Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Manathodu Manvaasam

மித்ரா பரணி’யின் மனதோடு மண்வாசம் – 30.2

 

மாலை வேளை நெருங்கி இருந்தது.

 

வீரனையும் வேலனையும் தயார் செய்துவிட்டு தாங்களும் ரேக்ளாவிற்கு தயாராகிக் கொண்டிருந்தனர் விக்ரமனும் குலசேகரனும்.



Advertisement

 

ஆம் ரேக்ளாவே தான்!

 

Advertisement

ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் மேற்கொண்ட போராட்டமானது வெற்றியைப் பெற்றிருந்தது. மத்திய அரசு அவசர சட்டத்தை பிரகடனப்படுத்தி ஒட்டுமொத்த தமிழகத்தையுமே இன்பத்தில் திளைக்க வைத்திருந்தது.

Advertisement

 

பலரும் விழிப்புணர்வு பெற்று அழிவின் பிடியில் இருந்த பாரம்பரிய இனங்களை போற்றிப் பாதுகாக்க ஆரம்பித்தனர். தமிழர் வாழ்வியலும் பண்பாடும் கலாச்சாரமும் பெரிதாய் பேசப்பட்டது. புது வரலாற்றைப் படைத்து பாரம்பரியத்தை மீட்டெடுத்தனர் மண்ணின் மைந்தர்கள்.

 

Advertisement

இன்னும் சில மணி நேரத்தில் ரேக்ளா போட்டி துவங்கவிருக்க, ஊர் மக்கள் அனைவரும் போட்டியைக் காண சென்று கொண்டிருந்தனர்.

 

வேந்தனும் தீரனும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, அரும்பும் அரசியும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். எதேர்ச்சியாய் மகனை நோக்கிய அரசி,

 

“மச்சா கொஞ்சம் இங்க வந்து பாருங்க” என அவன் செய்கையை விக்ரமனிற்கு காண்பித்தாள்.

 

லட்சுமி மீண்டும் ஓர் கன்றை சமீபத்தில் ஈன்றிருந்தது. கன்று அதன் மடிமுட்டி பால் குடித்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட வேந்தன் கன்றோடு போட்டி போட்டுக் கொண்டு லட்சுமியின் மடியில் வாய் வைத்து பாலை சுவைத்துக் கொண்டிருந்தான்.

 

“இவனென்ன கன்னுக்குட்டிக்குகோட பாலை மிச்சம் வெய்க மாட்டானோட்ருக்குது” என்று சிரித்தார் முத்துலட்சுமி.

 

“வேந்தனை விடுங்க இந்த தீரன் என்ன காளை மாட்டுகிட்ட நின்னு எதையோ தேடிக்கிட்டு கெடக்குறான்” என்று அரும்பு சொல்ல, அனைவரும் அவ்விடம் பார்த்தனர்.

 

சிரிப்புடன் தன் மகனிடம் வந்த குலசேகரன்,

 

“என்னடா காளை மாட்டுல போய் மடியை தேடிக்கிட்டு கெடைக்குற. உங்கப்பாவோட்டம் மேதாவியா வருவைன்னு பாத்தா நீ உங்கப்புச்சியோட்டம் அதிமேதாவியா இருந்தா எப்படி” என,

 

“என்ன சொன்னீங்க?” என்று அரும்பு கேட்க,

 

“அது! உன்ர அம்மா அரும்போட்டம் அறிவாளியா இருக்கோணும் சொல்லிட்டு இருந்தேன்” என்றுவிட்டு வேகமாய் மகனோடு தப்பித்துக் கொண்டான்.

 

சிறிது நேரத்தில் அனைவரும் கிளம்பி ரேக்ளா போட்டி நடக்கும் இடத்திற்குச் சென்றனர்.

 

பள்ளியில் இருந்து அனைவரையும் அழைத்துக் கொண்டு நேராக அவ்விடம் வந்திருந்தான் நன்மாறன்.

 

கந்தசாமியும் சாரதாவும் வருகை தர, ஆறுச்சாமி தன் சம்பந்தியை மேடைக்கு அழைக்க அவரோடு சென்று அமர்ந்து கொண்டார். சாரதா முத்துலட்சுமியின் அருகில் நின்றுகொண்டார்.

