Kaathal Neethaane Kaavalane..! – 11(1)
அதே நேரத்தில் அவனுக்கு போன் வர,
“சார் அந்த லேடி, ருத்ராவை அரெஸ்ட் பண்ணிச்சியாச்சு சார்..! மங்களூர்ல இருக்குறதா போக்குக் காட்டி, கிருஷ்னகிரில இருந்தா சார். அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு வந்துட்டு இருக்கோம் சார். இன்னும் திரீ ஆர்ஸ்ல ஸ்டேஷன் வந்துடுவோம் சார்..!” என்றார் இன்ஸ்பெக்டர் எதிர்முனையில்.
“கொடைக்கானல் ஸ்டேஷன்ல அக்யுஸ்ட்டை ஹேண்ட் ஓவர் பண்ணிடுங்க. ஏன் இந்த கொலையை செஞ்சா..? இதுல அவளுக்கு உதவி செஞ்சது யாரு..? அந்த டிரைவரை அவ கூட அனுப்பினது யாரு..? இப்படி முழு விபரமும் விசாரணையில தெரியனும். நான் நாளைக்கு வந்து பார்க்குறேன்..!” என்று போனை வைத்தவனுக்கு பல யோசனைகள்.
சக்தி சம்பந்தப்பட்ட விஷயம், இந்த கொலை கேஸ் இப்படி எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடைக்கானலில் இருப்பதாகப் பட்டது வருணிற்கு. ஆரம்பமும் அங்கிருந்து தான் தொடங்கியிருக்க வேண்டும் என்று அவனின் மூளை அவனுக்கு அறிவுறுத்தியது.
Advertisement
அங்கே சக்தியின் நிலைமையோ படு மோசமாக இருந்தது. அன்று நடந்த அனைத்தும் அவளுக்கு ஒரு கனவு போல இருந்தது. வருணின் நிழலில் இருக்கும் வரை இருந்த பாதுகாப்பு, அவன் இடத்தில் இருந்து கிளம்பிய சில பல நிமிடங்களில் காணாமல் போயிருந்தது.
வருண் வருவதற்குள் கிளம்ப வேண்டும் என்ற எண்ணத்தில் தான், சக்தி கிளம்பிக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் தான் வருணின் குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர். வந்தவர்களுக்கு, சக்தியை அங்கு பார்த்தது கொஞ்சம் அதிர்ச்சியே..! சத்தியமூர்த்திக்கு அந்த அதிர்ச்சி இல்லை போலும்.
“எப்படிமா இருக்க..?” என்றார்.
Advertisement
“நல்லா இருக்கேன் அங்கிள்..!” என்றவளை முறைத்தார் மோகனா.
Advertisement
“என்ன நடக்குது மூர்த்தி..? இந்த பொண்ணு இன்னுமா இங்க இருக்குது. இதென்ன பழக்கம். எதுக்கு இன்னும் இந்த பொண்ணைக் கூட வச்சிருக்கான் வருண். இதெல்லாம் நல்லாவா இருக்கு..? நல்ல குடும்பத்து பொண்ணுங்க இப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க. ஒரு வயசுப் பையன் கூட தனியா இருக்குறதுக்கு நெஞ்சுல திண்ணக்கம் இருந்தாத் தான் முடியும்.” என்று வார்த்தைகளை கொட்டிக் கொண்டிருக்க,
சக்தியை அங்கு பார்த்த அதிர்ச்சியில் மற்றவர்களுக்கு பேச்சு வரவில்லை.
“இந்த பொண்ணு இங்க இருக்குறது எனக்குத் தெரியும். என் பையன் எந்த தப்பும் செய்ய மாட்டான். அவன் மனசுல எந்த தப்பும் இல்லைங்கப் போய்த்தான், அன்னைக்கே என்கிட்டே சொல்லிட்டான். தேவையில்லாம வார்த்தையை விடாதக்கா..!” என்ற மூர்த்தி உள்ளே செல்ல,
Advertisement
“நம்ம பையன் நல்ல பையன் தான். ஆனா, இவ எப்படிப்பட்டவன்னு யாருக்குக் தெரியும்…?” என்றவர்,
“இங்கபாரு, முதல்ல இங்க இருந்து கிளம்புறதுக்கான வழியைப் பாரு..! எப்படா எவன் கிடைப்பான்னு திறிய வேண்டியது..!” என்று வார்த்தைகளைக் கழுவி ஊற்ற, அதைக் கேட்ட சக்திக்கு உடல் முழுவதும் கூசிப் போயிற்று.
