Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 14.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி.  இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

“இப்போ நாம ரூமுக்கு போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு 6 மணிக்கு கோயிலுக்கு கிளம்பலாம். என்ன சொல்றீங்க?”

“ஓகே” என்று மகள்கள் கூறினார்கள்.



Advertisement

அனைவரும் தங்கும் விடுதிக்கு சென்றனர். விடுதிக்கு சென்றதும் அங்கு இருந்த இரண்டு படுக்கையில் இரு மகள்களும் தொப்பென்று விழுந்தனர். வெண்மதி  அங்கு இருந்த சோபாவில் உட்கார்ந்தாள்.

“நீயும் கொஞ்ச நேரம் தூங்குமா.” என்று அருணாச்சலம் கூற

“இல்லை அப்பா. எனக்கு தூக்கம் வரலை.”  என்று கூறியவள் போனை எடுத்து  லட்சுமிக்கு கால்  செய்தாள்.

Advertisement

அந்தப் பக்கம் போனை எடுத்த லட்சுமி ஆர்வத்துடன் “என்னமா மதுரைக்கு போயிட்டீங்களா?” என்று கேட்க

Advertisement

“ஆமாம் அம்மா. நாங்க வந்து சேர்ந்து விட்டோம். சாயந்திரம் கோயிலுக்கு கிளம்பனும்.” என்று கூறிவிட்டு பொதுவாக பேசிவிட்டு போனை வைத்தாள். அனைவரும் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு எழுந்தனர்.

மணி ஐந்தரை என்று கடிகாரம் காட்டியது.

“சீக்கிரம் எல்லாரும் கிளம்புங்க.”  என்றார் அருணாச்சலம்.

Advertisement

அனைவரும் குளித்துவிட்டு கிளம்பினர். கவிதாவும் வெண்மதியும்  எடுத்து வந்திருந்த பச்சை நிற புடவையை எடுத்து கட்டினர்.

இவர்களை கண்ட கலைவாணி “நீங்க மட்டும்தான் கிரீன் கலர் போடுவீங்களா? நானும் போடுவேன்.” என்று கூறியவள் பச்சைநிற சல்வார் எடுத்து அணிந்து கொண்டு “எப்பூடி “என்று கவிதாவை வேண்டுமென்றே சீண்டினாள்.

மாநிறத்தில் கலையான முகத்துடன் அந்த பச்சை நிற சல்வாரில்

அழகாக இருந்த தன் தங்கையை நினைத்து பெருமையாக இருந்தது கவிதாவுக்கு. எனினும்

“விளக்குமாறுக்கு பட்டு குஞ்சலம் போட்ட மாதிரி இருக்கு.” என்றுவிட்டு

மீண்டும்  கலைவாணி தலைமீது  ஒரு கொட்டு கொட்டினாள் கவிதா.

 

கலைவாணி மீண்டும் “ஓ” என்று அழுவதற்காக வாயை திறந்தாள். இவர்களது சத்தம் கேட்ட மாலினி “கோயிலுக்கு கிளம்புற நேரத்துல அங்க என்ன பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க கவி?” என்று அதிகார தொனியில் குரல் வர

கலைவாணியின் வாயை மூடினாள் கவிதா.

“சாரிடி சாரிடி. அம்மாகிட்ட என்னை மாட்டி விட்டு விடாதே.”  என்று கெஞ்சலாக கேட்டாள்.

“சரி சரி பொழைச்சு போ.” என்று பெருந்தன்மையாக மன்னித்தாள் கலைவாணி.

அனைவரும் கிளம்பி கோயிலுக்கு சென்றனர். கோயிலில் அம்மன் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு  வானளாவ உயர்ந்திருந்த  கோபுரத்தை ரசித்தனர்.

அருணாச்சலம் “எத்தனை தடவை இந்த கோபுரத்தை பார்த்தாலும் சலிக்கவே மாட்டேங்குது மாலினி. அதனாலதான் வருஷத்துக்கு ஒரு தடவை இங்கே வருகிறோம்.”

“ஆமாங்க அம்மன் தரிசனம் திருப்தியா இருந்தது. என்ன ஒரு அழகு! பார்க்க கண் கோடி வேண்டும்.” என்று சிலாகித்தார் மாலினி.

“சரி எனக்கு கால் வலிக்குது. நான் இங்கே உட்காருகிறேன். நீங்க எல்லோரும் சுத்தி பார்த்துட்டு இந்த இடத்துக்கு வந்துடுங்க.” என்று ஒரு இடத்தில் உட்கார்ந்தார் மாலினி.

மற்றவர்கள் கோவிலை சுத்தி பார்த்துவிட்டு அங்கு வர அனைவரும் எழுந்து வெளியே சென்றனர்.

வெளியில் கடைகள் இருந்தன.

