Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ48_1 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  48_1

 

வாழ்க்கைத் தடம் மாறி மாதம் ஒன்று ஓடியிருக்க.. மூர்த்தியின் முன் சந்திராசூர்.

 



Advertisement

‘உன் பலத்தை.. உன் வீரத்தை என்னிடம் காட்டு’ என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தான், மூர்த்தி.

 

அவன் பலத்தை அவன் காட்ட.. அசையாமல் நின்றான், இவன்.

Advertisement

 

Advertisement

உன்னால் முடிந்த வரை அடி என்று நின்று கொடுத்தான். கையும் உடலும் களைத்துப் போகும் வரை அவனும் அடிக்க.. இவனும் நின்று வாங்கிக் கொண்டான். மனைவியைக் காக்காமல் போனேனே என்ற வெறி. தன் வீட்டுப் பிள்ளைகள் மேல் கை வைத்து விட்டானே என்ற கோபம்.. அவனின் ஒவ்வொரு அடியிலும் வெறியும் கோபமும் அதிகம் ஆனது.

 

கண் முன் உருவம் தெரியாத அவன் குட்டிக் கண்ணம்மா வரவுமே கோபம் அதின் எல்லையைக் கடந்தது. அடுத்த அடி அடிக்க கை ஓங்கியவனின் இரண்டு காயையும் பிடித்து தன் பக்கம் இழுத்து, இவன் முழு கோபத்தையும் கால் வழியே இடியாய் எதிரில் நின்றவன் நெஞ்சில் இறக்க, சுருண்டு விழுந்தவனால் அதன் பின் எழுந்திருக்க முடியவில்லை.

Advertisement

 

விழுந்து கிடந்தவனை விட்டானில்லை. இவன் கோபத்தை, இவன் வலியை, இவன் இழப்பை, இவன் பலத்தை அவனிடம் காட்டினான்.

 

ஏனோ அடிக்க அடிக்க இவன் வலி அதிகம் தான் ஆனது. தாள முடியா வேதனை. கழுத்தை நெறித்துக் கொன்றாலும் இந்த வலி அடங்காது என்று தெரிந்தது.

 

மூர்த்தி அடித்தான், நந்தினிக்காக அடித்தான். தங்கத்திற்காக அடித்தான். பானுவிற்காக அடித்தான். அவன் குருவிக் கூட்டை கலைத்தற்காக ஆத்திரம் அடங்காத என்று அடித்தான். என்ன அடித்து ஆத்திரம் மட்டும் அடங்கவே இல்லை.

 

மீண்டும் அடித்தான், சின்ன பெண்களை கோமல்களாய் மாற்றியதற்காக அடித்தான்.  

 

மூர்த்தி மீண்டும் மீண்டும் அடித்தான், அடித்துக்கொண்டே இருந்தான். பல மாதங்கள்.. பல இடங்கள்.. பல ஓநாய்கள் என்று களைத்துப் போகும் மட்டும் தேடி பிடித்து அடித்தான்.

 

காக்கி சட்டை போட்டவர்களோடு, காக்கி சட்டை போடாமலே தட்டி கேட்டான். நாட்கள் வாரங்களாய் மாதங்களாய் மாறியது. ஆனால் அவர்கள் தேடல் ஓயவில்லை. களைத்த பின்னும்.. இழுத்துப்பிடித்து.. தேடிப் பிடித்து ஓநாய்களை அடித்தார்கள், அழித்தார்கள்.

 

அவன் தனி மனிதன் இல்லை என்பதால் அவன் பலம் அதிகம். அதில் ஒரு பங்கு பழி உணர்ச்சி இல்லை. ஆரம்பத்தில் தனிப்பட்ட கோபம் இருந்தது. ஆனால் உள்ளே செல்ல செல்ல.. கதறும் சிறு பிள்ளைகளைப் பார்த்த பின்.. கோபம் தன்னை சுற்றி இருந்த பிள்ளைகளுக்காக மாறியது.

 

நாசம் செய்துகொண்டிருந்த கிருமிகளை அழிப்பது மட்டுமே அவர்கள் எண்ணமாயிருந்தது. அடுத்த தலை முறைகளுக்காக நடத்தப்படும் கிருமி நாசினியாக மாறினார்கள்.

 

ஏழு வயதுக் குழந்தைகள் எல்லாம் குழந்தைகளாகத் தெரியாதவன் கண்ணை எல்லாம் பிடுங்கினால் என்ன என்று தோன்றியது. ஆண் பிள்ளை பெண் பிள்ளை என்ற பேதமில்லாமல் கடத்தி.. அடித்துத் துன்புறுத்தி, குழந்தைகளை வியாபார பொருளாய் மாற்றிக் கொண்டிருக்கும் குள்ளநரி கூட்டத்தை என்ன செய்வது? யார் இவர்களை வளர விட்டது? பதிலில்லை.

