Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Greakka Manimagudam

கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) 7ம் அத்தியாயம்

கிரேக்க மணிமகுடம்

(வரலாற்று நெடும்தொடர்)

7. சூழ்ச்சியின் சூட்சுமம்

“காவிரிப் படப்பை உறந்தை அன்ன”
என்னும் அகநாற்று பாடலுக்கு ஏற்ப உறந்தை என்ற உறையூர் சோழர் காலத்தில் செழித்து கொழித்து கோலோச்சி நின்றது. நேற்று சமைந்த எழிலரசி வெட்கத்தில் புன்னகைப்பது போல உறையூரின் கரைகளை கடக்கும் போது, ஆற்றின் வடிவில் இருக்கும் பொன்னி மகள் பூரித்து புன்னகைப்பாளாம்… அவ்வளவு காதல் காவிரிக்கு உறையூரின் கரைகள் மீது….



Advertisement

இரண்டாம் சாமம் கடந்து சில நாழிகைகள் ஆகியிருந்த மையிருட்டு மந்தார வேளையில், ஆடிக்காற்று சங்கீதம் பாடி சுரம் கூட்ட, ஆலவாய் வவ்வால்கள் சிறகடித்து சிதறி பறக்க, உறையூரின் ராஜபாட்டையில், வெள்ளை புரவியொன்று சென்ற மட்டற்ற வேகத்தில் புள்ளிமான் கூட்டங்கள் விக்கித்து எட்டிப் பார்த்தன.

யவனர் மரக்கலத்தில் வந்த, சீனவணிகன் விற்ற, அரபு நாட்டு வெண்புரவி…. நாகை கடற்கரையின் வெண்மணலில் பழக்கிக்கொண்ட கால்களை, விஸ்தாரமாக எட்டி நடைப்போட்டு ஓடிக்கொண்டிருக்க…. அதன் மீது முல்லை கொடி வனைந்த, மாங்கனி… உடல் வளைத்து, வெண்புரவி மேனிக்கு வலித் தராத எடையில், முகத்திரையிட்டு, வெற்றித் திருமகளாய் வீற்றிருந்தாள் வேல்விழி தேவி…..

மின்னல் வேகத்தில் உறையூரின் ராஜபாட்டையை கடந்து கோட்டை வாயிலுக்குள் பிரவேசித்த வேல்விழியின் புரவியை கோட்டை காவலர் இடைமறிக்க புரவியை நிறுத்தினாள்….

Advertisement

யாரம்மா நீ…??? எங்கிருந்து வருகின்றாய்???!!! என்ற காவலனிடம்… தான் நாகையிலிருந்து வந்திருக்கும் இளமாறனின் ஒற்றுப்பெண்… ஞானபிரம்மரை சந்தித்து தகவல் ஒன்றை பகிர வேண்டி கட்டளை என்று கூறினாள்.

Advertisement

அடையாளம் உள்ளதா? என்று காவலன் கேட்க… தன் இடுப்பிலிருந்து ஒரு முத்திரை மோதிரத்தை எடுத்துக் காட்டினாள் வேல்விழி… இந்த முத்திரை மோதிரத்தை ஆவூர் இளையராணி,… வேல்விழி பாதுகாப்பு கருதி கொடுத்து இருந்தாள்….

முத்திரை மோதிரத்தை பார்த்த கோட்டை காவலன் வழியை திறந்து அனுமதிக்க… கோட்டைக்குள் பிரவேசித்தாள் வேல்விழி….

உறையூர் கோட்டை வெளிப்புற தோற்றம்

மதுரை கோட்டைக்குள் திரைமூடிய அன்னபல்லக்கில் பவனி வந்தவள்…. இன்று சோழத்து தலைநகரில் அனுமதி கேட்டு புகரும் நிலையில்…. ஆனாலும் வேல்விழிக்கு உறையூர் புதிது அல்ல. இளம் வயதில் இந்த கோட்டைக்குள் பலமுறை தோழியர் புடைசூழ உடன்பிறவா தமையன் இளமாறன் பாதுகாப்பில் உற்சாகமாக ஓடி விளையாடி இருக்கின்றாள். தெப்பக்குளத்தை சுற்றி வேண்டுதல் செய்தும் இருக்கின்றாள். இந்த தேசத்தில், இந்த கோட்டையை அவளும் ஒரு நாள் அரசியாக ஆளவேண்டும் என்று…
இடப்புறம் செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்றால் அரண்மனை அலுவலர் குடியிருப்பு வந்துவிடும். அதோ அங்கே புலிக்கொடி பறக்கும் உச்சி மாடம் உள்ள மாளிகைதான் ஞானபிரம்மருடையது…. மெதுவாக ஆனால் சீரான வேகத்தில் புரவியை நடத்தி சென்ற வேல்விழி மாளிகையின் முன் நின்றாள். அங்கிருந்த இரவு பணியாளனிடம் புரவிக்கு உணவும் நீரும் கொடுக்க கூறியவள், மாளிகையின் கதவை மெல்ல தட்டினாள்… அப்போது!!!!!?????….

