Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennadi Maayaavi Nee

Ennadi Maayaavi Nee 10

மாயாவி 10 :::

 

தோல்வியை எல்லாம் வெற்றியாக…

மாற்றும் நீ!



Advertisement

அது வாழ்க்கையின் பாடமோ… 

அல்லது காதலோ… 

கற்றுக்கொடுப்பது நீயானால் 

Advertisement

உன்னிடம் நான் தோற்று போகவே   

Advertisement

விரும்புவதாய் என்னையே 

உணர வைக்கிறாயே…

என்னடி மாயாவி நீ !

Advertisement

 

இரண்டு நாட்களாக தாய் கேட்ட கேள்வியிலே உழன்று கொண்டிருந்தான். அவர்கள் கேட்டது அவனுக்கு தவறாகப்படவில்லை ஆனால் அவர்கள் கேட்கும் அளவிற்கு நாம் உள்ளோமா என்று முதல் முறை தன்னை பற்றிய சுய அலசலில் இருந்தவனை போன் ஒலி கலைக்க அதில் தந்தையின் எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது.

 

“ஹலோ! சொல்லுங்கப்பா!” என்றான்.

 

“தம்பி ! நீங்க நெடுமாறன் பிள்ளையா?” என்று கேட்கவும்,

பதட்டத்துடன், “ஆமா சார்! அப்பா எங்க? நீங்க யாரு பேசறீங்க?” என்று கேட்டவனிடம்,

 

“நான் உங்க அப்பா கூட வேலை செய்யறேன் தம்பி…. வேலை செய்யும் போது திடீர்னு உங்க அப்பா மயங்கி விழுந்துட்டாருப்பா… மலர் ஹாஸ்பிடல்ல தான் சேர்த்திருக்கோம்… நீ கிளம்பி வாப்பா… நேர்ல பேசிக்கலாம்…” என்றவர் அவன் பதிலுக்கு காத்திராமல் போனை வைத்து விட்டார்.

 

“ஹலோ ! ஹலோ !” என்று கத்தியவனுக்கு எந்த பதிலும் வராமல் போக தன் பைக்கை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தான்.

 

செல்லும் வழி எல்லாம் இனம் புரியாத பயம் அவனை சூழ்ந்தது… அப்பாவுக்கு ஒன்னும் ஆகி இருக்க கூடாது… என்று கடவுளை எல்லாம் துணைக்கு அழைத்து கொண்டு ஹாஸ்பிடலை அடைந்தவன் விவரம் கேட்டு தந்தை இருந்த இடம் நோக்கி சென்றான்.

 

அங்கு அவனுக்கு போன் செய்தவர் நின்றிருக்க, “அங்கிள் அப்பா எங்க? அப்பாவுக்கு என்னாச்சு?” என்று பதற்றத்தோடு கேட்க,

 

“தெரியலைப்பா… இன்னும் மயக்கம் தெளியல… டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க… அவங்க வந்து தான் சொல்லணும்… வயசாகுதுல அதான் இப்படி….” என்று அவனுக்கு ஆறுதலிக்க, அவனோ டாக்டர் வெளியே வருவாரா என்றபடியே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

சிறிது நேரம் கழித்து டாக்டர் வெளியே வரவும், 

“டாக்டர் ! அப்பாவுக்கு என்னாச்சு ? இப்ப எப்படி இருக்காரு?” என்று அவன் கேட்க,

 

“வாங்க ! என்னோட ரூமுக்கு போய் பேசலாம்…” என்று அவர் சொல்லவும் அவன் முகம் வெளிற, அவர் பின்னாடியே சென்றான்.

 

உள்ளே சென்றதும், “உங்க கூட வேற யாரும் இல்லையா?” என்று கேட்டார்.

 

“இல்ல டாக்டர்! சொல்லுங்க…”

 

“அவருக்கு ஏற்கனவே ஹார்ட் ஆபரேஷன் பண்ணியிருக்காங்களா?”

 

“ஆமா டாக்டர் ! ஒரு நாலு மாசம் முன்னாடி பண்ணாங்க…”

 

“ஓ! அவருக்கு மறுபடியும் இரண்டாவது அட்டாக் வந்திருக்கு… இரண்டு இடத்துல அடைப்பு இருக்கு… ஏற்கனவே ஆபரேஷன் பண்ணியிருக்காங்கன்னு சொல்றீங்க…”

 

“இப்ப ஆஞ்சியோல சரி பண்ணிடலாம் ஆனால் அவருக்கு இரத்த கொதிப்பு அதிகமா இருக்கு… அதனால இப்ப நம்ம என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தாலும் அதுல பாதிக்கு பாதிக்கு வாய்ப்பு தான்…”

 

“ஏன்னா அவர் வயசு ஒரு காரணம்னா இன்னொன்னு அவர் பலவீனமா இருக்கறது… அதனால எதுவானாலும் நீங்க முடிவு பண்ணுங்க… எப்படியும் இன்னைக்கு ஒரு நாள் முழுசா கவனிப்புல இருப்பாரு… அதுக்குள்ள என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணுங்க…” என்று அவர் சொல்ல சொல்ல இவனுக்கு தலை கிறுகிறுத்தது.

