Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 23

மண்வாசம் 23 :

 

சாரல் மழை சட்டென மறைந்த விடியற் காலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் குலசேகரன். அவனுக்கு வெகு அருகில் ஒலித்த கொலுசொலியில் அவன் துயில் மெல்ல கலையத் துவங்கியது.

 



Advertisement

“மாமாஆஆ…”

 

அரும்பின் குரல் தேவகானமாய் அவன் செவிகளைச் சென்றடைய, அவள் தன் மென்விரல்களால் அவன் முகத்தை வருடியதில் அவன் அதரங்கள் அழகாய் விரிந்தது.

Advertisement

 

Advertisement

இருந்தும் கண்விழிக்கவில்லை அந்தக் கள்வன். உடனே அவளது கூர்மையான நிகம் கொண்டு அவன் கன்னத்தில் கோடிட, அவள் கரத்தை தன் கரத்தால் சிறை செய்தான்.

 

ஏதோ குச்சியைப் பிடித்ததுபோல் இருக்க, இப்படி மெலிந்துவிட்டதா தன்னவள் கரம் என்ற யோசனையில் மெல்ல கண்விழித்தவன் பெரிதாய் அதிர்ந்துபோனான்.

Advertisement

 

வெள்ளையன் தன் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு தன் முன்னங்காலை விடுமாறு சன்னமாய் குறைக்க,

 

“அட கெரகம் புடிச்சவனே” என குலசேகரன் அவனைப் பிடித்து தள்ள, திண்ணையில் இருந்து துள்ளிக் குதித்து வெளியே ஓடினான்.

 

உள்ளிருந்து வந்த அரும்பு குலசேகரன் எழுந்து உட்காந்திருப்பதைக் கண்டு,

 

“எழுந்துட்டியா மாமா? உள்ளார நான் டீ போட்டு வெச்சிருக்கேன் நீ சீக்கிரம் மொகம் கழுவிட்டு வா. அதுக்குள்ள நான் போய் ரோட்டு பைப்புல ரெண்டு கொடம் தண்ணி புடிச்சாந்தர்றேன்” என குடத்தோடு கிளம்பினாள். செல்பவளையே பார்த்திருந்தவன்,

 

“அக்கா மவள கட்டுனவனெல்லாம் ஆண்டியாத்தேன் போகோணுமோட்ருக்குது. கல்யாணம் ஆகி இத்தனை நாளாச்சு, ஒரு வாட்டியாச்சும் பக்கத்தால வந்து பாசமா எழுப்பியிருப்பாளா. உனக்கு எதுக்கும் கொடுத்து வைக்கலடா குலசேகரா. காலம்பூரா இப்படி கனவுலையே பொழப்ப ஓட்டவேண்டியதேன்” என புலம்பியபடி பின்வாசலுக்கு நகர்ந்தான்.

 

வெகுநேரம் ஆகியும் அரும்பு திரும்பாதிருக்க, தேநீர் அருந்திவிட்டு அவனே சென்று பார்த்தான். அனுமார் வால் போல் நீண்டுகொண்டே சென்றது மகளிர் அணி. குழாய் முன்பு குழாயடி சண்டை வேறு நடந்துகொண்டிருக்க, அதை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள் அரும்பு.

 

“என்னடி சின்ன புள்ளையோட்டம் இங்க நின்னு வேடிக்கை பாத்துட்டு இருக்குற” என குலசேகரன் அவள் தோளைத் தட்ட, அவனையும் அங்கு பார்க்குமாறு கண்களால் காண்பித்தாள்.

 

“வெத்தல வெத்தல கொழுந்து வெத்தலையாம் கொல்லைக்கு போக தண்ணி பத்தலையாம். எவடி அவோ என்ர கொடத்த தள்ளி விட்டவோ? அல்லாருக்கும் முன்னால புயலோட்டம் ஓடியாந்து கொடத்த வெச்சவடி நானு” என இரு விரலை வாயிற்கு கொடுத்து வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு சிவந்த இதழ்களோடு நின்றிருந்தார் ஒரு பெண்.

