறேன். நீங்க மூவி முடிச்சுட்டு, லன்ச் சாப்பிட்டு, ஷாப்பிங் செஞ்சுட்டு இருங்க… நான் எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து ஜாயின் பண்ணிக்கறேன்…” என்று சொல்ல,

Advertisement

 

“இதுக்கு தான் அவசரப் படுத்தினியா… நான் வீட்டிலேயே இருந்திருப்பேன்…” என மஞ்சுளா கத்த,

 

Advertisement

“என்னம்மா இவ்வளவு தூரம் வந்துட்டு… போ… முத்து, அம்மாவோட டைம் ஸ்பெண்ட் பண்ணு” எனப் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து நழுவி விட்டான்.

 

“இவன் ஏன்டா இப்படி இருக்கான். வெளில வந்தா கூட, இருக்கானா பாரு… இவனுக்கெல்லாம் கல்யாணம் வேற! பேசாம கல்யாணம் வேணாம்ன்னு சொன்னானில்லை அப்படியே விட்டிருக்கணும்” என மஞ்சுளா புலம்ப,

 

“போம்மா… வருவான். படம் போட்டுட போறாங்க…” என அன்னையைத் திசை திருப்பி படம் பார்க்க அழைத்துச் சென்றான் முத்து.

 

அனைவரும் சென்றதும், ஷோபாவில் சோபையாகப் படுத்தபடி ரிமோட்டை பாடு படுத்திக் கொண்டிருந்தாள் செந்தாமரை. ‘இவன் எதுக்கு இங்க வந்தான்?’ மனதிற்குள் கணவனை திட்டித் தீர்த்தாள். ‘எப்ப போவானா இருக்கும்?’ என்று அவளது சிந்தனை ஓடிக் கொண்டிருந்த போதே, கதவு திறக்கும் சத்தம் கேட்க, அவசரமாக இவள் எழுவதற்குள் நிதானமாக உள்ளே நுழைந்த வெற்றிக் கதவை தாளிட்டான்.

 

சத்தம் கேட்டதில், அதுக்குள்ள திரும்பி வந்துட்டாங்களா என நினைத்து அவள் எழ, கணவன் மட்டும் தனியாக வந்ததைப் பார்த்ததும், ஒரு நொடி செயலற்று நின்றவள், மறுநொடி தன் அறைக்குள் நுழைந்து தாளிட விரைந்தாள்.

 

தாளிடும் முன்னர், அவனது கரங்கள் கதவினை தள்ளிக் கொண்டு, அவளது முயற்சியைத் தடுக்க, அவன் அறைக்குள்ளேயும் வந்திருந்தான். வந்தவன் அறையின் கதவையும் நிதானமாக தாளிட, அவளுக்கு எரிச்சலானது.

 

பேசாமல் போய் கட்டிலில் முழங்காலிட்டு அமர்ந்தவள், அதில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

 

“இன்னும் எத்தனை நாள் இப்படி கண்ணாமூச்சி விளையாடப் போற?” என்றபடி அவளருகே நெருங்கினான் வெற்றி.

 

[the_ad id=”6605″]

 

 

செந்தாமரை வாயே திறக்கவில்லை. நிதானமாக அவளை நெருங்கி அமர, அவள் விலகி அமர முயற்சித்தாள். அதை முறியடிக்கும் விதமாக, இடையை வளைத்து அருகில் பிடித்து வைத்துக் கொண்டான். குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கி விட்டாள்.

 

“ஹே… மாஹி… என்ன இது? ஏன் இப்படி செய்யற?” தவிப்பாகக் கணவன் கேட்க,

 

“போய்யா… மரியாதையா எழுந்து வெளிய போயிடு…” கீச் கீச்சென்று கத்தினாள். அழுது கொண்டே பேசியதால், அத்தனை அழகான பரிமாணத்தில் தான் வார்த்தைகள் வெளிவந்தது.

