Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 11.1

அத்தியாயம் 11(1)

காவல்நிலையத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லாமல், ஜெய் ஒருபக்கம் பைக்கில் தேடசெல்ல, கெளதம் மற்றொரு பக்கம் சென்றான். மிருதுளாவும் அவனுடம் தான் இருந்தாள். நேரம் போவது தெரியாமல் தேடி அலைந்தனர். சேகர் போன் செய்த பின்பே, நேரம் நள்ளிரவு என்பது தெரிந்தது. “இதோ வரேன்ப்பா.” என்று தன் தந்தையிடம் பேசிவிட்டு வைத்தவன், மிருதுளாவிடம் திரும்பி, “டைம் ஆச்சு. வீட்டுக்கு வர சொல்றாங்க அப்பா.” என்று சொல்ல, அவள் பதிலேதும் சொல்லாமல், “ம்ம்.” என்று மட்டும் சொல்லி தலையசைக்க, அவளின் முகத்தை ஒரு நொடி பார்த்தவன், பின் சாலையில் தனது கவனத்தைச் செலுத்தினான்.

வீட்டை நோக்கி கெளதம் காரை ஓட்டிக் கொண்டிருக்க, மிருதுளா தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். காலை பார்த்த குழந்தையை இப்பொழுது காணவில்லை என்ற விஷயத்தை அவள் மனம் ஏற்க மறுத்தது. நினைக்க நினைக்க உள்ளம் குமுற, கெளதம் மேல் கோபமாக வந்தது. தேஜா இப்பொழுது எங்கிருக்கிறாளோ?! பசி தாங்கமாட்டாளே?! என்று நினைக்கும்பொழுது அவளையும் அறியாமல் சூடான கண்ணீர் கண்ணகளில் வழிந்தோடியது. கெளதம் முன்பு தன் உணர்வுகளை வெளிபடுத்த விரும்பாமல் கண்களை அவள் துடைத்துகொள்ள, தன் அழுகையை அவளால் தடுக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை சேலை முந்தானையால் சத்தமில்லாமல் அவள் துடைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் கைவிரல்கள் அவ்வபோது முகத்துக்குச் செல்வதில் இருந்தே, குழந்தையை நினைத்து அவள் அழுகிறாள் என்பதை, அவள் முகம் பாற்காமலேயே தெரிந்து கொண்டான் கெளதம். பக்கத்தில் தானே விட்டுசெல்கிறோம் என்று நினைத்துச் சென்றது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அவனை நினைத்தே அவனுக்குக் கோபமாக வந்தது. அதே நேரம், காம்பவுண்ட்டுக்குள் வந்து குழந்தையைத் திருடும் அளவுக்குச் செல்வார்களா?! என்ற கேள்வியும் எழுந்தது. தன் கவனக்குறைவே இந்தத் துன்பத்துக்குக் காரணம் என்று நினைக்கும்போது எழுந்த ஆத்திரத்தில், ஸ்டீரிங் வீலில் கைமுஷ்டியால் குத்தியவன் “ச்சே!” என்று தன்னையும் மீறி கத்திவிட்டான். மிருதுளாவிற்குக் கெளதம் பக்கம் திரும்பாமலேயே அவனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. இருந்தும் அமைதியாக இருந்தாள்.



Advertisement

சில மணிநேரங்களில் இருவரும் அபார்ட்மென்ட் வந்து சேர, காரை பார்கிங்கில் நிறுத்தியவன், மிருதுளாவிடம் திரும்பி, “நான் தேஜாவை தனியா விட்டுட்டுப் போனது பெரிய தப்பு. இப்படி ஆகும்னு நினைச்சு பார்க்கல. இல்லனா அவளைத் தனியா விட்டுட்டுப் போயிருக்க மாட்டேன்.” என்று சொல்லிவிட்டு நிறுத்தியவன், “நீங்க கவலைபடாதீங்க. பாப்பா கிடைச்சிடுவா.” என்று அவள் அழுவதைப் பார்த்து வருத்தப்பட்டு கூற, மிருதுளாவோ, அவன் பேசும்வரை அமைதியாக இருந்தவள், அதன்பின் ஒன்றும் சொல்லாமல் காரைவிட்டு இறங்கி படியை நோக்கி சென்றாள். போகும்பொழுது தன் கண்களை அவள் துடைத்துக் கொள்வதைப் பார்த்த கெளதம், போகும் அவளையே சில நிமிடங்கள் பார்த்திருந்தவன், பின் அப்படியே சீட்டில் தலை சாய்த்துக் கண்களை மூடிக்கொண்டான். குழந்தையை நினைக்கையில் நெஞ்சுக்குள் பயம் சூழ்ந்தது.