“அப்படி பேசாதிங்க அத்தை. பார்த்தா அப்படி பட்ட பொண்ணு மாதிரி தெரியலை..” என்று கௌசல்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அங்கிருந்து கிளம்பியிருந்தாள் சக்தி. முரளியும் தடுத்துப் பார்த்தான், ஆனால் அவள் கேட்கவில்லை, வந்து விட்டாள்.
வந்தது எவ்வளவு பெரிய தப்பு என்பதை இப்போது உணர்ந்து கொண்டிருக்கிறாள். யாரின் கையில் சிக்கக் கூடாது என்று நினைத்தாளோ, அவனின் அடியாட்களின் கையிலேயே சிக்கி விட்டாள்.
“அண்ணே பட்சி சிக்கிருச்சு அண்ணே..! கதையை முடிச்சுடுவா..?” என்று அவர்களில் ஒருவன் கேட்க,
“தனியா வந்தாளா..? இல்லை அந்த வருனோட வந்தாளா..?” என்றான் லெனின்.
“தனியாத்தான் சிக்கியிருக்கா..!” என்றான்.
“அப்ப அவளை நம்ம இடத்துக்கு தூக்கிட்டு வந்துடு. அண்ணாகிட்ட நான் பேசிக்கிறேன்..!” என்ற லெனினின் பார்வையில் அப்படி ஒரு ஆத்திரம்.
சரியாக அதே நேரத்திற்கு அவளின் போன் அடிக்க, போனைப் பிடிங்கினர் அந்த ரவுடி கும்பல்.
“அந்த வருண் தாண்ணா கூப்பிடுறான்.. ஆப் பண்ணிடட்டா..?” என்று ஒருவன் கேட்க,
“வேண்டாம்..! அவனுக்கு சந்தேகம் வந்தும். இப்ப அவ பேசினா மட்டும் தான் அவன் நம்புவான்..!” என்றவன்,
“ஒழுங்கா அவன்கிட்ட பேசணும். எதையாவது உளறிக் கொட்டுன… முதல்ல உன் கதையை முடிச்சுட்டு, அப்பறம் அவன் கதையை முடிக்க வேண்டி வரும்..!” என்று மிரட்ட,
வருண் தான் போன் பண்ணியிருக்கிறான் என்று தெரிந்ததில் இருந்து, சக்தியின் மனம் துடிக்க ஆரம்பித்தது. அவனைப் பார்க்க வேண்டும் என்று மனம் ஏங்க, எதுவும் அவனிடம் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருந்தாள் சக்தி. அவர்கள் சொன்ன மாதிரியே பேசிவிட்டு, போனை அவர்களிடத்தில் கொடுத்தாள்.
அவனின் குரலை போனில் கேட்டதில் இருந்து அவள் மனம் அவள் வசம் இல்லை. அவன் பக்கத்தில் இருக்கும் போது தெரியாத அருமை இப்போது தெரிந்தது. அவன் வந்துவிடமாட்டானா என்று உள்ளம் ஏங்க, அதற்கான வாய்ப்பு அப்போதைக்கு இல்லை என்பதை அவளிடம் யார் சொல்லுவார்..?
இதோ.. இப்போது வரை அவள் எங்கு இருக்கிறாள் என்று அவளுக்கே தெரியாது. ஒரு காருக்குள் இருக்கிறாள் என்பது மட்டும் தான் தெரிந்தது. மற்றபடி எதுவும் தெரியவில்லை. அவளை எதிர்பார்த்து, கொக்கு போல காத்திருந்த தேவனின் ஆட்களிடம், மீனாய் வந்து மாட்டியிருந்தால் சக்தி. இத்தனை நாள் வராத உயிர் பயம் இப்போது அவளுக்கு வந்திருந்தது.
வாழவே ஆசையில்லாமல் இருந்த அவளுக்கு, இப்போது வாழ வேண்டும் என்று ஆசையாய் இருந்தது. கடைசியாக வருணைக் காண வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வந்த காதலை எண்ணி மனம் குமைந்தாள் சக்தி.
