Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 11.2

அத்தியாயம் 11(2)

ஆர்வமும் சந்தோஷமும் கலந்த ஒரு நிலையில் இருவரும் காவல் நிலையம் சென்று பார்க்க, மீட்கப்பட்ட குழந்தை என்று அதிகாரி ஒரு குழந்தையைக் காட்ட, அக்குழந்தையைப் பார்த்த மூவருக்கும் அதுவரை இருந்த மகிழ்ச்சி, தண்ணீர் தெளித்த பால் போல் முற்றிலும் வடிந்தது. ஏனெனில் அது தேஜா இல்லை. பார்பதற்குத் தேஜாவை ஒத்த சாயலில் இருந்தாள் அவ்வளவே.

“இது எங்க குழந்தை இல்லை இன்ஸ்பெக்டர்.” என்று கூறிவிட்டு வெளியே வந்தவர்களுக்கு. அக்குழந்தை தேஜாவாக இருந்திருக்கக் கூடாதா என்ற நப்பாசை எழுந்தது. மிருதுளாவோ காவல் துறை அதிகாரியிடம், “இந்தக் குழந்தையைச் சீக்கிரம் அவ அப்பா அம்மா கிட்ட சேர்த்துடுங்க சர். குழந்தை காணாம போய் நாங்க கஷ்டபடுற மாதிரி, அவங்களும் கஷ்டப்பட வேண்டாம்.” என்று சொல்லிவிட்டு வந்தாள்.

அதன்பின் தேடல்கள் தொடர்ந்தது. அடுத்து சில நாட்களில் குழந்தை காணமல் போனது தொடர்பாக விசாரிக்கவென்று காவல் துறை அதிகாரிகள் இவர்களது அபார்ட்மென்ட்டிற்கு வந்தார்கள். கௌதம், மிருதுளா வீட்டில் விசாரித்தவர்கள், அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளிலும் விசாரித்தனர். இறுதியாக வாட்ச்மேனிடம் தங்களது விசாரணையைத் தொடர்ந்தவர்கள், கட்டிட உரிமையாளரிடம் பேசி அங்கே சில இடங்களில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வாங்கிகொண்டனர். போலிஸ் விசாரித்துவிட்டுச் சென்றதும், மறைவான இடத்திற்குச் சென்ற வாட்ச்மேன், அவசரமாக யாருக்கோ போன் போட்டு விஷயத்தைக் கூறி, சில அறிவுரைகளையும் வழங்கிவிட்டு வைத்தான்.



Advertisement

அடுத்த வந்த நாட்களில், ஒரு முக்கியப் பிரமுகரின் கொலை, இளம்பெண் படுகொலை, செயின் பறிப்பு, என்று அடுத்தடுத்த பரபரப்பான சம்பவங்களால் குழந்தை கடத்தல் விசாரணை தள்ளிக்கொண்டே சென்றது.

இதற்கிடையில் மற்றொரு நாள் சாலை விபத்தில் ஒரு பெண்ணும், ஒரு குழந்தையும் இறந்துவிட்டதாகவும், அவர்களைத் தேடி யாரும் வராததால், கௌதமை அழைத்த அதிகாரி மருத்துவமணை வந்து குழந்தையை அடையாளம் சொல்லிவிட்டு போகச்சொல்ல, செய்தியை கேட்டவன் அப்படியே இடிந்து போய் அமர்ந்துவிட்டான். விஷயம் கேள்விப்பட்ட மிருதுளாவோ மயக்கம் போட்டே விழுந்துவிட்டாள்.

சொல்லச் சொல்ல கேட்காமல் கெளதமுடன் மருத்துவமனை சென்ற மிருதுளாவிற்கு, அந்த நொடிவரை இருந்த கொஞ்ச தைரியமும் காணாமல் போக, அறையை நெருங்க நெருங்க உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிக்க, அவளையும் அறியாமல் கௌதமின் கைகளை இறுக பிடித்துக்கொண்டாள். தனக்கே உடம்பெல்லாம் பதரும்பொழுது அவளுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்ட கெளதம் ஒன்றும் சொல்லவில்லை. அவள் கைகளை விலக்கவும் இல்லை.

Advertisement

டாக்டர் வெள்ளை துணியை எடுத்துகாட்டும் வரை, இதயம் படபடக்க, வேர்த்துகொட்ட நின்றிருந்த மிருதுளாவிற்கு, குழந்தையின் உடலை பார்த்தபின்பு அது தேஜா இல்லை என்பதை உணர்ந்துகொள்ளவே சில நொடிகள் தேவைப்பட்டது. அதை உணர்ந்த பின்போ, ஏன் என்று தெரியாமலேயே அழவேண்டும் போலத் தோன்ற, அப்படியே துவண்டு கௌதமின் நெஞ்சில் சாய்ந்து கதற ஆரம்பித்துவிட்டாள். அதுவரை இருந்த படபடப்பு, துக்கம், கற்பனை, மனஅழுத்தம் எல்லாம் கரைந்து கண்ணீராக அவள் உடலைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தது.