 

தன் மகன் அமுதனை கையில் வைத்திருந்த மைக் மாரிமுத்து நேரத்தைப் பார்த்துவிட்டு அவனை பிரியாவிடம் கொடுத்துவிட்டு மேடைக்குச் செல்ல, அங்கு முருகேசன் மைக்கைப் பிடித்துக் கொண்டு நின்றிருப்பது கண்டு அவனை முறைத்துப் பார்த்தான்.

 

ஒரு மாலை வணக்கம் சொல்வதற்குள் முருகேசனுக்கு கை கால் நடுங்க,

 

“டேய் முருகேசா! எலி என்னிக்கும் ஏரோப்ளேன் ஓட்ட ஆசப்படக் கூடாது. மைக் புடிச்சவன் எல்லாம் மாரிமுத்து ஆக முடியுமா? போய் நம்ம சொக்கலிங்கத்து…” என்று முடிப்பதற்குள்,

 

“சோடா தானோ. வாங்கியாறேன்” என்றுவிட்டு நகர்ந்தான். சின்ன சிரிப்புடன் மைக் பிடித்த மாரிமுத்து தன் தொண்டையை செருமிக் கொண்டு,

 

எனதருமை மாமன் மச்சான்களே! சின்னஞ்சிருசுகளே! பொக்கைவாய் பெருசுகளே! தாய்மார்களே! தந்தைமார்களே! உங்கள் அனைவரையும் ரேக்ளா பந்தயத்திற்கு வருக வருகவென வரவேற்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் தார் சாலைகளில் தீப்பொறி பறக்கபோவதைக் கண்டு மகிழுங்கள்.

நமது கொம்பு வைத்த சிங்கமான காளைகளோடு காளையர்களையும் வரவேற்கத் தயாராகுங்கள்.

 

மாரிமுத்து மைக்கை வைத்ததும் கரகோசம் காதைப் பிளந்தது. ஜல் ஜல் என்று சலங்கை சத்தம் ஒலிக்க காங்கேயம் காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டி வந்து நிற்கவும்,

 

“ஐய் சித்தப்பா” என்று குதூகலித்தாள் நற்றமிழ்.

 

விக்ரம பாண்டியனும் குலசேகர பாண்டியனும் கம்பீரமாய் மாட்டு வண்டியில் வீற்றிருந்தனர்.

 

விக்ரமனைக் கண்டதும் வேங்கை தனது கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்க, மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு புன்னகைத்தான்.

 

“மாப்ள” என்ற குரலில் குலசேகரன் கூட்டத்தில் பார்க்க, அங்கு வேலாத்தாளும் முத்துச்சாமியும் அவனையே பார்த்திருப்பது கண்டு சிறு தலையசைப்பை அளித்துவிட்டு அரும்பைப் பார்த்தான்.

 

அவன் பார்ப்பது கண்டு உடனே அரும்பு தன் தீரனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட, சின்ன சிரிப்புடன் சாட்டை வாரை அழுந்தப் பற்றிக்கொண்டு கால்களை அழுந்த ஊன்றி நின்று துவக்கத்திற்கு தயாராகினான்.

 

அவர்கள் அருகில் இருந்த மாட்டு வண்டியில் லோகநாதனும் சேதுராமனும் வீற்றிருக்க,

 

“இந்த வாட்டியாச்சும் ஜெயிப்பீங்களா?” என்று குலசேகரன் கேட்க,

 

“நீங்க ரேக்ளாவ்ல இறங்கிட்டா உங்களை ஒருத்தர் ஜெயிக்க முடியுமாங் மாப்ள” என சேதுராமன் சொல்லவும் விக்ரமன் உடனே லோகநாதனைப் பார்க்க, அவனும் புன்னகைத்தான்.

 

ஆறுச்சாமியும் கந்தசாமியும் இணைந்து கொடியை அசைக்க, துவங்கியது ரேக்ளா பந்தயம்!

 

“உட்ரா.. உட்ரா”  

 

உரிமையாளர்களின் குரலுக்கு ஏறுகள் சீறியபடி எல்லைக் கோட்டை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் பறந்தன.

 

வெற்றி நாயகர்களான வேலனும் வீரனும் அனைவரையும் முந்திக்கொண்டு பாய்ந்தோடினர். அவர்களை ரசித்துப் பார்த்திருந்த வேங்கயிடம் இருந்து வேந்தன் கீழே இறங்க முயற்சி செய்ய,

 

“அப்பா பாரு.. அப்பா பாரு” என விக்ரமனை காண்பித்தாள்.