 

“ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சுதானாம் தலகாணிக்குள்ள இருக்குறது பூராம் பஞ்சுதானாம். நீ புயலோட்டம் வந்தா நான் பூகம்பமோட்டம் வந்து கொடத்த வெச்சேனாக்கும்” என பதிலுக்கு தன் அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிந்தவாறு இன்னொரு பெண் சண்டைக்கு நிற்க,

 

“ஓ.. வார்த்தை போர் நடக்குதா. கொடத்த இப்படி கொண்டா” என்று குலசேகரன் அரும்பிடமிருந்து குடத்தை வாங்கிக்கொண்டு செல்ல,

 

“அட குலசேகரன் தம்பி வருது வழி விடுங்க” என அவர்கள் விலக,

 

“ரெண்டே கொடமுங் க்கா” என்றான்.

 

“நீங்க புடிச்சிட்டு போங் தம்பி” என்றுவிட்டு அவர்களது சண்டையை தொடர்ந்தனர். அவன் போன வேகத்தில் தண்ணீரோடு திரும்ப வந்ததைக் கண்டு அரும்பு வாயைத் திறந்து பார்த்திருந்தாள்.

 

“ஏய் மீச மவளே ஊருக்குள்ள மாமனோட செல்வாக்கை பாத்தியா” என புருவம் உயர்த்த,

 

“சூப்பர் மாமா. இனி ரேசன் கடைக்கும் உன்னையவே கூட்டிட்டு போறேன்” என்று ஒரு குடத்தை வாங்கி அவள் இடுப்பில் வைத்துக்கொண்டு நடக்க, தலையை இடவலமாய் அசைத்து ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் அவனிடம் இருந்த குடத்தை தோளில் சுமந்தபடி அவள் பின்னால் சென்றான்.

 

விக்ரமனின் வீட்டு வாசலை அலங்கரித்த புள்ளிக் கோலத்தையே பார்த்தவாறு நின்றிருந்தார் ஆறுச்சாமி.

 

“அண்ணா! ஏன் அங்கயே நின்னுட்டீங்க? உள்ளார வாங்க” என்று அவரை அழைத்த முத்துலட்சுமி,

 

“அரசி கண்ணு, ஆரு வந்திருக்காங்கன்னு பாரு” என குரல் கொடுக்க,

 

“இதோ வர்றேனுங் அத்த” என்று வேகமாய் வெளியே வந்தவள் அறைக்குள்ளே வரவிருந்த விக்ரமனை இடித்து பின்னால் நகர்ந்தாள்.

 

“பாத்து வரமாட்டியா” என அவன் அவளுக்கு வழிவிட்டு நிற்க,

 

“ஏன் நீங்க பாத்து வர்றது” என நகர்ந்து வெளிய வந்தவள் அங்கு விரைப்பாய் நின்றிருந்த ஆறுச்சாமியைக் கண்டு அதிர்ச்சியில் அப்படியே அசையாது நின்றாள்.

 

அன்று நடந்ததையே மனதில் வைத்துக்கொண்டு அவரோடு பேசாது போய்விடுவாளோ என விக்ரமனும் முத்துலட்சுமியும் பார்த்து நிற்க,

 

“வாங்க ப்பா. உக்காருங்க” என புன்னகை முகமாய் நாற்காலியை அவருக்கு எடுத்துப் போட்டாள் அரசி.

 

அவர் எதுவும் பேசாது அமர்ந்துகொள்ள,

 

“இருங்க குடிக்க மோர் கொண்டாறேன்” என அரசி உள்ளே செல்ல, நம்பமாட்டாது பார்த்திருந்தார் அவளை. அவர் பார்வை அறிந்து,

 

“கோலமெல்லாம் நம்ம அரசிதேன் போட்டாளுங் அண்ணா. நாங்கூட வெளிநாட்டுல படிச்ச புள்ள எல்லாத்தையும் மறந்திருக்கும்னு நெனச்சேனுங். பூ கட்டுறதுல இருந்து எல்லாந்தெரிஞ்சு வெச்சிருக்கா. என்னைய ஒரு வேல செய்ய விடுறது இல்லைங். சமைக்குறதெல்லாம் அவதேன். கோழி கூப்புடவே எழுந்து ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ள எல்லாத்தையும் அவளே செஞ்சு முடிச்சிருவா” என்று சொல்ல, பெற்றவருக்கு அத்தனை பெருமையாய் இருந்தது.