Advertisement

டாக்டர் எவ்வளவோ அறுதல் சொல்லியும், மிருதுளாவின் அழுகை நிற்கவில்லை. கெளதமோ ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. அப்படியே சுவற்றை வெறித்தபடி நின்றிருந்தான். அவனுக்குமே சற்று முன்பு வரை இருந்த படபடப்பு, பயம் எல்லாம் காணமல் போயிருந்ததில் பேச்சே வரவில்லை. சில நிமிடங்கள் கழித்தே தன் நிலையில் இருந்து மீண்டவன், மிருதுளாவை எப்படிச் சாமாதானம் செய்வது என்று தெரியாமல். பக்கவாட்டில் அணைத்தவாறு அவளை வெளியே கூட்டிவந்தவன், அங்கிருந்த பெஞ்சில் அமரவைத்து தானும் அவள் அருகில் உட்கார்ந்து கொண்டான்.

பல நிமிடங்கள் கழித்தே அழுகையை நிறுத்தியவள், தான் இருக்கும் நிலையையும், சுற்றுப்புறத்தையும் உணர்ந்து, சட்டென்று கௌதமின் நெஞ்சில் இருந்து நிமிர்ந்தவள், சற்று தள்ளி அமர்ந்துகொண்டாள். பின்பு, சங்கடமாக “சாரி.” என்று அவள் சொல்ல, “எதுக்குங்க சாரி?!” என்றான் கெளதம். “அது வந்து, அ…..அங்க…..அந்த ப….பாப்பா வோட….” என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் மீண்டும் அழுகை வர, “அதைபத்தி நினைக்காதீங்க, வேண்டாம் ப்ளீஸ், அழாதீங்க.” என்று தன்னையும் அறியாமல் அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான் கெளதம். “யாரோட குழந்தையோ…..பாவம் அவளோட பெத்தவங்க.” என்று அழுகையுடன் மிருதுளா கூறி வருத்தப்பட, ஒருவாறு அவளைச் சமாதனம் செய்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தான் கெளதம். வீட்டிற்கு வந்ததும் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த ஜெய்யிற்குப் போனில் விஷயத்தைக் கூறினான். போய்ப் பார்பதற்கு முன்பே தனது தம்பியிடம் விஷயத்தைச் சொல்லி அவனை வருத்தபடவைத்து அதனால், வேலை செய்யமுடியாமல் இங்கு என்ன ஆயிற்றோ என்று அவன் தவிப்பதை கெளதம் விரும்பவில்லை.

இப்படியாக, ஒவ்வொரு நொடியும் ரணமாக இரு குடும்பங்களுக்கும் நாட்கள் கழிந்துகொண்டிருக்க, கிட்டத்தட்ட ஒரு மாதம் சென்றிருந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் காவல்துறை அதிகாரிகளும் cctv கேமராவில் குழந்தையை ஒரு பெண் தூக்கிக்கொண்டு செல்லும் காட்சிகளைத் தனியே எடுத்து அதை வைத்து மீண்டும் கௌதமின் அபார்ட்மெண்ட் வந்து அனைவரிடமும் விசாரித்தனர்.

Advertisement

அன்று கௌதமிடம் சொன்ன சிறுவனைக் கூப்பிட்டு cctv காட்சிகளைக் காட்டி கேட்க, அவனும் இந்தப் பெண் தான் என்று அடையாளம் சொன்னான். அத்தோடு கூடுதல் விவரமாக, அங்கே வசிக்கும் மற்றொரு வீட்டு பெண்மணி, குழந்தையைக் கடத்திய பெண், சில நாட்களுக்கு முன்பு தன்னிடம் வேலைகேட்டு வந்ததாகக் கூறினார். அதன்பின் காட்சியில் பதிவாகி இருக்கும் பெண்ணின் உருவத்தைப் பிரிண்ட் எடுத்து அவளைத் தேடும் பனி தொடர்ந்தது.

இதற்கிடையில் ஒருநாள், ஜெய்க்கு போன் செய்த அவன் நெருங்கிய நண்பன் ஒருவன், தேஜாவை போலவே இருக்கும் குழந்தையை வைத்துக்கொண்டு, ஒரு பெண் பிச்சை எடுக்கும் வீடியோ ஒன்றை தனது நண்பன் பார்வர்ட் செய்ததாகச் சொல்லி இவனுக்கு அனுப்பியவன் அதைப் பார்க்கும்படி கூற, அவசர அவசரமாகத் தனது வாட்சப்பை ஓபன் செய்து இவன் பார்க்க, தான் கண்ட காட்சியில் அதிர்ந்தான்.