மேலே வீட்டிற்கு வந்த மிருதுளாவோ அழுகையுடன் உள்ளே சென்றவள், நேரே ஹாலில் இருந்த சாமி படம் வைக்கபட்டிருக்கும் ஷெல்ப் முன்பு அமர்ந்தவள், கண்களை மூடிக்கொண்டு, கைகளைக் கூப்பி மனதுக்குள் தனக்குத் தெரிந்த கடவுள் துதிபாடல்களை எல்லாம் பாடியப்படி வேண்டிக் கொண்டிருந்தாள். கண்ணீர் மட்டும் விடாமல் வழிந்து கொண்டிருந்தது.

ஆராவும் பார்வதியும் ஹாலில் தான் அவளுக்காகக் காத்திருந்தனர். மிருதுளா உள்ளே வந்ததில் இருந்து, அவளது செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஆரா, எழுந்து அவள் அருகில் சென்று தோள்களில் கைவைக்க, திரும்பி பார்த்த மிருதுளாவிற்கு அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை உடைப்பெடுக்க, கதறலுடன் தங்கையின் மடியில் தலைகவிழ்ந்தவள், “எனக்குப் பயமா இருக்கு அம்மு.” என்று புலம்பியபடி அழுது கரைந்தாள்.

Advertisement

ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அக்காவின் தலையைத் தடவிகொடுத்த ஆரா, அவளின் அழுகை குறைந்ததும், முகத்தை நிமிர்த்தி, கண்களைத் துடைத்துவிட்டவள், “அழாத க்கா. பாப்பாக்கு ஒன்னும் ஆகாது. கூடிய சீக்கிரம் உன்கிட்ட வந்துடுவா. பாப்பா மேல நீ உயிரையே வச்சுருக்க. மத்தவங்களை விட அது இந்தக் கடவுளுக்கு நல்லா தெரியும். இந்தக் கடவுள் உன் வாழ்கையில இதுவரை ஒரு நல்லதும் செய்யல. நிச்சயம் இந்த விஷயத்தில அவரு உன்னைக் கஷ்டபடுத்த மாட்டாரு. நம்புக்கா. தேஜா உன்னோட பொண்ணு. அவகூடத் தான் உன் வாழ்க்கை. உன்னைவிட்டு அவ எங்கயும் போகமுடியாது.” என்று சொன்னவளின் மனதுக்குள், தான் நினைத்தது நடந்தே ஆகவேண்டும் என்ற உறுதி.

Advertisement

அதன்பின் சகோதரிகள் இருவரும், தங்களது பாட்டியை கட்டாயபடுத்தி உறங்க அனுப்பிவிட்டு நடந்ததை நினைத்து கவலையுடன் பேசிக்கொண்டே இருக்க, ஹால் சோபாவிலேயே அமர்ந்தவாக்கில் ஆரா தூங்கிப்போக, மிருதுளாவோ, ஒரு நொடி கூடக் கண் அயரவில்லை. கடவுளிடம் வேண்டிக்கொண்டே, தொடர்ந்து ஸ்ரீராம ஜெயம் எழுதிக்கொண்டிருந்தாள்.

இங்கே மிருதுளா இப்படி என்றால், அங்கோ கெளதமோ படுக்கையில் படுத்திருந்தாலும் அவன் கண்கள் உறக்கத்தை நெருங்கவில்லை. கைகளைத் தலைக்குக் கொடுத்துக் கட்டிலில் படுத்திருந்தவனின் கண்கள் மேலே சுவற்றை வெறித்துக் கொண்டிருக்க, எண்ணங்கள் அன்றைய நாளில் நடந்த சம்பவங்களையும் அதன் தாக்கத்தையும் அசைபோட்டுக் கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் தனது தவறை நினைத்து மருகி கொண்டிருந்தவனின் நினைவுகள் ஏனோ அவனையும் அறியாமல் மிருதுளாவிடம் வந்து நின்றது. குறிப்பாக அவள் முறைத்து பார்த்ததை நினைக்கையில் தேஜாவின் தந்தை நானா இல்லை அவளா என்று நினைக்கத் தோன்றியது. அவளின் கண்ணீர் முகம் எண்ணுகையில் இவனுக்குள் சிறு வலி ஏற்படுவதை அவனால் தடுக்க முடியவில்லை. யாழினியும் இப்படிதான். அழுவதே வெளியில் தெரியாது.