‘பிளீஸ் வருண் சார்..! சேவ் மீ வருண் சார்..! நீங்க எவ்வளவு திட்டியிருந்தாலும் நான் அங்கயே இருந்திருக்கணும். உங்க வீட்ல எவ்வளவு பேசியிருந்தாலும், நான் அங்கயே இருந்திருக்கணும். நீங்க கேட்டப்பவே எல்லா உண்மையையும் சொல்லி இருக்கணும். இதையெல்லாம் செய்யாம, இப்போ இவங்க கையில மாட்டி சாகப் போறேன் வருண் சார். ப்ளீஸ் வருண் சார், வாங்க வருண் சார்..!’ என்று சக்தி மனதார மன்றாடினாள்.
தூக்கத்தில் இருந்த வருண் படக்கென்று எழுந்து அமர்ந்தான். ஏதோ சக்தி அவனிடம் பேசியதைப் போல் இருந்தது. அறையில் வெளிச்சத்தைப் படரவிட்டுப் பார்த்தால், யாருமில்லை.
நேரத்தைப் பார்த்தான் வருண். அது அதிகாலை ஆறு மணியைக் காட்டியது. தூக்கத்தில் பார்த்த சக்தியின் முகம், வருணின் நெஞ்சைப் பிசைய, கொஞ்சம் சோர்ந்து போனான் வருண்.
“ஊருக்கு போறேன்னு தான் போன்ல சொல்லிட்டாலே. இன்னும் அதையே நினைச்சுட்டு இருந்தா எப்படி வருண்..?” என்று மனம் கேட்க,
“இல்லை..! அவ இன்னும் ஊருக்குப் போகலை. என்னவோ நடந்திருக்கு, என் உள் மனசு சொல்லுது..!” என்றவனுக்கு,
“சார்..! பிளாக் டீ..!” என்று முந்தின நாள் காலையில், சக்தி அவனுடைய அறைக்கு வந்தது, இப்போது நியாபகம் வந்து இம்சை படுத்தியது அவனை.
“என்ன செய்வது..?” என்று யோசித்துக் கொண்டிருக்க,
வீட்டில் இருப்பவர்கள் காலையில் நேரத்திற்கே கிளம்ப வேண்டும் என்று சொன்னது நியாபகத்திற்கு வந்தது. வேகமாக கண்ட்ரோல் அறைக்கு அழைத்தான் வருண்.
“எஸ் சார்..!”
“நான் ஒரு நம்பர் அனுப்பியிருக்கேன். அது இப்போ எந்த சிக்னல் நியர்ல இருக்குன்னு டீட்டைல்ஸ் கேட்டு சொல்லுங்க..!” என்றான்.
“எஸ் சார்..!” என்று எதிரில் இருந்தவர போனை வைக்க, மீண்டும் அவர் அழைக்கும் வரை வருணுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவனுடைய அவசரம் புரிந்ததைப் போல், அவரும் திரும்பி அழைத்தார்.
“சார் அந்த நம்பர் இப்போ கொடைக்கானல் நியர் இருக்கு சார். மூவிங்ல இருக்கு. ஜஸ்ட் நவ் மலையேற ஸ்டார்ட் ஆகுது சார். இன்னும் கொஞ்ச தூரம் போனா சிக்னல் கட்டாகிடும் சார். குறிப்பிட்ட பகுதி வரைக்கும் சிக்னல் கிடைக்காது சார்..! உங்களுக்கு ஷேர் பண்ணியிருக்கேன்…” என்று சொல்ல,
“ஓகே..!” என்றவனுக்கு, எங்கோ தப்பு நடந்திருக்கிறது என்று தோன்றியது.
“நேத்தே கொடைக்கானல் கிளம்பிட்டேன்னு சொன்னா. ஆனா, இப்போ வரைக்கும் போகலை. இப்போதான் மலையேறவே போறா அப்படின்னா..? நேத்து ஏன் சக்தி போகலை. எங்க தங்கியிருந்தா..? இவ்வளவு காலையில ஏன் கிளம்பனும்…?” என்று யோசிக்க, அவனுக்குத் தலைவலி வந்தது தான் மிச்சம்.
