Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Intersteller Love

Vinto’s Interstellar Kaadhal Episode 18

அத்தியாயம் – 18

நினைவுகளில் கூட அந்தப் பேரரசரைப் பார்க்கும் போது, ஒரு கம்பீரம் தென்பட்டது. சிறிது சிறிதாக அந்த நினைவலைகள் சிதற, மீண்டும் ஆதித்யன், ஆரியன் மற்றும் நந்தினியின் நினைவுகள் விண்வெளி வாகனத்தில் இருந்த அவர்களது உடல்களுக்குள் திரும்பின.



Advertisement

அவர்கள் தன்னிலையை அடைவதற்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

 முதலில் நந்தினி, “டைட்டன் மிகப் பெரிய புத்திசாலி தான். ஆனால், வல்கன் அவரைப் பற்றி நன்கு அறிந்திருந்தும், ஏன் இப்படிச் செய்ய வேண்டும் ?” என்று கேட்டாள்.

 பொசய்டன், “அதற்குக் காரணம் வல்கன், தன் மீது அதிக நம்பிக்கை வைத்தது தான். வெளியில் சொல்லாவிட்டாலும் அவருக்கு அவர்கள் உருவாக்கிய டிராகன்கள் மீது அதிக நம்பிக்கை இருந்தது. ஆனால், அதையும் டைட்டன் முறியடித்து விட்டான். அதன் விளைவு இப்பொழுது இரண்டு டிராகன்கள் மட்டுமே இருக்கின்றனஎன்றார்.

Advertisement

அவரை இடைமறித்த ஆதித்யன், “மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான். ஆனால், செலினா இந்த அண்ட சராசரத்தின் அடித்தளத்தையே டைட்டனிடம் தெரிந்தே கொடுத்துள்ளார் ? அது தீய கைகளுக்குச் சென்று சேர்ந்தால் அதன் விளைவுகள் எந்த அளவுக்கு இருக்கும் என்று தெரிந்தும் எப்படி அப்படி ஒரு முடிவை எடுத்தார் ?” என்று கேட்டான்.

Advertisement

“நான் கேட்பதற்கு முதலில் நீ பதில் சொல்லு, ஆதித்யன். நீயும் ஒரு விஞ்ஞானி என்பதால், இது உனக்கு புரிந்திருக்கும் என்று நினைத்தேன். பரவாயில்லை, நீ கயா கிரகத்து சக்தியை வைத்து ஆயுதத்தை உருவாக்கிய போது, நீ யாரிடமும் கூறாமல் முதலிலேயே மறைத்திருக்கலாமே. பின்னர், நீ அதை அழித்ததாக காட்டிக் கொண்டாலும், யாருக்கும் தெரியாமல் அதில் மறைத்து வைத்தாய் தானே.

அது, புதிதாக அதாவது ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கும் வெறி, அவ்வளவு தான். அதற்கு, நல்லது, தீயதெல்லாம் தெரியாது. இதெல்லாம், எப்படி எனக்கு தெரியுமென்று யோசிக்காதே, என்னுடைய இளவரசியின் பாதுகாப்பிற்காக, உங்கள் இருவர் மனதையும் முன்பே அறிந்துக் கொண்டேன் என்றார். அதைக்கேட்ட ஆரியனும், ஆதித்யனும் அதிர, நந்தினி புன்னகைத்தாள். இப்படியொருவருடைய பாசம் அவளுக்கு நெகிழ்ச்சி அளித்தது.

ஆரியன், “எனக்கு இன்னும் இந்த விஷயம் புரியல. செலினா மனித பிறவியா இல்ல கடவுளா ?” என்று கேட்டான்.

Advertisement

பொசய்டன், நீங்கள் மூவரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. செலினா ஒரு சிலையோ அல்லது தெய்வமோ கிடையாது. அவரும் மனித இனத்தைச் சேர்ந்தவர் தான். என்ன நம்முடைய அறிவை விடப் பன்மடங்கு அறிவு கொண்டவர். அவருக்கு இணையான மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரபஞ்சத்தை ஆளலாம். Parallel Universe கிடையாது. Multiverse-ஆக இருக்கலாம்.

நாணயத்துக்கு இரு முகங்கள் இருப்பது போல, ஒவ்வொரு விஷயத்திலும் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. எப்பொழுதும் நன்மைக்கும் தீமைக்கும் ஒரு சமநிலை இருந்து கொண்டே இருக்கும். அதை நீங்கள் விதி என்றும் தெய்வ நம்பிக்கை என்றும் கூறுகின்றீர்கள் என்றார்.

நந்தினி, ஆனால், எப்படி உங்க கிரகத்துல இருக்குறவங்க பேரெல்லாம், எங்க கிரகத்தோட கிரேக்க தொன்மத்துல வர்ற பேராவே இருக்கு ?” என்று கேட்டாள்.

