Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 22.2

 

றுச்சாமியின் இல்லத்தில் காற்றின் வேகத்திற்கு யன்னல் கதவுகள் எல்லாம் படபடக்க, ரங்கநாயகி ஒவ்வொன்றையும் சாற்றி தாழிட்டுக் கொண்டிருந்தார்.

 

அந்த சத்தம் சிறிதும் ஆறுச்சாமியின் செவிகளை எட்டவில்லை. சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி வள்ளியம்மாளின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருக்க, பெற்றவருக்கு தன் பிள்ளையின் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் என்று புரிந்தது.



Advertisement

 

“ஜென்னக் கதவைக் கூட சாத்தாம அப்படி என்ன யோசனைல இருக்கற கண்ணு?”

 

Advertisement

“ஒன்னுமில்லைங் ம்மா” என்ற மகனையே பார்த்த நாயகி,

Advertisement

 

“சின்ன வயசுல என்ன நடந்தாலும் மொதோ ஆளா என்ர கிட்டத்தேன் ஓடியாந்து சொல்லுவ. இப்போ என்ர கிட்ட சொல்லுறதுக்கே தயங்குறதோட்டம் ஆகிப்போச்சு. பெத்தவளுக்கு ஒரு நேரத்துல பாத்தா இந்த புள்ளைகெல்லாம் ஏந்தேன் வளருதுகளோன்னு இருக்குது” என வருத்தமாய் சொல்ல, ஒரு நெடிய பெருமூச்சை எடுத்துக் கொண்ட ஆறுச்சாமி

 

Advertisement

“நான் வாழுறதே உங்க மூணு பேருக்காகத்தேனுங் ம்மா. நம்ம தேவியும் அரசியும் நல்லா இருந்தா அதைய பாத்து சந்தோசப்படுற மொதோ ஆள் நாந்தேன்” என்றார்.

 

கட்டிலில் வந்து அமர்ந்து கொண்ட நாயகி தன் மகனின் முகம் காண, அதில் வேதனையின் சாயல் வடிந்தோடிக் கொண்டிருந்தது.

 

“தேவியைப் பத்தி ஆரு என்ன சொன்னாலும் நான் நம்பமாட்டேனுங். என்ர மக மேல அசைக்க முடியாத நம்பிக்கை வெச்சிருந்தேனுங் ம்மா. ஆனா ஒரே விசயத்துல அவ என்ர நம்பிக்கைய மொத்தமா போட்டு ஒடச்சுட்டா. ஆறாத ரணத்தை உண்டுபண்ணிப் போட்டா” என,

 

“அவளுக்கு அந்த பையனத்தேன் புடிச்சிருக்குதுன்னு சொல்லும் போது நம்மளும் கட்டாயப் படுத்தக் கூடாதல்லோ. அவளுக்கும் அவ வாழ்க்கையை தீர்மானிக்குற உரிமை இருக்குதல்லோ கண்ணு” என்றார் மகனிற்கும் பேத்திக்கும் பொதுவாய்.

 

“இப்படிக் கடைசி நேரத்துல வந்து விக்ரமனை கலியாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்லுறாளே அப்போ அரசி மட்டும் என்ர சொல்லுக்கு கட்டுப்படாம இருந்திருந்தா இத்தனை வருசமா நான் கட்டிக் காப்பாத்துன கௌரவம் என்னாகியிருக்கும்ங்? விக்ரமனுக்கும் முத்துலட்சுமிக்கும் நான் என்ன பதில் சொல்லியிருப்பேன். வேலுச்சாமிக்கு கொடுத்த வாக்கு என்னாகுறதுங் ம்மா” என்றவர் முகத்தில் அத்தனை வேதனை.

 

“அதேன் ஒன்னும் ஆகலையல்லோ. விடு கண்ணு. இனி நடந்தத பேசி என்னாகப் போகுது. இருந்தாலும் நீ தமிழை தலை முழுகுனது ரொம்பத் தப்பு ஆறுச்சாமி. பாவம் புள்ள அழுதுகிட்டே போச்சு” என கண் கலங்கக் கூறினார் ரங்கநாயகி.