 

இருந்தாலும் உள்ளுக்குள் சிறு கோபமும் இருந்தது. பிறந்த வீட்டுச் சீர்களை ஏற்கவில்லையே அவள். பாத்திர பண்டங்கள் கட்டில் மெத்தை என அனைத்தையும் அனுப்ப, அக்காவிற்கு செய்வதானால் தனக்கும் செய்யுங்கள் இல்லையென்றால் வேண்டாம் என்று திருப்பி அனுப்பிவிட்டாள். ஆறுச்சாமியும் இறங்கி வராதிருக்க, அரசி மறுவீடு செல்லும் நிகழ்வையும் ஏற்கவில்லை. அத்தனை பிடிவாதம் அவளிடத்தில்.

 

“இந்தாங் ப்பா” என்று அரசி மோரை கொடுக்க, அதை வாங்கிப் பருகியவர்

 

“எப்படி இருக்குற?” என்று வினவ,

 

“நல்லா இருக்குறனுங் ப்பா. அத்தையும் மச்சானும் கூட இருக்கும் போது எனக்கென்னங் கொறை இருக்கப் போகுது” என, அங்கிருந்த மூவருக்குமே அவளது பேச்சில் அகம் நிறைந்துபோனது.

 

அதிலும் ஆறுச்சாமிக்கு, தன் மகள் இத்திருமணத்தை ஏற்றுக் கொண்டு புகுந்த வீட்டில் பொருந்திப் போய்விட்டாள் என்பது நிம்மதி அளித்தது. ஆனால் அவள் அடுத்து கூறிய விசயத்தால் நொடியில் அவர் நிம்மதி பறிபோனது.

 

“அக்கா தான் எப்படி இருக்காளோனு தெரியலைங். நீங்க ஏத்துக்காததுனால அவங்க வீட்டுலையும் அவங்களை ஏத்துக்கலயோட்ருக்கு. அதான் தனிக்குடித்தனம் வெச்சுட்டாங்க. நம்ம வீட்டுல வசதியா வாழ்ந்தவ, அங்க காட்டுச்சாளைல ஒருத்தியும் என்ன கஷ்டப்படுறாளோ பாவம்” என்றிருந்தாள்.

 

அவர் அமைதியாய் இருக்க,

 

“அப்பறங் ப்பா நாயகி ஆத்தா நல்லா இருக்குறாங்களா? பேசியே ரொம்ப நாள் ஆச்சு. நீங்க வரும்போது ஆத்தா என்ன பண்ணிட்டு இருந்தாங்க” என்று கேட்க, அவளை ஆழமாய் பார்த்தார் ஆறுச்சாமி.

 

அப்பத்தாளும் பேத்தியும் கைபேசியில் உரையாடுவது எல்லாம் அவர் அறிந்ததே. சற்றுமுன் அவர் வீட்டில் இருந்து கிளம்பும்போது கூட,

 

“ஏய் சின்னக் குட்டி இன்னிக்கு என்ன கொழம்பு வெச்ச? ஓ வெண்டக்கா புளிக் கொழம்பா” என்ற நாயகியின் பேச்சு காதில் விழத்தான் செய்தது. இருந்தும் கண்டுகொள்ளாது கிளம்பிக் கொண்டார். இப்போது மகள் அப்படிக் கேட்கவும்,

 

“வெண்டக்கா புளிக் கொழம்பு எப்படி வைக்குறதுன்னு ஆருகோடயோ பேசிட்டு இருந்தாங்க” என, புன்னகைத்து மழுப்பினாள் அரசி. அவளை விடுத்து விக்ரமனிடம் திரும்பியவர்,

 

“சொசைட்டில உர மூட்டைக வந்திருக்குன்னு சொன்னாங்க மாப்ள. என்னென்ன வந்திருக்குதுங்கலாமா” என்று கேட்க,

 

“ஒரு நிமிஷங் மாமா” என்ற விக்ரமன் உடனே குலசேகரனுக்கு அழைத்தான்.