இதோ இந்த அறையில், இந்தக் கட்டிலில் எத்தனை முறை யாழினி அழுவதைப் பார்த்திருப்பான். இவன் நெஞ்சில் தலை சாய்த்து அவள் படுத்திருக்க, அவளின் தலைமுடியை இவன் மெதுவாகக் கோதிவிட, சில நொடிகள் கழித்து நெஞ்சு பகுதியில் ஈரத்தை இவன் உணர்ந்த பின்பே, அவள் அழுகிறாள் என்பது தெரியும். அப்படி யாழினி அழும் நேரங்களில் எல்லாம், அவளை எழுப்பித் தன் முகம் பார்க்கவைப்பவன், ஒன்றும் சொல்லாமல் அவள் கண்களைத் துடைத்துவிட்டு, நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதிப்பவன், மடியில் அவளைப் படுக்கவைத்துத் தோளில் தட்டிக்கொடுப்பான். வேறு சில சமயங்களில் அவளை அப்படியே தன்னோடு சேர்த்து இறுக்க அணைத்து, அவள் நெற்றியில் தன் தாடையை வைத்துக்கொண்டு சில நிமிடங்கள் அப்படியே நிற்பான். இதிலேயே அவளின் கவலைகள் எல்லாம் பறந்து போய்விடும்.

Advertisement

யாழினியும் கௌதமிடம் இதைதான் எதிர்பார்ப்பாள். ஆறுதலை வார்த்தைகளில் வெளிப்படுத்தாமல் சத்தமில்லாமல் இப்படிச் செய்கையில் வெளிபடுத்தும்போது, ஏனோ தன் கவலைகள் எல்லாம் பஞ்சுமிட்டாய் போல நொடிகளில் கரைந்து போவது போல அவளுக்குத் தோன்றும். அப்படிப்பட்ட நேரங்களில் கணவனின் இடுப்பை கட்டிக்கொண்டு தன் கவலைகளை மறந்து தூங்கிவிடுவாள்.

இன்று மிருதுளாவை பார்கையில், உணர்வுகளை வெளிபடுத்துவதில் அவள் யாழினியை ஒத்திருப்பதைப் போலத் தோன்றியது கௌதமிற்கு. கோபமாக இருந்தாலும் சரி துக்கமாக இருந்தாலும் சரி அமைதியாக அதே நேரம் அழுத்தமாக வெளிபடுத்துகிறாள். காரில் வரும்பொழுது அவள் அழுததை இப்பொழுது நினைக்கையில், யாழினி இவன் கண்முன் வர, “ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்க.” என்று தனக்குள் சொன்னவனின் மனதில் அடுத்து எழுந்த எண்ணம் அவனை அதிர செய்தது. அதிர்ச்சியுடன் எழுந்து அமர்ந்தவனுக்கு முகமெல்லாம் வேர்த்துவிட்டது. மிருதுளா தன் நெஞ்சின் மேல் சாய்ந்து அழுதபொழுது, அவளை அணைத்து நெற்றியில் இதழ்பதித்து ஆறுதல் சொல்லி இருக்கவேண்டுமோ என்ற எண்ணம் அவனை அதிர்ச்சியடைய வைத்தது. ஆழ்ந்த மூச்சை இழுத்துக்கொண்டவன், பக்கத்தில் க்ளாசில் இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்துவிட்டு, சைட் டேபிளில் இருந்த யாழினியின் போட்டோவை எடுத்துப் பார்த்தான், தன் எண்ணம் போகும் போக்கிற்குத் தடைபோட.

யாழினியுடன் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அவளுடன் கழித்த நாட்கள் கண்முன் விரிய, அதன்பின் அவனுக்கு உறக்கம் ஏது?! கையில் இருந்த படத்தையே, அவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, போட்டோவில் இருக்கும் யாழினி இவனிடம், “என் பொண்ணை எப்படியாவது கண்டுபிடிச்சு கொண்டுவந்துடு டா! ப்ளீஸ்.” என்று சொல்வதுபோல இருக்க, “அம்முக்குட்டி!!” என்று வலியுடன் அந்தப் போட்டோவை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். இவ்வாறாக யாழினியின் நினைவுகளுடன் நேரத்தை கழித்தவன், அதிகாலை ஐந்து மணிக்குமேல் தான் தூங்கி போனான்.

அடுத்த நாள், தனது அலுவலகத்திற்குப் போன் செய்து விஷயத்தைக் கெளதம் கூற, அதனைக் கேட்ட அவனின் மேலதிகாரி, “ஐயோ! என்ன கெளதம் சொல்ற!!” என்று தனது அதிர்ச்சியைத் தெரிவித்தவர், அவருக்குத் தெரிந்த சில விவரங்களையும் தொடர்புகளையும் கொடுத்து, “குழந்தை கிடைச்சதும் ஆபீஸ் வா கெளதம். நானும் ரவியும் மேனேஜ் செஞ்சுகிறோம். நீ கவலைபடாத.” என்றுவிட்டு வைத்தார்.

