Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kaaval neethaanae kaavalanae

Kaathal Neethaane Kaavalane..! – 11

காதல் 11: 

வருணிடம் இருந்து இப்படி ஒரு கோபத்தை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு கோபம் இருந்தாலும் அதை வீட்டில் இருப்பவர்களிடம் காட்டி வருணுக்கு பழக்கமில்லை. ஆனால் இன்று கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.

“சொல்லுங்க அத்தை ஏன் இப்படிப் பண்ணிங்க..? என்கிட்டே கேட்காம உங்களை யாரு அவளை அனுப்ப சொன்னது..? என்றான் கோபமாய்.

“என்ன வருணு..? என் தம்பியே என்னை எதிர்த்து இப்படிப் பேச மாட்டான். நீ என்னவோ இந்த குதி குதிக்கிற…?  யாரோ ஒருத்தியைத் தான வீட்டை விட்டு அனுப்பினேன். என்னமோ உன் பொண்டாட்டியை அனுப்புன ரேஞ்சுக்கு சத்தம் போடுற..? என்று மோகனாவும் விடாமல் முட்டுக் கொடுத்தார்.



Advertisement

“இவங்க அனுப்புற வரைக்கும் நீங்க எல்லாரும் வேடிக்கைப் பார்த்துட்டு இருந்திங்களா…? என்றான் மற்றவர்களிடம் திரும்பி.

“இப்ப எதுக்கு கோபப்படுற வருண்..?  அந்த பொண்ணு ஏற்கனவே கிளம்பி இருந்த மாதிரி தான் இருந்தது. உங்க அத்தை, யார் சொல்றதைத் தான் கேட்டாங்க. சரி அந்த பொண்ணாவது நாங்க சொன்னதைக் கேட்டிருக்கலாம். அதுவும் பிடிவாதமா கிளம்பிப் போனா, நாங்க என்ன பண்ண முடியும்..? என்றார் நித்யா.

‘அவ ஏற்கனவே கிளம்பி இருந்த மாதிரி தான் இருந்தது என்ற நித்யாவின் வார்த்தைகளில் நிதானத்திற்கு வந்தான் வருண்.

Advertisement

“நீதான அவளைக் கிளம்ப சொன்ன. அதான் அவளும் கிளம்பியிருக்கா..? அதை மறந்துட்டு இப்போ வீட்ல இருக்கவங்களை கத்தி என்ன பிரயோஜனம்..? என்ற மனசாட்சியின் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.

Advertisement

‘நான் போக சொல்லலாம். ஆனா, இவங்க யாரு அவளை போகச் சொல்ல..? என்ற ஆதங்கம் மீண்டும் வந்து மனதில் குடியேற,

‘இது நல்ல கதையா இருக்கே..? உங்க அத்தை கேட்ட மாதிரி அவ என்ன உனக்குப் பொண்டாட்டியா..? இவ்வளவு கவலைப் படுற..? இல்லை காதலியா..? என்று எகத்தாளமாய் சிரித்தது மனசாட்சி.

ஏனோ அந்த வீட்டில் சக்தி இல்லை என்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எதோ யாருமே இல்லாததைப் போன்ற மாயை அவனுக்குள்.

Advertisement

‘நான் போன்னு சொன்னா போயிடுவாளா..?  என்ற கேள்வி மட்டுமே அவனின் மனதிற்குள் தொக்கி நின்றது.

அதுமட்டுமின்றி வெளியே அவளுக்கு ஏதோ பெரிய ஆபத்து இருப்பதாக வருணின் உள் மனம் உணர்த்திக் கொண்டே இருந்தது. அதனால் ஒரு நிமிடம் கூட அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

“எப்ப கிளம்பிப் போனா..? என்றான் மொட்டையாக.

“ஒரு ஒருமணி நேரம் இருக்கும்…! என்றார் நித்யா.

“நான் போய் பார்த்துட்டு வந்துடுறேன்..! என்று வருண் கிளம்பப் போக,

“இங்க பாரு நித்யா..! எனக்கென்னமோ எதுவும் சரியா படலை. ஏதோ விசாரணைக்கு கூட்டிட்டு வந்தேன்னு சொன்னான். சரின்னு விட்டோம். இங்கயே தங்க வச்சான், சரி போகுதுன்னு விட்டோம். இப்ப என்னடான்னா.. அவ கிளம்பிப் போவாளாம், இவன் தேடப் போவானாம். என்ன நடக்குது இங்க..? நான் பேசுறது இப்ப உங்களுக்கு விகாரமாத்தான் தெரியும். அப்பறம் ஏதாவது விவகாரம் ஆகும் போது தான், நான் சொன்னதை நினைப்பிங்க.. என்று மோகனா சொல்ல,

“நீங்களும் கொஞ்ச நேரம் அமைதியா தான் இருங்களேன் அண்ணி..! என்றார் நித்யா.

“வருண்..! உள்ள வா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..! என்றார் சத்யமூர்த்தி.

கோபத்தை மறைத்தபடி, “சொல்லுங்கப்பா..! என்ற வருண் உள்ளே சென்றான்.