 

“யூரியா ஐந்நூறு டன், 10:26 உரம் முந்நூறு டன், பொட்டாஷ் முந்நூறு டன், டி.ஏ.பி நூத்தைம்பது டன். எல்லாம் மொத்தமா கூட்டுறவு விற்பனை இணையம் (டான்பெட்) மூலமா தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு விநியோகிச்சிருக்காங்க மாப்ள” என குலசேகரன் சொல்ல,

 

“மத்தியானமா போய் மூட்டைகளை ஏத்திட்டு வந்து தோப்புல போட்டுறலாமா மச்சா” என விக்ரமன் கேட்க,

 

“அதெல்லாம் நேத்து பொழுதோடையே நம்ம தோப்பு சாளைல எறக்கியாச்சு மாப்ள. ஆறுச்சாமி மாமனுக்கும் சுத்தி இருக்குற தோப்புக்காரங்களுக்கும் சேர்த்தே இருக்கும். பொறவு போய் பிரிச்சு போட்டுக்கலாம்” என, சரியென்றுவிட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டான் விக்ரமன்.

 

ஆறுச்சாமி இருக்கையில் இருந்து எழ,

 

“சாப்ட்டுட்டு போலாமுங் ப்பா” என்று அரசி அழைக்க, மறுத்தவர்

 

“அப்போ நான் கெளம்புறேன் லட்சுமி. உர மூட்டை எடுக்கற விசயமாத்தேன் கேட்டுட்டு போலாம்னு வந்தேன்” என்று விக்ரமனிடமும் முத்துலட்சுமியிடமும் விடைபெற்றுச் செல்ல,

 

‘அதைய போன்லையே கேட்டிருக்க வேண்டியதுதானோ. என்னையத்தேன் பாக்க வந்தார்ன்னு ஒத்துக்க மாட்டாரே’ என நினைத்து, செல்லும் அவரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அரசி.

 

“உனக்கு ஆஸ்பத்திரிக்கு நேரமாவலையா கண்ணு” என்று முத்துலட்சுமி கேட்கவும், மணியை பார்த்தவள் சில நிமிடங்களில் விரைந்து கிளம்பி வர, வாசலில் வண்டியோடு காத்திருந்தான் விக்ரமன். அரசி வந்து வண்டியில் ஏறிக் கொண்டு அவன் தோள் பற்றிக் கொள்ள,

 

“போய்ட்டு வர்றேங் ம்மா” என விக்ரமன் தன் அன்னையிடம் விடைபெற,

 

“போய்ட்டு வர்றேங் அத்த” என அரசியும் விடைபெற,

 

“பாத்து போய்ட்டு வாங்க” என்று இருவரையும் வழியனுப்பினார் முத்துலட்சுமி.

 

மழை விட்டும் தூவானம் விடவில்லை. தூறல் போடத் துடித்துக் கொண்டிருந்தது. இருபுறமும் பசுமைக்கு பஞ்சமில்லாத தென்னந்தோப்புகள். அதற்கிடையில் நீண்டு கொண்டே செல்லும் தார் ரோடு. அதில் அவள் மனம் நிறைந்தவனோடு மேற்கொள்ளும் பயணம். இந்த நிமிடம் இப்படியே தொடராதா என்றிருந்தது அரசிக்கு.

 

சிலிசிலுவென வீசும் காற்று அவள் கூந்தலைக் கலைத்து விளையாடி கோபமூற்றினாலும் இடது கையால் அதை ஒதுக்கினாளே தவிர வலது கையை அவன் தோளில் இருந்து எடுத்திருக்கவில்லை.

 

அத்தனை கஷ்டங்களையும் தாண்டி அவன் கைப்பிடித்தது ஒன்றே போதுமானதாய் இருந்தது அரசிக்கு. வாழ்வில் இழக்கக் கூடாத ஒன்றை இழக்கும் தருவாயில் அது தன்னிடமே திரும்பச் சேரும்போது மனம் அடையும் மகிழ்சிக்கு அளவே இல்ல. அந்த நிம்மதிக்கு முன் வேறெதுவும் பெரிதாய் தெரியவில்லை அவளுக்கும்.

 

தன் சொல் தன்னையே சுடும் என்றுணர்ந்தவள் தான் ஆற்றிய செயலால் அவனுக்கு ஏற்பட்ட மனவருத்தத்தைப் போக்கிவிடத் தவிக்கிறாள். ஆனால் அவன் அந்நிகழ்வை மறப்பதுபோல் தெரியவில்லை. இதையும் தன்னால் கடந்து வரமுடியும், தன் அத்தைக்கருப்பனை இயல்பிற்கு மீட்டுவர முடியும் என்ற உறுதியுடன் அவள் நாட்கள் நகர்கின்றன.