 

“எதுக்கு இப்படி அழற? என்னடா… என்னை பாரேன்…” மனைவியைக் கெஞ்ச,

 

“உங்களுக்குத் தான் என் முகத்தைப் பார்க்கவே பிடிக்கலை சொல்லிட்டீங்க தானே! அப்பறம் என்ன? அப்படியெல்லாம் ரோஷம் கெட்டுப் போய் என் முகத்தை உங்களுக்கு காட்டணும்ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. போங்க இங்கிருந்து…”

 

“அப்படியா சொன்னேன்… அது ரொம்ப கோபம் டா. எங்க அடிச்சிடுவேனோ, சண்டை பெருசாயிடுமோன்னு பயம் அதான் உன்னை அங்கிருந்து அனுப்பலாம்ன்னு…” அவளது கைவிரல்களை வருடியபடி தன்னிலை விளக்கம் தர,

 

“இல்லை ஏமாத்தறீங்க… போங்க, நீங்க எனக்கு வேணாம். இப்படி பாதியில கை கழுவி விட்டுட்டு போறவனை நம்பி எல்லாம் நான் இருக்க மாட்டேன்…” என அழுது கொண்டே சொல்ல,

 

“ஏய்…” என அதட்டியவன், அவளது முடியை இழுத்து முகத்தை நிமிர்த்தினான்.

 

வலியில் முகம் சுளித்தவளைப் பார்த்ததும், அவளது முடியை விடுவித்தவன், “கோபத்துல பேசுனா… அதை பிடிச்சுட்டு தொங்குவியா? நீ கூடத்தான் என்னை சந்தேகப்பட்ட? நான் நீ தான் முக்கியம்ன்னு, அதை மறந்துட்டு, உன் பின்னாடி வரலை… இதே நான் உன்னை சந்தேகப்பட்டிருந்தா நீ சும்மா இருந்திருப்பியா?” அவன் குரலின் ஸ்ருதியை ஏற்றி மிரட்டலாகக் கேட்க,

 

“எப்ப பாரு என்னை வேணாம் வேணாம் சொல்லறீங்க… கோபம் வந்தா, இப்படி எல்லாமா பேசுவாங்க…” அவன் மிரட்டலிலும், விழிகளில் தெறித்த ரௌத்திரத்திலும் மீண்டும் அழ,

 

“ம்ப்ச்… நீயும் தான என்னைச் சந்தேகப்பட்ட…”

 

“சந்தேகப்பட்டதுக்கு சாரி… ஆனா, உங்களைப் பார்க்க மாட்டேன். நீங்க எப்படி என்னை அப்படி சொல்லலாம்” என ரோஷத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

மனைவியின் செய்கையைப் பார்க்க ஒருபுறம் ரசனையாக இருந்தது. “ஏன் செந்தூ… அந்த சுந்தரேசன், அவங்க அம்மா, அப்பா மேல எல்லாம் இறக்கம் காட்டற… அத்தனை பாவம் செஞ்சதையும் மறந்து… என்னைப் பார்த்தா மட்டும் பரிதாபம் வரலையா?” என்று கேட்க,

 

 

ஆண்கள் வெகு அழகு! அதிலும் மனைவியைச் சமாதானம் செய்யத் தெரியாமல் தத்தி தத்தி முயற்சிக்கும் ஆண்கள் கொள்ளை அழகு! பேரழகனாய் வெற்றி உருவாகியிருந்தான்.

 

“என்ன உளறுறீங்க?” முகம் பார்க்க மறுத்தவள், இப்பொழுது குழப்பமாக அவனை ஏறிட்டாள். கலங்கித் தடித்த விழிகள், வாடிய முகம், கலைந்த கூந்தல்… அவற்றை அளந்தவாறே வெற்றி பதில் தந்தான்.