Advertisement

திடீரென அவளது உடலை இருக்கிப் பிடித்த ஒரு முரட்டு கரம்… சட்டென்று அவள் கத்த இயலாவண்ணம் வாயையும் அடைத்து கொண்டது… அதே வேளையில் அவளை தரதரவென்று மாளிகைக்குள் தள்ளி சென்ற முரட்டு உருவம் அவளை மிரட்ட எத்தனித்து தன் குரலை செருமிக் காட்டியது. அடுத்த கணம் பேசத் துவங்கிய அந்த முரட்டு உருவம்….

ஏ பெண்ணே நீ பாண்டிய நாட்டு உளவாளி தானே?? என்ன ரகசியம் வைத்துள்ளாய் மரியாதையாக கொடுத்து விடு… இல்லையென்றால் உன்னை இங்கேயே……. என்று வார்த்தையை முடிப்பதற்குள் சட்டென்று நளினமாக உடலை உதறி பிடியிலிருந்து வாயை விடுவித்த வேல்விழி…. வார்த்தையை முடித்தாள்…

என்னை உங்களின் மார்புக்குள் புதைத்து கொள்வீர்களாக்கும்….!!!??? என்றாள்… அந்த மாளிகையே அதிர சிரித்த அந்த உருவம் அவளை வளைத்து பிடித்திருந்த பிடியை மட்டும் தளர்த்தவில்லை.. மாறாக இன்னமும் இறுக்கமாக அணைத்து பிடித்தது…

ஏது? ஏது…??!! சோழ இளவல் இப்போதே என்னை பிழிந்து சாறாக குடிக்க தீர்மானித்து விட்டார் போலும் என்றாள் வேல்விழி… ஆனால் அந்த, இறுக்கத்தில் எழுந்த காதல் கிறக்கத்தில் லயித்து இன்புற்றாள்…

வேல்விழி எப்படி நான் தான் என்று கண்டு பிடித்தாய்? நீ பாண்டிய இளவரசி என்பதை மீண்டும் நிரூபித்து விட்டாயே… என்று குழைந்து குரல் எழுப்பினான் சோழ இளவல் நலங்கிள்ளி…..

வேல்விழியும், நலங்கிள்ளியும்

பல முறை சேரர்களுடன் நடத்த சமர்களில் கலந்து கொண்டவன் உடலெங்கும் வீரத்தில் விளைந்த விழுப்புண் பெற்றவன், எவருக்கும் சிரிதும் அஞ்சாதவன், தாய் நாட்டை தாயை விட அதிகம் நேசிக்கும், முழுமையான வீரத் திருமகன்…
நீண்ட கரங்கள் இரண்டும் இரும்பில் புடமிட்டு தங்கத்தில் வண்ணம் பூசியவை.. அகன்ற தோள்கள் இரண்டும் பொதிகையும், குடகும்… விரிந்த மார்பில் வங்கத்து நீரை நிரப்பி வைக்கலாம்… அதன் மீது தெரியும் விழுப்புண்கள் யாவும் பல்வகை விலையுயர்ந்த கற்கள்… மார்பை தாங்கிய இடையில் அவ்வளவு பலமும் வீற்றிருக்க, தோளில் புரண்ட சுருள் கேசத்தை துகில் கொண்டு மூடி மறைத்திருந்தான். அற்புதமான நீள்வட்ட முகத்தில் கருவண்டு கண்களும், நிமிர்ந்து வளைந்து வானை குறிவைத்து நின்ற மீசையும் அதன் அடர்த்தியும், அப்பப்பா… இவன் தந்தை கரிகாலனுக்கு பின் இவனுக்கு தான் பொருந்துகின்றது அத்தனை அமைப்பும்வீர வம்சத்து வித்து இங்கே இவனில் தான் விதைக்கப்பட்டு இருக்கின்றதோ????!!!!!…

வேல்விழி அவனின் நினைவை நிஜத்திற்கு திருப்பினாள்… கோமகன் சோழருக்கு இன்னமும் நினைவு திரும்பவில்லையா. இப்படியே என்னை சிறை வைக்க திட்டமோ? என்றாள்.