 

அவனோ அவள் கைகளில் இருந்து துள்ள,

 

“இன்னிக்குனு பாத்து ரொம்ப சேட்டை பண்ணுறடா அழுக்குமறையா. நீ அப்பாவை பாக்கலைனாலும் பரவாயில்ல அம்மாவையாவது பாக்க விடுடா குட்டி” என மகனிடம் கெஞ்சினாள்.

 

“இப்போ தெரியுதா சிறுசுல உன்னைய நாங்க எப்படி வளத்தியிருப்போம்னு” என்றார் நாயகி. உடனே அவர் கையில் வேந்தனைக் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கத் துவங்கினாள் அரசி.

 

அங்கு வேலாத்தாள் தீரனைக் கையில் வைத்துக் கொண்டிருக்க, அரும்பு விசில் போட்டுக் கொண்டிருந்தாள்.

 

“என்ன வேலாத்தா ரேக்ளா பாக்கா வந்தியா” என நாயகி கேட்க,

 

“ஆமா நாயகி” என வேலாத்தாள் சொல்லவும், அதற்குள் பேரன்கள் இருவரும் அவரவர் கொள்ளுப் பாட்டியரின் கொண்டையைப் பிடித்து இழுத்து வம்ப செய்யத் துவங்கினர். திக்கு முக்காடிப் போன தனது அப்பத்தாக்களை கண்ட அரும்பும் அரசியும்,

 

‘பேரன் வேணும் பேரன் வேணும்னு கேட்டவங்க தானோ. நல்லா அனுபவிக்கட்டும்’ என்று கண்டுகொள்ளாது நின்றிருந்தனர்.

 

“இவனுகளுக்கு இவனுக அம்மாளுகளே தேவலையோட்ருக்குது” என புலம்பியபடி கொள்ளுப் பேரன்களின் கையிலிருந்து தத்தம் கொண்டையை விலக்கிக் கொண்டு, 

 

“அட மரகதா.. லட்சுமி செத்த நேரம் இவனுகள புடிக்குறது தானோ” எனப் புலம்ப,

 

மரகதவள்ளியும் முத்துலட்சுமியும் தங்களது பேரனை அவர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள, சாரதாவும் தன் பேத்தியை தூக்கிக்கொண்டு அவ்விடம் வந்தார்.

 

நற்றமிழ் வந்த பின்னரே வேந்தனும் தீரனும் அமைதியாய் இருந்தனர்.

 

எல்லைக் கோட்டை எட்டிய பின்னரே வேலனும் வீரனும் வேகத்தை குறைத்து நின்றனர்.

 

இம்முறையும் பாண்டியர்கள் வென்றுவிட, நீண்டதொரு விசில் சத்தத்தில் அனைவரும் கூட்டத்தில் திரும்பிப் பார்க்க அங்கு அரும்பும் அரசியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துவிட்டு பாண்டியர்களைப் பார்த்திருந்தனர்.

 

‘இவளுக திருந்தவே மாட்டாளுக’ என விக்ரமனும் குலசேகரனும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு பரிசை பெற்றுச் செல்ல, அவர்களுக்கு பரிசை வழங்கிய ஆறுச்சாமி அவ்விடத்திலேயே ஒன்றை உரைத்திருந்தார்.

 

ஊர்த் தலைவர் பதவியில் இருந்து தான் விலகி இனி விக்ரமனை அப்பொறுப்பில் அமர்த்துவதாய் தெரிவித்தார். விக்ரமன் மறுக்க, அனைவரும் பேசி அவனை ஒப்புக்கொள்ள வைத்திருந்தனர். அரசிக்கு ஆனந்தம் தாங்கவில்லை இருந்த இடத்தில் இருந்தே பறக்கும் முத்தத்தை தன் மச்சானை நோக்கி பறக்க விட்டாள்.

 

லோகநாதனும் குலசேகரனும் விக்ரமனை தங்கள் தோளில் தூக்கிக் கொள்ள, கரகோஷமும் காதைப் பிளக்கும் விசில் சத்தமும் நீங்காது ஒலித்திருந்தது.

 

அனைவரும் கூடியிருந்த வேளையில் புகைப்படம் எடுக்க மைக் மாரிமுத்து தயாரானான். உடனே ட்ரைவர் மணியன், மாடசாமி மற்றும் மங்கம்மாளும் தங்களை தயார் படுத்திக் கொண்டு புன்னகை முகமாய் நின்றனர்.