 

மெல்ல அவன் தோள் சாய்ந்தவள்,

 

“மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன் என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க வேண்டுகிறேன்” என்று பாட, தன் பக்கவாட்டில் திரும்பியவன்

 

“ரோடுனுங்கோட பாக்காம இங்கயே எறக்கி விட்டுப்போட்டு போயிருவேன். பேசாம வரோணும்” என்றதும்

 

“கூல் மிஸ்டர். அத்தக்கருப்பன்” என நிமிர்ந்து அமர்ந்துகொண்டாள்.

 

சில நிமிடங்களில் கால்நடை மருத்துவமனை வந்திருக்க அரசி இறங்கிக் கொள்ள,

 

“இன்னைக்கு பொழுதோட போய் உனக்கு ஒரு வண்டி எடுத்துக்கலாம்” என்றான் விக்ரமன்.

 

“எதுக்குங் மச்சா?” என அவனை புரியாது பார்த்தாள். ஒருவேளை தன்னோடு வரப்பிடிக்காமல் தனியே செல்லச் சொல்கிறானோ என்ற எண்ணத்தில்.

 

“நீ யாரையும் எதிர்பார்க்க வேண்டி இருக்காது” என,

 

“நான் இதுவரைக்கும் யாரையும் எதிர்பார்த்ததில்ல. உங்களை தவிர” என்றாள் அழுத்தமாய். அந்த அழுத்தத்தில் அவள் முகம் கண்டவன்,

 

“நோவு வந்த ஆடு மாடுகள இங்க கொண்டு வந்தா நீ இங்க வெச்சே வைத்தியம் பாத்துக்காலம். ஆனா தூரந்தொல இருக்குறவங்க இவ்வளவு தூரம் புடிச்சார முடியாது. அதுவும் கன்னு போடுற மாடா இருந்தா நீ அவங்க எடத்துக்கு போறதோட்டம் இருக்கும். அவசரத்திற்கு வர்றவங்க பெரும்பாலும் ஆம்பளைகளா தான் இருப்பாங்க. அவங்க வண்டில வந்து உனக்கு தகவல் கொடுத்தா நீ யாரோட போவ? எல்லா நேரமும் நானே கூட்டிட்டு போக முடியுமா? இப்போ புரியுதா ஏன் சொன்னேன்னு” எனவும் தான் அவன் யோசித்த விதம் புரிந்தது.

 

“உனக்கு நல்லா தெரிஞ்ச எடம்னா மட்டும் நீயே போ. இல்லைனா என்னைய கூப்புடு நானே வந்து கூட்டிட்டு போறேன். வேலை முக்கியந்தேன் அதே நேரத்துல உன்ர பாதுகாப்பும் முக்கியம்” என, முகம் மலர புன்னகைத்தவள் ஒரு தலையசைப்போடு திரும்பி நடந்தாள்.

 

சில நொடிகளில்,

 

“வேங்கை நில்லு” என்று விக்ரமன் அழைக்க, மெல்லத் திரும்பியவளை தன் அருகே வருமாறு கண்ணசைத்தான். அவளும் நொடியில் பல மனக்கோட்டைகளை எழுப்பியவாறு வந்து நிற்க,

 

“சாப்பாட்ட மறந்துட்டு போற” என பேகை நீட்டினான்.

 

உடனே அவள் முகம் ஒரு போக்கில் போக, பேகை பிடித்து இழுத்தபடி திரும்ப அவன் விடாது பிடித்திருந்தான். பக்கவாட்டில் திரும்பியவள்

 

“விடுங்க” என,

 

“அப்படியெல்லாம் விடமுடியாது” என்றதில் அவன்புறம் திரும்ப,

 

“நேரத்திற்கு சாப்பிடு. நேத்தோட்டம் சாப்பிடாம திருப்பி கொண்டுவந்தா வீட்டுக்குள்ள விடமாட்டேன். கட்டக்காரி” என்றுவிட்டு வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றான்.

 

யிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த வேலாத்தாள், ஆட்டுக்கால் சூப்பை ரசித்து சுவைத்து குடித்துக் கொண்டிருந்தார்.