 

“அந்த சுந்தரேசன் அவங்க அம்மா, அப்பாவுக்குக் கொல்லி வைக்க முடியலையேன்னு கவலைப் பட்ட தானே!” வெற்றி தங்களுடைய கடைசி வாக்குவாதத்தை நினைவு படுத்த,

 

“ம்ப்ச்…” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

[the_ad id=”6605″]

 

 

“சாரி டி… கோபத்துல பேசி இருப்பேன். உன் முகத்தை பார்க்காம நான் எப்படி இருப்பேன்?” அவளது தோளில் முகத்தை அழுத்தி வெற்றி கேட்க,

 

கடைக்கழுத்தில் மீசை முடியின் உராய்வை உணர்ந்து அவன் முகத்தைத் தள்ளி விட்டாள். “இத்தனை நாள் எப்படி இருந்தீங்களாமா?”

 

“அன்னைக்கு ராத்திரியே உன்னை வீட்டுல தேடினேன் தெரியுமா? பின்னாடியே வந்திருப்பேன்…”

 

“உங்க கடமை அழைச்சிருக்கும்…” என்றாள் கடுப்பாய்.

 

“எக்ஸ்சாக்ட்லி! பாரு என்னை எப்படி புரிஞ்சு வெச்சிருக்கன்னு. ஐ லவ் யூ சோ மச்…” என்றவன் அவளை தன்னருகே இழுத்து, கன்னத்தில் முத்தம் வைத்தான்.

 

‘என்னை சண்டை போடவே விட மாட்டானா?’ எனத் தலையில் கை வைத்துக் கொண்டாள்.

 

“இன்னும் என்னடி? என்னைச் சந்தேகப்பட்டது நீ… என்னைப் பேசக் கூட விடாம, என் மேல பழியை அடுக்கினது நீ… இப்ப கோபமும் உனக்கே வருமா?” கணவன் அவளைத் துளைத்தபடி கேட்க,

 

“சாரி… அப்படிப் பேசி இருக்கக் கூடாது. என்ன ஏதுன்னு உங்ககிட்ட கேட்டு இருக்கணும். நீங்க தப்பே பண்ணியிருந்தாலும், என் கணவர் காரணம் இல்லாம அந்த தப்பை பண்ணி இருக்க மாட்டாருன்னு உங்களை புரிஞ்சவளா… உங்களை நம்பி இருக்கணும். இது எதுவும் செய்யலை. ஏதோ கோபம், ஏதோ ஆத்திரம்… உங்க ஒதுக்கத்தை தாங்கிக்க முடியலை… அதோட இவங்க காணாம போன குழப்பம் வேற… அதுனால உங்களுக்கு எதுவும் ஆபத்து வந்துடுமோன்னு பயம்… எல்லாம் சேர்ந்து…” எனத் தவிப்பாகக் கூற,

 

“ம்பச்… பரவாயில்லை விடு. நானும் என் வேலை வேலைன்னே இருந்திருக்கக் கூடாது. உனக்கான நேரத்தை தந்திருக்கணும். அப்படி தந்திருந்தா நீ அவ்வளவு டிஸ்டர்ப் ஆகி இருக்க மாட்ட. என் தப்பு தான். சாரி… கண்டிப்பா வேணும்ன்னு சொல்லலை, சண்டை பெருசாகக் கூடாதுன்னு ஒரு தவிப்பு! நீ என்னை நம்ப மாட்டீங்கிறியே அப்படின்னு ஆதங்கம்! அதான்…” மனைவிக்கு விளக்கம் தந்தவன், அவளது தாடையை மென்மையாகப் பற்றி “சாரி டா…” என்றான் உணர்ந்து.

 

அவள் தலை தன்போல அசைந்தது. வசியக்காரன் வசீகரித்து விட்டான்! வழக்கம் போல!

 

“நான் உங்களை சந்தேகப் பட்டிருக்கக் கூடாது…” என்று சோர்வாகச் சொல்ல, “பரவாயில்லை விடு… நானும் அதுக்காக அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது…” என்று கலைந்திருந்த தலைமுடியை மெல்ல வருடி, ஒதுக்கி விட்டான்.