அவளது போனிற்கு முயற்சி செய்ய, கால் போகவே இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தான். ஒரு பிரயோஜனமும் இல்லை.
துரிதமாக யோசித்தவன், அங்கிருந்த செக்போஸ்ட்டிற்கு வாக்கி டாக்கியில் அழைத்தான். அவளுடைய போட்டோவை வாட்சப்பில் அனுப்பியவன்,
“பஸ், கார், வேன் எல்லா வெகிக்கில்ஸ்சையும் செக் பண்ணுங்க. இவங்க இருந்தா உடனே எனக்கு இன்பார்ம் பண்ணுங்க. ஐ வில் கம்..” என்றவனுக்கு, ஏன் இதையெல்லாம் செய்கிறான் என்று தான் தெரியவில்லை.
இதையெல்லாம் அவன் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இருந்தாலும் செய்கிறான் என்றால், அவள் வருணின் சக்தியாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும். மனம் அதை தெளிவாக உணர்த்தியது அவனுக்கு. ஆனால், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
அங்கே தேவனோ,
“பார்த்த உடனே அவளைப் போட்டுத் தள்ளியிருக்க வேண்டாமா..லெனின்..? அவள் உயிரோட இருக்குற வரைக்கும் நமக்கு ஆபத்து தான்..!” என்றான் தேவன்.
“அண்ணே..! அவகிட்ட இருக்குற ஆதாரம் நம்ம கைல கிடைச்ச உடனே, அவளை உங்க ஆசைப்படி மேல அனுப்பிடலாம்..! எனக்கு அவகிட்ட தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்னு பாக்கி இருக்கு..!” என்றான் லெனின்.
எவ்வளவு சீக்கிரம் அவ கதையை முடிக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் நல்லது. இல்லைன்னா, என்னோட ஒட்டுமொத்த இமேஜும் இல்லாமப் போய்டும்..!” என்றான் தேவன்.
“இன்னைக்கு கண்டிப்பா நமக்கு நல்ல நாள் தாண்ணே..! அந்த வருண் நேர்ல வந்தாகூட, இவளை இனி காப்பாத்த முடியாது. எந்த தடயமும் இல்லாம பசங்க கடத்தியிருக்காணுக. இந்த தடவை எல்லாமே நாம நினைச்சா மாதிரித்தான் நடக்கும்..!” என்றான் லெனின்.
இவன் இப்படிப் பேசிக் கொண்டிருக்க, வருண் கொடைக்கானலை நோக்கி வந்து கொண்டிருந்தான். யூனிபார்மில் இல்லாமல் மப்டியில் இருந்தான். குடும்பமே காரில் இருக்க, என்ன சொல்லிவிட்டு போவது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
“என்ன மாப்ள..? ஒரே யோசனையில இருக்க..?” என்றான் முரளி. ஆடு தானாக வந்து தலையைக் கொடுத்தது போல இருந்தது வருணுக்கு.
“அது ஒண்ணுமில்லை மாம்ஸ்..!முக்கியமான விஷயம். நான் போய்த்தான் ஆகணும். எப்படியும் உங்களை டிராப் பண்ணிட்டு நான் வரணும். அதுக்கு நான் இப்போவே இறங்கிக்கிறேன்..!” என்றான் வருண்.
“என்ன விளையாடுறியா மாப்பிள்ளை..? எல்லாரும் உன்னை வச்சு பிளான் பண்ணா, நீ என்னை வச்சு பிளான் பண்றியா..?” என்றான் முரளி.
வருண் தீவிரமாய் யோசிக்க, அங்கே முன்னால் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வண்டிகள் நின்றிருந்தது.
“என்னாச்சு..?” என்றான் முரளி.
“தெரியலை, இருங்க கேட்கிறேன்..!” என்று அங்கிருந்த செக்போஸ்ட்டிற்கு போன் செய்ய,
“சார் மேல மண் சரிவு சார்..!நிறைய மரம் சாஞ்சிருக்கு சார். ரெண்டு மணி நேரமா எல்லாத்தையும் கிளீன் பண்ணிட்டு இருக்காங்க சார். எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகும் சார்..!” என்ற பதில் கிடைத்தது வருணுக்கு.