 

காலை உணவிற்காக வயலில் இருந்து வீடு திரும்பிய முத்துச்சாமி அவரது காம்பௌண்டிற்குள் நுழைய முற்பட்ட போது,

 

“முத்துச்சாமி செத்த நில்லு” என்ற குரலில் திரும்ப, தண்ணீர் குடத்தோடு நின்றிருந்தார் அவருக்கு அக்கா முறை ஆகவேண்டிய ஒரு பெண்.

 

“உன்ர மாப்ள சேகரன் உன்ர மவள கையுல வெச்சு தாங்குறானப்பா. ஒரு கொடம் தண்ணி எடுக்க வெளிய விட மாட்டீங்குறான். நீயே தேடி இருந்தாலும் உன்ர மவளுக்கு இப்படி ஒருத்தன் கெடைக்க மாட்டான். உன்ர மக அங்க மகாராணியோட்டம் இருக்குறா” என்று சொல்ல முத்துச்சாமிக்கு அத்தனை ஆனந்தமாய் இருந்தது.

 

“உன்ர குடும்ப சமாசாரமெல்லாம் எனக்குந்தெரியும் முத்துச்சாமி. சின்னம்மா பேச்ச கேட்டுக்கிட்டு பெத்த புள்ளைய உட்டுறாத. கடைசி காலத்துல அவதேன் உனக்கு கஞ்சி ஊத்தோணும். குலசேகரன் இதுக்கு முன்னால உன்ர மச்சான் மட்டுந்தேன் ஆனா இன்னிக்கு உன்ர ஊட்டு மாப்ள. அவனுக்கு கொடுக்குற மருவாதைல கொறை வெச்சுப்போடாத. பாத்து நடந்துக்கோ” என்றுவிட்டு நகர, பெரிதாய் சிந்தனை வயப்பட்டபடி அவரும் உள்ளே வந்தார்.

 

கை கால் அலம்பிவிட்டு உணவருந்த வர, வேலாத்தாவும் மகனருகில் வந்தமர்ந்தார்.

 

எப்போதும் போல் அவருக்கு தலை வாழை இலை விரிக்கப்பட்டு அதில் சாதமும் கறிக்குழம்பும் பரிமாறப்பட, எலும்பை கடித்து நொறுக்கியவர்

 

“கொழம்புல ருசியும் இல்ல மணமும் இல்ல” என்று மரகதத்தை குறை கூற,

 

“மரகதம்! இன்னிக்கு கொழம்பு என்ன இத்தன ருசியா இருக்குது. மொளகரச்சு வெச்சிருப்பியோட்டம் மணம் தூக்குது. இன்னும் கொஞ்சம் ஊத்து” என்றார் முத்துச்சாமி.

 

இத்தனை வருட வாழ்க்கையில் மரகதத்திற்கு தன் கணவரிடம் இருந்து கிடைக்கும் முதல் பாராட்டு. முத்துச்சாமிக்கு இது காலம் கடந்து கிடைக்கப் பெற்ற ஞானோதயம் ஆகினும் அதனால் மரகதத்தின் மனம் வெகுவாய் குளிர்ந்து போயிருந்தது. அன்பொழுக அவரருகில் வந்து பரிமாறினார்.

 

இருவரையும் அன்யோன்யமாய் கண்டதில் வேலாத்தாளின் மனம் என்னவோ கொழுந்து விட்டு பற்றி எரிந்து கொண்டிருந்தது.

 

ருந்தமிழும் நன்மாறனும் அங்கும் இங்கும் பரபரப்பாய் ஓடிக் கொண்டிருந்தனர்.

 

“என்னங்க” என மாறனை அழைத்த தமிழ் அவன் கையில் கைகடிகாரத்தை கொடுத்துச் செல்ல அதை கட்டிக்கொண்டவன்,

 

“தமிழ்! இந்தாங்க உங்க லஞ்ச் பாக்ஸ்” என சமையல் அறையிலிருந்து மதிய உணவு டிப்பனை எடுத்துவந்து கொடுத்தான். அதை வாங்கி தன் கைப்பையில் வைத்தவள்,

 

“எல்லாம் எடுத்துட்டீங்களா? போலாங்களா” என்று கேட்க,

 

“எடுத்தாச்சுங்க. நீங்க ஸ்டவ் ஆஃப் பண்ணியாச்சா? பின்வாசலை பூட்டிட்டீங்களா” என்று கேட்க,

 

“பண்ணிட்டேங்க” என்றதும் மாறன் ஜீப் சாவியை எடுத்துக்கொள்ள,

 

“ஒரு நிமிஷங்க” என்றவள் அவன் கைப்பிடித்து அழைத்துச் சென்று சாமி படத்தின் முன்பு நிறுத்தி அவன் நெற்றியில் கீற்றாய் விபூதி இட, புன்னகைத்த மாறன் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்துவிட்டான்.