 

[the_ad id=”6605″]

 

 

 

“தேவி செஞ்ச காரியத்தால நம்ம விக்ரமன் மனசு என்ன பாடு பட்டிருக்கும்ங். என்ர மகளுங்கறதுக்காக நான் தேவிய மன்னிச்சு ஏத்துக்கிட்டா அது வேலுச்சாமி குடும்பத்துக்கு நான் பண்ணுற துரோகம் ஆகிடாதுங்களா?” என்று கேட்க, நாயகியிடம் பதிலில்லை.

 

“என்ர குடும்ப கௌரவத்தை காப்பாத்தாம போனவ என்ர மவளே இல்லைங். அவளை நான் மன்னிக்கவும் போறதில்லைங்” என்றுவிட்டார் முடிவாய்.

 

கோபம் ஒருபுறம் இருக்க, வாசலை அலங்கரிக்கும் அருந்தமிழின் கோலத்தை ரசிக்காது அவரது நாள் துவங்கியதில்லை. அவள் கொலுசொலியைக் கேளாது அவரது நாள் முடிவடைந்ததில்லை. வள்ளியம்மாளின் புகைப்படத்தைக் கூட காண மறந்திருப்பார் ஆனால் ஓர்நாளும் அருந்தமிழின் முகத்தை காணாதிருந்ததில்லை. தினமும் அவள் முகத்தில் விழித்துப் பழகி இனி யார் முகத்தில் விழிப்போம் என்றெல்லாம் அவர் மனதில் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது மறுபுறம்.

 

இதற்கு இடையில், தன் குடும்ப கௌரவத்திற்காக அரசியை கட்டாயப்படுத்தி அவள் விருப்பமின்றி ஒரு வாழ்க்கையை அவளுக்கு அமைத்துக் கொடுத்து விட்டோமோ? அதில் தான் கோபமுற்று பிறந்த வீட்டின் உறவை தாமாய் துண்டித்துக் கொண்டு சென்றுவிட்டாளோ என்ற எண்ணம் அவரை பெரிதாய் வருத்தியது. மகள்களின்றி வீடே வெறுச்சோடி பொலிவிழந்து காணப்பட்டது அவருக்கு.

 

அவர் கண்களில் கண்ணீர் கோர்க்க, அது மகள்களுக்கான ஒரு தகப்பனின் கண்ணீர் என்று அறிந்த நாயகியோ,

 

“நீ என்னத்துக்கு சோர்த்து போற ஆறுச்சாமி? ஆரு போனா என்ன கண்ணு, உனக்கு அம்மா நான் இருக்குறேன். அவளுக கெடக்குறாளுக. அதுலையும் இந்த சின்னக் குட்டிக்கு வாய் அதிகமா போச்சு. உன்னையவே என்ன போடு போடுறா. நாளப்பின்ன அப்பத்தான்னு என்ர பொறகால வரட்டும் கன்னத்துலையே ரெண்டு இடிக்குறேன்” என்றதும்  லேசான புன்னகை ஆறுச்சாமியிடத்தில்.

 

அதொன்று போதுமாய் இருந்தது பெற்றவருக்கு. பதிலுக்கு புன்னகைத்த நாயகி,

 

“நடு சாமமாச்சு. வந்து தூங்கு கண்ணு” என மகனை உறங்கச் செய்து அவருக்கு போர்வை போர்த்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

 

சிறிதும் சுயநலமின்றி பிறர் நலம் பேணச்சென்றதால் பிரிந்து போனது மொத்தக் குடும்பமும். அவரவரவருக்கு ஏற்பட்ட காயங்களுக்குக் காரணம் ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள கரை காணா அன்பு மட்டுமே என்பதை காலம் உணர்த்தும் வரையில் காயங்கள் காய வாய்ப்பில்லை.

 

தன் அறைக்கு வந்த ரங்கநாயகி, நீலகிரித் தைலத்தை கால்களுக்கு தடவிக்கொண்டு

 

‘என்ர பேத்திக ரெண்டும் என்ன பண்ணுதுகளோ? தமிழு அவ குணத்துக்கு எங்கயும் அனுசரனையா போய்க்குவா. இந்த சின்னக் குட்டி விக்ரமனை என்ன பாடுபடுத்தப் போறாளோ’ என்று எண்ணியவாறே,

 

“செல்லாண்டியம்மா எம்புள்ளைகளுக்கு நீதேன் துணை இருக்கோணும்” என்று குலதேய்வத்தை வேண்டிக்கொண்டு படுத்தார்.