அந்த வீடியோவில் இருந்தது தேஜாவே தான். உடனடியாகக் கௌதமிற்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னவன் அப்படியே ஆராவிடமும் விஷயத்தைச் சொல்லி, அந்த வீடியோவை இருவருக்கும் அனுப்பிவைத்தான். தனக்கு அனுப்பப்பட்ட விடியோவை ஓபன் செய்து பார்த்த கௌதமிற்கு ஜெய்யின் நிலைமை தான். குழந்தையைப் பார்த்தவனுக்கோ நெஞ்செல்லாம் பதறியது.

இங்கே ஆராவும், மிருதுளாவிற்கு அந்த விடியோவை காட்ட, அவளோ, “அம்முகுட்டி!!” என்று துடித்துப் போய்விட்டாள். அதுவும் குழந்தை இருந்த நிலைமையைப் பார்த்தவளுக்கு அவளது உடலை யாரோ துடிக்கத் துடிக்க வெட்டுவது போல இருந்தது.

பிளாட்பார்மில் ஒரு பெண் அமர்ந்திருக்க, அவளது மடியில் தேஜா அமர்ந்திருந்தாள். குண்டாக இருந்த குழந்தை மெலிந்துபோய் இருக்க, நல்ல நிறமாக இருந்த சருமம் கருத்திருந்தது. அதிலும் இந்த வீடியோவில் தேஜாவின் முகத்தில் வெயில் நேராகப் பட்டுக்கொண்டிருக்க, அந்தப் பெண்ணோ சேலை முந்தானையால் தனது தலையை மட்டும் மூடி இருந்தாள். வெயில், பசி போன்ற காரணங்களால் குழந்தை வீரிட்டு அழுது கொண்டிருந்தது. அப்பொழுது அந்த வழியாகப் போகும் ஒரு நபர் குனிந்து பிச்சைபோட, கடத்திய பெண், தேஜாவின் கையைத் தூக்கி அவள் கைகாளால் அந்தப் பணத்தை வாங்கிகொண்டாள்.

இந்தக் காட்சியைப் பார்த்த மிருதுளாவிற்கு “ஐயோ!!” என்றிருந்தது. அதற்கு மேல் அவளால் பார்க்க முடியவில்லை. முழுதாக மூன்று நிமிடம் ஓடிய அந்த வீடியோவை பார்த்த மிருதுளாவிற்கு உடம்பெல்லாம் பதறியது. அதே நேரம் அந்தப்பெண் மேல் கொலைவெறி உண்டானது.

இங்கே கெளதமோ, தனது மொபைலை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றவன், விவரத்தை சொல்லி அந்த வீடியோவை காட்ட, உடனே வேறொரு அதிகாரியை அழைத்த அவர், அந்த வீடியோவை காப்பிச் செய்துகொள்ளச் சொன்னார். சில நாட்களுக்கு முன்பு அலுவலக நண்பர் மூலம் காவல்துறை உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விசாரணையைத் துரிதபடுத்தும்படி கெளதம் சார்பாகச் சொல்லி இருந்ததால், அதன்பின் காரியங்கள் வேகமாக நடந்தது.

அந்த வீடியோ அப்லோட் செய்யப்பட்ட ஐ.பி அட்ரெஸ்சை வைத்து அந்த நபரை கண்டுபிடித்தது போலிஸ். அவர் வேறொரு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தார். அவரைத் தொடர்புகொண்டு விசாரிக்க, தான் இருக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் இடத்தில், அந்த வீடியோவை எடுத்ததாகக் கூறினார். அந்தப் பெண் இருந்த விதமும், அடிக்கடி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்ததையும், தப்பு செய்தவர்போல அங்கும் இங்கும் அவள் பார்த்துக் கொண்டிருந்ததும், இவருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்த மறைவான இடத்தில இருந்து அந்த வீடியோவை எடுத்தவர், யாருக்காவது உதவும் என்று எண்ணத்தில் இன்டர்நெட்டில் அப்லோட் செய்துள்ளார். இந்தத் தகவல்களை எல்லாம் சேகரித்துக்கொண்ட காவல் அதிகாரி, உடனடியாக இரண்டு காவலர்களை அந்த மாநிலத்துக்கு அனுப்பிவைத்தார். அதன்பின் துரிதகதியில் அதிகாரிகள் செயல்பட, அந்த மாநில காவல்துறை உதவியுடன் ஒரே வாரத்தில் அந்தப்பெண் கைது செய்யப்பட்டாள். அதன்பின் அவளிடம் விசாரணை நடத்தப்பட, அதில் திடிக்கிடும் உண்மை ஒன்று வெளியானது.