மாலினி “எனக்கு கொஞ்சம் சாமான் வாங்க வேண்டி இருக்கு. வாங்க போகலாம்.” என்று  அருணாச்சலத்தை அழைத்துக்கொண்டு சென்றார்.

 

“அம்மா நாங்க மூணு பேரும் பக்கத்து கடைக்கு போயிட்டு  வருகிறோம்.” என்று என்று கூறிவிட்டு மூன்றுபேரும் பக்கத்து கடைக்கு சென்று ஜிமிக்கி வாங்கினார்கள்.

வாங்கி விட்டு வெளியில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். கலைவாணி இவர்களுக்கு பின் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.

 

அப்பொழுது ஒருவன் கலைவாணியின் மீது நேராக மோதினான். அவள்  தடுமாறி பிறகு சமாளித்துக் கொண்டு நின்றாள்.

இதைப்பார்த்த கவிதா அங்கு வந்து அவனிடம் “டேய் நில்லுடா. எதுக்குடா என்னோட தங்கச்சி மேல  இடிச்சுட்டு போற?” என்று கோபமாக கேட்கவும் அவன் “தெரியாம இடிச்சுட்டேன். அதுக்கு என்ன இப்போ? ரோட்ல நடந்தா இதெல்லாம் சகஜம். .அதுக்கு நீ ரோட்டில நடக்கவே கூடாது. வீட்டிலேயே இருக்கணும்.”

“நாங்க எதுக்குடா உங்கள மாதிரி பொறுக்கிகளுக்கு பயந்துகிட்டு வீட்ல இருக்கணும்?”

“சரி இப்போ என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு. வேணும்னா உன்னோட  தங்கச்சியை கூப்பிட்டு என்னை திரும்பவும் இடிக்க சொல்லிடு. சரியா போயிடும்.” என்று கூறியபடி  வழிந்தான்.

கவிதாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

“என்னடா சொன்ன?” என்று அவனை அறைய கை ஓங்கினாள்.

அவன் அவள் கையை  பிடிக்க ஒரு அடி முன்னே எடுத்து வைக்க போனான்.

இதை கவனித்த வெண்மதி அவனுடைய காலுக்கு முன் இவள் காலை நீட்ட அவன் தடுமாறி கவிதாவின் காலில் விழுந்தான்.

 

கவிதா, கலைவாணி, வெண்மதி மூவரும் பலமாக சிரித்தனர்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த  சிலர் சிரித்தனர். அங்கு பூ கட்டிக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர் எழுந்து வந்து அவன் சட்டையை பிடித்து தூக்கினார்

“ஏன்டா ஊதினா பறக்குற மாதிரி இருக்குற. உனக்கு இவ்வளவு திமிரா? அடிச்சி பல்லை கழட்டி கையில கொடுத்துடுவேன். மரியாதையா போயிடு.” என்று இவர்களுக்காக பரிந்து கொண்டு அவருடைய மொத்தமான கையை மடக்கி ஆம்ஸ் காட்டினார்.

அவரது அளவையும் ஆம்சையும் பார்த்த அவன் பயந்து பின்னங்கால் பிடரியில் பட ஓடினான். அவனைப் பார்த்து அங்கு இருந்த எல்லோரும் சிரித்தனர்.

“கலைவாணி என் கூட வா. தனியா போகாத.” என்று கூப்பிட்டு அவள் கையை பிடித்துக்கொண்டாள் கவிதா. அதில் இருந்த பாசத்தினை உணர்ந்து  நெகிழ்ந்தாள் கலைவாணி.

மூவரும் அருணாச்சலம், மாலினியை தேடி வந்து சேர்ந்தனர். அருணாச்சலம் “என்னம்மா  உங்க பர்ச்சேஸ் எல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்க

“முடிஞ்சது பா” என்று கவிதா கூற

கலைவாணி அங்கு நடந்ததை சேர்த்து கூறினாள்.

“யாரு அவன்?” என்று அருணாச்சலம் கேட்க

“அவன் அப்பவே  அந்த  பூக்கார பொம்பளையை பார்த்து திரும்பிப் பார்க்காம ஓடியே போய் விட்டான்.” என்று கூறி மூன்று பெண்களும் சிரித்தனர்.

மாலினி, கலைவாணியை அணைத்துக்கொண்டார்.

“நீ ஒண்ணும் பயந்து விடவில்லையே தங்கம்?” என்று கேட்க

அவள் “அக்கா இருக்கும்போது எனக்கு என்ன பயம் அம்மா?” என்று பெருமையாக கூறினாள் கலைவாணி.

“அப்படி சொல்லுடி என்  தங்கச்சி” என்று  கவிதா கூற

“அவனை விட இவ பெரிய ரவுடி  ஆச்சே! “  என்று  தமக்கையின் காலை வாரினாள் கலைவாணி.

கவிதா “என்னடி சொன்ன?” என்று கூறியபடியே கலைவாணியை துரத்தினாள்.

மீண்டும் அந்த குடும்பத்தில் கலகலப்பு மீண்டது.