அதற்கான காரணம் எங்களிடம் இருந்து தான் உங்களுக்கு அனைத்து நினைவுகளும் வருகின்றன. நீங்கள் பேசும் மொழி, கண்டுபிடிக்கும் கருவிகள் அனைத்தும் நாங்கள் ஒரு காலத்தில் உருவாக்கியது தான். எங்களுடைய முன்னோர்களின் பெயர்கள் மறுவி, உங்கள் தொன்மத்தில் இடம்பெற்றுள்ளது.

 உதாரணத்திற்குக் கூறினால் நாங்கள் மனித இனத்தை விதைகள் மூலம் தான் பல்வேறு கிரகத்திற்கு அனுப்புகிறோம். அந்த எண்ணத்தை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றி Test-tube Baby என்று கூறுகின்றீர்கள்என்றார் பொசய்டன்.

 அவர் கொடுத்த விளக்கத்தில், மூன்று பேரும் பேயறைந்தது போல் ஆயினர். அவர்களுக்கு, ஆதி கூறிய Theory of Panspermia ஞாபகம் வந்தது.

 “அப்படியென்றால் உங்களுக்குக் கிடைத்த சக்திகள் எல்லாம் ?” என்று ஆரியன் கேட்க,

அவற்றைப் பற்றியும் உங்களுடைய நினைவுகளில் சேர்த்துள்ளோம். Levitation ( பறக்கும் தன்மை), Camouflage ( நிறம் மாறும் தன்மை ), Telepathy, Elixir ( அமிர்தம் ) போன்ற சக்திகள் உங்களுக்கு வளர்ச்சி நிலையில் உள்ளது. அதனுடைய மேம்படுத்தப்பட்ட சக்திகள் தான் எங்களுக்கு வரமாகக் கொடுக்கப்பட்டது.

 இதில் எந்த மாய தந்திரமும் இல்லை. நாங்கள் எப்படி உங்களது முன் தோன்றல்களை விதையாக அனுப்பி உங்களிடமிருந்து சக்திகளைப் பெறுகிறோமோ, அதுபோல தானே நீங்களும் உங்கள் கிரகத்தில் விவசாயம் செய்கின்றீர்கள்என்று கேட்டார்.

 தங்களது மொத்த வாழ்க்கையும் ஒரு பெரிய பொய்யின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது என்ற விஷயத்தை அறிந்த மூவருக்கும் தங்கள் காலுக்கு அடியில் அந்த விண்வெளி வாகனம் நழுவியது போல இருந்தது.

 “அப்போ உங்கள் சக்திகளைப் பயன்படுத்தி தாக்குவது கூட, டெஸ்லா கண்டுபிடித்த இல்லைஇல்லைஅவரது எண்ணத்தில் உங்களால் உருவாக்கப்பட்ட கம்பியில்லா மின்சார கடத்தல் கூட எங்களது யோசனையின் வளர்ச்சியடைந்த நிலை தானா ?” என்று கேட்டாள் நந்தினி.

பொசய்டன், ‘ஆம்என்று தலையசைக்க,

 “ஐயோ, இதுக்கு மேல என்னால பொறுத்துக்கிட்டு இருக்க முடியாது. அதற்குப் பிறகு டைட்டன எப்படி மத்த எல்லாரும் ஜெயிச்சாங்க ?” என்று ஆரியன் கேட்டான்.

 மற்ற இருவரின் முகத்திலும் அதே கேள்வி நிலைத்திருக்க, “டைட்டனைக் கொன்று விட்டோம் என்று யார் கூறியது ?” என்று கேட்டார் பொசய்டன்.

******

 கிரகம் : கயா

 இடம் : வெலாரிஸ் கோட்டை

எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், நான் நிலைத்து நிற்பேன் என்று பறைசாற்றுவது போல, அந்தக் கோட்டை கம்பீரமாக நின்றது. கயா கிரகத்தின் எண்ணற்ற பேரரசர்கள் வாழ்ந்து வந்த கோட்டை அல்லவா அது.

 முன்னர் டைட்டன் தனது ஆராய்ச்சிக்காக பயன்படுத்திய அறையில் இப்போது ப்ரொமேத்தியஸ் ஏதோ ஒரு கருவியை உருவாக்கிக் கொண்டு இருந்தான். அது ஏதோ ஒரு பூவின் வடிவத்தை ஒத்திருக்க, அதைச் சோதித்துப் பார்த்தான். அவன் எதிர்பார்த்தது போல முடிவுகள் வரவில்லை என்றதுமே அவனது முகம் கூம்பியது.

அவனது இறுகிய பிடியில் அந்த கருவி தூள் தூளாக மாறி காற்றில் கரைந்தது.

 அப்பொழுது அந்த அறையின் வாசலில் இருந்து, “பேரரசர் ப்ரொமேத்தியஸ் வாழ்க !” என்ற குரல் வந்தது.