 

அவர்கள் குதித்திருப்பது சுழல்.. ஆழ் கடலில் உள்ள சுழல் என்பது புரிந்தது, கொஞ்சம் கவனம் தப்பினாலும் உள்ளே இழுத்து அழித்துவிடும். கண்டிப்பாகத் தனி மனிதனாக இந்த வர்த்தகத்தை நிறுத்த முடியாது என்பது முகத்தில் அறைந்த நிதர்சனம். பார்த்த கும்பல் மேல் எல்லாம் கை வைத்தால் விட்ட குறை தொட்ட குறை என்று மீண்டும் பிரச்சினையில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவர்கள் குறி கௌஷியின் கும்பல் மேல் மட்டுமே.

 

இது வெறும் தற்காலிக தீர்வு என்பது தெரியாமலில்லை. இருந்தும், செடியை நசுக்கி, அதன் வளர்ச்சியைத் தடுக்கும் களைகள், மீண்டும் மீண்டும் முளைக்கும் என்று தெரிந்தும் அதை நாம் பிடுங்குவதில்லையா?

 

காக்கி சட்டை அதன் வேலையைச் செய்தது. மக்களுக்கு நண்பனாய்.. ஊரைக் காக்க ஊர் காவலனாய் மாறியது. ப்ரேம் அல்லது சத்யன் மூர்த்தியோடு இருந்து கொண்டே இருக்க.. இரத்த கறை அவன் கையில் படியாமல் பார்த்துக் கொண்டனர். சட்டத்தின் பார்வையில் குற்றவாளியாய் நின்றுவிட கூடாதென்பதில் அதிக கவனம் செலுத்தினர்.

 

சிறுவர்களைக் கண்காணித்து, கடத்தி, அவல நிலைக்கு ஆளாக்கி அந்த உதிரத்தில் வரும் இரத்த பணத்தைக் கொண்டு வயிற்றை நிரப்பிய ஒவ்வோர் குள்ள நரியையும் தேடிப் பிடித்தான். சிலர் பிடிபட்டு சிறை கம்பியின் பின், சிலர் அழிக்கப்பட்டனர்.

 

கௌஷியின் அடிமட்ட ஆளில் ஆரம்பித்து அவள் முழு கோட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆணி வேரோடு அழிக்கப்பட்டது. மொத்தத்தில், சந்திராசூரில் ஆரம்பித்து, சாந்தினியில் தொடர்ந்து கௌஷியில் முடிந்தது.

 

அமைச்சர் மகளுக்குப் பரம திருப்தி. அவர் தங்கையின் சாவிற்குக் காரணமான கும்பல் அழிந்த திருப்தி! சாதனைக்கான விருதை ஏற்பாடு செய்யும் முயற்சியில் கேபினட் மினிஸ்டர்! அப்பா வளர்த்த களையை மகள் பிழுது போட்டது விந்தை!

 

“டி.சி.பி. சத்யன் தலைமையில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கையில், பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்தப்பட்ட 174, 7 முதல் 19 வயதிற்கு உட்பட்ட பெண் மற்றும் ஆண் சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.” என்றது அன்றைய நாளிதழ்.

 

“‘செம்புலம் மறுவாழ்வு மையத்தில்’ நீர்த் துளிகளாய் சேர்ந்த பிள்ளைகளை, அவர்களை தேடி வரும் பெற்றோரிடத்தில் ஒப்படைக்கப்படும்” என்றது அதே நாளிதழ்.

 

‘சட்டம் அதன் கடமையைச் செய்தது’ – அதையும் நாளிதழ் தான் உரைத்தது. இதில் எங்குமே மூர்த்தி என்ற மனிதன் இல்லை.

 

சத்யனின் சிரித்த முகமும் சிறுவர்களின் நிம்மதி முகமும் தொலைக்காட்சி பெட்டியிலும், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களிலும் புகைப்படமாக வந்தது.

 

மூர்த்தியின் கனவை தனதாக்கி, ஐ.பி.ஸ் முடித்து, அவன் கனவை இவன் வாழ்ந்து, இன்று நண்பன் நிம்மதிக்காகப் பலதையும் துணிந்து செய்தும் விட்டான், சத்யன்.

 

ஒரு நண்பனாக, ஒரு தமையனாக சத்யன் எட்டாத சிகரமாக உயர்ந்து  நின்றான்.

 

கடந்து சென்ற ஒரு வருடம் மூர்த்தியின் வாழ்வில் மட்டும் அல்ல.. சத்யன், ப்ரேமின் வாழ்விலும் கூட பெரிய மாற்றம் தான். மூவருக்குமே குடும்பம் இரண்டாம் பட்சமாய் மாறிப் போனது. மாதக் கணக்கில் கூட வீட்டின் பக்கம் போக முடியாமல், கண்ட ஓநாயையும் குள்ள நரியையும் மோப்பம் பிடித்துக்கொண்டே செல்லவேண்டிய சூழலையும் கடந்து தான் வந்தார்கள். இன்று அதன் பலனைக் கண்டுவிட்டார்கள்.

 

எடுத்த வேலை முடிந்தாலும்.. முடிக்க இன்னும் நிறைய இருந்தது. இந்த வேட்டை மூர்த்திக்கு முடிந்திருக்கலாம். ஆனால் சத்யனைப் பொறுத்தவரை அது வெறும் ஆரம்பம் மட்டுமே.