உலகின் அத்தனை பூக்களையும் கொண்டு மெத்தென்று பிரம்மன் சிருஷ்டித்திருந்த வேல்விழி பூவுடலை மிதமிஞ்சிய காதலில், வளைத்தனைத்திருந்த நலங்கிள்ளி நினைவுக்கு திரும்பினான்…

அதொன்றுமில்லை தேவி… உன்னை கண்டு வாரங்கள் மாதங்களாகி விட்டதன் விளைவு கொஞ்சம் எல்லைமீறி காதல் வயப்பட்டு விட்டேன்…. என்ற நலங்கிள்ளியின் உதட்டில் சுட்டுவிரலில் பூட்டு போட்டாள் வேல்விழி…

தலைவனை பிரிந்து இந்த பேதையும் அல்லவா ஏங்கித் தவித்தேன். எப்போது உங்களை காண்பேன் என்று கடக்காத நாட்களை கசப்புடன் கடந்த நேரங்கள் எத்தனை!! எத்தனை…??!!உங்களின் மிதமிஞ்சிய அரவணைப்பை என் உயிற்கூடு தேடியது உண்மைதான் என்ற வேல்விழியின் கண்களில் துளிர்த்து வழிந்த துளி நீரை சிந்துவதற்கு முன் சிறையெடுத்தான் நலங்கிள்ளி…

தேவி என்ன இது? ஏன் அழுகின்றாய் ஆருயிரே? என்ற போது நலங்கிள்ளியின் நெஞ்சுக்குள் புகாரின் கடல் வெள்ளம் கொந்தளித்து கொப்பளித்தது…

இல்லை நாயகரே… இது ஆனந்த கண்ணீர்… கவலையில் வரவில்லை உங்களிடம் என்னை தூதனுப்ப உங்கள் நண்பர், பாண்டிய அரசர் தீர்மானித்த போது முழு உள்ளத்துடன் ஒப்புக்கொண்டேன். காரணம்…. முதலில் உங்களை காண இயலும்…இரண்டு உங்களின் போராட்டத்தில் உங்களுடன் தோள்சேர்ந்து உதவிட வேண்டும்… அத்தனை உற்சாகத்துடன் மதுரை நகர் நீத்து புறப்பட்டேன். ஆவூரில் அத்தையை கண்டபோது நிம்மதியை உணர்ந்தேன். ஆனால் உங்களை சந்திக்க இயலவில்லை… ஒருவாறு உங்களின் தலைமறைவு வாழ்வை உணர்ந்து கொண்டேன். ஆனால் அண்ணன் உங்களிடம் ஒப்படைக்க கூறிய ஓலையை பத்திரமாக தரவேண்டிய கடமை என்னை உங்களை தேடி புறப்பட செய்தது…என்ற வேல்விழியை இடைமறைத்த நலங்கிள்ளி…..

நன்மாறன் கொடுத்த ஓலையை காட்டு தேவி என்றான். தன் இடையில் மறைத்து வைத்து இருந்த ஓலையை வேல்விழி சோழ இளவலிடம் ஓப்படைத்தாள். அதை அறையிலிருந்த சுடரொளியில் வாசித்த நலங்கிள்ளி முகம் முழுவதும் காரிருள் சூழ்ந்து சுருங்கியது…. அதிர்ச்சியின் விளிம்பில் தடுமாறிய பார்வையை சட்டென்று இனம் கண்ட வேல்விழி அவன் தோளை அழுத்தி பிடித்துக்கொண்டு கேட்டாள்….