அது அவனின் கோபத்தைக் கலைக்க, “உள்ளே வா, காவலனே !” என்றான்.

அந்த வீரன் உள்ளே வந்து மண்டியிட்டு, “பேரரசே ! நானும் எவ்வளவோ முறை முயன்று விட்டேன். தலைமை அமைச்சர் பொசய்டனின் வாகனம் எங்கே இருக்கின்றது என்று கண்டுபிடிக்க இயலவில்லைஎன்று தட்டுத்தடுமாறித் தான் கூற வந்ததைக் கூறி முடித்து விட்டான்.

 “வீரனே ! எழுந்து என் கண்களை உற்றுப் பார். அதில் தெரியும் குரோதமும் பிடிவாதமும் நீ கூறும் இந்த பதிலை ஒத்துக்கொள்ளும் என்று நினைக்கிறாயா ?” என்று கேட்க,

ப்ரொமேத்தியஸைக் கண்டு அஞ்சிய வீரன், ‘இல்லைஎன்பது போலத் தலையசைத்தான்.

 “அடுத்த முறை நான் உன்னைப் பார்க்கும் போது என் கேள்விக்கான விடை எனக்கு வேண்டும்என்று கூறினான் ப்ரொமேத்தியஸ்.

 அவன் விடை கொடுத்த பிறகும் அங்கிருந்து செல்லாமல் நின்ற வீரனைக் கண்ட ப்ரொமேத்தியஸ், “இன்னும் எதற்காக இங்கே நின்று என்னுடைய எண்ணங்களைத் தொந்தரவு செய்கின்றாய் ? ஒழுங்காக கூற வந்ததை முழுவதுமாக கூறிவிட்டு செல்என்று அடக்கப்பட்ட கோபத்தில் கேட்க,

பேரரசே ! இளவரசர் அக்கிலஸ் கயா கிரகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கின்றார். அவரைப் பின் தொடர்ந்த ஆட்கள் இரண்டு நாட்களாக எந்தச் செய்தியையும் அனுப்பவில்லை. மற்றொரு உளவாளியை அனுப்பியதில் இளவரசர் அக்கிலஸ் ஏதோ படை திரட்டுவதாகச் செய்தி கிடைத்ததுஎன்று எப்படியோ முழுமூச்சாகக் கூறி முடித்தான்.

ஆனால் இந்த விசயத்தைக் கேட்ட ப்ரொமேத்தியஸ், அந்தக் காவலாளி எதிர்பார்த்ததைத் தவறாக்குவது போலப் புன்னகை புரிந்தான்.

 அந்தச் சிரிப்பிற்குப் பின் மறைந்திருந்த, ஆலகால விஷத்தை அறியாமல் போன காவலாளி குழம்பிப்போய் நிற்க, “நீ போகலாம் வீரனே ! இனி எந்தச் செய்தி கிடைத்தாலும் எனக்கு உடனடியாக தெரியப்படுத்துஎன்றான் ப்ரொமேத்தியஸ்.

 அதைக் கேட்ட வீரன், அந்த இடத்தை விட்டுச் சென்றால் போதும் என நினைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு ப்ரொமேத்தியஸ், தனது மேசையில் இருந்த மற்றொரு கருவியை எடுத்துக் கொண்டு, “அக்கிலஸ் ! எனக்குப் படை வீரர்களைச் சேர்ப்பதற்காக, நீ மிகவும் கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறாய் போல. ஆனால், அதற்கான பலனை நான் தான் அனுபவிக்கப் போகிறேன். எனது புதிய கண்டுபிடிப்பின் சோதனை எலிகள் தான் நீங்கள். ஹாஹாஹாஎன்று தனக்குத் தானே கூறி சிரித்துக் கொண்டான்.

 ஆனால், ப்ரொமேத்தியஸ் எவ்வளவு முயன்றும் சோல் பாக்ஸின் சாவியை, இன்னும் அவனால் உருவாக்க முடியவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

 “எங்கு தான் அந்த சாவி இருக்கும் ? பிரம்ம கிரந்தத்தை முழுமையாக ஆராய்ச்சி செய்து விட்டேனே ? அது எந்த இடத்தில் இருக்கும் ? சீரஸ் அதை எங்கே வைத்திருப்பான் ? பொசய்டன் ஏன் இன்னும் கயா கிரகத்திற்குத் திரும்பவில்லை ? ஒருவேளை சீரஸின் வாரிசுக்குப் பயிற்சி அளிக்கின்றானோ ?” போன்ற கேள்விகள் அவன் மனதில் வலம் வந்தபடியே இருந்தன.