இதனை கண்டு  நிம்மதியானாள் வெண்மதி.

“அம்மா வீட்டுக்கு போனதும் திருஷ்டி சுத்தி போடுங்க. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.” என்று வெண்மதி கூறவும்

“உன் கண்ணெல்லாம் எங்களுக்கு படாது மா.” என்று பதில் கூறினார் மாலினி.

 

“அம்மா பசிக்குது. வாங்க முருகன்  இட்லி கடைக்கு போய் இட்லி சாப்பிடலாம்.” என்று கூப்பிட்டாள் கலைவாணி.

“இதுல மட்டும் கரெக்டா இரு.” என்றாள் கவிதா.

“அடி போடி உன்னை நான் அப்புறம் பாத்துக்குறேன். அம்மா வாங்க போகலாம் .”என்று தாய் பக்கம் திரும்பினாள்.

அருணாச்சலம் “சரி வாங்க போகலாம்.” என்று கூப்பிட்டுக் கொண்டு முருகன் இட்லி கடைக்கு சென்றனர்.

வாழை இலை போட்டு விதவிதமான சட்னிகளுடன் பரிமாறிய பூ போன்ற இட்லியை ருசித்து சாப்பிட்டனர்.

கலைவாணி இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு “எனக்கு பொடி இட்லி வேண்டும்.” என்று கேட்டு வாங்கி திரும்ப சாப்பிட்டாள்.

அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு “அம்மா ஜிகிர்தண்டா சாப்பிடலாம் வாங்க.” என்று கூப்பிட்டாள் கலைவாணி.

கவிதா “அது எப்படிடி மத்த விஷயத்துல கொஞ்சம் மக்கு மாதிரி இருந்தாலும் சாப்பாட்டு விஷயத்துல  பர்ஃபெக்ட் டா  இருக்க? அது அப்படித்தான். போடி. உன்னோட வேலையை பாத்துக்கிட்டு.” என்றாள் கலைவாணி.

அடுத்து அனைவரும் கிளம்பி ஜிகர்தண்டா கடைக்கு சென்று ஜிகர்தண்டா வாங்கி சாப்பிட்டனர்.

ஜிகர்தண்டாவை எடுத்து வாயில் வைத்த வெண்மதி

“ரொம்ப நல்லா இருக்கு கவி.”

“ஆமாம் மதி. நாங்க இங்க எப்போ வந்தாலும் இட்லி, ஜிகர்தண்டா சாப்பிட்டுவிட்டு தான்  போவோம் மதி.” என்று கவிதா  சொல்லிக்கொண்டிருக்கும்போதே

“ஏய் கவி அல்வாவை மறந்துட்டியே.” என்று ஞாபகப்படுத்தினாள் கலைவாணி.

“ஆமாண்டி  நான் மறந்தா என்ன? ஞாபகபடுத்ததான் நீ இருக்கியே. சாப்பாட்டு ராமமி.”

“இதுக்கு மேல அல்வாவா?. என்னால சாப்பிடவே முடியாது. (https://thenybanner.com) ” என்று கூறினாள் வெண்மதி.

“ நாளைக்கு நாம நாயக்கர் மஹால் போகிறோம். அதை முடிச்சுட்டு நாளைக்கு சாப்பிடலாம். என்று அருணாச்சலம் கூற அனைவரும் கோரசாக “ஓகே” என்று கூறினர்.

சொன்னபடியே அடுத்த நாள் அனைவரும் கிளம்பி திருமலை நாயக்கர் மஹால் சென்றனர்.

அங்கு கலைவாணி “கவி இங்க நிறைய பாட்டு சூட்டிங்  நடக்குமாம்.” “ஆமாம் நான் கூட கேள்விப்பட்டேன்.” என்று கூறினாள் வெண்மதி.

“ மொபைலை எடுத்து கவிதாவிடம் நீட்டிய கலைவாணி

“என்னை இங்கே அழகா ஒரு போட்டோ எடு.” என்றாள்.

“போட்டோ எடுக்கிறேன். ஆனா உன்னை வச்சி எப்படி அழகா போட்டோ எடுக்கிறது?”  என்று யோசனையோடு கண்ணத்தில் கைவைத்தபடி கேட்டாள்  கவிதா.

வெண்மதி கவிதாவிடம் இருந்து மொபைலை வாங்கி

“ஏண்டி எப்ப பார்த்தாலும்  அவளை சீண்டிக் கொண்டே இருக்க கவி?” “கவிக்கு நான் இவ்வளவு அழகா பொறந்து விட்டேன் என பொறாமை.”  என்றாள் கலைவாணி.

“யார் யாரெல்லாம் அழகைப்பற்றி பேசுறதுன்னு ஒரு வரைமுறை இல்லாம போயிடுச்சு. எல்லாம் காலக்கொடுமை.” என்று நொந்து கொண்டாள் கவிதா.

 

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!