 

“இன்னைக்கு மாமாவுக்கு வாடகை கொடுக்குற நாளுங்க” என்று நினைவு படுத்த,

 

“நான் மில்லுக்கு போய்ட்டு அப்படியே கொடுத்துட்டு வந்துடறேங்க” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு வந்து வண்டியில் ஏறிக்கொள்ள,

 

“அரசி இன்னும் கூப்புடலைங்களா?” என்று எதிர்பார்ப்பாய் வினவினாள் அருந்தமிழ். அதில் புன்னகைத்த மாறன்,

 

“அவ ஏதாவது வேலையா இருப்பாங்க” என்றுவிட்டு வண்டியைக் கிளப்பினான்.

 

சில நிமிடங்களில் இருவரும் சேத்துமடையின் முக்கியச் சாலையை அடைந்திருக்க, மாறனுக்கு கைபேசியில் அழைத்தாள் அரசி. அவன் அருந்தமிழின் கையில் கைபேசியை கொடுத்துவிட, அவள் அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டாள்.

 

“என்னங் மாமா பண்ணுறீங்க” என்று அரசி கேட்க,

 

“வண்டி ஓட்டிட்டு இருக்கேன்” என மாறன் சொல்ல,

 

“ஓ! நான் அப்பறம் கூப்பிடுறேன்ங்” என்று வைக்கச்செல்ல

 

“இரு அரசி. போன் டீச்சர் கையில தான் இருக்கு” என்று சொல்ல தமிழ் அவனை முறைத்து வைத்தாள். மறுமுனையில் அரசியோ,

 

“இருந்து மட்டும் என்ன பிரயோஜனமுங் மாமா. டீச்சரம்மா தான் என்ரகிட்ட பேசமாட்டாங்களே” என்றாள். தமிழ் மாறனையே பதில் சொல்லுமாறு கண்காண்பிக்க,

 

“அப்படி இல்ல அரசி. ஆறுச்சாமி மாமா தான் எங்களை தள்ளி வெச்சுட்டாரே. எங்களோட பேசுறதுனால உனக்கும் மாமாவுக்கும் பிரச்சனை வரக் கூடாதுன்னு தமிழ் நெனைக்குறாங்க” என்றான்.

 

“அதெல்லாம் பாத்தா முடியுமாங் மாமா. அவரு ஏதோ ஒரு கோபத்துல தமிழு தன் பொண்ணே இல்லைன்னுட்டாரு. அதுக்காக அக்கா அவரு மக இல்லைன்னு ஆய்டுமா இல்ல நானும் எங்கக்காளும் கூடப் பொறக்கலைன்னு ஆய்டுமா” என்றாள்.

 

“எல்லாம் மாமா ஏத்துக்குற வரைக்கும் தான் அரசி” என மாறன் சொல்ல,

 

“நாளைக்கே அவரு ஏத்துக்கலாம், அப்போ மட்டும் எங்கக்கா வந்து என்ரகிட்ட பாசமா பேசட்டும் பொறகு இருக்குது அவளுக்கு” என்றவள்,

 

“அப்பறங் மாமா, அப்பா இன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்தாரு. சீக்கிரமே அவளை தேடியும் வருவாருன்னு சொல்லுங்க” என சத்தமாய் சொல்ல, தமிழுக்கு நொடியில் கண்கள் பணித்தது.

 

“சொல்லப்போனா உங்க ஊட்டுக்காரம்மா மேல எனக்குத்தேன் கோபம் அதிகமுங் மாமா” என்று அரசி சொல்ல, தமிழை ஒரு பார்வை பார்த்துவிட்டு

 

“ஏன் அரசி?” என்றான் மாறன்.