 ******

இடம் : இன்டர்ஸ்டெல்லர்

பொசய்டனின் பதிலைக் கேட்ட மற்ற மூவரும், “என்ன ?” என்று ஒரே நேரத்தில் கத்த,

 “ஆமாம், அன்று டைட்டனை அவர்கள் அழிக்கவில்லை. அந்த தவறுக்கான விளைவுதான் இன்று நம் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறதுஎன்று கூறிய பொசய்டன், அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று தெரிந்து, அவரது கைகளை அவர்கள் மூவரும் தொட, வழக்கம் போல் இல்லாமல், இந்த முறை எடுத்தவுடனே ஒரு புயல் காற்றில் சிக்கிக் கொண்டனர்.

அந்தப் புயல் அவர்களை அந்தப் பெருங்கடலுக்குக் கொண்டு வந்துவிட, அவர்கள் அந்தக் கோட்டையை நோக்கி நீருக்குள் நீந்தத் தொடங்கினர். இந்த முறை அவர்கள் வழியை மறைத்து இரு டிராகன்கள் காத்து கொண்டிருக்க, அதைப் பார்த்த மூவரும் பயந்தனர்.

அவற்றின் கண்கள் இவர்களையே உற்று நோக்குவது போல் இருக்க, மெதுவாக அவர்களைக் கடக்க முயற்சித்தனர். நந்தினி முன்னே செல்ல, அவளைக் கண்ட டிராகன்கள் வழிவிட்டன. அவற்றை வியந்து பார்த்துக் கொண்டே அவர்கள் உள்ளே செல்ல அங்கே ஒரு பேரமைதி நிலவியது.

முன்னர் சிற்றரசர்கள் இருந்த இடத்திற்கு, அவர்கள் செல்ல, அங்கே அந்த பேரரசர் மற்றவர்கள் கூறுவதை மறுத்துக் கொண்டிருக்கும் காட்சி தென்பட்டது.

சிற்றரசர்களே ! நீங்கள் என்ன தான் உறுதி அளித்தாலும் என்னால் இதை ஒத்துக் கொள்ள இயலாது. இன்னும் உங்கள் உடலில் இருக்கும் காயம் கூட முழுவதும் சரியாகவில்லை. என்னைப் படைத்த காரணமே அந்த டைட்டனை அழிப்பதற்காக தானே ? அதை நான் மட்டும் செய்கின்றேன். இதற்கு மேல் நீங்கள் என்னை வற்புறுத்தினால் கயா கிரகத்தின் பேரரசராக நான் உங்களுக்குக் கட்டளையிட வேண்டியிருக்கும்என்றார் அகஸ்டஸ்.

அவர் கூறியதைக் கேட்ட வல்கன், “எங்கள் அனைவரையும் போருக்கு அழைத்து செல்லாவிட்டாலும், என்னையும், க்ரோனனையும், மெட்லடனையும் மட்டுமாவது வர அனுமதிக்கலாம் அல்லவா ?” என்று கேட்டார்.

அகஸ்டஸ் பதில் அளிப்பதற்குள் இடையிட்ட செலினா, “அவர்கள் கூறுவதிலும் எந்தத் தவறும் இல்லை, அகஸ்டஸ். அவர்களது உதவியும் உனக்கு நிச்சயமாகத் தேவைப்படும்என்றார்.

செலினாவின் அறிவுரையை மறுக்க முடியாமல், அரைமனதுடன் ஒத்துக்கொண்டார் அகஸ்டஸ்.

 அந்தக் காட்சி அப்படியே மறைய, புது காட்சி உதயமானது. இரண்டு டிராகன்களிலும் மூன்று சிற்றரசர்களும் வர, அகஸ்டஸ் மட்டும் தன்னை மாயமாக்கிக் கொண்டு அவர்களுக்கு முன் வேகமாகப் பறந்து சென்றார்.

சற்று நேரத்திற்கு முன்தான், சோல் பாக்ஸை சரி செய்து விட்டு வெலாரிஸ் கோட்டைக்குத் திரும்பி இருந்த டைட்டன், தூரத்தில் அவர்கள் வருவதைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்.

தனது கவசத்தைச் சரி செய்துவிட்டு தேவையான ஆயுதங்களை மறைத்து வைத்துக் கொண்டவர், “என் பகையைத் தீர்த்துக் கொள்வதற்கு நான் சிறிது கஷ்டப்பட வேண்டி இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், இதை நீ எளிதாக்கி விட்டாய் வல்கன். உன்னைக் கொன்று விட்டு அதற்குப் பிறகு அந்தச் செலினாவை கவனித்துக் கொள்கிறேன்என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

 “வீரர்களே ! பாதுகாப்பு வளையங்களை அமையுங்கள் !” என்று டைட்டன் கட்டளையிட்டவுடன், வீரர்கள் டைட்டனின் கருவியைக் கொண்டு கோட்டையைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கினர்.

 தனது எதிர்கால வெற்றியைக் கொண்டாடும் நோக்கில், ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த டைட்டனின் கவனத்தைச் சிதறடிப்பது போல அந்தக் கோட்டையின் பாதுகாப்பு வளையம் நொறுங்கியது.