“நாம வெயிட் பண்ணித்தான் ஆகணும்..!” என்ற வருண்,
“நீங்க கார்லயே இருங்க. நான் என்னன்னு பார்த்துட்டு கால் பண்றேன். அந்த செக்போஸ்ட்கிட்ட நான் ஏறிக்கிறேன்..!” என்றவன், வேகமாய் இறங்கி வேகமாக நடந்து சென்றான்.
“என்ன நாளே எட்டுல போய்ட்டான்..?” என்று மோகனா ஆச்சர்யப்பட,
“அவங்களுக்கு இதெல்லாம் பழக்கம் தான்..!” என்றான் முரளி.
“என்னாச்சு..? நான் சொன்ன மாதிரி செக் பண்ணிங்களா..?” என்றன வருண், அங்கிருந்த போலிசிடம்.
“செக் பண்ணிட்டு தான் சார் இருக்கோம். ஆனா, இதுவரைக்கும் அப்படி யாரும் கண்ணுல படலை..” என்ற பதில் கிடைக்க,
“இங்க போன் சிக்னல் எங்க கட்டாகுது..?” என்றான்.
“இன்னும் கொஞ்ச தூரம் மேல போன உடனே கட்டாயிடும் சார்..! அப்பறம் இடையில் கொஞ்ச தூரத்துக்கு சிக்னல் சுத்தமா இருக்காது சார்..!” என்றனர்.
“ஓகே..! இந்த சிக்னல் இல்லாத ஏரியாக்குள்ள, ஏதாவது பெரிய ஆட்களோட எஸ்டேட், காட்டேஜ் இப்படி ஏதாவது இருக்கா…?” என்றான்.
“அப்படி எதுவும் இருக்குற மாதிரி தெரியலை சார். புல்லா காடுதான்..!” என்றவர், கொஞ்சம் யோசித்து,
“பெரிய அளவுல இல்லை சார். ஆனா, இங்க இருந்து கொஞ்ச தூரம் போய், ரைட்ல மேல ஏறினா, ஒரு சின்ன நீர் வீழ்ச்சி இருக்கு சார். அதாவது சுனை மாதிரி. அதுக்கு பக்கத்துல ஒரு வீடு இருக்கு சார். சுத்தி ஒரு சின்ன எஸ்டேட் மட்டும் இருக்கு சார்..!” என்றார் அவர்.
“அது யாரோடது..?” என்று கேட்க,
“அது தெரியலை சார்..!” என்றனர்.
வருண் பேசிக்கொண்டிருக்க, அவனுக்கு அருகில் இருந்த காரில் இருந்து நான்காவது காரில் இருந்தாள் சக்தி.
“டேய்..! அங்க நிக்குறது அந்த வருண் மாதிரி இல்லை..?” என்றான் ஒருவன்.
“அட ஆமாம்டா..! இவன் எப்படி இங்க வந்தான்..? அதுவும் மப்டியில இருக்கான். இவளை நாம கடத்துனது தெரிஞ்சு வந்தானோ..?” என்றான் இன்னொருவன்.
வேகமாக லெனினுக்கு அழைக்க, போன் போகவே இல்லை. சிக்னல் சுத்தமாக இல்லை.
“இதுக்குத் தான் அப்பவே சொன்னேன். இவளை நேத்தே முடிச்சுடலாம்ன்னு. இப்ப பாருங்க எப்படி வந்து சிக்கியிருக்கோம்ன்னு. இவன் கிட்ட சிக்கினா, காலத்துக்கும் நமக்கு களி தான்..!” என்றான் ஒருவன்.
வருணுக்கு வந்த தகவல் படி, அவன் இருக்கும் இடம், சிக்னல் மீண்டும் முழுமையாக கிடைக்கும் இடம், இதற்கு இடைப்பட்ட தூரத்தில் தான் சக்தி இருக்க வேண்டும் என்று கணித்தான்.
வருணுக்கு ஏனோ, சக்தி அவனுக்கு அருகில் இருப்பதைப் போலவே இருந்தது. ஏதோ ஒரு உணர்வு அவனுக்கு சொல்ல, அவனின் வருகையை அறியாத சக்தி, அங்கே மயக்கத்தில் இருந்தாள்.