“அந்த பொண்ணை உனக்குப் பிடிச்சிருக்கா வருண்..? என்றார் எடுத்த எடுப்பில்.

“என்னப்பா இப்படிக் கேட்குறிங்க..? நான் தான் அன்னைக்கே சொன்னேனே..? அவளை சுத்தி நிறைய பிரச்சனை இருக்கு. அவ உயிருக்கே ஆபத்து இருக்கு. இந்த நேரத்துல எப்படி கவலைப் படாம இருக்க முடியும்..? என்றான் வருண்.

“அந்தப் பொண்ணை காப்பாத்த, நீ…! ஒரு போலீஸ் மட்டும் தான் இருக்கியா வருண். இல்லை நீ சொன்னா யாரும் செய்ய மாட்டாங்களா. ஒரு ஐபிஎஸ் ஆபீசர் தான் அந்தப் பொண்ணை பாதுகாக்கணும்ன்னு சட்டம் எதுவும் இருக்கா..? என்றார் சத்யமூர்த்தி.

“அப்பா..! என்றான் கொஞ்சம் அதிர்ச்சியாக.

“நீ பேசுறதுல உன்னோட கடமையையும் மீறி ஒரு உரிமை தெரியுது. இது இப்படியே போனா, கடைசில அந்த பொண்ணே எனக்கு மருமகளா வந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை.. என்று நிறுத்தியவர்,

“இதுல எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா, ஏற்கனவே ஒரு பொண்ணை பார்த்தாச்சு. நிச்சயம் பண்றதுக்கு முன்னாடி உன்னோட தெளிவான முடிவை சொல்லிடு..! என்றார் சத்யமூர்த்தி.

அவரின் பேச்சில் அவனும் குழம்பித்தான் போனான். ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது, அவள் இருந்த போது உணராத அவள் நினைவை, அவள் இல்லாத போது உணர்கிறான்.

“சரிப்பா..! நான் போய் பார்த்துட்டு வந்துடுறேன்..! என்று கிளம்பப் போக,

“உன் மனசு ஒரு நிலையில இல்லை. அதான் பதட்டமா யோசிக்குது. அந்த பொண்ணு போன் நம்பர் இருக்குத்தான..? கால் பண்ணிப் பாரு..! என்றார் சத்யமூர்த்தி.

“மறந்தே போயிட்டேன்..! என்றவன், போனை எடுத்து வேகமாக அவளுக்கு டயல் செய்தான். முழு ரிங் போய் கட்டாக, மீண்டும் அழைத்தான். இந்த முறையும் எடுக்கவில்லை.

“என்னாச்சு..? என்றார் மூர்த்தி.

“ரிங் போகுது..! எடுக்க மாட்டேன்கிறா..? என்றவன் மீண்டும் அழைத்தான். இந்த முறை எடுத்தாள் சக்தி.

“ஹெலோ..! சக்தி எங்க இருக்க..?எப்படி இருக்க..? என்றான் கோபமாய்.

“நான் கொடைக்கானல் போறேன் சார்..! என்று கொஞ்சம் திக்கியபடி சொன்னாள்.

அவளின் பேச்சில் புருவம் நெரித்தான் வருண். அவள் ஏதோ பயந்து போய் பேசுவதைப் போல் இருந்தது அவனுக்கு.

“எதுல போற..? என்றான்.

“ப..பஸ்ல சார்..! என்றாள்.

“ஓகே..! நீ போக வேண்டாம் இறங்கு..! என்றான்.

“பரவாயில்லை சார். இதுவரைக்கும் நீங்க செஞ்ச எல்லா உதவிக்கும் ரொம்ப நன்றி சார். இனி நான் உங்களுக்கு எந்த விதத்துலயும் தொந்தரவு தர மாட்டேன். தேங்க்ஸ் சார்..! என்றபடி போனை கட் செய்து விட்டாள்.

“ஹேய் சக்தி.! சொல்றதைக் கேளு..! என்று வருண் கத்திக் கொண்டிருந்தது, காற்றில் தான் கரைந்தது.

“என்னாச்சு வருண்…?

“அவ கொடைக்கானல் போறாளாம்..! என்றவன் ஏதோ யோசனைக்குப் போக,

“நாங்களும் நாளைக்கு கொடைக்கானல் போறோம் வருண்..! என்றார் மூர்த்தி.

“என்னப்பா..? திடீர்ன்னு..? என்றான்.

“சாதனாவைப் பார்க்கத்தான். மாசமா இருக்க பொண்ணு. எல்லாரையும் பார்க்கனும்ன்னு ஏங்கிப் போய் இருக்கும் போது, இந்த கோபம், வரட்டுப் பிடிவாதம் எல்லாம் இரண்டாம் பட்சம்ன்னு தோணுது. பிரசவமும் கொஞ்சம் சிக்கல் தான்னு சொல்லியிருக்காங்க போல. இதைக் கேட்டதில் இருந்து உங்கம்மா தூங்கவேயில்லை. உடனே பார்த்தாகனும்ன்னு சொல்லவும் தான் கிளம்பி வந்தோம்..! என்றார் மூர்த்தி.