 டைட்டனுக்கு என்ன நடந்தது என்று யோசிப்பதற்கு கூட நேரம் அளிக்காமல், அகஸ்டஸ் வேகமாக டைட்டனைத் தாக்கத் தொடங்கினார்.

 மற்ற சிற்றரசர்களும் உடன் இணைந்து டைட்டன் உருவாக்கி இருந்த கருவிகளை உடைக்கத் தொடங்கினர். நிலைமையை நொடியில் புரிந்து கொண்ட டைட்டன், அகஸ்டஸைத் திருப்பித் தாக்கத் தொடங்க, இருவருக்கும் இடையில் துவந்த யுத்தம் நடக்கத் தொடங்கியது.

அகஸ்டஸூம் தனது சக்திகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தித் தாக்க, அதற்குச் சளைக்காமல் ஈடுகொடுத்துக் கொண்டிருந்தார் டைட்டன்.

 ஒரு கட்டத்தில் அகஸ்டஸ் சிறிது தடுமாற, அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட டைட்டன் அவரைக் கீழே தள்ளி, மேலே அமர்ந்து, தனது ஆயுதத்தை அகஸ்டஸின் தலைக்குள் சொருகும் நேரத்தில், வல்கன் தனது பலம் மொத்தத்தையும் பயன்படுத்தி பாய்ந்து வந்து டைட்டனின் நெஞ்சில் குத்தினான்.

அந்தத் தாக்குதலை எதிர்பாராத டைட்டனின் கவசத்தில் பிளவுகள் ஏற்பட, கோபமடைந்தவர் தனது சக்தியைப் பயன்படுத்தி, வல்கனை தாக்க, வல்கன் படுகாயம் அடைந்து தரையில் விழுந்தார்.

 இந்த இடைவெளியில் எழுந்த அகஸ்டஸ், இந்த முறை விவேகத்துடன் டைட்டனை திட்டமிட்டுத் தாக்கத் தொடங்க, ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்த கவசம் முற்றிலும் உடைந்து விழுந்தது.

டைட்டன் தனது ஆயுதங்களை வைத்து மீண்டும் வன்மத்துடன் தாக்கத் தொடங்க, அகஸ்டஸுக்கு, “இன்னும் எவ்வளவு நேரம் டைட்டனுடன் போராடினாலும், அவனை வெல்ல முடியாதுஎன்று புரிந்து விட்டது.

ஏனெனில், டைட்டனுடைய சக்திகள் அனைத்தும் சோல் பாக்ஸிலிருந்து அவனுக்கு கிடைத்துக் கொண்டிருந்தன.

 அகஸ்டஸுக்கு உதவ வந்த மெட்லடனும், க்ரோனனும் டைட்டனின் சக்தி வீச்சால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இனிமேலும் தாமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்த அகஸ்டஸுக்கு ஒரு யோசனை தோன்ற, அதைச் செயல்முறைப் படுத்தத் தொடங்கினார்.

 தன் உடலுடன் இணைக்கப்பட்டு இருந்த ஈரின் கல்லை, எடுத்து தன் நெற்றியில் வைத்து அதைப் பயன்படுத்தத் தொடங்க, அவரது உடலைச் சுற்றி சக்தி அலைகள் உருவாகத் தொடங்கின. அதைக் கண்ட டைட்டன் ஒரு நிமிடம் அதிர்ந்தார்.

 அந்தச் சக்தி வளையத்தை உடைக்க போதுமான சக்தி சோல் பாக்ஸில் இல்லாததை உணர்ந்தவர், “இனி என்ன நடந்தாலும் சரிஎன்று முடிவெடுத்து, சோல் பாக்ஸில் இருந்த மொத்த சக்தியையும் பயன்படுத்தத் தொடங்கினார்.

அதற்குள் ஈரின் கல்லின் சக்தியுடன் அகஸ்டஸ் பறந்து வந்து டைட்டனின் தலையில் கை வைக்க, டைட்டன் தனது பலம் குறைந்து கொண்டு வருவதைப் போல உணர்ந்தார்.

அப்படியும் விடாமல் வல்கனுடைய சக்தியைக் கொண்டு உருவாக்கிய கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு அகஸ்டஸைத் தாக்க முயல, சரியாக அதே நேரம் இரு டிராகன்களும் வந்து டைட்டனின் மேல் தங்களது எரிமலைக் குழம்பை ஊற்றத் தொடங்கின. மெட்லடனின் சக்தியால் டைட்டனுக்கு காயம் ஏற்படாவிடினும், அவரது சக்திகள் குறைந்தன.

அகஸ்டஸ் தனது முழு சக்தியையும் உபயோகிக்க, டைட்டனுடைய சோல் மெல்ல அவனது உடலை விட்டுப் பிரியத் தொடங்கியது. இறுதியில் அகஸ்டஸ் அந்த மொத்த ஆத்மாவையும் ஈரின் கல்லின் உதவியுடன் சக்தியாக மாற்றி சோல் பாக்ஸினுள் அடைத்தார்.