 

விக்ரமன் தன்னிரு கைகளையும் சேர்த்து தலைக்கு வைத்துக்கொண்டு விட்டத்தை பார்த்தபடி தரையில் படுத்திருக்க, அரசியோ மெத்தையில் படுத்தபடி மின்விசிறியின் சுழற்சியை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

 

இரு மனமும் திருமணத்தில் இணைந்திருந்தாலும் மெல்லிய விரிசல் ஒன்று இணைந்த இரு மனங்களை பிரித்து வைத்திருந்தது. அரசிக்கு அதன் காரணம் புரிந்திருந்தாலும் விரிசலை போக்கும் மார்க்கம் என்னவோ புரியவில்லை. 

 

விக்ரமனால் அவளிடத்தில் கோபத்தை காட்டிவிடத்தான் முடியுமா! அவனால் அவளிடம் இருந்து விலகிச் செல்லவும் முடியாது அவளை விலக்கி வைக்கவும் முடியாது. அது அவளுக்கும் தெரியும். இருந்தும் அவளது ஒரே ஒரு சொல்லம்பு அவன் இதயத்தை ஆழத்துளைத்திருக்க, அதன் காயம் காயும் வரையேனும் காத்திருக்க முடிவு செய்தான்.  

 

[the_ad id=”6605″]

 

 

 

வெளியே ஜோவென மழை அடித்துப் பெய்ய, ஓர் இடி பலமாய் இடித்த வேகத்திற்கு எங்கு அரசி பயப்படுகிறாளோ என மெல்ல எட்டிப் பார்த்தான். அவள் கொஞ்சமும் அசையாதிருக்க,

 

‘இந்த இடிக்கும் அசராம படுத்திருக்கா’ என நினைத்தவன் தன் பார்வையை திருப்புவதற்குள் அவன் புறம் திரும்பியவள்,

 

“பயமா இருக்காங் மச்சா? வேணும்னா என்ரகோட வந்து படுத்துக்கோங்க” என தாளமாய் அழைக்க, அவளை ஒரு முறை முறைத்துவிட்டு திரும்பி கீழே படுத்தான்.

 

தோள்களை குலுக்கிவிட்டு அவளும் திரும்பிப்படுக்க, மழையின் இசைக்கு மின்கம்பங்கள் ஆட்டமெடுத்ததோ என்னவோ மின்சாரம் தடை பட்டது.

 

‘இது வேறயா’ என அரசி யன்னலின் வழியே வேடிக்கை பார்த்திருக்க, சில நிமிடங்களில் சமையலறையில் பாத்திரங்கள் உருட்டப்படும் சத்தத்தோடு சேர்த்து பூனையின் மியாவ் சத்தமும் ஒலித்தது.

 

அடுப்பு திட்டிலேயே பாலை மறந்து வைத்துவிட்டு வந்தது அரசியின் நினைவிற்கு வர,

 

‘மச்சான் குடிக்கவேண்டிய பாலாச்சே அது! இப்போ பூனை குடிக்குதோட்டம். அது குடிச்ச மிச்சத்தையாவது கொண்டு வந்து கொடுப்போம்’ என வேகமாய் எழ, கீழே படுத்திருந்த விக்ரமனை மிதித்து அவன் கால் தடுக்கி அவன் மீதே விழுந்திருந்தாள்.

 

அவன் கத்தியதில்,

 

“கத்தாதீங்க நான் தான்” என அவனுக்குமேல் கத்தினாள்.

 

“அறிவில்ல”

 

“ப்ச்.. கரண்டில்ல”

 

“எந்திரி மொதல்ல”

 

“அதுக்கு தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் ” என்று மெல்ல எழுந்தவள் தன் கைபேசியை தடவி எடுத்து அதில் டார்ச் அடித்தபடி கீழே சென்று பார்க்க, பூனை அவளை உரசிக்கொண்டு வேகமாய் ஓடியது.