 

மழையும், வெயிலும் ஒன்று சேர்ந்து வந்த காலநிலை போல… அழுகையும், கோபமும், சமாதானமுமாய் அவர்களது விநாடிகள் பயணிக்க, ஒவ்வொரு சமாதானத்தின் முடிவிலும் வெற்றியின் நெருக்கம் அவளறியாமல் கூடியிருந்தது. சட்டென்று அதீத நெருக்கத்தை உணர்ந்து பதறி விலகியவளை, அவனது இறுகிய பிடி விலக ஒத்துழைக்கவில்லை.

 

“மாட்டேன் மாட்டேன் போங்க…” என்று குழைந்த குரலில் முரணாக முரண்டு பிடித்துக் கொண்டிருந்தவளை, “அதை கோபமா சொல்லு… செய்யறேன்…” என்றவன் அவள்மீது படர்ந்திருந்தான்.

 

“நான் சொன்னா விட்டுட்டு வந்துடுவியா? என்கிட்ட வீட்டுக்கு வந்ததும் சண்டை பிடிச்சிருக்க வேண்டியது தானே!” என்று கூறியவன், அவள் பேசும் வாய்ப்பை தர மறுக்க, அதற்கு அவளும் மகிழ்வாகவே உடன்பட்டாள்.

 

சோர்ந்து படுத்திருந்தவளை தன் கை வளைவில் வைத்தபடி, “சாப்பிடறியா இல்லையா? ஏன் இப்படி இருக்க?” என்று ஆதுர்யமாக கேட்க,

 

“ஓ… உங்களை பார்க்காட்டி எனக்குச் சோறு தண்ணி இறங்காதுன்னு நினைச்சுட்டீங்களாக்கும். அதெல்லாம் நல்லா வயிறு முட்ட சாப்பிட்டேன்…” என்று வீம்பாகச் சொன்னாள்.

 

“நான் எங்கடி அப்படி நினைச்சேன். நீ தான் பார்க்க அப்படி இருக்க… எலும்பெல்லாம் தூக்கிட்டு…” என்று சொல்ல, “ஆமாம், நீங்க ரெண்டு சுத்து பெருசாயிட்டீங்க…” என்று அவளும் கேலியாய் சிரித்தாள்.

 

“ஹாஹா… நீ பாட்டுக்கு கிளம்பி வந்துட்ட, என்னவோ நான் தான் உன்னை விரட்டி விட்ட மாதிரி அப்பத்தா எனக்கு சோறே போட மாட்டீங்குது…” என்று பாவமாகக் கூறினான்.

 

“அப்ப சாப்பாட்டுக்கு வழி இல்லாம தான் பொண்டாட்டி ஞாபகம் வந்திருக்கு…” என்று முறைத்தவளை, “அப்படித்தான் உனக்கு தோணுதாக்கும்…” என்று காதை திருகியிருந்தான்.

 

“ஸ்ஸ்… ஆ…” என்று அலறியவள், ரேவதி அழைத்ததையும் அவள் கூறியதையும் சொல்லி… தங்களுக்கு நடக்கவிருந்த விபத்தையும், பரமேஸ்வரன் தங்களைக் காப்பாற்றியதைப் பற்றியும் கூறி… கடைசியாக அந்த பசங்களையும் காணோம் என்றும் சொல்லி முடிக்க,

 

அவள் தலையை வருடிக் கொண்டிருந்தவன், “ஓ…” என்று கேட்டுக் கொண்டான்.

 

“நான் தான் உங்களைத் தப்பா புரிஞ்சுட்டேன். சாரி…” எனக் கூறியவள், “ஆனா, இந்த மாதிரி தப்பு செய்யறவங்க எல்லாம் எப்படிச் சொல்லி வெச்ச மாதிரி காணாம போறாங்க…” என்றும் சேர்த்துக் கூற,

 

“ஆமாம். நீ யோசிச்சது சரிதான்… அவங்களா காணாம போகலை…” எனக் கணவன் உணர்வுகள் வெளிப்படுத்தாத குரலில் கூறினான்.

