Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ02_1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால்.. 2

 

 

புலராத காலைப் பொழுது. அந்த குட்டி கூண்டில் சிட்டுக் குருவிகள் இரண்டு. ஒன்று அதிக சத்தம் எழுப்ப.. மற்றது ஒலி எழுப்பாமலே ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தது.



Advertisement

 

“மா.. எழுந்திரு! ஏழு கழுத வயசாகிடுச்சு. இன்னும் நான் தான் எழுப்பி விட வேண்டி இருக்கு. எழுந்திரு மா..”

 

Advertisement

“விடமாட்டியா.. நீ என்ன(னை)? டென் மினிட்ஸ் பாப்பா..”

Advertisement

 

“மா… இது மூணாவது டென் மினிட்ஸ்”

 

Advertisement

“சனிக்கிழம டீ… மணி ஆறு கூட ஆகல! இன்னைக்குக் கூட மனுஷிய நிம்மதியா தூங்க விட மாட்டியா? என் மாமியார் கூட என்னை எழும்ப சொன்னது இல்ல… நான் பெத்தது இருக்கே… போ டி. நீயும் கொஞ்ச நேரம் தூங்கு போ.”

 

“டிசிப்லின் வேண்டாம்? எழுந்திரு. மண்டே நான் ஹாஸ்டல் போனப்பறம் நீயே தான் எழுந்துக்கணும். நீ தான் விபரமா வீட்ட பாத்துக்கணும். அதுக்கு பேசிக் டிசிப்ளின் வேணும்”, ஒருத்தி கூற மற்றவள் கிளுக்கிச் சிரித்தாள்.

 

“நான் சொன்னது எனக்கேவா? எல்லாம் என் நேரம்..”

 

“மூணு வருஷம் மா… பத்தாவது படிக்கும் போது ஆரம்பிச்ச… எப்படி எல்லாம் கதறியிருப்பேன்… தூங்க விட்டியா? அதுக்கு தான் பழிக்குப் பழி.”

 

அம்மா எழுந்திருக்காமல் படுத்திருக்கவும் ஒருத்தி அம்மா கையில் தலை சாய்க்க.. மற்றொருத்தி இடுப்பைக் கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்ச ஆரம்பித்தாள்.

 

“எழுந்திரு அஞ்சலி எழுந்திரு..”, சின்னதும் ஒரு வழியாக வாயைத் திறந்தது.

 

அக்கா என்ன செய்தாலும் கூட்டுக்கு நகுநாவால் மட்டும் தான் நிற்கமுடியும்! சகோதரிகள் என்பதை விடத் தோழிகள் எனலாம்.. இருவருக்குள்ளும் அப்படி ஒரு நெருக்கம். அம்மா அப்பா வேலைக்குச் சென்றுவிடப் பாட்டி தாத்தா பொறுப்பில் வளர்ந்தாலும் சின்னதுக்கு என்றுமே அக்கா சொல் தான் வேதம். வீட்டுப் பாடமாகட்டும், வகுப்பு பாடமாகட்டும் அலர் தான் அவளுக்கு உதவுவது. அலர்விழிக்கு தான் எல்லாம் தெரியும் என்ற பிம்பம் எப்படியோ சிறியவள் மூளையில் பதிந்து போனது. அதனால் தான் பச்சை க்ளிப்பா… சிகப்பு க்ளிப்பா என்ற குழப்பம் கூட அலரால் மட்டுமே நகுநாவிற்கு தீர்த்து வைக்க முடிகிறது!

 

“அழகி.. எழுந்திரு. என் கையால காபி போட்டு தரேன்.. எழுந்திரு”, அலர் அம்மாவைப் படுத்தி எடுக்க.. அவரும் என்ன செய்வார்? கண்விழித்து கொண்டார்.

 

சௌந்தரியா முகத்தில் சிறு சுருக்கம் இருக்காது. நல்ல அழகு.. அந்த காலத்து பேரழகி. அதனாலேயே பெண்களுக்கு அம்மா ‘அழகி’ ஆகிப்போனார்.

 

“காபி போதாது டிஃபனும்..”, அம்மா கோரிக்கை வைக்க.. அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை போலும்…

“இன்னைக்கு பூராவே அம்மாக்கு பிடிச்சது தான்.”, படுத்திருந்த அம்மா கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தவளிடமிருந்து சட்டென்று பதில் விழுந்தது.