நாயகரே என்னவாயிற்று??? அண்ணன் விடுத்திருக்கும் செய்தி என்ன? ஏன் உங்கள் முகம் இப்படி குழப்பத்தில் நிறைந்து காணப்படுகிறது என்றாள் வேல்விழி…

எதுவும் பேசாமல் ஓலையை அவளிடம் படிக்க கொடுத்தான் நலங்கிள்ளி… அதை வாசித்த வேள்விழியும் மொத்தமாக பேரச்சத்தில் உறைந்து போனாள்…

திடீரென்று யோசனை வந்தவனாக வேல்விழியை நோக்கி திரும்பிய சோழ இளவரசன்…. தேவி நீ எப்படி வெண்ணியை கடந்தாய்… உன்னை வெண்ணியில் இரும்பிடைவல்லன் சிறைபிடித்ததாக அல்லவா ஒற்றர்கள் ஞானபிரம்மரிடம் கூறினார்கள் என்றான் பதட்டத்துடன்…

என்ன நடந்தது என்று வேல்விழி சொல்ல இதழை திறக்கும் முன்….!!! “நான் சொல்கிறேன் மீதியை நலங்கிள்ளி”…..!!!  என்று சாந்தமான ஆனால் உறுதியான குரல் வந்த திசையை இருவரும் நோக்க…!!??!!

வெள்ளை பனியில் தோய்த்தெடுத்த பட்டு கேசம் தோளில் பரந்து வியாபித்து கிடக்க, நெற்றியில் பூண்ட சந்தனத்தின் நடுவே குங்கும பொட்டிட்டு, வெள்ளை துணியை உடலெல்லாம் சுற்றி போர்த்தியிருந்த உரமேறிய உடலமைப்பில் துறவி ஒருவர் நின்றார். ஞானபிரம்மர்….சோழத்து அறிவும், தெளிவும் இவரிடமிருந்தே பிறக்கின்றது. இரு தலைமுறை அரசர்களுக்கு பிரதான அமைச்சராக இருந்து ஆலோசனை கூறி வருபவர். சோழத்து அரசர்களுக்கு குருவாக இருப்பவர். ஓவ்வொரு சிக்கல்களிலும் இவரின் ஆலோசனையால் மட்டுமே சோழம் மீட்சி கண்டது என்றால் அது மிகையாகாது…!!??. தேசத்து குடிகளின் அன்பை பெற்றவர்…!! சிவாலயங்கள் தோறும் இவர் செய்துவரும் இறைப்பணி போற்றுதலுக்கு உரியது….!!?!!  சாந்த சொரூபியாக தோன்றும் ஞானபிரம்மர் அரசியல் சாணக்கியத்தனத்தை தொடங்கினால் எதிரிகள் அவரை வேறு உருவில் பார்ப்பர்….!!??!!…

அவரின் குரல் கேட்ட மாத்திரத்தில் வேல்விழியும், நலங்கிள்ளியும் அவரை வணங்கி நிற்க… ஞானப்பிரம்மர் தொடர்ந்தார்…!!!

ஞானப்பிரம்மரும், வேல்விழியும்

சோழத்து ஆபத்துதவிகளிடம் ஒப்படைக்கப்பட்ட வேல்விழியை உறையூருக்கு நாற்பதுகாத தூரத்தில் உள்ள கொலைகுன்று மண்டபதிலிருந்து இளமாறன் மீட்டான்… வேல்விழியை பாதுகாத்து நம்மிடம் அனுப்பிவிட்டு, நெடுங்கிள்ளியுடன் அவன் குடந்தை சென்றுள்ளான்… !!?!!.. சரிதானே வேல்விழி என்றார்…??!! ஞானப்பிரம்மர்.

ஆச்சரியத்தில் மீன்விழி விரித்து மாமங்கை வேல்விழி வாய்பிளக்க…?!?!…  நலங்கிள்ளி அது உண்மைதானா என்று கேட்க….??!!!! அவளை நோக்கித் திரும்பினான். திரும்பியவன் அவள் நின்ற கோலம் கண்டு திகைத்து அவளை உசுப்பினான். வேல்விழி என்னவாயிற்று?!! என்றான் இளவரசன்.
உணர்வு பெற்ற வேல்விழி, ஆசாரியாரே தங்களுக்கு எப்படி இவையனைத்தும் தெரிய வந்தது என்று நாகுளரியபடி பேசினாள்…!!!