 

மேலும் நடந்ததை அவன் விளக்க, அவளுக்கு ஆச்சரியம். இப்படியும் தண்டனை தர முடியுமா? இது சரியும் தானே! நன்கு வேண்டும்! என்று அவளுக்குத் தோன்றியது.

 

“அப்ப மாமா இறப்பு விபத்து இல்லையா?” தாங்கமாட்டாமல் செந்தாமரை கேட்க,

 

இல்லை என்று தலையசைத்தான். கூடவே, “ஆனா, அப்பாவை இந்த நிலைக்கு ஆளாக்கினவங்க இப்ப உயிரோட இல்லை…” என்று சொல்லி, தான் செய்ததை எல்லாம் விளக்கினான்.

 

“சூப்பருங்க… ஆனா, இதை எல்லாம் நீங்க ஏன் செய்யணும்? மாமா தொடங்கின, குழு ஏன் செய்யாம விட்டுட்டாங்க… அந்த குழுவுல போயி அவனுங்க சித்திரவதை அடைஞ்சிருக்கணும்…” செந்தாமரை ஆத்திரத்துடன் கூற,

 

“அவங்க அந்த குழுவைத் தொடங்கினது… உடனே மாட்டிக்கறதுக்காக இல்லை மாஹி! யாரை கடத்துனா பிரச்சனை வராதோ, அவங்களை மட்டும் தான் கடத்துனாங்க. ரொம்ப செல்வாக்கான பெரிய மனுஷங்களை கடத்தறது… அவங்களுக்கே ஆபத்துல முடியும்”

 

[the_ad id=”6605″]

 

 

“ஆமாங்க சரிதான். ஏதோ அவங்களால முடிஞ்சவரை, தண்டிச்சிட்டு இருக்காங்களே… அதுவே போதும்…” என்று ஆசுவாசமாகக் கூற,

 

“இல்லை தாமரை இது சரியில்லை. முறைப்படி தண்டனை தரது வேற! இது வேற! அவங்களால எத்தனை பேருக்கு சட்டத்தை கையில எடுத்து தண்டனை தர முடியும்? எப்பவாவது மாட்டிட்டா அவங்க நிலைமை? அவங்க எதிர்காலம்?” என்று கேட்டவன், தான் அந்த குழுவை களைத்து விடலாம் என்று எடுத்த முடிவையும், அதை விரைவில், எந்த வகையில் செயல்படுத்தப் போகிறான் என்பதையும் கூறினான்.

 

“அப்ப கலெக்டர் சாருக்கு இதுல தொடர்பு இல்லையா?”

 

“ம்ம் ஹ்ம்ம் இல்லை. மாமா இதுல கூட்டு இல்லை. ஆனா, அவருக்கு இப்படி நடக்கிறது தெரியும்! ஆனா, அந்த அணியில இருக்க யாருக்கும் மாமா இதுல சம்பந்தப் படலைன்னு தெரியாது. அவனுங்க நினைச்சுட்டு இருக்காங்க, அப்பா இறந்து, அந்த குழுவை வழி நடத்த முடியாம அத்தை தடுமாறவும், சீக்கிரம் மாமா பொறுப்பெடுத்துப்பாருன்னு. நான் தான் விளக்கம் சொன்னேன். அப்படி எல்லாம் எதிர்பார்க்காதீங்க… இது சட்டத்துக்கு புறம்பானதுன்னு…

 

அவங்களை எல்லாம் பேசி வழிக்குக் கொண்டு வரத் தான் ரொம்ப கஷ்டமா இருந்தது. எனக்கே ஆச்சரியம், தன்னோட எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கிட்டு எப்படி இந்தளவு இறங்கி இருக்காங்கன்னு… அப்ப நினைச்சு பாரு.. கெட்டவங்க இருந்தா அதைவிட நல்லவங்களும் இந்த உலகத்துல இருந்துட்டே தான இருக்காங்க…” உணர்ந்து கூற, அவளுக்கும் அவர்களை நினைத்து பெருமையாய் இருந்தது.