 

“உங்களை விரும்புறேன்னு அவ கடைசி வரைக்கும் என்ரகிட்ட சொல்லலைங் மாமா. உங்க பரம்பரை வளையல் அவ கைக்கு வந்தப்பவே ஒரு வார்த்த சொல்லி இருந்தா நான் அன்னிக்கே உங்கள ஆள்விட்டு தூக்கியாந்து எங்கப்பா முன்னாடி நிறுத்தியிருப்பேன்” என, மாறன் சிரித்தே விட்டான்.

 

உடனே,

 

“ஓஹோ அப்போ நீ மட்டும் என்ரகிட்ட சொன்னையா உனக்கு விக்ரமன் மச்சான தான் பிடிக்கும்னு? பெருசா தியாகம் பண்ணுறதா நெனச்சுட்டு என்ன காரியம் பண்ணப் பாத்த. நீ விரும்புன வாழ்க்கையை தூக்கிப் போடுற அளவுக்கு நான் முக்கியமா போய்டேனாடி” என தமிழ் பேச, மறுமுனையில் அரசி அமைதி காக்க, மாறன் வண்டியை ஓரமாய் நிறுத்தினான்.

 

“அப்பா என்னைய தான் மன்னிக்கல. நீ இதுவரைக்கும் என்ரனால கஷ்டப்பட்டது போதும் இனியாச்சும் விக்ரமன் மச்சானோட நம்ம குடும்பத்தோட சந்தோசமா இருக்கட்டும்னு தானே நான் விலகிப்போறேன். உன்ர கூட பேசாம என்ரனால மட்டும் இருக்க முடியுமா” என ரோடென்றும் பாராது தமிழ் அழ, மாறன் அவள் தோள் பற்றி சுற்றுப்புறம் உணர்த்த அமைதியானாள்.

 

ஒரு பெருமூச்சை எடுத்துக் கொண்ட அரசி,

 

“தமிழக்கா! இது எதுவுமே நம்ம கையில இல்ல. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் நடக்குறத எல்லாம் நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வரமுடியாது. ஏதேதோ நடந்திருச்சு. எல்லாம் நன்மைக்கே” என்றவள்,

 

“அப்பறம் நீ இப்ப என்ரகூட பேசுனதுல எனக்கு ரொம்ப சந்தோசம். முடிஞ்சா மாமாவோட சாய்ங்காலம் என்ர வீட்டுப்பக்கம் வா. இல்லைனா நான் நாளைக்கே மச்சானை கூட்டிட்டு அங்க வர்றேன்” என, தமிழ் யோசனையோடு கைபேசியைப் பார்க்க 

 

“மச்சினிச்சி பெரியாளு தான். உங்களையவே வாயத் தொறந்து பேச வெச்சுட்டாங் தமிழ்” என்றான் மாறன். மறுமுனையில் புன்னகைத்த அரசி,

 

“மாமா! எங்கக்கா அழுக ஆரம்பிச்சா இப்போதைக்கு நிறுத்த மாட்டா. சீக்கிரம் சமாதானம் பண்ணப் பாருங்க. அப்பறம் பள்ளிக்கூடத்துக்கு போறதுக்கு டீச்சரம்மாவே அழுகுதுன்னு நெனச்சு பசங்க பயந்துடப் போறாங்க” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டாள்.

 

அருந்தமிழ் புன்னகைக்க, செல்லமாய் அவள் தலையை பிடித்து ஆட்டிவிட்டு வண்டியைக் கிளப்பினான் நன்மாறன்.

 

சிறிது தூரம் கடந்திருந்த நிலையில்,

 

“அரசியையும் உங்களையும் பாக்கும்போது எனக்கு கூடப்பொறந்தவங்க யாரும் இல்லையேன்னு வருத்தமா இருக்குங்க தமிழ்” என்றான் மாறன். தமிழ் பேச வாய் திறப்பதற்குள்,

 

“மாறண்ணா” என்று ஒலித்த குரலில் அவன் பிரேக்கை அழுத்தியிருக்க,

 

“எங்களைய மறந்துட்டியா ண்ணா? நீ பாட்டுக்கு கட்டவண்டிய நிறுத்தாம போற” என மூச்சிரைக்க ஓடிவந்து வண்டியில் ஏறிக்கொண்டனர் மூன்று முத்துக்களும்.

 

பின் கலகலப்பாய் ஆனது அவர்களது பள்ளி நோக்கிய பயணம்.

 

 

 வாசம் வீசும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!