அவர் சொல்வது வருணுக்கு தகவல் மட்டுமே. அப்படித்தான் அவனுக்கும் தெரிந்தது. ஏதோ அந்த குடும்பத்தில் அவன் மட்டும் தனியாய் இருப்பதைப் போல் உணர்ந்தான் வருண்.

“அப்போ எல்லாரும் ஒன்னு. நான் மட்டும் தனி..! அப்படித்தானப்பா..? என்றான் ஒரு மாதிரி குரலில்.

“அப்படி இல்லை வருண். ஆனா, இந்த நேரத்துல இன்னனும் பழைய பிடிவாதம் தேவையில்லைன்னு நினைக்கிறேன்..! என்றார்.

“உங்க பிரியம்ப்பா..! போயிட்டு வாங்க..! என்றான் வருண்.

“அப்படியே நீயும்.. என்று அவர் தயங்க,

“சாரிப்பா…! இதுவரைக்கும் நீங்க சொல்லி நான் எதையும் மறுத்துப் பேசுனது கிடையாது. இப்ப அப்படி என்னை பேச வச்சிடாதிங்க. நீங்க போய் பார்க்கறது உங்க பிரியம், உங்க கடமைன்னு கூட சொல்லலாம். ஆனா, அதே சமயம் என்னை கட்டாயப் படுத்தாதிங்க. நான் டிரான்ஸ்பர் வாங்கப் போறதே இந்த காரணத்துக்காகத் தான். ஏதாவது ஒரு வகையில அவன் முகத்தைப் பார்க்குற மாதிரி ஆயிடுது. இதோ இந்த கேஸ், அவன் ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட கேஸ் தான். அன்னைக்கு இருந்து அவனை தினமும் பார்க்கிறேன். அது என்னோட கோபத்தைக் கூட்டுதே தவிர குறைக்கலை..! என்றான் வருண்.

“சாதனாக்கு நீன்னா எவ்வளவு பிரியம்ன்னு உனக்குத் தெரியும். அதுக்கு மேல உன் விருப்பம். ஆனா, நீதான் எங்களைக் கொண்டு வந்து விட்டுட்டு வரணும்..! என்றார் உறுதியாக.

“சாரிப்பா..! என்னால முடியாது..! என்றான்.

“ஒரு மகனா உன் பொறுப்பில் இருந்து விலக மாட்டேன்னு நினைக்கிறேன்..! என்றார் சத்யமூர்த்தி.

“நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்பணும், முன்னாடியே சொல்லிடுங்க. என்னோட பொறுப்புல இருந்து நான் எப்பவும் விலக மாட்டேன்..! என்று சொல்லி விட்டு சென்று விட்டான் வருண்.

அவன் வெளியே வந்த உடன், நித்யா வேகமாக கணவரிடம் சென்றார்.

“வருண் என்னங்க சொன்னான்..? வரேன்னு சொன்னானா..? என்றார் எதிர்பார்ப்புடன்.

“அவன் கோபம் இன்னும் குறையலை..! என்றார் மூர்த்தி.

“அப்போ அவன் வரலையா..?

“ம்ம்..! ஆனா, நம்மளைக் கூட்டிட்டு போறது அவன்தான். அங்க இவனை சமாதானப் படுத்த வேண்டியது சாதனாவோட பொறுப்பு. என்னால இவ்வளவு தான் செய்ய முடியும். அவன் கோவத்துல தப்பில்லை. அதனால, அவனை இதுக்கு மேல என்னால வற்புறுத்த முடியாது.. என்று முடிவாக சொல்லிவிட்டார் சத்ய மூர்த்தி.

அங்கே வருணின் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது எல்லாமே சக்தியைப் பற்றிதான்.அவளை சந்தித்த நொடியில் இருந்து இப்போது வரை நடந்த அனைத்தும் அவனின் மனதிற்குள் நிழற்படமாக ஓடிக் கொண்டிருந்தது.

எப்போதும் பயத்துடன் இருக்கும் அவளின் கண்கள், அவனை இமைக்காமல் பார்க்கும் அவளின் கண்கள், சொல்லமுடியாமல் பரிதவிக்கும் கண்கள் இப்படி சக்தியும், அவளின் கண்களும் அவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.

“அவளைப் போக சொல்லியிருக்கவே கூடாது. அவளுக்கு ஏதாவது ஒரு ஆபத்துனா, அதுக்கு நீதான் வருண் முழுப் பொறுப்பும்..! என்றது மனம்.

“அவளுக்கு எதுவும் ஆகாது. ஆகவும் விட மாட்டான் இந்த வருண்…! என்றான் மனதிடம்.

“கிழிச்ச..? அவ எந்த மாதிரியான ஆபத்துல இருக்கான்னே உன்னால கண்டுபிடிக்க முடியலை. இதுல எங்க இருந்து அவளைக் காப்பத்தாப் போற..? என்ற மனசாட்சியின் கேள்வியில் வெகுண்டு போனான் வருண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!