 

தந்தை இருந்த அறைக்கு எதிரே வந்து அமர்ந்தவனின் மூளை எல்லாம் வெறுமையாக இருந்தது… என்ன செய்வதென்று ஒன்னும் புரியவில்லை… தந்தையை அனுமதித்தவர் வந்து,

 

“தம்பி ! அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது நீ கவலைப்படாதே… வயசானாலும் வீட்ல சும்மா இருக்க முடியலைன்னு வேலைக்கு வந்தாரு… நீ தான் இப்ப பெங்களூர்ல ஏதோ பெரிய வேலையில இருக்கியாமே… அப்புறம் என்ன? இனி அவரை வேலைக்கு அனுப்பாம பார்த்துக்கோ அவ்வளவு தான்… இதுக்கு ஏன் நீ கவலைப்படற… எனக்கு நேரமாகுது நான் கிளம்பட்டுமா…” என்று கேட்டவருக்கு பதில் ஏதும் சொல்ல முடியாமல் தலையசைத்தவனின் மனமோ ரணமாக வலித்தது. 

 

அதற்குள் ஹாஸ்பிடல் ஊழியர் ஒருவர் வந்து,

 

“சார் ! வெறும் அட்மிஷன் பீஸ் மட்டும் தான் கட்டியிருக்காங்க… நீங்க இன்னும் ஐம்பதாயிரம் கட்ட வேண்டியிருக்கு…” என்று சொல்ல,

 

“ஐயோ! அவ்வளவு பணத்துக்கு எங்க போவேன்?” என்று மனதிற்குள் திகைத்தவன்,

 

“ஒர்ர்ரு… ஒரு மணி நேரத்தில கட்டிடறேன் சார்…” என்றவனுக்கு வார்த்தைகள் தந்தியடித்தது.   

 

உடனே தனது போனை எடுத்து நண்பர்களிடம் கேட்க, திடீர்னு அவ்வளவு பணம் என்றதும் இல்லை என கையை விரித்து… சாரிடா… என்றனர்.  

 

இதுவரை தான் கேட்டு எதுவும் மறுக்காத தந்தைக்கு இன்று எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்த தன் கையறு நிலையை நினைத்து வருந்தினான்.

 

தான் சரியாக வேலைக்கு சென்று அவரை பார்த்துக் கொள்ள வேண்டிய வயதில் அவர் வேலைக்கு சென்று தனக்கு சாப்பாடு போட்டிருப்பதை உணர்ந்தவன் தன்னை தானே வெறுத்தான்.

 

“ச்சே! நான் ஏன் இப்படி இருக்கேன்?” என்று வாய்விட்டு புலம்பியவன்,

 

“இதுவரை என்னோட வேலை பற்றியோ சம்பளம் பற்றியோ யாரும் பெரியதாக பேசியது கிடையாதே… அவ்வளவு ஏன் இத்தனை நாள்  வேலைக்கு சென்று வாங்கிய சம்பளத்தில் ஒரு ரூபாய் கூட வீட்டிற்கு கொடுத்தது இல்லையே…”

 

இவ்வளவு ஏன் இந்த படிப்பு கூட அவன் விருப்பப்பட்டு கேட்டு அவன் மதிப்பெண்ணிற்கு கிடைக்காமல் டொனேஷன் கொடுத்து தந்தை சேர்த்து விட்டது. ஏதோ நண்பர்கள் சொன்னார்கள், இன்ஜினியரிங் என்றாலே அப்போது சிவில் பிரிவு தானே பெரிய படிப்பு, என்று எல்லாம் சேர்ந்து தான் இந்த படிப்பை தேர்ந்தெடுக்க காரணம். 

 

மற்றபடி அதில் ஆர்வம் இருந்தோ அல்லது அந்த துறையில் ஏதேனும் சாதிக்க என்றோ எடுத்தது இல்லையே…  வாழ்க்கையை இயல்பாக ஏற்றுக் கொண்டு கிடைத்ததை வைத்து வாழ்பவர் ஒரு ரகம் என்றால், எது வேணுமோ அதை தேடி, தேடி சாதித்து வாழ்பவர் ஒரு ரகம்… இதில் தான் எந்த பிரிவில் இருக்கிறோம் என்று அவனை அவனே கேட்டுக் கொண்டிருந்தான்…  

 

ஏனெனில் அவன் தான் அந்த இரண்டிலும் வரவில்லையே… வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்காமல் ஏதோ ஏனோ தானோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்தவன்,

 