 

“அண்ணே நானும்” என முருகேசன் தயக்கமாய் கேட்க,

 

“போங்க போங்க ஆருக்கெல்லாம் போட்டோ வேணுமோ போய் உக்காருங்க” என்றதும் சோடாக்கடை சொக்கலிங்கம், மைக் செட் பிரபலம் மைக்டைசென் அனைவரும் கிடைத்த இடத்தில் அமர்ந்துகொள்ள,

 

“அடப்பாவிகளா ஒட்டுமொத்த ஊரே போட்டோ புடிக்க வந்தா எப்படி?” என பின்னால் நகர்ந்து சென்று ஒரு மேட்டின் மீதேறி நின்றுகொண்டான் மாரிமுத்து.

 

“நீங்களும் வாங்க” என விக்ரமன் லோகநாதனையும் சேதுராமனையும் அழைக்க, அவர்களும் புன்னகையோடு நின்றுகொண்டனர். மீண்டும் பின்னால் சென்ற மாரிமுத்து கால் தடுமாறி விழச்செல்ல, அவனை விழாமல் பிடித்திருந்தாள் பிரியா.

 

மாரிமுத்து தன் மனையாளையே பார்க்க,

 

“அப்பா! பிரியாவ பாத்தது போதும். இனி போட்டோவ பாத்து எடு” என அவன் மகன் அமுதன் குரல் கொடுக்கவும், தலையை சிலுப்பிவிட்டு படம் பிடிக்கத் தயாராய் இருந்தான்.

 

முன் இருக்கையில் பெரியவர்களான ஆறுச்சாமி, கந்தசாமி, முத்துச்சாமி, சூப் கடை சுப்பாத்தாள், ரங்கநாயகி மற்றும் வேலாத்தாள் அமர்ந்திருந்தனர்.

 

அவர்களுக்குப் பின்னால் முத்துலட்சுமி, சாரதா, மகரதவள்ளி மூவரும் நின்றிருக்க சாரதாவின் அருகில் நன்மாறனும் அருந்தமிழ் தேவியும் நின்றிருந்தனர்.

 

கந்தசாமிக்கு கீழ் கவின் கலையரசன் அகிலன் மூவரும் அமர்ந்திருக்க, நற்றமிழ் நங்கை தன் அண்ணன்களுக்கு நடுவில் இடம் பிடித்துக் கொண்டாள். மாரிமுத்துவின் மகன் அமுதனும் அவர்களோடு இணைந்து கொண்டான்.

 

அருந்தமிழின் அருகில் வேங்கையரசி நிற்க, அவளருகே தனது வேலனின் முதுகில் தன் மகன் வேந்தன் வேங்கடவனை ஏற்றிப் பிடித்தபடி நின்றிருந்தான் விக்ரம பாண்டியன்.

 

மரகதத்தின் அருகில் அரும்பு நிற்க, அவளருகே தன் மகன் தீரன் தீந்தமிழனை வீரனின் முதுகில் ஏற்றிப் பிடித்தபடி நின்றிருந்தான் குலசேகர பாண்டியன்.

 

அனைவரது இதழ்களும் அழகாய் விரிய, மண்மணம் மாறாது சேமிக்கப்பட்டது அப்புகைப்படம்.

 

அம்மக்களின் மானுடல் இம்மண் விட்டுச் செல்லும் வரை அவர்கள் மனம் விட்டுச் செல்லாது இம்மண்வாசம்.

 

ஒவ்வொரு மண்ணிற்கும் ஒரு மணம் உண்டு. மாற்றங்கள் பார்த்திடா மணம் அது!

 

நம் தமிழ் மண்ணிற்கும் அப்படியொரு மணம் உண்டு!

 

ஆதிகாலம் முதல் அழியாமல் தொடர்ந்து பல தலைமுறைகள் கடந்து இன்னமும் வீசிக் கொண்டிருக்கிறது அந்த வாசம்!

 

அகம் புறமென இலக்கணம் வகுத்து அறத்தின் வழியில் இயற்கையோடு வாழ்ந்து வருகிறோம். இனியும் வாழ்வோம்!

 

என்றும் மனதோடு மண்வாசம்.

மித்ரா பரணி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!