 அதற்குப் பிறகு அகஸ்டஸ் மயங்கி விழ, சரியாக அங்கு வந்த செலினா அவனைப் பிடித்துக் கொண்டார்.

அகஸ்டஸையும் மற்ற சிற்றரசர்களையும் டிராகன்கள் மேல் ஏற்றி அவற்றைப் பறக்கச் செய்தவர், மீண்டும் டைட்டனிடம் திரும்பி வந்தார்.

அவனது உடலில் எதையோ தேடியவர், இறுதியில் அதைக் கண்டுபிடித்த பின், டைட்டனைக் கடைசியாகப் பார்த்து, “நீ என்னை இப்படி ஏமாற்றுவாய் என்று நான் நினைக்கவில்லை டைட்டன்என்று வாய்விட்டுக் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

 “காட்சிகள் மாற்றம் அடைந்தன. நாடக மேடையில் இருக்கும் மேடை நடிகர்கள் மாறினாலும் மேடை மாறுவதில்லை.

 இந்த உலகமே ஒரு நாடக மேடை. அதில் தத்தமது பாத்திரங்களை நடிக்க வரும் நடிகர்கள் நாம்

                       என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் As you like it என்ற நாடகத்தில் கூறியது நந்தினிக்கு நினைவு வந்தது.

******

 அவர்கள் மூவரும், மீண்டும் அந்த எழுவர் மலைக்கு திரும்பி வந்தனர். அந்த இடமே கோலாகலமாக காட்சியளித்தது.

 மக்கள் அனைவருக்கும் விருந்து கொடுக்கப்பட, அனைவரும் அகஸ்டஸின் பதவி ஏற்புக்காகக் காத்திருந்தனர். நந்தினி அந்த இடத்தை முன்னரே பார்த்து இருந்தாலும், ஆதித்யனுக்கும் ஆரியனுக்கும் ஒரு வேறுபாடு தெரிந்தது.

முன்னர் அந்த இடத்தில் வெறும் மலை மட்டும் நின்றிருக்க, இப்பொழுது அந்த மலையைச் சுற்றி ஏழு சிற்றரசர்களின் உருவச்சிலைகள் சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பது போல இருந்தது. மேலும் அந்த மலையானது குடையப்பட்டு ஒரு ஆள் மட்டும் நுழையக் கூடிய அளவுக்கு ஒரு பாதையும் இருந்தது.

 அதுவரை அங்கு ஓர் இடத்தில் தனியே எதையோ உற்று நோக்கி கொண்டிருந்த செலினா, ஆரவாரம் ஏற்படவும், அங்கே திரும்பிப் பார்த்தார். அகஸ்டஸ் முன்னர் நடக்க, அவருக்குப் பின் மற்ற ஏழு சிற்றரசர்களும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

 அவர்களிடம் செலினா வர, அவர்கள் அனைவரும் மண்டியிட்டு வணங்கினர் அவரை.

அனைவரும் எழுங்கள் !” என்று கூறியவர்,

மக்களை நோக்கி, “கயா கிரகத்திற்கு ஒரு பிரச்சினை என்று வந்த போது, தங்கள் உயிரையும் துச்சமாக எண்ணி, உங்களை மட்டுமல்லாமல் மற்ற கிரகத்தினர் அனைவரையும் இவர்கள் காப்பாற்றியுள்ளார்கள். இனி இவர்கள் தான் உங்களை ஆளப்போகும் அரசர்கள். இவர்களது வாரிசுகளும் இவர்களது பெயரையே பெற்று, இவர்களுக்குப் பின் இங்கு ஆட்சி செய்வார்கள்என்று கூறியவுடன்,

                               

மக்களிடம், “பேரரசர் அகஸ்டஸ் வாழ்க ! எழுவர் சிற்றரசர்கள் வாழ்க !” போன்ற கோஷங்கள் எழுந்தன.

பின்னர் மற்ற பொழுதுபோக்கு கொண்டாட்டங்கள் தொடங்க, செலினா அங்கிருந்து ஒரு தனிமையான இடத்திற்கு நகர்ந்து கொண்டார். அவரைப் பின் தொடர்ந்து அகஸ்டஸூம் அங்கே செல்ல, இருவரும் அந்த மறைமுக இடத்தில் தனித்து விடப்பட்டனர்.

செலினா அகஸ்டஸைக் கண்டவுடன், “என்ன அகஸ்டஸ், ஏதாவது உதவி வேண்டுமா ?” என்று கேட்க,

இல்லை, செலினா. ஆனால், நானும் கடந்த ஒரு வாரமாகப் பார்க்கின்றேன். நீங்கள் சரியாக இல்லாதது போலவே தோன்றுகிறது. அப்பொழுது மற்றவர்கள் முன்னிலையில் கேட்க விரும்பாமல் தான் விட்டு விட்டேன். இப்பொழுது கூறுங்கள்என்றார் அகஸ்டஸ்.