 

“திருட்டுப் பூனை” என ஒரு சொம்பை எடுத்து வீச,

 

“ஷ்ஷ்..” என்ற சத்தத்தில் உடனே அரசி டார்ச்சை உயர்த்திப் பிடிக்க அங்கு விக்ரமன் காலைப் பிடித்துக் கொண்டு நிற்பது கண்டு,

 

“ஐயோ மச்சா நீங்களா? சாரிங் மச்சா சாரிங் மச்சா. ஆமா நீங்க என்னத்துக்கு திருட்டு பயலோட்டம் இங்க வந்து இருட்டுல பதுங்கி நிக்குறீங்க” என கேட்டபடி அவன் முகத்தில் டார்ச்சை அடிக்க, அவன் கண்கள் கூச

 

“ப்ச் லைட்டை தள்ளிப்புடி” என அவள் கையை தட்டி விட்டான்.

 

அவள் மீண்டும் சமையலறைக்குள் திரும்ப அங்கிருந்த மற்றொரு பூனை அவள் கால்மேல் ஏறி ஓட, பின்னால் நகர்ந்தவள் விக்ரமனை இடித்துத் தள்ளி குப்புற விழுந்தவன் மேல் அவள் மல்லாக்க விழுந்தாள்.

 

அரசி தன் கைபேசியை கெட்டியாய் பிடித்துக்கொண்டு அவன்மேல் இருந்து தரையில் உருண்டு சற்று தள்ளி வர, சரியாக கரெண்ட்டும் வர அந்நிலையிலேயே ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்தபடி படுத்திருக்க,

 

“பூனை தான் உருட்டுதுன்னு நெனச்சேன் நீங்களா” என்றார் முத்துலட்சுமி.

 

[the_ad id=”6605″]

 

 

 

அவரது குரலில் இருவரும் விரைந்து எழுந்து நிற்க, சமாளிப்பாய் புன்னகைத்த அரசியோ,

 

“ஏதோ உருட்டுது நீங்க இருங்கயே இருங்க நான் போய் பாத்துட்டு வரேன்னு சொல்லிட்டு தான் வந்தேங் அத்தை. மச்சான் தான் என்ர பின்னாலையே வந்துட்டாருங்” என, விக்ரமன் அதிர்ச்சியாய் பார்த்தான்.

 

“சரி சரி போங்க” என சின்ன சிரிப்புடன் தன் அறைக்குச் சென்றுகொண்டார் முத்துலட்சுமி.

 

அறைக்குத் திரும்பிய விக்ரமனும் வேங்கையும் அவரவர் இடத்தில் படுத்துக் கொள்ள, சில நிமிடங்கள் கடந்ததும் மெல்ல கீழே எட்டிப் பார்த்தாள் அரசி.

 

மின்விசிறியின் சுழற்சிக்கு முன்னுச்சி முடிகள் ஆட உறங்கும் விக்ரமனையே ரசித்துப் பார்த்திருந்தவள் அவன் உறங்கிவிட்டான் என்று நினைத்து,

 

“லவ் யூ டா அத்தக்கருப்பா” என்று சொல்ல, திடீரென கண் திறந்தவன் அவளை முறைத்துவிட்டு திரும்பிப்படுத்துக் கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்திகொள்ள,

 

‘அச்சச்சோ’ என சின்ன சிரிப்புடன் அரசியும் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

 

ழையும் இடியும் போட்டி போட, திடுக்கிட்டு கண்விழித்த அரும்பு விரைந்து வந்து கதவைத் திறந்தாள்.

 

வாசல் வெள்ளத்தில் நிரம்பி இருக்க, மறுநொடியே அவளது பார்வை திண்ணையில் பதிந்தது. மூங்கில் தடுப்புகளை சுற்றிலும் மறைவாய் வைத்து மழைச்சாரல் அடிக்காதவாறு படுத்திருந்தான் குலசேகரன்.

 

“மாமா உள்ளார வந்து படு” என அவன் தோள் பற்றி உலுக்க, அவன் மறுக்க

 

“இடி வேற பலமா இடிக்குது எனக்கே பயமாத்தேன் இருக்கு நீ எதுக்கும் உள்ளாரையே வா” என விடாது அழைக்க,

 

“இடி இடிச்சா அர்ஜுனா அர்ஜுனான்னு சொல்லிட்டு போய் படுடி” என்றவன் போர்வையை இழுத்துப் போர்த்தி உறங்க ஆரம்பித்தான்.

 

“குலசேகரா! உனக்கு இருக்குது என்ர கிட்ட” என முனங்கிக்கொண்டு உள்ளே சென்று கதவடைத்துக் கொண்டாள் அரும்பு.