“இப்படி இருப்பதற்காக இதுவரைக்கும் அப்பா ஒரு முறைகூட தன்னை ஒரு வார்த்தை பேசியதில்லையே… அப்படி ஏதும் சொல்லியிருந்தாலும் அதை ஏற்று கொண்டிருப்போமா? யாரைப் பற்றியும் யோசிக்காமல் எப்பவும் என்னை பத்தி மட்டும் தான் யோசிச்சிருக்கேனே… நான் சரியா இல்லையோ… இன்று அப்பா இப்படி இருப்பதற்கு நான் தானே காரணம்…”

 

“இன்னைக்கு என்னால ஒரு ஐம்பதாயிரம் ரெடி பண்ண முடியல… நான் கேட்டாலும் என்னை நம்பி எப்படி தருவாங்க? இப்ப என்ன பண்றது? இதுக்கே இப்படின்னா இன்னும் மத்த செலவுக்கு என்ன பண்றது? 

 

ஆஞ்சியோ பண்ணலாமா இல்லை மறுபடியும் ஆபரேஷன் பண்றதா? டாக்டர் அதை பத்தி முடிவெடுக்க சொன்னாரே? அதை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதே?” என்று தனியாக தனக்குள் புலம்பி கொண்டிருந்தவனை மறுபடியும் நர்ஸ் ஒருவர் வந்து அழைத்து,

 

“இந்த மருந்து வாங்கிட்டு வந்து கொடுங்க… அவருக்கு ஊசி போடணும்…” என்று சொல்லிவிட்டு கையில் மருந்து சீட்டை கொடுத்துவிட்டு சென்றார்.                                                                                                                         

ஏதோ கையில் இருந்த பணத்தை வைத்து அது வாங்கி கொடுத்தவனுக்கு திடீரென தன் மாமாவின் ஞாபகம் வந்து குழலியின் தந்தைக்கு அழைக்க, அவர் எண் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வர, அப்போது தான் அவர்கள் ஏதோ டூர் சென்றது நினைவு வந்தது…

 

மாமனார் நினைவுக்கு வரும் போதே மனைவியின் எண்ணமும் நினைவு வந்ததும் அவளுக்கு அழைக்கலாம் என்று போனை எடுத்தவனுக்கு அப்போதே அவள் எண் தன்னிடம் இல்லை என்பது உரைக்க, திடீரென யாரும் இல்லாத காட்டில் தனியாக மாட்டிக் கொண்டது போல மொத்தமாக ஓய்ந்தே போனான்.

 

எங்கோ போன் ஒலிக்கும் சத்தத்தில் விழித்து பார்க்க, தன் கையில் இருக்கும் தந்தையின் போனில் இருந்து அழைக்கும் தன் மனையாளையே பார்த்தவனுக்கு மனதின் ஓரம் எங்கோ ஒரு நிறைவு… அந்த நிறைவோடே போனை எடுக்க,

 

“மாமா!” என்ற அவளின் ஒற்றை அழைப்பில் அவனுக்கு கண்கள் கலங்குவது போலிருக்க, 

 

அவளோ “போனை எடுக்க இவ்வளவு நேரமா? என்ன இன்னைக்கு காலையிலே இருந்து உங்க போனை காணோம்… வர  வர  உங்களுக்கு  என்மேல பாசமே இல்லை ” என்று அவரிடம் பேசுவதாக நினைத்து பேசி கொண்டிருந்தவள், எதிர்புறம் அமைதியை உணர்ந்து,

 

“ஹலோ மாமா ! லைன்ல இருக்கீங்களா…” என்று கேட்டதும்,

 

“குழல்!”  

 

விரல் விட்டு எண்ணக்கூடிய அவர்களின் பேச்சு வார்த்தையில் இதுவரை ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்து பேசியது இல்லை… ஆனால் இன்று அவனின் அழைப்பில் தன்னாலேயே அவனின் குரலை இனம் கண்டவளுக்கு படபடத்தது.

 

“மாமா போன்… நீங்க…” என்று அவளுக்கு வார்த்தைகள் தடுமாற,

 

“குழல் ! அப்பாவை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்…” என்றவனின் குரலில் இருந்த நடுக்கம் அவளை என்னவோ செய்தது… 

 

“என்னாச்சு ? நல்லா தானே இருந்தாங்க…” என்று பதற்றத்தோடு அவள் கேட்க,

 

“எனக்கு தெரியல… என்னென்னமோ சொல்றாங்க… எனக்கு ஒன்னும் புரியல…” என்று பிதற்றியவனிடம்,

 

“சரி ! சரி! ஒன்னும் இருக்காது… நான் கிளம்பி வரேன்… டாக்டர் கிட்ட ரிபோர்ட்ஸ் வாங்கி அனுப்புங்க…” என்றவளிடம்,

 

“குழல்!” 

என்று அழைத்தவனின் குரலில் இருந்த உரிமையையும், முதல் முறையாக அந்த அழைப்பு தன் மனதுக்கு நெருக்கமாக இருப்பதையும் உணர்ந்தவள் திடுக்கிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!