 

வருடம் ஒன்று ஆகியிருக்க.. மனைவிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டாமா? இன்று எட்டாம் தேதி. ஒரு வருடம் முன் இன்று தான் அவன் துளசி, மார்பில் சாய்ந்து கதை பேசினாள்.  ஒரு வருடம் சென்றிருக்கலாம்.. ஆனால் வார்த்தைகளும் மறக்கவில்லை. மனைவியின் ஸ்பரிசமும் மறக்கவில்லை.

 

இனி தைரியமாகத் துளசியை பார்க்கலாம். கோழை என்று நினைக்க மாட்டாள். கன்னக்குழியில் இதழ் பதித்து.. மீசையை முறுக்கி விடுவாளே..

 

நாளை மறுநாளோடு ஒரு வருடம் முடிந்துவிடும், அவளை, மூர்த்தியின் உயிரை, அங்கு விட்டு வந்து! தோட்டத்தின் கடைசியிலிருந்த மகிழ மரத்தடியில் விட்டு வந்திருந்தான். துளசிக்கு என்ன ஆனது? தெரியாது. என்ன ஆகி இருந்தாலும் அங்கு தான் இருப்பாள். சந்தேகமில்லை. வீட்டில் அனைவருக்குமே அவள் விருப்பம் தெரியுமே.

 

‘விழித்தால்..’ தகவல் அனுப்பக் கேட்டிருந்தான். அப்படி ஒரு தகவலும் வந்திருக்கவில்லை. கடைசியாக “குழந்தையை மட்டுமாவது காப்பாத்த ட்ரை பண்ணலாம்ன்னு டாக்டர் சொல்றார். பாப்பாக்கு இன்னும் ஏழு மாசம் கூட ஆகல.. அதனால அதுவும் முயற்சி மட்டும் தான். தீர்மானமா ஒண்ணும் சொல்ல முடியாதாம். எங்களால ஒரு முடிவுக்கு வர முடியல. என்ன செய்யறது?” என்று செல்வன் கேட்டிருந்தானாம். அதுவும் காலம் கடந்து, மாதம் இரண்டு முடிந்த பின் சத்யன் மூலம் வந்து சேர்ந்தது.

 

முதல் நான்கு மாதம் பம்பாயை மட்டுமே சுற்றி வந்தவர்கள், அடுத்த எட்டு மாதங்களும் எங்கெங்கோ சென்றனர். ஆழமான பள்ளத்தில் ஆபத்தான புலியின் வாலை பிடித்துக்கொண்டிருந்தனர். குடும்பத்தைத் தூர நிறுத்தியிருந்த காலகட்டம் அது.

 

எல்லாம் முடித்து, மூர்த்தி, சத்யன் வீட்டிற்கு வந்த நேரம் ஏதேனும் தகவல் இருக்கும் என்று எதிர்பார்க்க.. வீட்டிலிருந்து ஒரு தகவலும் வந்திருக்கவில்லை.  

 

ஏன் எந்த தகவலும் வரவில்லை? துளசி என்ன ஆனாள்? ஏதோ புரிவது போல் தோன்றியது.  பயம் பிடித்துக் கொண்டது. யோசிக்க முடியவில்லை. எதிரில் நின்றவனை அடித்து நையப் புடைக்கத் தெரிந்த மூர்த்திக்கு.. ‘மூர்த்தி சார்’ என்று வரும் வேளை கோழையாய் போனதில் அதிசயம் இல்லையே.

 

மரத்தடியில்.. மடியில் அமர்ந்திருந்தவளை நினைத்தவன் மனம் மருத்துவமனை சென்றது… தோட்ட வீட்டின் படுக்கையறைக்குள் நுழைய உள்ளுக்குள் பிசைந்து வலித்தது.

 

துளசியின் நினைவு அதிகமாக ஆட்கொள்ள, வந்த வேலை முடிந்துவிட.. இனி அவளை, அவனின் இதயத் துடிப்பைப் பார்க்கத் தடை ஏது? பத்தாம் தேதி வருவதாய் சத்தியம் செய்திருந்தானே.. போகவில்லை என்றால், அவனின் அனிச்சம் மலர் வாடிவிடும். அவன் மலர் மண்ணிற்கு மேலிருந்தாலும் கீழிருந்தாலும் மூச்சுக் காற்றை அவளோடு சேர்ந்துவிடும் நோக்கம். இனி துளசியைத் தனித்து விட மாட்டான்.

 

“ஃப்ளைட் புக் பண்ணவா மூர்த்தி” சத்யன் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்தவன்,

 

“நான் ஸ்டேஷனுக்கு வரேன்” என்றதிற்கும் மறுப்பு தெரிவித்தான்.

 

“அலைஞ்சது போதும் சத்யா. இனி மேல் குடுமபத்த பாரு! நான் போக வேண்டிய இடத்துக்குத் தனியா போயிடுவேன். அனு, பிள்ளைகளோட நேரம் செலவு பண்ணு. பத்திரம் சத்யா.” இனி சத்தியனைப் பார்ப்பானா தெரியாது. ஆழ்ந்த மூச்சோடு, அணைத்து தோள் தட்டி விடை பெற்றான்.

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!