அதே போல ஜெய்யும் அவனது அலுவலகத்தில் பேசி, வீட்டில் இருந்து வேலை செய்வதாகக் கூறிவிட்டான். ஆராவோ புதிதாகச் சேர்ந்திருப்பதால், அவளுக்கு வொர்க் ப்ரம் ஹோம் வசதி காரணமில்லாமல் கொடுக்கமாட்டார்கள். அதனால் எமர்ஜென்சி என்று சொல்லி இரண்டு நாட்களுக்கு லீவ் எடுத்துக்கொண்டாள்.

மிருதுளாவும் ஆராவும், அக்கம்பக்கத்தில் சென்று தேட, ஜெய் தனது நண்பர்களுடன் பெங்களூரில் உள்ள பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும், பார்க் போன்ற இடங்களில் தேட, கெளதமோ அலுவலக நண்பர் சொன்னது போலப் பெங்களுர் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் சிலவற்றில் விவரத்தை கூறி தேஜாவின் போட்டோவை கொடுத்தவன், எல்லா இடங்களிலும் உள்ள ஆனாதை அஷ்ரமங்களில் தேடினான்.

ஜெய் தனது நண்பன் சொன்ன ஆலோசனையின் பேரில் முகநூல், வாட்சப்ப், ட்விட்டர், போன்ற சமூக வலைத்தளங்களில் தேஜாவுடைய புகைப்படம், காணாமல் போனபொழுது போட்டிருந்த ஆடை விவரம் மற்றும் அங்க அடையாளங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து, தெரிந்தவர்கள் தகவல் கொடுக்கும்படி செய்தி அனுப்பினான். அதை அவன் நண்பர்கள், அவர்களுடைய நண்பர்கள் என்று எல்லோரும் ஷேர் செய்தனர். இப்படியாகச் சில நாட்கள் கழிய, அன்றொரு நாள் அதிகாலையில் காவல்துறை அதிகாரியிடம் இருந்து கௌதமிற்குப் போன் வந்தது. அவர் சொன்ன செய்தியில் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றவன், உடனடியாகச் சேகரிடம் விஷயத்தைக் கூறிவிட்டு அப்படியே நண்பனின் வீட்டில் தங்கியிருக்கும் ஜெய்க்கு போன் செய்து சொல்ல, அவனோ, தான் உடனே காவல் நிலையத்திற்கு வருவதாகக் கூறிவிட்டு வைத்தான்.

காவல்நிலையம் செல்ல, கிளம்பி வாசலுக்கு வந்த கௌதமிற்கு மிருதுளாவின் நினைவு வர, ஏனோ அவனையும் அறியாமல் அவன் கால்கள் அவளது வீட்டை நோக்கி சென்றது. தன்னைவிட அவள் தான் தேஜாவை நினைத்து மிகவும் கவலையோடு இருக்கிறாள். இந்த விஷயம் தெரிந்தால் சந்தோஷபடுவாள் என்று நினைத்தவன் அவளிடம் சொல்ல சென்றான்.

காலிங்பெல்லை அழுத்திவிட்டுக் கெளதம் நின்றிருக்க, கதவை திறந்தார் பார்வதி. கதவு திறக்கப்பட்டதும் இவன் கண்களில் பட்டது, ஹாலின் ஓரத்தில் ஷெல்ப் பக்கத்தில் தரையில் அமர்ந்து, சுவற்றில் தலைசாய்ந்து, கண்களை மூடியிருந்த மிருதுளா தான். அதைப் பார்த்ததும் இவனுக்குக் கஷ்டமாக இருந்தது. பார்வதி பல தடவை அழைத்த பின்பே நினைவுக்கு வந்தவன், “இன்ஸ்பெக்டர் இப்போதான் போன் செஞ்சாரு பாட்டி. எங்கோ ரெயிட் போன இடத்தில, கடத்தப்பட்ட குழந்தைகள் சிலரை மீட்டு இருக்காங்களாம். அதில ஒரு பெண் குழந்தையும் இருக்காம். வர சொல்லி இருக்காங்க.” என்று கூற, “அப்படியா தம்பி!! கடவுள் கைவிட மாட்டாருப்பா.” என்று மகிழ்ச்சி அடைந்தவர் நேரே சென்று மிருதுளாவை எழுப்ப, அடித்துபிடித்து எழுந்தவளிடம் அவர் விஷயத்தைக் கூற, “அப்படியா ஆச்சி!!!” என்று மகிழ்ச்சியில் கண்களை விரித்தவள், கடவுள் படத்தைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு, கௌதமிடம் வந்தவள் “ஒரு செகண்ட் இருக்குறீங்களா, நானும் வரேன்.” என்று சொல்ல, புன்னகையுடன் சரி என்றான் அவன். சில நிமிடங்களில் முகம் கைகால் கழுவி தன்னை ரெப்ரெஷ் செய்துகொண்டு அவள் வர, இருவரும் காவல் நிலையத்துக்குச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!