அதாவது கைது செய்யப்பட்ட பெண்ணும், கௌதமின் அபார்ட்மெண்ட் காவலாளியும் கணவன் மனைவி என்றும், அவன் சொல்லித்தான் இவள் இங்கே வந்ததாகவும் தெரியவந்தது. அத்தோடு இந்தக் கும்பலை சேர்ந்த ஆட்கள், பொதுவாக வசதியான மாநிலங்களில் உள்ள வீடுகளுக்கும், அபார்ட்மெண்ட்களுக்கும் முதலில் வேலைக்குச் செல்பவர்கள், சிறிது காலம் இருந்து அந்த இடம், குடும்பம் பற்றி நன்கு தெரிந்துகொள்பவர்கள் அதன்பின் சொந்தகாரர்கள் என்ற போர்வையில் தங்களது கூட்டாளிகளை அழைத்துத் தங்களுடன் தங்க வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும்போது, அந்தக் குடும்பத்தைக் கொலை செய்துவிட்டு வீட்டில் உள்ளவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றுவிடுவார்கள். குறைந்த சம்பளத்துக்கு ஆள் கிடைக்கிறதே என்று, யார் என்ன எது என்று விசாரிக்காமல், வேலைக்குச் சேர்ப்பதே இதற்குக் காரணம்.

அப்படி ஒரு வீட்டில் கொள்ளை அடிக்கத் தான், தனது மனைவியை வேலை கேட்பது போல வரும்படி, கெளதம் அபார்ட்மென்ட் காவலாளி அழைத்திருந்தான். ஆனால் அவன் நேரம், அன்றைய தினம் கொள்ளை அடிக்க முடியாமல் போய்விட்டது. அப்படி அவன் மனைவி திரும்பி சென்று கொண்டிருக்கும் போது தான், தேஜா யாருமில்லாமல் தனியாக இருப்பதைப் பார்த்து, கிடைத்ததை ஏன் விடவேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தையைக் கடத்தி சென்றாள். அங்குப் போய் யாருக்காவது விற்றுவிடலாம் என்று நினைத்திருந்தாள்.

விசாரணை முடிந்து தேஜாவை ஒப்படைப்பதற்காகக் கௌதமை அழைத்திருந்தார் காவல் அதிகாரி. காவல் துறையிடம் இருந்து எப்போதடா போன் வரும் என்று காத்துக் கொண்டிருந்தவன், தகவல் கிடைத்த அடுத்த நொடி மிருதுளாவை அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.

நேரே காவல் நிலையத்திற்கு இவர்கள் செல்ல, வேகமாக உள்ளே வந்தவர்களின் கண்களில், லேடி கான்ஸ்டபில் ஒருவர் தேஜாவிற்குப் புட்டி பாலை புகட்ட முயற்சிக்க, குழந்தையோ அதைக் குடிக்க மறுத்து அழுது கொண்டிருந்த காட்சி கண்ணில்பட்டு வருத்தத்தை கொடுத்தது. தேஜாவை அந்த நிலைமையில் பார்த்த மிருதுளாவிற்கு உயிரே போய்விட்டது. “அம்மு!!!” என்ற கதறலுடன் அவள் அருகில் விரைந்தவள், குழந்தையை வாங்க முயற்சிக்க, அந்த லேடி கான்ஸ்டபிலோ, உயர் அதிகாரி சொல்லாமல் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட, மிருதுளாவிற்கு அழுகையாக வந்தது. நேரே கௌதமிடம் சென்றவள் தவிப்புடன் அவனைப் பார்க்க, அந்த நேரம் அதிகாரியும் வர, அடுத்தப் பத்து நிமிடத்தில் பார்மாலிட்டீஸ் முடிக்கப்பட்டுக் குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மிருதுளாவின் கைகளில் வந்த பின்பே தேஜா அழுகையை நிறுத்தி, அவள் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள். குழந்தையை வாங்கியவள் கண்களைத் துடைத்துக்கொண்டு வேகமாக வெளியேற, அவள் பின்னோடு கிட்டத்தட்ட ஓடாத குறையாக வந்த கெளதம் குழந்தைக்குச் சாப்பிட ஏதாவது வாங்கி வருவதாகக் கூறிவிட்டுப் பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்றான்.

ஆனால் திரும்பிவந்து அவன் கண்ட காட்சி அவனை அதிர செய்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!