பாண்டிய இளவரசிக்கு ஏன் இந்த பதட்டம்?…!! நீங்கள் இங்கு வரும் முன்னே இளமாறன் கொடுத்தனுப்பிய ஓலை வந்து சேர்ந்தது. உண்மைகளை ஒன்று விடாது எழுதி இருக்கின்றான் இளமாறன். அவனுக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த சங்கேத மொழிகளில் அவன் முழுவிபரமும் பதிந்துள்ளான் இளவரசி… !!??!!… பயம் வேண்டாம்… உங்களின் உடன்பிறவா சகோதரன் மூளை சில நேரங்களில் அவன் கபாலத்தை விட்டு வெளியே வந்து யோசிக்கும் என்று கூறினார்…

ஆனால் குருவே நாம் வேறு ஒரு பேராபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். நன்மாறன் தேவியிடம் கொடுத்தனுப்பியுள்ள ஓலையில் உள்ளதை படிப்பீர்கள் என்றால் அது மிகவும் நலமாக இருக்கும் என்றான், நலங்கிள்ளி.. பின் அந்த ஓலையை சோழ குருவிடம் பவ்வியமாக ஒப்படைத்தான்.

ஓலையை வாசித்த ஞானபிரம்மரின் உடல் ஒருமுறை குலுங்கி அமிழ்ந்தது. எதற்கும் நிலை குலையாத சோழ குருவின் முகத்தில் அச்ச ரேகைகள் தீர்க்கமாக ஓடின.. அப்போது பேசிய சோழ இளவரசன், இளமாறன் ஏன் நெடுங்கிள்ளியின் வால் பிடித்து கொண்டு சென்றான்?. எவ்வளவு முக்கியம் என்று நாம் கூறிய பின்பும் அவன் இங்கு வராமல் அவனுடன் இன்ப சுற்றுலா சென்றது ஏன்? என்று புலம்பவே தொடங்கிவிட்டான்…

அவனை கையமர்த்திய ஞானப்பிரம்மர், இளவரசே… பொறுமையாக இருங்கள். உங்களின் உயிர் தோழன் இளமாறன். ஒருபோதும் காரியம் இல்லாமல் வால் பிடிக்க மாட்டான். புலியோடு மணி ஆட்டி சென்றிருக்கும் தனிப்படை சிங்கம் அவசியம் என்றால் வாலை அல்ல குரல்வளையையும் கவ்வும். வேல்விழியை நம்மிடம் அவன் அனுப்ப காரணம் இருக்கும். மேலும் பாண்டிய அரசன் தந்தனுப்பிய ஓலையில் உள்ளது குறித்து நிச்சயமாக இளமாறன் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே அவன் திரும்பும் வரை பொறுத்திருப்போம் என்றார்… அதை வேல்விழியும் ஒப்புக்கொண்டாள்.

நலங்கிள்ளிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மூவரும் குழம்பி போய் அமர்ந்த வேளையில்… ஞானப்பிரம்மர் மாளிகையின் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. ஞானப்பிரம்மர் கண் அசைக்க இளவரசனும், வேல்விழியும் பின்கட்டை ஒட்டிய ரகசிய அறைக்குள் சென்று ஒளிந்து கொள்ள சாது சென்று கதவை திறந்தார்… வெளியே….??!!..

உறையூரின் கோட்டைத்தலைவன் கோச்செங்கன் நின்றுகொண்டிருந்தான். வணக்கம் குருவே…!! இரவில் தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும். நம் தேசத்தை சூழ்ந்துள்ள அரசியல் ரீதியாக குழப்பங்கள் நீங்கள் நன்றாக அறிந்துள்ளீர்கள்… !!??!!… இந்த நேரத்தில் நம்முடைய தலைநகருக்கு வருவோரை கண்காணித்து, விசாரித்து அறிக்கை தரவேண்டும் என்பது தற்காலிக அரசப்பொருப்பாளர் இரும்பிடைவல்லனின் உத்தரவு. இரவின் மூன்றாம் ஜாமத்தில் நகருக்குள் உங்களை காண ஒரு பெண் வந்துள்ளாள். நாகையிலிருந்து வந்ததாக கோட்டை வாயில் காவலனிடம் கூறியுள்ளாள். ஆகவே அவளை விசாரிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்பது குருவுக்கு தெரியும்,  என்று…. நீட்டி முழக்கினான் கோட்டைத்தலைவன்.

அதற்கென்ன கோட்டைத் தலைவரே வரச் சொல்கிறேன். நன்கு விசாரியுங்கள் என்றார் ஞானப்பிரம்மர் பதட்டம் சிறிதும் இன்றி…!!??!!..