 

“ஆமாங்க… அதுவும் சரிதான். எல்லாரும் படிச்சு, நல்ல வேலையில இருக்கவங்க. நல்ல வேலைக்கு முயற்சி செய்யறவங்க. இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா… அவங்க எதிர்காலம் என்ன ஆகும்? ஆனா, தப்பு பண்ணுனவங்களுக்கு தண்டனை?”

 

“அது எப்பவும் கேள்விக் குறி தான் மாஹி! இவங்களை போல நல்லவங்க நிறைஞ்சு இருந்து, அவங்களுக்கு நல்ல பொறுப்பும் கிடைக்கும் போது தவறுகள் குறையும்ன்னு நம்ம நம்பலாம்.

 

அதோட, நம்ம சமூகம் நிறைய மாற வேண்டி இருக்கு மாஹி. பெண்களுக்கு ஒழுக்கம் சொல்லித் தந்தா, அதை ஆண்களுக்கும் சொல்லித் தரணும்… ஆண்களுக்கு உழைப்பையும், பணம் சம்பாரிக்கும் அவசியத்தையும் சொல்லித்தந்தா, அதைப் பெண்களுக்கும் கற்றுத் தரணும்…

 

நினைச்சுப்பாரு, ஒரு பெண் ஒரு ஆணால் கைவிடப்பட்டாலோ… இல்லை கணவனை இழந்து தனி மரமா நின்னாலோ… இல்லை யாரோ ஒருவனால தன் பெண்மையைப் பறி கொடுத்தாளோ… அவ வாழ்க்கையே அஸ்தமனம் ஆகிவிட்டதா… அவளும், அவ குடும்பமும், நம்ம சமூகமும் நம்புது.

 

ஏன்? ஒரு ஆண் துணை ஒரு பெண்ணுக்கு அத்தனை அவசியமா?

 

ஏன்னா, பெரும்பாலான பெண்கள் அவங்களோட பினான்ஷியல் தேவையை தங்களால சரி செஞ்சுக்க முடியாம இருக்காங்க. அப்ப படிப்பும், வேலையும் ஒரு ஆணுக்கு மட்டும் அவசியம்ன்னு நம்ம சமூகம் நினைப்பது தப்பு தானே? ஒத்துக்கறேன், கல்வி இப்ப நிறைய பெண்களுக்கு கிடைக்குது! ஆனா, அது வேலைக்காக இல்லை. ஒரு கௌரவத்துக்காக! இல்லை அந்த படிப்பு குறைவா இருந்து, அதைக் காரணம் சொல்லி நல்ல மாப்பிள்ளை தட்டி போயிடக்கூடாது அப்படிங்கறதுக்காக!

 

ஒரு பெண்ணால் எந்த நிலையிலேயும் தனியா யார் துணையும் இல்லாம பயணிக்க முடியணும். அது மட்டுமே அவளுக்குப் பாதுகாப்பு, நம்பிக்கை! அதுக்கு அவளுக்கு நல்ல கல்வியும், நல்ல வேலையும் இருக்கணும்.”

 

கணவன் சொல்வதை ஆச்சரியமாகப் பார்த்தாள். எத்தனை ஆழமான கருத்துக்கள்! எவ்வளவுக்கெவ்வளவு உண்மை!

 

“என்ன செந்தூ…?”

 

“நீங்க சொல்லறது சரி தாங்க… ஆனா, இது மாதிரி மாற்றத்தை எப்படிக் கொண்டு வர முடியும்?” தங்களால் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியாதா, என்னும் தவிப்போடு அவள் கேட்க,

 

“தெரியலை… ஆனா, கண்டிப்பா ஏதாவது பண்ணனும்… நல்லது செய்ய இத்தனை ஆட்கள் ஆர்வமா இருக்கும்போது நம்மாள சீக்கிரம் எதையாவது செய்ய முடியும். எனக்குப் பதவியும், அதிகாரமும் கிடைக்கட்டும். அதுக்குள்ளே எதையும் யோசிச்சு வைப்போம்…” என்று கூறியவனை அன்போடு அணைத்துக் கொண்டாள்.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!