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, அகஸ்டஸ்என்று வெறும் வாயளவில் கூறிய செலினாவைக் கண்டு,

 “தங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் பரவாயில்லைஎன்று கூறியவர், சற்று இடைவெளி விட்டு, “நாம் ஈரின் கல்லை அழிக்க வேண்டும், செலினாஎன்று கூற, அவரை அதிர்வுடன் நோக்கினார் செலினா.

செலினா, ‘ஏன்என்பது போல அகஸ்டஸைப் பார்க்க ,

அதனுடைய சக்தியைக் கண்டு நான் பயப்படுகிறேன், செலினா. இந்தக் கல் ஒரு தனிமனிதனைப் பொறுத்தவரை மிகவும் பெரிது. அதை நான் எனது சொந்த அனுபவத்தில் உணர்ந்து விட்டேன். இந்தக் கல்லை ஒருவரிடம் கொடுக்கப்பட்டால் சாதாரணமாக நல்லவர்களாக இருப்பவர்கள் கூட தீயவர்களாக மாறி விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் இது தவறான கைகளுக்குச் சென்று விடக் கூடாதுஎன்று கூறியவர் இடைவெளி விட்டு,

நான் மற்றொரு டைட்டனை உருவாக்க விரும்பவில்லைஎன்று கூறி முடித்தார்.

 “உன்னுடைய நல்ல மனதை, நான் பாராட்டுகிறேன் அகஸ்டஸ். ஆனால், இந்தக் கல்லை அழித்தால், அதில் இருந்து வெளிவரும் சக்திகள் பேராபத்தை விளைவிக்கும்என்றார் செலினா.

 சிறிது யோசித்த அகஸ்டஸ், “அதற்கும் நான் ஒரு யோசனை வைத்திருக்கிறேன், செலினா. இந்தத் திட்டத்தை நாங்கள் எட்டு பேரும் இணைந்து இயற்றுவோம். இந்தக் கல்லை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து, அதனைச் சுற்றி ஏழு பாதுகாப்பு வளையங்களை உருவாக்க வேண்டும். அதற்கு உங்களது உதவி தேவைஎன்று கூறியவர், ஒரு பார்ச்மென்டையும் தனது உடலில் இருந்த ஈரின் கல்லையும் எடுத்து செலினாவிடம் ஒப்படைத்தார்.

******

காலம் : பல மில்லியன் ஆன்டுகளுக்கு பின்

பிறகு காட்சிகள் சிறிது சிறிதாக மாறின. ஆனால், திடீரென்று அடுத்த காட்சிக்குள் நுழைவதற்குள் பல தடங்கல்கள் ஏற்பட்டன.

 அந்தக் கருப்பு நதியில் இடி மின்னல்கள் மாறி மாறித் தோன்றின. கண்கள் இருட்டுக்குப் பழக்கப்பட்ட பின்னர், தாங்கள் வெலாரிஸ் கோட்டையின் வாசலில் இருப்பது தெரிந்தது.

அந்தக் கோட்டைக்குள் மூவரும் நுழைந்து பார்க்க, அங்கு ஓர் அறையில் ஒரு பெண் கதறி அழுது கொண்டிருந்த சத்தம் கேட்டது.

அந்த அறைக்கு வெளியே அப்பொழுதைய கயா கிரகத்தின் பேரரசரான யூரஸ் பரபரப்புடன் நின்றிருக்க, மற்ற சிற்றரசர்களும் கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தனர். அனைவரும் செலினாவின் வரவை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

திடீரென்று அங்குத் தோன்றிய செலினா அறைக்கு உள்ளே சென்று பார்த்துவிட்டு இல்லைஎன்பது போலக் கவலையுடன் தலை அசைத்தார்.

அதுவரை அமைதியாக நின்றிருந்த இரு மழலைகள் அழத் தொடங்கினர். வல்கன் அவர்கள் இருவரையும் அழைத்து செல்ல, யூரஸ் தனது ஆருயிர் மனைவியை நினைத்து வேதனைப்பட்டார்.

சில நிமிடங்கள் அப்படியே கழிய, திடீரென்று ஒரு குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டது. செலினா ஒரு குழந்தையைக் கையில் கொண்டு வந்து யூரஸிடம் கொடுத்து, ‘ப்ரொமேத்தியஸ்என்று சிரித்த முகத்துடன் கூற, யூரஸின் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை.

ஆனால், குழந்தையின் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த மழலையர் இருவரின் கண்களிலும் கண்ணீரைத் தாண்டி, ஒரு மகிழ்ச்சி தென்பட்டது. யூரஸ் செலினாவை பார்க்க, அவர் மறுப்பது போலத் தலையை அசைத்தார்.