உள்ளே திருப்பி பூங்குழலி… !!! என்று குரல் கொடுக்க அரச உடையில் செந்தாமரை மலராக வந்து நின்றாள் பூங்குழலி…!!!

அரச உடையணிந்து பூவிழி

ஆனால் அதற்குள் வேல்விழிக்கும், நலங்கிள்ளிக்கும் வேர்த்து நாவெல்லாம் ஒட்டி இருந்தது. பூங்குழலி என்று ஞானப்பிரம்மர் கூறி அந்த பெண் கோட்டைத்தலைவன் முன் வந்து நின்ற பிறகே இருவருக்கும் உயிர் வந்தது.

வழக்கமான விசாரணையை முடித்துவிட்டு கோச்செங்கன் சென்ற பிறகு பூங்குழலி கதவை தாளிட்டுவிட்டு வந்தாள்.

நல்லவேளை பூங்குழலி நான் நீ பின்கட்டு வழியே வீட்டிற்குள் நுழைந்ததை கவனித்தேன். இல்லையென்றால் என்று பெருமூச்சு விட்டார் ஞானப்பிரம்மர். சமயோஜித்த செயல்களால் பலமுறை பிரச்சனைகளை எதிர்கொண்டு உடைத்தெரிந்தவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார்.!!!…

சொல் பூங்குழலி என்ன விஷயம் என்றார் சோழ குரு… ஆசாரியாரே சேரனின் படைகள் வஞ்சியில் குவிக்கப்பட்டு வருகின்றது. வஞ்சியில் இருந்து உறையூருக்கு வரும் பாதைகள் மொத்தமும் அவர்களின் பிடியில் இப்போது கொத்தாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாண்டியரின் வண்டிமலை எங்கும் போர்மேகம் உச்சத்தில் இருக்கிறது. பனம் பூ தலைவன் காந்தளூர்சாலையில் முகாமிட்டு இருக்கின்றான். என்று குறிப்பு ஒற்று தகவல்களை கூறினாள்.

வேல்விழியின் இதயமே நொறுங்கி போனது. பாண்டிய தேசத்தை போர்மேகம் சூழ்ந்துள்ளதா? நான் இப்போது என் தமையனோடு இல்லாது போனேனே? என்று கலங்கியபோது விழிகள் நீரில் திளைத்தன. நலங்கிள்ளி அவளை தேற்ற முற்பட்டான்.

பூங்குழலி… நிச்சயமாக இது போருக்கான சூழல்தானா? அல்லது மிரட்டலுக்கான அரசியல் நகர்வா என்று புது கேள்வியை வீசினார், ஞானப்பிரம்மர்…

குருவே… அரசியலில் சூழ்ச்சிகள் செய்யும் சூட்சுமங்களை நீங்கள் உணராதவர் அல்ல. ஆனால் இங்கு நடக்கும் அரசியல் சூழ்ச்சியின் சூட்சுமம் வேல்விழி தேவி…….!!!!!???? என்ற பூங்குழலி…

பாண்டியனை சோழத்து உறவிலிருந்து பிரிக்கும் செயல் அல்ல இது. மாறாக சோழர்களுடன் ஒன்றுபடுத்தி பாண்டிய தேசத்தை கொத்தடிமையாக சேரத்துக்கு தாரைவார்க்கும் சூழ்ச்சியின் உச்சம் என்று முடித்தாள்.

வேல்விழிக்கும் சோழ இளவலுக்கும் தலையே சுற்றியது. முதலை கூட்டத்தில் சிக்கிய புள்ளிமான் போல இருவரும் தடுமாறினர். இளமாறா எங்கேயடா போனாய் உயிர் நண்பா…!!??!!  என்று வாய்விட்டு கூறினான் நலங்கிள்ளி…

மெல்ல மெல்ல ஞானப்பிரம்மருக்கு சூழ்ச்சியின் சூட்சுமம் புரிந்தது. அதே வேளையில் புகாரின் பஞ்சனையில் மதுவில் முங்கி முத்தெடுத்து கொண்டிருந்த இரும்பிடைவல்லனின் இதயத்தில் வேறு ஒரு திட்டம் குறித்து பொறி தட்டியது…

அது சூழ்ச்சி மட்டுமல்ல, துரோகம் நிறைந்ததாகவும் இருந்தது…

தொடரும்.

Bharathipriyan

I am an experienced story writer, script maker, poet and trainer for life skills.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!