 

பஞ்சமில்லா கொஞ்சல்கள். அந்த சிறிய கூடு மட்டுமே அந்த தாயின் சொர்கம் பூமி என்பதால், ‘யார் யாருக்குப் பிள்ளை?’ என்று தோன்றும் அளவிற்கு அம்மா அவர்களுக்கு செல்லம். கண்டிப்பானவர் என்றாலும் அதிகமாகக் கடிய மாட்டார். பிள்ளைகள் என்றால் இரு கண்கள் போல அவருக்கு.

 

புது ட்ரெண்டில் கண்களை உறுத்தாதவாறு பிள்ளைகள் உடுத்த தடை போடுவதில்லை என்றாலும் கொஞ்சம் பழைமை விரும்பி. நண்பர்கள் என்ற முறையில் அனைவரோடும் அன்பாய் பழகினாலும் அது பழக்கத்தோடு நின்றுவிடும். வேற்று இனத்தாரோடு உறவு கொண்டாடும் அளவிற்கு இன்னும் மனம் பக்குவப்படவில்லை.. அதை அவர் விரும்புவதாகவும் தெரியவில்லை. அதற்காக அவர் முற்போக்கான எண்ணம் இல்லாதவர் இல்லை.. மற்ற சாதி, மதம் என்று வரும் வேளை “நீ நல்லா இருக்கியா? நான் நல்லா இருக்கேன்.” என்று அவர் எல்லையில் நின்றுக் கொள்வார்.

 

அவர் அக்கா மகள், வைதேகி வேறு மாநிலத்தவனை மணமுடித்து அந்த திருமணம் இன்று கேள்வி குறியில் நிற்கவும், ‘இனம் இனத்தோடு மட்டும் சேரவேண்டும்!’ என்ற அவர் எண்ணம் இன்னும் பலபட்டு போனது.

 

“என்னால அவங்க வீட்டுல இருக்கவே முடியல சித்தி. கண்ட நேரத்துக்கு எழுந்துக்கறாங்க. ஆளாளுக்கு ஒரு நேரம் காபி குடிக்கிறாங்க. நேரங்கெட்ட நேரத்துல ஒருதர் மாத்தி ஒருத்தர் சாப்பிட உக்கருறாங்க. ஒவ்வொருத்தருக்கும் சூடா வேற வேணுமாம்! விடிய விடியச் சமையல் கட்டிலேயே போகுது. இதுல நான்-வெஜ் சாப்பிட மாட்டாங்களாம்… எனக்கு அத தவிர எதுவுமே உள்ள போகாது.. என்னையும் சமைக்க விட மாட்டேன்றாங்க. தினமும் இந்த கீரையை கட்டிக்கிட்டு சாக வேண்டி இருக்கு. அவங்களுக்கு வேணும்னா அவங்க பட்டிணி இருக்க வேண்டியது தானே… ஏதோ வேண்டுதல்… நோம்பு, விரத்தம்ன்னு வாரத்தில மூணு நாள் நாக்கில தண்ணி பட விட மாட்டேங்கறாங்க. பொம்பளைங்க அடுப்பங்கரையும்.. சாமி ரூமுமே கதியேன்னு இருக்கணுமாம். வீட்டு ஆம்பளைங்க முன்ன பொம்பளைங்க வர கூடாதாம்… பேசக் கூடாதாம். நான் அடுப்பு பக்கத்தில நின்னுட்டு வேடிக்கை பாக்கணும்.. மாமியார் பரிமாறணும்!

 

அவங்க வீட்டு பழக்க வழக்கம் எதுவுமே பிடிக்கல… இன்னும் ஒரு வாரத்துலேயே எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு.”, என்று காலை காபியில் ஆரம்பித்து இரவு கண் மூடும் வரை உள்ள எல்லா குறைகளையும் பெண் அடுக்க… இவருக்குத் தோன்றியதெல்லாம் அவர்களும் இவர்கள் இனமாய் இருந்திருந்தால் பெண் சுகித்திருப்பாள் என்பது மட்டுமே! அவர் பிள்ளைகளுக்குப் பிற இனத்து மாப்பிள்ளை என்பது சாத்தியமில்லாத ஒன்று.