 

ழையை விட நம்மை யாராலும் அத்தனை ஆச்சர்யப்பட வைத்திட முடியாது. நினைத்தால் நனைக்காது. நினையாத நிமிடங்களில் வந்து நனைத்துவிட்டுப் போகும்.

 

அன்றைய மழையையும் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்பாராமல் வந்தது கொட்டிக் கொண்டிருந்தது. உடன் இடி வேறு இசைக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தது.

 

மழைத் தூறல் போடும் போதே மில்லிற்குப் போகப் புறப்பட்ட மாறன், அருந்தமிழையும் உடன் அழைத்தான். ஆனால் அவள் வர மறுத்து வீட்டில் இருந்து கொள்கிறேன் என்று சொல்லவும், விரைவில் திரும்புவதாய் தெரிவித்து அவன் மட்டுமாய் கிளம்பியிருந்தான்.

 

“ண்ணா! சட்டுன்னு அந்தப் பக்கம் இழுத்துக் கட்டுங்க. நான் இந்தப் பக்கம் பாக்குறேன். மழை வெளுத்து வாங்குது” என மில்லில் வேலை செய்பவரிடம் சொல்லியவனின் கைகள் தன் வேலையைச் செய்தாலும், மனம் என்னவோ அவனுடைய மங்கையிடம் தான் இருந்தது.

 

இப்போது இடியையும் மழையின் வேகத்தையும் பார்க்கும் போது அருந்தமிழின் பயம் தான் நினைவில் ஆடியது. அப்பாவின் அதிர் சொல்லுக்கே பயம் கொள்ளும் அவள் இடியின் கர்ஜனையில் என்ன செய்து கொண்டிருப்பாளோ?

 

“தம்பி! மிச்சம் இருக்கறதை நாங்க பாத்துக்கறோம். நீங்க ஊட்டுக்கு கெளம்புங்க. அங்க அம்மணி ஒத்தைல இருக்கும்” என அங்கே வேலை செய்பவர் சொல்ல, மழையில் மட்டைகள் நனைந்து விடாமல் இருக்கும் படி செய்யும் வேலைகளும் ஓரளவு முடிந்திருக்க, மாறன் அங்கிருந்து கிளம்பிவிட்டிருந்தான்.

 

விரைந்து பண்ணை வீட்டிற்கு வர, முதல் மழை வரும் போதே மின்சார வாரியம் தன் கடமையைச் செய்திருந்ததால் அவ்வீடே இருளில் இருந்தது.

 

“தமிழ்! தமிழ்!” என அழைத்தபடியே தான் உள்ளே வந்தான்.

 

முதல் அழைப்பிற்கே வந்திருக்க வேண்டியவள் அதன் பிறகு எத்தனை முறை அவன் அழைத்தும் வராதிருக்க, வேகமாய் அவர்களது அறைக்குச் சென்று பார்த்தான்.

 

இரு கைகளாலும் காதை நன்கு அடைத்து,

 

“அர்ஜுனா அர்ஜுனா” என்று உச்சரித்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்திருந்தாள் அருந்தமிழ் தேவி.

 

அவளைப் பார்த்ததும் சற்று ஆசுவாசப்பட்டவன் விரைந்து தன் ஈர உடைகளை மாற்றிவிட்டு வீட்டை பூட்டிவிட்டு வர, அப்போதும் தமிழ் அப்படியே இருக்க

 

“தமிழ்! நான் வந்துட்டேன். பயப்படாதீங்க” என்று அவள் கையை விலக்கி விட்டான். கண்களைத் திறந்தவள் மாறனைக் கண்டதும்,

 

“இனி என்னைய இப்படி தனியா விட்டுட்டு போகாதீங்க” என்று வேகமாய் அவன் நெஞ்சத்தில் தஞ்சமாகிக் கொண்டாள்.

 

அவளிருக்கும் நெஞ்சமதில் தஞ்சம் புகுந்தவளை அன்பாய் அரவணைத்துக் கொண்டான் நன்மாறன்.

 

இனி மழையோசையோ இடியோசையோ அவளைச் சென்றடையாது. அவன் இதயத்தின் ஓசை மட்டுமே அவள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் என்றறிந்து வானம் தன் இசைக் கச்சேரியை நிறைவு செய்து கொண்டது.

 

     

வாசம் வீசும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!