******

பின்னர் காட்சிகள் வேகமாக மாறியது. அந்தக் காட்சியில் ப்ரொமேத்தியஸ் மட்டும் தனித்து அமர்ந்திருக்க, சீரஸூம் மற்ற சிறுவர்களும் அவனோடு சேராமல் தங்களது சக்திகளைப் பயன்படுத்தி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது…

 ******

 கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பொசய்டனின் நினைவுகளில் இருந்து வெளியே வந்தனர்.

 நந்தினி நினைவு வந்தவுடன் முதலில் பொசய்டனிடம், “பொசய்டன், நான் கேட்கும் கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்லி விடுங்கள்என்று கண்களில் எதிர்பார்ப்பு வழிய கூறினாள்.

அவள் எதைக் கேட்கப் போகிறாள் என்று அறிந்திருந்த பொசய்டன், “ ஆமாம், நந்தினி. ப்ரொமேத்தியஸ் உன்னுடைய தந்தையின் சொந்த தம்பிதான். இனியும் இதை மறைத்து எந்தப் பிரயோஜனமும் இல்லைஎன்றார்.

அதைக் கேட்ட ஆதித்யனும், ஆரியனும் அதிர்ச்சி அடைந்தனர்.

நந்தினியின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் உருண்டு விழ, ஆதித்யன் அவளைத் தேற்றத் தொடங்கினான்.

 சிறிது நேரம் கழித்து ஆரியன், “ஆனால், அவரை ஏன் அனைவரும் ஒதுக்கி வைத்திருந்தனர் ?” என்று கேட்டான்.

 ஒரு சிறிய பெருமூச்சை வெளியிட்ட பொசய்டன், “கயா கிரக வாசிகளைப் பொறுத்தவரை, மற்ற கிரகத்தினரை விட நீண்ட காலம் வாழ்வார்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், சுமார் 500 ஆண்டுகளாவது இருக்கும். அதிலும் அரச குடும்பத்தினருக்கு இன்னும் அதிகம் இருக்கும். ஆனால், துரதிருஷ்டவசமாக சீரஸின் தாயார் இறந்து விட்டார். பேரரசர் யூரஸ், ப்ரொமேத்தியஸைத் தான் அதற்குக் காரணமாகப் பார்த்தார். கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு சீரஸும், அவனிடம் இருந்து விலகி விட்டான்என்றார்.

 “அப்புறம் என்ன நடந்தது, பொசய்டன் ?” என்று கண்களில் ஆர்வத்தைத் தேக்கிக் கொண்டு கேட்டாள் நந்தினி.

 பொசய்டன், “இன்றைக்கு இது போதும் நந்தினி. அதிக நேரம் நினைவுகளில் பயணம் செய்யக் கூடாதுஎன்றார்.

 அவள் ஏதோ மறுப்பதற்கு வாயைத் திறக்க, “எனக்காக க்ரிசான்டாஎன்றார்.

 அதற்குப் பிறகு நந்தினி, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

 “இப்போது அனைத்தையும் விட முக்கியமான ஒரு விஷயத்தை நான் கூறப் போகின்றேன். அந்தப் பொருள் மட்டும் க்ரிசான்டாவிடம் இருந்தால், நிச்சயம் அவளால் ப்ரோமேத்தியஸை வெல்ல முடியும்என்றார்.

 ஆதித்யனும் ஆரியனும் குழப்பத்துடன் பார்க்க, நந்தினி ஒரு தீர்மானத்துடன், “ஈரின் கல், இப்பொழுது எங்கே இருக்கின்றது பொசய்டன் ?” என்று கேட்டாள்.

 பொசய்டன் தன்னிடம் இருந்த, பார்ச்மன்ட்டை எடுத்துக் காட்டினார். அதை முன்னர் பார்த்த சூழல் நினைவு வர,

 ஆதித்யன், “இது உங்களுக்கு எப்படிக் கிடைத்தது ?” என்று கேட்டான்.

 பொசய்டன் நந்தினியைப் பார்த்து, “நீ இப்பொழுது நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும், க்ரிசான்டா. சீரஸ் இறந்த பிறகு, ப்ரொமேத்தியஸ் பேரரசனாகப் பதவி ஏற்றுக் கொண்டான். எனது முன்னோரின் உத்தரவுப்படி நான் அவனுக்குத் தலைமை மந்திரியாக பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டேன். அதைத் தேடும் பொறுப்பை எனக்கு ப்ரொமேத்தியஸ் அளித்தான்என்று நடந்த அனைத்தையும் கூறினார்.

 “உங்களை ஏமாற்றுவதற்காக இதைக் கொடுத்து இருக்கலாம் அல்லவா ? ” என்று ஆதி கேட்க,

 “இல்லை, இது உண்மையானது தான். நான் சோதித்துப் பார்த்து விட்டேன்என்றார்.

 இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ளாத நந்தினியின் கண்கள், அந்த பார்ச்மன்டை மட்டும் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!