 

பிடிக்காத திருமணத்திலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண் வந்து நிற்க.. இவர் தான் முதல் ஆளாக அந்த எண்ணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். “கைல இருக்க அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு? அப்படி தான் மனுஷாட்களும்! வாழ பழகிக்கோ. கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க.. அத உன் இஷ்டத்துக்கு எல்லாம் உடைக்கக் கூடாது. ஆம்பிள துணை இல்லாம வாழ விடாது சமூகம்.. ஒருத்தன் கூட வாழ்கையை ஆரம்பிச்சுட்டு உன் சகிப்பு தன்மை சரி இல்லன்னு வேற ஒருத்தனுக்கு வாழ்க்கை படறது எல்லாம் நமக்குச் சரி வராது. அதனால்… அட்ஜஸ் பண்ணி வாழப்பாரு. அவங்க யாரும் உன்ன கொடுமை படுத்தலையே அப்புறம் என்ன உனக்கு?”, இப்படி தான் அவர் பெண்ணுக்கு அறிவுரை வழங்கினாரே ஒழிய.. பிரிந்து வாழ ஊக்குவிக்கவில்லை.

 

“தள்ளுங்கடி… மேல மேல ஈஷிக்கிட்டு..”,  பெண்கள் இருவரையும் அவர் நகர்த்தப் பார்க்க.. அவர் பேச்சை எல்லாம் யார் காதில் போட்டுக் கொள்வது?

 

இருவரையும் பாடுபட்டு நகர்த்தியவர்.. எழுந்து அமரவும்.. இரு கன்னமும் முற்றுகை இடப்பட்டது.

 

“ஹேப்பி பர்த் டே மா…. இன்னைக்கு நீ மகாராணி… நாங்க தான் எல்லாம் செய்வோமாம்..”, கூறுவது நிஜம் தான் என்றது கேசரியின் மணம். அலர் சமையலில் கெட்டிகாரி. சமையல் அவளுக்கு தண்ணீர் பட்ட பாடு எனலாம்!

 

“நானும் இன்னைக்கு அலர் கூட சேந்து சமைப்பேன்..”, அலர் கூறுவதற்கெல்லாம் தலை ஆட்டிக் கொண்டிருப்பது, நகுநாவே தான். அலர்விழி கண்டு களித்த உலகை இரண்டு வருடம் கழித்துக் கண்டு களிக்க ஆரம்பித்தவள் தான் நகுநா! பெயருக்கேற்றார் போல் அவள் சிரிப்பழகி.

 

“அப்பா இன்னும் பால் வாங்கிட்டு வரலியா?”, முடியை தூக்கி கொண்டை போட்டுக் கொண்டே, அறையை விட்டு வெளி வர, இரண்டு குட்டிகளும் பின்னோடே வந்தனர்.

 

“வர நேரம் தான் மா..”

 

 “சத்தம் போடாதீங்க பிள்ளைங்களா. அத்த எழுந்திட போறாங்க!”

 

பாட்டி படுத்திருக்கும் அறையை நகுநா எட்டிப் பார்க்க அவர் நித்திரையிலிருந்தார். முன் இரவு நாட்டாமையும், பட்டினத்துச் சிட்டும் கொடுத்த மன உளச்சலில் பாட்டி உறங்க நேரம் பிடித்ததின் விளைவு போலும்! பெரிய வீடில்லை என்றாலும் ஐந்து பேருக்கு அது தாராளமாகவும் போதுமானதாகவும் இருந்தது. மூன்று வருடம் முன்பே பெண்களின் தாத்தா இயற்கை எய்திருக்க.. இன்று பாட்டி மட்டும் தான் அந்த அறையில்.

 

அலரின் தகப்பனார், தியாகராஜன் பிறந்தது முதலே கடலூர் தான். இதே மூன்று படுக்கையறை கொண்ட வீட்டில் தான் பிறந்தார். ஒற்றை மகனைப் பெற்றோர் பாசமாக  வளர்க்க… இன்று, அரசாங்க வேலையில் இருக்கும் அவர் ஒரு பாசமான மகன், கணவன் மற்றும் அருமையான இரு பெண்களுக்குத் தகப்பன். கண்டிக்க தெரியாத.. வெறும் பாசத்தை மட்டுமே காட்டத்தெரிந்த ஜீவன்.

 

பால் வாங்கி உள்ளே வந்த அப்பாவிடம் அலர்விழி பாலை வாங்கிக்கொள்ள, டீ போடும் வேலை என்று சூரியன் உதிக்கும் முன்னமே நாள் ஆரம்பமானது.

 

மூத்தவள் பன்னிரண்டும் இளையவள் பத்தும் இந்த வருடம் படித்து முடித்திருக்க.. பொழுது புலரும் முன்னே புத்தகத்தைக் கையில் எடுக்கும் அதே பழக்கம் இன்றும் அவர்களை விழிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

 

அம்மாவும் அரசு அலுவலகத்தில் பணிபுரிய.. அம்மாவின் வீட்டு பாரம் குறைக்கச் சிறுமிகள் வீட்டு வேலை எல்லாம் பகிர்ந்து செய்யப் பழகியிருக்க, வீட்டில் இருக்கும் சனிக்கிழமைகளில் அம்மாவிற்கு முழு நாள் விடுப்பு.

 

அளவான குடும்பத்தில், அளவிற்கு அதிகமாக பணம் கொட்டிக் கிடக்கவில்லை என்றாலும் ஏழ்மை இல்லை. தேவைக்கு யாரிடமும் கை ஏந்த அவசியமிருந்ததில்லை.

 

ஆக மொத்தத்தில் அளவான குடும்பம்.. விரலுக்கு ஏற்ற வீக்கம் போல் வசதிக்கேற்ற விருப்பங்களும் ஆசைகளும் என்று எந்த அலட்டலும் இல்லாத தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கை அவர்களுடையது.

 

‘இது வேண்டும்’ என்று ஆசைப்பட்டது கிடைக்காமல் பிள்ளைகள் ஏங்கியதில்லை. பெண்களுக்கு என்று வந்துவிட்டால் தியாகு பணத்தைப் பற்றி என்ன.. எதைப் பற்றியுமே யோசிக்க மாட்டார். எந்த விஷயத்திலும் பெண்களுக்கு எந்த குறையும் இன்று வரை இருந்ததில்லை… விருப்பங்களுக்குத் தடையும் இருந்ததில்லை.

 

அதனால் தான் கல்லூரி படிப்புக்கு சென்னை செல்ல வேண்டும் என்ற கோரிக்கையோடு வந்த அலர்விழிக்கும் தடை விதிக்கப்படவில்லை. தகப்பனாய் யோசித்தார் ஆனால் தடை போடவில்லை.

 

இன்று வரை கடலூர் மட்டுமே அவர்கள் உலகம். அலர்விழியின் உலகம் பரந்து விரிந்தது. அவள் எண்ணங்களும் கனவுகளும் ஒரு சிறிய கூண்டிற்குள் அடங்க மறுத்தது.

 

அப்பா, “டாக்டர் ஆகலாமே…”, “இன்ஜினியர் ஆகேன்” என்று எல்லா தென்னிந்திய பெற்றோர் போல் ஆசைப் பட.. அவள் ஆசையோ வேறாய் இருந்தது.

 

“வேண்டாம் பா.. முக்குக்கு முக்கு இஞ்சினியரிங் காலேஜ். ஆசைபட்டு படிக்கப் போனாலும் அங்க நல்ல லேப் ஃபெசிலிட்டியும் இருக்கிறது இல்ல.. நல்ல ஸ்டாஃபும் அதிகம் இருக்கிறது இல்ல. இந்த மாதிரி காலேஜ்-ல படிச்சு முடிச்சுட்டு தெருக்குத் தெரு நாலு வேலை இல்லாத இஞ்சினியர்ஸ் இருக்காங்க. நானும் அவங்கள மாதிரி படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு திண்டாடணும். இதுக்கு நல்ல காலேஜ்ல நல்ல டிசிப்ளின் எடுத்து முன்னேறலாம்.”

 

அவள் தெளிவாகத் தான் இருந்தாள். அப்பா பழைய காலத்து ஆள். அவருக்குப் புரியவில்லை என்றாலும் மகளின் திறமை அவருக்குத் தெரியும். அதனால் பள்ளி முடியும் தறுவாயில், “விஸ்காம் படிக்கிறேன் பா. இந்த காலேஜ்-ல எல்லாம் ரொம்ப நல்லா இருக்காம்.” என்று மகள் ஒரு பட்டியலோடு வந்து நின்றதும், அவள் விருப்பத்திற்கு உடன்பட்டு, அதிக மதிப்பெண்ணோடு வந்து நின்றவளை சென்னையில் நுங்கம்பாக்கத்திலிருந்த புகழ்பெற்ற மகளிர் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!